எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 30, 2017

உணவே மருந்து! புதினா!

புதினாத் துவையல்: ஒரு கட்டுப் புதினா! நிறையப் பேர்ன்னா ஒரு கட்டு பத்தாது. ஆய்ந்து வதக்கினால் கொஞ்சமா ஆகி விடும். ஆகவே அதற்குத் தகுந்தாற்போல் எடுத்துக்கவும். இங்கே இரண்டே பேர்களுக்கான அளவைச் சொல்லி இருக்கேன்.

புதினா ஒரு கட்டு

மிளகாய் வற்றல் நான்கு(காரம் அதிகம்னால் இரண்டே போதும்.)

புளி ஒரு சின்ன அரிநெல்லிக்காய் அளவுக்கு எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு

கடுகு, உ.பருப்பு, ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

வதக்க நல்லெண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெயில் எல்லாம் வதக்கினால் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு வறுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். பின்னர் மி.வற்றலைப் போட்டுக் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். புதினாக்கட்டை நன்கு பிரித்து ஆய்ந்து கழுவி நீரை வடிய விட்டு எண்ணெயில் போட்டு நன்கு சுருள வதக்கவும். எல்லாம் ஆறினதும் மிக்சி ஜாரில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், புளி போட்டு முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் வதக்கிய புதினாவைப் போட்டு அரைக்கவும். எடுக்கும்போது வறுத்த கடுகு, உபருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுத்துவிடவும். கரகரவென இருக்கட்டும். சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்

புதினா சட்னி

புதினா ஒரு கட்டு

பச்சை மிளகாய் நான்கு அல்லது ஆறு காரத்திற்கு ஏற்றாற்போல்

இஞ்சி ஒரு துண்டு

உப்பு

எல்லாவற்றையும் நன்கு கழுவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். இதற்குப் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். விருப்பம் எனில் சேர்க்கலாம். இதைக் கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டு சாட் செய்யும் நாட்களில், பானி பூரி சாப்பிடும் நாட்களில், பேல்பூரி கலந்தால் அப்போது இரண்டு ஸ்பூன் சட்னிக்குக் கால் கப் நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதன் மேல் ஊற்றிக் கொண்டு இனிப்புச் சட்னியும் சேர்த்துச் சாப்பிடலாம். தயிர் வடை வட இந்திய முறையில் பண்ணுவதற்கும் இதை விட்டுக் கொள்ளலாம்.

புதினாவோடு காய்களையும் சேர்த்து வதக்கிக் கொண்டு சப்பாத்திக்கு சைட் டிஷ் பண்ணலாம்.

புதினா ரைஸுக்குப் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினாவை உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்/ சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை தாளித்துக் கொண்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதற்குத் தக்காளி வேண்டாம். வெங்காயம் பாதி வதங்குகையில் அரைத்த விழுதைப்போட்டுக் கிளறவும். நன்கு எண்ணெய் பிரிந்ததும் சாதத்தை அதில் சேர்த்து மெதுவாகக் கிளறிக் கொண்டே நன்கு கலக்கவும்.  உப்புப் பார்த்துக் கொண்டு தேவை எனில் கொஞ்சமாய் உப்புச் சேர்க்கவும். இதற்குப் பச்சைப் பட்டாணியாகக் கிடைத்தால் வாங்கித் தோலுரித்துச் சுத்தம் செய்து வெங்காயம் வதக்குகையில் கூடப் போட்டு வதக்கிச் சேர்க்கலாம். காய்ந்த பச்சைப்பட்டாணியைச் சேர்ப்பது எனில் முதல் நாளே ஊற வைத்துவிட்டு மறுநாள் சாதம் வடிக்கையில் அதோடு சேர்த்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு பிடிக்காதவர்கள் புதினா அரைக்கையில் பூண்டு சேர்க்காமல் இஞ்சி மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 

Tuesday, December 26, 2017

உணவே மருந்து! புதினா!

புதினாவின் வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. புதினாவே சாப்பிடாமல் ஒதுக்குவார்கள். நான் கல்யாணமாகி வந்ததும் மாமியார் வீட்டில் புதினாத் துகையல், சட்னி பற்றிச் சொன்னப்போ அவங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு! அதென்ன கீரை? அதைச் சாப்பிடுவாங்களானு கேட்டாங்க! நம்ம ரங்க்ஸும் எட்டு வருடத்துக்குப் புனேயில் குடித்தனம் பண்ணினாலும் புதினா ஜாஸ்தி சாப்பிட மாட்டார்! அப்புறமாச் சாப்பிட ஆரம்பிச்சதும் ஒத்துக்காமல் நெஞ்செரிச்சல் வர ஆரம்பிச்சது! ஆகவே இப்போவும் புதினா வாங்கினால் நான் மட்டும் தான்!

