எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 28, 2011

காஞ்சிபுரம் இட்லி சாப்பிடக் காஞ்சிபுரத்துக்கு ஏன் போகணும்?

ஒரே இட்லியாய்ச் செய்துட்டு இருக்கியே? போர் அடிக்கலை?

நான் என்ன ஏடிஎம் மாதிரி இட்லியைக்குடிக்கவா சொன்னேன்?

அது சரி! ஆனால் இட்லியால் அடிச்சால் எப்படி?

என்னது? இட்லியால் அடிச்சேனா? நானா? இருங்க, இருங்க நிஜமாவே இட்லியால் அடிக்கிறேன். நாளைக்குக்காஞ்சிபுரம் இட்லிதான் செய்யப் போறேன்.

கடவுளே, காப்பாத்து!
***************************************************************************************

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி(இட்லி) ஒரு கிண்ணம்

பச்சை அரிசி ஒரு கிண்ணம்

முழு உளுந்து தோல் நீக்கியது ஒரு கிண்ணம்

மூன்றையும் கலந்து களைந்து ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் ஊறியதும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ரொம்பவே நைஸாகவும் கூடாது. ரொம்பக் கொரகொரப்பாகவும் கூடாது. ரவை போல் அரைக்கவும்.

சுக்கு, மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டது இரண்டு டீஸ்பூன், உப்பு, நெய்.

தாளிக்க எண்ணெய் அல்லது நெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (எல்லாம் சேர்த்து) இஞ்சி தேவையானால் ஒரு துண்டு. கருகப்பிலை, கொத்துமல்லிபொடிப்பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்.

ஊற வைத்த பட்டாணி, துருவிய காரட்(தேவையானால் மாவில் கலக்கலாம். இது அவரவர் விருப்பம்போல். தேங்காயும் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம்)


இப்போது அரைத்த மாவில் பொடித்த சுக்கு, மிளகு, ஜீரகக்கலவையோடு உப்பையும் போட்டு நெய்யையும் விட்டுக் கலந்து புளிக்க வைக்கவும்.

மறுநாள் இட்லி செய்யும் முன்னர் தாளிக்க எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அதில் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொட்டி மாவில் கலக்கவும். தேவையானால் ஊற வைத்த பட்டாணி, காரட், தேங்காய்க் கீறல் சேர்க்கலாம்.

இட்லிப் பாத்திரம் அல்லது இட்லிக்குக்கரில் நீரை ஊற்றிச் சூடாக்கவும். நீர் கொதித்து வந்ததும், இட்லித்தட்டுக்களில் நன்றாகத் ததும்ப எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். எல்லாத்தட்டுக்களையும் குக்கரினுள் அடுக்கிவிட்டு மூடி வைக்கவும். இட்லி வேகப் பத்து நிமிடங்கள் ஆகும். பின்னர் வெளியே எடுத்து சுவையான சட்னி அல்லது கொத்சோடு பரிமாறவும்.

கொத்சு:

தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய நீர் இரண்டு கிண்ணம். உப்பு, மிளகாய் வற்றல் 3, பச்சை மிளகாய் 2 அல்லது 3. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, பெருங்காயம் ஒரு துண்டு. கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை. கத்தரிக்காய் நடுத்தரமாக ஒன்று, சின்ன வெங்காயம் பத்துப் பனிரண்டு, அல்லது ஒரு நடுத்தரப் பெரிய வெங்காயம், தக்காளி ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளிக்க எண்ணெய்.

அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டுப் பின் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறவும்.

Sunday, November 27, 2011

இப்போ என்னோட முறை ராஜ்மாவில்! :))

ராஜ்மாவிலே மருமகள் ரொட்டி பண்ணினால் மாமியார் ஏதானும் செய்ய வேண்டாமா? ஆகவே நான் பஞ்சாபிலே பிரபலம் ஆன ராஜ்மா கிரேவி(குழம்பு மாதிரி)+ ஃபிரைட் ரைஸ் செய்தேன். இதற்கு வெண்ணெய் அல்லது நெய் இருந்தால் நன்றாக இருக்கும். பஞ்சாபில் வெண்ணெய், நெய் தாராளமாய்க் கிடைப்பதால் அதிலேயே செய்வார்கள்.

தேவையான பொருட்கள்: நாலு பேருக்கு.

ராஜ்மா இரண்டு கிண்ணம் எடுத்துக்கொண்டு முதல் நாளே ஊற வைத்துக்கொள்ளவும்.

மசாலாவிற்கு: ஒரு ஸ்பூன் சோம்பு, உடைத்த மிளகு ஒரு ஸ்பூன், பெரிய ஏலக்காய் 4, லவங்கப் பட்டை ஒரு துண்டு, தேஜ்பத்தா எனப்படும் மசாலா இலை, இலவங்கம் 4

தாளிதம் செய்ய:

ஜீரகம்,சோம்பு ஒரு டீஸ்பூன்,

வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் ஒரு கிண்ணம்

தக்காளி பொடியாக நறுக்கியது ஒரு கிண்ணம்.

பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், 2 ஸ்பூன் தனியாத் தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

கெட்டித் தயிர் ஒரு கிண்ணம். மேலே தூவ சீஸ் துருவல் அல்லது புதிதான க்ரீம்.

பாஸ்மதி அரிசி 2 கிண்ணம், உப்பு, பட்டாணி(பச்சை அல்லது காய்ந்த பச்சைப்பட்டாணி ஊற வைத்தது அரைக் கிண்ணம். கிராம்பு, ஏலக்காய் வகைக்கு இரண்டு. வறுக்க நெய் ஒரு டீஸ்பூன்.

பாஸ்மதி அரிசியையும், பட்டாணியையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் அல்லது பிரஷர் பானில் நெய்யை ஊற்றி கிராம்பு, ஏலக்காய் போட்டுக்கொண்டு பாஸ்மதி அரிசியைப் போட்டு வறுக்கவும். அரிசி முழுதும் நெய்யோடு நன்கு கலந்ததும், பட்டாணியைச் சேர்த்து உப்பையும் போட்டுவிட்டுத் தேவையான நீரை விட்டுக் குக்கரை மூடி சாதம் தயார் செய்து கொள்ளவும். இப்போது ராஜ்மா கிரேவி தயாரிக்கும் முறை.


முதலில் சொல்லி இருக்கும் மசாலாப் பொருட்களை நசுக்கிக் கொண்டு ஒரு சின்ன வெள்ளைத்துணியில் கட்டி ராஜ்மாவை வேக வைக்கையில் அதோடு போட்டுவிடவும். வேகும்போதே இந்த மசாலா அதற்குள் போய் இறங்கிக்கொள்ளும். முதல் நாளே ஊற வைத்து அளவாக நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். வெந்த ராஜ்மாவில் இருந்து மசாலாப் பையை எடுத்துவிடவும்.

அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்துக்கொண்டு வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயை விடவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, ஜீரகம் தாளித்துக்கொண்டு வெங்காயத்தைப்போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் இஞ்சி பேஸ்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்து ஒரு கொதி விடவும். கெட்டித் தயிரில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையானால் அம்சூர் பொடி சேர்த்து ராஜ்மாவில் கொட்டிக் கலக்கவும். மறுபடி ஒரு கொதி விடவும். இதற்கு கரம் மசாலாப் பொடி தேவையில்லை. தேவை எனில் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம், பச்சைக் கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம்.

தயாரிக்கப்பட்ட சூடான சாதத்தில் இந்தக் குழம்பை விட்டுச் சாப்பிடலாம். குளிர்நாட்களுக்கு ஏற்ற உணவு. படம் இன்னொரு முறை செய்கையில் எடுத்துச் சேர்க்கிறேன்.

ராஜ்மாவில் ரொட்டியா? கடவுளே!

அப்படித்தான் நானும் நினைச்சேன் முதல்லே. ஆனால் நல்லாவே இருந்தது. ஊருக்குப் போகையிலே ராஜ்மா ரொட்டி பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு மருமகள் சொன்னாள். எனக்குக் கொஞ்சம் யோசனை தான். அன்றே சாயந்திரமாப் பண்ணினா. சாப்பிட்டால் நல்லாவே இருந்தது. எனக்குத் தெரிந்த வரையில் அவள் போட்டிருந்த பொருட்கள்:

ராஜ்மா ஒரு கப் முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன அளவு ராஜ்மா விழுதுக்கு இரண்டு கப் கோதுமை மாவு தேவைப்படும்.

மற்றத் தேவையான பொருட்கள்: மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, உப்பு, மாவில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். மாவு பிசைய நீர். ரொட்டியைத் தட்டி எடுக்கத் தேவையான எண்ணெய் தனியாக.

கோதுமை மாவில் ராஜ்மா விழுதைப் போட்டுக் கலந்து கொண்டு அதோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, தேவையான உப்புச் சேர்த்துக் கலக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான நீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசையவும். ரொட்டி மாவு பதத்துக்கு வந்ததும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ரொட்டியை ஒவ்வொன்றாக இட்டுத் தவாவில் எண்ணெய் தடவிப் போட்டுச் சுட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள ராய்தா எனப்படும் பச்சடி நன்றாக இருக்கும்.

ராய்தா:

வெங்காயம், காரட், வெள்ளரிக்காய் துருவிப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி போட்டு, நல்ல கெட்டித் தயிரில் உப்பு, ஜீரகப்பொடி, காலா நமக் பொடி ஒரு சிட்டிகை போட்டுக் கலந்து வைக்கவும்.

Tuesday, November 15, 2011

ரங்கு சமையல் கத்துக்கிறார்

அப்பாடா!

என்ன அப்பாடா! இன்னிக்கு சமையல் இல்லையா?

நோ, இன்னிக்கு நோ சமையல் டே. தங்குவின் அறிவிப்பு.

என்னது? அப்போ என்ன சாப்பிடப் போறோமாம்?

பட்டினி தான்!

அடிப் பாவி! சரி, நானாவது சமைத்துத் தொலைக்கிறேன்.

அப்படி வாங்க வழிக்கு! ஹாஹாஹாஹா, தங்குவின் வெற்றிச் சிரிப்பு.

நான் வெறும் ரசம் தான் வைக்கப் போறேன். ரங்குவின் அறிவிப்பு.

சரி, போகட்டும், வைக்கிறது வைக்கிறீங்க, மைசூர் ரசமா வைச்சுடுங்களேன்.

நல்லா நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்துட்டா பாரு!

ஏன்? தினம் தினம் நான் தானே சமைக்கிறேன். இன்னிக்கு ஒரு நாள் செய்தா என்னவாம்?

எனக்கு மைசூர் ரசமும் தெரியாது, மங்களூர் போண்டோவும் வராது.

நான் சொல்லித் தரேன். செய்ங்க. தங்கு ஓர் அதட்டல் போட வேறு வழியில்லாத ரங்கு பணிகிறார்.

முதல்லே பருப்பை வேக வைக்கணும். அது பாட்டுக்கு வேகட்டும். அதுக்குள்ளே நாம் இதெல்லாம் தயார் பண்ணிக்கலாம்.

என்னது?

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சுக்குங்க. அதைத் தனியா வைங்க, சரியா?

சரி, சரி, அப்புறமா சொல்லித் தொலை. அடம்!

மி.வத்தல் 4, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக்கோங்க. ஜீரகம் வறுக்காமல் பச்சையாக எடுத்து வறுத்த சாமான்களோடு சேர்த்துக்கோங்க.

ஐயையே, வறுக்கச் சொன்னால் என்ன செய்யறீங்க? இப்படியா கறுப்பா ஆக்கறது? நகருங்க நானே வறுத்துத் தந்து தொலைக்கிறேன்.

நல்லா வறு, என்னை வறுக்கிறாப்போல் நினைச்சுக்கோ!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே நீங்க தான் என்னை வறுக்கிறீங்க.

தங்குவே எல்லாவற்றையும் வறுத்து எடுத்தாச்சு.

இப்போ இதை எல்லாம் மிக்சியில் போட்டு அரைங்க.

எப்படி? எங்க வீட்டு மனுஷங்களை நீ வாயில் போட்டு அரைப்பியே, அப்படியா?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சரி, சரி,அரைச்சுட்டேன், இதோ.

இப்போப் புளி ஜலத்தை அடுப்பில் வைச்சு அதிலே ஒரு தக்காளிப்பழத்தை நறுக்கிப் போடுங்க. உப்புச் சேர்த்துக் கொஞ்சம் போல் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விடுங்க. வேணுமானால் ஒரே ஒரு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடலாம். கொதி வந்ததும், வெந்த பருப்பைச் சேர்த்துட்டு, அரைச்சு வைச்சதையும் சேர்த்து ஒரு கொதி விடுங்க. அப்புறமா ஜலம் விட்டு விளாவிவிட்டு நெய்யில் கடுகு, மி,வத்தல் ஒண்ணு, கருகப்பிலை தாளிச்சு, கொத்துமல்லி நறுக்கிப் போடுங்க.

அப்பாடா, எல்லாம் முடிச்சுட்டேன். வா, சீக்கிரமா வந்து படம் எடுத்துட்டு நீ எழுதுவியே அதிலே போடு.

அதெல்லாம் நான் சமைக்கிறச்சே தான். இதை எல்லாம் எடுக்க மாட்டேன்.

