என்னடானு அதிசயமாப் பார்க்கிறவங்களுக்கு! வற்றல்கள் போட்டுச் செய்வது தான் வற்றல் குழம்பு. மத்தவங்க எப்படியோ நம்ம ரங்க்ஸ் என்னடானா பருப்புப் போடலைனா அதை வற்றல் குழம்புனு சொல்லிடுவார். நறநறநறநற! :)))
வற்றல்கள் அவரை, கொத்தவரை, கத்திரி, வெண்டை,(இதிலே வற்றல்குழம்பு எனக்குப் பிடிக்கிறதில்லை. வெண்டை வற்றலில் மோர்க்குழம்பு மட்டும் பிடிக்கும்.) தாமரைக்கிழங்கு வற்றல், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், மிதுக்கவத்தல்(மதுரை ஸ்பெஷல் இந்த வற்றல்) ஆகிய வற்றல்கள் போட்டுச் செய்வதே வற்றல் குழம்பு. நான்கு பேருக்குச் செய்யத்
தேவையான பொருட்கள்:
புளி பழசு என்றால் நல்லது. நிறம் கருப்பாக இருக்கும் என நினைப்பவர்கள், பழைய புளி கொஞ்சமும், புதுப்புளி கொஞ்சமுமாக ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்து நீரில் ஊற வைக்கவும்.
தாளிக்க:
கடுகு, ஒரு டீ ஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்,
து.பருப்பு,
க.பருப்பு,
உ.பருப்பு
ஆகியன தலா அரை டீஸ்பூன்.
பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு
மி.வற்றல் இரண்டு,
மேலே சொன்ன வற்றல்களில் ஏதேனும் ஒன்று ஒரு கைப்பிடி அளவு
கருகப்பிலை
நல்லெண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு கரண்டி. (நல்லெண்ணெய் தான் ருசியாக இருக்கும். பிடிக்கலைனாலோ, கிடைக்கலைனாலோ வேறு சமையல் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தவிர்க்கவும்.)
சாம்பார்ப் பொடி 3 டீ ஸ்பூன் ,
உப்பு தேவைக்கு
(எங்க வீட்டிலே சாம்பார்ப் பொடினு அரைக்க/திரிக்க மாட்டோம். குழம்புப் பொடினு 1/4 கிலோ மி.வத்தலுக்கு 3/4 கிலோ தனியா, 50 கிமிளகு, 200துவரம்பருப்பு, ஒரு கரண்டி க.பருப்பு, 50 வெந்தயம், 100 கிராம் விரலி மஞ்சள் போட்டுக் காய வைத்துவிட்டு, பருப்பு சாமான்களை மட்டும் சிவக்க வெறும் வாணலியில் வறுத்துச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து/திரித்து வைச்சுப்போம். ரசம் இதிலே செய்தால் நீர்க்கத் தெளிவாக வரும். இந்த மாதிரிக் குழம்புகளுக்கு இந்தப் பொடியைப் போட்டால் நன்றாக இருக்கும். சாம்பார் என்றால் முழுக்க வறுத்து அரைத்துத் தான் செய்வோம்.
வாணலி அல்லது கல்சட்டியைக் காய வைத்துக் கொண்டு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் வற்றல்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அதே எண்ணெயிலேயே கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து.பருப்பு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை என வரிசையாகத் தாளித்துக் கொண்டு கரைத்த புளிக்கரைசலை ஊற்றவும். குழம்புப் பொடியையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். நன்கு கொதித்துக் குழம்பில் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் வறுத்து வைத்த வற்றலைச் சேர்த்து உடனே கீழே இறக்கவும். ஒரு சிலர் சாப்பிடும்போதும் வற்றலைச் சேர்ப்பது உண்டு. அம்முறையில் குழம்பின் உப்புக் காரம் வற்றலில் சேராது. ஆகையால் கொதிக்கையில் கடைசியில் சேர்க்கலாம்.
இந்தக் குழம்புக்கு இன்னும் மணம் கூட்ட வெறும் சட்டியில் மி.வத்தல் நான்கு, துவரம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், வெந்தயம் இரண்டு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வற்றலைப் போட்டதும் இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் போட்டுக் கீழே இறக்கவும். ஒரு சிலர் குழம்புப் பொடியே போடாமல் முழுக்க இந்தப் பொடியே போட்டுக் குழம்பு செய்வதுண்டு. அதற்கு வெந்தயக் குழம்பு என்று பெயர். பின்னர் பார்க்கலாம்.
