எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, November 22, 2019

பருப்பு உசிலிகள்! பாரம்பரியச் சமையல்!

பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள். நான்கு பேருக்கு. காய்கள் அதிகம் பிடிக்கும் எனில் கொத்தவரை, அவரை,(பிடித்தால்), பீன்ஸ், பயத்தங்காய் போன்றவை அரைக்கிலோ தேவை. காயை நன்கு கழுவிக் கொண்டு பொடியாக நறுக்கவும்.  உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிட்டு நீரை வடிகட்டித் தனியாக வைக்கவும்.

Image result for பீன்ஸ்
பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு சுமார் 200 கிராம். (நான் கடலைப்பருப்பே போட மாட்டேன். பிடித்தவர்கள் இரண்டும் சேர்த்துப் போட்டுக்கொள்ளவும்) மிளகாய் வற்றல் காரத்துக்கு ஏற்றாற்போல் நான்கு, உப்பு தேவைக்கு, பெருங்காயம் பவுடர் எனில் அரைக்கும்போது சேர்க்கவும். கட்டி எனில் ஊற வைத்து ஜலத்தைச் சேர்க்கவும்.

பருப்பு சுமார் இரண்டு மணி நேரமாவது ஊறிய பின்னர் மிக்சி ஜாரில் எல்லாவற்றையும் போட்டு ரொம்பக் கொரகொரப்பாக இல்லாமல் கொஞ்சம் நைசாகவே அரைக்கவும். ஒரு சிலர் இதை இட்லித்தட்டில் ஆவியில் வேக வைத்துக் கொண்டு பின்னர் உதிர்ப்பார்கள். ஆனால் எங்க வீட்டில் அப்படி வைப்பதில்லை. அரைத்த மாவை அப்படியே உசிலிப்போம். கடாயில் சமையல் எண்ணெய் ஒரு கரண்டி விட்டுக்கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு அரைத்த மாவைப் போட்டு நன்கு கிளற வேண்டும். அடிக்கடி கிளறிக்கொடுக்கவும். எண்ணெய் தேவையானால் இன்னும் கொஞ்சம் விட்டுக்கொள்ளலாம். சிறிது நேரத்தில் நன்கு உதிராக வந்து விடும். இப்போது வேக விட்ட காய்களைச் சேர்த்து எல்லாம் நன்கு கலக்கும்வரை கிளறிப் பின்னர் கீழே இறக்கலாம். வாழைப்பூ எனில் பூவில் கள்ளனை ஆய்ந்து கொண்டு பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைத்து விட்டுப் பின்னர் அந்த மோரிலேயோ அல்லது புளி ஜலத்திலேயோ வேக வைக்க வேண்டும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும். பின்னர் வடிகட்டிக்கொண்டு முன்னர் சொன்னமாதிரி பருப்பை உசிலித்துக் கொண்டு வெந்து வடிகட்டிய வாழைப்பூவைச் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவேண்டும்.

ஓர் ஒற்றைத் தட்டில் இலையைப் போட்டு எண்ணெய் ஊற்றித் தடவி அதில் அரைத்த மாவைப் போட்டு ஓர் மூடியால் மூடி இட்லி வேக வைக்கிறாப்பொல் வேக வைப்பார்கள். அதன் பின்னர் அதை எடுத்துக் கொண்டு கைகளால் உதிர்த்துக்கொண்டு அடுப்பில் எண்ணெய் ஊற்றித் தாளித்துக் கொண்டு அதில் போட்டு உதிர்க்கலாம். இன்னும் சிலர் மிக்சி ஜாரில் வெந்த பருப்பு உசிலியைப் போட்டுச் சுற்றுவோம் என்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி எல்லாம் நாங்க செய்வதே இல்லை. அரைத்ததை நேரடியாகப் போட்டுக் கிளறிப் பண்ணுவது தான் எங்க வீட்டில் செய்யும் முறை.

Image result for கீரை

இதுவே கீரை வகைகள் எனில் கீரையைக் கழுவி நறுக்கிக் கொண்டு பருப்பு உசிலிக்கு அரைத்ததோடு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதைக் கட்டாயமாக இட்லித்தட்டில் வேக வைத்தே ஆகவேண்டும். வெந்ததும் அதை எடுத்துக் கடாயில் எண்ணெய் ஊற்றித் தாளித்துக்கொண்டு வெந்த கீரை+பருப்புக்கலவையைப் போட்டு உதிர்க்கவேண்டும். நன்கு பொலபொலவென உதிர்ந்து விடும்.