Thursday, November 10, 2011

சாதாரணமா சமையல் முறையை எழுதினா யாருமே வந்து பார்க்கிறதில்லை. அதனால் இனிமேல் ரங்குவும் தங்குவும் சமைக்கப் போறாங்க. வந்து பாருங்க.

Wednesday, November 9, 2011

தினம் தினம் என்னத்தைச் சமைக்கிறது?

போர் அடிக்குதா? புளியஞ்சாதம், தேங்காய்ச் சாதம் எல்லாமும் அலுத்துப் போச்சா? இதோ கொஞ்சம் புது மாதிரியான சமையல். சாப்பிட்டுப் பாருங்க வாங்க.தினம் ஏதேனும் குழம்பு, ரசம்னு வைச்சால் மிஞ்சிப் போகிறது. மறுநாளைக்குச் சுட வைத்துச் சாப்பிடும் வழக்கமும் இல்லை. துவையல், பொடி, எலுமிச்சை சாதம்னு எல்லாம் அலுப்பாய்ப் போச்சா! சரினு புதுமாதிரியா இருக்கட்டும்னு புளியோகெரெ பண்ணினேன். எம்.டி.ஆருக்குத் தான் விளம்பரமா? நமக்கும் வேணுமில்ல? அதான் படம் எடுத்துப் போட்டாச்சு. படத்திலே பார்ப்பது புளியோகெரெ! கடுகோரைனும் சிலபேர் சொல்றாங்க.
 
ஒரு கர்நாடக சமையல்:

கடுகோரை:
தேவையான பொருட்கள்:

அரைக்க: புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, தேங்காய்துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4 அல்லது 5, வெல்லம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை.

தாளிக்க: கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை எண்ணெய் கால் கப்

ஒரு கப் அரிசியைக் கழுவிக் களைந்து முதலில் சாதம் வடித்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் உப்புச் சேர்த்து, நல்லெண்ணை ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும்.

அரைக்கவேண்டிய சாமான்களை நைஸாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொண்டு பின் அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும்.

இதைத் தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு அல்லது அவியல் போன்றவற்றோடு உண்ணலாம்.

 

தொட்டுக்க மோர்க்கூட்டு: இங்கே சைனீஸ் பஜாரில் பூசணிக்காய்(வெள்ளை) நல்லாவே கிடைக்குது. அது வாங்கிட்டு வந்தாங்க. அதிலே செய்தேன். பூசணிக்காயை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதிகப்படி நீரை வடிக்கவேண்டும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து நைஸாக அரைக்கவும். வெந்த பூசணிக்காயில் கொட்டிக் கலந்து ஒரு கொதி வந்ததும் கெட்டித் தயிர் சேர்த்து லேசாய்க் கொதித்ததும் கீழே இறக்கிக் கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்

ரசமே இல்லைனா சாப்பாடும் ரசம் இல்லை; வாழ்க்கையிலும் ரசம் இல்லை.

எலுமிச்சை ரசம்.

பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்துக்கொண்டு, இரண்டு, மூன்று தக்காளியை மிக்சியில் போட்டு அடித்து அதில் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்துக்கொண்டு, பச்சை மிளகாய், ரசப் பொடி,பெருங்காயம், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் நீர் விட்டு விளாவி நுரைத்து வருகையில் கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கலாம். அல்லது சீரகப் பொடி போட்டுவிட்டுக் கடுகு மட்டும் தாளிக்கலாம். பச்சைக்கொத்துமல்லி சேர்த்து எலுமிச்சைச் சாறையும் சேர்க்கவேண்டும்.


 
Posted by Picasa

Monday, November 7, 2011

சில உருளைக்கிழங்கு செய்முறைகள் !

உருளைக்கிழங்கு சமையல்கள்:

உருளைக்கிழங்குக் காரக்கறி: உருளைக்கிழங்கு கால் கிலோ, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் வதக்க. கடுகு தாளிக்கத் தேவையான அளவு.

உருளைக்கிழங்கை மண்போக நன்கு கழுவித் தோலை நீக்கவேண்டுமானால் நீக்கிவிட்டுப் பொடிப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மொறுமொறுவெனப் பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.

உருளைக்கிழங்கு காரக்கறி 2-ஆம் வகை: உருளைக்கிழங்கு கால் கிலோ, வெங்காயம் பெரியதெனில் இரண்டு, சின்ன வெங்காயம் என்றால் நூறுகிராம் தோல் உரித்துப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் ஒன்று, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கருகப்பிலை, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, பெருங்காயத்தூள். வதக்க எண்ணெய்.

உருளைக்கிழங்கைக் கழுவி வேக வைத்துத் தோலுரித்துக்கொண்டு ஒன்றிரண்டாக மசிக்கவும். அல்லது நான்கு பாகமாகவோ சிறிய துண்டுகளாகவோ நறுக்கிக்கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயப்பொடி, கருகப்பிலை, க.பருப்பு, உ.பருப்பு தாளித்துக்கொண்டு, பச்சைமிளகாயையும் அரிந்து போடவும். பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு பொடி வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும். இதிலேயே இறக்குகையில் கொஞ்சம் கரம்மசாலாவைப் போட்டால் மசாலா கிழங்காக ருசிக்கலாம். தேவை எனில் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.

உருளைக்கிழங்கு போண்டோ:

மேலே சொன்ன மாதிரி கொஞ்சம்காரத்தைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்கு கறி தயாரித்துக்கொள்ளவும்.

மேல்மாவுக்குத் தேவையான பொருட்கள்; கடலைமாவு இரண்டு கிண்ணம், அரிசி மாவு அரைக்கிண்ணம், மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், கரைக்க நீர்.

பொரிக்க எண்ணெய்

கடலைமாவு, அரிசிமாவு,மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் உப்புச் சேர்த்துக்கலந்து கொண்டு நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

இப்போது தயாராக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கறியை ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அடுப்பைத் தணித்துக் கொண்டு உருளைக்கிழங்கு உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். நன்கு திருப்பிப் போட்டு வெந்ததும் கரண்டியால் அரித்து எடுத்து வடிகட்டவும். சூடான தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்

உருளைக்கிழங்கு பஜ்ஜி:

உருளைக்கிழங்கு பெரிதாக ஒன்றிருந்தாலே போதும். நன்கு கழுவிக் கொண்டு தோலைச் சீவி விட்டு வட்ட வட்டமாகச் சீவித் தண்ணீரில் போடவும். உருளைக்கிழங்கை நன்கு தண்ணீரில் போட்டு அலசிவிட்டால் அதிலுள்ள மாவுச்சத்து குறையும் என்பார்கள். உண்பதில் கவலைப்படவேண்டாம்.

