எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, July 8, 2018

உணவே மருந்து! முள்ளங்கிக் கீரை! 3

முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொண்டு அதில் கீரையையும் நரம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இட்லித் தட்டில் ஆவியில் வேக விட வேண்டும். பின்னர் கடாயில்தே.எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உ.பருப்பு தாளித்துக்கருகப்பிலை போட்டு வதக்கியதும். வெந்து எடுத்ததை உதிர்த்து அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். உதிராக வரும் வரை கிளறணும். தேவையானால் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கலாம்.

அடுத்துப் பொரிச்ச குழம்பு போல் செய்யலாம்.

ஒரு கட்டு முள்ளங்கிக்கீரை பொடியாக நறுக்கவும்.

பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு அரைக்கிண்ணம் நன்கு குழைய வேக வைக்கவும்.
உப்பு தேவைக்கு
வறுத்துப்பொடிக்க

மிளகு ஒரு டீஸ்பூன்

மி.வத்தல் 2

அரைக்க

ஜீரகம் ஒரு டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் (தேவையானால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு அரைக்கையில் சேர்க்கலாம்.)

தாளிக்க தே. எண்ணெய் கடுகு, உபருப்பு, அரை மி.வத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயத் தூள்
 ஓர் சட்டியில் அல்லது உருளி அல்லது சமைக்கும் பாத்திரத்தில் ஓர் முட்டை எண்ணெய் ஊற்றிக் கொண்டு முள்ளங்கிக்கீரையை நன்கு வதக்கவும். தேவையான நீர் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் பாசிப்பருப்பைச் சேர்க்கவும். கொதிக்கையில் வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்வத்தல், மிளகுப்பொடியை உங்கள் காரத்துக்கு ஏற்பச் சேர்க்கவும். உப்பையும் சேர்க்கவும். ஐந்து நிமிஷம் கொதித்த பின்னர் சீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்க்கவும். கொதித்ததும் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு. மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். கீரை வேகும்போதே பிடிக்கும் எனில் ஊற வைத்த மொச்சை அல்லது கொண்டைக்கடலையைச் சேர்க்கலாம். நான் பொதுவாகப் பொரிச்ச குழம்பு, புளி விட்ட குழம்பு, கூட்டு வகைகளுக்கு அப்போதே வறுத்துக் காய்கள் வேகும்போது சேர்ப்பேன். வெந்து விடும். இது அவரவர் வீட்டுப் பழக்கம் மற்றும் விருப்பம்.

Friday, July 6, 2018

உணவே மருந்து! முள்ளங்கிக்கீரை 2

முள்ளங்கிக் கீரையைப் பல விதங்களில்சமைக்கலாம். பொதுவாகச்செய்வது முள்ளங்கிக் கீரை ஒருகட்டு எடுத்துக் கொண்டு அதை அடி நரம்பு நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் அல்லது வாணலியில் பாசிப்பருப்பை நன்கு அலம்பிக் களைந்து போடவும். ஒரு கட்டு முள்ளங்கிக் கீரைக்கு அரைக் கரண்டி பாசிப்பருப்புப் போதும். அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் எனக் கணக்கு வைச்சுக்கவும். கீரையையும் நன்கு அலசி அலம்பிச்சேர்க்கவும். கீரை வேக நேரம் எடுக்கும் என்பதால் பாசிப்பருப்புடனேயே போடலாம். மஞ்சள் பொடி சேர்க்கவும். நான் எல்லாவற்றுக்கும் மஞ்சள் பொடி தாராளமாகவே சேர்ப்பேன். உடலுக்கு நல்லது. நல்ல ஆன்டி பயாடிக்!