Image result for சேம்பு இலை   Image result for முட்டைக்கோஸ்

இனி முட்டைக்கோஸ், புடலை, சேம்பு இலை ஆகியவற்றில் பண்ணும் முறை. முட்டைக்கோஸைப் பெரிய இலையாக வரும்படி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவிவிட்டு உப்பு, மஞ்சள்பொடி தடவிக்கொண்டு சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்னர் அரைத்த பருப்பு விழுதை அதில் பரவலாகத் தடவ வேண்டும். பின்னர் அதை அப்படியே சுருட்டி வைக்க வேண்டும். அதே போல் முட்டைக்கோஸின் 2,3 இலைகளில் தயார் செய்து கொண்டு பின்னர் அதை இட்லித்தட்டில் வைக்க வேண்டும். வெந்த பின்னர் அவற்றைத் தேவையான அளவில் வெட்டிக்கொண்டு கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக்கொண்டு இதையும் போட்டு நன்கு வறுத்து எடுக்க வேண்டும். இதே போல் சேம்பு இல்லையிலும் பண்ணலாம். சேம்பு இலையை நன்கு கழுவிக்கொண்டு அரைத்த மாவைத் தடவிக்கொண்டு இலையைச் சுருட்டி இட்லித்தட்டில் வேக வைத்துக்கொண்டு பின்னர் முன் சொன்ன மாதிரி வறுத்து எடுக்க வேண்டும்.

Image result for புடலை

புடலங்காய் எனில் இரண்டு அங்குலம் நீளத்துக்கு நீள் சதுர வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். அவற்றில் முன்னால் சொன்ன மாதிரி உப்பு, மஞ்சள் பொடி தடவிக் கொஞ்ச நேரம் வைக்க வேண்டும். பின்னர் புடலங்காயின் உள் பாகத்தில் அரைத்த விழுதைத் தடவிக்கொண்டு அப்படியே பாதியாக மடிக்க வேண்டும். தேவை எனில் ஒரு நூலால் புடலங்காயைச் சுற்றலாம். பின்னர் இப்படியே எல்லாப் புடலங்காயிலும் தடவிச் சுருட்டிக்கொண்டு இட்லித்தட்டில் வைத்து வேக விட்டுக்கொண்டு நறுக்கியோ நறுக்காமலோ அப்படியே வறுத்து எடுக்கலாம்.

படங்களுக்கு நன்றி கூகிளார்.

Tuesday, November 19, 2019

பாரம்பரியச் சமையலில் பருப்பு உசிலிகள்!

சேப்பங்கிழங்குக் கறியைச் சின்ன உருளைக்கிழங்குக் கறி மாதிரி முழுசாக வேகவிட்டுத் தோலை உரித்துக் கொண்டு உப்பு, காரம் சேர்த்து எண்ணெயில் வதக்கலாம். அதே போல் சிறுகிழங்கு, பெரு கிழங்கு ஆகியவற்றையும் வேக வைத்துத் தோலை உரித்துக் கொண்டு வதக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு எனில் வேகவிட்டுக் கொண்டும் பண்ணலாம். வேக விட்டால் வாழைக்காய்க் கறிக்குப் போடுவது போல் மி.வத்தல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, தேங்காய் வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். இல்லை எனில் அப்படியே வதக்கலாம். பிடிக்கலை என்பவர்கள் வாழைக்காய் வறுவல் மாதிரி எண்ணெயில் வறுத்து விடலாம்.

நூல்கோல், காரட், டர்னிப், போன்றவற்றை பீட்ரூட் கறி பண்ணுவது போல் வேக வைத்துக் கொண்டு வெங்காயம் சேர்த்துப் பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லி ஒன்றிரண்டாகச் சிதைத்துச் சேர்த்துப் பண்ணலாம். அல்லது வெங்காயம் போடாமல் பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொண்டு இவற்றைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வேகவிட்டுக் கொட்டிக்கொண்டு தேங்காய் சேர்த்துத் தேங்காய்க் கறி பண்ணலாம். முட்டைக்கோஸையும் பொடியாக நறுக்கிக் கொண்டு இம்மாதிரிப் பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய் போட்டுக்கறி பண்ணலாம். இவை எல்லாவற்றுக்கும் தேங்காய் சேர்க்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் நன்றாக இருக்கும். தேங்காய் சேர்த்து வேகவிட்டுப் பண்ணும் கறி வகைகள் வயிற்றை எதுவும் செய்யாது. இவற்றில் முட்டைக்கோஸ் தவிர்த்து மற்றவற்றை வேகவைத்துக் கொண்டு வெங்காயம் சேர்த்தும் பண்ணலாம். முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கிக் கொண்டு வெங்காயம் சேர்த்துக் குடமிளகாயோடு வதக்கலாம். குடமிளகாய் சேர்த்தால் காரப்பொடியோ வேறு காரமோ தேவை இல்லை. அல்லது ஒன்றிரண்டு பச்சை மிளகாய் போட்டுவிட்டு அரை டீஸ்பூன் சாம்பார்ப் பொடி போட்டும் வதக்கலாம். இவை எல்லாமே சமைக்கும்போது நமக்குத் தோன்றும் வகையில் மாற்றி மாற்றிச் செய்து கொள்ளலாம்.


