எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, October 27, 2018

உணவே மருந்து! வரகு 2

வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன்.

ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி

அரை கப் இட்லி புழுங்கலரிசி

முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்

பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!


தொட்டுக்கக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி. ரங்க்ஸுக்கு மிளகாய்ப் பொடி மேல் திடீர்க் காதல். ஆகையால் அவர் அதைத் தான் தொட்டுக் கொண்டார்.  தோசை கொஞ்சம் போல் நிறம் சிவந்திருந்தாலும் தீயவில்லை. ருசியும் பரவாயில்லை.




அடுத்த நாள் காலை சப்பாத்தி பண்ணியதால் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்


இட்லிக் கொப்பரையில் மாவு விட்டு வைத்திருக்கேன் அரை வேக்காட்டில் எடுத்த படம்! :)


வெந்த இட்லிகள். இட்லியும் பஞ்சு, தோசையும் பஞ்சு!  தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க!  தொட்டுக்க சாம்பார் தான்! ஹூம் ஹூம் இல்லை, இல்லை ஶ்ரீராம் சாம்பார் இல்லை. சாதாரண சாம்பார் தான். 

Saturday, October 6, 2018

உணவே மருந்து! வரகு 1

நீண்ட நாட்களாக இங்கே பதிவு போட முடியவில்லை. அடுத்தடுத்த சில பயணங்கள். அதோடு வேலைகள்! திரு நெல்லைத் தமிழர் நான் சில முன்னேற்பாடுகளுடன் ஒழுங்காகப் பதிவிடவில்லை என்கிறார். லேபல் எல்லாம் கொடுப்பதில்லை. ஏனெனில் குறிப்பிட்ட தலைப்பைக் கொடுத்தால் எனக்கு என் பதிவுகள் வருகின்றன என்பதோடு படிக்கும் சிலரும் சொல்கின்றனர். ஆகவே ரொம்பவே இதுக்காகவெல்லாம் கஷ்டப்படுத்திக்கலை. பெரிய அளவில் போய்ச் சென்று நிறையப் பின்னூட்டங்கள், கருத்துகளை எதிர்பார்த்துச் செய்வதில்லை. இங்கே வந்தால் குறிப்பிட்ட உணவு வகைகளின் செய்முறைகள் கிடைக்கும் என்பது அநேகமாக இங்கே அடிக்கடி வருபவர்களுக்குத் தெரியும். அந்த அளவில் போதும் என வைத்து விட்டேன். எனினும் சில குறிப்பிட்ட உணவுகளின் செய்முறைகளை மட்டும் தனியாகத் தொகுத்து மின்னூலாக ஆக்கும் எண்ணம் இருக்கிறது. விரைவில் அதற்கான வேலைகளைத் தொடங்கணும்.  வீட்டு வேலைகள் மட்டுமில்லாமல் சில சம்பவங்கள், சில சந்திப்புகள், சில நிகழ்வுகளினால் பதிவுகளின் தொடர்பு, போக்கு எல்லாம் மாறி விடுகின்றன. இப்போ நவராத்திரி வேறே நெருங்குவதால் அது சம்பந்தமான பதிவுகளைத் தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆகவே அப்போதும் பதிவுகள் இடுவது மாறலாம். அதன் பின்னர் முன்பு எழுதியவற்றைத் தொடரும்போது ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இருக்காது! இது சகஜமே!

முன்னுரை முடிஞ்சாச்சு! இப்போ வரகு பத்திப் பார்ப்போம். வரகு சிறுதானியங்களில் மிகவும் சத்துள்ளதும் பிரபலம் ஆனதுமான ஓர் உணவு. இது எங்கே வேண்டுமானாலும் விளையும். இதைப் பறவைகளோ ஆடு மாடுகளோ உண்ணாது. கடும் உணவுப் பஞ்சத்தில் கைகொடுக்கும் உணவு. இதைப்பாதுகாத்து வைத்தால் ஆயிரம் வருஷம் கூட முளைக்கும் திறன் கொண்டது. அதோடு அல்லாமல் இது இடி தாங்கும் திறன் உள்ளது என்பதால் தென்னிந்தியக் கோயில் கோபுரங்களின் கலசங்களை வரகு அரிசியால் நிரப்பி வைத்து மூடுவார்கள். இது தொன்று தொட்டு வரும் வழக்கம்.  தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் பெருமளவு உண்ணப்பட்டு வந்த இந்த தானியம் பின்னர் பயன்பாடு பெரிதும் குறைந்து மிகவும் அருகிப் போய் இப்போது சில காலமாக மீண்டும் தலையெடுக்கத்தொடங்கி இருக்கிறது.

அரிசிக்குப் பதிலாகவோ அல்லது மாற்றாகவோ இதைச் சமைத்து எப்போதும் போல் குழம்பு, ரசம், மோருடன் உண்ணலாம். இட்லி, தோசைக்குப் புழுங்கல் அரிசி போடுவதற்குப் பதிலாக வரகரிசியைப் போட்டு இட்லி, தோசை செய்யலாம்.  இதில் மாவுச் சத்து மிகவும் குறைவு. நார்ச்சத்து மிக அதிகம். ஆகவே தினமும் இதைச் சமைத்து உண்பவர்களின் உடல் எடையும் குறையும்.  ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் புரதம், கால்சியம், வைடமின் பி, தாதுப் பொருட்கள் ஆகியன இருப்பதோடு மற்றச் சிறுதானியங்களைப்போல் அல்லாமல் விரைவில் ஜீரணமும் ஆகும். இதைத் தொடர்ந்து உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதன் தோலைச் சரியாக நீக்கிவிட்டு உண்ண வேண்டும். இல்லை எனில் தொண்டையில் பிரச்னை வரும். வரகுத் தாளை வீட்டுக்கூரையில் கூரை வேயவும் பயன்படுத்துவார்கள். இதனால் வீட்டிற்குள் சூரிய வெப்பம் தெரியாது. பொதுவாக ஆடி மாதம் பயிரிட நல்லது என்றாலும் இதை எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். எவ்வகை மண்ணிலும் விளையும் தன்மை கொண்டது. களர் மண்ணிலும் நன்கு விளையும். இதைப் பயிரிட்டதும் ஐந்து மாதங்களில் அறுவடை செய்யலாம். மழை பெய்து முடிந்த பின்னர் மண்ணில் அதிக ஈரம் இல்லாமல் இருக்கையில் விதைக்கலாம். விதைக்கையில் மழை இல்லை என்றாலும் பின்னர் மழை பெய்ததும் முளைத்து விடும். விதைத்து ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்துவிடும். இதற்கு உரமோ, பூச்சிக்கொல்லியோ தேவை இல்லை என்பதோடு வயலில் களை எடுக்கவும் தேவை இல்லை. ஆடு, மாடுகள் மேய்ந்தாலும் பின்னர் கிளை பரப்பி அதிக வேகத்தில் வளர்ந்து விடும். நான்காம் மாதம் கதிர் விட ஆரம்பித்து ஐந்தாம் மாதம் அறுவடை செய்யலாம்.

வரகைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும். மூட்டுவலிக்கு நல்லது.  கல்லீரலைச் செயல்பட வைக்கும். கண் நோய்களைத் தீர்க்கும். நிணநீர்ச் சுரப்பிகளைச் சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளையும் சீராக்கும் தன்மை கொண்டது.

Wednesday, September 19, 2018

உணவே மருந்து! கம்பு 3 உணவு வகைகள் சில!

தினம் போட முடியாட்டியும் வாரம் 2,3 பதிவாவது போட நினைச்சு ஆனால் முடியறதில்லை. சில நேரம் மற்றப்பதிவுகள் படிப்பதிலும் பதில் சொல்வதிலும் சென்றால் மற்ற நேரம் மற்ற வேலைகள்! இத்தனைக்கும் மதியம் குறைந்தது 3 மணி நேரமாவது தொடர்ந்து இணையத்தில் அமர்கிறேன். அதில் இடைவெளி அரைமணி போக மற்றபடி நான்கு, நான்கரை மணி வரை இருப்பேன். ஆனாலும் சில சமயங்களில் எதுவும் எழுத முடியறதில்லை. கவனத்துடன் எழுத வேண்டிய பதிவுகளை அதற்குரிய கவனத்துடன் பதியணுமே!

இப்போ உணவே மருந்து வகைகளில் சிறுதானிய உணவுக் குறிப்புகள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதில் கம்பில் செய்யப்படும் உணவுவகைகளில் கம்பு அடை, கம்பு தோசை, இட்லி போன்றவற்றை ஏற்கெனவே பார்த்து விட்டோம். இப்போப் பார்க்கப் போவது கம்பில் சோறு. இதற்கு நன்கு உலர்ந்த கம்பை நன்கு கழுவிக் கொண்டு நீரை வடிகட்டி அந்த மிச்ச நீரிலேயே சிறிது நேரம் ஊற வைக்கவும். அரை மணி ஊறிய பின்னர் கம்பைக் குத்திப் புடைக்கணும். மர உரல் அல்லது கல்லுரலில் முன்னெல்லாம் குத்திப் புடைப்பார்கள். இப்போவெல்லாம் குத்திப் புடைப்பது என்றாலே என்னவென்று தெரியாது; புரியாது. ஆகவே கம்பை மிக்சி ஜாரில் போட்டு நன்கு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். ஒதுங்கும் தூசி போன்ற தவிட்டை முறத்தில் போட்டுத் தட்டி எடுத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் நாலு கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். உப்பைச் சேர்க்கவும்.

சுத்தம் செய்து வைத்த கம்பைக் கொட்டிக்கிளறவும். ஒரு சிலர் இதோடு அரிசியும் ஒரு கைப்பிடி சேர்க்கின்றனர். புழுங்கல் அரிசி தான் சேர்க்க வேண்டும். ஒரு சிலர் சமைத்த சாதத்தை இதோடு சேர்த்துக் கலந்து வைக்கின்றனர். இந்தக் கம்பை அடுப்பில் கொதிக்கும் நீரில் கொட்டிக் கிளறி விட்டால் சிறிது நேரத்தில் நன்கு வெந்து விடும். இம்மாதிரிக் கம்புச் சோறை முதல்நாளே தயார் செய்து கொண்டு வைக்கவும். மறுநாள் அதில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுத் தயிரை விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வெங்காயம் பிடிக்காது எனில் ஏதேனும் துவையலும் அரைத்துக் கொள்ளலாம். தேங்காய்த் துருவலோடு மிளகாய் வற்றல், துவரம்பருப்பு வறுத்து உப்பு, புளி, பெருங்காயத்தோடு சேர்த்து அரைத்துத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். ஒரு சிலர் துவரம்பருப்புக்குப் பதிலாகக் கொள்ளு வைத்துச் சேர்த்து அரைக்கின்றனர். அவரவருக்கு ஒத்துக்கொள்ளுவதைப் பொறுத்து வைத்து அரைத்து உண்ணலாம். அல்லது வெங்காயத் துவையல், பீர்க்கங்காய், பறங்கிக்காய்த் துவையல் போன்றவையும் நன்றாக இருக்கும்.

அடுத்துக் கம்பங்கூழ். இதற்கும் முன் சொன்னாப்போல் கம்பைச் சுத்தம் செய்து கொரகொரவென அரைக்காமல் கொஞ்சம் நைசாக அரைத்துக் கொள்ளவும். ரொம்பக் கொரகொரப்பாக இருந்தால் சல்லடையில் சலித்துக் கொள்ளலாம். இந்த மாவு ஒரு கிண்ணம் எனில் அதோடு இரண்டு கிண்ணம் தண்ணீரும் தேவையான உப்பும் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். கம்பங்கூழ் தயாரிப்பதற்கு முதல்நாளே இந்த மாவுக்கலவையைக் கலந்து வைக்கலாம். ஏனெனில் கொஞ்சம் புளிப்பு வந்தால் தான் நன்றாக இருக்கும். அடுத்த நாள் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி மேற்சொன்ன அளவுக் கம்பு மாவுக்கு ஒரு கரண்டி எடுத்துக் கொண்டு களைந்து மிக்சி ஜாரில் போட்டு உப்புமா ரவை போல் பொடிக்கவும். இதை முதலில் கொதிக்கும் வெந்நீரில் போட்டுக் கரைய விடவும். இது வெந்தபின்னர் முதல் நாளே கரைத்து வைத்த மாவை மெதுவாக ஊற்றிக்கொண்டே இன்னொரு கையால் கிளறவும். இதையும் ஒரு நாள் வைத்து விட்டு மறுநாள் தயிரோ, மோரோ ஊற்றிக் கொண்டு ஊறுகாய் அல்லது சின்னவெங்காயம் அல்லது மாங்காய் ஊறுகாய் அல்லது மாங்காய்த் தொக்கு போன்றவற்றோடு குடிக்கலாம். ரொம்ப நீர்க்க இருக்காது. கொஞ்சம் கெட்டியாகவே இருக்கும்.

