எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, May 29, 2018

உணவே மருந்து! அகத்திக்கீரை!

நம் அகத்தை அதாவது வயிற்றைச் சுத்தம் செய்வதால் இந்தக் கீரைக்கு அகத்திக்கீரை என்று பெயர். பொதுவாக எல்லா நாட்களிலும் அகத்திக்கீரையைச் சாப்பிடுவதில்லை. ஏகாதசி விரதம் இருந்த மறுநாள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பார்கள். முதல் நாள் பட்டினி இருந்து வருத்தியதால்கொஞ்சம் வயிறு சூடு அதிகம் இருக்கும். அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் அந்தச் சூடு தணியும்.  வாயுப் பிரச்னை ஏற்படாது.  கசப்புத் தன்மை கொண்ட கீரை என்பதால் பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் சமைக்கும்போது கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் கீரை கசக்காது. இதுவும் மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட கீரை. இதையும் கட்டாயமாய்ப் பத்தியம் இருப்பவர்கள், சித்த, ஆயுர்வேத, ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் உண்ணக் கூடாது. மருந்தை நிறுத்திவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கீரையில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், மாவுச்சத்து, இரும்புச் சத்து போன்றவை உள்ளன. உடல் உஷ்ணம் குறைய இந்தக் கீரையைச் சமைத்து உண்பார்கள். பித்தம் நீங்கி அஜீரணம் போய் ஜீரணம் உண்டாகும்.  கால்களில் விரல்களின் ஓரத்தில் வரும் சேற்றுப் புண்களுக்கு இந்தக் கீரையின் சாறைத் தடவலாம்.  சரும நோய்க்கும், தேமலுக்கும் இது நல்ல மருந்து. இந்தக்கீரையின் இலைகளைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி அரைத்து உடலில் பூசிக் கொண்டு குளிக்கலாம். கீரைச் சாற்றில் தேன் கலந்து குழந்தைகளின் உச்சந்தலையில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை மறையும்.  பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் இந்தக்கீரை நல்ல பலன் அளிக்கும். தொண்டைப் பிரச்னை உள்ளவர்கள் இந்தக் கீரையைப் பச்சையாக வாயில் போட்டு மெல்லலாம். தொண்டை வலி,  தொண்டைப்புண் சரியாவதோடு வயிற்றில் உள்ள புழுக்கள், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

Image result for அகத்திக் கீரை மருத்துவ குணங்கள்

படத்துக்கு நன்றி கூகிளார்.

இந்தக் கீரையைக் காலையில் நறுக்கக் கூடாது என்பார்கள். காரணம் ஏதோ உண்டு. மறந்துட்டேன். கேட்டுச் சொல்கிறேன். ஆகவே முதல்நாளே வாங்கி வந்ததும் கீரையை ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்புச் சேர்த்துக் கீரையை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வற்றல் தாளித்துத் தேங்காய்த் துருவலோடு வெல்லம் சேர்த்துக் கிளறிப் பொரியல் (கறி அல்லது சுண்டல்) செய்து சாப்பிடலாம். மற்றக் கீரைகள் மாதிரி இதையும் சமைக்கலாம் என்று சொன்னாலும் நான் செய்து பார்த்தது இல்லை. 

Sunday, May 27, 2018

உணவே மருந்து! சிறுகீரை!

சிறுகீரையைப்பத்தியம் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. அகத்திக்கீரை போல் இதுவும் பத்தியத்தை முறிக்கும் இயல்பு உடையது! இந்தக்கீரை எங்கு வேண்டுமானாலும் வளரும். இதுவும் குப்பைக்கீரையும் ஒன்று எனப் பலர் சொன்னாலும் இதைத் தனியே வளர்ப்பவர்களும் உண்டு. இலைகள் மாற்று அடுக்கில் அமைந்தவை. சட்டெனப் பார்ப்பவர்களுக்கு அரைக்கீரைக்கும் இதுக்கும் வேறுபாடு தெரியாது. இதிலும் பொதுவாகத் தண்டைச் சமைப்பதில்லை. கீரையில் பச்சையம் அதிகம். இந்தக் கீரையைச் சமைத்தாலும் அதன் பச்சை நிறம் மாறாது.