ஊட்டியில் தோட்டத்தில் புதினா படர்ந்து இருக்கும். அவ்வப்போது பறித்துக் கொள்வேன். வடமாநிலத்தவர் செய்யும் பஜியாவுக்குப் புதினா சேர்த்தால் மணம்! சப்பாத்திக்குச் செய்யும் உ.கி. குடைமிளகாய்க் கறியில் புதினா சேர்க்கலாம்.பச்சைப்பயறு சாதத்துக்கு வெங்காயம், தக்காளி, மசாலாப் பொருட்களோடு வதக்குகையில் புதினாவையும், பச்சைக்கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கினால் சாதம் மணமாக இருக்கும்.

வயிறு உப்புசமாக இருந்தால் புதினாவைக் கஷாயம் போட்டுக் குடிக்கலாம். நான் தனியா(கொத்துமல்லி விதை), இஞ்சி, சோம்பு ஆகியவற்றோடு புதினாவையும் சேர்த்து அரைத்துச் சாறெடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தேவைப்படும்போது அளவான சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டு கொஞ்சம் நீர் சேர்த்துக் குடிப்பேன். இது ஜீரணத்துக்கு நல்லது! பச்சைப் புதினவைப் பறித்து வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம், பல் கூச்சம் மறையும். வட மாநிலங்களில் செய்யும் சாட் வகையறாக்களுக்குப் புதினாச் சட்னி மிகச் சிறந்த ஜோடி!

புதினாச்சாறினால் உடல் பருமன் கூடக் குறையும் என்கின்றனர். ஆஸ்த்மா நோயாளிகளுக்குச் சளி, இருமல், மூக்கடைப்புப் போன்றவற்றிற்குப் புதினா மிகச் சிறந்த நிவாரணி ஆகும்.  நெஞ்செரிச்சல் தீரும் என்று சொன்னாலும் ஏற்கெனவே அசிடிடி உள்ளவர்களுக்குப் புதினா சாப்பிட்டால் ஒத்துக்கொள்வதில்லை என்றே தெரிகிறது.  வயிற்றுப் போக்கு, காலரா போன்றவற்றிற்கும் புதினா நல்ல மருந்து. தோல் பொலிவுறும்.
Image result for புதினா

தொடரும்!

Friday, October 27, 2017

உணவே மருந்து-- கொத்துமல்லி--3

கொத்துமல்லி பல வியாதிகளுக்கும் நன் மருந்து. கொத்துமல்லி விதையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு சாதத்தோடு கலந்து சாப்பிடலாம். அதற்குத் தேவையான பொருட்கள்

கொத்துமல்லி விதை ஒன்று அல்லது இரண்டு கிண்ணம்

மி.வத்தல் காரமானதாக இருந்தால் 4,5 போதும். இல்லை எனில் பத்து வேண்டும்.

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் விரும்பினால் அல்லது பொடிக்கையில் பவுடரைச் சேர்த்துக்கலாம்.

மிளகு இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மேலே சொன்ன அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு பின்பு மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். சூடான சாதத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு சாப்பிட்டால் வாய்க்கு ருசியாக இருக்கும். பித்தம் இருந்தால் குறையும்.

இந்தக் கொத்துமல்லி விதையோடு, ஜீரகம், கருஞ்சீரகம், சதகுப்பை, அதிமதுரம், கிராம்பு, லவங்கப்பட்டை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம்  எடுத்துக் கொண்டு, கால் கிலோ கொத்துமல்லி விதையையும் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு வெள்ளைக் கற்கண்டோடு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொண்டு வெந்நீரோடு கலந்து சாப்பிட்டு வர நெஞ்செரிச்சல், விக்கல் ஆகியன தீரும்.

கொத்துமல்லி சாதம்:

கொத்துமல்லி இப்போ விக்கிற விலையிலே கொத்துமல்லி சாதமானு முறைக்காதீங்க! மலிவாக் கிடைக்கும்போது செய்துக்கலாம்.

இதுக்குச் சாதத்தை முதலிலேயே உதிர் உதிராக வடிச்சுக்கணும். தேவையான பச்சைப்பட்டாணி புதிதாகக் கிடைச்சால் வாங்கிக்கலாம். இல்லைனா கடையில் கிடைக்கும் காய்ந்த பச்சைப்பட்டாணியை ஒரு கைப்பிடி முதல்நாளே ஊற வைச்சு சாதத்தோடு சேர்த்து வேக வைச்சுக்கலாம்.

