எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, July 21, 2009

கொண்டைக்கடலை ஊறி எத்தனை நாளாச்சு???

ரொம்ப நாட்களாய் ஊறிட்டு இருக்குங்க சனா என்னும் கொண்டைக் கடலை. அது வேண்டாம், ரொம்பவே துர்நாற்றம் அடிக்கும், அதை மாட்டுக்கு வச்சுட்டு, என்ன மாடா?? பசுமாடுதான், என்ன?? அதுக்கு ஒண்ணும் பண்ணாது, அதைச் சாப்பிட்டுட்டு நல்லாப் பால் கொடுக்கும், வச்சுடுங்க முதல்லே. மாட்டுக்கு வச்சுட்டு, புதுசா ஊற வைங்க. கால் கிலோ வெள்ளைக் கொண்டைக் கடலை ஊற வைச்சு அதிலே சில கொண்டைக் கடலைகளை மட்டும் எடுத்துத் தனியா வச்சுக்குங்க.

இப்போ ஒரு உ.கிழங்கு பெரிசா எடுத்து கொண்டைக்கடலை ஊற வைச்சதோட சேர்த்துக் குக்கரில் அல்லது நல்லா எரியும்ஒரு அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டுக் குழைவாக வேக வைக்கவும். அடுத்து இப்போ மசாலா தயாரிக்கணும்.

பச்சை மிளகாய் இரண்டு அல்லது மூன்று. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு சேர்க்கிறவங்க பூண்டு 5 அல்லது 6 பற்கள். பச்சைக் கொத்துமல்லி, ஊற வைச்ச கொண்டைக்கடலை கொஞ்சம் தனியா எடுத்து வைச்சோமே அது இதை எல்லாம் நல்லா நைசாக அரைச்சு வச்சுக்கணும். தக்காளி நல்லாப் பழுத்த தக்காளி இரண்டு, ஒரு பெரிய வெங்காயம் இரண்டையும் நைசாத் தனியா அரைச்சு வச்சுக்கணும். புளி ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுக்கு எடுத்து நல்லாக் கரைச்சு வைச்சுக்குங்க. ஒரு கப் இருக்கலாம் புளி கரைத்த நீர். உப்பு ருசிக்கு ஏற்றாற்போல். மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியாத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன். காரம் இருக்கணும்னா ஒரு டேபிள் ஸ்பூன் தனியாத் தூள் போதும், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத் தூள் ஒரு டீ ஸ்பூன். சாட் மசாலாத் தூள் ஒரு டீ ஸ்பூன். இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. காலா நமக் அப்படினு கிடைக்கும் நாட்டு மருந்துக் கடையில். கறுப்பு உப்புப் பொடியோட கொஞ்சம் ஜீரகம் வறுத்துப் பொடி பண்ணிக் கலந்து வச்சுக்கணும். அவ்வளவே. சிலர் மாதுளம் விதைகளும் போடுவாங்க. அது விருப்பம் போல். பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கியும் வச்சுக்கணும், புதினா பிடிச்சால் புதினாவும் பச்சை மிளகாய் விழுதோட சேர்த்து அரைக்கலாம், அல்லது பொடியாக அரிந்தும் வச்சுக்கலாம். வெங்காயமும் பொடிப் பொடியாக நறுக்கி வச்சுக்கணும்.

சரிங்க எல்லாம் தயார் பண்ணியாச்சா?? இப்போ கடாய் அல்லது வாணலி அல்லது இருப்புச் சட்டியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை எண்ணெயோடு கரைந்ததும், ஜீரகம் தாளித்து, அரைச்சு வைச்ச பச்சை மிளகாய்க் கலவையைப் போட்டு வதக்கணும், அது வதங்கியதும், தக்காளி, வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கணும். இது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயம், மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி சேர்த்து வதக்கணும். இவையும் வதங்கியதும், வேக வைச்ச கொண்டைக்கடலையைப் போட்டு, உப்பு, வேக வைத்த உருளைக் கிழங்கை உதிர்த்துச் சேர்க்கவும். கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும். நல்லாக் கொதிக்க விடவேண்டும். சேர்ந்து கொதிக்கும்போது வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவுக்குச் சேர்க்கவும். கரம் மசாலாப் பொடி சேர்க்கவும். இதுவும் சேர்ந்து கொதிச்சுக் கெட்டியானதும், இறக்கி வைத்து, பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, புதினாத் தழை தூவவும். சாட் மசாலாப் பொடியை மேலே தூவவும். கலந்தால் பிடிக்குமென்றால் இறக்கும்போதே சாட் மசாலாப் பொடியும் தூவலாம்.

இது சமோசாவுடன் சாப்பிடவும், நல்லா இருக்கும். பட்டூரா என்னும் பூரியுடன் சாப்பிடவும் நல்லா இருக்கும். சும்மாவே புளிச்சட்னி, பச்சைச் சட்னி, பேரீச்சைச் சட்னி ஊத்திக் கொண்டு, வெங்காயம், கொத்துமல்லித் தழை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிடலாம். அடுத்து பட்டூரா செய்வோமா?? யார் முதல்லே சாப்பிட வரப் போறதில்லை??? யாருமே வரதில்லையே, இருந்தாலும் விட மாட்டோமுல்ல!