எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, December 9, 2009

வாழ்க்கையே ரசம் தான், வந்து பாருங்களேன்!

இப்போ அடுத்துக் கண்டந்திப்பிலி ரசம் வைப்போமா?? பின்பற்றுகிறவங்க எண்ணிக்கை அதிகமாயிருக்கு, அந்த அளவுக்குச் செய்து பார்க்கிறாங்களானு புரியலையே?? கண்டந்திப்பிலிக் குச்சிகள் நாலு அல்லது ஐந்து எடுத்துக்குங்க. தேசாவரம்னு தென் மாவட்டங்களில் சொல்லுவாங்க இதை. திப்பிலி அரிசித் திப்பிலியைத் தான் திப்பிலிம்பாங்க. அதுவேண்டாம், இது வேர் போலக் காய்ந்து குச்சி, குச்சியாக இருக்கும். சின்னச் சின்னக் குச்சியாக நறுக்கி நாலு, ஐந்து வேண்டும். நறுக்கற வேலை எல்லாம் ரங்ஸுக்குக் கொடுத்துடுங்க. ஆச்சா??
அடுத்து மி.வத்தல் காய்ந்தது ஒன்று அல்லது இரண்டு, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு ஸ்பூன் ஜீரகம், கருகப்பிலை, புளி ஒரு எலுமிச்சை அளவு. இதுக்குத் தக்காளி எல்லாம் வேண்டாம், விருப்பப் பட்டால் போட்டுக்குங்க. உங்க ரங்ஸுக்குப் பிடிக்காதுனா போடலாம், பிடிக்கும்னா வேண்டாம், எல்லாம் தலைகீழ் விகிதம், அவ்வளவே!

எல்லாச் சாமான்களையும் நெய் அல்லது எண்ணெயில் வறுத்துக்குங்க. பெருங்காயம் ஒரு துண்டு. அதையும் நெய்யிலேயே வறுத்துக்கலாம். புளியை நீர்க்கக் கரைச்சு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். வறுத்த சாமானை மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ, அரைச்சு, (ஹிஹிஹி, அம்பிமேலே இல்லை, பாவம் எரியும் அம்பிக்கு, விட்டுடுவோம்)புளி வாசனை போகக் கொதிச்சதும் அரைச்சதைக் கலந்து ஒரு கொதி வந்ததும் வேண்டிய அளவு ஜலம் விட்டு விளாவிவிட்டு நுரைச்சு வந்ததும் கீழே இறக்கவும். நெய்யில் கடுகு, கருகப்பிலை தாளித்துத் தேவையானால் கொத்துமல்லித் தழை போடலாம்.

இதுக்குத் தொட்டுக்கக் காம்பினேஷன் பருப்புத் துவையலும், அரிசி அப்பளமும். அரிசி அப்பளம் சுட்டு இரண்டு பக்கமும் நெய் விட்டுத் தடவிட்டுத் தொட்டுக்கலாம். பருப்புத் துவையலுக்குத் தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், ஒன்றிரண்டு மிளகாய் வற்றல், உப்பு, புளி, பெருங்காயம் எல்லாவற்றையும் வெறும் சட்டியில்/வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். ரசத்தோடு சேர்த்துச் சாப்பிட ரசமாக இருக்கும். அதுவும் இந்தக் குளிருக்கு அருமையான காம்பினேஷன்.

Friday, November 20, 2009

ரங்கமணி மசிச்ச கத்தரிக்காய் கொத்சு!

வருஷக் கணக்காச் சிதம்பரம் போயும் இன்னமும் அங்கே சம்பாசாதமும், கத்தரிக்காய் கொத்சும் சாப்பிட்டதில்லை. ஆனால் செய்முறை தெரியும். இப்போப் போனவாரம் போயிருந்தப்போவும் தீக்ஷிதர் வீட்டிலேயே கேட்டும் உறுதி செய்து கொண்டேன். அதன்படி எழுதறேன். முதலில் சம்பாசாதம். சாம்பார் சாதம்னு நினைச்சுடாதீங்க. சிதம்பரத்திலே இது ஹோட்டல்களில் கூட பிரபலமாக்கும்.நல்ல அரிசியாக வாங்கி வெண்கலப்பானையில் சாதம் வடித்துக் கொள்ளவும். வெண்கலப் பானை இல்லைனா என்ன? தீபாவளிக்கு வஸ்த்ரகலா வாங்காத கோபத்தில் உங்க முகமே வெங்கலப்பானை மாதிரித் தானே இருக்கும்? அதனால் பரவாயில்லை, குக்கரில் வைச்சுடுங்க. பொலபொலனு இருந்தாப் போதும். குக்கரும் வைக்கமாட்டீங்களா? ரங்ஸ் எதுக்கு இருக்கார்? வஸ்த்ரகலா கிடைக்காத கோபத்தைக் காட்டினால், தன்னாலே வச்சுடுவார் குக்கரை.ஒரு தாம்பாளத்தில் அதைக் கொட்டிச் சுடச் சுட இருக்கும்போதே நெய்யையும் ஊற்றி உப்புப் போட்டுக் கலந்து கொள்ளவும். வேறொரு கடாயில் நெய் விட்டு அதில் ஒரு டீஸ்பூனுக்குக் குறையாமல் மிளகு போட்டு, இரண்டு டீஸ்பூன் ஜீரகமும் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். இதை அம்மி இருந்தால் நல்லது அல்லது மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். நெய்விட்டுக் கலந்த சாதத்தில் இதைப் போட்டுக் கிளறி வைக்கவும். இதற்குத் தொட்டுக்கத் தான் கத்தரிக்காய் கொத்சு.நல்ல கத்தரிக்காயாக அரை கிலோவுக்குக் குறையாமல் வாங்கிக்கணும். பொதுவாய் கொத்சுக்குக் கத்தரிக்காய் வாங்கினால் பெரிய கத்தரிக்காய் வாங்கிச் சுட்டுத் தான் கொத்சு பண்றது வழக்கம். ஆனால் சிதம்பரம் கொத்சில் அப்படி இல்லை என்பதே அதன் தனித் தன்மை. கத்தரிக்காயை நாலாக நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு கத்தரிக்காயை வதக்க வேண்டும். சுருள வதக்க வேண்டும். சுருள வதங்கின கத்தரிக்காயை ஒரு மத்தினால் மசிக்கவேண்டும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், தனியா, வெந்தயம் நன்கு வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.எலுமிச்சம்பழ அளவுப் புளியை எடுத்துக் கரைத்துக் கொள்ளவேண்டும். உப்பு மட்டும் சேர்க்கவேண்டும், மஞ்சள் தூள்(தேவையானால்) சேர்க்கலாம். அடுப்பில் கடாயை ஏற்றி, எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி கடுகு, வெந்தயம் தாளிக்கவும். கருகப்பிலை தேவையானால் சேர்க்கலாம். தாளிதம் ஆனதும், மசித்த கத்தரிக்காயைப் புளிக்கரைசலில் சேர்த்துக் கொண்டு அடுப்பில் கடாயில் உள்ள எண்ணெய்த் தாளிதத்தில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடியைப் போடவும். உடனே இறக்கவும், கருகப்பிலை, கொத்துமல்லி அலங்காரங்கள் எல்லாம் உங்கள் விருப்பம். இது சம்பாசாதத்தோடு மட்டுமின்றி அரிசி உப்புமா, பொங்கல் போன்றவற்றோடும் சாப்பிடலாம். சிதம்பரம் கொத்சில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதில்லை, என்பதும் கையாலேயே மசிக்கவேண்டும் என்பதுமே அதன் தனித் தன்மையாக்கும்.

உங்களாலே மத்தாலே மசிக்கமுடியலையா? கவலையே படாதீங்க, உங்களுக்கு மசியாத ரங்ஸும் இருப்பாரா என்ன? அவரை மசிச்சுடுங்க, சேச்சே, மசிக்கச் சொல்லுங்க. உங்களை அவர் பக்கம் மசிய வைக்கிறதா நினைச்சுட்டு, (நினைப்புத் தானே, போனால் போகட்டும்) நல்லா மசிச்சுக் கொடுத்துடுவார். வர்ட்டா?? அடுத்துக் கண்டந்திப்பிலி ரசமும், பருப்புத் துவையலும். பத்தியமா சமைப்போமா?

வெங்காயம் சேர்க்கவேண்டுமென்றால் கத்தரிக்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் நன்கு வதக்கிக் கொண்டு அம்மியில் கொஞ்சம் கரகரப்பாகவே அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதைப் புளிக்கரைசலில் சேர்த்து மற்றதெல்லாம் மேற்சொன்ன மாதிரியே தான். கும்பகோணம் பக்கம் கல்யாணங்களில் இன்றும் இந்த கத்தரிக்காய், வெங்காயம் சேர்த்த சிதம்பரம் கொத்சு மூன்று நாட்களில் ஒரு நாள் காலை டிபனுக்குக் கொடுப்பார்கள். பல கல்யாணங்களிலும் சாப்பிட்டது தான். இன்னும் சிதம்பரம் தீக்ஷிதர்கள் வீட்டில் சாப்பிடலை, அதுவும் சாப்பிட்டுடணும்.

Wednesday, November 18, 2009

இன்னிக்கு முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி, சாப்பிட வாங்க!