பஜ்ஜி மாவுக்கு: 2 கிண்ணம் கடலைமாவு, அரைக்கிண்ணம் அரிசி மாவு,அரைக்கிண்ணம்மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,கரைக்க நீர், பொரிக்க எண்ணெய்

எல்லா மாவுகளையும் ஒன்றாய்க் கலந்து கொண்டு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். நீர் விட்டுக் கொண்டு தோசைமாவு பதத்துக்குக் கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளை மாவில் தோய்த்துக்கொண்டு எண்ணெயில் போடவும். சூடான தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியோடு பரிமாறவும்.

உருளைக்கிழங்கு வடை: ஜவ்வரிசி ஒரு கிண்ணம். தயிரில் ஊறப் போடவும். உருளைக்கிழங்கு பெரிதாக இரண்டு. வேகவைத்துத் தோலுரித்துக்கொள்ளவும். வேர்க்கடலை ஒரு கிண்ணம் நன்கு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். 6 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு சின்னக் கட்டுக் கொத்துமல்லி சேர்த்து அரைத்த விழுது ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, பெருங்காயப் பொடி, காரப்பொடி(தேவையானால்) பச்சைமிளகாய்க் காரமே போதுமெனில் அதோடு நிறுத்திக்கொள்ளலாம். காரம் போதவில்லையெனில் அரைத்த விழுதையே இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.

இப்போது ஜவ்வரிசி நன்கு ஊறி இருக்கும். அதில் வேர்க்கடலை மாவு, வெந்த உருளைக்கிழங்கைச் சேர்த்துப் பிசையவும். காரத்திற்குத் தேவையான அளவு அரைத்த விழுது, உப்புச் சேர்க்கவும். பெருங்காயத்தூள், கருகப்பிலை தேவை எனில் சேர்க்கவும் அநேகமாகப் பிசைந்த மாவு கெட்டியாகவே இருக்கும். இல்லை எனில் கொஞ்சம் மைதாமாவோ அல்லது கடலைமாவோ சேர்க்கலாம். சற்றுநேரம் வைத்திருந்தால் ஜவ்வரிசி நன்கு ஊறி ஈரத்தை இழுத்துக்கொள்ளும்.

இப்போது கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாய்த் தட்டி எண்ணெயில் போடவும். ஜவ்வரிசி நன்கு பொரிந்து வடை மொறுமொறுவென வரும். சூடான தக்காளிச் சட்னி அல்லது புளிச்சட்னி, பச்சைச் சட்னியோடு சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு தம் அல்லது ஆலு தம்: ஓரே மாதிரியான சின்னச் சின்ன உருளைக்கிழங்கு கால் கிலோ. வேகவைத்துத் தோல் உரித்துக்கொள்ளவும். வெந்த கிழங்கில் இரண்டு மூன்று இடங்களில் சற்றுப் பெரிய ஊசி அல்லது பல் குத்தும் குச்சியால் குத்திவிட்டுவிட்டு மிளகாய்த்தூள், உப்புச் சேர்த்து
வதக்கி வைத்துக்கொள்ளவும்.

தக்காளி கால் கிலோ நன்கு வேக வைத்துச் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய்(தேவை எனில்) சேர்த்து அரைக்கவும். வெங்காயம் தேவைப்பட்டால் சேர்க்கலாம். பூண்டைக் குறைத்து வெங்காயம் சேர்க்கலாம். அல்லது பூண்டு போடாமல் வெங்காயம் சேர்க்கலாம்.

வதக்க, தாளிக்க எண்ணெய் அல்லது வெண்ணெய்/வனஸ்பதி, க்ரீம் அல்லது வெண்ணெய், அல்லது சீஸ், தயிர் கெட்டியாக. மஞ்சள் தூள்

கரம் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன். கரம் மசாலா பவுடர் தயாரிப்பு முறை

சோம்பு 50 கிராம்
லவங்கப்பட்டை 25 கிராம்
லவங்கம் என்ற கிராம்பு ஐந்து எண்ணிக்கை
பெரிய ஏலக்காய் நான்கு

இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். கிராம்பு அதிகம் சேர்த்தால் காரம் அதிகமாக இருக்கும்.

இப்போது கடாய் அல்லது நான்-ஸ்டிக் பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை கரைந்ததும் அரைத்த மசாலா விழுதைப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிகையில் வடிகட்டி வைத்த தக்காளிச் சாறை ஊற்றவும். தேவையான உப்பைப் போடவும். சற்றுக் கொதித்ததும் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போடவும். உருளைக்கிழங்கு சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கையில் தயிரை நீர்விடாமல் நன்கு கடைந்து அதில் மேலே ஊற்றவும். சற்று நேரம் பொறுத்துக் கீழே இறக்கிவிட்டுக் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்க்கவும். இல்லை எனில் சீஸைத் துருவிச் சேர்க்கவும். பச்சைக்கொத்துமல்லியால் அலங்கரிக்கலாம். சப்பாத்தி, பராட்டாவிற்கு ஏற்ற சைட் டிஷ் இது.

Tuesday, August 2, 2011

நாரத்தை உணவுகள் சில.


நாரத்தங்காய் சாப்பிட்டால் சிலருக்கு அதன் பிறகு வரும் ஏப்பத்தினால் பிடிக்காது. ஆனால் நாரத்தங்காய் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு உதவுவது எத்தனை பேருக்குத் தெரியும்? உணவு செரிமானம் ஆகத் தினமும் நாரத்தையை ஏதேனும் ஒரு உருவில் சாப்பிட்டு வரலாம். முதலில் நாரத்தங்காய்ப் பச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாமா? நன்கு வளர்ந்த நாரத்தங்காய் இரண்டு. செடியிலிருந்து பறித்தாலோ அல்லது விலைக்கு வாங்கினாலோ வாங்கியதும் நன்கு கழுவி விட்டுப் பின்னர் வெந்நீரில் மூழ்கப் போட்டு வைக்கவும். பத்து நிமிடங்கள் இருந்தால் போதும்.

தேவையான பொருட்கள்: நாரத்தை 2, புளி ஒரு எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் பத்து, ஐம்பது கிராம் இஞ்சி தோல் சீவிக்கொண்டு பொடியாக நறுக்கவும். பெருங்காயம், கடுகு, வெந்தயம், தாளிக்க எண்ணெய்(நல்லெண்ணெய் கிடைத்தால் நல்லது, இல்லை எனில் ஏதேனும் சமையல் எண்ணெய்), மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கு ஏற்ப.

புளியை நன்கு நீரில் கரைத்துக்கொள்ளவும். இரண்டு கிண்ணம் புளிச்சாறு இருக்கலாம். நாரத்தையைப் பொடிப் பொடியாக நறுக்கி விதைகளை நீக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலி, கல்சட்டி அல்லது உருளி, நான் ஸ்டிக் கடாய் ஏதேனும் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் போடவும். கடுகு வெடித்ததும், நாரத்தங்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்த்துப் புளிக்கரைசலை ஊற்றி உப்பும் சேர்க்கவும். நன்கு புளி வாசனை போகக் கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்குகையில் பிடித்தமானால் ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கவும். சேர்க்காவிட்டாலும் சுவை குன்றாது. இது வாயு, பித்தம் போன்றவற்றுக்கும் குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றிற்கும் சிறந்தது. உடல் வெப்பம் குறையும். வயிற்றுப் புழு நீங்கும். பசியை அதிகரித்து நாக்கிற்குச் சுவை கூட்டும்.

