எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, December 23, 2013

3 -----தோசையம்மா தோசை அரிசி, உளுந்து அரைத்துச் செய்யும் தோசை

ரவாதோசை என்பது முன் பதிவில் சொன்ன முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படும்.  சில சமயம் இட்லிக்கு அல்லது தோசைக்கு அரைத்த மாவு கொஞ்சம் போல் மிஞ்சும் இல்லையா?  அப்போ அதிலே ரவை, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கம்பு மாவு, சோள மாவு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து தோசை வார்க்கலாம்.  இதற்கு மைதா மாவு சேர்க்கணும்னு அவசியம் ஏதும் இல்லை.  ஆனால் என்னோட அம்மா அரிசியையும், உளுந்தையும் ஊற வைச்சு அரைச்சும் ரவா தோசை, கேழ்வரகு தோசை போன்றவை செய்வாங்க.  அதுக்கு எப்படிச் செய்யணும்னா, மாலை தோசை வார்க்கணும்னா காலையிலேயே அரிசி, உளுந்தை ஊற வைச்சு அரைக்கணும்.  காலை செய்யணும்னா முதல்நாள் மாலையில் ஊறவைச்சு அரைக்கணும்

அரிசி ஒரு கிண்ணம்

உளுந்து முக்கால்கிண்ணம்

இரண்டையும் சேர்த்துக் கழுவி ஊற வைக்கவும்.  பச்சரிசி என்றால் இரண்டு மணி நேரமும் பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டும் கலந்தது எனில் மூணு மணி நேரமும் ஊறட்டும்.  ஊறியதை நன்கு நைசாக அரைத்து உப்புப் போட்டுக்கலந்து புளிக்க வைக்கவும்.

ஒரு கிண்ணம் ரவை அல்லது கேழ்வரகு மாவு/கோதுமை மாவு/சோள மாவு/கம்பு மாவுக்கு மேலே சொன்னபடி அரைத்த மாவில் பாதியைப் போட்டுக் கலக்கவும்.  நன்கு கலந்து கரைத்துக் கொள்ளவும்.  ரொம்ப நீர்க்கவும் கரைக்கக் கூடாது.  ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.  கரைத்த மாவில் கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, தேவையானால் வெங்காயம் ஆகியவை சேர்க்கவும். கடுகு தாளிக்கவும்.  தோசையாக ஊற்றவும்.

இந்த மாவு நான்கு பேர்களுக்குப் போதலைனால் மிச்சம் இருக்கும் அரைத்த மாவில் முன் சொன்னது போல் கலந்து கொண்டு தோசை வார்க்கத் தேவையான பொருட்களைச் சேர்த்துக் கொண்டு தோசை வார்க்கவும்.  சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு பரிமாறவும்.

Saturday, December 21, 2013

மிளகு குழம்பும், பருப்புத் துவையலும்!

இப்போ ஒரு அவசரப் பதிவு.  நேத்திக்கு எங்க வீட்டு மெனு மிளகு குழம்பு, பருப்புத் துவையல், ஜீரகம், மிளகு உடைத்துப் போட்ட ரசம்னு ஜி+லே பகிர்ந்திருந்தேனா!  புவனா கணேசன் என்ற சிநேகிதி மிளகு குழம்பும், பருப்புத் துவையலும் சாப்பிட்டதில்லை என்ரு சொல்லி இருந்தார்.  செய்முறை தரேன்னு சொல்லி இருந்தேன்.  இங்கே மிளகு குழம்பின் செய்முறை!

நான்கு பேர்களுக்கு!

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு

வறுக்க

மிளகாய் வற்றல்,  நான்கு அல்லது ஐந்து

மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்(மிளகு காரம் தூக்கலாக இருந்தாலே நன்றாக இருக்கும்.  வேண்டாம் என்பவர்கள் குறைத்துக் கொள்ளலாம்.)

பெருங்காயம் ஒரு துண்டு

மஞ்சள் தூள் அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு(மஞ்சள் எனில் எண்ணெயில் வறுத்துக்கலாம்)

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி

உப்பு தேவையான அளவு

தாளிக்க, வறுக்க  நல்லெண்ணெய் இருந்தால் நல்லது.  ஒரு சின்னக் கிண்ணம் எண்ணெய்.

தாளிக்கக் கடுகு மட்டும்


மிளகு குழம்பில் ஜீரகம் வைக்க வேண்டாம்.  மிளகு காரத்தை அமுக்கிவிடும். ஆகவே முதலில் புளியை(கறுப்புப் புளியாக இருந்தால் நல்லது. பிடிக்காதவர்கள் கறுப்பில்லாப் புளியும் பயன்படுத்தலாம்.) வெறும் வாணலியில் அல்லது கரி அடுப்பு இருந்தால் கரி அடுப்பில் சுட்டு விட்டு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.  கரைத்த ஜலம் மூன்று கிண்ணம் வரை இருக்கலாம்.  இதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி  எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் விடவும்.  மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  உளுத்தம்பருப்பையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  பின்னர் மிளகைப் போடவும்.  மிளகு வெடிக்கும் வரை அடுப்பில் வைத்து வெடிக்க ஆரம்பித்ததும் எடுத்து வைக்கவும்.  பின்னர் மஞ்சள் துண்டாக இருந்தால் எண்ணெயில் போட்டு வறுக்கவும்.  மஞ்சள் பொடி எனில் அரைக்கையில் மிக்சி ஜாரில் போட்டுக்கலாம்.  கருகப்பிலையையும் மிச்சம் எண்ணெயில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் அவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.  புளி ஜலத்தில் மஞ்சள் பொடியைச் சேர்த்துக் கலக்கவும்.  அடுப்பில் அதே வாணலி அல்லது கல்சட்டியைக் காய வைத்துக் கொண்டு மிச்சம் இருக்கும் எண்ணெயை ஊற்றவும்.  கடுகு தாளிக்கவும்.  கடுகு வெடித்ததும் கலந்த புளிக்கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  கரண்டியால் நன்கு கலக்கிவிட்டுக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்துச் சேறு போல் ஆகும்போது எண்ணெயும் பிரிந்து வர ஆரம்பிக்கும்.  அப்போது கீழே இறக்கவும்.  கல்சட்டி எனில் துணியைப் பிடித்துத் தான் இறக்க வேண்டும்.  இடுக்கியால் பிடித்தால் கல்சட்டி உடைந்து வரும். :)

இதோடு சேர்த்துச் சாப்பிடத் தான் பருப்புத் துவையல்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம்,

மிளகாய் வற்றல் நான்கு

பெருங்காயம் ஒரு துண்டு

உப்பு தேவைக்கு

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு(ஊற வைத்துக் கொள்ளவும்)

தேங்காய்த் துருவல் (தேவையானால்)  ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்கக் கடுகு ஒரு டீஸ்பூன்

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  துவரம்பருப்பையும் களைந்து போட்டுச் சிவக்க வறுக்கவும்.  அதை எடுத்ததும் அந்த வாணலியின் மிச்ச எண்ணெயிலேயே தேங்காய்த் துருவலையும் போட்டு வறுக்கவும்.  நன்கு ஆற விடவும்.   ஆறிய பொருட்களை உப்பும் ஊற வைத்த புளியையும் சேர்த்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைக்கவும்.  வெளியே எடுத்துக் கடுகு தாளிக்கவும்.  தேங்காய்த் துருவல் இல்லாமலும் பருப்புத் துவையல் பண்ணலாம். 

தோசையம்மா தோசை! 2 ரவா தோசை!

ரவை பொடி ரவையாக இருந்தால் நல்லது,  இல்லைனாலும் பரவாயில்லை. தோசை செய்ய அரை மணி முன்னே ஊற வைக்கலாம்.  நான்கு பேர்களுக்குத் தேவையான பொருட்கள்.

ரவை இரண்டு கிண்ணம்

அரிசி மாவு ஒன்றரைக் கிண்ணம்

மைதா மாவு ஒரு கிண்ணம்

உப்பு தேவைக்கு

கொஞ்சம் புளித்த மோர் அரைக்கிண்ணம்

கரைக்கத் தேவையான நீர்

மிளகு அரை டீஸ்பூன்

சீரகம் இரண்டு டீ ஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் இரண்டு

தாளிக்கக் கடுகு ஒரு டீஸ்பூன்


முதலில் ரவையைப் புளித்த மோர் விட்டு நன்கு ஊற வைக்கவும். பின்னர் தோசை வார்க்க அரை மணி முன்னால் அரிசி மாவு, மைதா மாவு சேர்த்துக் கலந்து நீர் விட்டுக் கரைக்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும். மிளகு, சீரகம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும்.   தோசை மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.  அதே சமயம் அளவாக நீர் சேர்த்துக் கரண்டியால் ஊற்றும் அளவுக்குக் கரைக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகைப் போடவும், கடுகு வெடித்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு வதக்கு வதக்கிவிட்டுப் பின் மாவில் சேர்க்கவும்.  அதே தோசைக்கல்லில் தொடர்ந்து தோசையை ஊற்ற ஆரம்பிக்கலாம்.

முதலில் ஒரு கரண்டி மாவை எடுத்துக் கொண்டு சுற்றி ஊற்ற ஆரம்பித்துப் பின்னர் நடுவில் வந்து முடிக்க வேண்டும்.  சாதாரண அரிசி, உளுந்து தோசைக்கு நடுவில் மாவை ஊற்றித் தேய்த்துப் பெரிதாக்குவோம்.  இதுக்கு அப்படி இல்லை. தோசையில் துவாரங்களோடு வரும்.  எண்ணெய் ஊற்றவும்.  ஏற்கெனவே கடுகு தாளித்த கல்லிலேயே தோசையை ஊற்றினால் கல்லில் ஒட்டாமலும் எடுக்க வரும். எந்த தோசையானாலும் முதலில் கடுகு போட்டு எண்ணெயில் வெடிக்க விட்ட பின்னர் மாவை ஊற்றினால் கல்லில் முதல் தோசையே ஒட்டாமல் வரும்.

தோசை மெலிதாக முறுகலாக வரும். சட்னி, சாம்பாரோடு வெளுத்துக் கட்டலாம்.

அடுத்து உளுந்து அரைத்துப் போட்ட ரவா தோசை.

Friday, December 20, 2013

தோசையம்மா தோசை!

தோசையம்மா தோசை,
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஐந்து
அம்மாவுக்கு நாலு
அண்ணனுக்கு மூணு
அக்காவுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
திங்கத் திங்க ஆசை
திரும்பக் கேட்டால் பூசை!

தோசைக்கு மயங்காதவர்கள் உண்டோ? எங்க வீட்டிலே வாரம் ஏழு நாட்கள் தோசை இருந்தாலும் அலுக்காது.  இந்த தோசையை வெறும் அரிசி மாவு, உளுந்து மாவு தோசைனு செய்யாமல் கேழ்வரகு தோசை, தக்காளி தோசை, ரவா தோசை, கோதுமை தோசைனு விதம் விதமாய்ச் செய்யலாம்.  முதல்லே தக்காளி தோசையைப் பார்ப்போமா?

தக்காளி தோசை:

தேவையான பொருட்கள்:

அரிசி இரண்டு கிண்ணம்

உளுந்து அரைக்கிண்ணம்

து.பருப்பு அரைக்கிண்ணம்

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்,

தக்காளி பெரிதாக இருந்தால் மூன்று, நிதானமான நடுத்தர அளவுக்கு 4

பச்சை மிளகாய்  நான்கு அல்லது ஐந்து(அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல் கூடவோ, குறைவாகவோ போடலாம்.)

இஞ்சி ஒரு சின்னத் துண்டு.

மிளகு, சீரகம் (ஊற வைத்து அரைக்கையில் சேர்க்கவும்) வகைக்கு ஒரு டீஸ்பூன்.

கொத்துமல்லி, கருகப்பிலை

சமையல் எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்

அரிசி, பருப்பு வகைகளை நன்கு களைந்து கொண்டு சுமார் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டர் அல்லது மிக்சி ஜாரில் அரிசி, பருப்பு வகைகளைப் போட்டுப் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம், தேங்காய்த் துருவல் போட்டுக் கொஞ்சம் அரைக்கவும்.  ஒன்றிரண்டாக அரைபட்டதும் தக்காளியைத் தோல் நீக்கிச் சேர்க்கவும்.  தோல் நீக்க வெந்நீரில் ஊற வைக்கவும். தக்காளியைப் போட்டு நீர் விடாமல் நன்கு அரைக்கவும்.  நல்ல நைசாகவே அரைக்கலாம்.  அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, கருகப்பிலை, கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.

பின்னர் அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு மாவு ரொம்பக் கெட்டியாக இருந்தால் தேவையான நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.  தோசையாக ஊற்றவும்.  எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.  இருபக்கமும் நன்கு வெந்ததும். சூடாக இருக்கையிலேயே சாம்பார் அல்லது தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியுடன் பரிமாறவும்

Friday, December 6, 2013

தவலை அடை சாப்பிட வாங்க!

தவலை அடைக்குத் தேவையான சாமான்கள்:

(பச்சரிசியாகவே இருக்கட்டும்.)அரிசி  இரண்டு கிண்ணம்

து.பருப்பு  ஒரு கிண்ணம்

க.பருப்பு  அரைக்கிண்ணம்

உ.பருப்பு அரைக்கிண்ணம்

மிளகு, சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்(தேவையானால்)

இவற்றைக் களைந்து காய வைத்து மெஷினில் கொடுத்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகம் போட்டாலும் போடலாம். போடலைனாலும் பரவாயில்லை.  ஊறவைத்துக் களைந்து நீரை வடிகட்டி மிக்சியில் கூட உடைத்துக் கொள்ளலாம்.  மொத்தம் மூன்று கிண்ணம் வரும். கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கலாம். அவரவர் அளக்கும் முறை மாறுபடும்.

தாளிக்க

எண்ணெய்  2 டேபிள் ஸ்பூன்

கடுகு,  ஒரு டீஸ்பூன்,

உ.பருப்பு ஒரு டீஸ்பூன்

க.பருப்பு ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

பச்சை மிளகாய்  மிளகு போட்டிருப்பதால் காரம் கொஞ்சம் குறைவாக இருக்கட்டும் என்றால் மூன்று அல்லது நான்குக்குள் போதுமானது.

