எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, December 10, 2015

உணவே மருந்து---பிரண்டை

Image result for பிரண்டை

பிரண்டையைப் பொதுவாக அப்பளம் தயாரிக்கும்போது அப்பள மாவில் சேர்த்தே பார்த்திருக்கலாம். இதை அரைத்து நீரை வடிகட்டி அப்பளமாவில் சேர்த்துப் பிசைவார்கள். கையெல்லாம் அரிப்பு எடுக்கும். தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்வார்கள். இத்தகைய பிரண்டையைத் துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.  பிரண்டையில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இரண்டு வகை உண்டு.  முப்பிரண்டை என்ற ஒரு வகையும் உண்டென்றும் அது மிகவும் அபூர்வமாகவே கிடைக்கும் எனவும் சொல்கின்றனர்.

பிரண்டையின் கணு ஒன்று முதல் ஒன்றரை அங்குலம் இருந்தால் அது பெண் பிரண்டை என்றும் கணு 2 முதல் 3 அங்குலம் இருந்தால் ஆண் பிரண்டை எனவும் கூறுகின்றனர். கணுவின் அருகில் இலைகள் காணப்படும். பிரண்டை பசியைத் தூண்டும் என்பதால் வயிற்றுச் செரிமானம் சரியாக இல்லை எனில் பிரண்டைத் துவையல் அரைத்து சூடான சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.  பிரண்டையின் இலையும் மருத்துவ குணம் கொண்டதே! இலை, தண்டு ஆகியவற்றை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமஅளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் அஜீரணத்துக்கு நல்லது. உடல் வலிமை வேண்டுமெனில் இந்தச் சூரணத்தைப் பாலில் பனங்கல்கண்டு கலந்து அருந்தி வரலாம்.

மூல நோய்க்கும் பிரண்டை சிறந்த மருந்து என்கின்றனர் சித்த மருத்துவர்கள். பிரண்டைத் தண்டை நெய் விட்டு வதக்கிக் கொண்டு அரைத்துத் தினந்தோறும் ஒரு கொட்டைப்பாக்கு அளவுக்கு உண்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மட்டுப்பட்டு ரத்தப்போக்கும் நிற்கும் என்கின்றனர்.  பிரண்டையைத் தீயில் வதக்கிச் சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலிக்கும் காதில் சீழ் வடிதலுக்கும் சிறந்த மருந்தாகும். இந்தச் சாறை மூக்கில் விட்டால் மூக்கில் ரத்தம் வருவது நிற்கும். உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகள் தீரும்.

வயிற்றில் வாயுத் தொந்திரவு இருந்தல் பிரண்டையோடு பேய்ச்சிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருக்கன் விதை, ஓமம் போன்றவற்றைச் சம அளவு எடுத்துக் கஷாயம் காய்ச்சி அருந்தலாம். வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் இறந்து போகும். பிரண்டை வேர் முறிந்த எலும்பை விரைவில் சேர்க்கும் என்கின்றனர். பிரண்டை வேரை உலர்த்திப் பொடி செய்து உள்ளுக்கு தினம் 2 கிராம் வரை சாப்பிட்டு வந்தால் முறிந்த எலும்பு சேரும் என்கின்றனர். வெந்நீரில் குழைத்து எலும்பு முறிந்த இடத்தில் பற்றுப் போட்டாலும் சரியாகும். பிரண்டையை விட பிரண்டை உப்பு இன்னும் சிறந்தது எனவும் அதைத் தினமும் பாலில் அருந்துவதால் உடல் எடை குறைந்து வேண்டாத ஊளைச் சதைகள் குறைந்து கரைந்து போகும் என்கின்றனர்.

ஆண்களுக்கும் பிரண்டை உப்போடு சாதிக்காய்த் தூளைச் சமஅளவு எடுத்துக் கொண்டு நெய்யுடன் தினம் மூன்று வேளையாக ஒரு வாரம் உண்டு வந்தால் விந்து நீர்த்துப் போதல், பலவீனம் போன்றவை நீங்கும்.  பிரண்டை உப்பு வயிற்றுக் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்து.  சுளுக்கு, வீக்கம், சதை பிரண்டு போதல் ஆகியவற்றுக்குப் பிரண்டை ரசம் எனப்படும் பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளி, உப்பு சேர்த்துக் காய்ச்சிக் குழம்புப் பதத்தில் இறக்கிப் பற்றுப் போட்டு வரலாம்.

