எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, November 19, 2013

பசிக்குதா, சாப்பிட வாங்க!

இப்போ சொல்லப் போறது ரொம்ப எளிமையான ஒரு சமையல் குறிப்பு. இதுக்கு நீங்க மசாலாவெல்லாம் போட்டு அரைக்க வேண்டாம். காலம்பர சாதம் வைச்சால் சில சமயம் செலவே ஆகாமல் மிஞ்சிப் போகும். அது இருந்தாலே போதும்.  அல்லது வெளியே போயிட்டு வந்து அலுப்பா இருக்கா. சட்டுனு இதைப் பண்ணிடலாம். வெஜிடபிள் சாதம். வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்.  இது ஒண்ணும் வெஜ் பிரியாணியோ அல்லது புலவோ இல்லை. இதுக்குத் தேவையான காய்கள் ரொம்பவெல்லாம் வேண்டாம்.

நான்கு பேருக்குத் தேவையானது

இரண்டு கிண்ணம் சமைத்த அரிசிச் சாதம்

பீன்ஸ்   50 கிராம் அல்லது பத்துப் பதினைந்து

காரட் நடுத்தரமாக இரண்டு

பட்டாணி (பச்சை கிடைக்காவிட்டால் காய்ந்த பட்டாணியை முன் கூட்டியே ஊற வைக்கவும்.) பட்டாணி இல்லாவிட்டாலும் பாதகம் இல்லை.

தக்காளி பெரிது ஒன்று அல்லது நடுத்தரம் இரண்டு (வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துக் கொள்ளவும்.)

வெங்காயம் (தேவை என்றால். வெங்காயம் இல்லாமலும் பண்ணலாம்.) பெரிது ஒன்று.

லவங்கப்பட்டை ஒரு சின்னத் துண்டு

கிராம்பு இரண்டு

பெரிய ஏலக்காய் ஒன்று

மசாலா இலை ஒரு சின்னத் துண்டு

சோம்பு(விருப்பம் இருந்தால்)

ஜீரகம்

மிளகாய்த் தூள்  ஒரு டீஸ்பூன்அல்லது சாம்பார் பொடி இருந்தால் கூடப் போதும்

மிளகாய்த் தூள்போட்டால் தனியாத் தூள் ஒரு டீஸ்பூன் சேர்க்கணும்.

சர்க்கரை அரை டீஸ்பூன்

தாளிக்க, வதக்கப் போதுமான எண்ணெய்.  ஒரு சின்னக் குழிக்கரண்டி

கொத்துமல்லி ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் நான்கு

இஞ்சி ஒரு துண்டு

மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்

காய்களை நீளமாக ஒரு அங்குல அளவுக்கோ அல்லது துண்டமாகவோ நறுக்கவும்.  பச்சை மிளகாய், இஞ்சியையும் நறுக்கவும்.


அடி கனமான ஒரு வாயகன்ற பாத்திரம் எடுத்துக்கொண்டு எண்ணெயை அதில் ஊற்றிக் காயவிடவும்.  காய்ந்ததும் முதலில் அரை டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், வெங்காயம் போடுபவர்கள் வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கவும்.  பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்க்கவும்.  வெங்காயம் நன்கு வதங்கியதும் காய்களைச் சேர்த்து வதக்கவும்.  காய்கள் நன்கு வதங்க வேண்டும்.  மஞ்சள் பொடி, சாம்பார் பொடி அல்லது மிளகாய்ப் பொடி, தனியாப் பொடியைச் சேர்க்கவும்.  காயை நன்கு கலக்கவும்.  இப்போது தோலுரித்து வைத்திருக்கும் தக்காளியை நறுக்கிச் சேர்க்கவும்.  தேவையான உப்பைச் சேர்த்துச் சிறிது நேரம் மூடி வைத்து வதக்கவும்.  காய்கள் வெந்துவிட்டனவா என்று பார்க்கவும்.  காரட், பீன்ஸ் போன்றவை பச்சை வாசனை போகவும், பட்டாணி அமுங்கும்படியும் வெந்திருக்க வேண்டும்.  வெந்ததும் சிறிது நேரம் வதக்கி விட்டுத் தயாராக வைத்திருக்கும் சாதத்தை இதில் போட்டுக் கலக்கவும்.  நன்கு கலந்ததும் பச்சைக் கொத்துமல்லி போட்டு அலங்கரிக்கவும்.

உங்களுக்குப் பிடித்தமான பச்சடியுடன் சாப்பிடலாம்.  வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி போன்றவற்றோடு சாப்பிடலாம்.

இதையே ரைஸ் குக்கரிலோ அல்லதுகுக்கரிலோ வைப்பது என்றால் சாதத்தை முன் கூட்டித் தயாரிக்காமல்  ஒரு கிண்ணம் அரிசியைக் களைந்து காய்களைப் போட்டுச் சிறிது வதக்கியதுமே அரிசியையும் போட்டு வறுத்துக் கொண்டு. அரிசிக்குத் தேவையான தண்ணீரை மட்டுமே சேர்த்து ரைஸ் குக்கரிலோ, குக்கரிலோ வைக்கவும்.  வாயகன்ற பாத்திரத்தில் அப்படியே சமைப்பது எனில் நீங்கள் வைக்கும் பாத்திரத்திலே எல்லாவற்றையும் போட்டு வதக்கி, அரிசியையும் வறுத்துக் கொண்டு, பக்கத்திலே இன்னொரு பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்க விட்டு அரிசியை வறுத்ததும் சேர்க்கவேண்டும்.  உப்பைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு ஒரு மூடியால் மூட வேண்டும். மேலேயும் ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைக்கலாம்.  அடிக்கடி திறந்து பார்த்துக்கிளறவும்.