அப்பாடா... நல்லதொரு குறிப்பு கிடைத்து விட்டது... நன்றி...
ReplyDeleteவாங்க, வாங்க, எங்கே காணோமேனு நினைச்சேன். வந்ததுக்கும், பாராட்டுக்கும் நன்னி ஹை! :)))
ReplyDeleteரொம்ப நாளாக எதிர்பார்த்த குறிப்பு. ரொம்ப நன்றி!!. இப்போ மாங்கொட்டை வற்றல் என்று நீல்கிரீஸில் கிடைக்கிறது. அதையும் வைத்து வற்றல் குழம்பு செய்கிறார்கள். ஆனால் அது வேக வேண்டும் என்பதால் முதலிலேயே போடுவார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க பார்வதி, மாங்கொட்டைக் குழம்பு செய்முறை தனி. இது தனி. :)))) இது தினசரி சமையலில் அடங்கும். அது கொஞ்சம் சிறப்பான தனி சமையல் பக்குவம்.
Deleteவற்றல் குழம்புக்கு எங்க வீட்டில் எல்லாருமே விசிறிகள்...:))
ReplyDeleteநானும் குழம்பு பொடி தான் ரசத்துக்கும், வற்றல் குழம்புக்கும். சாம்பாருக்கு முழுக்கவே வறுத்து அரைப்பது தான்...:)
ஆனால் வற்றலை முதலிலேயே தாளிக்கும் போது வறுத்து கொண்டு தான் புளியை கரைத்து அதன் மேல் விடுவேன். நீங்க சொன்ன மாதிரி ஒரு முறை கடைசியா சேர்த்து பார்க்கிறேன். காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா மாமி?
மிதுக்க வத்தல் சிவகங்கைக்கு செல்லும் போது மாமா வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு பிடித்தது. இங்கு மலைவாசல் ஜானகிராமனில் கேட்டு பார்க்க வேண்டும். என்னவருக்கு அது என்னவென்றே தெரியவில்லை...:)) ஒருமுறை வாங்கி வறுத்து தர வேண்டும்.
மாங்கொட்டை குழம்பா! சாப்பிட்டு நாளாகி விட்டது. அடடா! என்ன ருசி....:))
அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை கோவை2தில்லி, முதல்லேயே போட்டுவிட்டால் ஊறி விடும். கடைசியில் சேர்த்தால் கொஞ்சம் கரகர மிச்சமிருக்கும். அதிலேயே கொஞ்சம் குழம்புக் காரமும் கலந்து தெரியும். சுவையில் மாறுதல் இருக்கும்.
Deleteமிதுக்கவத்தல்னா இங்கே என் புகுந்த வீட்டிலும் தெரியாது, அம்பத்தூரில் இருக்கிறச்சே ஒரு தென் மாவட்டக் கடையில் எதேச்சையாகப் பார்த்து வாங்கினேன். இத்தனை நாட்கள் வந்தது. இனி இங்கே கிடைக்குதானு பார்க்கணும். :)))) காதி பவனில் பார்த்த நினைவு.
Deleteஎன்னமோ போங்க எனக்கு அவ்வளவு நல்லா சமைக்க தெரியாது.. மதியம் ரைஸுக்கு வைக்கிற காய் குழம்பு மட்டும் தினம் எப்படி சுவையா வைக்கிறதுன்னு யாராவது சொல்லி கொடுத்தா புண்ணியமா போகும். என் பொண்ணு குழம்புன்னாவே அலறா.. ஸ்கூலுக்கு கொண்டு போனா அப்படியே ரிட்டர்ன் ஆகுது லஞ்ச் பாக்ஸ். குழம்புன்னா ஹோட்டல்ல இருக்கிற மாதிரி கல்யாண விருந்துல போடற மாதிரி டேஸ்ட்டா இருக்கனுமாம்.. உண்மையில் எப்படி அது மாதிரி பண்றதுன்னு தெரியலை.. யார் யாரிடமோ கேட்டுத்தான் மாத்தி எல்லாம் செஞ்சு பார்க்கிறேன்.. ம்ஹூம். மிளகாய்தூள் எப்படி அரைக்கனும? நான் அரைகிலோ மிளகாய்( குண்டு மிளகாய்) முக்கால் கிலோ தனியா இதை மட்டும்தான் அரைப்பேன். எனக்காக சுவையான குழம்பு பதிவு போடுங்க.என் குட்டீஸ்க்கு காரமும் ரொம்ப இருக்க கூடாது டேஸ்ட்டாவும் இருக்கனும்!