அடுத்துப் பருப்பு உசிலி வகைகள். பருப்பு உசிலியைக் காய்கள் சேர்க்காமல் பருப்புக்களை மட்டும் ஊற வைத்து அரைத்து அப்படியே தாளிதத்தில் சேர்த்து நன்கு உசிலித்துச் சாப்பிடலாம். காய்கள் சேர்த்தும் பண்ணலாம். காய்கள் எனில் பருப்பு உசிலிக்கு எடுத்தது முதலில் வாழைப்பூ, பீன்ஸ், கொத்தவரை ஆகியவை தான். ஒரு சிலர் புடலை, அவரையில் பண்ணுகின்றனர். அதுவும் நன்றாகவே இருக்கும். இதைத் தவிர்த்து முருங்கைக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை போன்ற கீரை வகைகளிலும் பண்ணலாம். பருப்பு உசிலிக்கு நன்கு நைசாக அரைத்துக் கொண்டு புடலங்காயில் அதை ஸ்டஃப் செய்து பின்னர் இட்லித் தட்டில் வேக வைத்துக் கொண்டு பண்ணுவார்கள்.பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனாலும் எப்போதோ ஒரு முறை பண்ணலாம் காய் வகைகளிலோ, கீரை வகைகளிலோ ஒன்றைச் செய்கிறாப்போல் தான் மற்றதைச் செய்யணும். அதிகம் மாற்றம் இல்லை. நாளைக்குப் பார்ப்போமா?

ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. என்னால் தொடர்ந்து எழுத முடியலை. ஒரு சில பிரச்னைகள், மனக்கலக்கம் காரணமாகக் கணினிக்கு வந்தாலும் எழுதும் மனம் இல்லாமல் போனது. விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புகிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் கிருபையால் சரியாகும்.

Thursday, November 7, 2019

பாரம்பரியச் சமையல்கள்! உருளைக்கிழங்கு தொடர்கிறது.

வாழைக்காய்ப் பொடிமாஸ் போல உருளைக்கிழங்கிலும் பொடிமாஸ் பண்ணலாம். கீழே அதன் குறிப்பு!

நான்கு பேருக்கான செய்முறைக்குறிப்பு:-

அரை கிலோ உருளைக்கிழங்கு, தேங்காய் மூடி ஒன்றின் துருவல், பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, உப்பு, தாளிக்க கடுகு, உபருப்பு, க.பருப்பு, பெருங்காயத் தூள், கருகப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சை மூடி ஒன்று. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.

உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக்கொண்டு (ஹிஹிஹி) உதிர்த்துக் கொள்ளவும்.  உப்புப் பொடி சேர்த்துக் கிளறிக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு, உப்புப் போட்டுக் கலந்த உருளைக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.  தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நன்கு கிளறி விட்டுக் கீழே இறக்கிக் கொத்துமல்லிப்பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  சற்று ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.  வத்தல் குழம்போடு அருமையான துணை!



உருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட காரக்கறி: நான்கு பேருக்குத் தேவையான அளவு

அரைக்கிலோ உருளைக்கிழங்கு, கால் கிலோ சின்ன வெங்காயம் அல்லது 2 பெரிய வெங்காயம். தோலை உரித்துக்கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் 4, கருகப்பிலை, தாளிக்க எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு தேவைக்கு. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி தேவையானால் அரை டீஸ்பூன், பெருங்காயம் தேவையானால் பொடியாக கால் டீஸ்பூன்.