மிகவும் மருத்துவ குணம் நிரம்பிய இதன் இலை, வேர் ஆகியவற்றில் கஷாயம் மாதிரி வைத்துக் குடிக்கலாம். உடலில் உள்ள நச்சுத் தன்மை விலகி விடும் என்றும் அனைத்தும் கழிவுகளாக வெளியேறிவிடும் என்றும் சொல்வார்கள். நீர்க்கட்டிக் கொண்டிருந்தால் இந்தக் கீரையைப் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் தானாகப் பிரியும். இது மட்டுமல்ல. ஆங்கில மருத்துவர்களால் கூட குணப்படுத்த முடியாத சிறுநீரகக் கல் இந்தக் கீரையைத் தொடர்ந்து உண்பதால் குணமாகும். இந்தச் சிறுகீரையின் வேரோடு நெருஞ்சில் வேர், சிறுபூளை வேர்(பூளைப்பூ எனத் தென்மாவட்டங்களில் விற்பார்கள். வீட்டுக்கூரையில் இதை வைத்தால் நன்மை பயக்கும் என்றும் சொல்வதுண்டு. சங்கராந்தி(பொங்கல்) சமயம் இவற்றை வீதியில் வந்து கூவி விற்பார்கள். இந்தச் சிறுபூளை வேர், நெருஞ்சில் வேர், சிறுகீரை வேர் ஆகியவற்றோடு ஜீரகம் ஆகியவற்றை வகைக்கு 40 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு கல்லுரல் அல்லது அம்மியில் ஒன்றிரண்டாகச் சிதைத்துக் கொண்டு ஒரு லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராகச் சுண்ட வைத்து இரு பாகமாகப் பிரித்துக் காலை ஒரு பாகமும் மாலை ஒரு பாகமும் குடித்து வரக் கல்லடைப்பு முற்றிலும் நீங்கும்.

கண் சம்பந்தப்பட்ட எந்த நோய்க்கும் இந்தச் சிறுகீரை நன்மை தரக் கூடியது.  கண் பார்வைத் திறன் அதிகரிப்பதோடு, கண் காசம், கண்ணில் ஏற்படும் படலம், கண் புகைச்சல் ஆகியவை முற்றிலும் நீங்கும்.  ரத்தக் கோளாறால் ஏற்படும் பித்தம் நீங்கப் பச்சரிசிக் கழுநீருடன் சிறுகீரை வேரை அரைத்துக் கொண்டு பத்து கிராம் அளவுக்கு எடுத்துத் தேன் கலந்து கொடுத்தால் நிவாரணம் கிட்டும்.  இந்தச் சிறுகீரைச் சாறு ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் ஒரு லிட்டர், எலுமிச்சைச் சாறு அரை லிட்டர், பால் ஒரு லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு ஒரு லிட்டர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொண்டு அதில் அதிமதுரம்(பொடியாக்கி) ஏலம் (பொடி), நெல்லி முள்ளி எனப்படும் நெல்லி வற்றல்,லவங்கம் எனப்படும் கிராம்பு, கோஷ்டம், வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை வகைக்கு இரண்டு கிராம் அளவு எடுத்துக் கொண்டு ஊற வைத்து அரைத்து மேற் சொன்ன சாறுகளோடு கலந்து பதமாகக் காய்ச்சிப் பின்னர் வடித்து அதில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் கண் பிரச்னைகள் நிரந்தரமாகத் தீர்வாகும் என்கின்றனர்.

Image result for சிறுகீரை

படம் உதவி கூகிள் வாயிலாக! நன்றி.