சாப்பிட வாங்கனு போட்டதுக்கு அப்புறமா ஆறு பேர் இந்தப் பதிவைத் தொடர ஆரம்பிச்சுட்டாங்களே! ஹையா ஜாலி! அந்த ஆறு பேரையும் இப்போ சாப்பிடச் சொல்லப் போறது என்னன்னா, முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியாக்கும். பாலக்காட்டுக் காரங்க பேச்சிலே வந்தேனாக்கும், போனேனாக்கும், இருக்குமாக்கும் அப்படின்னெல்லாம் வருமா, அந்த மாதிரிப் பேச ஆசை, அந்தே! இப்போ முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியை எப்படிப் பண்ணலாம்னு யோசிப்போமா? இன்னிக்கு எங்க வீட்டிலே முருங்கைக்கீரைப் பருப்பு உசிலிதான். சாப்பிடும்போது தான் யோசனை தோணிச்சு, எழுதலாமேனு. இன்னிக்கு வேறே ஒண்ணும் எழுதி வேறே வச்சுக்கலை.

முருங்கைக் கீரை ஒரு கட்டு: வீட்டிலே முருங்கை மரம் இருந்தா கீரையை நல்ல இளங்கீரையாகப் பார்த்து பறிச்சுக் கொள்ளவும். என்னது? பூக்கள் இருக்கா? இருக்கட்டும், இருக்கட்டும் எல்லாப் பூக்களுமே காயாக மாறப் போறதில்லை, அதனாலே பூக்கள் உதிர்கிறது. மற்றபடி மரத்திலே வேணுங்கற அளவுக்குப் பூக்களையும் பறிச்சு வச்சுக்கோங்க. ஹிஹிஹி, யாருங்க அது, தொடுத்து வச்சுக்கணுமானு கேட்கிறது? இல்லை இல்லை, இதைத் தொடுத்தெல்லாம் வச்சுக்கவேண்டாம். நறுக்கி பொரிச்ச குழம்பு செஞ்சு சாப்பிடலாம். அது அப்புறமா. இப்போ கீரையை மட்டும் கவனிங்க. கீரையைப் பறிச்சோ அல்லது வாங்கியோ வச்சாச்சா? இப்போ கீரையை நல்லா ஆயணும். குச்சிகளை எல்லாம் ஆய்ந்து கீரையை மட்டும் தனியா எடுத்து நறுக்கி வச்சுக்கணும். நறுக்கினப்புறமா நல்லாத் தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைங்க கீரையை.

பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்: து.பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப் இரண்டையும் சேர்த்துக் கழுவி நனைச்சு வைக்கணும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறட்டும். அப்புறமாய் மி.வத்தல் ஆறு, உப்பு தேவையான அளவு, பெருங்காயப் பொடி, அல்லது கட்டியானால் பருப்போடயே சேர்த்து ஊற வைச்சுடலாம். எல்லாத்தையும் நன்கு நைசாக அரைச்சுக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையை ஒரு வாயகன்ற(உங்க வாய் அகலாம பார்த்துக்கவும்) பாத்திரத்தில் போட்டுக்கவும். அரைச்சதை எடுத்ததும் மிக்ஸி ஜாரில் கொஞ்சம் ஜலம் விட்டு மிச்சம், மீதி இருக்கும் பருப்புக் கலவையை எடுத்துக் கொண்டால் ரசத்துக்கு விளாவிடலாம். அது தனியா வச்சுப்போம். இப்போ பாத்திரத்தில் போட்ட பருப்புக் கலவையில் முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.பருப்பும் கீரையும் ஒன்றோடொன்று நன்கு கலந்ததும் அதை இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். வெந்த கலவையை ஒரு ஸ்பூனால் குத்தினால் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

வெந்த கலவை வெளியே எடுத்து ஆறினதும் உதிர்த்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், இந்த அளவுக்குக் குறைந்த பட்சமாய் ஒரு கப் எண்ணெயாவது தேவை. எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்புப் போட்டு வெடித்ததும் கருகப்பிலை சேர்த்துப் பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். நன்கு உதிர்ந்து வரும் வரை கிளறவும். பின்பு சூடாக இருக்கும்போதே, மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்போடு பரிமாறவும்.

Tuesday, November 3, 2009

எல்லாருக்கும் ஜுரமாமே? ஒரு பத்திய சமையல்!


இணையமே தகராறா இருக்குக் கொஞ்ச நாளா. கிடைக்கிற நேரத்திலே மனசிலே தோண்றதை எழுதறேன். நேத்திக்கு என்னோட சிநேகிதி ஒருத்தங்க மூக்கும், கண்ணும் சிவுசிவுனு இருக்கு, கீதா, என்ன பண்றதுனு கேட்டாங்க. நான் கூட வஸ்த்ரகலா வாங்கித் தராத கோபமோ இல்லை வருத்தமோனு நினைச்சேன். ஆனால் அது இல்லையாம். ஜலதோஷமாம். என்ன செய்யறதுனு கேட்டாங்க. தூதுவளையும், துளசியும் போட்டுக் கஷாயம் வச்சுச் சாப்பிடச் சொன்னேன். தூதுவளையே கிடைக்கலையாம், எப்படி இருக்குனும் தெரியாதாம். அப்புறமா அவங்களை விரலி மஞ்சளை விளக்கெண்ணெய் தடவி விளக்கிலே கறுப்பாகிற வரைக்கும் சுட்டுட்டு, அந்தப் புகையை உள்ளிழுக்கச் சொல்லிட்டு, அந்தக் கறுப்பான பொடியையும் பத்து மாதிரி நெத்தியிலே, மூக்கிலே போட்டுக்கச் சொன்னேன். தூதுவளை இருக்கே அதிலே கஷாயம் மட்டுமில்லைங்க ரசம் வச்சுக் கூடச் சாப்பிடலாம். எங்க வீட்டிலே இந்த மாதிரியான சில பைத்தியங்கள் அவ்வப்போது பிடிக்கும். மின்னல் இலை மோர்க்குழம்பு, முடக்கித்தான் தோசை,வேப்பம்பூ ரசம், தூதுவளை ரசம்னு அப்போ அப்போ வச்சுச் சாப்பிடுவோம்.

தூதுவளை தெரியுமா?? தூதுவளைனு ஒரு செடி இருக்கு. அதோட படம் போடறேன் பாருங்க. முள்ளு இருக்கும் செடியிலே, முள்ளுக் குத்திக்காம இலையை மட்டும் பறிச்சுக்குங்க. ஒரு கப் இலை இருக்கட்டும். சுத்தம் பண்ணிக்கணும். தண்ணியிலே போட்டுச் சுத்தம் பண்ணி வடிகட்டி வச்சுக்குங்க. புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக்குங்க. உப்பு தேவையான அளவு. மிளகு ஒரு ஸ்பூன், ஜீரகம் இரண்டு ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, அல்லது பெருங்காயப் பொடி. ஒரு மிளகாய் வத்தல். கருகப்பிலை கொஞ்சம். எல்லாத்தையும் எண்ணெய் விட்டுச் சட்டியிலே போட்டு வறுத்துக்குங்க. புளியைக் கரைச்சுக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும். வறுத்த எல்லா சாமானையும் அரைத்துக் கொள்ளவும். புளியை ஒரு ஈயச் சொம்பில் விட்டுக்கொள்ள வேண்டும். ஈயச் சொம்புன்னா என்னனு தெரியுமா?? அதை அடுப்பிலே ஜலம் விடாமல் வச்சால் அவ்வளவு தான். நீங்க வஸ்த்ரகலா வாங்கித் தரலைனா கண்ணீர் எப்படி விடுவீங்க?

அது மாதிரி ஈயச் சொம்பும் கண்ணீர் விட ஆரம்பிக்கும். அதனாலே புளி ஜலத்தை விட்டு, உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டுட்டு அடுப்பிலே வைங்க. நல்லாக் கொதிக்கட்டும். புளி வாசனை போகக் கொதிச்சதும், வறுத்து அரைச்சதைக் கலக்கவும். ஒரு கொதி வரும்போது தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சேர்த்து ஒரு நிமிஷம் கொதிக்கவிடவும். பின்னர் தேவையான அளவுக்கு ஜலம் விட்டு விளாவிக் கொள்ளவும். நல்ல ஜலதோஷம் இருக்கும்போது இந்த ரசம் வைச்சுச் சாப்பிட்டுப் பாருங்க, ஜலதோஷம் பட்டுனு விட்டுப் போகும். நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை தாளிக்கவேண்டும்.

Saturday, October 31, 2009

பட்டூரா சாப்பிட வாங்க!

சாப்பிட வாங்கனு பேரை மாத்தியதும் இதைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிடுச்சே, இன்னும் எதுவுமே போடமுடியலையேனு இருக்கு. சீக்கிரம் போடறேன். முதல்லே பட்டூரா பார்த்துட்டு, ரொம்ப நாளா பட்டூராவுக்கு மாவே பிசையலை. அதனால் அதை முடிச்சுப்போம். அதுக்குள்ளே நவராத்திரி வந்து, தீபாவளி வந்துனு எல்லாம் ஆயிடுச்சு. இப்போ தீபாவளி பட்சணமும் தீர்ந்திருக்குமே. அதனாலே டிபன் ஏதானும் பண்ணித் தானே ஆகணும்?? முதல்லே பட்டூராவுக்குத் தேவையானது மைதா மாவு . அரை கிலோ எடுத்துக்குங்க. வெண்ணெய் நூறு கிராமாவது வேணும். டால்டா வேண்டாம். வேறே வழியில்லைனா டால்டா. உப்புக் கொஞ்சம் போல. தயிர் அரை கப்.

