நன்றி கூகிளார்
முள்ளங்கியின் சிறப்பு மிகச் சிறப்பு! முக்கியமாய் நீரிழிவு உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். தினம் முள்ளங்கியை சாலடாகச் சாப்பிட்டு வரலாம். அல்லது சாறு பிழிந்து சாப்பிடலாம். வட மாநிலங்களில் முள்ளங்கி பயிராகும் பருவத்தில் பெரிய முள்ளங்கியை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். போன புதுசிலே அதைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கும். முள்ளங்கியை சாம்பார் தான் அதிகம் செய்து பார்த்திருக்கேன். அதுவுமே பிறந்த வீட்டில் அப்பாவுக்கு அந்த வாசனையே பிடிக்காது என்பதால் அவர் இல்லாத சமயங்களில் தான் அம்மா செய்வார். அப்புறமாக் கல்யாணம் ஆகி வந்தும் முள்ளங்கி சாம்பார் தான் செய்திருக்கேன். சொல்லப் போனால் இலையோடு முள்ளங்கியைப் பார்த்ததே இல்லை. முதல் முறையாக எழுபதுகளில் ராஜஸ்தான் போனப்போத் தான் முள்ளங்கியைக் கீரையோடு பார்த்தேன். வீட்டிலும் பயிராக்கினோம். கீரையைப் பயன்படுத்துவார்கள் என்பது தெரியாததால் சந்தையிலிருந்து முள்ளங்கி வாங்கி வரும்போதே கீரையை நறுக்கிவிட்டுத் தரச் சொல்லுவேன். அவங்க விசித்திரமாய்ப் பார்ப்பாங்க! பின்னர் தான் அதை வைத்துப் பல சமையல்கள் செய்யலாம் என்பதே புரிந்தது.
முள்ளங்கியில் ரொட்டி செய்வார்கள் என்பதும் அப்போது தான் புரிந்தது. முள்ளங்கிக்கீரை, கடுகுக்கீரை, ஸ்பினாச் எனப்படும் பாலக் மூன்றும் போட்டு சர்ஸோன் கா சாக் என்னும் உணவு தயாரிப்பார்கள். பெரும்பாலும் அதில் கடுகுக்கீரையே முக்கிய இடம் பெற்றாலும் சிலர் முள்ளங்கிக்கீரையையும் அதில் சேர்ப்பார்கள். கீரையைப் பொடியாக நறுக்கி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கிக் கூட்டுப் போல் பண்ணுவார்கள். கடலைமாவில் உப்பு, காரம், கரம் மசாலா போட்டு எண்ணெய், நீர் சேர்த்துப் பிசைந்து அதில் கீரையை நறுக்கிப் போட்டு பகோடா தயாரிப்பார்கள். ஆவியில் வேக வைத்து பருப்புசிலி போலும் பண்ணுவார்கள். பாலக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக்கீரை எல்லாமும் சேர்த்துப் போட்டு பஜியா எனப்படும் தூள் பஜ்ஜி வட மாநிலங்களில் மிகப் பிரபலம்.
அதுக்கு மேலே காரட், முள்ளங்கித் துருவல் எலுமிச்சம்பழம் பிழிஞ்சு உப்புச் சேர்த்துக் கடுகு தாளித்துச் சேர்த்து பச்சை வெங்காயத்தையும் துருவிக் கொடுப்பார்கள். 50 கிராம் பஜியா சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். இப்படி நாம் வேண்டாம் எனச் சொல்லும் கீரை வகைகள் நிறைய இருக்கு. எல்லாவற்றையும் வடக்கே பயன்பாட்டிலும் இருக்கு. வெந்தயக்கீரை கூட எனக்கு அங்கே போய்த் தான் தெரியும். கொஞ்சம் கசப்பு இருக்கும் என்பதால் நாம் தவிர்க்கிறோமோ என்னமோ! ஆனால் நாங்க பாகற்காய் கூடச் சாறு எடுத்துச் சாப்பிடுவதால் கசப்புத் தெரிவதில்லை. முள்ளங்கிக்கீரையைப் பாசிப்பருப்புப் போட்டு தேங்காய், ஜீரகம் அரைத்து விட்டுக் கூட்டாகவும் செய்யலாம்.மிளகு வறுத்து அரைத்துப்பொரிச்ச குழம்பும் பண்ணலாம். முள்ளங்கியின் பயன்களை முதலில் பார்த்துவிட்டுப் பின்னர் முள்ளங்கியிலிருந்து தயாரிக்கும் உணவு வகைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முக்கியமாய் வாதம் அதிகம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். சிறுநீரகக் கற்கள் கரைய இது அருமருந்து. கால்சியம், இரும்பு, வைடமின் ஏ,பி,சி மற்றும் புரதச் சத்து இருப்பதால் சிறு குழந்தைகளுக்கு ஒரு முள்ளங்கி வில்லையை வேக வைத்து நன்கு பருப்பு சாதத்தோடு மசித்துக்கொடுக்கலாம். அதோடு இது விலை எப்போவும் உயராது! விலை குறைவாகவே இருக்கும்.