எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, January 11, 2012

பொங்கலுக்குத் தனித்தனியான ஒரு கூட்டு!

சர்க்கரைப்பொங்கல்:

இதுவும் கிட்டத்தட்ட அக்கார அடிசில் போலத்தான். ஆனால் அவ்வளவு பால் தேவையில்லை. அக்கார அடிசிலுக்கு முழுக்க முழுக்கப் பாலிலேயே வேக வைத்தால் நன்றாய் இருக்கும். இதற்குக்கொஞ்சம் நீரும் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம், பாசிப்பருப்பு முக்கால் கிண்ணம், வெல்லம் அரை கிலோ தூள் செய்து கொள்ளவும். பால் அரை லிட்டர், நெய் 200 கிராம், முந்திரிப்பருப்பு 50 கிராம், திராக்ஷை 50 கிராம், தேங்காய்ப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய், ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக்கற்பூரம்(பிடித்தால்) வேக வைக்க நீர்.

வாணலியை அடுப்பில் ஏற்றிச் சூடாக்கிக்கொண்டு பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக நன்கு சிவக்க வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடி கனமான உருளி அல்லது வேறு கனமான பாத்திரத்தை வைத்துப் பாலும் நீரும், நெய்யுமாய்க் கலந்து வைக்கவும் . பால் கொதித்து வருகையில் பாசிப்பருப்பை நன்கு களைந்து அதில் சேர்க்கவும். பருப்பு நன்கு உருத்தெரியாமல் வெந்ததும், அரிசியைச் சேர்க்கவும். மீதம் இருக்கும் பாலையும் ஊற்றிவிட்டுத் தேவையானால் நீரும் சேர்த்துக்கொள்ளவும். அரிசியும், பருப்பும் நன்கு குழைந்து கெட்டிப்படும் போது வெல்லத்தைச் சேர்க்கவும். தேவையானால் கொஞ்சம் நெய் சேர்க்கலாம். கைவிடாமல் கிளறவும். அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெல்ல வாசனை நன்கு போய்ச் சேர்ந்து சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் பக்கத்தில் வேறொரு வாணலியில் நெய்யை ஊற்றிக்கொண்டு, முந்திரிப்பருப்பு, திராக்ஷை, தேங்காய்க் கீற்று போன்றவற்றைப் போட்டு நன்கு வறுத்துப் பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய்ப் பொடியைச் சேர்க்கவும்.

தனிக்கூட்டு:

இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.

இதற்குத் தேவையான காய்கள்:

வாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.

கத்திரிக்காய் கால் கிலோ

பறங்கிக்காய் கால் கிலோ

அவரைக்காய் கால் கிலோ

சேனைக்கிழங்கு கால் கிலோ

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ

பச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்

கறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்

மொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.

கிரேவி தயாரிக்க

புளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.

அரைக்க

மிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. ஒரு சின்ன மூடி. வறுக்க எண்ணெய்.

முதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம் இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.

காய்களுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் படையலுக்கு வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.

பொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும்.

Tuesday, January 10, 2012

திருவாதிரைக்களி செய்முறையும், ஏழுதான் குழம்பும்!

திருவாதிரைக்களி செய்முறை:
தேவையான பொருட்கள்:
நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம். வெல்லம் தூள் செய்தது மூன்று கிண்ணம். து.பருப்பு ஊற வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடி, முந்திரிப்பருப்பு, தாளிக்க, வறுக்க நெய் இரண்டு டேபிள் ஸ்பூன். ஏலக்காய்ப்பொடி அரை டீஸ்பூன். வேக வைக்க நீர்.

பச்சரிசியைக் களைந்து சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறின அரிசியில் இருந்து நீரைச் சுத்தமாக வடித்து வைக்கவும். வடிகட்டி இருந்தால் அதில் போட்டு நீரை வடிக்கவும். நீர் நன்றாக வடிய வேண்டும். ஒரு மணி நேரம் வைத்திருந்த பின்னர் அடுப்பில் ஒரு கடாயை ஏற்றிச் சூடு செய்யவும். அதில் இந்த அரிசியைக் கொஞ்சம்கொஞ்சமாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். மொத்த அரிசியையும் இப்படி வறுத்துக்கொண்டு ஆற வைக்கவும். ஆறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு ரவை போல் உடைக்கவும்.