முதலில் அரை ஸ்பூன் உப்பை ஒரு வாயகன்ற பேசினில் போட்டு, வெண்ணெயையும் போட்டுக் கையாலோ அல்லது ஒரு மரக் கரண்டியாலோ நல்லாக் கலக்குங்க. விடாமல் ஒரே பக்கமாகவே இருபது நிமிஷமாவது கலக்கணும். வெண்ணெய் எல்லாம் உப்போடு கலந்து மேலே குமிழ்கள் வர ஆரம்பிக்கும். இப்போக் கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவைப் போட்டுக் கலக்குங்க. மைதாவும், வெண்ணெயும் ஒருசேரக் கலக்கணும். நன்கு கலக்கவும் ஒரு பத்து நிமிஷம் இப்படிக் கலந்ததும், தயிர் சேர்த்துப் பிசையணும். அரை கப் தயிர் அநேகமாய்ச் சரியாய் இருக்கும். இல்லாட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக் கொள்ளவும். நன்கு பிசையவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியால் மாவை மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு உப்பிக் கொண்டு வந்திருக்கும். அப்படி வரலைனால் இன்னும் சிறிது நேரம் வைங்க. அநேகமாய் உப்புக் கொண்டு வந்துடும். அதை எடுத்து மறுபடிப்பிசைந்து மூடி வைங்க. இப்படி இரண்டு முறையாவது ஆனதும், மாவு தயார் பூரி பொரிக்க.

கடாயில் எண்ணெயை வைத்து, தேவையான அளவு சைசில் மாவை உருட்டிக் கொண்டு பூரியாக வட்டமாக இடவும். எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்றாக உப்பிக் கொண்டு வெள்ளை வெளேரெனச் சூடான பட்டூரா தயார். ஊசியால் குத்தினாலோ,கையால் உடைத்தாலோ ஒழிய உப்பிக் கொண்டது அமுங்காது எத்தனை நேரமானாலும். இதற்குத் தொட்டுக்கத் தான் முதல்லேயே பண்ணி வச்சுட்டோமே சனா. அதை எடுத்துச் சூடு பண்ணிக்குங்க. சனா, பட்டூரா தயார். இதைத் தான் ஓட்டலில் ஒரே ஒரு பூரியும் அரைக் கரண்டி சனாவும் கொடுத்துட்டு நூறு ரூபாய் பில் போடுவாங்க. வீட்டிலேயே செய்தால் எவ்வளவு லாபம்???


குறைந்த பட்சமாத் தொடர்பவர்களாவது சாப்பிடுங்கப்பா! நன்றி. அடுத்ததுக்குக் கொஞ்சம் மெதுவா வரேன்.

Thursday, October 1, 2009

நவராத்திரிக்குருமாவா, நவரத்தினக் குருமாவா?


நவராத்திரிக் குருமா!

நவராத்திரியிலே எல்லாருமே சுண்டல் வசூலுக்குப்போயிருப்பீங்க. இல்லையா?? உங்க வீட்டிலே கொலு வைக்காட்டியும், எப்படியாவது சுண்டல் பொட்டலங்கள் சேர்ந்துவிடும். அதைச் சாப்பிடவும் மனசு வராது, பயமா இருக்கும். வாயுத் தொந்திரவு அல்லது காரம் ஒத்துக்காதேனு. அதோட நவராத்திரிச் சுண்டல் வசூல் செய்துட்டு வீட்டுக்கு வரவும் நேரம் ஆயிடும். வந்து ராத்திரிக்கு என்ன பண்ணறதுனு சிலர் யோசிப்பாங்க.

முன் கூட்டியே திட்டம் போட்டு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு சப்பாத்தியைச் செய்து வச்சுட்டுப் போயிடுங்க வசூலுக்கு. போதுமான சுண்டல் வசூல் ஆனதும் நேரே வீட்டுக்கு வந்துடுங்க. கூட வரும் தோழி கூப்பிட்டாலும் நோ, இனிமேல் நாளைக்குத் தான்னு சொல்லிடலாம். இப்போ ஒவ்வொரு வீட்டிலேயும் ஒவ்வொரு சுண்டலாய் இருக்குமே. சிலர் வீட்டிலே இனிப்புச் சுண்டலாய்க் கூட இருக்கும். எல்லாச் சுண்டலும் இப்போல்லாம் சின்ன ப்ளாஸ்டிக் கிண்ணங்களில் தான் தந்திருப்பாங்க. எல்லாம் சேர்த்து ஒரு கப் வரும்.

நீங்க சுண்டல் வசூலுக்குப் போகும்போது ரங்கு வீட்டிலே சும்மாத் தானே ஈ ஓட்டிட்டு இருப்பார். அவரைத் தக்காளியும், வெங்காயமும் நறுக்கி வைக்கச் சொல்லிட்டுப் போங்க. நறுக்கி வச்சிருப்பார். வந்து ஏதோ புதுசாப் பண்ணித் தரப் போறீங்கனு ஆவலாவும் இருப்பார். அவர் கிட்டே ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம். ஃப்ரிஜைக் குடைஞ்சு பார்த்து முதல்நாள் இட்லிக்குத் தொட்டுக்க அரைச்ச தேங்காய்ச் சட்னி இருக்கா பாருங்க. இல்லாட்டியும் பரவாயில்லை. சுண்டலிலேயே தேங்காய் போட்டிருப்பாங்களே. வேறே என்ன சட்னி இருக்கு? தக்காளி, வெங்காயம், புதினா?? எதுவா இருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே இல்லையா? காலம்பர வச்ச குழம்பு? ரசம்? அது போதும்!

இப்போ நீங்க செய்ய வேண்டியது கொஞ்சமாவது பந்தா காட்டணும். அப்பா, ஒரே அலுப்பு, எல்லா வீட்டுக்கும் போயிட்டு வரதுக்குள்ளே முடியவே இல்லைனு சொல்லிக்கணும். நிஜமாவே முடியாதுதான். என்றாலும் அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாச் சொல்லிக்கணும். அப்புறம் மெதுவா ரங்குவையும், குழந்தைங்க இருந்தா அவங்களையும் பார்த்து ஏதாவது சாப்பிட்டீங்களானு அன்போட கேட்கணும். "இல்லை, உனக்காகத் தான் வெயிட்டீஸ்"னு பதில் வரும். அவங்க நினைப்பு உங்களை சந்தோஷப் படுத்தறதா. என்றாலும் அதைக் காட்டிக்காமல் அடுப்படிக்குப் போங்க. அடுப்பிலே வாணலியை வச்சு, எண்ணெயை ஊத்துங்க. ஜீரகம், சோம்பு(பிடிச்சா) தாளிங்க. சோம்பு பிடிக்கலைனா வேண்டாம். அப்புறம் மஞ்சள் பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்குங்க. தக்காளியையும் சேர்த்து நல்லா வதக்கவும்.

இரண்டும் வதங்கியதும், மொத்தமாய் வசூலான சுண்டலை அதிலே கொட்டவும். இனிப்புச் சுண்டல் இருந்தாலும் கவலை இல்லை. இந்த மாதிரி மசாலா ஐடங்களுக்குக் கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் நல்லாவே இருக்கும் ருசியும், மணமும். காலம்பர வச்ச சாம்பாரோ, ரசமோ, அல்லது வத்தக் குழம்போ இருந்தால் அதையும் அதில் சேர்க்கலாம். இப்போ முக்கியமாய்க் கவனத்தில் கொள்ளவேண்டியது இதுக்கு மேலே உப்போ, காரமோ போட்டீங்க தொலைஞ்சீங்க நீங்க! அதனால் கவனமாய் அதைத் தவிர்க்கவும். காலைக் குழம்பு எதுவும் இல்லையா? பரவாயில்லை. மிச்சம் வச்சிருக்கும் சட்னியைத் தேவையான அளவு சேர்க்கவும். அதுவும் தேங்காய்ச் சட்னியும், தக்காளிச் சட்னியும் இருந்தால் சூப்பரா இருக்கும். அதுவும் இல்லையா? எதுவுமே வேண்டாம். அப்படியே நல்லாக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு, கரம் மசாலாப் பொடியைத் தூவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி, நறுக்கிய வெங்காயம் போன்றவைகளைப் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம்.

புதுசா விருந்தினர் வந்தால் அவங்களுக்குச் செய்து போட்டு இது தான் நவரத்தினக் குருமா, சீச்சீ,நவராத்திரிக்குருமானு சொல்லிடலாம். கணவர் கிட்டே இன்னிக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மெனுனு சொல்லிடலாம். நவரத்தினக் குருமா ஒரு ப்ளேட் சுமாராக 75ரூக்கு மேல் என்று விசாரித்ததில் தெரிய வந்தது. அதனால் அதுக்கான பைசாவை முக்கியமாய் உங்க ரங்குவிடமிருந்து வசூலிக்கவும். சுண்டல் வசூலைவிட இந்த வசூல் முக்கியம். நினைவிருக்கட்டும்.

Monday, September 14, 2009

என்னை யாராலும் மசிக்க முடியுமா?