உருளைக்கிழங்கைக் கழுவி மண் போக அலசிவிட்டுக் குக்கரிலோ அல்லது பெரிய கடாயிலோ வேகப் போடவும். கடாயில் வேகப்போட்டால் உருளைக்கிழங்கை நான்காக வெட்டிப் போட்டு வேக வைக்கலாம். பின்னர் தோலை உரித்துக்கொண்டு நிதானமான அளவில் எல்லாக் கிழங்குகளையும் ஒரே மாதிரி வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் குழைவாக வேண்டுமெனில் குழைவாக வேக விட்டு உதிர்த்தாற்போல் வைத்துக்கொள்ளலாம். அவரவர் ருசிக்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கொள்ளவும்.

மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நன்கு கலந்து கொண்டு உருளைக்கிழங்குத் துண்டங்களில்  போட்டு நன்கு கலந்து வைக்கவும். பின்னர் அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு தாளிக்கத் தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கடுகு, பருப்பு வகைகள் தாளித்துக்கொண்டு பச்சை மிளகாய்,  கருகப்பிலை போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும். பின்னர் கலந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்துவிட்டால் வதக்கியது போதும். அடுப்பை அணைக்கவும். இது சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி ஆகிய எல்லாவற்றோடும் நன்றாக இருக்கும்.

Sunday, November 3, 2019

பாரம்பரியச் சமையலில் உருளைக்கிழங்கு செய்முறைகள்!

இதைத் தவிர்த்துச் சேனைக்கிழங்கைச் சமைக்கும் முறையில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு,மிளகுத்தூள் கலந்து கொண்டு சேனைக்கிழங்கு நறுக்கிய துண்டங்களைப் போடவும். ஒரு ஐந்து நிமிஷம் வெந்நீரில் வைத்து விட்டுப் பின்னர் வடிகட்டிக்கொண்டு நீரெல்லாம் போன பின்னர் அவற்றை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மொறு, மொறுவென நன்றாக இருக்கும். ஸ்ராத்த காலங்களில் சேனைக்கிழங்கைச் சதுரங்களாக நறுக்கிக் கொண்டு பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொண்டு உப்பு, மிளகுத்தூள் சேர்ப்போம். ஸ்ராத்தம் இல்லை எனில் அவற்றிற்குக் காரப்பொடி போடலாம். இதே போல் வாழைக்காயிலும் முற்றிய காயில் பண்ணலாம். முன்னர் சொன்ன மி.வத்தல், ஜீரகம், தேங்காய் ஒன்றிரண்டாக அரைத்தவற்றை வாழைக்காயைப் புளி ஜலத்தில் வேகவிட்டுக் கொண்டு அதே போல் பண்ணலாம்.

Image result for உருளைக்கிழங்குImage result for உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குப் படங்கள் கூகிள் வாயிலாக இணையத்தில் இருந்து. சிவப்பு உருளைக்கிழங்கு இங்கே அம்பேரிக்காவில் கிடைத்தாலும் ருசி நன்றாக இல்லை. அல்லது எனக்குப் பிடிக்கலை. :(


உருளைக்கிழங்கில் கறி வகைகள். முதலில் உருளைக்கிழங்கில் காரக்கறி பார்க்கலாம். பொதுவாக நான் உருளைக்கிழங்கை நன்கு கழுவிட்டுத் தோலை அகற்றாமல் தான் பண்ணுவேன். சில சமயங்களில் கரடு முரடாக இருந்தால் தோலைச் சீவிக்கொள்வேன். ஆனால் உருளைக்கிழங்கு தோலுடன் சமைத்தால் நல்லது என்பார்கள். நான்கு பேருக்கு நான்கு பெரிய உருளைக்கிழங்குகளைத் துண்டங்களாக நறுக்கி எடுத்துத் தண்ணீரில் போடவும்.உருளைக்கிழங்கை மட்டும் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரில் ஊற வைக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அதில் உள்ள ஸ்டார்ச் எல்லாம் நீங்கும்.