இஞ்சி ஒரு துண்டு(தேவையானால்)

கருகப்பிலை, கொத்துமல்லி

தேங்காய் ஒரு மூடி. கீறிப் பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

வேகவிடத் தேவையான நீர்

உப்பு தேவைக்கு


இப்போது இதைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும்.  அதற்கு எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.

வாணலி அல்லது உருளி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடேற்றி  ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். தாளிக்கும் பொருட்களைக் கொடுத்திருக்கும் வரிசைப்படி போட்டுத் தாளிக்கவும்.  கருகப்பிலையைத் தாளிதத்தில் போட்டுவிட்டு, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.  பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

தாளித்ததும் தேவையான நீரை விட்டு உப்பைப் போட்டுக் கொதிக்கவிடவும்.  ரவை போல் உடைத்த மாவைக் கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும்.  தேங்காய்க் கீற்றுகளையும் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரவேண்டும்.  அதே சமயம் குழையவும் கூடாது.  வெந்ததும் கீழே இறக்கிக் கொத்துமல்லியைச் சேர்த்துக் கிளறவும்.  உப்புமா பதத்துக்கு இருத்தல் நலம்.

அடுப்பில் வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியைப் போட்டு சின்னக் கிண்ணம் எண்ணெயில் பாதி அளவுக்கு அதில் விட்டுக் காய வைக்கவும். கிளறிய மாவை ஒரு ஆரஞ்சு அளவுக்கு எடுத்து உருட்டி.  வாழை இலையில் வைக்கவும்.  வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.  அதை அப்படியே காயும் எண்ணெயில் நிதானமாகப் போடவும்.  வாழை இலையை அப்படியே உருளியில் மாவோடு வைத்தும் தட்டலாம். சூடு பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.   ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு ஒரு தட்டால் மூடவும்.  ஒரு ஈடுக்கு நான்கு அல்லது ஐந்து தவலை அடைகளைப் போடலாம். தட்டால் மூடி இருபக்கமும் பொன் முறுவலாக வந்ததும் வெளியே எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

நல்லா இருக்கும்.  கொஞ்சம் செலவும் ஜாஸ்தி; வேலையும் ஜாஸ்தி இதிலே!

இதையே நீர் விட்டு அரைத்தும் செய்யலாம். அது பின்னர்!





Thursday, December 5, 2013

தவலை (ஹிஹிஹி, தவளை இல்லை) தவலை! அடைனா என்னனு தெரியுமா??



அடை குறித்த இந்தக் கவிதையைத் திரு சிவசிவா என்னும் நண்பர் குழுமத்தில் பகிர்ந்திருந்தார்.  அதைப் பார்த்ததும் நமது பார்வதி வெண்கலப்பானை அடையை விட்டுட்டீங்களேனு கேட்டிருந்தாங்க.  உண்மையில் அதைத் தவலை அடைனு சொல்லுவாங்க.  வெண்கலப்பானையில் இல்லாமல், உருளியிலும் செய்யலாம். கொஞ்சம் சிரமப்படணுமோனு நினைச்சால் ஆமாம் :))) சிரமப்பட்டே ஆகணும் தான்.   என்றாலும் அந்தக் கால கட்டங்களில் பாரம்பரியமாக இருந்த இந்த உணவு நாளாவட்டத்தில் மறைந்து வருகிறது.  ஆகவே ஒரு நினைவூட்டலாகவும் இந்தப் பதிவு அமையட்டும்.   இனி பதிவுக்குப் போவோமா?


Sunday, December 1, 2013

சேம்பு இலைக்கறி வேணுமா?

மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன்.  ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.



தேவையான பொருட்கள்:

சேம்பு இலை( வீட்டிலேயே தொட்டிகளில் வளர்க்கலாம்.  இல்லைனாலும் காய்கறி மார்க்கெட்டில் சொல்லி வைத்து வாங்கலாம். கீரை விற்பவர்களிடம் சொன்னால் எளிதில் கிடைக்கும்.)  நல்ல பெரிதாக நான்கு அல்லது ஐந்து.

இதற்கு உள்ளே அடைக்க சிலர் கடலைமாவைப் புளி ஜலத்தில் விழுது போல் கரைத்துக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அதைத் தடவி விட்டு அப்படியே வேக வைக்கின்றனர். ஆனால் எங்க வீட்டில் அப்படிச் செய்தது இல்லை.

து.பருப்பு, சின்னக் கிண்ணம் ஒன்று

க.பருப்பு அதே அளவு,

பாசிப்பருப்பு அந்த அளவில் பாதி

மிளகாய் வற்றல் (கொஞ்சம் கூடவே வைச்சுக்கணும்.) 15

உப்பு தேவைக்கு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி  நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க சமையல் எண்ணெய்

கடுகு, உ.பருப்பு.

சேம்பு இலைகளை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு மஞ்சள் தூள் & உப்புக் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பருப்பு வகைகளை நன்கு கழுவி ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊறியதும் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  அரைத்த விழுதில் கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

இப்போது சேம்பு இலைகளை  வெளியே எடுத்துக் கொண்டு அவற்றில் அரைத்த விழுதை ஒரு பக்கமாகத் தடவவும்.  அரை அங்குலம் கனத்துக்குத் தடவலாம்.  தடவாத மறு பாதியை அப்படியே தடவி இருக்கும் பக்கம் பாதியாக மடிக்கவும்.  இப்படியே எல்லா இலைகளிலும் அரைத்த விழுதைத் தடவி இலையை மடித்துக் கொள்ளவும்.  இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.

வேக வைத்ததை வெளியே எடுத்து ஒரு கத்தியால் சின்னத் துண்டங்களாகப் போடவும்.  இரும்பு வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உ.பருப்புப் போட்டு நறுக்கிய துண்டங்களை மொறுமொறுப்பாக வறுத்து/ பொரித்து எடுக்கவும். 

இதை மாலை தேநீரோடும் சாப்பிடலாம்.  சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ளும்படியும் வைத்துக் கொள்ளலாம்.  இங்கே சேம்பு இலையே கிடைக்க மாட்டேன் என்கிறது.  திருச்சி போகணுமோ என்னமோ! :)

Tuesday, November 19, 2013

பசிக்குதா, சாப்பிட வாங்க!

இப்போ சொல்லப் போறது ரொம்ப எளிமையான ஒரு சமையல் குறிப்பு. இதுக்கு நீங்க மசாலாவெல்லாம் போட்டு அரைக்க வேண்டாம். காலம்பர சாதம் வைச்சால் சில சமயம் செலவே ஆகாமல் மிஞ்சிப் போகும். அது இருந்தாலே போதும்.  அல்லது வெளியே போயிட்டு வந்து அலுப்பா இருக்கா. சட்டுனு இதைப் பண்ணிடலாம். வெஜிடபிள் சாதம். வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்.  இது ஒண்ணும் வெஜ் பிரியாணியோ அல்லது புலவோ இல்லை. இதுக்குத் தேவையான காய்கள் ரொம்பவெல்லாம் வேண்டாம்.

நான்கு பேருக்குத் தேவையானது

இரண்டு கிண்ணம் சமைத்த அரிசிச் சாதம்

பீன்ஸ்   50 கிராம் அல்லது பத்துப் பதினைந்து

காரட் நடுத்தரமாக இரண்டு

பட்டாணி (பச்சை கிடைக்காவிட்டால் காய்ந்த பட்டாணியை முன் கூட்டியே ஊற வைக்கவும்.) பட்டாணி இல்லாவிட்டாலும் பாதகம் இல்லை.

தக்காளி பெரிது ஒன்று அல்லது நடுத்தரம் இரண்டு (வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துக் கொள்ளவும்.)

வெங்காயம் (தேவை என்றால். வெங்காயம் இல்லாமலும் பண்ணலாம்.) பெரிது ஒன்று.

லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு

கிராம்பு இரண்டு

பெரிய ஏலக்காய் ஒன்று

மசாலா இலை ஒரு சின்னத் துண்டு

சோம்பு(விருப்பம் இருந்தால்)

ஜீரகம்

மிளகாய்த் தூள்  ஒரு டீஸ்பூன்அல்லது சாம்பார் பொடி இருந்தால் கூடப் போதும்

மிளகாய்த் தூள்போட்டால் தனியாத் தூள் ஒரு டீஸ்பூன் சேர்க்கணும்.

சர்க்கரை அரை டீஸ்பூன்

தாளிக்க, வதக்கப் போதுமான எண்ணெய்.  ஒரு சின்னக் குழிக்கரண்டி

கொத்துமல்லி ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் நான்கு

இஞ்சி ஒரு துண்டு

மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்

காய்களை நீளமாக ஒரு அங்குல அளவுக்கோ அல்லது துண்டமாகவோ நறுக்கவும்.  பச்சை மிளகாய், இஞ்சியையும் நறுக்கவும்.


அடி கனமான ஒரு வாயகன்ற பாத்திரம் எடுத்துக்கொண்டு எண்ணெயை அதில் ஊற்றிக் காயவிடவும்.  காய்ந்ததும் முதலில் அரை டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், வெங்காயம் போடுபவர்கள் வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கவும்.  பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்க்கவும்.  வெங்காயம் நன்கு வதங்கியதும் காய்களைச் சேர்த்து வதக்கவும்.  காய்கள் நன்கு வதங்க வேண்டும்.  மஞ்சள் பொடி, சாம்பார் பொடி அல்லது மிளகாய்ப் பொடி, தனியாப் பொடியைச் சேர்க்கவும்.  காயை நன்கு கலக்கவும்.  இப்போது தோலுரித்து வைத்திருக்கும் தக்காளியை நறுக்கிச் சேர்க்கவும்.  தேவையான உப்பைச் சேர்த்துச் சிறிது நேரம் மூடி வைத்து வதக்கவும்.  காய்கள் வெந்துவிட்டனவா என்று பார்க்கவும்.  காரட், பீன்ஸ் போன்றவை பச்சை வாசனை போகவும், பட்டாணி அமுங்கும்படியும் வெந்திருக்க வேண்டும்.  வெந்ததும் சிறிது நேரம் வதக்கி விட்டுத் தயாராக வைத்திருக்கும் சாதத்தை இதில் போட்டுக் கலக்கவும்.  நன்கு கலந்ததும் பச்சைக் கொத்துமல்லி போட்டு அலங்கரிக்கவும்.

உங்களுக்குப் பிடித்தமான பச்சடியுடன் சாப்பிடலாம்.  வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி போன்றவற்றோடு சாப்பிடலாம்.

இதையே ரைஸ் குக்கரிலோ அல்லதுகுக்கரிலோ வைப்பது என்றால் சாதத்தை முன் கூட்டித் தயாரிக்காமல்  ஒரு கிண்ணம் அரிசியைக் களைந்து காய்களைப் போட்டுச் சிறிது வதக்கியதுமே அரிசியையும் போட்டு வறுத்துக் கொண்டு. அரிசிக்குத் தேவையான தண்ணீரை மட்டுமே சேர்த்து ரைஸ் குக்கரிலோ, குக்கரிலோ வைக்கவும்.  வாயகன்ற பாத்திரத்தில் அப்படியே சமைப்பது எனில் நீங்கள் வைக்கும் பாத்திரத்திலே எல்லாவற்றையும் போட்டு வதக்கி, அரிசியையும் வறுத்துக் கொண்டு, பக்கத்திலே இன்னொரு பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்க விட்டு அரிசியை வறுத்ததும் சேர்க்கவேண்டும்.  உப்பைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு ஒரு மூடியால் மூட வேண்டும். மேலேயும் ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைக்கலாம்.  அடிக்கடி திறந்து பார்த்துக்கிளறவும்.

இதே சாதம் அரைத்துவிட்டுச் செய்வது:

வெங்காயம் சேர்த்தால் பாதியளவு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி பாதியை அரைக்கவும்.  காய்களை வதக்குகையில் இந்த அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.  பின்னர் அரிசியையோ, சாதத்தையோ சேர்க்கவும்.  சாதத்தைச் சேர்ப்பது எனில் காய்கள் நன்கு வேக வேண்டும்.  மசாலா சாமான்கள் தாளிக்கவில்லை எனில், கரம் மசாலாப் பொடியை இறக்கும்போது சேர்க்கலாம்.  

Sunday, November 17, 2013

பக்கோடா அம்மா, பக்கோடா!

அடுத்துப் பக்கோடா, வெங்காயப் பக்கோடா தென்னிந்திய முறை பார்க்கணும்.  ஏன்னா, வட மாநிலங்களில் நம்ம பஜ்ஜியையே சில சமயம் பக்கோடானு சொல்லுவாங்க. அதோட அங்கே நாம பண்ணற மாதிரி கரகரப்பான வெங்காயப் பக்கோடாவை "ஜல் கயி" (தீஞ்சு போச்சு) னு சொல்லிடுவாங்க.  அவங்களுக்கெல்லாம் மிருதுவாகவே வேணும். அன்னன்னிக்குத் தான் பண்ண முடியும்.  ஆனால் நாம் பண்ணற வெங்காயப் பக்கோடாவை குறைந்தது ஒரு வாரம் வைச்சுக்கலாம்.  எண்ணெய் நல்ல சுத்தமான கடலை எண்ணெயாகவோ, அல்லது தரமான சமையல் எண்ணெயாகவோ இருந்தால் போதும்.

தேவையான சாமான்கள்:

கடலை மாவு இரண்டு கிண்ணம்

அரிசி மாவு அரைக்கிண்ணம்

மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு தேவைக்கு

பெருங்காயத் தூள் 1/2 டீஸ்பூன்

வெங்காயம் சின்னது என்றால் கால் கிலோவுக்குக் குறையாமல். அரைகிலோ இருந்தாலும் நல்லதே.  உரிச்சுப் பொடியாக நறுக்கவும்

பெரிய வெங்காயம் எனில் 4 அல்லது 5 தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்,  அல்லது மெலிதாகச் சீவிக் கொள்ளவும்.

கருகப்பிலை, கொத்துமல்லி ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் 6  பொடியாய் நறுக்கவும்.

இஞ்சி ஒரு சின்னத் துண்டு பொடியாய் நறுக்கவும்.  முக்கியமான குறிப்பு இஞ்சியை எப்போதுமே தோல் சீவிட்டுப் பயன்படுத்தணும்.  அதே சுக்கு என்றால் தோலோடு பயன்படுத்தணும். 

பொரிக்க எண்ணெய் தேவையான அளவுக்கு.