பிரண்டைத் துவையல் செய்முறை:

ஒரு கட்டுப் பிரண்டை

மி.வத்தல் 3 அல்லது நான்கு(அவரவருக்குத் தகுந்த காரத்திற்கு ஏற்ப)

உப்பு தேவையான அளவு

புளி ஒரு சுண்டைக்காய் அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு

வதக்க தேவையான நல்லெண்ணெய்

பிரண்டையை இலைகள் நீக்கிக் கணுவின் அருகே மட்டும் கொஞ்சம் போல் நீக்கிவிட்டு மீதத்தைத் துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு முதலில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிதத்தைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மி.வத்தல் போட்டு வறுத்துக் கொண்டு அதைத் தனியாக எடுத்துக் கொள்ளவும். பிரண்டையைப் போட்டு நன்கு வதக்கவும்.

நன்கு ஆறவிடவும். பின்னர் மி.வத்தல், புளி, உப்பு, வதக்கிய பிரண்டை சேர்த்து மிக்சி ஜாரில் போட்டுத் துவையலாக அரைக்கவும். நன்கு மசிந்ததும் வெளியே எடுக்கும் முன்னர் தாளித்து வைத்திருந்த கடுகு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து ஒரே சுற்றுச் சுற்றிவிட்டுக் கரகரவென இருக்கும்போதே எடுத்துவிடவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

Monday, November 30, 2015

உணவே மருந்து 2 சுண்டைக்காய்!

அது என்ன சுண்டைக்காய் விஷயம் எனச் சர்வ சாதாரணமாகச் சொல்வோம். சுண்டைக்காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம் என்னும் பழமொழியும் உண்டு. இப்படி எல்லாம் குறைவாகப் பேசப்படும் சுண்டைக்காய் தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நன்மையைத் தருகிறது. சுண்டைக்காய் மலைகளில் வளருவதையே மருந்தாகப் பயன்படுத்துவார்கள். வீடுகளில் செடிகளில்/சிறிய மரமாகவும் இருக்கும், காய்க்கும் சுண்டைக்காயை நாட்டுச் சுண்டைக்காய் என்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சுண்டைக்காயைப் பொதுவாக வற்றலாகச் செய்தே சாப்பிட்டு வருகிறோம்.

Image result for சுண்டைக்காய் பயன்கள்

படம் நன்றி கூகிளார்

ஆனால் நாட்டுச் சுண்டைக்காயைப் பருப்புப் போட்டுக் கறியும் செய்யலாம். சாம்பார் வைக்கலாம், வற்றல் குழம்பும் செய்யலாம். வைடமின் சி சத்து அதிகம் உள்ள இந்தச் சுண்டைக்காயில் பொதுவாக மலைச்சுண்டைக்காய் என்னும் கசப்புள்ள சுண்டைக்காயிலேயே வற்றல் போடுவோம். பச்சைச் சுண்டைக்காய் ஒரு கிலோ வாங்கிச் சுத்தம் செய்து காம்புகளை ஓரளவுக்கு நீக்கி லேசாகக் கீறிக் கொண்டு அரை லிட்டர் தயிரில் உப்புச் சேர்த்து ஊற வைக்க வேண்டும். ஒரு வாரமாவது ஊற வேண்டும். ஆனால் தினமும் கிளறி விட வேண்டும். இல்லை எனில் பூஞ்சைக்காளான் பிடிக்கும். பின்னர் வெளியே எடுத்து தயிர் இல்லாமல் ஒரு தட்டில் பரவலாகப் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவடு ஊறுகாய் போட்டு மீதம் இருக்கும் ஜலத்திலும் சுண்டைக்காயை ஊறப் போட்டு வற்றல் செய்யலாம். இதன் ருசி அபாரமாக இருக்கும்.