அதன் பின்னர் அடுப்பில் கடாயை ஏற்றி சமையல் எண்ணெய் ஏதேனும் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம் சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் ஜலத்தில் ஊறிக்கொண்டிருக்கும் உருளைக்கிழங்குத் துண்டங்களை வடிகட்டி அடுப்பில் உள்ள கடாயில் போடவும். தேவையான உப்பு, காரப்பொடி சேர்க்கவும். நான்கு உருளைக்கிழங்குக்குத் தனி மிளகாய்ப் பொடி எனில் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம். அல்லது சாம்பார்ப் பொடி ஒன்றரை டீஸ்பூன் போடலாம். நன்கு வதக்கவும். உருளைக்கிழங்குத் துண்டங்கள் நன்கு வதங்கித் தனித்தனியாக வந்து மேலே எண்ணெய் கசிய ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கில் காரக்கறி:- நான்கு பேருக்கு அரைக்கிலோ உருளைக்கிழங்கு தேவை. உருளைக்கிழங்கை நன்கு அலம்பிக் கொண்டு முழுதாகவோ அல்லது இரண்டாக நறுக்கியோ எடுத்துக்கொள்ளவும். ஓர் கடாயில் நீரைக் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டங்களைப் போட்டு வேக வைக்கவும். அல்லது குக்கரில் வைப்பதாக இருந்தால் முழுதாகவோ அல்லது இரண்டாக நறுக்கியோ உருளைக்கிழங்கை வேக வைக்கலாம். ஒரே சப்தம் விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் வெளியே எடுத்துத் தோலை உரித்துக் கொண்டு அதைத் தேவையான அளவுக்குச் சின்னத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

இந்தக் கறிக்குத் தனி மிளகாய்த் தூள் தான் நன்றாக இருக்கும். ஓர் வாயகன்ற பேசினை எடுத்துக் கொண்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் எடுத்துக்கொண்டு தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டுக் கையால் குழைக்கவும். காரம் அதிகம் தேவை எனில் ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்க்கலாம். இதில் வேக வைத்த உருளைக்கிழங்குகளை ஒரே மாதிரியான அளவில் நறுக்கித் துண்டங்களாக்கிச் சேர்க்கவும். கைகளால் உருளைக்கிழங்கு முழுவதும் காரம் சேரும்படி நன்கு கலக்கவும். பத்து நிமிஷம் போல் அதை ஊறவிடவும். பின்னர் அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு தாளிப்புக்குத் தேவையான அளவுக்கு மட்டும் எண்ணெய் ஊற்றிக் கடுகு போடவும். பொரிந்ததும் மிளகாய்ப் பொடிக்கலவையில் ஊற வைத்த உருளைக்கிழங்குத் துண்டங்களைப் போட்டு அடுப்பைத் தணித்து வைத்துக் கொண்டு நன்கு வதக்கி எடுக்கவும். மேலே சிவந்து மொறுமொறு எனவும் உள்ளே நன்கு பஞ்சாகவும் வரும்போது கீழே இறக்கி வைக்கவும். சாப்பிடும்போது சூடாகப் பரிமாறவும்.

சின்ன உருளைக்கிழங்குக் கறி



சின்ன உருளைக்கிழங்குக் கறிக்குத் தேவையான சாமான்கள். சின்னதாக உருண்டையான உருளைக்கிழங்கு சுமார் அரைக்கிலோ! நான்கு பேருக்கு இதெல்லாம் போதாது. ஏனெனில் உருளைக்கிழங்கு அனைவருக்கும் பெரும்பாலும் பிடிக்கும். ஓர் அளவுக்குத் தான் சொல்லி இருக்கேன். அரைக்கிலோ உருளைக்கிழங்கை மண் போகக் கழுவித் தோல் உரியும்படி வேக வைத்துக்கொள்ளவும்.

முதல் முறையில் சொன்ன மாதிரி ஓர் வாயகன்ற பேசினில் காரப்பொடி, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, உப்புப் போட்டுக் கலந்து கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுக் கலக்கவும். இதில் உருளைக்கிழங்குகளைத் தோல் உரித்துவிட்டுச் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். எல்லா உருளைக்கிழங்குகளிலும் சமமாக உப்புக் காரம் பரவும்படிச் செய்யவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் (தாளிக்க மட்டும்) விட்டுக் கடுகு தாளித்துக் கொண்டு ஊற வைத்த உருளைக்கிழங்குகளைப் போட்டு மூடி வைக்காமல் வதக்கவும். இம்முறையில் எண்ணெய் கொஞ்சமாகச் செலவு ஆகும். உருளைக்கிழங்கிலும் காரம் நன்றாக ஒரே மாதிரி கலந்திருக்கும்