பட்டூரா தான் பண்ணணும், ரொம்ப நாளாச் சொல்லிட்டே இருக்கேன், ஆனாலும், இப்போ கை கொஞ்சம் வலி எடுக்கிறது. மாவு பிசையணும் இல்லை? என்னதான் மாமியார், நாத்தனாரை நினைச்சுட்டாலும், கையிலே வலுவும் வேணுமே. அதனால் இப்போதைக்கு அதைக் கொஞ்சம் தள்ள்ள்ளி வச்சுட்டு, கொண்டைக்கடலை பண்ணிட்டேன்னு சொல்றீங்க? அதனால் பரவாயில்லை, அதோட, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கடையிலே கிடைக்கும் ஓமப் பொடி அல்லது நீங்களே செய்த ஓமப் பொடி, அரிசிப் பொரி, பச்சைக் கொத்துமல்லி, தக்காளி பொடியா நறுக்கிப் போட்டு பேல் பூரி மாதிரியும் சாப்பிடலாம். இது பேல் பூரி இல்லைதான். சாட்னு சொல்லுவாங்க. சாட்பூரினும் சொல்லிக்கலாம். அதனால் சனா மசாலா பண்ணினால் எப்படியும் உள்ளே இறங்கிடும்.

இன்னிக்கு வீட்டிலே பீர்க்கங்காய் சட்டி மசியல் செய்தேன். அதை உடனே உங்க எல்லாரோடயும் பகிர்ந்துக்கலாம்னு ஒரு எண்ணம் தோணிச்சு. அதான் பட்டூராவுக்கு மாவு பிசையலை. மைதாமாவும் வாங்கணும். பீர்க்கங்காய் பிஞ்சாக அரைகிலோ வாங்கிக்குங்க. கட்டாயமாய் அரைகிலோ வேணும், தோல் சீவி நறுக்கி வதக்கிட்டா கொஞ்சமாயிடும், அதையும் மிக்ஸியிலேயோ, அல்லது, அம்மியிலேயோ(பாதி நாள் ஆற்காட்டார் கொடுக்கும் தொந்திரவிலே, இப்போ அம்மி நல்லாப் பழகிடுச்சு, அதிலேயே அரைனு எங்க வீட்டு ஹிட்லர் சொல்றார். அதெல்லாம் முடியாதுனு கரண்ட் இருக்கும்போதே அரைச்சு வச்சுக்கறேனாக்கும்.) உங்க தலைவிதி நல்லா இருந்தா மிக்ஸி, இல்லாட்டி அம்மிதான் கதி. அரைச்சு வச்சுக்கணும்.

அடுத்து வேணுங்கற பொருட்கள்:
புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு ஊறவச்சுக் கரைச்சுக் கொள்ளவேண்டும். இரண்டு கப் புளி ஜலம் இருக்கலாம். அதுக்கு வேண்டிய மிளகாய் வத்தல் 4, தனியா/கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு, உ.பருப்பு முறையே ஒரு ஸ்பூன், கடுகு, வெந்தயம், மிளகு அரை ஸ்பூன். பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி. கட்டி வேறே மிக்ஸியிலே அரைபடாது. தனியா நிக்கும். அதனாலே கட்டியை ஊற வச்சுடுங்க. அந்த ஜலத்தை விட்டுக்கலாம். தாளிக்கும்போது பெருங்காயப் பவுடர் ஒரு சிட்டிகை போட்டுத் தாளிக்கலாம், மணம் ஊரைத் தூக்கும்.

இப்போ மேலே சொன்ன பொருட்களை எண்ணெயில் வறுத்து கொஞ்சம் கரகரப்பாய் அரைச்சுக்குங்க. என்னது? தேங்காயா? இதுக்கு அதெல்லாம் போட்டால் நல்லாவே இருக்காதுங்க. இந்த மசாலாப் பொருட்களை அரைச்சதும் வதக்கிய பீர்க்கங்காயை அரைத்துக் கொண்டால் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிட்டு இருக்கும் மசாலாப் பொருட்கள் பீர்க்கங்காயோடு சேர்ந்து வந்துடும். கரைச்சு வைச்ச புளித் தண்ணீரில் அரைச்ச பீர்க்கங்காயைப் போட்டுக் கலக்கிக்குங்க. நாம ஊரையே கலக்குவோமே, இது என்ன அதிசயமா என்ன? அடுப்பிலே கல்சட்டி, ஹிஹிஹி, கல்சட்டியிலே பண்ணறதாலே சட்டி மசியல்னு அர்த்தம் இல்லை. கடாயோ, அல்லது உருளியோ எதுவானாலும் பரவாயில்லை. என்ன ஒரு கஷ்டம்னா கல்சட்டியிலே தாளிதம் பண்ணிட்டுப் புளிக்கரைசலை ஊத்திட்டு, வதக்கிய பீர்க்கங்காயைப் போட்டு மத்தால் மசிச்சால் ஒரு சமயம் சட்டி உடைஞ்சு எல்லாம் போயிடும். அதனால் தான் முதலிலேயே அரைச்சு வச்சுக்கச் சொன்னேன்.

எங்க மாமியார் அடுப்பிலே போட்டுட்டுத் தான் மசிப்பாங்க. நல்ல பழக்கம் அவங்களுக்கு. எல்லாரையும் மசிய வைக்கிறவங்களாச்சே. நாம சட்டியைப் போட்டுட்டு இத்தனை நேரம் வம்பளக்கிறோமே, காய்ஞ்சுட்டு இருக்குமே. அதன் தலையிலே எண்ணெய் விடுங்க. இதுக்கு நல்லெண்ணெய்த் தாளிதம் தான் நல்லா இருக்கும். எண்ணெய் ஊத்திட்டுக் கடுகு, உ.பருப்பு, மி.வத்தல், வெந்தயம், ப.மிளகாய், கருகப்பிலை எல்லாம் போட்டுட்டுக் கூடவே பெருங்காயப் பொடியும் போட்டுட்டுக் கரைச்சு வச்சை பீர்க்கங்காய்+ புளி ஜலம் கலவையை அதன் தலையில் ஊத்தணும். மறந்து போய் பக்கத்திலே யாராவது நின்னா அவங்க தலையிலே ஊத்திட்டா நான் பொறுப்பில்லை. மஞ்சள் பொடி கொஞ்சமா சேர்த்து, தேவையான உப்பும் போட்டுக்குங்க. நல்லாக் கொதிச்சதும், கரகரனு அரைச்சு வைச்ச பொடியைப் போடவும். தேவையான அளவு பொடியைப் போட்டுட்டு அதிகம் கொதிக்கவேண்டாம். ஒரு கொதி வந்ததும் இறக்கிட்டு பச்சைக் கொத்துமல்லி கிடைச்சால் போடலாம். கொத்துமல்லி கிடைக்காட்டியும் அப்படியே சாதத்துடன் சாப்பிடலாம். அன்னிக்கே அரைச்சு அன்னிக்கே வார்க்கும் தோசைக்கு நல்லா இருக்கும்.

சாதத்தோட சாப்பிட்டால், தொட்டுக்க சைட் டிஷ் ஆக பூஷணிக்காய் மோர்க்கூட்டு, வாழைத்தண்டு மோர்க்கூட்டு, அல்லது மோர்க்கீரைனு செய்யலாம். இல்லாட்டி பொரிச்ச கூட்டு செய்யலாம். அதெல்லாம் எப்படினு கேட்கிறீங்களா? அதுக்கு அப்புறமா வரேன். ஏற்கெனவே பட்டூரா அரியர்ஸ் இருக்கு. அதை முடிச்சுட்டு வரேன். வர்ட்டா???? ஆதரவு தரவங்களுக்கு நன்னிங்கோ!!!!!

Tuesday, July 21, 2009

கொண்டைக்கடலை ஊறி எத்தனை நாளாச்சு???

ரொம்ப நாட்களாய் ஊறிட்டு இருக்குங்க சனா என்னும் கொண்டைக் கடலை. அது வேண்டாம், ரொம்பவே துர்நாற்றம் அடிக்கும், அதை மாட்டுக்கு வச்சுட்டு, என்ன மாடா?? பசுமாடுதான், என்ன?? அதுக்கு ஒண்ணும் பண்ணாது, அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் பால் கொடுக்கும், வச்சுடுங்க முதல்லே. மாட்டுக்கு வச்சுட்டு, புதுசா ஊற வைங்க. கால் கிலோ வெள்ளைக் கொண்டைக் கடலை ஊற வைச்சு அதிலே சில கொண்டைக் கடலைகளை மட்டும் எடுத்துத் தனியா வச்சுக்குங்க.

இப்போ ஒரு உ.கிழங்கு பெரிசா எடுத்து கொண்டைக்கடலை ஊற வைச்சதோட சேர்த்துக் குக்கரில் அல்லது நல்லா எரியும்ஒரு அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டுக் குழைவாக வேக வைக்கவும். அடுத்து இப்போ மசாலா தயாரிக்கணும்.