Image result for சுண்டைக்காய் பயன்கள்

படம் நன்றி கூகிளார்

தயிரிலோ, மாவடு ஜலத்திலோ சுண்டைக்காய் ஊறும்போதே அவற்றைச் சமைக்க எடுத்துக் கொள்ளலாம். இனி சுண்டைக்காயின் பலன்களைப்பார்ப்போமா?

ரத்த அழுத்தத்தைச்சீராக இருக்கவைக்க உதவுகிறது.  இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும். உடல்நலமில்லாத சமயத்தில் கூட தைரியமாகச் சுண்டைக்காயைச் சாப்பிடுவதால் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும் பிரசவம் ஆன பெண்களுக்குக் கொடுக்கப்படும் அங்காயப்பொடி எனும் ஐங்காயப் பொடியில் அதிகம் சுண்டைக்காயே சேர்க்கப்படும். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்றும் ஜீரண சக்தியைத் தூண்டி, வயிற்றில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றும் என்றும் சொல்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

நெஞ்சில் உள்ள கபத்தை அகற்றும் குணம் கொண்ட சுண்டைக்காய்ச் செடியின் வேரை உலர்த்திச் சூரணம் செய்துத் தேங்காய்ச் சிரட்டையில்(கொட்டாங்கச்சி) வைத்துக் கொண்டு ஒற்றைத் தலைவலிக்காரர்கள் இந்தப்பொடியால் ஒரு சிட்டிகை எடுத்துக் கொண்டு நசியமிட்டால் தலைவலி நீங்கும் என்றும் ஜலதோஷத்தினாலும் மூக்கடைப்பினாலும் அவதிப்படுபவர்கள் சுகம்பெறுவார்கள் என்றும் சொல்கின்றனர்.

வயிறு அஜீரணத்திற்கும் சீதக்கழிச்சலுக்கும், ஜீரணமாகாமல் கழிந்தாலும் சுண்டைக்காய், வெந்தயம், மாதுளை ஓடு, நெல்லி வற்றல், ஓமம், கருகப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு இவற்றைச் சமமாக எடுத்துக் கொண்டு தனித்தனியாக இளவறுப்பாக வறுத்துக் கொண்டு பொடி செய்து தினசரி ஒரு தேக்கரண்டி பொடியை மோருடன் கலந்து சாப்பிடலாம். இது நான் நெல்லிவற்றல், மாதுளை ஓடு சேர்க்காமலும் செய்து சாப்பிட்டிருக்கிறேன். நல்ல பலன் தரும். வாயுவையும் நீக்கும். அதே போல் சுண்டைக்காயை விளக்கெண்ணெயுடன் கலந்து வறுத்து மிளகு, சீரகம், வெந்தயம், கருகப்பிலையையும் வறுத்துப் பொடி செய்து சாதத்தோடு கலந்து சாப்பிடுவார்கள். விளக்கெண்ணெய் வாசனை பிடிக்காததால் பலருக்கும் இது கொஞ்சம் பிடிக்காது தான். சும்மா ஒரு கைப்பிடி சூடான  சாதத்தில் இந்தப்பொடியைக் கொஞ்சம் போல் போட்டு ஒரு வாய் சாப்பிட்டு வந்தாலே போதும்

சுண்டைக்காய் வேரோடு, இலுப்பைப் பிண்ணாக்கு(இப்போக் கிடைக்குமானு தெரியலை)தும்பை வேர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காய வைத்துப் பொடி செய்து கொண்டு நசியமிட்டு வந்தால் வாத சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இப்போது அங்காயப் பொடி செய்முறை பார்க்கலாம்,

தேவையான பொருட்கள்

வேப்பம்பூ சுத்தம் செய்யப்பட்டது ஒரு கிண்ணம்

சுண்டைக்காய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு கிண்ணம்

இந்துப்பு அல்லது சாதாரண உப்பு தேவைக்கு

பெருங்காயம் பவுடர் இரண்டு டீஸ்பூன் அல்லது கட்டி சிறிதளவு

ஓமம்  ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை

மிளகாய் வற்றல் இரண்டு அல்லது மூன்று

மிளகு, சீரகம் தலா இரண்டு டீஸ்பூன்

சுக்கு ஒரு பெரிய துண்டு

தனியா(விருப்பப்பட்டால்)

எல்லாவற்றையும் வெறும் வாணலியில் (உப்பு உட்பட) வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும். சாப்பிடும்போது கொஞ்சம் போல் சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டுக் கொண்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொஞ்சம் சாப்பிட்டதும் பின்னர் சாம்பாரோ, குழம்போ, ரசமோ சாப்பிட்டுக்கொள்ளலாம். இதை அஜீரணம் ஏற்படும்போதும் வாயில் ருசியின்மை உணர்தல் போன்ற சமயங்களில் சூடான சாதத்துடன் சாப்பிடலாம். அல்லது மோரில் கலந்து குடிக்கலாம். 

