எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, September 14, 2009

என்னை யாராலும் மசிக்க முடியுமா?


பட்டூரா தான் பண்ணணும், ரொம்ப நாளாச் சொல்லிட்டே இருக்கேன், ஆனாலும், இப்போ கை கொஞ்சம் வலி எடுக்கிறது. மாவு பிசையணும் இல்லை? என்னதான் மாமியார், நாத்தனாரை நினைச்சுட்டாலும், கையிலே வலுவும் வேணுமே. அதனால் இப்போதைக்கு அதைக் கொஞ்சம் தள்ள்ள்ளி வச்சுட்டு, கொண்டைக்கடலை பண்ணிட்டேன்னு சொல்றீங்க? அதனால் பரவாயில்லை, அதோட, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கடையிலே கிடைக்கும் ஓமப் பொடி அல்லது நீங்களே செய்த ஓமப் பொடி, அரிசிப் பொரி, பச்சைக் கொத்துமல்லி, தக்காளி பொடியா நறுக்கிப் போட்டு பேல் பூரி மாதிரியும் சாப்பிடலாம். இது பேல் பூரி இல்லைதான். சாட்னு சொல்லுவாங்க. சாட்பூரினும் சொல்லிக்கலாம். அதனால் சனா மசாலா பண்ணினால் எப்படியும் உள்ளே இறங்கிடும்.

இன்னிக்கு வீட்டிலே பீர்க்கங்காய் சட்டி மசியல் செய்தேன். அதை உடனே உங்க எல்லாரோடயும் பகிர்ந்துக்கலாம்னு ஒரு எண்ணம் தோணிச்சு. அதான் பட்டூராவுக்கு மாவு பிசையலை. மைதாமாவும் வாங்கணும். பீர்க்கங்காய் பிஞ்சாக அரைகிலோ வாங்கிக்குங்க. கட்டாயமாய் அரைகிலோ வேணும், தோல் சீவி நறுக்கி வதக்கிட்டா கொஞ்சமாயிடும், அதையும் மிக்ஸியிலேயோ, அல்லது, அம்மியிலேயோ(பாதி நாள் ஆற்காட்டார் கொடுக்கும் தொந்திரவிலே, இப்போ அம்மி நல்லாப் பழகிடுச்சு, அதிலேயே அரைனு எங்க வீட்டு ஹிட்லர் சொல்றார். அதெல்லாம் முடியாதுனு கரண்ட் இருக்கும்போதே அரைச்சு வச்சுக்கறேனாக்கும்.) உங்க தலைவிதி நல்லா இருந்தா மிக்ஸி, இல்லாட்டி அம்மிதான் கதி. அரைச்சு வச்சுக்கணும்.

அடுத்து வேணுங்கற பொருட்கள்:
புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு ஊறவச்சுக் கரைச்சுக் கொள்ளவேண்டும். இரண்டு கப் புளி ஜலம் இருக்கலாம். அதுக்கு வேண்டிய மிளகாய் வத்தல் 4, தனியா/கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு, உ.பருப்பு முறையே ஒரு ஸ்பூன், கடுகு, வெந்தயம், மிளகு அரை ஸ்பூன். பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி. கட்டி வேறே மிக்ஸியிலே அரைபடாது. தனியா நிக்கும். அதனாலே கட்டியை ஊற வச்சுடுங்க. அந்த ஜலத்தை விட்டுக்கலாம். தாளிக்கும்போது பெருங்காயப் பவுடர் ஒரு சிட்டிகை போட்டுத் தாளிக்கலாம், மணம் ஊரைத் தூக்கும்.