பச்சை மிளகாய் இரண்டு அல்லது மூன்று. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு சேர்க்கிறவங்க பூண்டு 5 அல்லது 6 பற்கள். பச்சைக் கொத்துமல்லி, ஊற வைச்ச கொண்டைக்கடலை கொஞ்சம் தனியா எடுத்து வைச்சோமே அது இதை எல்லாம் நல்லா நைசாக அரைச்சு வச்சுக்கணும். தக்காளி நல்லாப் பழுத்த தக்காளி இரண்டு, ஒரு பெரிய வெங்காயம் இரண்டையும் நைசாத் தனியா அரைச்சு வச்சுக்கணும். புளி ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுக்கு எடுத்து நல்லாக் கரைச்சு வைச்சுக்குங்க. ஒரு கப் இருக்கலாம் புளி கரைத்த நீர். உப்பு ருசிக்கு ஏற்றாற்போல். மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியாத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன். காரம் இருக்கணும்னா ஒரு டேபிள் ஸ்பூன் தனியாத் தூள் போதும், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத் தூள் ஒரு டீ ஸ்பூன். சாட் மசாலாத் தூள் ஒரு டீ ஸ்பூன். இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. காலா நமக் அப்படினு கிடைக்கும் நாட்டு மருந்துக் கடையில். கறுப்பு உப்புப் பொடியோட கொஞ்சம் ஜீரகம் வறுத்துப் பொடி பண்ணிக் கலந்து வச்சுக்கணும். அவ்வளவே. சிலர் மாதுளம் விதைகளும் போடுவாங்க. அது விருப்பம் போல். பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கியும் வச்சுக்கணும், புதினா பிடிச்சால் புதினாவும் பச்சை மிளகாய் விழுதோட சேர்த்து அரைக்கலாம், அல்லது பொடியாக அரிந்தும் வச்சுக்கலாம். வெங்காயமும் பொடிப் பொடியாக நறுக்கி வச்சுக்கணும்.

சரிங்க எல்லாம் தயார் பண்ணியாச்சா?? இப்போ கடாய் அல்லது வாணலி அல்லது இருப்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை எண்ணெயோடு கரைந்ததும், ஜீரகம் தாளித்து, அரைச்சு வைச்ச பச்சை மிளகாய்க் கலவையைப் போட்டு வதக்கணும், அது வதங்கியதும், தக்காளி, வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கணும். இது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயம், மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி சேர்த்து வதக்கணும். இவையும் வதங்கியதும், வேக வைச்ச கொண்டைக்கடலையைப் போட்டு, உப்பு, வேக வைத்த உருளைக் கிழங்கை உதிர்த்துச் சேர்க்கவும். கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும். நல்லாக் கொதிக்க விடவேண்டும். சேர்ந்து கொதிக்கும்போது வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவுக்குச் சேர்க்கவும். கரம் மசாலாப் பொடி சேர்க்கவும். இதுவும் சேர்ந்து கொதிச்சுக் கெட்டியானதும், இறக்கி வைத்து, பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, புதினாத் தழை தூவவும். சாட் மசாலாப் பொடியை மேலே தூவவும். கலந்தால் பிடிக்குமென்றால் இறக்கும்போதே சாட் மசாலாப் பொடியும் தூவலாம்.

இது சமோசாவுடன் சாப்பிடவும், நல்லா இருக்கும். பட்டூரா என்னும் பூரியுடன் சாப்பிடவும் நல்லா இருக்கும். சும்மாவே புளிச்சட்னி, பச்சைச் சட்னி, பேரீச்சைச் சட்னி ஊத்திக் கொண்டு, வெங்காயம், கொத்துமல்லித் தழை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிடலாம். அடுத்து பட்டூரா செய்வோமா?? யார் முதல்லே சாப்பிட வரப் போறதில்லை??? யாருமே வரதில்லையே, இருந்தாலும் விட மாட்டோமுல்ல!

Tuesday, June 2, 2009

பருப்பில்லாத ஹோட்டல் சாம்பார் வேணுமா?

நானானி, வெங்காயம், பூண்டு போட்ட சனா மசாலா கேட்டிருக்காங்க. அதுவும் உடனேயே. ஆனால் அதுக்குக் கொஞ்சம் காத்திட்டு இருக்கணும் நானானி. பூண்டு எனக்கு ஒத்துக்காது. பிடிக்கவும் பிடிக்காது. ஸோ நோ பூண்டு. ஓகேயா? அப்புறமா கால் கிலோ சனாவை எடுத்து ஊற வைச்சுடலாம் இன்னிக்கும். நாளைக்கு சனா மசாலா பண்ணலாம், ஓகேயா? இப்போ ஒரு திடீர் சாம்பார். ருசியான சாம்பார். இதுவும் வெங்காயம் போட்டும், போடாமலும் பண்ணலாம். எப்போவும் போல நம்ம வீட்டிலே வெங்காயம் சாப்பிடறவங்களும், அதைக் கண்டாலே ஓடறவங்களும் உண்டு. இப்போ விருந்தாளிங்க வந்திருக்கிறதாலே அவங்களுக்காக நேற்று தோசை பண்ணிக் கொடுத்தேன். தோசைக்கு சைட் டிஷ் ஆக தக்காளிச் சட்னி, மிளகாய்ப் பொடினு இருந்தாலும், வந்திருக்கிறவங்கள்ளே ஒருத்தர் திடீர்னு சாம்பார் இருந்தாத் தான் சாப்பிடுவேன்னு ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

நாம தான் அஞ்சா நெஞ்சி, எதுக்கும் கலங்காதவங்க, திடீர்னு வர எதிர்ப்புக்களையும் சவாலே சமாளினு சமாளிக்கிறவங்கனு அவங்களுக்குத் தெரியலை. பாவம்! ஒரு பிடிவாதப்புன்னகையோடு, "இப்போ என்ன பண்ணுவே?" னு பார்த்துட்டு தோசையைத் தொடாமலேயே உட்கார்ந்துட்டாங்க. அசரலையே! ஒரு சின்ன எலுமிச்சம்பழம் அளவு புளியைக் கோது இல்லாமல் சுத்தம் செய்து, அதோடு ஒரு தக்காளியையும் வைத்து, சாம்பார்பொடி ஒரு ஸ்பூன், கொஞ்சம் பச்சையாக கொத்துமல்லி விதையையும் வைத்து நல்ல நைஸாய் அரைக்கணும். வெங்காயம் சேர்க்கிறவங்க இதோடு சின்ன வெங்காயமாய் இருந்தால் ஒரு இரண்டும், பெரிய வெங்காயம் என்றால் நாலாய் நறுக்கியதில் கால் பாகமும் சேர்த்து அரைக்கவும். வெங்காயம் வேண்டாம்கிறவங்க முதல்லே சொன்னாப்போல் அரைச்சாப் போதும். ஆச்சா????

இப்போ வெற்றி உங்களுக்கே. உங்க முறை வருது, ஜெயிக்க. அடுப்பில் சாம்பார் வைக்கும் பாத்திரத்தை அல்லது ஒரு கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் தாளிக்க விடவும். ,முன்னதாக வேண்டிய காய்களை வெட்டி வைத்துக் கொள்ளவும். இந்த சாம்பாருக்குத் தேவையான காய்கள் முருங்கைக் காய் ஒரு இரண்டு மூன்று துண்டு, குடமிளகாய் ஒன்று, கத்திரிக்காய் சின்னதாய் ஒன்று இருந்தால் போதும், இது எதுவும் இல்லையா? கவலையே வேண்டாம். வெங்காயம், தக்காளியையே நறுக்கி வச்சுக்கவும். எண்ணெயில் கடுகு, மெந்தயம், பெருங்காயம் போட்டு வெடிச்சதும் ப.மிளகாய் ஒன்று, மிளகாய் வத்தல் ஒன்று, கருகப்பிலை போட்டு, கூடவே காய்களையும் போட்டு வதக்கி இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடியையும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாய் வதக்கவும். அரைச்சு வச்சதைக் கொட்டித் தேவையான உப்பையும் போட்டுக் கொதிக்க விடவும். பொடியை எண்ணெயில் வறுத்துட்டதால் சீக்கிரமாய்க் கொதிச்சதும் உபயோகிக்க வசதியாய் இருக்கும். இப்போ ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவை அரை கிண்ணம் தண்ணீர் விட்டுக் கரைச்சு கொதிக்கும் சாம்பாரில் விடவும். நன்றாய்ச் சேர்ந்து கொதித்ததும், கீழே இறக்கிக் கொத்துமல்லித் தழை தூவி சாம்பாரை சூடான இட்லி, அல்லது தோசையோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

பருப்பில்லை என்பதை நீங்களே சொன்னால் தவிர யாரும் நம்ப மாட்டாங்க. அதனால் சொல்லாதீங்க. அட, இவ்வளவு சீக்கிரம் சாம்பார் வச்சாச்சானு கேட்டால், வெற்றிப் புன்சிரிப்பு மட்டும் சிரிக்கவும்.

நானானி, உங்க ஐடம் நாளைக்கு வருது, ஓகேயா???

Sunday, May 31, 2009

வெங்காயம் பிடிக்குமா? பிடிக்காதா?

கொண்டைக்கடலை மூணு நாளா ஊறிட்டு இருக்கு. இந்த வெயில்லே ரொம்ப ஊற வைச்சாலும் வீணாயிடும். ஆகவே நல்லா அலசுங்க. அலசும்போது உங்க மாமியார், மாமனார், நாத்தானார், மச்சினர் ஆகியவங்களை அலசறாப்போல நினைச்சுக்கவும். நல்லாத் தண்ணீர் விட்டு அலசுவீங்க உங்களை அறியாமலேயே. அப்புறமா கொஞ்சம் கொண்டைக்கடலையை எடுத்துத் தனியா வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ஊறிய கடலை இருக்கலாம். மிச்சம் கடலையைக் குக்கரில் வேகவைக்கவும். உ.கி. போடணும்னா அதையும் சேர்த்தே வேக வைக்கவும். இப்போ முதல்லே வெங்காயம் சேர்க்காமல் செய்யற விதம் பார்க்கலாம். சிலருக்கு வெங்காயமே பிடிக்காது. சிலர் சேர்க்கவே மாட்டாங்க. ஆகவே முதல்லே அதைப் பார்க்கலாம். எங்க வீட்டிலே எப்போவுமே இரு முறைகளும் உண்டு. வெங்காயத்துக்கு ஓட்டுப் போடும் உறுப்பினர்களும், வெங்காயத்தைக் கண்டாலே ஓடும் நபர்களும் இருக்காங்க. ஆகவே இரண்டுமே கட்டாயமாய்ச் செய்யப் படும்.