Tuesday, September 4, 2018

உணவே மருந்து! கம்பு! 2 கம்பில் அடை!













கம்பு அடை!

தேவையான பொருட்கள்

கம்பு ஒரு கிண்ணம்

இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்

துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.

4  மி.வத்தல்+பச்சை மிளகாய் 2

உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான்  ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்..  காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவுக்கான உணவு தயார். எந்தச் சிறு தானியம் போட்டாலும் கொஞ்சம் போல் இட்லிப் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் சேர்த்தால் செய்வதற்கு எளிது.

இதே போல் கம்பில் தோசையும் வார்க்கலாம்.

கம்பு+புழுங்கல் அரிசி+பச்சரிசி  இரண்டு பங்கு கம்புக்கு புழுங்கலரிசியும், பச்சரிசியுமாய்க் கலந்து ஒரு பங்கு. முக்கால் கிண்ணம் உளுத்தம்பருப்பு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம். கம்பைத் தனியாக ஊற வைக்க வேண்டும். புழுங்கலரிசி+பச்சரிசியை ஒன்றாக ஊற வைத்துக் கொண்டு வெந்தயத்தையும் உளுத்தம்பருப்பையும் சேர்த்து ஊற வைக்கவேண்டும். கம்பை முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் அரிசிகளைச் சேர்த்து அரைக்க வேண்டும். நல்ல நைஸாகவே அரைக்கலாம். பின்னர் உளுத்தம்பருப்பு+வெந்தயம்  போட்டதை அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கூ அரைப்பது போல் உளுத்தம்பருப்பை அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்புப் போட்டுக் கரைத்து வைத்துப் புளிக்க விட வேண்டும். இட்லி அல்லது தோசை எது வேண்டுமானாலும் செய்யலாம். சட்னி, சாம்பார், கொத்சு என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.



Tuesday, August 28, 2018

உணவே மருந்து! கம்பு!

Image result for கம்பு பயன்கள்கம்பு!

சிறு தானியங்களில் முதல் இடம் கம்புக்குத் தான். ஆனாலும் இது ஆஃப்ரிக்காவில் இருந்து வந்தது எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இப்போது சுமார் 40 நாடுகள் கம்பைப் பயிரிடுவதாய்க் கூறுகின்றனர். மானாவாரியாகவும் விளையும் கம்பு நீர்ப் பாசனத்திலும் விளையும். என்றாலும் பெரும்பாலும் புஞ்சை நிலப் பயிர்தான்!  இந்தியாவில் அதிகம் பயிரிடும் உணவுப் பொருட்களில் கம்புக்கு முக்கிய இடம் உண்டு. வட மாநிலங்களில் Baபாஜ்ரா என அழைக்கப்படும் கம்பு. இந்த Baபாஜ்ரா மாவில் ரொட்டி செய்து பச்சை மிளகாயை எலுமிச்சைச் சாறில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற வைத்து எண்ணெயில் வதக்கித் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கம்பு மாவோடு கோதுமை மாவும் சேர்த்துக்கொண்டு மிளகாய்ப் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியோடு கசூரி மேதி எனப்படும் உலர்ந்த வெந்தயக்கீரையைச் சேர்த்துச் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடுவார்கள்.  பூரியை மொறுமொறுவென எடுத்தால் சில நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.

கம்பில் தான் அதிக அளவு புரோட்டீன் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது. தோலுக்கும் நன்மை பயக்கும் என்கின்றனர். கண்பார்வைக்கு முக்கியமான  பீட்டா கரோட்டின் கம்பில் அதிக அளவு இருப்பதால் வைடமின் ஏ நிறைய இருக்கிறது.  இதைத் தவிரவும் கால்சியம், இரும்பு, ரிபோஃப்ளேவின், நயாசின், வைடமின்கள் ஆகியவை அடங்கியது கம்பு.  எண்ணெய்ச் சத்து இருப்பதால் உடலுக்கு உகந்த நல்ல கொழுப்புக் கிடைக்கும் என்பதோடு உடல் சதையைக் குறைத்து உடலை இளைக்க வைக்கும். இந்தக் கம்பு இந்தியா வந்து சுமார் 2000 வருடங்களுக்கும் மேல் இருக்கலாம் என நம்பப்படுகிறது.  அதிகமான தட்ப, வெப்பத்தையும் பொறுத்துக்கொள்ளும் கம்புப் பயிர் வறட்சியான நிலங்களிலும் வளரும் இயல்பு கொண்டது.  நிலத்தில் ஊட்டச் சத்துக் குறைவாக இருந்தாலும் கம்பு நன்றாகவே வளரும் இயல்பு கொண்டது.

கம்பை அறுவடை செய்ததும் நன்கு உலர வைப்பார்கள். இது 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வரும். அப்படியும் மிகுதி இருக்கும் தானியத்தை மீண்டும் உலர வைத்துப் பயன்படுத்தலாம். விரைவில் வீணாகாது. நொச்சி இலைகளைக் காய வைத்துக் கம்போடு கலந்து வைத்தாலும் பூச்சிகள் தாக்காது. (நான் எல்லாவற்றிலும் வசம்பு போட்டு வைத்திருக்கேன்.)  கம்பின் தொன்று தொட்டுச் செய்து வருவது கம்புச் சோறு ஆகும். இது விரைவில் வீணாகாது. கம்பில் கூழும் செய்யலாம். கம்பை ஊற வைத்த நீரும் உடலுக்கு நன்மை பயக்கும். உடல் உஷ்ணம் அடைவதைக்குறைத்து வயிற்றுப் புண், மலச் சிக்கல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. இனி கம்பில் செய்யும் உணவு வகைகளைப் பார்க்கலாம். 