ஒரு வாயகன்ற பேசினில் கடலை மாவு, அரிசி மாவைப் போட்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் போட்டு நன்கு கலக்கவும்.  கைகளால் கலத்தலே நல்லது. பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுக் கலந்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயத்தைச் சேர்க்கும் முன்னர் ஒரு  சின்னக் குழிக்கரண்டி அளவு எண்ணெயை நன்கு புகை வரும்படி காய வைத்து மாவில் கலக்கவும்.  மாவு முழுவதும் எண்ணெய் நன்கு கலந்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து கொண்டே இருக்கவும்.  வெங்காயத்தில் இருக்கும் நீரே போதுமானது.  அப்படித் தேவை எனில் கொஞ்சம் தெளித்துக் கொள்ளவும். அதிகம் நீர் விட்டுப் பிசைய வேண்டாம்.  கொஞ்சம் நேரம் ஆகும். ஆனால் இப்படிக் கலப்பதில் தான் பக்கோடாவின் சுவையும், கரகரப்பும் அடங்கி உள்ளது.  

பிடிச்சால் உருண்டைப்பிடியாகவும், உதிர்த்தால் கொஞ்சம் சேர்ந்தாப்போலும் வரும் வரை கலக்கவும்.  கட்டாயம் நீர் தேவை எனில் பார்த்துக் கொஞ்சமாக மொத்தம் கால் டம்ளருக்கு மேல் இராதபடி நீரைச் சேர்க்கவும்.  இப்போது கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பில் ஏற்றி எண்ணெயைக் காய வைக்கவும்.  எண்ணெய் காய்ந்த பின்னர் அடுப்பைத் தணித்துக் கொண்டு, பிசைந்த பக்கோடா மாவில் கொஞ்சம் போல் எடுத்துப் போட்டுப் பார்க்கவும்.  பொரிந்து மேலே வந்தால் எண்ணெய் நன்கு காய்ந்திருக்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நன்கு சிவக்கும் வரை வேக விட்டுக் கரண்டியால் எடுத்து வடிதட்டில் போடவும்.

கொஞ்சம் ஆறியதும் எடுத்துப் பார்க்கவும்.  நன்கு கரகரவென்றிருக்கும்.  இது ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்.

Saturday, November 16, 2013

கொட்டும் மழைக்கு சூடான பஜியா!

நம்ம ஊர் தூள் பஜ்ஜியை வடமாநிலங்களில் பஜியா அல்லது பகோடா என்பார்காள்.  இதற்குத் தனிக் கடலைமாவும், எல்லாக் காய்களும் இருத்தல் நலம்.  அங்கே இதோடு கொத்துமல்லி, புதினா, பாலக் கீரை, வெந்தயக்கீரை போன்றவையும் சேர்ப்பது உண்டு. இவற்றை மட்டும் தனியாகக் கலந்தும் போடுவது உண்டு. 

தூள் பஜ்ஜி செய்முறை: 

கடலை மாவு இரண்டு கிண்ணம்,

மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,

குடமிளகாய் பெரிது ஒன்று அல்லது பச்சை மிளகாய்  அல்லது பஜ்ஜி மிளகாய் இரண்டு அல்லது மூன்று.

பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை

உப்பு தேவைக்கு

கலக்க நீர்

பொரிக்க எண்ணெய்

காய்கள்: உ.கி.  பெரிது ஒன்று'

வெங்காயம்(தேவையானால்) பெரிது இரண்டு

புடலை, பீர்க்கை, செளசெள, கத்தரிக்காய் போன்ற காய்கள்  நறுக்கி வகைக்கு அரைக்கிண்ணம்,

கருகப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்றவை நறுக்கி இரண்டு டேபிள் ஸ்பூன்


கடலை மாவில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.  எந்த மாவும்  நீர் விட்டுக் கலப்பதற்கு முன்னால் கையால் நன்கு உப்பும், காரமும் சேரும்படி கலக்க வேண்டும்.  பின்னரே நீர் விட்டுக் கலந்தால் பஜ்ஜியாகப் போட்டால் உப்பலாக வரும்.  பஜியாவும் உப்பலாகவும் வரும்.  நன்கு கலந்த பின்னர் நீர் விட்டுக் கரைக்கவும்.  இட்லி மாவு பதத்துக்குக் கரைத்தால் போதும்.  நறுக்கிய காய்களை அதில் போட்டு கருகப்பிலை, கொத்துமல்லி, புதினா, பச்சை மிளகாய் போன்றவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கைகளால் அள்ளி எடுத்துத் தூவினாற்போல் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  இருபக்கமும் பொன் முறுவலாக வந்த பின்னர் எடுத்து வடிகட்டியில் போட்டு வடிகட்டவும்.  

இதைப் புளிச்சட்னி, பச்சைச் சட்னியுடன் பரிமாறலாம்.  பரிமாறும் முன்னர் மேலே காரட் துருவல், கொத்துமல்லி நறுக்கியது, வெங்காயம் பொடியாக நறுக்கியது ஆகியவற்றைத் தூவித் தரலாம்.  சாஸோடு சாப்பிடப் பிடித்தவர்கள் அதனோடும் சாப்பிடலாம்.

Monday, November 11, 2013

பஜ்ஜி ரெடி, சாப்பிட வாங்க!

நேத்திக்கு எழுதின பதிவு சொல்லாமல் கொள்ளாமல் பாதியிலேயே பப்ளிஷ் ஆயிடுச்சு.  இப்போ பஜ்ஜிக்கு வேணுங்கற பொருட்களைப் பார்ப்போம்.

கடலை மாவு ஒன்றரை கிண்ணம்

அரிசி மாவு அரைக்கிண்ணம்

மைதா மாவு 1/4 கிண்ணம்

உப்பு தேவைக்கு

பெருங்காயத் தூள் 1/4 டீ ஸ்பூன்

மிளகாய்த் தூள் 3 டீஸ்பூன் (தேவையானால் இன்னும் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்)

கரைக்க நீர்

பொரிக்க எண்ணெய்

காய்கள் விருப்பம் போல் இவை அனைத்தும் அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு, மூன்று.

வாழைக்காய்,

உருளைக்கிழங்கு,

புடலங்காய்,

சேப்பங்கிழங்கு,

வெண்டைக்காய்,

கத்திரிக்காய்,

செளசெள,

பீர்க்கங்காய்(இது எண்ணெய் குடிக்கும்)

வெங்காயம்

காலிஃப்ளவர்,

பேபி கார்ன்,

ப்ரெட்(உப்பு ப்ரெட் தான் நல்லா இருக்கும், சான்ட்விச் ப்ரெட் என்று கேட்டு வாங்கணும்)

அப்பளம்.


முதலில் மேலே சொன்ன மூன்று மாவுகளையும் நன்கு சலித்துக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீரை விட்டுக் கரண்டியால் அல்லது துடுப்புப் போன்றதொரு கரண்டியால், இயன்றால் கையால் நன்கு கலக்கவும். மாவுக்கலவை இட்லி மாவு பதத்துக்கு வந்ததும் நீரை நிறுத்தவும்.  ஆனால் கலப்பதை  நிறுத்த வேண்டாம்.  நன்கு கலக்கவும்.  அப்போத் தான் பஜ்ஜி குண்டு குண்டாகஉப்பலாகவும், அதே சமயம் ஓரம் முறுகலாகவும் வரும்.

மாவை நன்கு கலந்ததும், கொஞ்ச நேரம் வைத்துவிட்டுக் காய்களைத் தயார் செய்து கொள்ளவும்.  காய்களை வெட்டும்போதே அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும்.  வாழைக்காய் என்றால் நீளமாகவும், கத்தரி, உருளை, வெங்காயம் ஆகியவற்றை வட்டமாகவும், புடலை, செளசெள, பீர்க்கங்காய் ஆகியவற்றை நீள் சதுரமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.  பேபி கார்ன் வட்டமாக வெட்டலாம்.  ப்ரெட் என்றால் முக்கோண டிசைன், அல்லது உங்களுக்குப் பிடித்த டிசைனில் வெட்டிக் கொள்ளவும்.  ஸ்டஃப் செய்து தயாரித்த சான்ட்விச்சைக் கூட இந்த பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.  ஸ்டஃபிங் வெளியே வந்துவிடாமல் கவனமாகச் செய்ய வேண்டும்.

சேப்பங்கிழங்கை வேக வைத்துக் கொண்டு பஜ்ஜி மாவில் முக்கிப் போடலாம்.  வெண்டைக்காயை நன்கு கழுவி நீரை வடித்து ஒரு துணியால் காய்களைத் துடைத்துக் கொண்டு  ஒரு அங்குல நீளத்துக்கு நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி கலந்து வைத்துவிட்டுப் பின்னர் அவற்றை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கலாம்.

பஜ்ஜியைப் போடும் முன்னர் கொஞ்சம் மாவை எண்ணெயில் போட்டு அது மேலே மிதந்து வருகிறதா என்று பார்த்துவிட்டு பஜ்ஜிக்கான காயை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  இரு பக்கமும் ஒரே மாதிரியாக நிறம் வரும்படிப் பொரித்தெடுத்த பின்னர் வடிகட்டியில் போட்டு எண்ணெயை வடித்துவிட்டு, கொத்துமல்லிச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

பஜ்ஜி சாப்பிட ரெடியா, ரெட்ட ரெடி!

இப்போ பஜ்ஜி,போண்டா பக்கோடா வகைகளைப் பார்ப்போம்.  முதலே பஜ்ஜி. இதுக்குப் பாரம்பரிய முறையில் அரிசி, து.பருப்பு, க.பருப்பு ஊற வைத்து உப்புக் காரம் போட்டு அரைப்பாங்க.  நல்ல நைசா அரைக்கணும்.  உளுத்தம்பருப்பைத் தனியா ஊற வைச்சுக் கொட,கொடனு அரைச்சு முன் சொன்ன மாவை இதில் கலந்து பஜ்ஜி போடுவாங்க. பஜ்ஜி நிறமும், சுவையும், மணமும் மனதை அள்ளும்.  இப்போல்லாம் (குறைந்தது ஐம்பது வருடங்களாகவே) இப்படிப் பண்ணறதில்லை.  என் அம்மாவோட அம்மா மேற்சொன்ன மாதிரி பஜ்ஜி பண்ணிச் சாப்பிட்டிருக்கேன்.  ஆனால் ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் பண்ணுவாங்க.  அதே போல் அடையும்.  எல்லாம் ஊற வைச்சுக் கையாலே அரைச்சுக் கெட்டியாக இருக்கும் அடை மாவைக் கரண்டியாலோ, கையாலோ அடைக்கல்லில் போட்டுட்டு வாழை இலையில் எண்ணெய் தடவி அந்த மாவை அடையாகப்  பரத்துவாங்க.  அதுக்கப்புறம் அந்த அடையில் நான்கைந்து இடங்களில் ஓட்டைபோட்டுக் கரண்டியால் எண்ணெயை விடுவாங்க.  ஒரு அடை மட்டுமே பெரியவங்க சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு ஒரு அடையைப் பகிர்ந்து கொடுப்பாங்க.  அதைத் தொட்டுக் கொண்டு சாதம் சாப்பிடணும். வைகோ சார் இதைக் கேட்டால்  என்ன நினைச்சுப்பார்னு  எனக்கு இப்போத் தோணும்.  ஹிஹிஹிஹி!  இப்போ பஜ்ஜிக்கு வருவோம்.  நாம பண்ணப் போறது ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட உலர்ந்த மாவில் தான்.  முதலில் மாவுகளில் செய்யும் முறை சொல்றேன்.  அதுக்கப்புறமா இட்லி மாவில் செய்யறதைச் சொல்றேன்.  கடைசியில் உளுந்து அரைச்சுப்போட்டுச் செய்வதையும் பார்த்துடுவோம், என்ன சொல்றீங்க? ரெடியா, நான் ரெடி ரெட்ட ரெடி!


Thursday, October 31, 2013

லாடு வகைகள் தொடர்ச்சி--விடமாட்டோமுல்ல! :)

இப்போவே சொல்லிக்கிறேன்.  இந்த முறையில் நான் செய்தது இல்லை; இல்லை;  இல்லவே இல்லை.  ஆனால் யு.எஸ்ஸில் இருக்கும் என் மகளார் செய்கிறார்.  அவர் சொல்லித் தான் நான் இதைப் போடறேன்.  ஒரு புது மாதிரி ரவா லாடுவைப் பார்க்கப் போறோம்.  ஆனால் இதை ரொம்ப நாள் வைச்சுக்க முடியாது.  வைச்சுக்கும் நாளிலேயும் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைக்கவும்.

ரவை ஒரு கப்  பேணி ரவைனு கேளுங்க, ரொம்பவே நைசாக் கிடைக்கும்.

சர்க்கரை ஒரு கப்

தேங்காய்த் துருவல் ஒரு கப்

முந்திரிப்பருப்பு,

திராக்ஷை வகைக்குப் பதினைந்திலிருந்து இருபது வரை

ஏலக்காய்ப் பவுடர் ஒரு டீஸ்பூன்

நெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு சின்னக் கிண்ணம்

பால் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது தேவைப்படும் வரை.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி ரவையை நல்லா வாசனை வரும்வரை வறுக்கவும்.  தனியா வைங்க.  ஏலக்காய்ப் பவுடரைக் கலந்துடுங்க.

சர்க்கரையை மிக்சி ஜாரில் பொடித்துக் கொண்டு தனியா வைங்க.

இப்போ மிச்சம் நெய்யிலே முந்திரிப்பருப்பு, திராக்ஷையை வறுத்து ரவையோட சேர்த்துட்டு, அடுப்பில் கடாயில் மீதம் இருக்கும் சொச்சம் நெய்யில் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுக்கவும்.  தேங்காய் வறுபட்டதும், ரவை+மு.பருப்பு, திராக்ஷை+ஏலம் சேர்த்த கலவையைப் போட்டுச் சிறிது வறுக்கவும்.  இரண்டும் நன்கு கலந்ததும் சர்க்கரைப் பவுடரைச் சேர்த்து ஒரு நிமிஷம் வறுக்கவும்.  சர்க்கரை நன்கு கலந்துவிட்டது தெரிந்தால் அடுப்பை அணைத்துவிட்டுப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலவையில் ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கிளறவும்.  உருண்டைகள் பிடிக்க வரும் என்பது உங்களுக்குப் புரியும் சமயம் பால் ஊற்றுவதை நிறுத்தவும்.  கொஞ்ச நேரம் ஆற வைத்துவிட்டுச் சூடு பொறுக்கும் வண்ணம் இருக்கையிலேயே உருண்டைகள் பிடித்துக் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.  உடனடியாகத் தின்று தீர்த்துவிடவும்.


