எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 13, 2012

மிளகு குழம்பும், பருப்புத் துவையலும் சாப்பிடுங்க!

மிளகு குழம்பு செய்யலாமா இப்போ? இன்னிக்கு ஶ்ரீரங்கம் கோயில் அன்னதானத்திலே 16 விதமான சாப்பாடு வகைகள் போட்டிருந்தாங்க.  அதைப் பார்த்ததுமே/கேட்டதுமே மிளகு குழம்பே இன்னிக்குப் போதும்னு தோணித்து.  மிளகு குழம்பு ஏற்கெனவே பண்ணி வைச்சிருந்தேன். குளிர்சாதனப்பெட்டியிலே இருந்தது.  அதைக் காலம்பரவே வெளியே எடுத்து மறுபடியும் நல்லாக் கொதிக்க விட்டேன்.  கூடவே தொட்டுக்கப் பருப்புத் துவையல்.  இரண்டையும் பார்க்கலாம்.


முதல்லே மிளகு குழம்பு.  தேவையான பொருட்கள்:  ஒரு பெரிய எலுமிச்சை அளவுக்குப் புளியை நீரில் ஊறவைத்துக் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இதற்கு வறுத்து அரைக்க

மிளகாய் வற்றல் ஆறு அல்லது எட்டு(நான் மிளகே அதிகம் சேர்ப்பேன்;  அதோடு மிளகுக் காரத்தைத் தணிக்க என சீரகமோ, கொ.மல்லியோ சேர்ப்பதில்லை.  கொஞ்சம் மிளகு காரம் நாக்கில் தெரியணும்) பெருங்காயம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், இவ்வளவு காரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு டேபிள் ஸ்பூன் உ.பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன்.  எல்லாப் பொருட்களையும் நல்லெண்ணெயில் நன்கு வறுத்துக்கொள்ளவும்  ஆற வைக்கவும்.  பின்னர் நன்கு நைசாக அரைத்துக்கொண்டு புளிக்கரைசலில் கலந்து கொள்ளவும்.

தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேவையான உப்பு குழம்பில் சேர்க்க.

கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு போடவும்.  வெடித்ததும், மஞ்சள் பொடி சேர்த்துவிட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை மெதுவாக ஊற்றவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.  குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும்.  சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் குழம்பைக் கலந்து சாப்பிடலாம்.  நன்கு கொதித்த குழம்பு ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

பருப்புத் துவையல்:  மி.வத்தல் 2 அல்லது மூன்று, மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம், புளி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்/அல்லது கடலைப்பருப்பு/அல்லது இரு பருப்பும் கலந்து அவரவர் விருப்பம் போல். நான் துவரம்பருப்பு மட்டுமே போடுவேன்.  வறுக்க நல்லெண்ணெய்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், து.பருப்பு, மிளகு போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும்.  பின்னர் கடைசியில் தேங்காய்த் துருவலையும் போட்டு வறுக்கவும்.  உப்பு, புளி சேர்த்துக் கொண்டு நைசாக மிக்சியில் அரைக்கவும். மிளகு குழம்போடு தொட்டுக்கொள்ள சைட் டிஷாக இது அருமையாக இருக்கும்.   ஜீரகம், மிளகு அரைத்துவிட்டுச் செய்யும் ரசத்தோடும் பருப்புத் துவையல் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வாரம் ஒரு நாள் இப்படிச் சாப்பிடலாம்.  வயிறு லேசாகும்.

மைசூர்ப்பாகு, புளியோதரை எல்லாம் சாப்பிட்டீங்க இல்லை?  இப்போப்பத்தியம்! :)))))

Monday, September 10, 2012

மைசூர்ப் பாகு சாப்பிடறீங்களா?