சிறிது நேரம் கழித்துப் பருப்பு வெந்து விட்டதா எனப் பார்த்தால் பருப்பு நசுங்கும் பதம் வந்திருக்கும். அப்போது  உப்புச் சேர்க்கவும். உப்புச் சேர்த்து ஐந்து நிமிஷம் போல் வேக விடவும். வேக வைத்த நீரை வடிகட்டித் தனியாக வைக்கவும். அதில் தக்காளிச் சாறு சேர்த்து மிளகு, ஜீரகம் போட்டுப் பாலேடு போட்டோ அல்லது வெண்ணெய் போட்டோ சூப் மாதிரிக் குடிக்கலாம். வெந்தகீரையைத் தனியாக வைக்கவும். கடாயில் தாளிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், கடுகு, உளுத்தம்பருப்பு, (பிடித்தால் சீரகம்) சேர்க்கவும். பெருங்காயத் தூள் போட்டு மேற்சொன்ன அளவுக் கீரைக்கு ஒரு மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெந்து எடுத்த கீரையைப் போடவும். கீரையில் கொஞ்சம் ஜலம் இருக்கும். பிழிந்தெல்லாம் எடுக்க வேண்டாம். அதோடு போடுங்க! வதக்கும்போது ஜலம் வற்றி விடும்.

கீரையைப் போட்டு ஒரு வதக்கு வதக்கிக் கொண்டு ஒரு டீஸ்பூன் சர்க்கரை (கீரையின் துவர்ப்பை எடுக்கும்.) சேர்த்துத் தேங்காய்த் துருவலும் சேர்க்கவும். அடியில் உள்ள ஜலம் வற்றும் வரை அடுப்பில் வைத்துக் கிளறிக் கொடுக்கவும்.பொதுவாக எல்லாக் கீரைகளுக்குமே நான் என்ன செய்தாலும் தே.எண்ணெயில் தான் தாளிப்பேன். அது உங்க சௌகரியம் போல் செய்யவும். நன்கு கிளறியதும் கீரையைச் சூடான சாதத்துடன் சாப்பிடலாம். வத்த்க்குழம்பு, சாம்பார் எதுவாக இருந்தாலும் ஓகே!

அடுத்த முறை

முள்ளங்கிக்கீரை ஒரு கட்டு

உருளைக்கிழங்கு ஒன்று நன்கு வேக வைத்துக்கொள்ளவும்

தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

மி.வத்தல் அல்லது மி.பொடி அவரவர் விருப்பம் போல்

மி.பொடி வேண்டாம்னா சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன்

வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கியது

ஜீரகம், அரைக்க ஒரு டீஸ்பூன்,  தாளிக்க ஒரு டீஸ்பூன், கடுகு தாளிக்க

மஞ்சள் பொடி, உப்பு

தக்காளி ஒன்று, பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் ஒன்றிரண்டாக மிக்சியில் அடித்துஎடுக்கவும்.

தாளிக்க நெய் அல்லது எண்ணெய் அவரவர் விருப்பம் போல்

உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்துப் பொடியாக நறுக்கவும்.கீரையையும் பொடியாக நறுக்கி நன்கு அலம்பி வைக்கவும். தேங்காய்த் துருவலோடு சாம்பார்ப் பொடி அல்லது மி.பொடி அல்லது மி.வத்தல் போட்டு ஜீரகத்தையும் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.

கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு , ஜீரகம் தாளிக்கவும். மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு  பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளிக்கலவையைப் போட்டு வதக்கவும். வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்னர் கீரையைப் போட்டு சற்று வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து அதோடு அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பையும் போட்டு ஒரு தட்டால் மூடி வேக வைக்கவும். கீரை வேகக் கொஞ்சம் நேரம் ஆகும். ஆகவே நிதானமான தீயில் வேக வைக்கவும். அடிக்கொரு தரம் தட்டைத் திறந்து கிளறிக் கொடுக்கவும். கீரையும் உருளைக்கிழங்கும் நன்கு வெந்து கறி பதத்துக்கு வந்ததும் கீழே இறக்கவும். சப்பாத்தி, சாதம் எல்லாவற்றோடும் சாப்பிடலாம். எந்தக் கீரையையும் இம்மாதிரிப் பண்ணலாம் எனினும் முள்ளங்கி, முருங்கை போன்றவை அரிதாகச் செய்வதால் அவற்றில் இம்மாதிரிச் செய்யலாம்.