இப்போ மேலே சொன்ன பொருட்களை எண்ணெயில் வறுத்து கொஞ்சம் கரகரப்பாய் அரைச்சுக்குங்க. என்னது? தேங்காயா? இதுக்கு அதெல்லாம் போட்டால் நல்லாவே இருக்காதுங்க. இந்த மசாலாப் பொருட்களை அரைச்சதும் வதக்கிய பீர்க்கங்காயை அரைத்துக் கொண்டால் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிட்டு இருக்கும் மசாலாப் பொருட்கள் பீர்க்கங்காயோடு சேர்ந்து வந்துடும். கரைச்சு வைச்ச புளித் தண்ணீரில் அரைச்ச பீர்க்கங்காயைப் போட்டுக் கலக்கிக்குங்க. நாம ஊரையே கலக்குவோமே, இது என்ன அதிசயமா என்ன? அடுப்பிலே கல்சட்டி, ஹிஹிஹி, கல்சட்டியிலே பண்ணறதாலே சட்டி மசியல்னு அர்த்தம் இல்லை. கடாயோ, அல்லது உருளியோ எதுவானாலும் பரவாயில்லை. என்ன ஒரு கஷ்டம்னா கல்சட்டியிலே தாளிதம் பண்ணிட்டுப் புளிக்கரைசலை ஊத்திட்டு, வதக்கிய பீர்க்கங்காயைப் போட்டு மத்தால் மசிச்சால் ஒரு சமயம் சட்டி உடைஞ்சு எல்லாம் போயிடும். அதனால் தான் முதலிலேயே அரைச்சு வச்சுக்கச் சொன்னேன்.

எங்க மாமியார் அடுப்பிலே போட்டுட்டுத் தான் மசிப்பாங்க. நல்ல பழக்கம் அவங்களுக்கு. எல்லாரையும் மசிய வைக்கிறவங்களாச்சே. நாம சட்டியைப் போட்டுட்டு இத்தனை நேரம் வம்பளக்கிறோமே, காய்ஞ்சுட்டு இருக்குமே. அதன் தலையிலே எண்ணெய் விடுங்க. இதுக்கு நல்லெண்ணெய்த் தாளிதம் தான் நல்லா இருக்கும். எண்ணெய் ஊத்திட்டுக் கடுகு, உ.பருப்பு, மி.வத்தல், வெந்தயம், ப.மிளகாய், கருகப்பிலை எல்லாம் போட்டுட்டுக் கூடவே பெருங்காயப் பொடியும் போட்டுட்டுக் கரைச்சு வச்சை பீர்க்கங்காய்+ புளி ஜலம் கலவையை அதன் தலையில் ஊத்தணும். மறந்து போய் பக்கத்திலே யாராவது நின்னா அவங்க தலையிலே ஊத்திட்டா நான் பொறுப்பில்லை. மஞ்சள் பொடி கொஞ்சமா சேர்த்து, தேவையான உப்பும் போட்டுக்குங்க. நல்லாக் கொதிச்சதும், கரகரனு அரைச்சு வைச்ச பொடியைப் போடவும். தேவையான அளவு பொடியைப் போட்டுட்டு அதிகம் கொதிக்கவேண்டாம். ஒரு கொதி வந்ததும் இறக்கிட்டு பச்சைக் கொத்துமல்லி கிடைச்சால் போடலாம். கொத்துமல்லி கிடைக்காட்டியும் அப்படியே சாதத்துடன் சாப்பிடலாம். அன்னிக்கே அரைச்சு அன்னிக்கே வார்க்கும் தோசைக்கு நல்லா இருக்கும்.

சாதத்தோட சாப்பிட்டால், தொட்டுக்க சைட் டிஷ் ஆக பூஷணிக்காய் மோர்க்கூட்டு, வாழைத்தண்டு மோர்க்கூட்டு, அல்லது மோர்க்கீரைனு செய்யலாம். இல்லாட்டி பொரிச்ச கூட்டு செய்யலாம். அதெல்லாம் எப்படினு கேட்கிறீங்களா? அதுக்கு அப்புறமா வரேன். ஏற்கெனவே பட்டூரா அரியர்ஸ் இருக்கு. அதை முடிச்சுட்டு வரேன். வர்ட்டா???? ஆதரவு தரவங்களுக்கு நன்னிங்கோ!!!!!