Sunday, August 26, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 6

கேழ்வரகை முளைக்கட்டிப் பின் வறுத்து மாவாக்கி வைத்துக் கொண்டால் தேவையான சமயத்துக்கு மாவில் பல்வேறு உணவுகள் செய்யலாம். கோதுமை மாவும் கேழ்வரகு மாவும் சம அளவில் கலந்து சப்பாத்தி செய்யலாம். கேழ்வரகு மாவை நன்கு வறுத்துக் கொண்டு அதோடு சம அளவு அல்லது கொஞ்சம் கூடுதலாக வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்துக் கொண்டு ஏலக்காய், முந்திரிப் பருப்புப் போட்டு நெய்யைக் காய்ச்சி ஊற்றி (இதுக்குக் கொஞ்சம் நெய் போதும்.) உருண்டை பிடிக்கலாம். சர்க்கரையும் சேர்த்து உருண்டை பிடிக்கலாம். ஆனாலும் வெல்லம் உடலுக்கு நல்லது!

 ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவை வறுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரைக்கிண்ணம் தூளாக்கிய பாகு வெல்லத்தை அடுப்பில் வைத்து நீர் சேர்த்துப் பாகு காய்ச்ச வேண்டும். மாவில் ஏலக்காய்த் தூள் சேர்த்துக்கலந்து வைக்கவும். பின்னர் பாகை உருட்டும் பதமாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஜலம் வைத்துக் கொண்டு பாகை அதில் ஊற்றிப் பார்த்தால் உருண்டையாக வர வேண்டும்.   பின்னர் பாகை மாவில் ஊற்றிக் கிளறித் தேவையானால் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம். இல்லை எனில் அப்படியே அதிரசமாகத் தட்டியோ, எண்ணெய் வைத்து அப்பமாகப் பொரித்தோ எடுக்கலாம். குழி ஆப்பச் சட்டியில் கூட எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொண்டு இந்த மாவை ஊற்றி அப்பமாக எடுக்கலாம்.

இந்த வறுத்த ராகி மாவையே உப்புமாவுக்குத் தாளிக்கிறாப்போல் தாளித்து நீர் ஊற்றி, உப்பு, தே,துருவல் சேர்த்துக் கிளறி உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து உப்புமாக் கொழுக்கட்டையாகச் செய்யலாம். வெல்லம்போட்டு வெல்லக் கொழுக்கட்டையாகவும் செய்யலாம்.  இந்த மாவோடு வெள்ளை ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு சம அளவில் சேர்த்து, மிக்சி ஜாரில் மி.வத்தல், பச்சைமிளகாய், இஞ்சி உப்பு சேர்த்து அடித்து மாவில் போட்டுப் பிசைய வேண்டும். பெருங்காயமும் சேர்க்கலாம். பின்னர் கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கிச் சேர்த்து வெங்காயம் ,அல்லது முட்டைக்கோஸ் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். மாவில் வெங்காயம், முட்டைக்கோஸ் நன்கு கலக்கும் வரை பிசைந்து கொண்டு ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி சின்னச் சின்ன அடைகளாகத் தட்ட வேண்டும். அதை தோசைக்கல்லைக் காய வைத்து எண்ணெய் தடவி அந்த தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் திருப்பிப் போட்டு மறு பக்கமும் வேக விட வேண்டும். இரு பக்கமும் வெந்ததும் வத்தல் குழம்போடு சாப்பிட அருமையாக இருக்கும்.  இதே மாவில் முருங்கைக்கீரை அல்லது வெந்தயக் கீரை அல்லது வேறு கீரை ஏதேனும் போட்டும் அடைகளாகத் தட்டலாம்.

கேழ்வரகைப் பால் எடுத்துக் கொண்டு கோதுமை அல்வா போலும் கிளறலாம். அந்த மாவைக் கிளறி உப்பு, எலுமிச்சம்பழம் பிழிந்து, பச்சைமிளகாய்+உப்பு+பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கலந்து வடாம்களாகப் பிழியலாம். ஓமப்பொடி அச்சிலோ அல்லது கட்டைக் கருவடாம்களாகவோ பிழியலாம். சிலர் இந்த மாவில் பிஸ்கட்டுகளும் செய்கின்றனர். நான் அதிகம் கேழ்வரகு பிஸ்கட் செய்தது இல்லை. ஆனால் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்.  ராகி மாவில் உளுந்து அரைத்துப் போட்டுக் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து உப்புப் போட்டுக் கரைத்து தோசைகளாகவும் வார்க்கலாம். ராகி மாவு+அரிசி மாவு மட்டும் போட்டும் தோசை வார்க்கலாம். வெல்லம் போட்டு வெல்ல தோசையும் பண்ணலாம். மொத்தத்தில் ராகி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது. வாரம் ஒரு முறையாவது சேர்த்தால் நல்லது.

Tuesday, August 21, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 5

இன்னிக்குப் பார்க்கப் போறது கேழ்வரகுக் கஞ்சி போடுவதற்கு மாவு தயாரிக்கும் முறை. இது சின்னக் குழந்தைகள் முதல் பெரியவங்க வரை சாப்பிடலாம். எனினும் வளரும் குழந்தைகளுக்கு முதல் திட உணவாக இதைக் கொடுத்தால் குழந்தைக்கு எல்லாவிதச் சத்துகளும் நிறைவாக சரியான முறையில் கிடைக்கும். தேவையான பொருட்களை இப்போது பார்க்கலாம்.

கேழ்வரகு ஒரு கிலோ! களைந்து கல்லரித்து நீரில் ஊறப்போடவும்.  எப்போதும் போல் நீரை அடிக்கடி மாற்றவும். ஒரு நாள் முழுதும் ஊறியதும் மறுநாள் நீரை வடிகட்டிக் கொண்டு வெள்ளைத் துணியில் போட்டு முடிச்சுக் கட்டி முளைக்கட்ட வைக்கவும். ஒரு நாள் முழுவதும் துணியிலேயே கட்டப்பட்டு இருந்தால் நன்றாக முளை வந்துவிடும்.