இப்போது அடுப்பில் நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது வெண்கல உருளி அல்லது அடி கனமான பாத்திரம் ஒன்றை ஏற்றி நாலு கிண்ணம் நீரை ஊற்றவும். கொஞ்சம் கூட வைத்தாலும் நீர் கொதித்ததும் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டால் பின்னால் தேவைப்படும்போது கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றிக்கொள்ளலாம். நீர் நன்கு கொதித்து வருகையில் ஊற வைத்த துவரம்பருப்பைப் போட்டு ஒரு கொதி வரும்போது தூள் வெல்லத்தையும் போடவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க வேண்டும். கொதித்ததும் அரைத்துப் பொடித்த மாவைப் போட்டுக்கொண்டே கிளறவேண்டும். மாவைக் கட்டியில்லாமல் கிளற வேண்டும். நன்கு உப்புமா பதத்துக்கு வரும்வரை கிளறவேண்டும். நீர் போதவில்லை எனில் எடுத்து வைத்திருக்கும் வெந்நீரை ஊற்றிக்கொள்ளலாம். நன்கு பொல பொலவென்று வந்ததும், பக்கத்தில் இன்னொரு பாத்திரம் அல்லது வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுக்கவும். முந்திரிப்பருப்பைக் களியில் போட்டுவிட்டு அந்த நெய்யிலேயே தேங்காய் துருவலையும் வறுக்கவும். களியில் போடவும். ஏலக்காய்ப் பொடியைத் தூவவும்.

இதோடு சைட் டிஷாகப் பண்ண வேண்டியது ஏழுதான் குழம்பு. சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான காய்கள்:
வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று
பறங்கிக்காய் ஒரு கீற்று
வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2
கத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று
பச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்
அவரைக்காய் 100 கிராம்
சேனைக்கிழங்கு கால் கிலோ
சேப்பங்கிழங்கு(விரும்பினால் கால் கிலோ)
சிறுகிழங்கு கால் கிலோ
கொத்தவரைக்காய் 100 கிராம்
இதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரெ மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.

கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை

அரைக்க:
மி.வத்தல் பத்து அல்லது பதினைந்து
கொத்துமல்லி விதை 100 கிராம்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
அரிசி ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் ஒரு மூடி
ஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும்பொருட்களோடு சேர்ப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.
தாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.

காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும்.

Monday, January 9, 2012

பொங்கலோ பொங்கல்! கூவுங்க எல்லாரும்!

அக்கார அடிசிலுக்குப் பால் நிறைய வேண்டும். ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லைனாலும் ஒரு லிட்டராவது வேண்டும். நல்ல பச்சை அரிசி கால்கிலோ, வெல்லம் பாகு அரை கிலோ, நெய் கால் கிலோ. பாசிப்பருப்பு ஒரு கிண்ணம். நீரே வேண்டாம். பாலிலேயே வேகவேண்டும். ஆகவே முடிந்தவரைக்கும் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பால் எடுத்துக்கொள்ளவும். குங்குமப் பூ, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை அளவு மட்டுமே. முந்திரிப்பருப்பு, திராக்ஷை எல்லாம் தேவைப்பட்டால். சாதாரணமாய் இதற்குப் போடுவது இல்லை. ஆனால் நான் போடுவேன்.

பாசிப்பருப்பையும், பச்சை அரிசியையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். நன்கு களைந்து சுத்தம் செய்து கொள்ளவும். வெண்கலப்பானையை அடுப்பில் வைத்துப் பாலைக் கொஞ்சமாக முதலில் ஊற்றவும். தேவையான பாலில் பாதி அளவு ஊற்றலாம். பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாசிப்பருப்பைக் களைந்து சுத்தம் செய்து அதில் போடவும். சிறிது நேரத்துக்கு ஒருமுறை கிளறிக்கொடுக்கவும். பால் அடியில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும். இதை நான் ஸ்டிக் பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ செய்தால் அவ்வளவு சுவை வராது. பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து அதோடு சேர்த்துப் போடவும். மிச்சம் இருக்கும் பாலைக்கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். அரிசி நன்கு வெந்து குழையும் பதம் வரவேண்டும். அப்போது வெல்லத்தைத் தூளாக்கிச் சுத்தம் செய்து சேர்க்க்கவும். வெல்ல வாசனை போக நன்கு கொதிக்கவேண்டும். வெல்லம், பால் இரண்டும் சேர்ந்து வரும்வரையில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். நன்கு கலந்து பாயசம் போலவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாக உருட்டும்படியும் இல்லாமல் கையால் எடுத்துச்சாப்பிடும் பதம் வரும் வரை கிளற வேண்டும். பின்னர் ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கரைத்த குங்குமப் பூவும் சேர்த்துப் பச்சைக்கற்பூரமும் சேர்க்கவும். தேவைப்பட்டால் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துச் சேர்க்கவும். அது இல்லாமலேயே நன்றாக இருக்கும்.

குக்கரில் வைப்பவர்கள் பாதிப்பாலை விட்டுக் குக்கரில் அரிசி, பருப்பைக் குழைய வைத்துக்கொண்டு பின்னர் வெளியே எடுத்து அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் அல்லது பால் விட்டுக் கரைத்துக் கொதிக்கையில் குக்கரில் இருந்து எடுத்த கலவையைப் போட்டு மிச்சம் பாலையும் விட்டுக் கிளறவேண்டும். இதிலும் அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். பின்னர் நன்கு சேர்ந்து தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என்று பார்த்துவிட்டு அடுப்பை அணைக்கவும். ஏலக்காய், குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்க்கவும்.