நாரத்தை சாதம்: இது இருமுறைகளில் செய்யலாம். முதல்முறை சாதாரணமாக எலுமிச்சை சாதம் செய்யும் முறையாகும். நல்ல ஜாதி நார்த்தங்காய் எனில் அதில் சாறு நிறைய இருக்கும். ஆகவே நாலு பேருக்கு ஒரு நார்த்தங்காய் போதுமானது.

தேவையான பொருட்கள்: நார்த்தங்காய் ஒன்று, பச்சை மிளகாய் நான்கு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு ஆகியவை ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், கருகப்பிலை, தாளிக்க நல்லெண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய். உப்பு தேவையான அளவுக்கு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை. சமைத்த சாதம் நான்கு கிண்ணம்.

சாதத்தை நன்கு உதிர்த்து உப்புச் சேர்த்துக்கொண்டு, மஞ்சள் தூள், நார்த்தைச் சாறு சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை போன்றவை போட்டுத் தாளித்து வேர்க்கடலை வறுபட்டதும், ப.மிளகாய், கருகப்பிலை சேர்த்து அதைக் கலந்து வைத்த சாதத்தில் போட்டுக் கிளறவும். அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.

அடுத்த முறை: இதற்கும் நார்த்தங்காய் மற்றப் பொருட்கள் அனைத்தும் முன்னர் சொன்னபடியே எடுத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டைக் குறைத்துக்கொண்டு காய்ந்த மிளகாய் இரண்டை எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், மி.வத்தல் போன்றவற்றைச் சிறிது உப்புச் சேர்த்து நன்கு அரைக்கவும். தண்ணீர் விட வேண்டாம். பின்னர் அதை வடித்த சாதத்தில் போட்டுக் கலக்கவும். நாரத்தைச் சாறு பிழிந்து கொண்டு சாதத்தில் கலக்கவும். பின்னர் மேலே சொன்னபடி தாளிதம் செய்து கொண்டு தாளிதத்தைச் சாதத்தில் கலக்கவும். தயிர்ப்பச்சடியோடு பரிமாறவும்.

நார்த்தை இலைப்பொடி அல்லது வேப்பிலைக்கட்டி: இதற்கு நார்த்தை இலைகளை நடுவில் நரம்பு நீக்கி இரண்டு கிண்ணங்கள் எடுத்து வெயிலில் காய வைத்துக்கொள்ளவும். ஓமம் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இன்னொரு முறையில் ஓமத்தைக் குறைத்துக் கொண்டு மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து, உ.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.எல்லாப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக்கொண்டு மிக்சியில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும். வாயில் வரும் சுவையற்ற தன்மை நீங்கவும், உணவுச் சுவை தெரியவும் இந்தப் பொடியில் கொஞ்சம் சூடான சாதத்தைப் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட்டால் நல்லது. மோர் சாதத்துக்கும் ஊறுகாய் போல் பயன்படும்.

Friday, July 1, 2011

உங்கள் மேனிப் பராமரிப்புக்கு

வீட்டு மருந்துக் குறிப்புகள்:

கண்களுக்குக்கீழே உள்ள கருவளையம் போக்கப் பயத்த மாவு, கசகசாவை அரைத்துப் பூசி வர வேண்டும்.

தோல் தடிப்புக்கு பூவன் வாழைப்பழத்தை மசித்து மேலே தேய்க்கவும்.

சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்க பச்சைப் பயறு மாவு, கொண்டைக்கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை சம அளவு எடுத்துக் குழைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். சற்று நேரம் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். கடுக்காய்ப் பிஞ்சை வாங்கி மோரில் ஊற வைத்து அம்மியில் அரைத்து விழுதைத் தலையில் தேய்த்துக்கொள்ளவேண்டும். பதினைந்து நிமிடம் ஊறிவிட்டுக் குளித்தால் உடலுக்கும், தலைச்சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.

50 கிராம் எள்ளை நன்கு ஊற வைக்கவும். அதை நன்கு அரைத்துத் தலையில் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளிக்கவும். தலைச்சூடு குறைவதோடு நரையும் தெரியாது.


வீட்டிலேயே சீயக்காய்த் தூள் கலக்கும் முறை:

சீயக்காய், காய்களாக அரைகிலோ வாங்கிக் காய வைத்துக்கொள்ளவும். இதோடு பச்சைப் பயறு கால் கிலோ, புழுங்கலரிசி, நூறு கிராம், கோரைக்கிழங்கு கால் கிலோ, வெந்தயம் நூறு கிராம், வேப்பிலை காய வைத்தது இரண்டு கைப்பிடி, வெட்டி வேர்(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம், எலுமிச்சைத் தோல்கள் காய வைத்தது, செம்பருத்திப் பூக்கள், இலைகள், இரண்டு கைப்பிடி, கறிவேப்பிலை காய்ந்தது இரண்டு கைப்பிடி, நெல்லிமுள்ளி(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம் அல்லது பத்து பெரிய நெல்லிக்காய்கள் காய வைத்தது. இவை அனைத்தையும் நன்கு காய வைத்து சீயக்காய் அரைக்கும் மாவு மிஷினில் கொடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கையில் பயன்படுத்தலாம். தினசரி உடலுக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஊறிப் பின்னர் இந்தப் பொடியாலும் உடலைத் தேய்த்துக்கழுவலாம்.


இப்போதெல்லாம் இவை பொய்யாய்ப்பழங்கதையாய்ப் போய்விட்டன. என்றாலும் இம்முறையில் சீயக்காய் அரைத்துத் தலைக்குத் தேய்த்துக்குளித்தபோது இருந்த சுகமும், தலைமுடியின் அடர்த்தியும், நீளமும் இப்போதெல்லாம் காண முடியவில்லை. மேலும் ஆங்கில மருத்துவர்கள் வேறே எண்ணெய்க் குளியலே கூடாது என்றும் உடலில் எண்ணெயே பட வேண்டாம் என்றும் கூறிவிடுகிறார்கள். அவ்வப்போது இம்மாதிரிக்குறிப்புகள் வரும்.

Saturday, April 16, 2011

வட இந்திய உணவு வகைகள், பானி பூரி, சனா பட்டூரா!