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் ஆச்சு, மைசூர்ப்பாகு செய்தோ, சாப்பிட்டோ. ரங்க்ஸுக்கு ஷுகர் னு தெரிஞ்சதில் இருந்தே யாரானும் கொண்டு வர ஸ்வீட்டைக் கூடச் சாப்பிட மனசு வரதில்லை. வீட்டிலும் யாரானும் வந்தால் கேசரி மட்டும் செய்துடறேன்.  மற்ற ஸ்வீட்னா செய்ய யோசனையா இருக்கும்.  இரண்டு நாளாத் திடீர்னு மைசூர்ப்பாகு மேலே புத்தி போயிருக்கு.  மரபு விக்கிக்கு எழுதிப் போட்டதை இங்கே காப்பி, பேஸ்ட் பண்ணறேன்.



முதன் முதலில் மைசூர் அரண்மனைச் சமையல் அறையிலேயே செய்யப் பட்டுள்ளது. மசூர் பருப்பு என அழைக்கப் படும் சிவந்த நிறப் பருப்பை வறுத்து, ஊற வைத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தே செய்யப் பட்டுள்ளது. கிட்டத் தட்ட முந்நூறு அல்லது அதற்கும் குறைந்த ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப் பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மசூர் பருப்பை இயந்திரத்தில் அரைத்துச் செய்யப் பட்டது. அதன் பின்னர் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதும் மசூர் பருப்பு மாவு மிஷினில் அரைக்கப் பட்டுச் செய்யப் பட்டது. மசூர் பருப்பிலிருந்து செய்ததாலேயே இதன் பெயர் மசூர் பாகு என்று அழைக்கப் பட்டு காலப் போக்கில் மைசூர் பாகு என மாறியதாய்த் தெரிகிறது. ஒரு விதத்தில் இதன் மூலம் மைசூர் அரண்மனை என்பதாலும் இந்தப் பெயர் பொருந்தி விட்டது. கடலைப்பருப்பில் செய்வது என்ற கால கட்டத்திற்கு எப்போது மாறியது எனப் புரியவில்லை. அந்த ஆராய்ச்சியும் செய்துடலாம்.

தற்சமயம் மைசூர் பாகு கடலைப்பருப்பை மிஷினில் மாவாக அரைத்துச் செய்யப் படுகிறது. மைசூர் பாகுக்குத் தேவையான பொருட்கள்:
  • கடலை மாவு ஒரு கிண்ணம்
  • மூன்றுகிண்ணம் சர்க்கரை
  • மூன்று கிண்ணம் நல்ல நெய்

அடி கனமான வாணலி அல்லது உருளி. பாகு வைக்க அரை கிண்ணம் நீர்.

முதலில் வாணலியில் ஒரு கிண்ணம் நெய்யை ஊற்றி கடலை மாவை அதில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். கடலை மாவை காய்ந்த நெய்யில் ஊற்றினால் மேலே பொங்கி வரும். அதுவே சரியான பதம்.

பின்னர் அந்த மாவை வேறு தட்டில் அல்லது பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே வாணலியில் மூன்று கிண்ணம் சர்க்கரையோடு அரை கிண்ணம் நீர் சேர்த்து பாகு வைக்கவும். பாகு நன்றாகக் காய்ந்துக் கையால் உருட்டினால் மிளகு பதம் வரும்போது வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாய் நெய் சேர்க்கவேண்டும். எவ்வளவு நெய்யைக் கொட்டினாலும் அத்தனையையும் உள் வாங்கிக்கும். கோதுமை அல்வா போல் நெய்யைக் கக்காது. மைசூர் பாகு கெட்டிப் பட்டு உருளி அல்லது வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நல்ல சதுரமான தாம்பாளத்தில் கொட்டிவிட்டுச் சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவேண்டும். வில்லைகள் போடும் முன்னர் மேலே கொஞ்சம் சர்க்கரையைத் தூவலாம்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மை.பா என்றால் ஒரு கிண்ணம் கண்டென்ஸ்ட் பால் அல்லது இரண்டுலிட்டர் பாலைக் குறுக்கி அந்தக் குறுக்கப் பட்ட பால் ஒரு கிண்ணம். கடலைமாவு சேர்க்கும் முன்னர் சேர்க்கவேண்டும். பின்னர் மைசூர்பாகு நன்கு கெட்டிப் பட்டு சுருண்டு வரப் போகும் சமயம் தீயைக் குறைத்துவிட்டு/ அல்லது தீயிலிருந்து கீழே இறக்கிக் கைவிடாமல் கிளறவேண்டும். பின்னர் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையில் மிகவும் மிருதுவான மைசூர்பாகுகள் கிடைக்கும். பால் சேர்த்தால் பிடிக்காதவர்கள் கடலைமாவு மட்டுமே போட்டுச் சுருண்டு வரும் சமயம் கீழே இறக்கித் தீயில் வைக்காமலேயே கீழேயே கிளறவேண்டும். அந்தச் சூட்டிலேயே சுருண்டு வரும் பதம் வந்ததும் தட்டில் கொட்டி வில்லைகள் போடலாம். இம்முறையிலும் மைசூர் பாகு மிருதுவாய்க் கிடைக்கும்.