Sunday, November 29, 2015

உணவே மருந்து! 1 முருங்கை!

சாப்பாட்டுப் பதிவுகளை எல்லாம் "எண்ணங்கள்" பக்கமே கொண்டுபோனதால் இந்தப் பக்கத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இனி இங்கேயும் கவனம் வைக்கணும்னு நினைக்கிறேன். மருந்தாகப் பயன்படும் ஒரு சில காய்கள், இலைகள் போன்றவற்றின் பலன்கள், சமைக்கும் முறை, ஆகியவற்றைச் சொல்லலாம் என்று எண்ணம். முதலில் முருங்கைக் காயைக் குறித்துப் பார்ப்போம்.
Image result for முருங்கைக்காய்
Image result for முருங்கைக்காய்

முருங்கைக்காய், இலை, பூ அனைத்துமே மருந்து தான். பூவை நெய்யில் வதக்கி திராக்ஷைப் பழம், சோம்பும் சேர்த்துப் பிள்ளைத் தாய்ச்சிகளுக்குக் கஷாயம் வைத்துக் கொடுப்பார்கள்.இது குடித்தால் பொய் வலி இருந்தால் அது சரியாகும். உண்மையான வலி என்றால் வலி நீடித்துச் சிக்கல்களைப்போக்கிப் பிரசவம் நன்கு சுமுகமாக நடக்க வழி வகுக்கும்!
Image result for முருங்கைப்பூ மருத்துவ குணங்கள்
முருங்கைப் பூவைப் பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய், சீரகம் அரைத்துவிட்டுக் கூட்டுச் செய்யலாம்.  பொரிச்ச குழம்பு செய்யலாம். முருங்கைக் கீரையையும் சமைக்கலாம். முருங்கைக்கீரைப்பருப்பு உசிலி செய்யலாம். வெங்காயம் சேர்த்துப் பாசிப்பருப்புப் போட்டுக் கறி செய்யலாம். வெங்காயம் போடாமலும் பாசிப்பருப்பு, தேங்காய் போட்டுக் கறி செய்யலாம். முருங்கைக்கீரையையும் பொரிச்ச குழம்பு, புளி விட்ட குழம்பு செய்யலாம். அடைக்குப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

முருங்கைக்காயையும் சாம்பார், பொடியாக நறுக்கி வேகவைத்து விழுதைச் சுரண்டிக் கொண்டு அதில் கூட்டு, கறி செய்யலாம். முருங்கைக்காயையும் பொரிச்ச குழம்பு செய்யலாம்.

முருங்கை சாப்பிடுவதின் பலன்கள்: சிறுநீர் எளிதாகப் பிரியும். வலியைப் போக்கும். முருங்கைப் பூ பெண்களின் மாதவிடாய்ச் சிக்கலைத் தீர்க்கும். உடலை உரமாக்கும். முருங்கை இலைச்சாறோடு எலுமிச்சைச்சாறையும் சேர்த்து முகத்தில் பூசினால் பருக்கள் மறையும். தலைவலிக்கு முருங்கை இலையோடு மிளகையும் வைத்து இடித்துச் சாறு எடுத்துப் பத்துப் போடத் தலைவலி நீங்கும்.

வீக்கம் உள்ள இடங்களில் முருங்கை இலைச்சாறைப் பூச வீக்கம் குறையும். எல்லாவற்றையும் விட நாய்க்கடிக்குச் சிறந்த மருந்து முருங்கை இலைச்சாறு. 2 பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு முருங்கை இலையோடு சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசினால் புண் ஆறி நாய்க்கடியினால் ஏற்பட்ட நஞ்சு முறியும்.