கொத்துமல்லி ஒரு கட்டு

பச்சை மிளகாய் 4,5 காரத்திற்கு ஏற்ப

இஞ்சி ஒரு துண்டு

ஜீரகம் தேவைப்பட்டால்

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு

உப்பு தேவையான அளவு

பெருங்காயம் சிறிதளவு

மேலே சொன்ன சாமான்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு அல்லது வேர்க்கடலை மட்டும். பச்சைப்பட்டாணி போடுவதால் ஏதேனும் ஓர் பருப்பு வகை போதும்

வெங்காயம் தேவை எனில் ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மசாலா சாமான்கள் தேவை எனில் பிரிஞ்சி இலை, ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, ஒரு சின்ன துண்டு லவங்கப்பட்டை

மேலே கொடுத்திருக்கும் தாளிக்கும் சாமான்களை எல்லாம் எண்ணெய் காய்ந்த பின் ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளித்து வெங்காயம் தேவை எனில் அதைப் போட்டு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் கொத்துமல்லி விழுதைத் தேவையான அளவுக்குப் போட்டு நன்கு வதக்கவும். சமைத்து ஆற வைத்திருக்கும் உதிர் உதிரான சாதத்தைப் போட்டு நன்கு கலக்கவும்.  சாதம் நன்கு கலந்ததும் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, காரட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டுத் தயிர்ப் பச்சடி தயாரிக்கலாம். 

Tuesday, September 12, 2017

உணவே மருந்து-- கொத்துமல்லி 2

கொத்துமல்லிச் சட்னி! பொதுவா வறுத்து அரைப்பதைத் துவையல் என்றும் அப்படியே அரைப்பதைச் சட்னி என்றும் சொல்வது வழக்கம். துவையல் கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும். சட்னி தளர இருக்கலாம். இப்போ நாம் பார்க்கப்போவது சட்னி பற்றி! எங்க வீட்டிலே குழந்தைங்க இருந்தவரைக்கும் ரவாதோசையே செய்ய முடியாது! அவங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காது. அவங்களை தோசை சாப்பிட வைக்க நான் எண்பதுகளிலேயே மூன்று வகை சட்னி செய்து தருவேன். வெள்ளைச் சட்னி தேங்காயில், பச்சைச் சட்னி கொத்துமல்லியில், சிவப்புச் சட்னி தக்காளி அல்லது வெங்காயம் அல்லது இரண்டும் சேர்த்து!

பச்சைக் கொத்துமல்லிச் சட்னி: கொத்துமல்லி ஒரு கட்டு, புளி ஒரு சின்னச் சுண்டைக்காய் அளவுக்கு நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்றாற்போல். நிதானமான காரம் எனில் ஆறு பச்சை மிளகாய் தேவை! நல்ல காரமான பச்சை மிளகாய் எனில் இரண்டே போதும். உப்பு, பெருங்காயம். தாளிக்க நல்லெண்ணெய், கடுகு.

கொத்துமல்லிக் கட்டைப் பிரித்து ஆய்ந்து வேரை மட்டும் நீக்கவும். பலரும் தண்டைத் தூக்கி எறிகின்றனர். ஆனால் நான் தண்டையும் சேர்த்தே பயன்படுத்துவேன். பொடியாக நறுக்கி, அலசி, வடிகட்டிக் கொள்ளவும். மிக்சி ஜாரில் போட்டு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், ஊற வைத்த புளி சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு தாளிக்கவும். தோசை வார்க்கப் போகிறீர்கள் எனில் அந்த தோசைக்கல்லிலேயே நல்லெண்ணெயை ஊற்றிக் கடுகு தாளித்துச் சட்னியில் சேர்க்கலாம். தோசை வார்க்கும்போது விள்ளாமல் விரியாமல் வரும். :)

கொத்துமல்லி சிவப்புச் சட்னி: இப்போ நாம் பார்க்கப் போவது சிவப்புச் சட்னி மட்டும் தான்! இதைத் தான் மைசூர் மசாலா தோசைகளில் உள்ளே தடவித் தருகிறார்கள்.

கொத்துமல்லி ஒரு கட்டு, வற்றல் மிளகாய் ஆறு, புளி சுண்டைக்காய் அளவுக்கு, உப்பு, பெருங்காயம், நல்லெண்ணெய், கடுகு தாளிக்க.

முன் சொன்னது போல் கொத்துமல்லியை ஆய்ந்து நறுக்கி அலசி வடிகட்டி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து நல்லெண்ணெயில் கடுகு தாளிக்கவும். மசால் தோசை செய்யும் போது இந்தச் சட்னியைக் கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக் கொண்டு ஒரு ஸ்பூனால் எடுத்து தோசையின் உள்பக்கம், மசாலா வைக்கும் முன்னர் தடவவும். பின்னர் மசாலாவை வைத்து தோசையை சமோசா மாதிரி மூடி வேக வைத்துப் பரிமாறவும்.