Friday, September 7, 2012

புளியோதரை சாப்பிட வாங்க!

வீடுகளில் செய்யும் புளிக்காய்ச்சல், இதை இரு முறைகளில் செய்யலாம்.  ஒன்று மிளகாய் மட்டுமே தாளித்துச் செய்வது. இன்னொன்று தாளிப்பில் மிளகாயைக் குறைத்துக் கொண்டு, வறுத்துப்பொடி செய்து சேர்ப்பது.  முதலில் மிளகாய் தாளிப்புப் புளிக்காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:  புளி 200 கிராம், மி.வத்தல் காரம் உள்ளதானால் 10 முதல் 12 வரை. வெந்தயம் ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்தது.  உப்பு தேவையான அளவு, மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன். நல்லெண்ணெய், ஒரு சின்னக் கிண்ணம் அல்லது குறைந்த பக்ஷமாக நூறு எண்ணெய். தாளிக்கக் கடுகு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை என்றால் முன்னாடியே ஊற வைத்துக்கொள்ளவும்.  வேர்க்கடலை எனில் அப்படியே தாளிப்பில் போடலாம்.  கருகப்பிலை. பெருங்காயம்.

புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும்.  காய்ந்ததும் முதலில் மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போடவும். மிளகாய் நன்கு கறுப்பாக ஆக வேண்டும்.  அதன் பின்னர் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது ஊறிய கொண்டைக்கடலையைப் போடவும்.  அனைத்தும் நன்கு வறுபட்டதும், கருகப்பிலை சேர்த்துக் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.  நன்கு  கொதிக்க வேண்டும்.  கொதித்து எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த வெந்தயப் பொடியைச் சேர்க்கவும்.  பின் கீழே இறக்கவும்.

இதை நேரிடையாகச் சாதத்தில் போட்டுக் கலந்து விடலாம்.  தனியாக சாதத்தில் தாளிப்பு தேவை இல்லை.

வறுத்துப் பொடி செய்து போடும் முறை: மேலே சொன்ன அளவுக்கு எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  தாளிப்பில் இருந்து எல்லாவற்றுக்கும் அதே சாமான் தான், கூடுதலாகச் செய்ய வேண்டியது.  ஒரு டீஸ்பூன் எள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஆகியவை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து கொள்ளவும்.  இதைத் தவிர தனியா ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வறுக்கவேண்டும்.  அதோடு பெருங்காயத்தையும் வறுத்துக் கொண்டு மிளகாய் வற்றலில் நாலைந்தை மட்டும் தாளிப்புக்கு வைத்துக் கொண்டு மிச்சத்தை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மிளகாய், தனியாவையும் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  தேவைப் பட்டால் வெல்லத்தூள்  ஒரு டேபிள் ஸ்பூன். வெல்லம் பிடிக்காதவர்கள் போட வேண்டாம்.

புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும்.  பின்னர் கடாயில் மேலே சொன்னபடி  முதலில் மிளகாயைத் தாளிக்க வேண்டும்.  இம்முறையில் தாளித்த மிளகாய் நாலைந்து தான் இருக்கும்.  அவை கறுப்பாக ஆனபின்னர் மற்றவற்றைத் தாளித்துப்புளிக்கரைசலை ஊற்றவும்.  கொதிக்க வேண்டும்.  எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த பொடிகளைச் சேர்க்கவும்.  ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும்.  வெல்லம் சேர்ப்பதானால் பொடிகளைச் சேர்க்கும்போதே போட்டு விடலாம்.

அடுத்துப் பச்சைப் புளியஞ்சாதம் என்னும் திடீர்த் தயாரிப்பு.  வீட்டுக்குத் திடீரென யாரோ வந்துடறாங்க.  சாம்பார் , ரசம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்றாங்க.  புளியோதரைனா சாப்பிடறதாச் சொல்றாங்க. என்ன பண்ணலாம்னு யோசிப்போம் இல்லையா?

ஆழாக்கு அரிசியைக் களைந்து கொள்ளவும்.  தேவையான தண்ணீர் இரண்டு கிண்ணம் எனில் ஒரு கிண்ணம் தண்ணீர் மட்டும் சேர்த்துக் குக்கரிலோ அல்லது வேறு சாதம் வடிக்கும் முறையிலோ வேக வைக்கவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும்.  இப்போது எலுமிச்சை அளவுப் புளியை எடுத்துக் கரைத்து ஒரு கிண்ணம் வரும்படி எடுத்துக்கொள்ளவும்.  அரை வேக்காடு வெந்திருக்கும் சாதத்தில் இந்தப்புளிக்கரைசலை ஊற்றி, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும்.  அரிசியை நன்கு வேக விட வேண்டும்.  சாதம் உதிர் உதிராக ஆனதும் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு தாம்பாளத்தில் பரத்திக் கொள்ளவும்.

 இரண்டு டீஸ்பூன் வறுத்த மிளகாய், கொத்துமல்லிப்பொடியுடன், கடுகு, வெந்தயம், எள் வறுத்த பொடியையும் ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கவும்.  பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, ஒன்றிரண்டு மிளகாய்(முதலில் போட்டுக் கறுப்பாக்கியது), கருகப்பிலை, தேவைப்பட்டால் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துத் தாளிதம் செய்து சாதத்தில் கலக்கவும்.  இது ஊற ஊற நன்றாக இருக்கும். புளிக்காய்ச்சலே செய்யாமல் செய்யும் விதம் இது.  திடீரென வீட்டில் சமாராதனை, வேறு நிவேதனம் கோயில்களில் கேட்டால் இம்முறையில் வெண்கலப்பானை அல்லது உருளி அல்லது ரைஸ் குக்கர் போன்றவற்றில் வைத்துச் செய்து விடலாம்.

மீனாக்ஷிக்காகப் புளிக்காய்ச்சல்! பெருமாள் கோயில் புளிக்காய்ச்சல்

முதல்லே கோயில் புளியோதரைக்குப் புளிக்காய்ச்சல் செய்யறதைப் பத்திப் பார்ப்போம்.  கோயில்னு இல்லை;  பொதுவாகவே நிவேதனம் செய்யும்  உணவுகளில் பாரம்பரியமாக வரும் மிளகுக் காரமே சேர்க்கப்படும்.  உதாரணமாக ஆஞ்சநேயருக்கான வடைமாலைக்கு உள்ள வடை, புளியோதரை போன்றவற்றில் மிளகாய் வத்தல், பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை.  தயிர்சாதம் என்றால் கூடப் பெருங்காயம் கூடப் போட மாட்டார்கள்.  பாலில் குழைய வேக வைத்து வெண்ணெய் சேர்த்து, சுக்குத் தட்டிப் போட்டு அல்லது இஞ்சி, கருகப்பிலை போட்டுக் கடுகு மட்டும் தாளித்திருப்பார்கள்.  ஆகவே இந்தக் கோயில் புளிக்காய்ச்சலுக்கும் மி.வத்தல் எல்லாம் வேண்டாம்.