கால் கிலோ கொ.கடலை வேக வைச்சது, பெரிய உ.கிழங்கு ஒன்று வேக வைச்சு உதிர்த்துக் கொள்ளவும்.

தேவையான மசாலாப் பொருட்கள்: மசாலானதும் எல்லாரும் என்னவோ தவிர்க்க வேண்டியதுனு நினைக்காதீங்க. சும்மா மிளகாய்ப் பொடியும், தனியாப் பொடியும் போட்டால் கூட அதுவும் மசாலா தான்.

அரைக்க: பச்சை மிளகாய்: இரண்டு, கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடி, இஞ்சி, ஒரு துண்டு, ஏலக்காய் இரண்டு, கிராம்பு இரண்டு அல்லது மூன்று, தக்காளி நல்ல சிவந்த தக்காளி இரண்டு.இத்தோடு ஊற வைத்து எடுத்து வச்சிருக்கும் கொ.கடலை ஒரு டேபிள் ஸ்பூனையும் சேர்க்கணும். தேங்காய், (விருப்பப் பட்டால்). மாதுளம் விதையும், விரும்பினால்.

புளி ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்(விருப்பப் பட்டால்), ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீ ஸ்பூன்.

இப்போ மேலே சொன்ன பொருட்களில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் தவிர மற்றவற்றை நன்றாய் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஜீரகம் மட்டும் தாளிக்கவும். பின் மஞ்சள் தூள், மி.தூள், மல்லித் தூள் சேர்த்து, அதோடு அரைத்த கலவையையும் சேர்த்து நன்றாய் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் வதக்கவும். எண்ணெய் பிரிய ஆரம்பிச்சதும், கொ.கடலையைச் சேர்க்கவும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி, உ.கிழங்கையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து தளதள வெனக் கொதித்து வரும்போது வெல்லம் சேர்க்கவும். நன்கு கெட்டியானதும், இறக்கி ஜீரகத் தூளைச் சேர்த்துவிட்டுப் பின் பச்சைக் கொத்துமல்லித் தழைகளைப் பொடிப் பொடியாய் நறுக்கிச் சேர்க்கவும். வெங்காயமோ, பூண்டோ இல்லாத கொ.கடலை மசாலா தயாராகிவிட்டது. சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க. அப்புறமா வெங்காயம் சேர்த்துப் பண்ணிப் பார்ப்போம்.

Friday, May 29, 2009

இன்னிக்கு வீக் எண்ட் டிபன் என்ன?


ரொம்ப நாட்கள் ஆச்சு, சமையலறைப்பக்கம் வந்து. இப்போ என்ன சமைக்கலாம்? சொல்லுங்க. காலம்பர நேரம் இந்தியாவிலே. அதனாலே காலை ஆகாரத்துக்குச் சமைப்போமா?? யு.எஸ். மற்ற வெளிநாட்டுக் காரங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க. உங்க நேரத்துக்குச் செய்துக்கலாம். ஓகேயா??

பூரி செய்யலாமா? சிலர் காலம்பர நேரம் எண்ணையானு சொல்றாங்க. காதிலே விழுது. ராத்திரி செய்தாலும் அப்போவும் ஒத்துக்குமா?? யோசிங்க. காலம்பர தான் நல்லது. சாப்பிட்டுட்டு நாள் பூரா ஏதானும் வேலை செய்வோம். அப்போ ஜீரணம் ஆகாதா? ரெடியாகிக்கோங்க. வயிறு காலியா இருக்கட்டும். பூரி செய்ய ரங்கமணிகளைத் தயார் செய்யுங்க. சாப்பிட தங்கமணிகள் தயார் ஆகுங்க. முதலிலேயே மாவு பிசைய வேண்டாம். முதலில் தொட்டுக்க என்ன செய்யறதுனு ஒரு சின்ன கலந்துரையாடல் செய்து முடிவு பண்ணுங்க.

அதாவது எல்லார் கருத்தையும் கேட்டுக்கணும். கடைசியிலே உங்க முடிவை வெளியே சொல்லாமல், அதுப்படி பண்ணிடணும். ஓகேயா?? இன்னிக்கு என்னோட முடிவு பூரியும், தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலாவும். மசாலானதும் ஐயே எனக்கு வேண்டாம்னு ஓட வேண்டாம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா பேரு தான் மசாலா. வெங்காயம் கூட வேணும்னா சேர்த்துக்கலாம். வெங்காயம் சாப்பிட மாட்டீங்கனா அதுவும் வேண்டாம். ஓகேயா?? மனசு சமாதானம் ஆயிடுச்சா?

உ.கி. கால் கிலோவாவது வேண்டும். வெங்காயம் சேர்த்தால் 4 பேருக்கு இது போதும். வெங்காயம் கால் கிலோ. இரண்டு பச்சை மிளகாய். கருகப்பிலை. இஞ்சி ஒரு சின்னத் துண்டு.உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, தாளிக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளிக்க ஒரு ஸ்பூன் எல்லாவற்றிலும், முதல்லே வெங்காயம் போடாமல் பண்ணும் விதம் பார்ப்போமா? ஏன்னா இன்னிக்கு சனிக்கிழமை, வெங்காயமா? அப்படினு அங்கே யாரோ பல்லைக் கடிக்கிறாங்க.

உ.கி. 4 பேருக்கு பெரிய கிழங்காக 3 அல்லது 4 நன்கு குழைய வேக வைக்கவும். குக்கரோ, அப்படியே வேக வைப்பீங்களோ அது உங்க இஷ்டம், இதெல்லாம் சொல்லணுமா என்ன? குழைய வேக வைச்ச உ.கி.யை எடுத்து உதிர்த்து, அதில் தேவையான உப்பு, ம.பொடி, பெருங்காயப் பொடி போட்டுக் கலந்து வச்சுக்கோங்க. அடுப்பில் (ஆமாம், ஆமாம், அடுப்பை மூட்டிட்டுத் தான் இதெல்லாமா சொல்லிட்டு இருப்பாங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்) கடாயை வச்சு, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு போடவும் பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும், கருகப்பிலையும் போடவும். எல்லாம் சிவந்து வந்ததும், கலந்து வைத்த உ.கியைப் போட்டு, விருப்பம் இருந்தால் தக்காளி ஒன்றையும் சேர்க்கவும். தக்காளி ஆப்ஷனல். பின்னர் ஒரு சின்னக் கிண்ணம் நீர் சேர்க்கவும். சேர்ந்து கொதித்து வந்ததும், கீழே இறக்கிப் பொடிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். இப்போ வெங்காயம் போடாத உ.கி. மசாலா பூரிக்குத் தயார்.

வெங்காயம் போடும் முறையில் மற்றது எல்லாம் மேற்கண்டவாறே. தாளிக்கும்போது கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ப.மி, இஞ்சி சேர்த்துக் கருகப்பிலையோடு வெங்காயத்தையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும்வரை வதக்கி விட்டுப் பின்னர் உருளைக்கிழங்குக் கலவை சேர்க்கணும். இதற்குத் தக்காளியே வேண்டாம். இப்போ மசாலா ரெடி. அடுத்து பூரி.

அடுப்பிலே பூரி பொரிக்கத் தேவையான எண்ணெயை வைத்துவிடவும். என்ன ஆச்சரியமா இருக்கா?? ஆமாம், பூரிக்கு அப்படித் தான் செய்யணும். ஆச்சா??? இப்போ எண்ணெய் காய வைக்கணும், அதே சமயம் எண்ணெய் அதிகமும் காயக் கூடாது/ புரிஞ்சதா? ஆகவே அடுப்பு நெருப்பை மிதமான எரிச்சலில் வைக்கணும். எண்ணெய் காயட்டும். அதுக்குள்ளே வேறே யாரையானும் நீங்க காயாதீங்க.

தேவையான அளவு கோதுமை மாவு. அரை கிலோ கோதுமை மாவுனா அதுக்குத் தேவையான உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் அஸ்கா சர்க்கரை, இரண்டு டேபிள் ஸ்பூன் பாம்பே ரவை(சன்னரவை) எல்லாம் கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தெளித்துப் பிசையவும். மாவு நல்லா ஒரு பந்து போல் வரும்வரைக்கும் பிசையணும். நல்லாப் பிசைந்ததும், சின்னச் சின்ன உருண்டைகளாய் உருட்டிக் கொண்டு சப்பாத்திக் கல்லில் போட்டுப் பூரி எந்த அளவிற்கு வரணும்னு நினைக்கறீங்களோ அந்த அளவிற்கு இட்டுக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். பூரி இரண்டு பக்கமும் உப்பிக் கொண்டு, (யாரானும் அடிச்ச உங்க கன்னம் வீங்குமே அதைவிடப் பெரிசா உப்பும்) நல்லா வரும். இந்த மாதிரி உப்பிக் கொண்டும் எண்ணெய் குடிக்காமலும் வரதுக்காகத் தான் எண்ணெயை வச்சுட்டு மாவு பிசையணும், சர்க்கரை, ரவை சேர்க்கணும். பூரியை எஞ்சாய் பண்ணிட்டுச் சொல்லுங்க, எப்படி இருந்ததுனு வர்ட்டாஆஆஆஆஆஆஆஆ???