மேலே சொன்ன அளவு கேழ்வரகுக்குத் தேவையான மற்ற சாமான்கள்

புழுங்கல் அரிசி அரைக்கிலோ

கோதுமை  அரைக்கிலோ

பாசிப்பருப்பு அரைக்கிலோ

வேர்க்கடலை கால் கிலோ

பொட்டுக்கடலை அரை கிலோ

பாதாம் 50 கிராமிலிருந்து 100க்குள் அவரவர் வாங்கும் வசதிக்கு ஏற்ப

முந்திரிப்பருப்பு அதே போல் 50 கிராமிலிருந்து 100க்குள்

ஓமம் கால் கிலோ ஓமத்தில் கல் இருக்கலாம். ஆகவே களைந்து கல்லரித்து வடிகட்டிச் சூடான வாணலியில் உடனே போட்டு வறுத்தால் வறுபடும்.

கேழ்வரகு முளை வந்தவுடன் துணியிலிருந்து எடுத்து வெறும் வாணலியில் (இரும்பு வாணலி நலம்) வறுத்து எடுக்கவும். பின்னர் வரிசையாக மேற்சொன்ன சாமான்களையும் வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.  எல்லாவற்றையும் சேர்த்து ஒரு துணிப்பை அல்லது தூக்கில் போட்டு மிஷினில் கொடுத்து ரொம்ப நைஸாக இல்லாமல் அதே சமயம் ரவையாகவும் இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பான மாவாக அரைக்கவும்.

சின்னக் குழந்தைகளுக்கு இந்த மாவில் இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணம் கொதிக்க வைத்து ஆறிய வெந்நீரில் கலந்து பின்னர்  ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். கஞ்சியாகக் கொடுப்பதெனில் கொஞ்சம் நீர்க்கவே இருக்கட்டும். நீர் அதிகம் சேர்க்கலாம். கஞ்சி வேண்டாமெனில் கொஞ்சம் நீர் குறைத்துச் சேர்த்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரையோ, உப்போ தேவைக்கு ஏற்பச் சேர்க்கலாம். ஓமம் போட்டிருப்பதால் சர்க்கரை போடலாமா கூடாதா என யோசிக்க வேண்டாம். ஓமம் குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுவை நீக்கும். நேரடியாக ஓமத் தண்ணீர் கொடுத்தால் பல குழந்தைகளும் சாப்பிடாது என்பதால் உணவில் சேர்க்கலாம்.

இந்த மாவையே களி போலவும் கிளறலாம். ஒரு கிண்ணம் மாவுக்கு ஒன்றரைக்கிண்ணம் நீர் விட்டுக் கொதிக்க வைத்து உப்புச் சேர்த்துக் களியாகக் கிளறலாம். இதற்கு அநேகமாய் பாகற்காய் கொஜ்ஜு தான் தொட்டுப்பாங்க. அவரவர் விருப்பம் போல் பண்ணிக்கலாம். வத்தக்குழம்பு கூட நன்றாக இருக்கும்.

இந்த மாவிலேயே சப்பாத்தி, பூரி போன்றவையும் செய்யலாம். மாவு பிசையும்போதே அதில் கீரை வகைகள் அல்லது முட்டைக்கோஸ் துருவியது, காரட் துருவியது, முள்ளங்கி துருவியது என ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொண்டு மி.பொடி, மஞ்சள் பொடி,பெருங்காயப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு உப்புச் சேர்த்துப் பிசைந்து கொண்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்த மாவை அதில் புரட்டிச் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் சப்பாத்திகளாகவோ, ஃபுல்கா ரொட்டிகளாகவோ, பரோட்டாவாகவோ செய்யலாம். சப்பாத்திக்குச் செய்யும் சைட் டிஷ் எதுவானாலும் இதனுடன் ஒத்துப் போகும்.  இந்த மாவு தற்சமயம் கைவசம் இல்லை. ஆதலால் ரொட்டி செய்ய முடியவில்லை. ஆனால் ஆஷிர்வாத் ஆட்டாவில் இப்படி ஒரு மாவு எல்லா சிறுதானியங்களும் கலந்தது எனச் சொல்லி விற்கின்றனர். வாங்கிப் பார்க்கவில்லை. 

Sunday, August 19, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 4


படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக Amazon.in

Image result for ராகிமால்ட்


பொதுவாக இது கடைகளில் கிடைக்கிறது. அறுபதுகளில் ரகோடின் என்னும் பெயருடன் வந்து கொண்டிருந்தது. அதன் சுவை தனியாக இருக்கும். இப்போ அந்தப் பெயரிலோ அந்தச் சுவையிலோ வருவதில்லை. எனினும் இதை நாம் வீட்டில் தயாரிக்கலாம். வெறும் கேழ்வரகு மட்டும் போட்டு ராகி மால்ட் தயாரிக்கப்படும் விதம் பற்றி இப்போது பார்ப்போம். இதைக் கேழ்வரகை முளைக்கட்டிக் கொண்டு தான் செய்வார்கள். எனினும் ஒரு சிலர் கேழ்வரகுப் பாலிலும் செய்வது உண்டு.

முதலில் கேழ்வரகு ஒரு கிலோ

இதற்குத் தேவையான சர்க்கரை ஒரு கிலோ /சாதாரணமாக இந்த அளவுச் சர்க்கரை போதும். தித்திப்பு அதிகம் வேண்டுமெனில் பாலில் கலக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

உணவு நிறம் ஆரஞ்சு அல்லது கேசரிப்பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது சின்னப் பாக்கெட் ஒன்று

வீட்டில் தயாரிப்பதால் ஏலக்காய், பச்சைக்கற்புரம் பொடித்தது ஒரு டேபிள் ஸ்பூன். சுமார் பத்து கிராம் ஏலக்காயுடன் ஒரு துண்டு பச்சைக்கற்பூரம் போதும்.

ஜாதி பத்திரி பத்து கிராம். ஏலக்காயுடன் சேர்த்துப் பொடி செய்து கொள்ளவும்.