Tuesday, October 29, 2013

லாடு வகைகள், தொடர்ச்சி!

குஜராத்தில் உளுத்தம்பருப்பில் லாடு செய்வது மிகவும் அதிகம்.  நல்ல தோல் நீக்கிய

வெள்ளை உளுத்தம்பருப்பு  கால் கிலோ

வெல்லம் தூளாக (பாகு) கால் கிலோ

ஏலத்தூள்

முந்திரிப்பருப்பு, பாதம், பிஸ்தா(தேவையானால்)

கசகசா  50 கிராம்

நெய் நூறு கிராம்.

உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக்கவும்.  இதோடு தூள் வெல்லத்தைச் சேர்த்துக் கொண்டு நெய்யில் வறுத்த மு.பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளவும்.  நெய்யைச் சூடாக்கிக் கலவையில் ஊற்றி லாடு பிடித்துக் கொள்ளவும்.  முன்னதாக ஒரு தாம்பாளத்தில் கசகசாவைப் பரத்திக் கொட்டி வைக்கவும்.  இந்தப் பரத்தலில் லாடை ஒரு புரட்டுப் புரட்டித் தனியாக எடுத்து வைக்கவும்.  இது பெண்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதோடு அல்லாமல், இடுப்புக்கும் வலுவைத் தரும்.

மோகன் லாடு:  இதிலே கொஞ்சம் வேலை அதிகம்.  என்றாலும் முடிஞ்சவங்க முயன்று பார்க்கலாம்.

கோதுமை மாவு கால் கிலோ

சர்க்கரை கால்கிலோ

மு.பருப்பு ஐம்பது கிராம்,

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

பொரிக்க நெய் அல்லது டால்டா அல்லது ஏதேனும் வனஸ்பதி அரை கிலோ


கோதுமை மாவை சிறிதளவு உப்புச் சேர்த்து நன்கு பிசையவும்.  பிசைந்த மாவை அரை மணி ஊற வைத்து மெலிதான பூரிகளாக இட்டு நெய்யில் பொரிக்கவும். நெய்யில் பொரித்தால் தான் நன்றாக இருக்கும்.  அவரவர் வசதிப்படி செய்யவும்.  நெய் இல்லை எனில் டால்டா அல்லது ஏதேனும் வனஸ்பதியில் செய்யலாம். பொரித்த பூரிகள் மொறுமொறுப்போடு இருக்க வேண்டும்.  ஆகவே நன்கு சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

இந்தப் பூரிகளை  முன்னெல்லாம் கல்லுரலில் போட்டு இடிப்பார்கள்.  இப்போது அகலமான மிக்சி ஜாரில் போட்டுப் பொடியாக்கவும்.  சர்க்கரையையும் பொடித்துக் கொண்டு பூரிக் கலவையோடு சேர்க்கவும்.  வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலத்தூள் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.  முன் சொன்னது போல் கசகசாவிலும் புரட்டி எடுக்கலாம்.

இதையே வெல்லம் சேர்த்தும் செய்வது உண்டு.  அது சூர்மா லாடு எனப்படும்.  ராஜஸ்தானில் தால் பாட்டியுடன், (காரமான தால், கெட்டியான பாட்டி) இந்த இனிப்பான சூர்மாவும் சில்லென்ற லஸ்ஸியும் மதிய உணவாக உண்பார்கள். 

தீபாவளி பக்ஷணங்கள், லாடு வகைகள்!

இந்த வருஷம் தீபாவளி கிடையாது என்றாலும் நமக்குக் கொடுக்கிறவங்களுக்குத் திருப்பிக் கொடுக்க, வீட்டுக்கு வரவங்களுக்குக் கொடுக்க என ஏதேனும் கொஞ்சம் செய்து வைச்சுக்கணும்.  இம்முறை கோதுமை+கடலைப்பருப்பு லாடு செய்ய எண்ணம்.  கோதுமையும் கடலைப்பருப்பும் வாங்கி வைச்சிருக்கேன்.  நாளைக்குத் தான் திரிக்கணும்/அரைக்கணும். :)

இது சுமார் முப்பது லாடுகள்  எலுமிச்சை அளவு வரும்படி செய்யத் தேவையான  பொருட்கள்:

கோதுமை கால் கிலோ

கடலைப்பருப்பு கால் கிலோ

சர்க்கரை  முக்கால் கிலோ

போதுமானது.  தித்திப்பு அதிகம் வேண்டும்னா ஒரு கிலோ போட்டுக்கலாம். ஆனால் அது ரொம்பவே ஜாஸ்தியாயிடும்.  நான் அரைகிலோ தான் போடப் போறேன்.  நம்ம ரங்க்ஸ் உடம்பிலேயே சர்க்கரைத் தொழிற்சாலை வைச்சிருக்கறதாலே அரைச் சர்க்கரை தான் எல்லாத்துக்கும்.

முந்திரிப்பருப்பு, ஐம்பது கிராம்,

திராட்சைப் பழம் (கிஸ்மிஸ்) ஐம்பது கிராம்

ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

நெய் கால் கிலோ


முதலில் கோதுமையையும், கடலைப்பருப்பையும் சுத்தம் செய்து கொண்டு, வெறும் வாணலியில் கோதுமை பொரியும் வரையும், கடலைப்பருப்பு சிவக்கும் வரையும் வறுக்கவும்.  மெஷினில் கொடுத்து மாவாக்கவும்.  சர்க்கரை அதிகம் போடுபவர்கள் மெஷினிலேயே சர்க்கரையையும் அரைக்கலாம். நான் கொஞ்சமாய்ப் போடுவதால் சர்க்கரையை மிக்சியில் அரைச்சுடுவேன்.  வறுத்து அரைத்த மாவில் சர்க்கரைத் தூளைக் கலக்கவும்.  முன்னெல்லாம் குழைவு ஜீனி எனப் பெயர் கொண்ட மாவு ஜீனி கிடைக்கும்.  லாடு வகைகளுக்கு அது தான் போடுவோம்.  இப்போ குழைவு ஜீனினு கேட்டாலே புரியறதில்லை. :(  நெய்யில் மு.பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்க்கவும். ஏலப்பொடியையும் கலக்கவும்.

வாணலியில் நெய்யை ஊற்றி நன்கு புகை வரும்வரை காய்ச்சவும். சர்க்கரையும், மாவும் கலந்த கலவையில் அந்த நெய்யை அப்படியே ஊற்றி நன்கு கரண்டியால் கலந்து விடவும்.  மொத்த மாவுக்கலவைக்கும் நெய் போய்ச் சேரும் வண்ணம் நன்றாகக் கலக்கவும். சற்று நேரம் வைத்து விட்டுப்பின்னர் உருண்டைகள் பிடிக்கலாம்.  ஒவ்வொருத்தர் நெய்யைக் காய்ச்சிக் கொண்டே மாவில் ஊற்றிச் சுடச் சுடப் பிடிப்பார்கள். அப்படியெல்லாம் கையை வேக வைத்துக்கொள்ள வேண்டாம்.  நான் மற்ற பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் இப்படி லாடுக்கு நெய்யை ஊற்றி எடுத்து வைத்து விட்டுப் பின்னர் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு மெதுவாக வந்து பிடித்து வைப்பேன்.  உருண்டை இறுகி உடையாமல் வரும்.  தைரியமாய்ச் செய்யலாம்.


ரவா உருண்டை:

ரவை அரை கிலோ, சர்க்கரை அரை கிலோ, மு.பருப்பு, திராக்ஷைப்பழம், ஏலப்பவுடர், நெய்.

முன் சொன்னாற்போலவே ரவையை நன்கு வறுத்து அரைத்து மாவாக்கவும். சர்க்கரைப்பவுடர், மு.பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும்.  நெய்யை முன் சொன்னது போலக் காய வைத்துக் கொண்டு மாவுக் கலவையில் ஊற்றிக் கொஞ்சம் ஆற வைத்து உருண்டைகள் பிடிக்கலாம்.

நாளைக்கு கோதுமை உருண்டை செய்துவிட்டால் படம் எடுத்துப் போடறேன்.


பொட்டுக்கடலை லாடு அல்லது மாலாடு:

திருநெல்வேலி, மதுரைப்பக்கம் இந்த லாடு இல்லாத தீபாவளியோ, கல்யாணங்களோ கிடையாது.  முன்னெல்லாம் கொண்டைக்கடலை வாங்கி ஊற வைத்துப் பொரித்துத் தோல் நீக்கி அரைத்துனு கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்களாம்.  இப்போதெல்லாம் பொட்டுக்கடலையையே வறுத்துத் தோல் நீக்கி மாவாக்கி சுலபமாச் செய்துடறாங்க.

அரை கிலோ பொட்டுக்கடலை

முக்கால் கிலோ சர்க்கரை

மு.பருப்பு, திராக்ஷை வகைக்கு ஐம்பது கிராம்.

ஏலப் பொடி.

இதுக்குக் கொஞ்சம் நெய் இழுக்கும்.  அரைகிலோவுக்குக் குறையாமல் நெய் வேண்டும்.  அரைகிலோ முழுதும் செலவாகாது. என்றாலும் தட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொட்டுக்கடலையைத் தோல் நீக்கிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மாவாக்கவும்.  சர்க்கரைப் பவுடரோடு வறுத்த மு.பருப்பு, திராக்ஷைப்பழம், ஏலத்தூள் சேர்க்கவும்.  நெய்யை நன்கு காய வைத்து மாவுக்கலவையில் கொட்டவும். கொஞ்சம் சேர்ந்தாற்போல் இருந்தாலும் பயப்பட வேண்டாம்.  ஆறியதும் உருண்டைகள் பிடிக்கவும்.  உருண்டை நன்கு கெட்டியாக உடையாமல் வரும்.

Friday, October 25, 2013

வெந்தயக் குழம்புன்னா என்னனு தெரியுமா?

சரி, இப்போ கொஞ்சம் வேகமா வெந்தயக் குழம்பை ஒரு பார்வை பார்த்துட்டு சில, பல தீபாவளி பக்ஷணங்களையும் ஒரு பார்வை பார்த்துடுவோம்.  ஏற்கெனவே சிலது எழுதி இருக்கேன்.  அதிலே இல்லாதது ஏதேனும் இருக்கானு பார்த்துட்டுக் கொடுக்கணும். :)

வெந்தயக் குழம்புக்குத் தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை அளவு,

தேவையான அளவு உப்பு,

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,

இவற்றில் ஏதேனும் ஒரு காய் , முருங்கை, கத்திரி, அவரை, கொத்தவரை, பறங்கிக்காய் போன்றவை துண்டங்களாக நறுக்கியவை ஒரு கைப்பிடி அளவுக்கு, உதாரணமாக முருங்கை என்றால் ஒன்று, கத்திரிக்காய் இரண்டு, அவரை நாலைந்து, கொத்தவரை ஒரு கைப்பிடி, பறங்கிக்காய் ஒரு சின்ன துண்டு என ஏதேனும் ஒரு காயை நறுக்கி வைக்கவும்.

கருகப்பிலை,

பெருங்காயம்,

மி.வத்தல்,

கடுகு,

க.பருப்பு,

உ.பருப்பு,

து,பருப்பு,

வகைக்கு அரை டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை.  காரம் வேண்டுமெனில் இன்னும் இரண்டு போடலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு,

ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சமையல் எண்ணெய் தேவையான அளவு, ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு குழிக் கரண்டி அளவு தேவைப்படும்.

இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளலாம். அல்லது வெந்தயத்தை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மி.வத்தலும், து.பருப்பும் எண்ணெயில் வறுத்துக்கலாம்.  பொடி செய்கையில் மஞ்சள் பொடியைச் சேர்த்துக் கொண்டுவிடவும்.  புளியைக் கரைத்து இரண்டு கிண்ணம் வருகிறாப்போல் வைத்துக் கொள்ளவும்.

கல்சட்டி, வாணலி, அல்லது அடி கனமான உருளி, நான் ஸ்டிக் பாத்திரம் ஏதேனும் ஒன்றில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ,பருப்பு, து,பருப்பு வகைகளைப் போட்டுக் காய்ந்த மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு தானையும் போட்டு நன்கு வதக்கவும்.  பின்னர்  புளிக் கரைசலைச் சேர்த்து, உப்பையும் சேர்க்கவும்.  புளி வாசனை போகக் கொதித்ததும், தான் வெந்துவிட்டதா என்றும் பார்த்துக் கொண்டு வறுத்துப் பொடித்த பொடியைத் தேவையான அளவு சேர்க்கவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கலாம்.  இது அவரவர் இஷ்டம். பொடியைப் போட்ட பின்னர் குழம்பை அதிகம் கொதிக்க விடாமல் கீழே இறக்கவும்.  எண்ணெய் பிரிந்து மேலே வந்திருக்கும்.  வெந்தய வாசனையோடு குழம்பு நன்றாக இருக்கும்.  அரிசி அப்பளம் சுட்டு இந்தக் குழம்போடு சாதத்தில் ஊற்றிச் சாப்பிட சுவையோ சுவை.  மோர் சாதத்துக்கும் அருமையான துணை.  ஒரு சிலர் இதில் தேங்காய்த் துருவல் சேர்க்கின்றனர். இன்னும் சிலர் காய்களுக்குப் பதிலாக ஏதேனும் வற்றல்களும் போடுகின்றனர்.  அவரவர் விருப்பம் போல் செய்யலாம்.

இந்தப் பொடி நீண்ட நாட்கள் வரவேண்டுமெனில் வெறும் வாணலியில் சாமான்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்துக் கொஞ்சம் கரகரப்பாகப் பொடி செய்து கொண்டு ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டு அவ்வப்போது தேவையான சமயம் எடுத்துப் பயன்படுத்தலாம்.  பொடி கைவசம் இல்லாமல் திடீரெனச் செய்கையில் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து போட்டுப் பயன்படுத்தலாம்.

Saturday, September 28, 2013

இன்னிக்கு வாழைக்காய்ப் பொடி! :))))

திடீர்னு குழம்பை விட்டுட்டுப் பொடியைப் பத்தி எழுதறேன்னு நினைச்சீங்களா? ஹாஹா, இன்னிக்கு வாழைக்காய்ப் பொடி செய்தேன். அப்புறமாத் தான் படம் எடுக்கலையேனு நினைச்சேன்.  அதனால் என்ன? இன்னொரு தரம் செய்யும்போது படம் எடுத்துடலாம்.  இப்போச் செய்முறை பார்ப்போமா?