அடுத்து நாம் காணப்போவது பானிபூரி. இதற்கும் பூரிகள் தேவை. அதோடு காரச் சட்னிபோல் சட்னி செய்து அதை நீர்க்க்க் கரைத்துக்கொள்ளவேண்டும். பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். இதற்கும் உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும். தேவையான பொருட்களை இப்போது பார்க்கலாமா??

பானிபூரிக்கான பூரிகள் செய்ய: மைதா ஒரு கிண்ணம், கால் கிண்ணம் உளுந்துமாவு, ஒரு கிண்ணம் ரவை, தேவையான உப்பு, பிசைய நீர்.

மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இவற்றையும் ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம். அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.

ஒரு கட்டு புதினா இலைகள், ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள், ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு, இரண்டு டீஸ்பூன் ஜீரகம், ஒரு கிண்ணம் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.) இஞ்சி ஒரு துண்டு. இவை தவிர சட்னி அரைத்த்தும் கலக்க வறுத்த ஜீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்.

மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.

இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.


அடுத்து சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா: வட இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய உணவு. தவறாமல் விருந்துகளில் இடம் பிடிக்கும் ஒன்று. சோளே பட்டூரா என்பது வெறும் கடலைக்கூட்டு என்றே தென்னிந்தியாவில் நினைக்கப் படுகிறது. உண்மையில் பட்டூரா என்பது ஒரு வகைப் பூரி. சோளே என்பது மட்டுமே கடலையில் செய்யப் படும் கூட்டு அல்லது சைட் டிஷ். இரண்டும் சேர்ந்தே சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா என அழைக்கப்படும். இதற்குச் சோளே அல்லது சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும். இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.

தேவையான சாமான்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை, கால் கிலோ, முதல் நாளே ஊற வைக்கவும்.பெரிய வெங்காயம் 2, தக்காளிப்பழம் 4 அல்லது தக்காளிச் சாறு ஒருகிண்ணம், இஞ்சி ஒரு துண்டு, மாதுளம்பழ முத்துக்கள் ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு டீஸ்பூன், மிளகாய்த் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலாத் தூள் அல்லது சாட் மசாலாத் தூள் அல்லது சனா மசாலாத் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, புளி கரைத்த நீர் ஒரு கிண்ணம், உப்பு, வெல்லம் ஐம்பது கிராம், உப்பு தேவையான அளவு. சர்க்கரை ஒரு டீஸ்பூன், எண்ணெய் நூறு கிராம்.

மேலே சொன்ன பொருட்கள் சோளே அல்லது சனா செய்யப் போதுமானவை. இதைத் தவிர பட்டூரா செய்யத் தேவையான பொருட்களைப் பார்ப்போமா?
மைதா மாவு அரை கிலோ, வெண்ணெய் அல்லது டால்டா(விருப்பம்போல்) நூறு கிராம், உப்பு தேவையான அளவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, தயிர் ஒரு கிண்ணம். பொரிக்க எண்ணெய் தேவையான அளவு. முதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள்ளலாம், மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்புக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.

ஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் வெண்ணெயைப் போட்டு நன்கு குழைக்கவும். குழைக்க்க் குறைந்த்து ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும். இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப்பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும். மாவும், வெண்ணெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும். கலக்க்க் கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொரபொரவென வருவது புரியும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும். மாவை நன்கு பிசையவும். மாவு நன்கு கெட்டியாகப் பிசைந்த்தும், ஒரு வெள்ளைத் துணியை ஈரமாக்கி மாவை அதால் மூடி வைக்கவும். குறைந்த்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும். நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும். இப்போது சனா செய்யலாமா?

கொண்டைக்கடலையைக் குக்கரில் வேக வைக்கவேண்டும். வேக வைக்கும் முன்னர் ஊற வைத்த கொண்டைக்கடலையை ஒரு டேபிள் ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, அதோடு நறுக்கிய இஞ்சி, வெங்காயம், மாதுளம் விதைகள் இவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு அகன்ற பாத்திரம் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி, முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்த்தும், அரைத்த விழுதைப் போட்டு நன்கு வெங்காய வாசனை போக்க் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள் போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டு சீரகத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். சற்று வதங்கி எண்ணெய் பிரியும்போது வேக வைத்த கொண்டைக்கடலை, புளிக்கரைசல், தக்காளிச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். சற்றுக் கொதித்த்தும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கட்டாயம் சேர்க்கவேண்டும். கெட்டியாகும் வரை கொதிக்க விட்டுப் பாதி மசாலாத் தூளையும் சேர்க்கவும். சேர்ந்து சிறிது நேரம் கொதித்த்தும், கீழே இறக்கி மிச்சம் இருக்கும் மசாலாத் தூளைச் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி, புதினா ஆகியவற்றால் அலங்கரிக்கவும். இதன் மேல் பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னியை ஊற்றிக்கொண்டு அப்படியேயும் சாப்பிடலாம். பட்டூராவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

பட்டூரா செய்யும் விதம்: பிசைந்து வைத்த மாவைச் சின்ன உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும். எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும். பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும். சாதாரண கோதுமை பூரியின் உப்பல் குறைந்து சொத சொதவென ஆவது போல் இதிலே ஆகாது. பூரிகள் சின்னதாகவே இருக்கும். தமிழ்நாட்டு ஹோட்டல்களில் பெரியதாக ஒரே பூரி கொடுக்கிறாப் போல் இருக்காது. நிதானமாகச் சின்னச் சின்ன பூரிகளாக இருக்கும். அடுக்கி வைத்துக்கொண்டு சூடான சோளே/சனாவுடம் பரிமாறவும்

வட இந்திய உணவு வகைகள், பேல் பூரி!

வட இந்திய உணவு வகைகள் பற்றி ஒருமுறை கமலம் கேட்டிருந்தார். அதிலே பேல் பூரி, பானி பூரி, சனா பட்டூரா போன்றவற்றை அறிந்த்தில்லை என்றார். சில குறிப்புகள் இங்கே:

முதலில் பேல் பூரி: இதற்கு முக்கியத் தேவை அரிசிப் பொரிதான். அதோடு வேக வைத்த உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய ஓமப்பொடி, வறுத்துக் காரம் போட்ட கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலை(பிடித்தமானால்) மாதுளை முத்துக்கள்(பிடித்தமானால்) பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி குறைந்த பக்ஷமாக ஒரு கட்டாவது இருத்தல் நலம். எலுமிச்சைச் சாறு ஒரு சின்னக் கிண்ணம். பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி. சின்னச் சின்ன பூரிகள் பேல் பூரியில் கலக்க. சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. இதைத் தவிர இந்த பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிகள் செய்து வைத்துக்கொள்ளலாம். இந்த பூரிகளைச் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது கலந்து கொடுக்கலாம்.
முதலில் பூரி செய்யும் விதம்: ரவை ஒரு கிண்ணம், மைதா ஒரு கிண்ணம், கோதுமை மாவு ஒரு கிண்ணம். தேவையான அளவுக்கு உப்பு. பொரிக்க எண்ணெய். மாவு பிசைய நீர்.

மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும். இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும். இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும். தட்டையான பூரிகளே இதற்குத் தேவை. ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும். பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம். அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்: கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு அல்லது நடுத்தரமாக இரண்டு கட்டு, பச்சை மிளகாய், (காரமானது நல்லது) பத்து அல்லது பனிரண்டு. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு(பிடித்தமானால், நான் பூண்டு சேர்ப்பதில்லை) இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு. பெருங்காயம்(தேவை எனில்)


கொத்துமல்லிக்கீரை, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம். கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கலாம்.

அடுத்து இனிப்புச் சட்னி: அவசரமாகப் பண்ண இது வசதி. பேரீச்சம்பழம் ஐம்பது கிராம், ஒரு சிறு உருண்டை புளி, உப்பு, மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சர்க்கரை. எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும். இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கலாம்.

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை) 100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும். இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு. ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும். மேலும் இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இருந்து கீழே இறக்கவும். இது பல நாட்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.


அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

Friday, March 25, 2011

கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு!


ஜெயஸ்ரீ சொன்ன மங்களூர் கொஜ்ஜுவைப் பத்தி இப்போப் பார்க்கலாமா?? பொதுவா இந்த கொஜ்ஜு அன்னாசிப் பழத் துண்டங்களில் தான் செய்யறாங்க. ஆனால் வித்தியாசமாய் ஓர் அம்மாள் சங்கரா தொலைக்காட்சி சானலில் மாங்காய், பழுக்கும் நிலையில் இருப்பதில் செய்து காட்டினார். அவர் செய் முறையில் மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியனவற்றோடு கொப்பரைத் துருவலும் இருந்தது. சிலர் தனியா சேர்க்க மாட்டோம் என்கின்றனர். பொதுவிலிது ஒரு வகைப் பச்சடி என்றே சொல்லலாம். இப்போ அன்னாசிப் பழத் துண்டுகளில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் அன்னாசிப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணம். மி.வத்தல் 4 அல்லது 6 காரத்தின் தன்மைக்கேற்ப, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து இரண்டு டீ ஸ்பூன், வெள்ளை எள் ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன். கொப்பரைத் துருவல் ஒரு கப். தேங்காய் அதிகம் வேண்டாமெனில் அரை கிண்ணம் போதும். எல்லாவற்றையும் வறுக்க எண்ணெய். புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு எல்லாப் பொருட்களையும் அன்னாசிப் பழத் துண்டுகள் தவிர வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அன்னாசித் துண்டங்களைக் குக்கரிலோ அல்லது நீர் வைத்து வாணலியிலோ வேக வைக்கவும். வேக வைத்த அன்னாசித் துண்டில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துப் புளிவாசனை போகக் கொதிக்க விடவும். இப்போது பொடித்துள்ள பொடியைத் தேவையான அளவு போடவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் இஷ்டப் பட்டால் சேர்க்கலாம்.

ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.

Thursday, March 24, 2011

நீங்க எனக்கு பிரண்டையா இல்லையா?

ஹிஹிஹி, சிநேகிதர்களைப் பிரண்டை எனக் கேலியாகச் சொல்லுவாங்க. அதுவும் எதனால் என்றால், அந்தக் காலங்களில் ஆங்கிலம் அதிகம் படிக்காத பாட்டிங்க இருந்தாங்க இல்லையா? அவங்க கிட்டே ஃபிரண்ட் என்று சொன்னால், அவங்க பிரண்டை என்றே சொல்லுவாங்க. என் அப்பாவோட சித்தியும் அப்படித் தான் சொல்லி இருக்காங்க. ஆனால் இங்கே சொல்லப் போறது பிரண்டை என்னும் வச்சிரவல்லி. ஹிஹி, என்ன ஒரு பெண்ணோட பேர் மாதிரி இருக்கா?? வச்சிரவல்லி என்றும் ஒரு பெயர் பிரண்டைக்கு உண்டு. இதோ இதான் காய். இங்கே மார்க்கெட்டில் கிடைக்குது. வீட்டிலேயே நட்டிருந்தோம். கொடி வகை. வேலை செய்யற ஆளுங்க எப்போ எப்படி வெட்டினாங்கனு புரியலை. சித்தரத்தையையும் காணோம், இதையும் காணோம். இரண்டையும் திரும்ப வச்சிருக்கோம், வரணும்! சரி, சரி, இதோ விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

பிரண்டை வாங்கிக்குங்க. குறைஞ்சது நாலு பேர் உள்ள குடும்பத்துக்குக் கால் கிலோ வேண்டும். வாங்கி நல்லாக் கழுவி, கணுவினருகே வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைத் துண்டாக நறுக்கி வைச்சுக்கவும்.

மி.வத்தல் உங்கள் காரத்தின் தன்மைக்கேற்ப பத்து அல்லது பனிரண்டு வைச்சுக்கலாம். பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உ.பருப்பு முறையே இரண்டு டீஸ்பூன், புளி ஒரு நெல்லிக்காய் அளவு. உப்பு தேவையான அளவ. நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன்.


வாணலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பு வறுத்துத் தனியாக வைக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில்போட்டுப் பொரித்துக்கொண்டு மிளகாய் வற்றலையும் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பிரண்டைகளைப் போட்டு நன்கு வதக்கவும். புளியையும் இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு உப்புச் சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொர கொரப்பாக இருக்கையிலேயே தனியாக எடுத்து வைத்த கடுகு,உ.பருப்பைச் சேர்க்கவும். ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் பின்னர் வெளியே எடுக்கவும். சூடான சாதத்தில், நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு பிரண்டைத் துவையலைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக் கோளாறுகள், ருசியின்மை, பசியின்மை ஆகியனவற்றுக்கு அரு மருந்து. வயிறு உப்புசமாக இருந்தாலும் சரியாகும்.

இதன் கூடவே தொட்டுக்க சைட் டிஷாக மோர்க்குழம்பு அல்லது மோர்ச்சாறு பயன்படுத்தலாம். மோர்ச்சாறு சீக்கிரம் செய்ய முடியும். கெட்டியான புளித்த மோரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், அரிசி மாவு சேர்த்துக் கரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, வெந்தயம், மி.வத்தல், ஓமம், து,பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கரைத்த மோரை ஊற்றவும். பொங்கி வரும்போது இறக்கி விடவும். இதை எந்தத் துவையல் அரைத்தாலும் சைட் டிஷாகப் பயன்படுத்தலாம். துவையல் என்பது முக்கியமான காய்கள், அல்லது பொருளை நன்கு வறுத்து மிளகாய் வற்றலோடு சேர்த்துச் செய்வது. சட்னி என்பது எல்லாவற்றையும் பச்சையாக வைத்துச் செய்வது. சட்னியில் தாளிதம் அரைக்க வேண்டாம். துவையலில் தாளிதத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

Thursday, March 17, 2011

சப்பாத்தி சாப்பிடலாமா?

