எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, April 28, 2018

உணவே மருந்து! பாலக் பனீர்

தொடர்ந்து எழுத நினைக்கையில் தான் தடங்கல்கள்.  இம்முறை  இ கலப்பை பாடாய்ப் படுத்தினாலும் மீட்டதிலும் சில, பல பிரச்னைகள். நாம் ஷிஃப்ட் அழுத்தாமலேயே ஷிஃப்டில் உள்ள எழுத்துகள் வருகின்றன. ஈ போட்டு எழுத வேண்டியது அதுவரவில்லை. போடாமலேயே 'இ' சேர்த்து எழுதும்போது ணீ என மாறி  விடுகிறது. தேவையில்லாத இடங்களில் கால் வாங்கிச் சேர்கிறது. வேகமான தட்டச்சைச் செய்ய முடியலை! ஏதோ ஒரு சின்னப் பிரச்னை. என்னனு புரியலை!

பாலக் பனீர் செய்ய: பாலக் ஒரு கட்டு.

பனீர் சுமார் 100 கிராம் அல்லது அவரவர் விருப்பத்துக்குத் துண்டங்களாகச் சதுரமாக வெட்டி வைக்கவும். உப்புக் கலந்த வெது வெதுப்பான நீரில் கழுவி வைக்கவும்.

தனியே ஒரு கடாயில் வெண்ணேய் அல்லது நெய் ஊற்றீப் பனீர்த் துண்டங்களை  வறுத்துத் தனியாக வைக்கவும்.

பச்சை மிளகாய் 2, இஞ்சி ஒரு சின்னத் துண்டு, பூண்டு தேவையானால் 4

தக்காளி  இரண்டு பழமாக, வெங்காயம் ஒன்று

மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், மல்லித் தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், கரம் மசாலா தேவைக்கேற்ப.

உப்பு, ஆம்சூர் பொடி ஒரு டீஸ்பூன்,  எண்ணெய்

தக்காளி  ப்யூரி அல்லது வீட்டில் எடுக்கப்பட்ட ப்யூரி

தாளிக்க ஜீரகம், சோம்பு, சர்க்கரை கொஞ்சம்

முதலில் பாலக்கைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய்  ஊற்றி ப் பாலக்கைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். ஆற வைக்கவும்.

தக்காளி , வெங்காயத்தைப் பச்சையாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.  அந்த ஜாரிலேயே வதக்கிய பாலக், இஞ்சி, ப.மி. பூண்டு போட்டு அரைக்கவும்.

இப்போது மறுபடி கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய்   ஊற்றி  ஜீரகம் சோம்பு தாளிக்கவும். முதலில் வெங்காயம் தக்காளிக் கலவையைப் போட்டு நன்கு எண்ணெய்   பிரியும் வரை வதக்கவும். சர்க்கரையைச் சேர்க்கவும். சீக்கிரம் வதங்கும். அதன் பின்னர் அரைத்த பாலக் விழுதைப் போட்டு வதக்கவும். வதக்கும்போதே மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும். நன்கு வதக்கவும். மறுபடி எண்ணெய்  பிரியும் சமயம் உப்புச் சேர்க்கவும். தக்காளி  ப்யூரியை கெட்டியாக இருந்தால் கொஞ்சம் ஜலம் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். அல்லது பெரிய தக்காளி  இரண்டை மிக்சி ஜாரில் நன்கு அரைத்துச் சேர்க்கவும்.

கொதிக்க விடவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். கொதித்து வரும்போது கரம் மசாலாத் தூள், ஆம்சூர் தூள் இரண்டும் சேர்க்கவும். நன்கு கொதிக்கையில் வறுத்த பனீர்த் துண்டங்களைச் சேர்த்துக் கீழே இறக்கவும்.  புதுசாக எடுத்த க்ரீம் கிடைத்தால் மேலே அலங்காரமாக ஊற்றலாம்.  ஒரு சிலர் கொழுப்புச் சத்துள்ள பால் சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம்.

Image result for பாலக் பனீர்

இதிலேயே இன்னொரு முறாஇயும் இருக்கு. அது நாளாஇ

எழுத்துப் பிழை பொறூக்கவும். :(

Sunday, April 15, 2018

உணவே மருந்து! கீரை வகைகளில் கீரைச் சுண்டல்!

அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா! அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன். முடியறதில்லை. பொதுவாக எல்லாக் கீரைச் சமையல்களும் ஒரே மாதிரி என்பதால் எல்லா வகைக்கீரையையும் சமைக்கும் விதம் குறித்துச் சொல்லப் போவதில்லை. அந்த அந்தக் கீரையின் மருத்துவ குணங்கள், பலன் பற்றி மட்டும் குறிப்பிடப் போகிறேன். போன பதிவில் கீரைப் பருப்பு உசிலி பற்றிப் பார்த்தோம். முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை உட்பட எல்லாக் கீரைகளிலும் இவ்வகைப் பருப்பு உசிலியைத் தயாரிக்கலாம். 

முதல்லே நெ.த. கேட்ட கீரைச் சுண்டல். சமீபத்தில் ஒரு ஓட்டலில் கூடச் சாப்பிட்டாலும் அதில் பூண்டு சேர்த்திருந்தார்கள். அது என்னமோ பூண்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துக்கறதே இல்லை. நெஞ்செரிச்சல் வந்துடுது! ஒரு மாதிரியாக ஏப்பம் வரும்! ஆகவே பூண்டே வெளியே சென்றால் ஓட்டல் சாப்பாட்டில் தவிர்க்க முடியாமல் சாப்பிட்டால் தான். நான் பெரும்பாலும் ஓட்டலில் சாப்பாடு சாப்பிடுவதை இதனாலேயே தவிர்ப்பேன். ஆனால் அன்று காலை ஆகாரம் சாப்பிடாத காரணத்தினால் ஒருவேளையாவது சாப்பிடணுமே என மதியம் சாப்பிட நேர்ந்தது.

எந்தக் கீரையானாலும் ஒரு கட்டு எடுத்துக் கொண்டு நன்கு அலசிக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொஞ்சம் பாசிப்பருப்பை எடுத்துக் கழுவிக் கொண்டு ஊற வைக்கவும். ஒரு கட்டுக்கீரைக்கு அரைக்கரண்டி பாசிப்பருப்பு போதும். தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு.

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல். தேவையானால் கொஞ்சம் போல் சர்க்கரை

கீரையையும் பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு நசுங்கும் பதம் வரும் வரை வேக வைத்துப் பின்னர் உப்புச் சேர்க்கவும்.  அதிகப்படி நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டால் தக்காளிச் சாறு சேர்த்தோ சேர்க்காமலோ மிளகுத் தூள் தூவி சூப் மாதிரிச் சாப்பிடலாம்.  கீரையை வடிகட்டிய பின்னர் அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் கொண்டு கடுகு, உபருப்பு தாளிக்கவும். மி.வத்தலைக் கிள்ளிச் சேர்க்கவும். வெந்த கீரையைப் போட்டு நன்கு கிளறவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். (எங்க வீட்டில் தேங்காய் போட்ட கறிகளுக்குச் சர்க்கரை கொஞ்சம் சேர்ப்போம்.) பின்னர் தேங்காய்த் துருவலையும் சேர்த்துவிட்டு நன்கு கிளறவும். நன்கு பொலபொலவென வந்ததும் எடுத்துப் பாத்திரத்தில் மாற்றிச் சாப்பிடும்போது பரிமாறவும்.

இதையே தேங்காய் போடாமல் தக்காளி வெங்காயம் சேர்த்தும் பண்ணலாம். தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொண்டு தக்காளியையும் சேர்த்து நன்கு தக்காளி குழையும் வரை வதக்கிப் பின்னர் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரையைச் சேர்த்து நன்கு கிளறியதும் கீழே இறக்கிப் பரிமாறவும்.  அடுத்து பாலக் பனீர் தயாரிக்கும் முறை பற்றிப் பார்ப்போம். பனீர் பையர் வருகைக்காகக் கொஞ்சம் வாங்கி வைச்சிருந்தேன். அவர் ஊருக்குக் கிளம்பும் முன்னர் கடாய் பனீர் செய்து கொடுத்தேன். ஆகவே பனீர் தீர்ந்து விட்டது. வாங்கலாம்னா நம்ம ரங்க்ஸுக்கு அது என்னமோ அலர்ஜி! :( வாங்க விட மாட்டார். என்றாலும் செய்முறை எழுதறேன். அடுத்து வரும்.

படங்கள் என்னிடம் எடுத்தது ஏதும் இல்லை. கூகிளில் தேடினால் காப்பிரைட் இருக்கிறது எனச் சொல்கிறது. ஆகவே படம் போட முடியலை!