ReplyDeleteஹாஹா வாங்க உஷா, நல்லாவே சமைப்பீங்க. முக்கியமாக் குழந்தைங்களுக்கு லஞ்சிலே கொடுக்கிறதுக்குக் கலந்த சாதம், சான்ட்விச், இட்லி, சப்பாத்தி, தோசை போன்றவை ஏற்றவை. குழம்பு சாதம், சாம்பார் சாதம் என்பவை 2 ஆம் பக்ஷம் தான். என்றாலும் குழந்தைகளின் விருப்பத்தைப் பொறுத்துத் தரலாம்.
Deleteபொடி அரைக்கும் விதம் இந்த வலைப்பக்கத்திலேயே கொடுத்திருக்கேன். முடிஞ்சாப் பாருங்க. முக்கியமாப் புளியை நல்லா ஊற வைங்க. கொஞ்சமாப் புளி எடுத்தால் போதும். நல்லா ஊறினா நல்லாக் கரைக்கலாம். தாளிப்பிலும் கவனம் தேவை. வற்றல் குழம்புக்கு ஒவ்வொண்ணாப் போட்டுத் தான் தாளிக்கணும். எல்லாத்தையும் சேர்த்துப் போட்டு ஆச்சுனு பண்ணக் கூடாது. 2 நிமிஷம் கவனம் கொடுத்தால் சமையல் சுவை அள்ளும். சமைக்கையில் வேறே எங்கும் கவனம் வேண்டாம். கணினி, தொலைக்காட்சியை மறந்துடணும். :)))) ஒவ்வொருத்தர் அடுப்பிலே குழம்பு இருக்கு எடுத்துட்டு வரேன், பொங்கல் பண்ணிட்டு வரேன்னு சொல்றாங்க, இணையத்துக்கு வந்து. அப்படி சமையலில் ஒரு கண்ணும், கணினி/தொலைக்காட்சியில் இன்னொரு கண்ணுமாக இருக்காதீங்க. குழந்தைக்குப் பிடித்ததைக் கேட்டுச் செய்து கொடுங்க. குழந்தை பிரியமாச் சாப்பிடும். அம்மா செய்து கொடுத்தாங்கனு பெருமையும் காட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteஅரை கிலோ குண்டு மிளகாய்னா முக்கால் கிலோ தனியா, 200 து.பருப்பு, 100 க.பருப்பு, 100 மிளகு, 50 வெந்தயம், 200 விரலி மஞ்சள் போட்டுக்குங்க. பருப்பு வகைகளையும், மிளகு, வெந்தயத்தையும் வெறும் சட்டியில் வறுத்துக்குங்க. மிளகாய் வற்றல், தனியாவை நல்லா வெயிலில் காய வைச்சு, அதோடு விரலி மஞ்சளையும் துண்டாக்கிப் போட்டுக் காய வைச்சு, வறுத்த சாமான்களையும் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைங்க. இது நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குக்குறைந்தது நான்கு மாசம் வரும். செலவைப் பொறுத்துக் கூடவும் வரலாம். உத்தேசமாய்ச் சொல்றேன்.
ReplyDeleteரொம்ப நன்றி! அடுத்த முறை மிளகாய் தூள் அரைக்கும்போது இப்படி அரைச்சி பார்க்கிறேன். நானும் அலுவலகம் செல்வதால் காலையில் மகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்ப தனியாக செய்ய நேரம்தான் பெரிய பிரச்சினை.. அதனால் தினம் காலை டிபன் அப்புறம் வழக்கமா காய் பருப்பு சாம்பார், ரசம், பொறியல் இப்படித்தான் இருக்கும். காலை டிபனே பள்ளிக்கு எப்படி கொடுத்தனுப்புவது என்று சாம்பார் சாதம் கொடுத்தனுப்பினால் அது அப்படியே வந்துடும். நீங்கள் சொன்னது போல் என்றாவது கலந்த சாதம் தனியாக கொடுத்தனுப்பினால் லஞ்ச் பாக்ஸ் துடைத்தது போல் காலி செய்திருப்பாள். சரி வீட்டிலிருக்கும்போதாவது வகையாக செய்யலாம் என்றுதான் உங்கள் ரெசிப்பிக்களை பார்க்கிறேன். நிஜமாவே எனக்கு நல்லா சமையல் செய்பவர்களை ரொம்ப பிடிக்கும். அவங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்கன்னு நினைச்சிப்பேன்.