தினம் தினம் என்ன பண்ணறது சப்பாத்திக்கு?? அதுவும் தினசரிச் சாப்பாட்டிலே சப்பாத்தியும் உண்டுங்கறச்சே/ பாலாஜி அங்கிள் சொன்னாப்போல் ஆவக்காய் ஊறுகாயும், வெண்டைக்காய்க் கறியும் நல்லாத் தான் இருக்கும். ஆனால் வெண்டைக்காயைச் சாதாரணமாய்ப் பண்ணறாப்போல் பண்ணாமல் கொஞ்சம் வித்தியாசமாப் பார்ப்போமா??

வெண்டைக்காய் உங்க தேவைக்கு ஏற்பக் கால் அல்லது அரை கிலோ. குடமிளகாய் நூறு கிராம், தக்காளி பெரிது என்றால் ஒன்று, சின்னது என்றால் இரண்டு. மி.பொடி, ஒரு டீஸ்பூன், தனியா பொடி, பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன், ம.பொடி, உப்பு, சீரகம், கடுகு தாளிக்க. அல்லது சாம்பார் பொடி இரண்டு டீ ஸ்பூன். எண்ணெய்.

வெண்டைக்காயை ரொம்பப் பொடியாக நறுக்காமல் ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். அதே அளவுக்குக் குடை மிளகாய், தக்காளியையும் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் வைச்சு, கடுகு, சீரகம் தாளிக்கவும். பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டுச் சற்று வதக்கவும். குடைமிளகாய்த் துண்டங்களையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு கலக்கும் வரை வதக்கிக் கொண்டு, மிளகாய்த்தூள், தனியாத் தூள் அல்லது சாம்பார் பொடியும் சேர்த்து, நறுக்கிய தக்காளித் துண்டங்களையும் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். மூடி வைக்க வேண்டாம். அப்படியே சற்று நேரம் நன்கு கலந்து கொண்டு வதக்கிக் கொள்ளவும். கறி நன்கு வதங்கியதும், சூடாகச் சப்பாத்தியுடன் பரிமாறவும். இதுக்கு வெங்காயமோ, பூண்டோ தேவை இல்லை.

பீட்ரூட்டைச் சப்பாத்திக்கு வேண்டாமே!

பஸ்ஸிலே சப்பாத்திக்குத் தொட்டுக்க பீட்ரூட் தான் அருமையான இணை உணவுனு நம்ம அநன்யா அக்கா சொல்லி இருக்கிறதை எல்லாரும்/சிலர்?? ஆமோதிக்கிறாங்க. என்னப் பொறுத்தவரையில் பீட்ரூட் என்பது பச்சையாய்ச் சாப்பிடும் ஓர் காய். அதைக் காரட், தக்காளி போன்றவற்றுடன் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ சாலடாகச் சாப்பிடலாம். ஆனால் சில சமயம் வேறே வழி இல்லைனா பண்ணித் தான் ஆகணும். போரடிக்கும், வேறே வழியே இல்லை. எல்லா ஹோட்டலிலும் தினம் போடும் ஒரு கறியில் பீட்ரூட் தமிழ்நாடு பூராவும் அநேகமாய் எல்லா ஹோட்டல்களில் தினமும் பீட்ரூட் கறி இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர். நாம போரடிச்சா பீட்ரூட்டைக் கறி பண்ணிச் சாப்பிட்டுக்கலாம், என்னிக்கோ. அது கூட அன்னிக்குனு பார்த்து சாப்பாடே வேண்டாம்னு உங்க வீட்டிலே எல்லாரும் உண்ணாவிரதம் இருக்க நேரிடும். இருந்தாலும் முதல்லே பீட்ரூட் கறியை வெங்காயம் சேர்த்தும், சேர்க்காமலும் எப்படிப் பண்ணறதுனு பார்க்கலாம். இது சப்பாத்திக்கெல்லாம் இல்லை. சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் அடுத்துத் தரேன் பாருங்க. என்ன வெங்காயம்?? பூண்டு?? அதெல்லாம் எதுக்கு வேண்டாம். அது இல்லாமலேயே.

பீட்ரூட் கால் கிலோ: போதுமானு கேட்காதீங்க. இதைச் சாப்பிடவே நீங்க வாசல்லே போர்டு வைக்கணும். வெங்காயம் சேர்த்தால் பெரிய வெங்காயம் இரண்டு. பொடிப் பொடியா நறுக்கி வைங்க. நினைவா ரங்க்ஸை வெங்காயம் உரிச்சு நறுக்கி வைக்கச் சொல்லுங்க. எதுக்குனு சொல்லவேண்டாம். சமையல்லே பீட்ரூட்னு தெரிஞ்சா எங்கேயானும் வெளியே சாப்பாடுனு ஓடிட சான்ஸ் இருக்கு. பச்சை மிளகாய், இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு ஏற்ப. கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளிக்க எண்ணெய். இந்தப் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை மிக்சியிலோ அம்மியிலோ கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதைத் தனியா வச்சுக்கோங்க.

இப்போ பீட்ரூட்டை நல்லா அலம்பி முழுசா, கவனிக்கவும், முழுசா குக்கரில் வேக வைக்கவும். வேக வைக்காமல் நறுக்க எனக்குக் கஷ்டமா இருக்கு. அதனாலே குக்கரில் வேக வைச்சுடுவேன். அப்புறம் தோலை உரிச்சா உ.கி. தோல் மாதிரி வந்துடும். இப்போ நறுக்கிக்குங்க. வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் தாளிக்கத் தேவையான அளவுக்கு ஊற்றினால் போதும். கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை போடவும். வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் போடலை என்றால் நறுக்கி வைச்ச பீட்ரூட்டைப் போட்டு உப்புப் பொடியைச் சேர்க்கவும். மூடி வைச்சுக் கொஞ்ச நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் கரகரப்பாய் அரைச்ச ப.மி. இஞ்சி, தே,து, சேர்க்கவும். நன்கு கிளறவும். ஒரு ஐந்து நிமிஷம் விடாமல் கிளறியதும் விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

இதை விட்டால் பீட்ரூட்டைத் துருவிப் பால் சேர்த்தோ, சேர்க்காமலோ அல்வா பண்ணலாம். ஜாம் மாதிரிக் கிளறி வைச்சுக்கலாம். முகத்துக்கு அழகு சாதனமாய்ப் பயன்படுத்தலாம்.