எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, February 18, 2021

பச்சை மஞ்சள் தொக்குச் சாப்பிட்டுப் பாருங்க!

 நாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்போப் பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது. ஒரு மாதிரியா எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன். இப்போத் தான் சமீபத்தில்  இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. இதுக்குத் தேவையான பொருட்கள்



பச்சை மஞ்சள் கால் கிலோ /தோல் சீவிக்கொண்டு துருவிக் கொள்ளவும்.



நல்லெண்ணெய் கால் கிலோ

மிளகாய்ப் பொடி ஒரு மேஜைக்கரண்டி

உப்பு தேவைக்கு

பெருங்காயப் பொடி ஒரு தேக்கரண்டி

கடுகு தாளிக்க இரண்டு தேக்கரண்டி


வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் சுமார் 25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10,15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன். 

காரப்பொடி எனில் காரமாக இருந்தால் 5 தேக்கரண்டி. காரம் இல்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி

 மிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.



வறுத்துப் பொடித்த வெந்தயம், கடுகுப்பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். இதுக்கு மஞ்சள் பொடி தேவை இல்லை. கடைசியில் எலுமிச்சைச் சாறு சுமாராக 3,4 பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத்தான் பிழிந்து சேர்த்தேன்.

மஞ்சளைத் துருவிக் கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். 



எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும் பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும். துருவிய மஞ்சளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம். 



நான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால் மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன். அது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டுப் பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன். 



பின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கிப் பின் ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கலாம். சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கும்போது போடலாம். வெல்லம் நன்கு கரையும் வரை வதக்கிய பின்னர் ஆற வைத்து எடுத்து வைக்கவும். இதற்கு வினிகர் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை. மஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்.அதை நாளை போட்டுப் பின்னர் பகிர்கிறேன்.



ஊறுகாய் தயார் நிலையில். கொஞ்சம் காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது. ஆகவே ருசி பார்த்த பின்னர் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன்.  மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருந்தது. இதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Saturday, February 13, 2021

உருளைக்கிழங்கும், குடமிளகாயும் சேர்ந்த கறி சாப்பிட வாங்க!

எப்படியோ இந்த வலைப்பக்கமும் அடிக்கடி வரமுடியாமல் போகிறது. இப்போல்லாம் என்னவோ ஏதோ ஒரு காரணத்தால் மத்தியானம் சாப்பிட்டு வேலைகளை முடித்துக்கொண்டு உட்காரும்போதே ஒரு மணி ஒன்றரைமணினு ஆகிவிடுவதால் அதிகம் நேரம் செலவு செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் இனியாவது தொடர்ந்து எழுத நினைப்பேன். முடியாமல் போகிறது. 

சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளக் குடைமிளகாயோடு உருளைக்கிழங்கைப் போட்டுக் கறி பண்ணுவோம். அதிலே சில மாற்றங்களோடு கூடிய ஒரு முறையை இங்கே பகிர்கிறேன். சென்ற வாரம் பண்ணினேன். படமெல்லாம் எடுக்கவில்லை. இந்த முறை வட மாநிலங்களில் அடிக்கடி பண்ணுவார்கள், ஒரே மாதிரியான ருசியாக இல்லாமல் மாற்றி மாற்றிப் பண்ணினால் ஓர் ருசி வரும் என்பதற்காகப் பண்ணுவது தான் இது. மற்றபடி அடிப்படை ஒன்றே. இதில் கொஞ்சம் மசாலாக்களை மாற்றிச் சேர்க்க வேண்டும். அவ்வளவே!

 ஜீரகம் ஒன்றரை தேக்கரண்டி,

 மிளகு ஒரு தேக்கரண்டி, 

2 ஏலக்காய், சோம்பு அரைத் தேக்கரண்டி, 

புதினா இலைகள் காய வைத்தவை பொடித்தது ஒரு தேக்கரண்டி, 

கறுப்பு உப்பு ஒரு தேக்கரண்டி, 

தனியாப் பொடி, இரண்டு தேக்கரண்டி, 

அம்சூர் பவுடர் ஒரு தேக்கரண்டி, 

கரம் மசாலா ஒரு தேக்கரண்டி

இவற்றில் ஜீரகம், மிளகு,ஏலக்காய், சோம்பு, புதினா இலைகள் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு மற்றப் பொருட்களையும் சேர்த்துக் கொண்டு மிக்சி ஜாரில் பொடி பண்ணிக் கொள்ளவும். இந்த மசாலாக் கலவை தான் இந்த உணவின் தனிச் சிறப்பு. இப்போது காய்களை நறுக்கிக் கொள்ளலாம்.

குடமிளகாய் இரண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நடுத்தரமான உருளைக்கிழங்கு இரண்டு. நன்கு கழுவித் தோல் சீவிட்டுப் பின்னர் துண்டங்கள் ஆக்கிக் கொள்ளவும். 

தக்காளி நடுத்தரமான அளவில் 2 பொடியாக நறுக்கவும்

பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும்

கொத்துமல்லித் தழை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்

ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், அரைத்தேக்கரண்டி மஞ்சள் தூள்

உப்பு தேவைக்கு, ஏற்கெனவே மசாலாப் பொடியில் கறுப்பு உப்பு சேர்த்திருப்பதால் உப்பைப் பார்த்துப் போடணும்.

தாளிக்க, வதக்க எண்ணெய், பெருங்காயம் ஒரு தேக்கரண்டி, ஓமம் ஒரு தேக்கரண்டி தாளிக்க

இணையத்தில் தேடினாலும் இந்தச் செய்முறை கிடைக்கும். நான் டாடா உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் அடிக்கடி பார்ப்பேன். 

எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாயை வைத்துக் கொண்டு எண்ணெயைக் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் ஓமம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்த கையோடு நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து உருளைக்கிழங்கு முழுவதிலும் கலக்கும்படி வதக்கிக் கொள்ளவும். இப்போது நறுக்கிய தக்காளிப் பழங்களைச் சேர்த்துத் தக்காளி நன்கு வதங்கும் வரையிலும் வதக்கவும். உப்புத் தேவையானால் இப்போது கொஞ்சமாகச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் குடமிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து நாம் ஏற்கெனவே பொடி செய்து வைத்திருக்கும் மசாலாப் பொடியில் தேவையான அளவுக்கு இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குடமிளகாய்த் துண்டங்கள் நன்கு வெந்து மசாஆவில் கலக்கும் வரைக்கும் வதக்கவும். ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்தும் வதக்கலாம். எல்லாம் நன்கு கலந்த பின்னர் பொடியாக நறுக்கியக் கொத்துமல்லித் தழைகளைத் தூவி விட்டு ஒரு தேக்கரண்டி கசூரி மேத்தியைக் கைகளால் கசக்கிச் சேர்க்கவும். பின்னர் நன்கு கலந்ததும் ஃபுல்கா ரொட்டி, பராத்தா ஆகியவற்றோடு பரிமாறலாம்.

பிரபல ஓட்டல்களில் செய்யும் சுவையுடன் அமைந்திருக்கும்.