எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, July 11, 2013

இன்னிக்குக் காலம்பர வெந்தய தோசை!

வெந்தய தோசை தெரியுமா ? சாதாரணமாக எல்லாருமே இட்லி,தோசைக்கு அரைக்கிறச்சே ஒரு டீஸ்பூனிலிருந்து 2 டீஸ்பூன் வரைக்கும் வெந்தயம் சேர்ப்பாங்க.  இது அப்படி இல்லை. நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வெந்தயம் போடணும்.  இதிலே இரண்டு, மூணு முறை இருக்கு. ஒவ்வொண்ணாப் பார்ப்போம்.

முதல் முறை:

இட்லிப் புழுங்கலரிசி அரை கிலோ,

50 கிராம் வெந்தயம் அல்லது ஒரு சின்னக் கிண்ணம் வெந்தயம்.

உப்பு தேவைக்கு ஏற்ப.

புழுங்கலரிசியைக் களைந்து நீர் விட்டு ஊற வைக்கவும்.  நாளைக் காலைக்கு வேணும்னா இன்னிக்கு மாலைக்குள் அரைச்சு வைக்கணும். இந்த தோசை கொஞ்சம் புளிப்பு ஏறினாலே சுவைக்கும்.  அடுத்து வெந்தயத்தைக் கல் அரித்துக் களைந்து  தனியாக ஊற வைக்கவும். கிரைண்டரில் முதலில் ஊறிய வெந்தயத்தைப் போட்டு அரைக்கவும்.  உளுத்தம் விழுது போல் புசுபுசுவென வரும். வெந்தயம் முழுதும் அரைபட்டதும் பாத்திரத்தில் மாற்றிவிட்டு அல்லது அதிலேயே அரிசியைப் போட்டு அரைக்கவும்.  அரிசியை நன்கு நைசாக அரைக்க வேண்டும் என்பதில்லை.  அதுக்காக ரொம்பக் கொரகொரனும் இருக்கக் கூடாது. சன்ன ரவை போல் அரைக்கவும்.  உப்புப் போட்டுக்கலந்து வைத்து மறுநாள் தோசை வார்க்கவும்.  வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி, மிளகாய்ப் பொடி போன்றவற்றோடு நன்றாக இருக்கும்.  இந்த தோசை கொஞ்சம் கனமாகவே வார்க்க வேண்டும்.  ரயில் பிரயாணத்துக்கு ஏற்றது.  நாளைக் காலை படம் சேர்க்கிறேன். ஹிஹிஹி, படம் எடுக்க மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)

மற்ற முறைகள் கீழே:

புழுங்கலரிசி அரை கிலோ, பச்சரிசி 200 அல்லது ஒரு கிண்ணம், உளுந்து அரைக் கிண்ணம், வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு

புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து களைந்து ஊற வைக்கவும்.  வெந்தயத்தைக் களைந்து தனியாக ஊற வைக்கவும்.  சுமார் மூன்று அல்லது நான்கு மணி ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி, உளுந்து கொஞ்சம் அரைபட்டதும் வெந்தயத்தை ஊறிய மஞ்சள் நீரோடு கலந்து அரைக்கவும். இதையும் ரொம்ப நைசாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாகவே இருக்கட்டும்.  மாவு புளித்ததும் தோசையை மெலிதாகவும் வார்க்கலாம்.  ஊத்தப்பமாகவும் வார்க்கலாம்.

அடுத்தது

புழுங்கலரிசி அரை கிலோ, துவரம்பருப்பு நூறு கிராம், வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு

புழுங்கலரிசியைத் தனியாகவும், துவரம்பருப்பையும், வெந்தயத்தையும் ஒன்றாகவும் களைந்து ஊற வைக்கவும்.  நான்கு மணி நேரம் ஊறியதும் முதலில் து.பருப்பு, வெந்தயம் போட்டு அரைத்துக் கொண்டு அதிலேயே அரிசியைப் போட்டு அரைக்கவும்.  உப்புச் சேர்த்துக் கலந்து வைத்து பின் புளிப்பு வந்ததும் தோசையாக வார்க்கவும்.  இது சிறிது மஞ்சள் நிறத்தோடு இருக்கும்.