நல்ல முத்தின வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று ,
நடுத்தர அளவு எனில் இரண்டு.

மி.வத்தல் 5 அல்லது ஆறு அவரவர் காரம் சாப்பிடும் வழக்கத்துக்கு ஏற்றாற்போல் குறைந்த பக்ஷம் 8 வரை.

உப்பு,

க.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உ.பருப்பு  இரண்டு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு.


வறுக்க நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஏதானும். ஒரு கரண்டி

வாழைக்காயை முன்பெல்லாம் குமுட்டி அடுப்பில் போட்டுச் சுடுவோம்.  சுட்டால் பொடி டேஸ்ட் தனி தான்.  இப்போக் குமுட்டி இருக்கு.  கரி இல்லை. :( ஆகவே வெந்நீரில் தான் போட்டேன்.  ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை விட்டுக் கொதிக்க வைத்து.  வாழைக்காயை இரண்டாக வெட்டிப் போடவும்.  கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அங்கே இங்கே போகாமால் நீரில் போட்ட வாழைக்காயின் ஒரு பக்கம் கறுப்பாக ஆனதும் கறுப்பாக ஆகாத மறுபக்கம் திருப்பி விடவும்.  சீக்கிரமே கறுப்பாகிவிடும்.  உடனே எடுத்துவிடவேண்டும்.  வாழைக்காய் முழுதும் வேகக் கூடாது.  தோல் உரியும் வண்ணம் நிறம் மாறினால் போதுமானது.  இப்போது வாழைக்காயைத் தோலை உரிக்கவரும்.  தோல் உரித்துக் காரட் துருவலில் நன்கு துருவித் தனியாக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், கடலைப்பருப்பு, உ.பருப்பு ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.  எடுத்து ஆற வைக்கவும்.  மிக்சி ஜாரில் மி.வத்தல், பெருங்காயம், உப்புச் சேர்த்து ஒரு தரம் சுற்றிவிட்டுப் பின்னர் கடலைப்பருப்பு, உ.பருப்புப் போட்டுச் சுற்றவும்.  இதுவும் ஒரே முறை சுற்றினால் போதும்.  இப்போது வாழைக்காய்த் துருவலைப் போட்டுச் சுற்றவும்.  ஒரே சுற்றுத் தான்.  வெளியே எடுத்து நன்கு கலக்கி வைக்கவும்.   சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடவும், அல்லது சைட் டிஷாகத் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

டிடி கவனிக்க:  இதுவும் மோர் சாதத்துக்கு ஜூப்பரோ ஜூப்பரு! :)))

என்னத்தைக் குழம்பு வைச்சீங்க?

இப்போ இந்த வெறும் குழம்பிலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமான ஒண்ணைப் பார்ப்போம். ஹிஹிஹி, இந்தக் குழம்புக்கு எங்க வீட்டிலே, அம்மா ஃபேவரிட்னு பேரு வைச்சிருக்காங்க.  என் மாமியாரெல்லாம் இப்படிப் பண்ணினதில்லை.  அவங்களுக்கு இப்படி எல்லாம் குழம்பைச் சித்திரவதை பண்ணலாம்னு தெரியாது போல. என்றாலும் இந்தக் குழம்பு அடைக்குத் தொட்டுக்க, உப்புமா(அரிசி உப்புமா), பொங்கல் ஆகியவற்றுக்கு எடுத்தது. நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

நல்ல நாட்டு முருங்கைக்காய்  ஒன்று, குழம்புத் தானுக்கு ஏற்றாற்போல் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி நடுத்தரமானது 2

சின்ன வெங்காயம் நூறு கிராம்.  சின்ன வெங்காயம் கிடைக்கலைனா பெரிய வெங்காயம் ஒண்ணை நறுக்கிக்கவும்.

கத்தரிக்காய் 2   நறுக்கிக்கவும்.  முருங்கைக்காய் நீளமாய் நறுக்கினால் கத்தரிக்காயும் நீளமாய் நறுக்கணும். தக்காளி மற்றும்  பெரிய வெங்காயமும் நீளமாக நறுக்கணும்.

பச்சை மிளகாய் 2

மி.வத்தல் 2

கருகப்பிலை ஒரு கைப்பிடி

பெருங்காயம் ஒரு துண்டு

நல்லெண்ணெய் தாளிக்க, வதக்கப்போதுமான அளவு ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு குழிக்கரண்டி

உப்பு தேவைக்கு ஏற்ப

புளி ஒரு எலுமிச்சை அளவு, ஊற வைச்சுக் கரைத்துக் கொள்ளவும்.  கரைசல் மூன்று கிண்ணம் இருக்கலாம்.

குழம்புப் பொடி, முன் பதிவில் சொன்னாப் போல் தயார் செய்தது,  மூன்று டீஸ்பூன்.

கடுகு, ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன்.

கல்சட்டி/உருளி/கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், மி.வத்தல், பச்சைமிளகாய், பெருங்காயம், கருகப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.  பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், முருங்கைக்காய், கத்தரிக்காய் போட்டு ஒரு நிமிடம் வதக்கிப் பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கிப் புளிக்கரைசலை ஊற்றி குழம்புப் பொடி, உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.  சேர்ந்து கொதிக்கையில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கவும் கீழே இறக்கவும்.  சூடான சாதத்தோடு சாப்பிட, முன் சொன்னாப் போல் உப்புமா, பொங்கல், அடைக்கு ஏற்ற குழம்பு இது.  மோர் சாதத்துக்கும் ஜூப்பரோ ஜூப்பரு!


Sunday, September 22, 2013

வற்றல் குழம்பு!

என்னடானு அதிசயமாப் பார்க்கிறவங்களுக்கு!  வற்றல்கள் போட்டுச் செய்வது தான் வற்றல் குழம்பு.  மத்தவங்க எப்படியோ நம்ம ரங்க்ஸ் என்னடானா பருப்புப் போடலைனா அதை வற்றல் குழம்புனு சொல்லிடுவார்.  நறநறநறநற! :)))

வற்றல்கள் அவரை, கொத்தவரை, கத்திரி, வெண்டை,(இதிலே வற்றல்குழம்பு எனக்குப் பிடிக்கிறதில்லை.  வெண்டை வற்றலில் மோர்க்குழம்பு மட்டும் பிடிக்கும்.) தாமரைக்கிழங்கு வற்றல், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், மிதுக்கவத்தல்(மதுரை ஸ்பெஷல் இந்த வற்றல்)  ஆகிய வற்றல்கள் போட்டுச் செய்வதே வற்றல் குழம்பு. நான்கு பேருக்குச் செய்யத்

தேவையான பொருட்கள்:

புளி பழசு என்றால் நல்லது.  நிறம் கருப்பாக இருக்கும் என நினைப்பவர்கள், பழைய புளி கொஞ்சமும், புதுப்புளி கொஞ்சமுமாக ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து நீரில் ஊற வைக்கவும்.

தாளிக்க:

கடுகு,  ஒரு டீ ஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்,
து.பருப்பு,
க.பருப்பு,
உ.பருப்பு 
ஆகியன தலா அரை டீஸ்பூன்.

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு
மி.வற்றல் இரண்டு,

மேலே சொன்ன வற்றல்களில் ஏதேனும் ஒன்று ஒரு கைப்பிடி அளவு

கருகப்பிலை

நல்லெண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு கரண்டி. (நல்லெண்ணெய் தான் ருசியாக இருக்கும்.  பிடிக்கலைனாலோ, கிடைக்கலைனாலோ வேறு சமையல் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தவிர்க்கவும்.)

சாம்பார்ப் பொடி 3 டீ ஸ்பூன் , 
உப்பு தேவைக்கு

(எங்க வீட்டிலே சாம்பார்ப் பொடினு அரைக்க/திரிக்க மாட்டோம்.  குழம்புப் பொடினு 1/4 கிலோ மி.வத்தலுக்கு 3/4 கிலோ தனியா, 50 கிமிளகு, 200துவரம்பருப்பு,  ஒரு கரண்டி க.பருப்பு, 50 வெந்தயம், 100 கிராம் விரலி மஞ்சள்  போட்டுக் காய வைத்துவிட்டு, பருப்பு சாமான்களை மட்டும் சிவக்க வெறும் வாணலியில் வறுத்துச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து/திரித்து வைச்சுப்போம்.  ரசம் இதிலே செய்தால் நீர்க்கத் தெளிவாக வரும்.  இந்த மாதிரிக் குழம்புகளுக்கு இந்தப் பொடியைப் போட்டால் நன்றாக இருக்கும்.  சாம்பார் என்றால் முழுக்க வறுத்து அரைத்துத் தான் செய்வோம். 

வாணலி அல்லது கல்சட்டியைக் காய வைத்துக் கொண்டு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் வற்றல்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அதே எண்ணெயிலேயே கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து.பருப்பு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை என வரிசையாகத் தாளித்துக் கொண்டு கரைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.  குழம்புப் பொடியையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். நன்கு கொதித்துக் குழம்பில் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் வறுத்து வைத்த வற்றலைச் சேர்த்து உடனே கீழே இறக்கவும். ஒரு சிலர் சாப்பிடும்போதும் வற்றலைச் சேர்ப்பது உண்டு.  அம்முறையில் குழம்பின் உப்புக் காரம் வற்றலில் சேராது.  ஆகையால் கொதிக்கையில் கடைசியில் சேர்க்கலாம். 


இந்தக் குழம்புக்கு இன்னும் மணம் கூட்ட வெறும் சட்டியில் மி.வத்தல் நான்கு, துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் இரண்டு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.  வற்றலைப் போட்டதும் இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் போட்டுக் கீழே இறக்கவும்.  ஒரு சிலர் குழம்புப் பொடியே போடாமல் முழுக்க இந்தப் பொடியே போட்டுக் குழம்பு செய்வதுண்டு.  அதற்கு வெந்தயக் குழம்பு என்று பெயர்.  பின்னர் பார்க்கலாம்.

 


Thursday, August 29, 2013

பாதாம், முந்திரிப் பாயசம்

ஹிஹிஹி, பாதாம்பருப்பு என்றாலே ஶ்ரீராம் நினைவில் வரார். :)) முன்னொரு தரம் பாதாம் அல்வா பண்ணினதை எழுதி இருந்தப்போ அவர் டிஃபனுக்கு பாதாம் அல்வா கேட்டது குறித்துச் சொல்லி இருந்தார்.  முந்தாநாள் கிருஷ்ணனுக்கும் பாதாம், முந்திரி போட்டுப் பாயசம் பண்ணினேன்.  மத்தவங்க எப்படிப் பண்ணுவாங்களோ தெரியலை.  நாம தான் எல்லாத்திலேயும் தனி ஆச்சே! இங்கே நம் செய்முறை கொடுக்கிறேன். ரொம்பவே சுலபம் தான்.

நான்கு பேருக்குப் பாயசம் செய்ய:

பால் 250 கிராம்

பச்சரிசி  ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஐம்பது கிராம்

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

ஒரு நடுத்தர அளவு  காரட் ஒன்று

பாதாம் ஐம்பது கிராம்

முந்திரி பத்து

ஏலக்காய்,

குங்குமப் பூ(தேவையானால்) ஒரு டீஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்.

நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கிஸ்மிஸ் பழம்  ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை  150 கிராம் அல்லது இரண்டு கிண்ணம்


பாதாம், முந்திரியைக் கழுவி  ஏலக்காய், அரிசி சேர்த்து ஊற வைக்கவும்.  குறைந்தது 2 அல்லது மூன்று மணி நேரம் ஊற வேண்டும்.  ஏலக்காயை அதில் போடவில்லை எனில் தனியாகப் பொடி செய்து ஓரமாக வைக்கவும்.   காரட்டைப் பொடியாகத் துருவவும், அல்லது நறுக்கவும்.  ஊறிய அரிசி, பாதாம், முந்திரி, தேங்காய்த் துருவல், காரட் துருவல் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். ரவை மாதிரி இருத்தல் வேண்டும்.  நன்கு ஜலம் விட்டுக் கரைத்து வைக்கவும்.

அடுப்பில் அடி கனமான பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கரைத்து வைத்த மாவுக்கரைசலை ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கரண்டியால் கிளறவும்.  சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டும்.  அடிப்பிடித்துவிட்டால் ருசியே போயிடும்.  நீர் தேவை எனில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.  பாயசம் கெட்டியாக வேண்டுமா, நீர்க்க இருக்க வேண்டுமா என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நான் தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வேக விட்டேன்.  கரைசலில் அரிசி, பருப்பு தெரியக் கூடாது.  அவை நன்கு கரைந்ததும், சர்க்கரை சேர்க்கவும்.  பக்கத்தில் பாலைக் காய்ச்சிக் குறுக்கி வைக்கவும்.  சர்க்கரை கரந்து பாயசம் சேர்ந்து வரும்போது குறுக்கிய பாலைச் சேர்க்கவும்.  பாலைச் சேர்த்ததும் பாயசம் நீராக வரக்கூடாது.  சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் கீழே இறக்கி ஏலப்பொடி, குங்குமப் பூவைப் பாலில் நனைத்துக் கரைத்து விடவும்.  மிச்சம் உள்ள நெய்யைச் சூடாக்கித் திராக்ஷைப் பழங்களைப் போட்டு மிதக்க விட்டுப் பரிமாறவும்.  இதைச் சூடாகவும் சாப்பிடலாம்.  ஆற வைத்தும் சாப்பிடலாம்.  பாதாம் கீர், பாதாம் அல்வா போன்றவை பின்னர்.

Sunday, August 25, 2013

பறங்கிக் காய் சமையல்கள்!