கேழ்வரகை நன்கு களைந்து கல்லரித்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் நீரில் ஊற வைக்கவும். அடிக்கடி நீரை மாற்ற வேண்டும். இல்லை எனில் ஒரு வாசனை வரும். இது முளைக்கட்டும் எந்த தானியத்துக்கும் பொருந்தும். இரவில் நீருடனேயே கேழ்வரகை வைக்கவும். மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டிவிட்டு மீண்டும் களைந்து கொண்டு ஒரு வெள்ளைத் துணியில் கொட்டி அதை நன்கு கட்டி வைக்கவும். ஒரு நாள் முழுவதும் இப்படி வைக்கவும். கேழ்வரகில் மிகுந்திருக்கும் நீரெல்லாம் அந்தத் துணி வழியாக வெளியேறிவிடும். உள்ளே கேழ்வரகு நன்கு முளை வந்து விடும். மறுநாள் அந்தக் கேழ்வரகு முடிச்சைத் திறந்து பார்த்தால் நன்கு முளை வந்திருக்கும். ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டிக் காய வைக்கவும்.

பின்னர் மாவு மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கேழ்வரகு மாவை மஸ்லின் போன்ற மெல்லிய வெள்ளைத்துணியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுச் சலிக்கவும். இதை வஸ்த்ராயனம் செய்வது என்பார்கள். கேழ்வரகின் மாவு மட்டும் கீழே உள்ள பாத்திரத்தில் போய் விழும். மற்றவை முக்கியமாய்க் கேழ்வரகின் கருமை நிறம் எல்லாம் நாம் சலிக்கும் துணியில் தங்கி விடும். மாவு எவ்வளவு உள்ளது என்பதை அளந்து கொள்ளவும். அதற்கேற்பச் சர்க்கரையைப்பொடி செய்து கேழ்வரகு மாவுடன் நன்கு கலக்கவும். கூடவே ஏலப்பொடி, பச்சைக்கற்பூரப் பொடி, ஜாதிபத்திரி, நிறம் கொடுக்கக் கேசரிப்பவுடர் ஆகியவற்றையும் நன்கு கலக்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கு கலந்த பின்னர் நல்ல காற்றுப் புகாத டப்பாவில் அல்லது பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு பால் காய்ச்சி அதில் தேவையான அளவுக்கு இந்தப் பவுடரைப் போட்டுக் கொண்டு குடிக்கலாம். சிறு குழந்தைகள் இதன் வாசனைக்காக விரும்பிச் சாப்பிடுவார்கள். பெரியவர்களும், முதியோர்களும் கூடக்குடிக்கலாம்.

Image result for ராகிமால்ட்

நன்றி கூகிளார்

அடுத்து கேழ்வரகுப் பால் எடுக்கும் முறையில் செய்வது. கேழ்வரகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். முன் சொன்ன மாதிரி அடிக்கடி நீரை மாற்றவும். ஓர் பகல் ஓர் இரவு முழுவதும் ஊறிய கேழ்வரகை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அல்லது கையால் அரைக்க முடிந்தால் அரைக்கலாம். அரைத்த  கேழ்வரகை ஓர் பாத்திரத்தை அடியில் வைத்து அதன் மேல் ஓர் சல்லடை அல்லது வெள்ளைத் துணியில் பிழிந்தால் பால் மட்டும் பாத்திரத்தில் போகும். இம்மாதிரி இரு முறை பால் எடுத்தால் போதுமானது. இந்தப் பாலை ஓர் பெரிய தாம்பாளத்தில் கொட்டி வெயிலில் காய வைக்கவேண்டும். நல்ல வெய்யில் இருக்க வேண்டும். வெய்யிலில் காய்ந்ததும் எடுத்தால் அதுவே பொடியாக வரும். இல்லை எனினும் மிக்சியில் போட்டுப் பொடித்துக் கொள்ளலாம். பின்னர் அளந்து கொண்டு சர்க்கரையை மேற்சொன்ன அளவில் சேர்த்து வாசனைச்சாமான்களையும் மேலே சொன்னமாதிரியில் கலந்து வைக்கலாம்.  இது கொஞ்சம் கடினமான முறை. ஆனால் வஸ்த்ராயனம் பண்ணுவதற்கும் எல்லோருக்கும் தெரிவதில்லை. ஆகவே யாருக்கு எப்படி வசதியோ அப்படிச் செய்து கொள்ளலாம். யாருங்க அங்கே, கடையில் வாங்கறது தான் வசதினு சொல்லறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

Wednesday, August 15, 2018

உணவே மருந்து! கேழ்வரகு! 3

கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள்

இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம்.

கேழ்வரகு மாவு ஒரு கிண்ணம்

சர்க்கரை ஒரு கிண்ணம், மிக்சியில் ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கவும்.

நெய் அரைக்கிண்ணம்,முந்திரிப்பருப்புநெய்யில் வறுத்தது ஒரு டேபிள் ஸ்பூன்

அரைக்கிண்ணம் நெய்யை ஓர் உருளி அல்லது கடாயில் சூடு செய்யவும். நெய்யிலிருந்து புகை வரலாம். அப்போது கேழ்வரகு மாவைப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே மாவை வறுக்கவும். பொடிக்கப்பட்ட சர்க்கரைப் பொடியைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். கைகளால் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். உடனே சாப்பிடலாம்.

வெல்லம்போட்டதும் இதே போல் தான். சர்க்கரைப் பொடிக்குப் பதிலாக வெல்லத்தைத் தூள் செய்து போட வேண்டும். வெல்லம் விரைவில் இளகிவிடும் என்பதால் பார்த்துச் சேர்க்க வேண்டும். மேற்சொன்ன ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவுக்கு முக்கால் கிண்ணம் வெல்லத்தூள் சரியாக இருக்கும். வெல்லம் தேவை இல்லை எனில் கருப்பட்டியிலும் செய்யலாம்.

கேழ்வரகு அப்பம்.

கேழ்வரகு மாவு  முக்கால் கிண்ணம், அரிசி மாவு கால் கிண்ணம், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்.
அரைக்கிண்ணம் வெல்லம் தூள் செய்தது நீரில் கரைக்க வேண்டும்

ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

பொரிக்க நல்லெண்ணெயும் நெய்யுமாகக் கலந்து ஒரு சின்னக் கிண்ணம். அல்லது குழி ஆப்பச் சட்டியில் ஊற்றியும் எடுக்கலாம்.