இந்தச் சிறுகீரையை எனக்குக் கல்யாணம் ஆகிச்சென்னை வந்தப்புறம் தான் தெரியும். மதுரையில் இருந்தவரை முளைக்கீரை, அரைக்கீரை ஆகிய இரண்டு தான்! கீரைக்காரியிடம் காசு கொடுத்துக் கீரை வாங்கியதே இல்லை. அரிசி போட்டுத் தான் வாங்குவோம். கூடவே தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி எல்லாமும் அரிசி போட்டுத் தான் வாங்கி இருக்கோம். சென்னை வந்ததும் அரிசி போட்டால் கீரை கிடையாது என்பதே ரொம்ப அதிசயமாயும், வருத்தமாயும் இருந்தது. பின்னர்  எழுபதுகளின் கடைசியில் மதுரையிலும் காசு கொடுத்துக் கீரை முதலியன வாங்க ஆரம்பித்து விட்டனர்.  என் புக்ககத்தினருக்கு முளைக்கீரை தவிர்த்து மற்றவை தெரியாது! என்னமோ கீரையெல்லாம் சமைக்கிறே என்று என் மாமியார் சொல்லுவார். ஆனாலும் விட்டதில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை கூடச் சமைச்சுடுவேன். அவங்க சாப்பிடலைனா என்ன? நாங்க சாப்பிடுவோம்! :)))) இப்போ அதெல்லாம் கிடைக்கவே இல்லை என்பதோடு ஒரு கட்டுக்கீரையைச் சாப்பிடவே இரண்டு நாள் ஆயிடுது! :)))))

Friday, May 25, 2018

உணவே மருந்து! முளைக்கீரை!

Image result for முளைக்கீரை

படம் உதவி, சொல்லுகிறேன் வலைப்பக்கம், காமாட்சி அம்மா! நன்றி.

சின்ன வயசிலே அம்மா அரைக்கீரை மசிச்சாலே கோபம் வரும். ஏனெனில் அரைக்கீரையை சும்மா மசிச்சு அதிலே மோர்மிளகாய், கருவடாம் தாளிப்பாங்க! முளைக்கீரைனால் விதம் விதமாப் பண்ணுவாங்க. அநேகமா முளைக்கீரை அரைச்சு விட்டுத் தான் மசிப்பாங்க! வெறும் பச்சைமிளகாய், தேங்காய் அரைச்சு விட்டு மோர் விட்டு மோர்க்கீரையோ அல்லது வெறும் தேங்காய் மட்டும் அரைச்சு விட்டு மிளகாய் தாளித்தோ செய்வாங்க! அதோடு புளி விட்ட கீரை, பாசிப்பருப்புப் போட்டுக் கீரைனு எல்லாம் பண்ணுவாங்க. அப்புறமா நான் சமைக்க ஆரம்பிச்சதும் எல்லாக் கீரையிலும் எல்லாமும் பண்ண ஆரம்பிச்சது தனிக்கதை.

முளைக்கீரையைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்ல உயரமாக வளருவாங்கனு சொல்றாங்க. ஆனால் நானெல்லாம் முளைக்கீரை நிறையச் சாப்பிட்டும் உயரமா ஏன் வளரலைனு தெரியலை!  முளைக்கீரையைச் சாறெடுத்து அதில் ஜீரகத்தை ஊற வைச்சு வெயிலில் உலர்த்திச் சாப்பிட்டால், வாந்தி, பித்தம், மயக்கம் போன்றவையும் ரத்த அழுத்தமும் சரியாகும் என்கிறார்கள். குடல் புண்ணுக்கும் இது நல்லது. பாசிப்பருப்போ அல்லது வேறு பருப்போச் சேர்த்து உண்ணுவது நல்லது என்கிறார்கள். பொதுவாகக் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகிப் பசி எடுக்கும் என்கிறார்கள். எனக்குச் சில வருடங்கள் முன் வரை (சென்னையில் இருக்கும் வரை) முளைக்கீரை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் வந்துடும். வாங்கினால் சாப்பிட ஆசை! அதே சமயம் பயம்! ஆனால் இங்கே வந்ததும் முளைக்கீரை சாப்பிட்டால் ஒண்ணும் ஆகலை! ஆகவே அதைப் பயிராக்குவதிலோ அல்லது உரங்கள் சேர்ப்பதிலோ அங்கே உள்ள முறைக்கும் இங்கே கடைப்பிடிக்கும் முறைக்கும் வித்தியாசம் இருக்குனு நினைக்கிறேன்.