பொதுவாகப் பறங்கிக் காயை சாம்பாரில் போட்டுத் தான் பார்ப்போம்!  இல்லையா?  ஆனால் அதைப் பொடிப் பொடியாக நறுக்கி அடையிலும் போடலாம்.  தேங்காய்க் கீற்றுப் போல் இருக்கும்.  என்ன ஒரு முக்கியமான குறிப்புன்னா, பச்சைப் பறங்கியாக இருக்கணும்.  சின்ன இளங்கொட்டையாக இருந்தால் இன்னும் நல்லது.  இங்கே இளங்கொட்டை கிடைக்குது.  வாங்கி அடைக்கும் போடுவோம்.  கூட்டுச் செய்வேன். சப்பாத்திக்கும், சாப்பாடுக்குத் தொட்டுக்கொள்ளவும் கூட்டுச் செய்வதுண்டு. சாப்பாட்டுக்குச் செய்வது கொஞ்சம் கேரள பாணி! ஹிஹிஹி, முன்னோர் ஜீன்ஸில் கொஞ்சம் இருக்கு போல!  அதான் சில சமயம் இப்படி திடீர் திடீர்னு கேரள பாணியெல்லாம் வரும். :))))))  இப்போ சாப்பாட்டுக்குச் செய்வது எப்படினு பார்ப்போம்.


மெட்ராஸ்காரங்களுக்குப் பச்சைப் பறங்கி கிடைப்பது கஷ்டம். கிடைச்சால் சரி.  இல்லைனா, சிவப்புப் பூஷணி எனப்படும் பறங்கியிலேயே செய்யலாம். வேறே வழி? :)))

நான்கு பேருக்குத் தேவையானவை:

பறங்கிக்காய் சின்னதான இளம்கொட்டை 1 அல்லது அரை கிலோ பறங்கிக் கீற்று.

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

உப்பு தேவைக்கு

பச்சை மிளகாய் 3

தேங்காய்  ஒரு மூடி

அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன்

தே. எண்ணெய், கடுகு, கருகப்பிலை.


பறங்கிக்காய் கீற்றாக வாங்கினால் தோலை நீக்கி விட்டு(பச்சை என்றால் தோலோடு) நறுக்கிக் கொள்ளவும்.  கூட்டுக்கு நறுக்குவது போல் துண்டம் துண்டமாக நறுக்கணும்.  தேங்காயைத் துருவி அரைத்துப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  இரண்டு முறை எடுத்தாலே போதும். இப்போது அடுப்பில் கடாயை அல்லது உருளியை வைத்துப் பறங்கித் துண்டங்களை வேகப் போடவும்.  மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும்.  பாதி வேகும்போது பச்சைமிளகாயை இரண்டாகக் கிள்ளி அதில் போடவும்.  நன்குசேர்ந்து தளதளவென்று வேகும்போது ஒரு கரண்டியால் மசிக்கவும். இரண்டாவது தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும்.  கொஞ்சம் கொதித்ததும், முதல் பாலில் அரிசிமாவைச் சேர்த்துக் கூட்டில் விட்டு ஒரே கொதி விட்டுக் கீழே இறக்கவும்.  தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து, கருகப்பிலை சேர்த்து, பிடித்தால் தேங்காய்ச் சக்கையையும் போட்டு வறுத்துக் கூட்டில் சேர்க்கவும்.  சாம்பார், வற்றல் குழம்பு சாதத்தோடு சாப்பிட அருமையான துணை இது.

அடுத்துப் பறங்கிக் காய்த் துவையல்:

பறங்கிக் காய் கால் கிலோ

மி.வத்தல் 6 அல்லது எட்டு(அவரவருக்குத் தேவையான காரத்துக்கு ஏற்றாற்போல்)

உப்பு, 

பெருங்காயம்

கடுகு, உளுத்தம்பருப்பு

வதக்க சமையல் எண்ணெய்.

புளி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவுக்கு நீரில் ஊற வைக்கவும்.


பறங்கிக்காயை நன்கு துருவிக் கொண்டு தனியாக வைக்கவும்.  அடுப்பில் வாணலியைப் போட்டு சமையல் எண்ணெய் ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு தனியாக வைக்கவும்.  கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். மிளகாய் வற்றல் நன்கு பொரியும்படி வறுக்கவும்.  தும்மல் வந்தால் தனி இடத்துக்கு வந்து தும்மிக் கொள்ளவும்.  இப்போது கடாயில் எண்ணெய் மிகுந்திருந்தால் அதிலே பறங்கிக்காய்த் துருவலையும் போட்டு வதக்கவும்.  எண்ணெய் போதவில்லை எனில் விட்டுக் கொள்ளவும்.  நன்கு சுருள வதக்கி ஆற வைக்கவும்.

மிக்சி ஜாரில் மி.வத்தல், பெருங்காயம், ஊற வைத்த புளி, உப்புச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றவும்.  பின்னர் வதக்கிய பறங்கித் துருவலைப் போட்டு அரைக்கவும்.  நன்கு அரைபட்டதும் எடுக்கும் முன்னர் கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு ஒரே சுற்று சுற்றவும்.  கடுகு, உ.பருப்பு நன்கு அரைபடக் கூடாது. ஒன்றிரண்டாக அரைக்கவும்.  சாதத்தில் பிசைந்து சாப்பிடத் தயார்.  தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.  இனிப்பாக இருக்கும் என்பவர்களுக்கு!  தேங்காயில் இல்லாத இனிப்பா? தேங்காய்த் துவையல் போலத் தான் இதுவும்.  சாப்பிட்டுப் பாருங்கள்.  துவையல் சாதத்துக்குத் தொட்டுக்க மோர்ச்சாறு, எங்க வீட்டு முறையில்.


ரொம்பப் புளிப்பில்லாமல் அதே சமயம் கொஞ்சமானும் புளிச்சிருக்கும் கெட்டி மோர் ஒரு கிண்ணம். (தலையைப் பிச்சுக்கறீங்களா?  ஹிஹிஹி!) 

அரிசி மாவு இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி, 1/4 டீஸ்பூன்

உப்பு தேவைக்கு.

பெருங்காயப் பொடி

தாளிக்க

கடுகு, து.பருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை

எண்ணெய்.

மோரில் அரிசிமாவு, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, துபருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.  இப்போது கலந்த மோரை அதில் ஊற்றிவிட்டு உடனே அடுப்பை அணைக்கவும். உங்கள் மோர்ச்சாறு தயார்.  துவையல் எந்தத் துவையலாக இருந்தாலும் அதோடு துணைக்கு வரும். 

Wednesday, August 14, 2013

புளி உப்புமா என்னும், பச்சைமாப் பொடி உப்புமா என்னும் குழம்புமாவு உப்புமா படம் பாருங்க.







செய்முறை முன்ன்ன்ன்ன்ன்னாடியே போட்டுட்டேன். போய்ப் பார்த்துக்குங்க.  இங்கே லிங்க் கொடுக்க முடியுதானு பார்க்கிறேன். குழம்புக்கெலாம் நான் மாவு கரைத்து ஊற்றுவதில்லை என்பதால் குழம்பு மாவு உப்புமானு சொல்ல வரதில்லை! :)))))


http://geetha-sambasivam.blogspot.in/2010/04/blog-post.html இங்கே போய்ப் பாருங்க.  இதை அரைச்சுச் செய்தால் இன்னும் தனி ருசி.  ஆனால் எண்ணெய்க் குடமே வேண்டும். கவனம் தேவை.  சூடாகச் சாப்பிடணும்.  ஆறினால் அவ்வளவு ருசி இல்லை. 


Tuesday, August 13, 2013

சாபுதானா கிச்சடி என்ற ஜவ்வரிசி உப்புமா!

தேவையான பொருட்கள்;  நான்கு பேருக்காக.


அரை கிலோ ஜவ்வரிசி (கொஞ்சம் அதிகம் தான், படியால் அளந்தால் ஒன்றரை ஆழாக்கு அல்லது 300 கிராம் போதும்.  ஏனெனில் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிடும்.  சீக்கிரம் பசிக்காது. அதான் வ்ரத நாட்களில் வைச்சிருக்காங்கனு நினைக்கிறேன். :))))

ஜவ்வரிசி மாவு ஜவ்வரிசி தான் நல்லா இருக்கும்னு என்னோட கருத்து. நைலான் ஜவ்வரிசி நல்லா இருக்கிறதில்லை. வத்தல் போடும் ஜவ்வரிசினு கேட்டு வாங்குங்க மக்களே!


ஜவ்வரிசி கப்பால் அளந்தால் மூன்று கிண்ணம்
உருளைக்கிழங்கு  பெரிதாக 2 (நன்கு கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் ஆறு
வேர்க்கடலை வறுத்துப் பொடித்தது ஒன்றரைக் கிண்ணம்
கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் (தேவையானால்) ஒன்று
உப்பு தேவைக்கு ஏற்ப


தாளிக்க

சமையல் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்,

கடுகு ஒரு டீஸ்பூன்
ஜீரகம் ஒரு டீஸ்பூன்


சாபுதானா எனப்படும் ஜவ்வரிசியை நாளைக்காலை உப்புமா பண்ணவேண்டுமெனில் முதல் நாள் இரவே நன்கு களைந்து கழுவி நீரை வடித்து அதில் இருக்கும் கொஞ்சம் நீரோடு அப்படியே வைக்கவும்.  மறுநாள் காலையில் பார்த்தால் ஜவ்வரிசி நன்கு ஊறிப் பெரிதாக ஆகி இருக்கும்.  மாலை பண்ணவேண்டுமெனில் காலை ஊறப்போடவும்.  கடாயில் எண்ணெயை ஊற்றிக் கொண்டுக் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்.  நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்கவும்.  உருளைக்கிழங்கு வேகும் வரை வதக்கிய பின்னர் ஜவ்வரிசியைச் சேர்க்கவும். அதோடு சேர்த்தே வேர்க்கடலைப் பொடியைச் சேர்க்கவும். உப்பையும் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  வேர்க்கடலை சேர்ப்பதால் ஜவ்வரிசி தனியாக உதிர்ந்து வந்துவிடும்.  நன்கு கிளறி உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.  சூடாகப் பரிமாறவும்.


Thursday, August 8, 2013

இன்னிக்கு விரதமா? கவலைப்படாதீங்க! கை கொடுக்கும் ஜவ்வரிசி

இப்போ ஜவ்வரிசி உப்புமா செய்முறை பார்க்கப் போறோம்.  எனக்கு முதல்முதலா அறிமுகம் ஆனது ராஜஸ்தானுக்கு முதல் முறை போனப்போ தான். கூடவே இருந்த நண்பர் மனைவி அவங்க வீட்டுக்காலை உணவாகச் செய்திருந்தாங்க.  செய்முறையும் சொன்னாங்க.  அவங்க செய்தது கொஞ்சம் சேர்ந்திருந்தாலும் பரவாயில்லாமல் ருசியாக இருந்தது.  ஆனால் நம்ம ரங்க்ஸுக்கோ, ஜவ்வரிசி உப்புமான்னாலே அப்போல்லாம் அலர்ஜி.  இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது?  இத்தனை வருஷத்தில் இப்போத்தான் இரண்டாம் முறையாப் பண்ணி இருக்கேன்னா பார்த்துக்குங்க.   யார் வீட்டில் ஜவ்வரிசி உப்புமா தரப் போறாங்கனு நானும் பொண்ணும் பார்த்துட்டு இருந்து ரெண்டு பேரும் அடிச்சுப்போம். வெட்கம் கெட்டதுங்கனு நினைச்சிருப்பாங்களோ! இருக்கும், இருக்கும்!  நினைச்சா நினைச்சுட்டுப் போகட்டும். விடுங்க. 

ஜவ்வரிசி உப்புமாவிலே அப்படி என்ன இருக்குனு கேட்கறீங்களா? ஒண்ணும் இல்லை; எல்லாமும் இருக்கு.  ஆனால் வட மாநிலங்களில் விரத தினத்திற்குனு வைச்சிருக்கும் ஆகாரம் இது.  அன்னிக்கு அவங்க அரிசியோ, கோதுமையோ சேர்க்க மாட்டாங்க. நாமெல்லாம் பலகாரம்னு அடை, தோசை, உப்புமா, இட்லி, சப்பாத்தினு சாப்பிடறதைப் பார்த்துட்டு அவங்களுக்குச் சிரிப்பு வரும்.  விரதம் என்றால் ஒரே வேளை தான் சாப்பாடு. அதுவும் இரவில். அவங்க பூஜை எல்லாம் முடிச்சு இந்த உப்புமாவைப் பண்ணி பகவானுக்கு நிவேதனம் செய்துட்டுச் சாப்பிடுவாங்க.  அடிக்கடி தேநீரும் குடிக்க மாட்டாங்க.  அவ்வளவு ஏன்!  ரொம்பக் கடுமையா விரதம் இருக்கிறவங்க எச்சில் கூட விழுங்க மாட்டாங்கனா பாருங்க.  மஹாராஷ்ட்ராவில் சோமவார விரதம் என்பது சர்வ சகஜம்.  அந்த விரததத்தைச் சின்னக் குழந்தை கூட ஏற்று விரதம் இருக்கும்.  

பலகாரம் என நாம் சொல்வது ஃபல் ஆஹார் என வட இந்தியர்கள் சொன்னதன் திரிபே என்பதே அங்கே போனப்புறமாத் தான் புரிஞ்சது.  ஃபல்=பழங்கள்.  விரத நாட்களில் சிலர் வெறும் பழங்களையே ஆஹாரமாகக் கொள்வார்கள்.  அவங்க தான் ஃபல் ஆஹார் எனச் சொல்வார்கள்.  முதல்லே போனப்போ ஒருத்தர் தனக்கு இன்னிக்கு ஃபல் ஆஹார்னு சொன்னதை நான் பலகாரம்னு புரிஞ்சுண்டு விதம் விதமாப் பலகாரம் பண்ணி வைச்சது தனிக்கதை.  இன்னொரு நாள் வைச்சுப்போம்.  அடுத்த பதிவில் ஜவ்வரிசி உப்புமா படங்களுடன் வெளிவரும்.  இது ஒரு முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னோட்டம்.! இப்போல்லாம் முன்னோட்டம் போடணும்னு தோணிச்சு.  அதான்!

Tuesday, August 6, 2013

எங்க வீட்டிலே வாழைப்பூப்பருப்பு உசிலி! :))




வாழைப் பூப் பருப்பு உசிலி:

நான்கு நபர்களுக்கு:

தேவையான பொருட்கள்: சின்ன வாழைப்பூ ஒன்று. ஆய்ந்து கள்ளன் எனப்படும் நடு நரம்பை எடுத்துவிட்டு நறுக்கி மோரில் போடவும்.

மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.





பருப்பு உசிலிக்கு:

து.பருப்பு ஒரு கிண்ணம்

க.பருப்பு கால் கிண்ணம்

மி.வத்தல் பத்து

உப்பு, பெருங்காயம்.