நூறு கிராம் புளி, தேவையான உப்பு, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்.  மிளகு இரண்டு டீஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.  ஒரு டீஸ்பூன் வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துத் தனியாகப் பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:  கடுகு, கடலைப்பருப்பு/கொண்டைக்கடலை(கறுப்பு)/வேர்க்கடலை, இவை ஏதானும் ஒன்று அல்லது கொஞ்சம் போல் கடலைப்பருப்புப் போட்டுவிட்டு, வேர்க்கடலை தோல் நீக்கி வறுத்துச் சேர்க்கலாம். கருகப்பிலை இரண்டு ஆர்க்கு.  தாளிக்க நல்லெண்ணெய்,  சாதத்தில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்.

இப்போது புளியை நன்கு கரைத்துக் கொண்டு கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்.  உருளி அல்லது கல்சட்டி இருந்தால் நல்லது.  இல்லை எனில் நீங்கள் சமைக்கும் ஏதேனும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றவும்.  நல்லெண்ணெய் காய்ந்ததும்  மஞ்சள் தூளைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றவும்.  உப்புச் சேர்க்கவும்.  புளிக்கரைசல் நன்கு கொதித்துக் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.  பேஸ்ட் மாதிரி ஆனதும் கீழே இறக்கி வைக்கவும்.  இதை முதல் நாளே பண்ணி வைத்துக்கொள்ளலாம்.

மறு நாள் ஒரு ஆழாக்கு அல்லது 200கிராம் அரிசியைப் பொலபொலவென சாதம் ஆக்கிக் கொள்ளவும்.  சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றிக் கலக்கவும். அரை  டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும்.  புளிப் பேஸ்டையும் சாதத்தில் தேவையான அளவு போடவும்.  இந்த அளவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் சரியாக இருக்கும்.  நன்கு கலந்ததும் மிளகுபொடி, வெந்தயப் பொடி சேர்க்கவும்.

இப்போது கடாயில் நல்லெண்ணெய் வைத்துக் காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும்.  இறக்குகையில் கருகப்பிலையைச் சேர்க்கவும்.  தாளிதத்தைத் தயாராய் இருக்கும் சாதத்தில் கொட்டிக் கலக்கவும்.  அரை மணி நேரம் நன்றாய் ஊறியதும் சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டுப் பரிமாறவும்.  பெருமாள் கோயில் புளியோதரை தயார்.

அடுத்தது புளிக்காய்ச்சல் வீடுகளில் தயாரிக்கும் இரு முறைகளும், பச்சைப் புளியஞ்சாதம் தயாரிப்பு முறையும்.  நாளை வரை காத்திருக்கவும்.

Thursday, September 6, 2012

சேவை செய்யறேன், வாங்க, சாப்பிடலாம்!

சேவை, இடியாப்பம் எல்லாம் ஒண்ணுதான்னு நினைக்கிறேன்.  கிட்டத்தட்ட 2 வருஷங்களுக்கு மேல் ஆச்சு சேவை செய்து.  இங்கே வந்து கொழுக்கட்டை மாவு மிஞ்சினால் அதிலே செய்து வைப்பதோடு சரி.  சேவைக்குனு அரைச்சுச் செய்யவே இல்லை.  ரங்க்ஸும் ரொம்ப நாளாக் கேட்டுட்டு இருந்தார். அவருக்கு சேவையே பிடிக்காது.  கேட்கிறாரேனு கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருந்தது.  இன்னிக்கு என்னமோ தோசைக்கு மாவு இருந்தும் சேவை செய்யணும்னு தோணித்து.