வளரும் குழந்தைகளுக்கு சாறோடு பால் சேர்த்துக் கொடுக்கலாம். வயிற்று வலி, வயிற்றுப் புழுக்கள் ஆகியனவற்றுக்கு முருங்கை இலையைக் கிள்ளி எடுத்தபின்னர் கிடைக்கும் ஈர்க்கு,கருகப்பிலை ஈர்க்கு இரண்டையும் சேர்த்துக் குடிக்கும் நீரில் போட்டு ஊற வைத்துக் குடிக்கலாம். ஆண்களுக்கு முருங்கைப் பூ தாது விருத்தியைப் பெருக்கும். மலட்டுத் தன்மை நீங்கும். கீல் வாதங்களுக்கும், அது குறித்த வலிகளுக்கும் முருங்கை விதை எண்ணெயோடு கடலை எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம். முருங்கை மரத்தின் பட்டையும் உபயோகமானதே!

முருங்கைப்பட்டையை இடித்துச் சாறு எடுத்துச் சமமாகப் பால் கலந்து நெற்றியில் பத்துப் போட்டால் தலைவலி நீங்கும். வேரைக் கஷாயமாகச் செய்து குடித்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கங்களுக்கு நல்ல மருந்து. வேரை இடித்த சாறோடு பால் கலந்து அருந்தினால் இரைப்பு, கீல் வாதம் போன்றவை நீங்கி ஜீரண சக்தியும் அதிகம் ஆகும்.

Monday, January 19, 2015

மஞ்சளில் ஒரு ஊறுகாய்

நவராத்திரிச் சுண்டல்கள் பாதியில் நின்றுவிட்டன.  வீடு வேலை செய்ய ஆரம்பித்ததில் இணையத்துக்கு அதிகம் வர முடியாமல் போய் விட்டது,. வந்தாலும் முதன்மைப் பதிவில் பதிவிடுவதோடு முடிந்து கொண்டிருந்தது. :) அப்படி ஒண்ணும் யாரும் ஏன் எழுதலைனு கேட்கலை!  காணோமேனு தேடவும் இல்லை.  என்றாலும் அவ்வப்போது நம் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் இல்லையா? அதுக்குத் தான் இந்தப் பதிவு.

ஆயிற்று.  இப்போதே இங்கே வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது.  சில நாட்களாகக் காணாமல் போன சூரியன் இப்போது முழு வீச்சில் வரத் தொடங்கி விட்டான்.  காலை மட்டும் சீக்கிரம் எழுந்துக்க (எனக்கு மட்டும் இல்லாமல்) சூரியனுக்கும் சோம்பல்! ஹிஹிஹி, நான் எழுந்துக்க இப்போதெல்லாம் ஐந்து மணி, ஒரு சில நாட்கள் ஐந்தரை என ஆகி விடுகிறது.


 ஊறுகாய்க் காலம் தொடங்கப் போகிறது.  பல ஊறுகாய்களையும் ஏற்கெனவே பார்த்து விட்டோம்.  ஆனால் மஞ்சளில் ஊறுகாய் பார்க்கவில்லை.  இதுவும் கொஞ்சம் வெஜிடபிள் ஊறுகாய் மாதிரித் தான் என்றாலும் காய்களைச் சேர்க்காமல் மஞ்சள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, எலுமிச்சை, பச்சை மிளகாய் இவற்றை மட்டுமே வைத்துப் போட வேண்டும்.


நான் இதற்கு என மஞ்சள் வாங்கவில்லை.  சங்கராந்திக்கு வாங்கிய மஞ்சள் கொத்தில் கிடைத்த மஞ்சள் கிழங்குகளே போதுமானவையாக இருந்தன.   வாங்க வேண்டுமெனில் எல்லாமும் ஐம்பது கிராம் வாங்கவும். அதற்கு மேல் வேண்டாம்.  ஐம்பது கிராமே ஒரு பெரிய பாட்டில் நிறைய வரும். பச்சை மிளகாய் ஐம்பது கிராமில் பாதி போதும்.  அல்லது ஒரு பத்து மிளகாய் இருந்தால் போதும்.  ஏனெனில் மிளகாய்த் தூள் வேறே சேர்க்க வேண்டும்.  இப்போத் தேவையான பொருட்கள்:

பச்சை மஞ்சள் தோல் சீவித் துண்டமாக  நறுக்கியது  - ஒரு கிண்ணம்

இஞ்சி அதே போல் தோல் சீவித் துண்டமாக நறுக்கியது - அரைக்கிண்ணம்

மாங்காய் இஞ்சி (பிடித்தமானவர் சேர்க்கவும், இங்கே எனக்குக் கிடைக்கவில்லை;  திருச்சி போகணும்>)  நறுக்கியது     --- அரைக் கிண்ணம்

எலுமிச்சை  பெரிதாக இருந்தால் ஐந்து பழம்.   சின்னதாக இருந்தால் பத்துப் பழம்

பச்சை மிளகாய்  காரத்தைப் பொறுத்துப் பத்து அல்லது பதினைந்து இரண்டாக நறுக்கவும்.  பெரிய பச்சை மிளகாய் எனில் மூன்றாகக் கூட நறுக்கலாம்.  நறுக்கிய பச்சை மிளகாய்   அரைக் கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பெருங்காயத் தூள்  அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய்  அரைக்கிண்ணம்

மிளகாய்த் தூள்  3 டீஸ்பூன்

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

கடுகு, வெந்தயப் பொடி  ஒரு டேபிள் ஸ்பூன்

ஊறுகாய் போட்ட உடனே சாப்பிட வேண்டுமெனில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு மஞ்சள், இஞ்சி,மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாயைக் கொஞ்சம் வதக்கிக் கொள்ளவும்.

வதக்கியதில் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொண்டு எலுமிச்சம்பழத்தைச் சாறு எடுத்துச் சேர்த்துக் கலக்கவும்.  மீதம் உள்ள எண்ணெயைச் சுட வைத்துப் பின் ஆற வைத்துச் சேர்க்கவும்.  வெளியில் வைத்தால் இரண்டு நாட்களும், குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரமும் இதை வைத்திருக்கலாம். வதக்காமல்  பச்சையாகவே எலுமிச்சைச் சாறு உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்தும் வைத்துச் சாப்பிடலாம்.

கொஞ்ச நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் மேற்சொன்னபடி நறுக்கிய காய்களைக் கலந்து கொள்ளவும். எலுமிச்சையைப் பொடித்துண்டமாக நறுக்கிச் சேர்க்கவும்.  சின்னதாக இருந்தால் ஆறு எலுமிச்சையையும், பெரிதாக இருந்தால் மூன்று எலுமிச்சையையும் நறுக்கிச் சேர்க்கவும்.  மீதம் உள்ள எலுமிச்சையில் சாறு எடுத்துக் காய்களோடு கலக்கவும்.  உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், சர்க்கரை, கடுகு, வெந்தயப் பொடி ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.

அடுத்த நாள் கொஞ்சம் நீர் விட்டிருக்கும்.  கிளறி விட்டு விட்டு நல்லெண்ணெயைக் காய வைத்து ஆற விட்டு ஊறுகாயில் சேர்க்கவும்.  வினிகர் வாசனை பிடித்தமெனில் White Cooking Vinegar வாங்கி ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டீஸ்பூன் சேர்க்கவும்.  இதை வெளியேயே வைத்திருக்கலாம்.  வினிகர் ஊற்றுவதால் சீக்கிரம் கெடாது.  எங்களுக்கு வினிகர் வாசனை பிடிக்காது. பொதுவாக ஊறுகாய்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது இல்லை.  ஆனால் இந்த ஊறுகாய் சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.  ஆகவே இந்த ஊறுகாயை மட்டும் எண்ணெய் ஊற்றிக் கிளறி விட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் சாப்பிடும் முன்னர் வெளியே எடுத்து வைத்து விட்டுப் பயன்படுத்துவோம்.  சப்பாத்திக்குக் காய்கள் ஏதும் பண்ணவில்லை என்றாலோ, ஆலு பரோட்டா, முள்ளங்கி பராட்டா, தேப்லா போன்றவற்றுக்கோ நல்ல துணை.