சமையல் எண்ணெய் உசிலியை உசிலிக்க: ஒரு சின்னக் கிண்ணம் அல்லது நூறு கிராம்.

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை. (தாளிக்க)

பருப்புக்களைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.  நன்கு நைசாக அரைக்கவும். அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து அல்லது நான் ஸ்டிக் கடாயை வைத்து சமையல் எண்ணெயை ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை தாளிக்கவும்.  அரைக்கையில் பெருங்காயம் சேர்க்கவில்லை எனில் இப்போது எண்ணெயில் பெருங்காயப் பவுடராகச் சேர்க்கவும்.  அரைத்த பருப்பு விழுதைப் போடவும். நன்கு கிளறவும்.  பருப்பு விழுது நிறம் மாறி மொறு மொறுவென வரும் வரை வதக்கவும்.



 இப்போது வேக வைத்த வாழைப்பூக் கலவையை இதில் சேர்த்துச் சிறிது நேரம் நன்கு கிளறவும். பின்னர் சூடாகப் பரிமாறவும்.



இதே போல் உசிலி செய்து கொண்டு, கொத்தவரைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், புடலை போன்றவற்றிலும் பருப்பு உசிலி செய்யலாம். வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றிலும் செய்யலாம்.

வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றைக் கழுவி நன்கு பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு அரைத்த பருப்பு விழுதில் சேர்த்து இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.  பின்னர் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு உதிர்க்கவும்.


வாழைப்பூப் படம் மட்டும் நன்றி கோவை2தில்லி. :)))

மற்றப்படங்கள் இன்னிக்குச் செய்யும்போது எடுத்தவை. :))))

இன்னிக்கு என்ன சமையல் உங்க வீட்டிலே?

முன்னெல்லாம் இப்படிக் கேட்பாங்க.  இன்னிக்கு என்ன சமையல், என்ன சாப்பிட்டேனு! இப்போல்லாம் கேட்கிறதில்லை.  அப்படிக் கேட்டாலும் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பராகவோ, உறவாகவோ தான் இருக்கும்.  முன்னெல்லாம் அக்கம்பக்கம் வீட்டுக்காரங்க கூட ஒருத்தருக்கொருத்தர் கேட்டுப்பாங்க.  இப்போ அக்கம்பக்கம் இருக்கிறதும் தெரியலை.  காப்பிப் பொடி கொடுங்க, சர்க்கரை கொடுங்க, பால் இருக்கா, திடீர் விருந்தாளி வந்துட்டாங்கனு கேட்டுட்டு வருவாங்க.  இப்போல்லாம் கடைகள் அருகிலேயே இருப்பதால் யாரும், யாரையும் கேட்டுக்கிறதில்லை. ஒரு சிலர் பால், மோர் போன்றவை எல்லாம் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கொடுக்க மாட்டாங்க.  கண்டிஷனா எங்க வீட்டிலே இல்லைனு அடிச்சுச் சொல்லிடுவாங்க.  என்னைக் கேட்டால் அது தப்புனு சொல்வேன்.  யாரும் வேணும்னு வந்து கேட்கப் போறதில்லை.  தேவைக்குத் தானே வராங்க.  ஆகையால் கொடுக்கலாம்; குறையாது.  நானெல்லாம் கொடுத்துடுவேன்.  எண்ணெய் கேட்டால் மட்டுமே கூட மஞ்சள் கொடுத்துடுவேன்.  எண்ணெய் கடன் ஆகாது என்பார்கள்.  ஆகவே மஞ்சளோடு கொடுத்தால் சுமங்கலிக்குக் கொடுத்தாப்போல் ஆகும் என்பார்கள்.  ஹிஹி, இதெல்லாம் எதுக்குனு கேட்கிறீங்களா? சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!  ரொம்ப நாளா நினைச்சது.  இன்னிக்கு எழுதினேன். இன்னிக்கு ஆடி அமாவாசை.  இங்கே அம்மா மண்டபத்தை மூடிட்டாங்க.

காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கு அம்மாமண்டபமும் அதை ஒட்டிய காவிரிக்கரைகளும்.  ஆகவே இன்னிக்குப் போக நினைச்சது போக முடியலை. எண்ணங்கள் பதிவிலே மாடியிலே இருந்து எடுத்த படங்களைப் பகிர்ந்துக்கறேன். இன்னிக்கு வாழைப்பூப் பருப்பு உசிலி செய்தேன்.  அதன் செய்முறை அடுத்து வரும். :)))))

Saturday, July 27, 2013

வெள்ளையப்பம்னா தெரியுமா?

வெள்ளையப்பம்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? செட்டிநாட்டுப் பக்கம் செய்யறது பத்தித் தெரிஞ்சிருக்கும்.  இதுவும் கிட்டத்தட்ட அப்படித் தான்.  மிகவும் எளிதான ஒன்று.  ஆனால் சாப்பிடச் சுவையானது.  இப்போ இன்னிக்குச் சாயந்திரம் அதான் பண்ணப் போறேன்.  அதுக்கு முன்னாடி இங்கே செய்முறையை எழுதிடறேன்.  எண்ணெயில் பொரித்தது பண்ணறதே குறைஞ்சு போச்சு.  என்றாலும் அவ்வப்போது என்னிக்கோ ஒரு நாள் பண்ண வேண்டி இருக்கு. :)))))

தேவையான பொருட்கள்:  அரிசி மாவு கால் கிலோ.  அரிசியை 2 மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைச்சு வடிகட்டி மிக்சியிலோ அல்லது நிழலில் உலர்த்தி மாவு மெஷினில் கொடுத்து அரைத்ததோ எதுவானாலும் சரி.

உளுந்து ஒரு ஆழாக்கு(200 கிராம்) கழுவிக் களைந்து ஊறவைக்கவும்.  பின்னர் கொடகொடவென அரைத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு. 5 பச்சை மிளகாய், ஒரு அரை அங்குலத் துண்டு இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்.

பொரிக்க எண்ணெய்; தேவையான அளவு.

கொடகொடவென அரைத்த உளுத்தம் மாவில் அரிசிமாவு, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு போண்டா போல் உருட்டிப் போடும் பதத்துக்கு வந்திருக்கும்.  பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு, எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு ஒரு சின்னக் கரண்டியால் எடுத்துப் போடவும்.  எண்ணெயில் போடும்போதே நன்கு உப்பிக் கொண்டு வரும்.  மறுபக்கமும் திருப்பிப் போடவும்.  இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் வெளியே எடுக்கவும்.  மேலே முறுமுறுவென்றும் உள்ளே லேயர் லேயராக மிருதுவாகவும் இருக்கும்  இது.
இதை அப்படியே சாப்பிடலாம்.  தொட்டுக்க எதுவும் வேணும்னு எல்லாம் இல்லை. :))))

நேத்திக்கு அரிசி உப்புமா போட்டதுக்கு போணியே ஆகலை.  இன்னிக்கும் அதையே தான் வைச்சுக்கணும்னு நினைச்சேன்.  ஆனால் நேத்திக்குச் சாயந்திரம் திடீர்னு இது பண்ணினதாலே படம் எடுத்துப் போட வேண்டியதாப் போச்சு.

அரிசி உப்புமா பிடிக்குமா? இதுக்குனு சில ரசிகர்கள் இருக்காங்க, அவங்களுக்காக!

அரிசி உப்புமா வகைகள்




அரிசி உப்புமா: மூன்று வகைகளில் செய்யலாம்.

முதல் வகை:
இதற்கு அரிசியில் இருக்கும் நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ உடைத்துக்கொள்ளவும். உடைத்த அரிசி அல்லது குருணை இரண்டு கிண்ணம் அல்லது 250 கிராம் என்றால் அதற்குத் தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் இருந்தால் நல்லது. பிடிக்காதவர்கள் ஏதேனும் ஒரு சமையல் எண்ணெய் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். கடைசியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் கலந்தால் வாசனை தூக்கும். தேங்காய் சின்னது எனில் ஒன்று அல்லது ஒரு மூடித் துருவல், ப.மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, உப்பு தேவைக்கேற்ப, கருகப்பிலை, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம் சின்னத் துண்டு அல்லது அரை டீஸ்பூன் பெருங்காயப்பவுடர். பாத்திரம் வெண்கலப் பானை அல்லது உருளி எனில் சுவை அதிகமாய் இருக்கும். இல்லாதவர்கள் கடாயில் தாளிதம் செய்து கொண்டு நீருடன் குருணையை அல்லது உடைத்த அரிசியைக் குக்கரிலோ அல்லது மின்சார அரிசிக் குக்கரிலோ வைத்துக்கொள்ளலாம். இம்முறையில் கொஞ்சம் குழைந்து போக வாய்ப்பு உள்ளது. குக்கரில் வெயிட் போடாமல் வைத்துவிட்டுப் பின்னர் குக்கரை அணைக்கும் சமயம் வெயிட் போட்டுவிட்டுச் சற்று நேரம் வைத்துவிட்டு எடுக்கலாம். ரைஸ் குக்கர் எனில் அதில் குறைந்த சூடுக்கு வரும் வரையில் வைத்திருக்கவும். இனி செய்முறை.

உருளியை அல்லது வெண்கலப்பானையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், ப.மிளகாய், கருகப்பிலை, இஞ்சி ஆகியவற்றைத் தாளித்துக்கொண்டு நாலு கிண்ணம் நீர் ஊற்றி விட்டு உப்பைச் சேர்க்கவும். நன்கு கொதிக்கும்போது அரிசிக் குருணையைச் சேர்த்துக்கிளறவும், பாதி வெந்ததும், தேங்காய் துருவலைச் சேர்த்துக்கிளறவும். கீழே இறக்கும்போது ஒரு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கலக்கவும். இது கொஞ்சம் தேங்காய் சாதம் போல் இருக்கும்.

இரண்டாவது வகை:

அடுத்து அரிசி, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கொண்டு மெஷினில் ரவை போல் உடைத்துக்கொண்டு அந்த ரவையில் மேற்சொன்ன பொருட்கள் சேர்த்துத் தாளிதம் செய்து கொண்டு உப்புமா செய்யலாம்.

மூன்றாவது வகை:

இது தான் இன்னம்பூரார் வீட்டுக்கு எடுத்துச் சென்றது. அரிசியை நன்கு களைந்து நீரை வடித்துவிட்டுச் சற்று நேரம் வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு உடைத்துக்கொள்ளவும். சன்னமாக உடைக்காமல் நிதானமாக ஒரே சீராக இருக்கும்படி உடைக்கவேண்டும். இரண்டு கிண்ணம் அரிசிக்குத் தேவையான பொருட்கள்:

ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் க.பருப்பு, ஒன்று அல்லது இரண்டு காய்ந்த மிளகாய், அரை டீஸ்பூன் மிளகு நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். ஜீரகம் பிடித்தவர்கள் சேர்க்கலாம். நான் ஜீரகம் சேர்க்கவில்லை. தேங்காய் ஒன்று உடைத்துத் துருவிக் கொண்டு பாதித் துருவலைத் தனியாக வைத்துக்கொள்ளவும். மீதித் துருவலோடு ஊறிய பொருட்களைச் சேர்த்து அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்காமல் பருப்பு நன்கு மசியும்படி அரைத்தால் போதும். பின்பு அதை எடுத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும்.

உருளியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக்கொண்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். தேங்காய் துருவல் மீதம் இருப்பதைப் போடவும். லேசாக வறுத்துக்கொண்டு தேவையான நீரை அரைத்த விழுதோடு சேர்த்துக்கொண்டு அதை இதில் சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் உடைத்த அரிசியைப் போட்டுக்கொண்டு நன்கு கிளறி எடுக்கவும். இறக்கும்போது நெய் சேர்க்கவும். இது சுவை மாறுபாட்டோடு இருக்கும். மறுநாள் வைத்திருந்தால் கூட வீணாகாது.

புளிப்பொங்கல் அல்லது புளி உப்புமா:

அடுத்து அதே மாதிரியான குருணை அல்லது உடைத்த அரிசிக் குருணையில் புளி சேர்த்துச் செய்வது. இது கொஞ்சம் புளியோதரையும் இல்லாமல் குழம்பு சாதம் போலும் இல்லாமல் ஒரு தனி ருசியாக இருக்கும்.

அரிசிக் குருணை இரண்டு கப், மி.வத்தல் நாலு, பெருங்காயம், கடுகு. உ.பருப்பு, க.பருப்பு, மஞ்சள் பொடி, கொண்டைக் கடலை ஊற வைத்தது அல்லது வேர்க்கடலை இரண்டில் ஏதேனும் ஒன்று. கருகப்பிலை. இதற்கு நல்லெண்ணெய் தான் நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் ஒரு கிண்ணம். புளி நன்கு ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், புளிக் கரைசல் இரண்டு கப். உப்பு தேவையான அளவு. கொஞ்சம் கடுகு, வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்தது ஒரு டீஸ்பூன். இது தேவையானால் சேர்க்கலாம். வெல்லமும் தேவைப் பட்டால் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு.

உருளியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிதம் செய்து கொண்டு புளிக்கரைசலை ஊற்றவும். இரண்டு கிண்ணம் தான் புளிக்கரைசல் இருக்கும் என்பதால் மிச்சத்திற்குத் தேவையான நீரைப் பார்த்துச் சேர்த்துக் கொள்ளவும். உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் அரிசிக் குருணையைப் போட்டுக் கிளறவும். நன்கு வெந்து சுருண்டு வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி எடுக்கவும். இறக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் ஊற்றலாம்.

கொத்சு:



இது அரிசி உப்புமாவுக்குத் தொட்டுக்கொள்ளப் பயன்படும் என்றாலும் நாளடைவில், பொங்கல், இட்லி அனைத்துக்கும் பயனாகிறது. பொதுவாய்க் கத்தரிக்காயைச் சுட்டுச் செய்வதே வழக்கம் என்றாலும் சில சமயம் சிறப்பு விருந்தாளிகளுக்கு என வெங்காயம் மட்டும் போட்ட வெங்காய கொத்சோ அல்லது எல்லாக் காய்களும் போட்ட கொத்சோ செய்வது உண்டு.