தேவையான பொருட்கள்:  புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது 200கிராம், பச்சரிசி சம அளவு. இரண்டையும் நன்கு களைந்து குறைந்தது மூன்று, நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.  மிக்சியில் அரைப்பதை விட கிரைண்டர் தான் சரியாக இருக்கும்.  கிரைண்டரில் அரைக்கவும்.  கொஞ்சம் போல உப்புப் போட்டுக் கொள்ளவும்.  முழு உப்பும் போட வேண்டாம். ஒரு டீஸ்பூன் போதும்.  மாவை ரொம்ப நீர்க்க இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் கரைத்து வைக்கவும்.

இப்போ செய்முறை.  நான் இட்லி மாதிரி வார்த்துத் தான் சேவை செய்வேன். ஒவ்வொருத்தர் அரைத்த மாவைக் கிளறிக் கொட்டிக் கொண்டு பின்னர் உருண்டை பிடித்து மீண்டும் வேக வைத்து அல்லது கொதிக்கும் நீரில் போட்டுச் செய்வார்கள்.  எனக்கு அதெல்லாம் சரிப்படலை.  ஆகவே இட்லிப் பானையில் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டு, இட்லித் தட்டில் அரைத்த மாவை இட்லியாக ஊற்றவும்.  இட்லி வெந்துவிட்டதானு பார்க்கவும்.  சில சமயம் நடுவில் வேகாது.  ஆகவே நடுவில் விரலைக்கொடுத்தும் பார்க்கலாம், சூடு தாங்கினால் :))) இல்லைனால் ஒரு ஸ்பூனால்குத்திப் பாருங்க.  ஒட்டாமல் வரும்.  பார்த்தால் நமக்கே புரிந்து விடும்.  வெந்துவிட்டதா இல்லையானு.  வெந்த இட்லியைச் சேவை நாழியில் போட்டுப் பிழியவும்.  இதோ இது தான் சேவை நாழி.  எழுபதுகளில் 2 ரூபாய்க்கு சீதனமாக வாங்கித் தந்தாங்க.  பல வீடுகள் பார்த்திருக்கு. பல சேவை செய்முறைகளையும் பார்த்திருக்கு இந்த நாழி.

சேவைகளை இப்படி இட்லியாக வார்த்து மொத்தமாகப் பிழிந்து கொள்ளவும்.



இதை மீண்டும் ஒரு முறை வேக வைக்க வேண்டியதில்லை.  நல்ல கம்பி, கம்பியாக ஒட்டாமல் வரும்.  அரைத்த மாவு மொத்தத்தையும் இப்படி இட்லியாக வார்த்துச் சேவையாகச் செய்து கொள்ளவும்.  அடுத்துக் கலவை.

பல விதங்களில் கலக்கலாம்.  தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, புளி சேவை, வெல்லச் சேவை, தயிர்சேவை, உளுத்தம் சேவை இதெல்லாம் பாரம்பரியம்.  இப்போ உள்ள நாகரீகப்படி தக்காளி சேவை, காய்கறிகள் போட்டு வெஜிடபிள் சேவை, சூப் சேவைனும் பண்ணலாம்.  நான் அதெல்லாம் பண்ணறதில்லை.  எப்போவுமே பாரம்பரியம் தான்.

தேங்காய் சேவை:  தேங்காய் ஒரு மூடித் துருவல், இரண்டு ப.மி கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப் பருப்பு. பெருங்காயம் உப்பு தேவையான அளவு, கொஞ்சம் நெய், இரண்டு டீஸ்பூன் இருக்கலாம், ஒரு டீஸ்பூன் சர்க்கரை.  தாளிக்க எண்ணெய்


வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை போன்றவற்றைப் போட்டு அவை நன்கு வெடித்து வந்ததும் ப.மி. கருகப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு தேங்காய் துருவலைப் போடவும்.  வறுத்தால் பிடிக்குமென்றால் சிறிது நேரம் வறுக்கலாம்.  இல்லை எனில் ஒரு கிளறுகிளறிவிட்டு இறக்கவும்.  வேக வைத்து எடுத்த சேவையில் தேங்காய்ச் சேவைக்குத் தேவையான சேவையைப் போட்டுக் கொண்டு, உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும்.

