நேத்திக்கு ரஞ்சனி மைதா பரோட்டா பத்தின எச்சரிக்கை போட்டிருந்தாங்க. இணையத்திலே சில ஆண்டுகளாக இது உலவி வருது. ஆனால் உண்மையா பரோட்டாவே சாப்பிடக் கூடாதா? தாராளமாய்ச் சாப்பிடலாம். கோதுமை மாவில் செய்திருந்தால். இன்னிக்குக்காலம்பர வெளியே போயிட்டு வர நேரம் ஆகும் என்பதால் வழக்கமான இட்லி, தோசை வேண்டாம், வேறே ஹெவியாக்காலை ஆகாரம் கொடுனு ரங்க்ஸ் கேட்க, சட்டுனு உ.கி. எடுத்துக் குக்கரில் வேகப் போட்டுட்டு, கோதுமை மாவைக் கொஞ்சம் போல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்தேன்.
வெங்காயம் இல்லை. அதனால் என்ன? மத்தது இருந்தது. தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி போன்றவை இருந்தன. கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்துக் கொண்டு இஞ்சி ப,மி, கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கித் தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கிக் கொண்டு, வெந்த உருளைக்கிழங்கில் அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கலந்து உதிர்த்தாப்போல் வதக்கிய தக்காளியில் கொட்டிக் கலந்து தேவையான உப்புச் சேர்த்தேன். இறக்கும் முன்னர் லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் வறுத்துப் பொடித்த தூள் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்த்தேன்.
இப்போப் பரோட்டா.
இதான் பிசைந்த மாவு. ஹிஹிஹி,கொஞ்சமா இருக்கேனு பார்க்கிறீங்களா? மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அப்புறமாக் கடைசிப் பரோட்டா பண்ணறச்சே நினைப்பு வந்தது. மாவை எடுத்துக் கொண்டு உருட்டி அதில் வெண்ணெய் தடவி மடித்துப் போட வேண்டும். மீண்டும் வெண்ணெய், மடித்துப் போடணும். இம்மாதிரி நான்கைந்து முறையாவது வெண்ணெய் தடவி மடித்துப் போட்டால் நன்கு உள்ளே லேயர் லேயராக வரும். வெண்ணெய் தடவிக் கீழே பார்க்கலாம்.
இது வெண்ணெய்னு சொல்லித் தெரியவேண்டாம். :))))))
வெண்ணெய் தடவி இரண்டு மூன்று முறை மடித்துப் போட்டாச்சு. மடித்ததைக் கடைசியில் இப்படிக் கீழே காண்கிறாப்போல் சுருட்டணும்.
சுருட்டினதை நீள வாட்டத்திலே எடுத்து அப்படியே மடிக்கணும். கீழே பாருங்க.
இந்த மாதிரி உள்ளுக்குள்ளே மடிப்புக்களோடு சுருட்டணும். சுருட்டியதை அப்படியே மீண்டும் குழவியால் சமன் செய்து இடணும்.
இட்டதை காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில், (நான் சப்பாத்திக்குத் தனிக்கல், தோசைக்குத் தனிக்கல் என வைத்திருக்கேன்.) கொஞ்சம் போய் அடியில் நெய் தடவிப் பரத்திவிட்டுப் போடணும். உடனடியாக வேக எண்ணெயோ அல்லது நெய்யோ(நெய்யே நல்லா இருக்கும், முடியாதவங்க நெய்யோடு கடலை எண்ணெய் கலந்துக்கலாம்.) விடக் கூடாது. ஒரு பக்கம் வெந்து இம்மாதிரி உப்பி வரும். அப்போ மறுபக்கம் திருப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து நெய் ஊற்றினால், நன்கு உப்ப ஆரம்பிக்கும்.
உங்கள் பரோட்டா வெந்து கொண்டிருக்கிறது. விரைவில் ரெடியாயிடும். சாப்பிட வாங்க.
அப்பாடா, சமைக்கும்போதே படம் எடுத்து ஒரு வழியாப் போட்ட்டுட்டேன். இப்படித் தான் முறுக்குச் சுத்தும்போதும் எடுக்க நினைச்சு மறந்து போச்ச்ச்ச்ச்ச்! கிருஷ்ண ஜயந்திக்குச் சுத்தறச்சே படம் எடுத்துப் போட்டேன். ஆனால் இங்கே போடலைனு நினைக்கிறேன். :))))