முதலில் கத்தரிக்காய் கொத்சு: தணலில் தான் சுட்டால் நன்றாய் இருக்கும். ஆனால் இப்போது தணல் யார் வீட்டிலும் இல்லை என்பதால் அடுப்பிலே அல்லது க்ரில்லிலே சுட்டுக் கொண்டு தோலை உரித்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

நல்ல பெரிய கத்தரிக்காய் இரண்டு என்றால் புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துக்கொள்ளவும். இந்தப் புளிக் கரைசலில் பிசைந்து வைத்த கத்தரிக்காயை நன்கு கலந்து கொள்ளவும். தாளிக்கக் கடுகு, மி.வத்தல், ப.மி. கருகப்பிலை, பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய் நல்லெண்ணெய் தான் நன்றாய் இருக்கும். பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் எதேனும் எடுத்துக்கொள்ளலாம்.

வாணலியில் அல்லது இதே போல் இன்னொரு உருளியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், பெருங்காயம் ப.மிளகாய் தாளித்துக்கொண்டு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும், கரைத்து வைத்துள்ள கத்தரிக்காயோடு சேர்ந்த புளிக்கரைசலை ஊற்றவும். உப்புச் சேர்க்கவும். புளி வாசனை போக ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கலாம். இது அரிசி உப்புமா முதலில் சொன்ன மூன்று வகைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். அடுத்து வெங்காய கொத்சு செய்வதைப் பார்க்கலாம்.

சின்ன வெங்காயம் தான் சுவை. அன்று இன்னம்பூராருக்குச் செய்தது சின்ன வெங்காயமே. அது இல்லை எனில் பெரிய வெங்காயம் கால் கிலோ. கால் கிலோ சின்ன வெங்காயம் உரித்து நறுக்கிக்கொள்ளவும். புளி ஒரு எலுமிச்சை அளவு கரைத்துக்கொள்ளவும். மேலும் இதைப் பருப்புச் சேர்த்தும் செய்யலாம். பருப்புச் சேர்க்காமலும் செய்யலாம். செட்டி நாட்டில் பருப்புச் சேர்க்காமல் செய்வதுண்டு. நான் பருப்புச் சேர்த்திருந்தேன். முதலில் பருப்புச் சேர்த்துப் பார்க்கலாம். இதற்குப் பயத்தம்பருப்பே நன்றாய் இருக்கும். பயத்தம்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.

தாளிக்க: கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், மி.வத்தல் கருகப்பிலை, மஞ்சள் தூள், வெல்லம் ஒரு சின்னத் துண்டு.
வறுத்துப் பொடிக்க: மி.வத்தல், கொத்துமல்லி விதை, க.பருப்பு, வெந்தயம், பெருங்காயம். எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும்.

உருளி, கடாய், இவற்றில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும். புளிக்கரைசலில், வெந்த பருப்பையும், உப்பையும் சேர்த்துக்கொண்டு ஊற்றவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது வறுத்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கீழே இறக்கிக் கொத்துமல்லி இலை தூவிப் பரிமாறவும். இதையே பருப்புச் சேர்க்காமல் மற்றப் பொருட்களைச் சேர்த்துக்கொண்டு செய்யலாம்.

அடுத்து எல்லாக் காய்களும் போட்டுச் செய்யும் கொத்சு. இதற்குப் பருப்பு அவசியம் தேவை.

முக்கியமான காய்கள்: கத்தரிக்காய், பறங்கிக்காய், பீன்ஸ் அல்லது அவரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்லது காரட், பூஷணிக்காய் போன்ற காய்களை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் மேற்சொன்ன முறையில் தாளித்துக்கொண்டு பின்னர் காய்களைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் புளிக்கரைசலில் பருப்பையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க விட்டு வறுத்த பொடியைத் தூவிக் கீழே இறக்கிக் கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.


இது இங்கே போட்டிருக்கிறதா நினைச்சுத் தேடினால் கிடைக்கலை.  அப்புறமாப் பார்த்தாப் போடவே இல்லை.  அதான் போட்டுட்டேன். நம்ம வீட்டு உப்புமா, கொத்சு தான் எல்லாரும் தாராளமாச் சாப்பிடுங்க! :))))))

Thursday, July 11, 2013

இன்னிக்குக் காலம்பர வெந்தய தோசை!

வெந்தய தோசை தெரியுமா ? சாதாரணமாக எல்லாருமே இட்லி,தோசைக்கு அரைக்கிறச்சே ஒரு டீஸ்பூனிலிருந்து 2 டீஸ்பூன் வரைக்கும் வெந்தயம் சேர்ப்பாங்க.  இது அப்படி இல்லை. நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வெந்தயம் போடணும்.  இதிலே இரண்டு, மூணு முறை இருக்கு. ஒவ்வொண்ணாப் பார்ப்போம்.

முதல் முறை:

இட்லிப் புழுங்கலரிசி அரை கிலோ,

50 கிராம் வெந்தயம் அல்லது ஒரு சின்னக் கிண்ணம் வெந்தயம்.

உப்பு தேவைக்கு ஏற்ப.

புழுங்கலரிசியைக் களைந்து நீர் விட்டு ஊற வைக்கவும்.  நாளைக் காலைக்கு வேணும்னா இன்னிக்கு மாலைக்குள் அரைச்சு வைக்கணும். இந்த தோசை கொஞ்சம் புளிப்பு ஏறினாலே சுவைக்கும்.  அடுத்து வெந்தயத்தைக் கல் அரித்துக் களைந்து  தனியாக ஊற வைக்கவும். கிரைண்டரில் முதலில் ஊறிய வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும்.  உளுத்தம் விழுது போல் புசுபுசுவென வரும். வெந்தயம் முழுதும் அரைபட்டதும் பாத்திரத்தில் மாற்றிவிட்டு அல்லது அதிலேயே அரிசியைப் போட்டு அரைக்கவும்.  அரிசியை நன்கு நைசாக அரைக்க வேண்டும் என்பதில்லை.  அதுக்காக ரொம்பக் கொரகொரனும் இருக்கக் கூடாது. சன்ன ரவை போல் அரைக்கவும்.  உப்புப் போட்டுக்கலந்து வைத்து மறுநாள் தோசை வார்க்கவும்.  வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி, மிளகாய்ப் பொடி போன்றவற்றோடு நன்றாக இருக்கும்.  இந்த தோசை கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  ரயில் பிரயாணத்துக்கு ஏற்றது.  நாளைக் காலை படம் சேர்க்கிறேன். ஹிஹிஹி, படம் எடுக்க மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)

மற்ற முறைகள் கீழே:

புழுங்கலரிசி அரை கிலோ, பச்சரிசி 200 அல்லது ஒரு கிண்ணம், உளுந்து அரைக் கிண்ணம், வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு

புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து களைந்து ஊற வைக்கவும்.  வெந்தயத்தைக் களைந்து தனியாக ஊற வைக்கவும்.  சுமார் மூன்று அல்லது நான்கு மணி ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி, உளுந்து கொஞ்சம் அரைபட்டதும் வெந்தயத்தை ஊறிய மஞ்சள் நீரோடு கலந்து அரைக்கவும். இதையும் ரொம்ப நைசாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாகவே இருக்கட்டும்.  மாவு புளித்ததும் தோசையை மெலிதாகவும் வார்க்கலாம்.  ஊத்தப்பமாகவும் வார்க்கலாம்.

அடுத்தது

புழுங்கலரிசி அரை கிலோ, துவரம்பருப்பு நூறு கிராம், வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு

புழுங்கலரிசியைத் தனியாகவும், துவரம்பருப்பையும், வெந்தயத்தையும் ஒன்றாகவும் களைந்து ஊற வைக்கவும்.  நான்கு மணி நேரம் ஊறியதும் முதலில் து.பருப்பு, வெந்தயம் போட்டு அரைத்துக் கொண்டு அதிலேயே அரிசியைப் போட்டு அரைக்கவும்.  உப்புச் சேர்த்துக் கலந்து வைத்து பின் புளிப்பு வந்ததும் தோசையாக வார்க்கவும்.  இது சிறிது மஞ்சள் நிறத்தோடு இருக்கும்.

Sunday, June 9, 2013

சான்ட்விச் வேணுமா? வாங்க வாங்க.

இன்னிக்குக் காலம்பர காலை ஆஹாரம் ப்ரவுன் ப்ரெடில் சான்ட்விச். ப்ரெடில் வெண்ணெய் தடவி ஃபில்லிங்குக்கு ரெடியாக.




தக்காளியை ஜீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, உப்பு, மி.பொடி, தனியாப் பொடி சேர்த்து வதக்கினேன். வெங்காயம் வேண்டுமானால் போட்டுக்கலாம். வெறும் தனியாப் பொடி மட்டும் கூடப்போட்டுக்கலாம்.  அவரவர் விருப்பம். உ.கி. வேக வைத்து மசித்துக் கொண்டு ப.மி. கருகப்பிலை, கொ.மல்லி, உப்பு, மி.பொடி சேர்த்துக் கொண்டு அதையும் ஃபில்லிங் செய்யலாம்.  இன்னும் பட்டாணியைக் குழைய வேக வைத்து மசித்து வைக்கலாம்.  இன்னும் நிறைய இருக்கு அவரவர் கற்பனைக்கு ஏற்ப. 



ஃபில்லிங் முடிந்த ப்ரெட்கள் சான்ட்விச் டோஸ்டரில் வைச்சாச்சு.  வைச்சு மூடி இரண்டு நிமிடத்தில் உங்கள் சான்ட்விச் ரெடி!



சான்ட்விச் ரெடியாகி விட்டது. சாதாரணமாக இது ஒருத்தர் சாப்பிடலாம் ஃபில்லிங்கைப் பொறுத்து. 


இதையே இப்படிப் பாதியாக இருப்பதில் ஒரு பாதியை எடுத்து கடலைமாவு பஜ்ஜி மாவாக உப்பு, மி.பொடி போட்டுக் கரைத்துக் கொண்டு அதில் முக்கி எண்ணெயில் பொரித்தால் ஸ்டார் ஹோட்டல் ப்ரெட் பக்கோடா ரெடி. ஆனால் அது இன்னும் ஹெவியாக இருக்கும். 








Wednesday, June 5, 2013

டிங்கடிங்க டிங்க டிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் பரோட்டா ரெடீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நேத்திக்கு ரஞ்சனி மைதா பரோட்டா பத்தின எச்சரிக்கை போட்டிருந்தாங்க.  இணையத்திலே சில ஆண்டுகளாக இது உலவி வருது.  ஆனால் உண்மையா பரோட்டாவே சாப்பிடக் கூடாதா?  தாராளமாய்ச் சாப்பிடலாம். கோதுமை மாவில் செய்திருந்தால்.  இன்னிக்குக்காலம்பர வெளியே போயிட்டு வர நேரம் ஆகும் என்பதால் வழக்கமான இட்லி, தோசை வேண்டாம், வேறே ஹெவியாக்காலை ஆகாரம் கொடுனு ரங்க்ஸ் கேட்க, சட்டுனு உ.கி. எடுத்துக் குக்கரில் வேகப் போட்டுட்டு, கோதுமை மாவைக் கொஞ்சம் போல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்தேன்.



வெங்காயம் இல்லை.  அதனால் என்ன?  மத்தது இருந்தது.  தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி போன்றவை இருந்தன. கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்துக் கொண்டு இஞ்சி ப,மி, கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கித் தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கிக் கொண்டு, வெந்த உருளைக்கிழங்கில் அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கலந்து உதிர்த்தாப்போல் வதக்கிய தக்காளியில் கொட்டிக் கலந்து தேவையான உப்புச் சேர்த்தேன்.  இறக்கும் முன்னர் லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் வறுத்துப் பொடித்த தூள் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்த்தேன்.

இப்போப் பரோட்டா.

இதான் பிசைந்த மாவு.  ஹிஹிஹி,கொஞ்சமா இருக்கேனு பார்க்கிறீங்களா?  மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அப்புறமாக் கடைசிப் பரோட்டா பண்ணறச்சே நினைப்பு வந்தது.  மாவை எடுத்துக் கொண்டு உருட்டி அதில் வெண்ணெய் தடவி மடித்துப் போட வேண்டும்.  மீண்டும் வெண்ணெய், மடித்துப் போடணும்.  இம்மாதிரி நான்கைந்து முறையாவது வெண்ணெய் தடவி மடித்துப் போட்டால் நன்கு உள்ளே லேயர் லேயராக வரும்.  வெண்ணெய் தடவிக் கீழே பார்க்கலாம்.

இது வெண்ணெய்னு சொல்லித் தெரியவேண்டாம். :))))))

வெண்ணெய் தடவி இரண்டு மூன்று முறை மடித்துப் போட்டாச்சு.  மடித்ததைக் கடைசியில் இப்படிக் கீழே காண்கிறாப்போல் சுருட்டணும்.


சுருட்டினதை நீள வாட்டத்திலே எடுத்து அப்படியே மடிக்கணும்.  கீழே பாருங்க.

இந்த மாதிரி உள்ளுக்குள்ளே மடிப்புக்களோடு சுருட்டணும்.  சுருட்டியதை அப்படியே மீண்டும் குழவியால் சமன் செய்து இடணும். 

இட்டதை காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில், (நான் சப்பாத்திக்குத் தனிக்கல், தோசைக்குத் தனிக்கல் என வைத்திருக்கேன்.) கொஞ்சம் போய் அடியில் நெய் தடவிப் பரத்திவிட்டுப் போடணும்.  உடனடியாக வேக எண்ணெயோ அல்லது நெய்யோ(நெய்யே நல்லா இருக்கும், முடியாதவங்க நெய்யோடு கடலை எண்ணெய் கலந்துக்கலாம்.) விடக் கூடாது.  ஒரு பக்கம் வெந்து இம்மாதிரி உப்பி வரும்.  அப்போ மறுபக்கம் திருப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து நெய் ஊற்றினால், நன்கு உப்ப ஆரம்பிக்கும்.


உங்கள் பரோட்டா வெந்து கொண்டிருக்கிறது.  விரைவில் ரெடியாயிடும்.  சாப்பிட வாங்க. 


அப்பாடா, சமைக்கும்போதே படம் எடுத்து ஒரு வழியாப் போட்ட்டுட்டேன்.  இப்படித் தான் முறுக்குச் சுத்தும்போதும் எடுக்க நினைச்சு மறந்து போச்ச்ச்ச்ச்ச்!  கிருஷ்ண ஜயந்திக்குச் சுத்தறச்சே படம் எடுத்துப் போட்டேன்.  ஆனால் இங்கே போடலைனு நினைக்கிறேன். :))))