புளி சேவை:  சேவையில் தேவையான அளவு எடுத்துக் கொண்டு புளிக்காய்ச்சலைப் போட்டு விட்டு நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றிக் கிளறி வைக்கவும்.

வெல்லச் சேவை:  வெல்லத் தூள்  நூறு கிராம்.  தேங்காய் தேவையான அளவு அல்லது ஒரு சின்ன மூடித் துருவல், ஏலக்காய்.  நெய் இரண்டு டீஸ்பூன்.

வாணலி அல்லது உருளியில் வெல்லத்தூளோடு தேங்காய் சேர்த்துக் கிளறவும்.  இரண்டும் நன்கு சேர்ந்து கொண்டு வருகையில் நெய்யைச் சேர்த்துச் சேவையைப் போட்டு நன்கு கலக்கவும்.  ஏலத்தூள் சேர்க்கவும்.





சேவை செய்யச் சொல்லும் ரங்கமணிகள்!

தினம் தினம் இட்லி, தோசை தானா?

ஏன், சப்பாத்தி, பூரி, உப்புமாவெல்லாமும் தான் செய்யறேன்.

ஹூம், அதெல்லாம் வேண்டாம், எனக்கு சேவை வேணும்

தினம் தினம் உங்களுக்குத் தானே சேவை செய்யறேன்.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(இப்போ அவர் முறை)  நான் கேட்கிறது அரிசியில் செய்த வெல்லச் சேவை, புளிசேவை, தேங்காய் சேவை வகையறா.

சரியாப் போச்சு போங்க. பார்க்கலாம்.  அரிசி அரைக்கணும். இட்லியா வார்க்கணும்.  சேவை நாழியிலே போட்டுப் பிழியணும். ம்ம்ம்ம்ம்ம்,,,, கொஞ்சம் போல முயற்சி செய்யறேன். ஓகேயா?

சேவை செய்முறையும் படமும் விரைவில்

Sunday, September 2, 2012

காலிஃப்ளவர் மஞ்சூரியன்

பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். :D இது வெஜிடேரியன் உணவு தான். சமீபத்தில் குழுமத்தில் ஒரு சிநேகிதி அறுசுவைத் தளத்து செய்முறையைப் பகிர்ந்து கொண்டார்.  அதிலே அஜினோமோட்டோ, முட்டை எல்லாம் போடச் சொல்லி இருந்தாங்க.  இது பாரம்பரிய முறை.  இதுக்கு அதெல்லாம் வேண்டாம்.  எல்லாம் நம்மிடம் இருக்கும் பொருட்களே போதும்.  பொதுவாகவே அஜினோமோட்டோ போட்ட உணவைச் சாப்பிடுவது அவ்வளவு நல்லதில்லை.  அஜினோமோட்டோ நம் நாட்டு உணவுப் பழக்கத்துக்கு ஏற்றதும் இல்லை.  ஆனாலும் ஒரு சிலர் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு வாங்கி விடுகின்றனர்.  அதில் உள்ள தீமைகளை அறிந்துகொண்டிருக்கும் சீனா, தன் தயாரிப்பான இந்த அஜினோமோட்டோவைப் பயன்படுத்துவதே இல்லை.  நம் நாட்டைச் சனியன் மாதிரிப் பிடித்துக் கொண்டு சாம்பார், ரசத்துக்குக் கூடப் போடச் சொல்லிப் பிடுங்கல்.  இதனால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படக் கூடும்.  குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு உண்டாகும். ஆகவே கவனம் தேவை.

இப்போது பாரம்பரிய முறையில் காலிஃப்ளவர் மஞ்சூரியனைப் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:  நல்ல காலிஃப்ளவராக ஒன்று.  ஒரு கிண்ணம் மைதா மாவு, வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்,ஒரு சிட்டிகை உப்பு, சமையல் சோடா தேவை எனில் ஒரு சிட்டிகை.  பால் 200 கிராம்.  நீர் தேவைப்பட்டால் .  பொரிக்க  சமையல் எண்ணெய்.