Saturday, November 2, 2019

பாரம்பரியச் சமையலில் சேனைக்கிழங்குக் கறி செய்முறைகள்

இன்னமும் கத்திரிக்காய் மஹாத்மியம் முடியவில்லை. கூட்டு வகைகள் , சப்பாத்திக்கான கூட்டுகள், பர்த்தா, துவையல், கொத்சு, பச்சடி ஆகியவை இருக்கின்றன. அதை அந்தத் தலைப்புக்களில் பார்க்கலாம். இப்போக் கறி வகைகள் என்னும் தலைப்பு என்பதால் அடுத்து வேறோர் காயில் கறி வகை பார்க்கலாம். சேனைக்கிழங்கில் பார்ப்போமா? சேனைக்கிழங்கு நம்ம ஊர்க்கிழங்கு எனச் சிலரும் இல்லை எனச் சிலரும் சொன்னாலும் நம்ம வீடுகளில் ஸ்ராத்தத்தில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். பொங்கல் குழம்பு வகைகள், திருவாதிரைக்குழம்பு ஆகியவற்றில் இது ஓர் முக்கியமான காய் வகை. இதைப் பொடியாக நறுக்கி அப்படியே வதக்கலாம். அல்லது வேக வைத்து வதக்கலாம். இதில் சில கிழங்கு வகைகள் சாப்பிட்டால் சமயத்தில் நாக்கில் அரிப்பு வரும் என்பதால் பெரும்பாலும் அரிசி கழுவிய கழுநீரிலே இதை வேக வைப்பார்கள். அது பிடிக்காதவர்கள் அரிசி கழுவிய இரண்டாம் கழுநீரில் நறுக்கிப் போட்டு ஊற வைத்துவிட்டுப் பின்னர் மறுபடி நன்கு கழுவிப் புளி ஜலத்தில் வேக விடலாம். சிலர் முதலில் அரிசிக் கழுநீரில் வேகவிட்டு வடிகட்டிவிட்டுப் பின்னர் மறுபடி கழுவி புளி ஜலத்தில் வேக விடுவார்கள். இம்மாதிரி செய்வதால் அதன் காறல் தன்மை மாறிவிடும் என்பார்கள்.

Image result for சேனைக்கிழங்கு


சேனைக்கிழங்கு அரைக்கிலோ. நல்ல மண் போகக் கழுவிப் பொடியாகத் துண்டங்களாக நறுக்கவும். அரிசி கழுவிய நீரில் அதை ஊற வைக்கவும். பின்னர் அதை வடித்து நன்றாகக் கழுவவும். புளியை நீர்க்கக் கரைத்துக்கொண்டு அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கைப் போட்டு வேக வைக்கவும். நீரை வடிகட்டவும். அடுப்பில் தே.எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஏதேனும் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வெந்து வடிகட்டிய துண்டங்களைப் போட்டுக்  காரப்பொடி  சேர்த்துக் கொண்டு சிறிது நேரம்  நன்கு வதக்கவும். பின்னர் எடுத்து வற்றல் குழம்போடு சூடாகப் பரிமாறவும்.

Image result for சேனைக்கிழங்கு

படங்கள் கூகிளார் வாயிலாக இணையத்தில் இருந்து

இன்னொரு முறை:- நறுக்கிய சேனைக்கிழங்குத் துண்டங்களை புளி ஜலத்தில் வேகவிடவும். வேக விட்டதை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அரைக்கிலோ சேனைக்கிழங்குக் கறிக்குத் தேவையான மசாலா பொருட்கள்.

தேங்காய் ஒரு சின்ன மூடி.தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். இல்லை எனில் தேங்காய்த் துருவல் ஒரு சின்னக் கிண்ணம்  , மி.வத்தல் நடுத்தரமானது 2, ஜீரகம் இரண்டு டீஸ்பூன். இவற்றை அம்மி இருந்தால் அம்மியில் எல்லாவற்றையும் சேர்த்து அரைகுறையாகக் கொரகொரவென அரைத்துக்கொள்ளவும். இல்லை எனில் மிக்சி ஜாரில் கொரகொரவெனப் பொடித்துக்கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணாய் (இதான் நன்றாக இருக்கும்) வைத்துக் கடுகு,உளுத்தம்பருப்பு, ஒரு சிவப்பு மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக்கொண்டு வேக விட்டு வடித்த சேனைக்கிழங்கைப் போட்டு அதன் மேல் கொரகொரவெனப் பொடித்தவற்றைப் போட்டு நன்கு கிளறவும். சிறிது நேரம் நன்கு கிளறிவிட்டுப்பின்னர் அடுப்பிலிருந்து எடுக்கவும். இது ஒரு தனி ருசியாக இருக்கும்.