முளைக்கீரை பரு, தோலில் ஏற்படும் சரும மாற்றங்கள், தேமல் போன்றவற்றிற்கும் நல்லது. இதன் சாற்றில் முந்திரிப்பருப்பும், பசு மஞ்சளும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பட்டுப் போல் மின்னும் என்கின்றனர்.  வெயில் காலத்தில் ஏற்படும் நீர்க்கடுப்பையும் இதன் சாறோடு உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் தீரும் என்பார்கள். ஜூரத்தைத் தணிக்க வல்ல இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், சொறி, சிரங்கு போன்ற சரும நோய்கள் அண்டாது. 

Tuesday, May 22, 2018

உணவே மருந்து-- அரைக்கீரை!

Image result for அரைக்கீரை

சுமார் 40, 45 வகைக்கீரைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவை அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, புளிச்சகீரை, குப்பைக்கீரை, பசலைக்கீரை, பாலக் கீரை, தண்டுக்கீரை, அகத்திக் கீரை போன்ற சில மட்டுமே. இவற்றில் முள்ளங்கிக்கீரை, புதினாக்கீரை, கொத்துமல்லிக்கீரை போன்றவற்றைச் சேர்க்கவில்லை.

அரைக்கீரை மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. குத்துச் செடியாகப் படர்ந்து இருக்கும் அரைக்கீரை இலைகளைப் பறித்தாலும் மீண்டும் வளரும் இயல்பு கொண்டது. ஆகவே அறுத்து எடுக்கும் கீரை என்பதே நாளாவட்டத்தில் அரைக்கீரை என மாறி இருக்கலாம். அதிக உயரம் வளராது. தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்தாலும் இதன் தண்டைப் பெரும்பாலும் சமைப்பதில்லை. ஒரு முறை வந்துவிட்டால் தொடர்ந்து ஒரு வருடம் வரை பலன் கொடுக்கும். இலை பச்சையாக இருந்தாலும் கீழ்ப்பாகத்தில் லேசாகச் செவ்வரி ஓடி இருக்கும். இதன் விதைகள் கூடச் சாப்பிடலாம் என்கின்றனர்.
அந்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்,

கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்.”

எனத் திருமந்திரத்தில் சொல்லி இருப்பதாக இயற்கை வேளாண்மையில் பிரபலமான திரு நம்மாழ்வார் கூறுகிறார். இது பத்திய உணவுகளுக்குச் சிறந்தது. இதில் தங்கச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைந்திருப்பதாகச் சொல்வார்கள். சிறந்த சத்துணவான இதை எல்லோரும் தாராளமாகச் சாப்பிடலாம். எவ்விதக் கெடுதலையும் உண்டு பண்ணாது. '
இதில் நீர்ச்சத்து 87 சதவீதமும் புரதம் 2.8 சதவீதமும் கொழுப்புச் சத்து 0.4 சதவீதமாகவும், 2.4 தாது உப்புக்களும், மாவுச் சத்து 7.4 சதவீதமும் உள்ளன. இதை உண்டால் 44 கலோரிகளே பெறுவோம். தினமும் உண்ணத் தக்கக் கீரை வகையில் இது மிக முக்கியமானது.

மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். பித்தத்தைத் தணிக்கும். நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். தோல் வியாதியைத் தடுக்கும். ஆரம்ப மனோ வியாதிக்குச் சிறந்த மருந்து. தலை முடி வளரும் தன்மை உடையது. புளியுடன் சேர்த்துச் சமைக்கையில் ருசி அதிகம் இருக்கும்.

Saturday, May 12, 2018

உணவே மருந்து! புதினா! 3

புதினா சாதம்!

பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். அதுவும் ஒரு வகைப் புதினா சாதம் தான். ஆனால் இங்கே கொஞ்சம் மாறுதலாக மசாலா சாமான்கள் போட்டுப் புலவு போல் தயாரிக்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: ஒரு கட்டுப் புதினா! இது மட்டும் போதும் எனில் புதினாவோடு நிறுத்திக்கலாம். ஒரு சிலர் பச்சைக் கொத்துமல்லியும் சேர்ப்பாங்க! அது அவரவர் விருப்பம்.
பச்சை மிளகாய் 4 இஞ்சி ஒரு துண்டு. தேங்காய் வைப்பதெனில் வெங்காயம் வேண்டாம். வெங்காயத்தை வதக்கிச் சேர்க்கலாம். பூண்டு பிடிக்குமெனில் இதோடு பூண்டும் சேர்க்கலாம். நான் பூண்டு சேர்ப்பது இல்லை.