அடுத்து இப்போ எல்லாம் நாகரீகமான உணவாய்ச் சொல்லப் படும் பூரியோடு சேர்த்து உண்ணப் படும் சனா மசாலா/ எப்படினு பார்ப்போமா??? சனாவை ஊற வைங்க. நல்லா ஒரு நாள் ஊறட்டும். அப்போத் தான் மிருதுவா இருக்கும். அப்புறமாச் செய்யலாம்.

Monday, May 25, 2009

சமையல் ரகசியங்கள் வந்துட்டே இருக்கே!

ரொம்ப நாளாச்சு சமைச்சு, திவா கேட்டார், ரகசியமா வச்சிருக்கீங்கனு. ரகசியம் எல்லாம் எதுவும் இல்லை. நேரம் இல்லை எழுதியதை அப்லோட் செய்ய. அதோடு உடம்புக்கும் வந்துடுச்சு. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாவது கவனிக்கணும். பார்க்கலாம்.

Monday, April 13, 2009

புத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்!

வேப்பம்பூப் பச்சடி செய்யலாமா இப்போ? இந்தப் புத்தாண்டுத் தொடக்கத்திலே தான் வேப்பம்பூப் பச்சடி செய்வாங்க. மற்ற நாட்களிலே வேப்பம்பூ ரசம், அல்லது பொடி செய்து போட்டுப் பிசைந்து சாப்பிடறதுனு இருக்கும். சில வீடுகளிலே ஊரிலே எங்கேயாவது அம்மை போட்டிருந்தால் வேப்பம்பூ பொரிக்க மாட்டாங்க. கிராமங்களிலேயும், சிறிய ஊர்களிலேயும் மட்டுமே இது பார்க்க முடியும். மற்ற இடங்களில் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த அம்மன் காப்பாத்துவா.

வேப்பம்பூவுக்குத் தனி மணம் உண்டு தெரியுமா? காலையிலே எழுந்ததும், சுமார் 4 மணியில் இருந்து 4-30 அல்லது ஐந்து மணிக்குள்ளே வேப்ப மரத்தடியிலே நின்னு மூச்சை உள்ளே இழுத்து ஆழ்ந்து சுவாசிங்க வேப்பம்பூவின் மணம் நாடி, நரம்பிலெல்லாம் பரவும். இப்போ ஜன்னலுக்கு வெளியே கீழே வேப்பம்பூ கொட்டிக் கிடக்கு. முன்னே எல்லாம் கொஞ்சம் சுத்தமாய் இருக்கும், நிறைய எடுத்து வைச்சுக்குவோம். இப்போ அசோகா விதைகளும் விழுந்து சுத்தமே செய்ய முடியலை. :(((( என்ன செய்யறது. ஓரளவு சுத்தமான வேப்பம்பூவை எடுத்துக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வேப்பம்பூ வேணும்.

இந்தப் பச்சடியை இருவிதமாய்ச் செய்யலாம். ஒன்று புளி சேர்த்து. தஞ்சை ஜில்லாவில் புளி சேர்த்தே அதிகம் செய்வாங்க. மற்றது மாங்காய் சேர்த்து. மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் மாங்காய் சேர்த்தே செய்வாங்க. சிலர் இரண்டும் கலந்துக்கிறாங்க. அது எப்படி இருக்கும்னு தெரியலை. இப்போ ஒண்ணொண்ணாய்ப் பார்ப்போமா??

மாங்காயைத் தோல் சீவிப் பொடிப் பொடியாய் நறுக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக வைக்கவும்.வேக ஆரம்பிச்சதும் கொஞ்சம் போல் உப்புச் சேர்க்கவும். நன்று வெந்ததும், மாங்காய்க் குழம்பில் கொஞ்சம் போல மிளகாய்த் தூள்(இது தேவையானால் மட்டும்) சேர்க்கவும். பின்னர் வெல்லம் பொடித்து அதில் சேர்க்கவும். வெல்லம், மிளகாய்த் தூள் எல்லாம் சேர்ந்து நன்றாய்க் கொதித்து சேர்ந்து வரும்போது ஏலக்காய் சேர்த்துக் கீழே இறக்கவும். வாணலியில் நெய்யைக் காய வைத்துஅதில் சுத்தம் செய்த வேப்பம்பூவைப் போட்டுப் பொரிக்கவும். பச்சடியில் சேர்க்கவும். மாங்காய்ப் பச்சடி வேப்பம்பூ சேர்த்துத் தயார்.

அடுத்துப் புளி சேர்த்து: புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்துக் கரைக்கவும். அதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாசனை போகக் கொதிக்கும் போது வெல்லம் சேர்க்கவும். நன்று கெட்டியானதும் கீழே இறக்கி ஏலக்காய் சேர்த்து, முன் சொன்ன மாதிரியே வேப்பம்பூவை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும். வேப்பம்பூப் பச்சடி தயார்.

படம் உதவி கூகிளார்: கபீரன்பன் வந்து வேப்பம்பூப் பச்சடியை பனோரமாவிலே ஏன் போடலைம்பார். அதனால் முன்னாலேயே சொல்லிடறேன்.

Saturday, April 11, 2009

மழை கொட்டணுமா? நான் உதவிக்கு வரேன்!

உங்க ஊரிலே மழையே இல்லையா? உடனே அணுகவும், என்னை. நான் மனசாலே நினைச்சாலே போதும், வத்தல் போடவோ, வடாம் போடவோ. சுட்டெரிக்கும் சூரியனை மறைத்துக் கொண்டு எழுந்திருக்கும் மழை மேகங்கள். வாநிலை அறிக்கையே நம்மைக் கேட்கலாமானு யோசிக்கிறாங்க. ரெண்டு நாளா நினைச்சேன் குழம்பு கறிவடாம் செய்யலாமா? அப்படியே மழை வந்தாலும் அந்த மாவை வடையாத் தட்டிச் சாப்பிடலாம்னு. வங்கக் கடலின் ஏதோ ஒரு மூலையில் இருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்குச் செய்தி போய், உடனேயே கடலோர மாவட்டங்களில் மழையைப் பொழிய வைத்து, என்னோட திட்டத்தைத் தள்ளிப் போட்டுவிட்டது. இனி மீண்டும் வெய்யில் சுட்டெரிக்கும்போது பார்ப்போம் அடுத்த திட்டத்துடன்.

Sunday, March 22, 2009

பாகற்காயில் பிட்லை சாப்பிடணுமா!

இந்த சூடான் புலி, எங்கே இருந்து இது எல்லாத்தையும் பார்க்கிறார்னு புரியலை, உடனே வந்து பின் ஊட்டம் கொடுக்கிறார். ஏற்கெனவே நான் வீக் கொஞ்சம். ஊட்டம் தேவைனு மருத்துவர் சொல்லிட்டே இருக்கார். ஆகவே உங்க பின் ஊட்டம் இன்னும் தெம்பா இருக்கும் எனக்கு. இப்போப் பாகற்காய் பிட்லை எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா? புலி கேட்டிருக்காரே, அவருக்காகத் தான் இதை இப்போப் போடறேன்.

இதுக்கு முதலில் தேவையானது பாகற்காய் தாங்க. பாகல்காய் ஒரு கால் கிலோ எடுத்துக்கோங்க. நல்லா வில்லை, வில்லையா நறுக்கணும். வில்லைனதும் ராமரோட வில் நினைவில் வந்தால் நான் பொறுப்பில்லை. வட்ட, வட்டமாய் நறுக்கணும். இந்தப் பாகல்காயே இரண்டு, மூன்று விதம் இருக்கு. பொதுவா எல்லாரும் பெரிய பாகல் காய் தான் வாங்குவாங்க. ஆனால் மெது பாகல்காய்/மிதி பாகல் காய்னு ஒண்ணு இருக்கு. மிதி பாகல்காய்னதும் ம.பா.வை மிதிக்கிறதோனு நினைக்கவேண்டாம். வேலி பாகல்காய்னு ஒண்ணு இருக்கு. சின்ன பாகல்காய்னால் அதைக் காம்பு மட்டும் நறுக்கி இரண்டாய்ப் பிளந்து வச்சுக்கணும். வேலி பாகல் காயிலேயே மீடியம் சைஸா இருந்தால் வில்லை போட்டுக்கலாம். வில்லையும் போட்டுக்கலாம். உங்க இஷ்டம்.