அடுத்து கிரேவிக்கு.  அரைகிலோ தக்காளி. இது தனியாகக் குக்கரில் தக்காளியை வேக வைத்தோ அல்லது கொதிக்கும் வெந்நீரில் போட்டோ தோல் நீக்கி, விதை நீக்கித் தக்காளிச் சாறாக எடுத்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன அளவுக்கு 5 பச்சை மிளகாய்,  4 பல் பூண்டு,  ஒரு அங்குலம் இஞ்சி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் இரண்டு எடுத்துப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கால் கிலோ தக்காளியுடன் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  முன்னால் சொன்னதுக்கும் இதுக்கும் தனித்தனி செய்முறை.  ஆகையால் குழம்ப வேண்டாம். 

மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சின்ன ஸ்பூன், கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன்.  உப்பு தேவையான அளவு. ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீஸ்பூன். சமையல் எண்ணெய் கிரேவி செய்யத் தேவையான அளவு.

இப்போது காலிஃப்ளவரை நன்கு ஆய்ந்து குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு, பூச்சி, புழு நீக்கிக் கொள்ளவும்.  பூவாக நீளமாக வரும்படி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.  இதில் உப்பு,, மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு, கொதிக்கும் வெந்நீரில் சிறிது நேரம், சுமார் அரைமணி போட்டு வைக்கவும்.  பின்னர் நீரை வடிகட்டிப் பூக்களைத் தனியாக வைக்கவும்.

வெண்ணெய், உப்பு, சோடா உப்பு சேர்த்துக் குழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவை அதில் சேர்க்கவும்.  மாவும், வெண்ணெய்க் கலவையும் நன்கு கலந்த பின்னர் பாலை மெதுவாக அதில் விட்டுக் கலக்கவும்.  மாவு தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும்.  ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும்.  வடிகட்டி வைத்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எண்ணையை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.  இவை தனியாக இருக்கட்டும்.

அடுத்து கிரேவி செய்முறை:  கடாயில் எண்ணெய் வைத்துக் கொள்ளவும்.  எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும்.  மசாலா கலந்து செய்யும் உணவுகளுக்குக் கொஞ்சம் சர்க்கரையை முதலிலேயே சேர்த்தால் மசாலா மணம் தூக்கலாக இருப்பதோடு மசாலாவின் காரத்தையும், கடுமையையும் குறைக்கும்.  அல்லது இறக்கும் முன்னர் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம்.  சர்க்கரை கரைந்ததும்,முதலில் தக்காளி, வெங்காயக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  சிறிது நேரம் வதக்கியதும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் எல்லாம் கலக்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.  எண்ணெய் நன்கு பிரிந்துவந்ததும் நாம் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள தக்காளி ப்யூரி எனப்படும் தக்காளிச் சாற்றை விடவும்.  உப்புப் போடவும்.  தேவை எனில் நீர் சேர்க்கலாம்.  கிரேவி நன்கு கொதித்து வரும் போது கரம் மசாலாப் பவுடரையும், வறுத்த ஜீரகத் தூளையும் சேர்த்துவிட்டு ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.

இப்போது பரிமாறும் முறை:  ஒரு சின்னக் கிண்ணம் அல்லது சைட் டிஷ்ஷுக்கான தட்டில் கொஞ்சம் பொரித்த காலிஃப்ளவர் துண்டங்களைப் போட்டுக் கொண்டு அதன் மேல்கிரேவியை ஊற்றவும்.  விருப்பமானால் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி, பச்சை வெங்காயம் தூவிக் கொள்ளலாம்.  இதை அப்படியே விருந்தாளிகளுக்குக் கொடுத்து அசத்துங்கள்.  கொஞ்சம் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான செய்முறைதான்.  ஆனால் செய்யச் செய்யப் பழகிவிடும்.