ஆகவே பச்சை மிளகாய், தேங்காய்,இஞ்சி ஆகியவற்றோடுப் புதினாவையும் சேர்த்து அரைக்கவும். தனியாக வைக்கவும்.  வெங்காயம் சேர்ப்பது அரைத்தும் சேர்க்கலாம், வதக்கியும் சேர்க்கலாம். நான் வதக்கியே சேர்ப்பேன்.

ஒரு கிண்ணம் பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி! சமைத்தும் வைத்துக்கொள்ளலாம்.

தாளிக்க

நெய், அல்லது வெண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய்

கிராம்பு ஒன்று, பச்சை ஏலக்காய் ஒன்று கருப்பு ஏலக்காய் ஒன்று, மசாலா இலை(தேஜ் பத்தா) சோம்பு அரை டீஸ்பூன், ஜீரகம் அரை டீஸ்பூன், லவங்கப்பட்டை ஒரு துண்டு

உப்பு தேவையான அளவு. வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கியது! (தேவையானால்)

இது பச்சையாகவே இருக்கணும்னா மஞ்சள் பொடி வேண்டாம். மி.பொடி, தனியாப் பொடி  எதுவும் வேண்டாம். காரத்துக்குப் பச்சை மிளகாயும், இஞ்சியும் போதும். அவரவர் காரத்துக்கு ஏற்பச் சரி செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளித்து வெங்காயம் சேர்ப்பதெனில் அதையும் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயம் களைந்து வைத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கவும். உப்புச் சேர்க்கவும். பக்கத்தில் ஓர் பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்க வைத்துத் தயாராக வைத்திருக்கவும். ஒரு கிண்ணம் அரிசிக்கு ஒன்றரைக் கிண்ணம் வெந்நீர் சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். ஒரு கனமான மூடியால் மூடி வைக்கவும். அடிக்கடி திறந்து பார்த்துக் கிளறிக் கொடுக்கவும்.

சமைத்த சாதம் எனில் விழுதைப் போட்டு எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சமைத்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். சாதம் உடையாமல் கலக்க வேண்டும். பின்னர் விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய காரட் துருவல் தூவி வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும்.

Wednesday, May 9, 2018

உணவே மருந்து! புதினா! 2

புதினா சட்னி! பொதுவா எங்க வீட்டில் அல்லது எல்லோர் வீட்டிலும் பச்சை மிளகாய் சேர்த்துச் செய்வதைச் சட்னி என்றும் மி.வத்தல் வறுத்து அரைத்துச் செய்வதைத் துவையல் என்றும் சொல்வார்கள். இப்போப் புதினாச் சட்னியைப் பார்ப்போம்.

புதினாச் சட்னிக்குத் தேவை ஒரு கட்டுப் புதினா. ஆய்ந்து தேவை எனில் பொடியாக நறுக்கிக் கழுவி வடிகட்டி வைக்கவும்.
பச்சை மிளகாய் நான்கு அல்லது ஐந்து அவரவர் தேவைக்கு ஏற்ப
புளி ஒரு சுண்டைக்காய் அளவுக்கு
உப்பு தேவைக்கு ஏற்ப

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கடுகு தாளித்தால் புதினா சட்னி தயார். தோசை, சப்பாத்தி, சாட் போன்றவற்றில் சேர்க்கவும் நன்றாக இருக்கும்.

இன்னொரு முறை   புதினா சட்னி

அதே ஒரு கட்டுப் புதினாவுக்கு நான்கு பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி, ஒரு கரண்டி பொட்டுக்கடலை, உப்பு தேவைக்கு

இவை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்தால்  புதினாச் சட்னி வட இந்திய முறையில் தயாராகும். ஒரு சிலர் பொட்டுக்கடலை சேர்ப்பதில்லை. தாளிக்கவும் மாட்டார்கள். அது அவரவர் விருப்பம். பொதுவாகப் பெருங்காயம் இதற்குத் தேவை இல்லை. எனினும் விரும்பினால் சேர்க்கலாம்.

இப்போப் புதினாத் துவையல் பார்க்கலாமா?

பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள்: ஒரு கட்டு அல்லது இரண்டு கட்டுப் புதினா! ஐந்து அல்லது ஆறு மி.வத்தல். பெருங்காயம் ஒரு துண்டு  சுண்டைக்காய் அளவுப் புளியை நீரில் ஊற வைக்கவும். உப்பு தேவைக்கு. தாளிக்க கடுகு, உபருப்பு. தாளிக்க நல்லெண்ணெய் மற்றும் வதக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

அடுப்பில் கடாயில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி முதலில் பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். பின்னர் தாளிக்கக் கொடுத்துள்ள கடுகு, உபருப்பை நன்கு வறுத்துத் தனியாக வைக்கவும். மிச்சம் உள்ள எண்ணெயில் மி.வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஆய்ந்து வைத்த புதினாவைப் போட்டு நன்கு வதக்கவும். வதங்கினால் ரொம்பக் கொஞ்சமாய் ஆயிடும். ஆகவே எத்தனை பேருக்குத் துவையல் என்பதை முடிவு செய்து கொண்டு அதற்கேற்றாற்போல் புதினாவைத் தயார் செய்யவும்.

எல்லாம் நன்கு ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும் மி.வத்தல், புளி, உப்புப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றியதும் பெருங்காயத்தையும் புதினாவையும் போட்டு அரைக்கவும். நன்கு அரைபட்டதும் எடுக்கும் முன்னர் தாளிதத்தைச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி உடனே எடுத்துவிடவும். கொஞ்சம் கொரகொரப்பாகவே இருக்கலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புதினாத் துவையல் சாதம் சாப்பிடலாம். தொட்டுக்க டாங்கர் பச்சடி! 

Tuesday, May 8, 2018

உணவே மருந்து! புதினா!

Image result for புதினா

புதினாவும் கீரை வகைகளில் ஒன்றே. ஏற்கெனவே பாலக் கீரை செய்முறைகள் பார்த்தோம். மற்றக் கீரைகளிலும் கிட்டத்தட்ட அப்படியே செய்ய வேண்டும் என்பதால் அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை போன்றவை பற்றி எழுதவில்லை. எனினும் அவற்றின் சிறப்பை மட்டும் தனியாகக் குறிப்பிட நினைக்கிறேன். அது பின்னால் வரும். இப்போப் புதினாவைப் பார்ப்போம். புதினாவுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதன் மணத்துக்காகவே அதைச் சாப்பிடுபவர் உண்டு எனில் அதற்காகவே புதினாவை ஒதுக்குபவர்களும் அதிகம். புதினா நான் சின்ன வயசில் இருந்தே சாப்பிட்டு வந்திருக்கேன். ஆனால் புக்ககத்தில் முதலில் எல்லாம் புதினா என்றாலே தெரியாது. பின்னர் சென்னை வந்தவுடனே அறிந்து கொண்டாலும் அவர்களிடையேபெருமளவு வரவேற்பு கிடையாது. ஆனாலும் இதில் உள்ள மருத்துவ குணங்களுக்காக நான் நிறையவே வாங்குவேன்.

இதில் வைடமின் பி சத்தும் இரும்புச் சத்தும் இருக்கிறது. காய்ச்சல், காமாலை, வயிற்றுச் செரிமானப் பிரச்னைகள், கீல் வாதம்,  தலைவலி போன்றவற்றை குணமாக்கும் புதினாக்கீரை!  பற்களில் ஈறுகள் சம்பந்தமான பிரச்னைகளைப் புதினாவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் குணப்படுத்தும். புதினாவையே ஆய்ந்து கழுவிச் சுத்தம் செய்து காய வைத்துப் பொடியாக்கி ஈறுகளில் படும்படியாகத் தினம் தேய்த்து வந்தால் ஈறுகளினால் ஏற்படும் பிரச்னைகள் குறையும் வயிற்றில் அஜீரணம் ஏற்பட்டால் புதினா இலைகளோடு தனியா விதைகள், சோம்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி எலுமிச்சைச் சாறும் சேர்த்துக் கொண்டு கருப்பட்டி, அல்லது வெல்லம் போட்டுக் குடித்தால் வயிற்றுத் தொந்திரவுகள் தீரும்.