கேழ்வரகு மாவு+அரிசி மாவு+ ஒருசிட்டிகை உப்பு நன்கு கலக்கவும். தேங்காய்த் துருவலையும் போட்டுக் கலக்கவும். பின்னர் நீரில் கரைத்த வெல்ல நீரை விட்டுக் கலக்கவும்.மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். எண்ணெயும், நெய்யுமாகக் காய வைத்து சின்னக் கரண்டியால் மாவை எண்ணெய் காய்ந்ததும் எடுத்து ஊற்ற வேண்டும். உப்பிக் கொண்டு வரும். பின்னர் திருப்பிப் போட்டுவேக வைக்கலாம்.

குழி ஆப்பச் சட்டியில் ஊற்றுவது எனில் குழி ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றிக் கொண்டு எண்ணெயை அதில் எல்லாக் குழிகளிலும் இரண்டு டீஸ்பூன் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து எல்லாக் குழிகளிலும் ஊற்றவும். வெந்ததும் தானே மேலே மிதந்து வரும். அப்போது சின்ன இரும்புக் குச்சியால் திருப்பி விடவும். திருப்பிப் போட்டு வெந்ததும் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

கேழ்வரகு அடை!

கேழ்வரகு மாவு முக்கால் கிண்ணம்+கோதுமை மாவு கால் கிண்ணம்+அரிசிமாவு கால் கிண்ணம்.

இஞ்சி பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயம் சேர்த்து மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.

வெங்காயம்(தேவையானால்) பொடியாக நறுக்கவும். அல்லது ஏதேனும் கீரை வகைகள் கூடப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது

கலக்கத் தேவையான நீர், தேவைக்கு உப்பு

வார்த்து எடுக்க சமையல் எண்ணெய்

மேற்சொன்ன மாவுகளைத் தேவையான உப்புச் சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் அல்லது எந்தக்  கீரை வகைகளையும் சேர்க்கவும்.மிக்சியில் அடித்த காரத்தைக் கலந்த மாவோடு சேர்க்கவும். அரைக் கிண்ணம் நீர் விட்டுப் பிசையவும். மாவு நன்கு பிசைந்தாற்போல் சப்பாத்தி மாவு போல் இருக்கலாம். தோசைக்கல்லை அடுப்பில் காய வைக்கவும். காய்ந்த தோசைக்கல்லில் வாழை இலையால் எண்ணெயைப் பரப்பவும்.  ஓர் இலையில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கால் அங்குல கனத்தில் அடையாகத் தட்டி அதை வாழை இலையோடு சேர்த்து தோசைக்கல் நடுவில் போடவும். வாழை இலையை மெதுவாகப் பிரித்து எடுக்கவும். அடை நடுவில் ஓட்டை போட்டு தேவை எனில் ஓரங்களிலும் ஓட்டை போட்டு எண்ணெய் விடவும். அடை நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.

நெய், வெண்ணெய், வத்தக்குழம்பு,வெல்லம் ஆகியவற்றோடும் கொத்துமல்லிச் சட்னியோடும் இந்த அடை நன்றாக இருக்கும்.

படங்கள் இணையத்திலிருந்தே எடுக்க வேண்டாம் என்பதால் இணைக்கவில்லை. விரைவில் செய்து விட்டுப் படம் எடுத்துப் போடுகிறேன். 

Sunday, August 12, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 2

Image result for கேழ்வரகு தோசை

இப்போக் கேழ்வரகில் செய்யும் சில உணவு வகைகளைப் பார்ப்போம். கேழ்வரகை ஊற வைத்துக் கல் அரித்து முளைக்கட்டி மாவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தோசை வார்க்கலாம்.முதலில் கேழ்வரகு மாவு கரைத்துச் செய்யும் முறை!

கேழ்வரகு மாவு ஒன்றரை கிண்ணம்

அரிசி மாவு   ஒரு கிண்ணம்

வறுத்து அரைத்த உளுந்து மாவு கால் கிண்ணம்

மோர் ஒரு கிண்ணம், உப்பு தேவைக்கு. ஜீரகம்

தாளிக்க எண்ணெய் மற்றும் கடுகு, பச்சைமிளகாய், கருகப்பிலை,

தோசை வார்க்க எண்ணெய் கால் கிண்ணம்

மூன்றையும் புளித்த மோரில் கலக்கவேண்டும்.  உப்புச் சேர்த்துக் கொண்டு தேவையானால் மாவின்  தோசையாக ஊற்றும் பதத்துக்கு ஏற்றபடி நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இட்லி மாவு பதத்தை விடக் கொஞ்சம் நீர்க்க இருக்கலாம். மாவைக் கரண்டியால் எடுத்து தோசைக்கல்லில் வீசி ஊற்றும் பதத்துக்கு இருக்க வேண்டும். மாவு கரைத்த பின்னர் எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய், கருகப்பிலை தாளிக்கவும். பிடித்தால் இஞ்சி, கொத்துமல்லி, சின்னவெங்காயம் அல்லது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கலாம்.

தோசைக்கல்லைச் சூடாக்கிக் கொண்டு எண்ணெய் தடவி மாவை முன்சொன்னமாதிரி கரண்டியில் எடுத்து வீசி ஊற்றி வட்டமாக்க வேண்டும். பின்னர் எண்ணெயை ஊற்றி வேக விட்டு ஒரு பக்கம் வெந்ததும் மெதுவாக எடுத்து மறுபக்கம் வேக விட வேண்டும். தேங்காய்ச் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னியுடன் சாப்பிடலாம்.
Image result for கேழ்வரகு தோசை
மேலே சொன்ன அளவில் மாவு எடுத்துக் கொண்டு அதில் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்துக் கொண்டு ஏலப்பொடி போட்டு நன்கு கலந்து  நல்லெண்ணெயும், நெய்யும் கலந்து வெல்லத் தோசைகளாகவும் வார்க்கலாம். சிறு குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

உளுந்து அரைத்துப் போட்டு வார்க்கும் கேழ்வரகு தோசை

கேழ்வரகு மாவு மட்டும்  2 கிண்ணம், உப்பு தேவைக்கு

அரைக்கிண்ணம் உளுந்து ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் மாவைத் தளதளவென இட்லிக்கு அரைக்கும் பதத்தில் அரைக்கவும். அதில் கேழ்வரகு மாவைப் போட்டுக் கலந்து வைக்கவும். எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் இட்லித் தட்டில் துணி போட்டு அல்லது ப்ரீத் தட்டு பழக்கம் எனில் அதில் எண்ணெய் தடவி இட்லிகளாக வார்க்கலாம். இல்லை எனில் தோசைக்கல்லைக் காய வைத்து தோசைகளாகவும் வார்க்கலாம். இதோடு சாம்பார், சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.
Image result for கேழ்வரகு தோசை
மேலே சொன்ன மாவில் சின்னவெங்காய்ம், பச்சைமிளகாய், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது. இஞ்சி கருகப்பிலை எல்லாவற்றையும் போட்டுக் கலந்து குழி அப்பச் சட்டியில் எண்ணெய் ஊற்றி மாவை விட்டு மொறுமொறுவென வேக விட்டு எடுத்தால் கேழ்வரகுக் குழி ஆப்பம். இத்தோடு வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி நல்ல துணையாக இருக்கும்.