நறுக்கின பாகல் காயில் கொஞ்சம் தயிர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொஞ்ச நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் வைக்கலாம். அதுக்குள்ளே நீங்க இரண்டு மெகா சீரியலும் பார்த்துக்கலாம். மெகா சீரியல் முடிஞ்சதும் ம.பா. இருந்தார்னா நல்லது. இல்லாட்டி நீங்களே தான் சமைச்சாகணும். து.பருப்பு ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கணும். குக்கரிலேயோ, கல்சட்டியிலேயோ து.பருப்பை நல்லாக் குழைய வேக வச்சுக்கணும். முதல்நாளே மொச்சை, கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றில் எது பிடிக்குதோ அதை ஊற வைச்சுக்கலாம். அதையும் பருப்போடு சேர்த்து வேக வைச்சுக்கலாம். இது எல்லாம் தனியாத் தெரியணுமானால் அப்புறமாய்ப் போடலாம். உங்களுக்குப் பிடிக்காது ம.பா.வுக்கு மட்டுமே பிடிக்கும்னா போடாமலும் இருக்கலாம்.

இப்போ பாகல் காய் தயார். து.பருப்பு தயார். கொ.கடலை., மொச்சை தயார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ மசாலா சாமான்கள் வறுத்துக்கணும். மசாலான்னாலே எல்லாரும் கரம் மசாலா ஒண்ணுதான் நினைச்சுக்கறாங்க. நாம போடற உப்பு, காரமே மசாலாவோட சேர்த்தி தான். டூ இல்லை. நீங்க தயார் செய்யப் போற பிட்லை 4 பேர் சாப்பிடலாம்னு வச்சுக்குங்க. (பின்னே? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு எல்லாருக்கும் கொடுக்கவேண்டாமா?) ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுப் புளி, 4ல் இருந்து 6 மி.வத்தல். (காரம் அவங்க, அவங்க ருசிக்குத் தகுந்தாற்போல்) ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, (இது போடாமலும் செய்யலாம்) கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உ.பருப்பு ஒரு ஸ்பூன், 5 அல்லது 6 மிளகு, ஒரு சின்னக் கட்டிப் பெருங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் போன்றவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளணும்.

நல்லா சிவப்பா, உங்களுக்குக் கோபம் வந்தால் மூஞ்சி எப்படிச் சிவக்குமோ அவ்வளவு சிவப்பா வறுத்துக்கலாம். வறுத்ததை ஆற விடவும். அதே வாணலியில் தயிர், உப்பு, ம.தூள் சேர்த்து ஊற வைத்த பாகல்காயைப் போட்டுச் சற்றே வறுக்கவும். தயிரை எல்லாம் பிழிஞ்சு எடுத்துட்டுத் தான். ம.பா.வை வேலை வாங்கப் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா? அல்லது மாமியாரோ, நாத்தனாரோ அகப்பட்டால் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா அதே மாதிரித் தான். மிச்சம் இருக்கும் தயிரை ஜூஸுனு சொல்லி ம.பா.கிட்டேயே கொடுக்கலாம் வீணடிக்காமல். நம்ம ம.பா. கிட்டே இதெல்லாம் பலிக்கலை, தோட்டத்துக் கறிவேப்பிலை தான் சாப்பிட்டுட்டு இருக்கு அந்த மாதிரி பிழிஞ்சதும் மிச்சம் இருக்கும் தயிரை எல்லாம்.இப்போ வதக்கிய பாகல்காயை வேக வைத்த துவரம்பருப்போடு சேர்க்கவும். புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். நாலு பேருக்கு வருமானு பார்த்துக்கோங்க. உப்பு, ம.பொடி சேர்க்கவும். இது கொஞ்சம் கொதிக்கட்டும். அதுக்குள்ளே வறுத்து வைச்சதையெல்லாம் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். நல்லா ஒரு கொதி வந்ததும், அரைச்சு வச்சதைக் கலக்கவும். நல்லாக் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். சேர்க்காமலும் இருக்கலாம். அது உங்களுக்கு டயபடீஸ் இருக்கா இல்லையாங்கறதைப் பொறுத்து. கீழே இறக்கி வைத்துத் தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பச்சைக் கொத்துமல்லியும் போடலாம். சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

டிஸ்கி: படங்கள் உதவி: கூகிளார். திடீர்னு பாகற்காய் பிட்லை படம் போடணும்னா என்ன செய்யறது? அதான் கூகிளாரைக் கேட்டதும் கொடுத்துட்டார். நன்றிங்கோ!

Sunday, March 15, 2009

என்ன?? யாரையுமே காணோம்?

கொழுக்கட்டையிலே ஆரம்பிச்சதா என்னனு தெரியலை, யாருமே இதுக்கு பதிலே போடலை, எல்லார் வாயிலேயும் இன்னும் கொழுக்கட்டை இருக்கு போலிருக்கு. இப்போ ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமே! அது தான் இந்த ராத்திரி வேளையிலேயும் கடமை தவறாம எழுதிட்டு இருக்கேன்.

அரிசி எந்த அரிசியா இருந்தாலும் கொஞ்சம் வறுக்கணுங்க. என்ன?? என்ன?? ம.பா.வைத் தான் வறுக்கத் தெரியுமா? அது பாட்டுக்கு அது. நல்லா வறுத்தெடுங்க. கூடவே அரிசியையும், ஆனால் இதை நல்லா வறுக்கக் கூடாது. கொஞ்சம் சூடு வரப் புரட்டி எடுக்கணும். ம.பா. உங்களுக்குத் தெரியாமல் சினிமா,கினிமா போயிட்டு வந்தார்னு வச்சுக்குங்க. அந்த சினிமாவும் உங்களுக்குப் பிடிக்காத நடிகர்தான்னும் தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்க. இருந்தாலும் சும்மாவானும் கொஞ்சமே கொஞ்சமாவது பிகு காட்ட மாட்டீங்களா?அந்த மாதிரி லேசா வறுக்கணும். முடிஞ்சால் ம.பா.வையே வறுக்கச் சொல்லிடுங்க. சினிமா போயிட்டு வந்ததுக்குத் தண்டனையாவும் இருக்கும். கொழுக்கட்டை சரியா வரலைனா, அவராலேதான்னு சொல்லிடலாம். எப்படி ஐடியா?

உளுத்தம்பூரணம்: இது உழுந்தா, இல்லை உளுந்தானே ஆராய்ச்சி இன்னும் முடியலை. அதைத் தனியா வச்சுப்போம். ஒரு கப் உளுந்தை ஊற வைச்சு, மிளகாய் வத்தல், பெருங்காயம், (பூரிக்கட்டையால் ம.பா.வைஅடிக்கும்போது வருமே அந்தக் காயம் இல்லை) வாசனைக்குச் சேர்த்து உப்பும் தேவைக்கு ஏற்ப, (நீங்களும் சாப்பிடும் ஐடியா இருந்தால் உப்பைக் கொஞ்சம் கவனமாய்ச் சேர்க்கவும். அப்புறம் முனியம்மாவுக்குக் கொடுக்கிறதால் இருந்தால் எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கணும்.) அப்புறமா வாங்க மாட்டாங்கறதோட இல்லாமல், வேலை செய்யற மத்த வீடுங்களிலேயும் உங்க மானம் போயிடும். கவனம் தேவை.

எல்லாத்தையும் அரைச்சீங்களா? அட, சொல்லலையா? எல்லாத்தையும் மிக்ஸியிலே போட்டு அரைக்கணும்ங்க. இப்போ எல்லாம் யாரு அம்மி, கல்லுரல்னு கட்டி அரைக்கிறாங்க?? அரைச்சதை ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, இட்லிப் பானையில் வச்சு வேக வைக்கணும். வேகாத வெயிலில் போய் ம.பா.வைத் தேங்காய் வாங்கி வரச் சொன்னீங்களா இல்லையா? அந்த மாதிரி வேகாம இருந்துடப் போகுது. நல்லா வேகணும். ஒரு குச்சியால் குத்திப் பார்த்தீங்கன்னா, இங்கேயும் ம.பா.வே உதவிக்கு வருவார். கை சுடாமல் இருக்க அவரையே குத்திப் பார்க்கச் சொல்லலாம். என்ன?? வேலைக்குப் போயிடறாரா? இதெல்லாம் அவர் வீட்டிலே இருக்கும்போது வச்சுக்கணும், இல்லைனா லீவு போடச் சொல்லணும். உங்களை மீறி அவர் வேலைக்குப் போயிட முடியுமா? ஒட்டாமல், குச்சியில் தான், ஒட்டாமல் வந்ததும் எடுத்து, உதிர்த்து, (எவ்வளவு வேலை பாருங்க, இதுக்குத் தான் ம.பா. கூடவே இருக்கணும்) தாளிதம் செய்த வாணலியில் போட்டுப் புரட்டி வச்சுக்குங்க. ம.பா. மாட்டேன்னு சொன்னார்னா அவரைத் தனியாப் புரட்டி எடுத்துடலாம்.

உளுத்தம் பூரணம் இப்போ ரெடி. மாவிலே கிண்ணங்கள் போல் சொப்புப் பண்ணி அதில் வைத்து மூடி, மறுபடி இட்லிப் பானையில் வேகவிட்டு வைக்கச் சொல்லுங்க. உங்க ம.பா.வை. அப்புறமா எல்லாக் கொழுக்கட்டையும் ரெடி ஆனதும் உங்க தோழிகளை அழைத்து, பெருமையாக் காட்டலாம். ஆனால் ஒண்ணு, மூச்சு விடக் கூடாது. ம.பா. தான் செய்தார்னோ, அவர் ஒத்தாசை இல்லைனா உங்களால் முடியாதுனோ. அலட்டிக்கணும் நல்லா, அப்புறம் கொழுக்கட்டை செய்யறதைப் பத்தி முடிஞ்சால் வகுப்பு எடுங்க.