புதினா செடி வகையாக இருந்தாலும் நாம் சந்தையில் வாங்கும் புதினாவின் ஒரு தண்டை ஓர் தொட்டியில் நட்டுத் தினம் முறையாகப் பராமரித்து வந்தால் புதினாச் செடிகள் புதியதாக வர ஆரம்பிக்கும். தேவைப்படும்போது இலைகளை மட்டும் பறித்துக் கொள்ளலாம். அறுபது சென்டிமீட்டர் வரை வளரும் புதினாச் செடிகளின் இலைகள் ஐந்து சென்டிமீட்டர் வரை இருக்கும். இலைகளின் ஓரங்கள் பற்கள் இருப்பதைப் போல் இருக்கும். காம்புகள் மிகச் சிறியவை! சிவப்பு நிறமான இதன் பூக்களும் சிறியவை! புதினா முழுக்க முழுக்க மருத்துவப் பயன் கொண்டது. இதிலிருந்து பெப்பெர் மின்ட் எனும் ஒரு வகை மிட்டாய் தயாரிக்கின்றனர். 

Tuesday, May 1, 2018

உணவே மருந்து! பாலக் பனீர்! 2

பாலக் பனீர் இன்னொரு முறையில் செய்வது பற்றிச் சொல்லி இருந்தேன் அல்லவா? அதற்கு ஒரு கட்டுப் பாலக்கீரை அல்லது வேறு கீரையை நன்கு அலசிக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு அடி கனமான பாத்திரத்தில் நீர் விட்டு மூடி போடாமல் வேக வைக்க வேண்டும். கீரை நன்கு வெந்து வரும்போது கீரை மத்தால் மசிக்கவும். உப்பு இப்போது சேர்த்தால் அதை நினைவில் வைத்துக் கொள்ளவும். இப்போது மற்றப் பொருட்கள் தயாராகணும்.

வெங்காயம் பெரிது ஒன்று பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளி பெரிதாக ஒன்று பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கவும். அல்லது மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாகச் சிதைக்கவும்.
மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், தனியா பொடி ஒரு டீஸ்பூன், கரம் மசாலா கால் டீ ஸ்பூன்,உப்பு தேவையான அளவுக்கு. கசூரி மேதி அரை டீஸ்பூன். ஆம்சூர் பொடி அரை டீஸ்பூன்
தாளிக்க
ஜீரகம், சோம்பு, லவங்கப்பட்டை, ஒரு கிராம்பு (அதிகமானால் காரம் தெரியும்) ஏலக்காய் ஒன்று, ஒரு டீஸ்பூன் சர்க்கரை

தாளிக்க எண்ணெய் அல்லது வெண்ணெய் (க்ரீம் இருந்தால் கடைசியில் நன்கு கலக்கி மேலே ஊற்றலாம்)
பனீர்த் துண்டுகள் தேவையான அளவுக்கு உப்பு ஜலத்தில் கழுவி நெய் அல்லது வெண்ணெயில் பொன் நிறத்தில் வறுத்துத் தனியாக வைக்கவும்.

இப்போது கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டுத் தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி கலவையைப் போட்டுக் கலந்து கொண்டேவெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்குவதற்கு சர்க்கரையைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கித் தக்காளி நன்கு வெந்தவுடன், மி.பொடி, தனியாப் பொடி, உப்பு தேவைக்குச் சேர்க்கவும். இப்போது நன்கு கலந்து விட்டு மசித்த கீரையைச் சேர்க்கவும். கீரையில் உப்புப் போட்டிருந்தால் இப்போது போடாதீர்கள். கீரையோடு மற்றப் பொருட்கள் ஒன்றாய்க் கலந்ததும் தண்ணீர் தேவையானால் சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். கீழே இறக்கும் முன்னர் கசூரி மேதி, அம்சூர் பவுடர் சேர்த்து கரம் மசாலாவும் சேர்க்கவும். நன்கு கிளறவும். கீழே இறக்கியதும் வறுத்த பனீர்த் துண்டங்களைச் சேர்த்துக் கிளறி விட்டு மேலே புதுசாக எடுத்த க்ரீமால் அலங்கரிக்கவும்.