13 comments:

 1. சூப்பர் பதிவு. கடைசி வகை தான் எப்போதும் நான் செய்வது. மற்ற இரு வகைகள் இப்போது தான் அறிந்து கொண்டேன். ரொம்ப ரொம்ப நன்றி!. இரண்டாம் வகையில் ஒரு சந்தேகம். உளுந்து சற்று அரைபட்டதும், அரிசி, பிறகு வெந்தயம் என்ற வரிசையில் சேர்த்து அரைக்க வேண்டுமா?. அப்புறம் இரட்டை விளிம்பு தோசை என்பது முதல் வகை தானா?. அல்லது வேறு மாதிரி செய்ய வேண்டுமா? நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பார்வதி ராமச்சந்திரன், முதல் வருகைக்கு நன்றி. இரட்டை விளிம்பு தோசை என்பது முதலில் சொன்னதுவே தான்.இரண்டாம் முறையில் அரிசியோடு சேர்த்து நனைத்த உளுந்து நன்கு அரைபடும் வரை காத்திருக்க வேண்டாம். ஒன்றிரண்டாக மசிந்ததுமே வெந்தயத்தைச் சேர்த்துவிடலாம்.

   Delete
 2. செய்து பார்த்திடுவோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, செய்து சாப்பிட்டுப் பாருங்க, வெங்காயத் துவையலோடு சூப்பரா இருக்கும். :))))

   Delete
 3. மூன்று விதமான சுவை....

  வெந்தய தோசை நல்லது! செஞ்சுடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. உடம்புக்கு நல்லது. முக்கியமாய் சர்க்கரை நோய் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. :)))) எல்லாருமே சாப்பிடலாம் வெங்கட், செய்து பாருங்க.

   Delete
 4. என்னுடைய அப்பா வெந்தய தோசை என்றால் உயிரை விடுவார். ஆனால் ஒன்று. எப்படிச் செய்து போட்டாலும் 'ஹேமா செய்வது போல இல்லை' என்று விடுவார். (ஹேமா என் அம்மா) எனக்கும் ரொம்பப் பிடிக்கும். என் அம்மாவுக்கு எந்த தோசையானாலும் அரைத்தவுடன் வார்த்துச் சாப்பிடுவது பிடிக்கும். எனக்கும் அதுவும் பிடிக்கும். ஆனால் லேசாக புளிப்பு ஏறும் சமயம் சாப்பிடுவது நல்ல ருசி!

  என் பாஸ் அரிசியுடன் சேர்த்தே வெந்தயம் போட்டு அரைத்து விடுவார். நிறைய வெந்தயம். சமயங்களில் தோசை எடுபடுவதே கஷ்டமாகக் கூட இருக்கும். இப்போது வாசித்துக் காட்டியவுடன் வெந்தயத்தைத் தனியாக ஊற வைத்துச் செய்யலாம் என்று எண்ணம் வந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வது காலையில் அரைத்து மாலையில் வார்க்கும் வெந்தய தோசையோனு நினைக்கிறேன் ஶ்ரீராம். அதுக்கு உளுந்தோடு சேர்த்துக் கொஞ்சம் அதிகமாக வெந்தயத்தை நனைத்துவிட்டு உளுந்து தனியாக, அரிசி தனியாக அரைத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்து மாலையில் வார்ப்போம். அதிகப் புளிப்பும் இருக்காது. கடுக்கவும் கடுக்காது.