படங்களுக்கு நன்றி கூகிளார்!

Friday, August 10, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 1

அடுத்து என்ன எழுதுவது என யோசிக்கையில் எங்கள் ப்ளாகில் நெல்லைத் தமிழர் சிறுதானியம் சாப்பிடுவதற்குப் போட்டிருந்த கருத்து என்னை யோசிக்க வைத்தது. பலரும் சிறு தானியங்களை அன்னியமாகவே நினைக்கின்றனர்.அவை நம் நாட்டு தானியங்களே! ஆதி காலத்தில் மனிதன் அதிகம் சாப்பிட்டு வந்தது சிறுதானியங்களே ஆகும். அதுவும் மழை அதிகம் பெய்யாத வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம் போன்ற ஊர்களில் உள்ள மக்கள் அதிகம் சிறுதானியங்களே சாப்பிட்டிருக்கின்றனர். இன்னமும் சாப்பிடுகின்றனர். முன்னெல்லாம் விவசாய வேலை செய்யும் கூலிகள், பெரும்பாலான விவசாயிகள் அரிசி விளைவித்தாலும் அவர்கள் வீடுகளில் சிறுதானியங்களே சமைத்துச் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அரிசிச் சோறு என்பது என்றோ ஓர் நாள் விசேஷ தினங்களில் சாப்பிடும் ஒன்றாக அவர்களுக்கு இருந்து வந்தது. அரிசிச் சோறு சிலரின் கனவாகக் கூட இருந்திருக்கிறது. இதை ஓர் திரைப்படப் பாடல் மூலமும் அறிகிறோம்.

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு!
நெய் மணக்கும் கத்திரிக்காய்!" எனக் கதாநாயகி கனவு காண்கின்றாள். இதிலிருந்து நெல்லுச் சோறு என்பது எல்லோரும் எப்போதும் சாப்பிட்டு வந்ததில்லை எனத் தெளிவாகிறது.

வட மாநிலங்களிலும் சோளம் முக்கிய உணவாக இருந்து வருகிறது. சோளம், கம்பு ஆகியவற்றில் அவர்கள் ரொட்டி செய்து உண்பார்கள்.  என் சிறு வயதில் அரிசிச் சோறு ஒரு வேளை தான் சாப்பிட்டு வந்திருக்கோம்.  அம்மா அதிகம் கேழ்வரகு சமைப்பார். அதிலேயே சப்பாத்தி, பூரி, களி, உப்புமா, தோசை, அடை, கூழ் போன்றவை செய்திருக்கார். கேழ்வரகை ஊற வைத்து முளைக்கட்டிப் பின்னர் அதை வெயிலில் உலர்த்தி அல்லது இரும்புச் சட்டியில் வறுத்துப் பொடியாக்கி அதை வஸ்த்ராயனம் செய்து ராகி மால்ட் என்னும் பாலில் போட்டுச் சாப்பிடும் பொடி தயாரிப்பார்.  கடைகளில் ரகோடின் என்னும் பெயரில் விற்கும் பவுடரை விட இது நன்றாகவே இருக்கும்.  சிறு குழந்தைகளுக்கும் முதல் திட உணவாகக் கேழ்வரகுக் கூழ் கொடுப்பது உண்டு. ஒவ்வொன்றாகப் பார்க்கும் முன்னர் கேழ்வரகின் வரலாறை அறிவோம்.

விக்கிபீடியாவின் துணையுடன்!

கேழ்வரகு நம் நாட்டில் நாலாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உண்ணப்படுவதாகச் சொல்கிறது விக்கி பீடியா! இந்தியாவில் இருந்தே மற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கலாம் எனச் சிலரும் தென்னிந்தியா தான் இதன் பிறப்பிடம் எனவும் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கலாம் எனவும் சொல்கின்றனர்.  எப்படியாயினும் இது வெப்பமண்டல, மித வெப்ப மண்டலப் பயிர் என்பதால் இந்தியாவில் பயிராக்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம் அதிக அளவில் ராகி பயிரிடுவதில் முன்னணி வகிக்கின்றன. ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய  மாநிலங்களிலும் ஓரளவு பயிராகிறது. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பயிராகிறது. இலங்கையில் இதை குரக்கன் என அழைக்கின்றனர்.

கேழ்வரகு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.  கேழ்வரகை அதிகம் சாப்பிட்டால் பசி உணர்வு கட்டுப்படுவதோடு எடையும் அதிகரிக்காது. சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்து உடலில் நைட்ரஜன் நிலையைச் சமன்படுத்துகிறது. குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே கொடுத்து வந்தால் எலும்புகள் பலம் பெறும். வயதானவர்களுக்கும் இது ஓர் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு என்பதோடு எலும்புகள் வலுப்பெறும். கல்லீரல் கொழுப்பை அகற்றி உடலில் கொழுப்பின் அளவைச் சமன் செய்யும். ரத்த சோகைக்கு நல்ல உணவு. இதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால்  ரத்த விருத்திக்கு நல்லது. அதிகமாக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் கேழ்வரகைத் தொடர்ந்து உண்பதின் மூலம் உஷ்ணம் சமன்படும். ஆஸ்த்மா, கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கும் புதிதாகப் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரக்கவும் இது நல்லதொரு உணவாகப் பயன்படும்.

Image result for கேழ்வரகு பயன்கள்