Deleteவாங்க உஷா அன்பரசு, மீள்வரவுக்கு நன்றி. காலை வேளையில் எப்போவுமே வேலைக்குப் போறவங்க ஒரு சாதம் மட்டும் வைத்துக் கலந்த சாதம் செய்வது தான் எளிதானது. முதல்நாளே காய்களை நறுக்கி வைச்சுக்கலாம். அல்லது விடுமுறை நாட்களில் வீணாகாத காய்களை நறுக்கி ஒரு துணிப்பையில் போட்டு வைச்சுக்கலாம்.. வெறும் ஏலம், கிராம்பு, லவங்கப்பட்டை தாளித்து வெங்காயம், காய்களைப் போட்டு வதக்கி, இதே குழம்புப் பொடியைப் போட்டு, உப்புச் சேர்த்து வதக்கி சாதத்தைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். விடுமுறை நாட்களில் நன்கு ஓய்வாகச் சமைத்துப் போடுங்க. :))))
Deleteசுண்டைக்காய் வற்றலும், ம.த. வற்றலும் ரொம்பப் பிடிக்கும். தாளிதத்தில் க.ப. மட்டும். மற்றபடி இதே முறை. சிலசமயம் கொஞ்சூண்டு வெல்லம்.
ReplyDeleteநான் க.ப. கல்யாணம் ஆகி வந்ததும் தான் சேர்க்கிறேன். அதென்னமோ க.ப. என்றாலே அலர்ஜி! உப்புமாவுக்குக் கூடப் போட மாட்டேன் முன்னெல்லாம். :)))) வெல்லம் சேர்ப்பது பிடிக்கிறதில்லை. மாமியார் வீட்டில் பழக்கம் உண்டு. இப்போ இவருக்கு சர்க்கரை என்பதால் நிச்சயம் நோ வெல்லம் தான்.
Deleteநாங்களும் கு.பொ. இதே கலவையில்தான். ரசத்துக்கு நாங்களும் கு.பொ. தான்!
ReplyDeleteஇதை நாங்க கு.பொ.னு சொன்னதும் இல்லை. ரசப்பொடினு தான் சொல்வோம். :)))
Deleteதாமரைக்கிழங்கு வற்றலா என்று கேட்க நினைத்தால் மிதுக்க வத்தல்னு போட்டிருக்கீங்களே.. சும்மா எதுனா கெளப்பி விடுறீங்களா?
ReplyDeleteரெசிபியைப் படிச்சதும் கொஞ்சம் கெட்டியா தயிர்சாதம் வேணுங்குது நாக்கு.
அப்பாதுரை, தாமரைக்கிழங்கு வற்றல் அசப்பில் வெண்டைக்காய் வற்றல் மாதிரி இருக்கும். மிதுக்க வத்தல் எனக்குத் தெரிஞ்சு மதுரையிலே தான் பிரபலம். தும்மட்டிக்காய்னு சொல்லலாமோ?? தெரியலை. ஆனால் எனக்கு மிதுக்கவத்தல்னு சொல்லித் தான் தெரியும். இங்கே கிடைக்குதானு பார்க்கிறேன். கிடைச்சால் படம் எடுத்துப் போடறேன். :)))
Deleteவிக்கியை விக்கி விக்கிக் கேட்டதுக்கு தும்மட்டிக்காய், கும்மட்டிக்காய் எப்படி வேணாச் சொல்லலாம்னு சொல்லுது. http://tinyurl.com/qgqxhgj இங்கே போய்ப் பாருங்க. இதான் மிதுக்கவத்தல் செடியோட படம். இதன் பழம் தான் மிதுக்க வத்தல். :)))) மருத்துவ குணம் கொண்டது.
ReplyDeleteவிவரத்துக்கும் படத்துக்கும் ரொம்ப நன்றி (எத்தனை சிரமம் எடுக்குறீங்க!). கொமட்டிக்காய் பார்த்திருக்கிறேன் - பெயர் கேட்டு ஓடியிருக்கிறேன். குரோம்பேட்டை நினைவு!
ReplyDeleteவிடுங்க.. மதியம் வற்றல் குழம்பு செஞ்சு பாத்தேன். ஜூப்பர்.