இதே சாதம் அரைத்துவிட்டுச் செய்வது:

வெங்காயம் சேர்த்தால் பாதியளவு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி பாதியை அரைக்கவும்.  காய்களை வதக்குகையில் இந்த அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.  பின்னர் அரிசியையோ, சாதத்தையோ சேர்க்கவும்.  சாதத்தைச் சேர்ப்பது எனில் காய்கள் நன்கு வேக வேண்டும்.  மசாலா சாமான்கள் தாளிக்கவில்லை எனில், கரம் மசாலாப் பொடியை இறக்கும்போது சேர்க்கலாம்.  

12 comments:

 1. சில சமயங்களில் இப்படிச் செய்வதுண்டு..... வீட்டிற்கு யாராவது நண்பர்கள் வந்தால்.....

  ஒரு ஆளுக்கு இது செய்தால் சரியாக வருவதில்லை....

  ReplyDelete
  Replies
  1. செய்யலாம், வெங்கட், ஒரு வெங்காயம் நறுக்கிப் பாதி சாதத்துக்கும், மீதிப் பாதி பச்சடிக்கும் ஒதுக்குங்க. 4 பீன்ஸ், ஒரு காரட், ஒரு சின்னத் தக்காளி அல்லது பெரியதில் பாதி, மீதிப் பாதியைப் பச்சடியில் போடலாம். குளிர்சாதனப் பெட்டி இருந்தால் அதிலே வைச்சு மறுநாள் பயன்படுத்திக்கலாம். பட்டாணி ஒரு கைப்பிடி, மற்றக் காய்கள் தேவை எனில். ஒரு வேளைக்கு ஒருத்தருக்கு இது போதும். சாதம் சமைச்சது என்றால் சின்னக் கிண்ணத்தில் ஒரு கிண்ணம் போதும். காலை சமைச்சு மிச்சம் இருக்கும் சாதத்திலேயே செய்துடலாம்.

   Delete
 2. வெவ்வேறு முறைகளில் நாங்களும் முயன்டிருக்கிறோம். ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு இதுமாதிரி விதம் விதமாக யோசித்துச் செய்து பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எனக்கும் இப்படித் தான் யோசிச்சு யோசிச்சுப் பண்ணப் பிடிக்கும். ஒவ்வொருநாள் மிச்ச சாதத்தோடு கொஞ்சம் பயத்தம்பருப்போ, துவரம் பருப்போ சேர்த்துக் காய்களையும் போட்டுக்கதம்ப சாதம், அல்லது, சாம்பார் சாதம், அல்லது பொங்கல் என்று பண்ணுவேன்.

   சாதம்+ கோதுமை மாவைப் பிசைந்து கொண்டு கொஞ்சம் கடலை மாவையும் சேர்த்துக் கொண்டு, தயிர் ஒரு கரண்டி விட்டு டோக்ளா மாதிரியும் பண்ணிப் பார்ப்பேன். :))))

   Delete
 3. இப்போதுதான் இதைப் பற்றித் தெரியும்!!!... நிச்சயம் செய்து பார்க்கிறேன் அம்மா.. பகிர்வுக்கு ரொம்ப நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்க பார்வதி. காலை சாதம் மிஞ்சிப் போனால் இரவுக்குச் செய்யலாம். அல்லது பழைய சாதம் சாப்பிடும் வழக்கம் இருந்தால் முதல் நாள் சாதத்தில் நீர் ஊற்றாமல் வைத்திருந்து மறுநாள் காலை ஒப்பேற்றலாம். வெங்காயம், தக்காளி, பட்டாணி நறுக்கிப் போட்டுத் தக்காளி சாதமாகவும் செய்யலாம். தக்காளியை மட்டும் வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துவிடவேண்டும்.

   Delete
 4. எளிதான வெஜிடபிள் சாத குறிப்பிற்கு நன்றி அம்மா...

  ReplyDelete
 5. பசிக்குதா சாப்பிட வாங்கன்னு கூப்பிடவும்... ரெடியா வச்சிருந்து எங்களுக்கு போட போறிங்கன்னு பார்த்தா எங்களையே செய்து சாப்பிட சொல்றிங்க... இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க..!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, திடீர்னு ஒருநாள் உங்க வீட்டுக்கு விசிட் செய்து வகை வகையாச் செய்து போடச் சொல்லிப் பரிக்ஷை வைக்கப் போறேன். :)))

   Delete
 6. சிறப்பான குறிப்பு... நானும் இதே போல் செய்வதுண்டு... கொஞ்சம் போல தேங்காய், ப.மிளகாய், சீரகம், கொத்தமல்லி,புதினா அரைச்சு சேர்ப்பேன்...

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் செய்யலாம். ஆனால் இது அந்த மாதிரி எல்லாம் சிரமப்படாமல் வெறும் பொடிகளை மட்டுமே வைச்சும் செய்யலாம். :)))) அவசரத்துக்கு உதவும். நிதானமாச் செய்யறதானா அரைச்சு விட்டும் செய்யலாம்.ப.மி. சீரகம், கொ.ம. புதினா தனியா அரைச்சு முதலில் சேர்த்துட்டு, தேங்காயோடு ஒன்றிரண்டு மு.ப. வைத்து அரைத்துக் கடைசியில் கலந்தால் ரிச்னஸ் வரும்.

   Delete