   எப்போதுமே வெந்தயத்தைச் சேர்க்கையில் உளுந்தோடு தான் சேர்க்கவேண்டும். அரிசியோடு சேர்க்கக் கூடாது. வெந்தயம் அதிகமாய்ப் போட்டால் உளுந்து ஒரு கைப்பிடி போடச் சொல்லுங்க. அல்லது உளுந்தே வேண்டாம். ஒரு சின்னக் கிண்ணம் வெந்தயம் தனியாக நனைத்து அரைத்து அரிசியைக் கலந்தும் வார்க்கலாம். தோசை எப்போதுமே கல் நன்றாகக் காய்ந்த பின்னர் மாவை ஊற்றினால் தானாகவே தூக்கிக் கொண்டு வந்துவிடும். நாம் சிரமப் படவே வேண்டாம். எனக்கு சுலபமான ஒரு வேலையே தோசை வார்ப்பது தான். எப்போதாவது கொஞ்சம் மக்கர் செய்யும். அதுவும் கல்லை நன்கு தேய்த்து வைத்துவிட்டால் அன்று முதல் இரு தோசைகள் கொஞ்சம் பிகு செய்துக்கும். அப்புறம் சரியாயிடும்.

   Delete
 5. கல்லைத் தேய்த்துவிட்டு எண்ணெய் தடவி வைப்பேன். என்றாலும் சில சமயம் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கும். :))))

  ReplyDelete
 6. உளுந்துடன் தான் வெந்தயம் ஊறவைத்து செய்வேன். இந்த மூன்று முறைகளும் செய்து பார்க்க வேண்டும்.

  தில்லி சென்ற புதிதில் நண்பர் ஒருவரை அடை சாப்பிட வரவழைத்து புதுக் கல்லில் எடுக்க வராமல் பாடுபட்ட வரலாறுகளும் உண்டு...:))

  தோசைக்கல்லில் உப்பும் எண்ணெயும் சேர்த்து தடவி மூன்று நாட்கள் வெய்யிலில் வைத்து எடுக்கலாம். வெங்காயம் தேய்ப்பது எளிது...

  ReplyDelete
  Replies
  1. புதுக்கல் என்றால் வெங்காயத்தைக் கொஞ்சம் போல் நறுக்கி ஒரு வாரம் வரை வதக்கிவிட்டுப் பின் கொட்டி விடவேண்டும். பாதி வெங்காயம் இருந்தாலும் போதும். அப்புறம் கல் பழகி விடும். தேய்த்துவிட்டுப் பின்னர் நல்லெண்ணெய் தடவி வைக்க வேண்டும். தோசை வார்க்கும்போதும் குறைந்த பக்ஷம் முதல் தோசையாவது நல்லெண்ணெயில் வார்க்க வேண்டும். கல்லும் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும். கல்லில் எண்ணெயைத் தடவிக் காய வைத்துப்பின்னர் தோசை மாவை ஊற்றிவிட்டு அடுப்பைத் தணித்துக் கொண்டு வார்க்கலாம். தோசை தீயவும் தீயாது. நன்றாகவும் எடுக்க வரும். கடுகு, உளுத்தம்பருப்பையும் தோசைக்கல்லில் எண்ணெயில் போட்டுத் தாளிதம் செய்து கொள்ள எடுத்துக் கொள்ளலாம். அநேகமாய்ச் சட்னி அரைப்போமே. சட்னியில் அந்தத் தாளிதத்தைக் கலக்கலாம். அதன் பின்னர் தோசை வார்த்தாலும் நன்றாக எடுக்க வரும்.

   Delete
 7. அருமையான குறிப்பு. வெந்தயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. உளுத்தப் பருப்பு இல்லாமலே வார்ப்பதெ நல்ல பயன்.
  மைதாமாவு தோசை வார்ப்பதற்கு முன் என் அம்மா இப்படித்தான் கல்லில் கடுகு வெடிக்க விட்டு மாவில் சேர்த்துக் கொள்வார்.
  பிறகு தோசைமெலிதாக வார்க்க வரும். நல்ல குறிப்பு கீதா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரேவதி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. அப்பாதுரை உங்களைக் கலாய்த்திருக்காரே அவரோட பதிவிலே பார்க்கலையா? ")))) சிரிப்புத் தாங்கலை! :))))) உங்களைக் கேட்டிருப்பார்னு நினைக்கறேன்.

   Delete