கொத்துமல்லி மிளகாய்ப் பொடி என்னும் கொத்துமல்லிச் சட்னி. இது பல நாட்கள் வரை வைத்திருக்கலாம். கெட்டுப் போகாது. கொத்துமல்லிக் கட்டு பெரிதாக இரண்டு கட்டு தேவை. நன்கு ஆய்ந்து அதை நறுக்கி நீரில் போட்டு அலசிக் கொண்டு ஒரு வடிகட்டியில் போட்டு நன்கு காய வைக்கவும். நீரெல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு கட்டுக் கொத்துமல்லிக்கு சுமார் 15 மிளகாய் வற்றல், பெருங்காயம் ஒரு துண்டு இவற்றை வறுத்துக் கொண்டு அந்த எண்ணெயிலேயே புளி ஒரு நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துப் பிரட்டி வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய் போதவில்லை எனில் மேலும் ஊற்றிக் கொண்டு கடுகு இரண்டு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதைத் தனியாக வைக்கவும்.

கல்லுரல் அல்லது இரும்பு உரல் இருந்தால் நன்கு அலம்பித் துடைத்துக் கொண்டு அதில் முதலில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், புளி ஆகியவற்றைப் போட்டுக் கொஞ்சம் இடித்துக் கொள்ளவும். மிக்சி தான் பழக்கம் எனில் மிக்சியிலும் போட்டுப் பொடிக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் காய வைத்திருக்கும் கொத்துமல்லியைச் சேர்த்து இடிக்கவும். மிக்சி எனில் கொஞ்சம் கொஞ்சமாக கொத்துமல்லியைச் சேர்த்து மிக்சியைச் சுற்றவும். கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். உரலில் எல்லாமும் சேர்ந்து நன்கு கலக்கும்படி இடிக்கவும். கடைசியில் எடுக்கும் முன்னர் கடுகு, உளுத்தம்பருப்பு வறுத்து வைத்திருப்பதைப் போட்டு ஒரு இடி இடித்து அல்லது மிக்சியில் ஒரே சுற்று சுற்றி விட்டு எடுக்கவும். முன்னெல்லாம் கையால் இடித்து வைப்பது ஒரு மாதம் கூடக் கெடாது. ஆனால் இப்போதெல்லாம் விரைவில் கெட்டுப்போகிறது. ஆகவே பதினைந்து நாட்களுக்கு வரும்படி செய்து கொண்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.


இந்தக் கொத்துமல்லிச் சட்னி தான் சாட் வகையறாக்களுக்கும் சேர்க்கப் படுகிறது. சிலர் கொத்துமல்லி மட்டும் போடுவார்கள். சிலர் புதினாவும் சேர்த்துக் கொள்வார்கள். கொத்துமல்லி, புதினா இரண்டும் சம அளவு எடுத்துக் கொண்டு ஆறு அல்லது ஏழு பச்சை மிளகாய், உப்பு கொஞ்சம் போல் இஞ்சி ஒரு துண்டு, கறுப்பு உப்பு அரை டீஸ்பூன் ( கறுப்பு உப்புச் சேர்ப்பதால் உப்பைப் பார்த்துச் சேர்க்கணும்.) சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். சாட் பண்ணும் தினத்தன்று கொஞ்சம் போல் சட்னியை எடுத்துக் கொண்டு நீர் விட்டுக் கரைத்து ஊற்றிக் கொள்ளலாம். காரம் தேவை எனில் பச்சை மிளகாயை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் புளி சேர்க்கக் கூடாது. ஏனெனில் சாட் வகையறாக்களில் புளிச் சட்னி தனியாகச் சேர்ப்பது உண்டு. 

Thursday, September 7, 2017

உணவே மருந்து கொத்துமல்லி!

கொத்துமல்லியில் அதன் இலை, வேர், தண்டு, விதைகள் அனைத்துமே பயன்பாட்டில் இருக்கின்றன. கொத்துமல்லி சாதாரணமாக வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம். வெகு விரைவில் வளரும். நம் நாட்டுத் தட்ப வெப்பம், அதிலும் தமிழ்நாட்டின் தட்ப வெப்பம் அதற்கு ஏற்றதாகவே உள்ளது. கொத்துமல்லி விதையை ஓர் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் அதை நன்றாகத் தேய்த்து ஒரு தொட்டியில் மண், சாம்பல், உரம் போன்ற கலவையோடு சேர்த்து விதைத்தால் பதினைந்து நாட்களில் சின்னச் சின்னச் செடிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

Image result for கொத்துமல்லி

படத்துக்கு நன்றி தினகரன் கூகிளார் வாயிலாக!

வாழைத் தோட்டங்களில் ஊடு பயிராகவும் வளர்ப்பார்கள். இது அதிக அளவு வளர்ப்பதற்குச் சரியாக இருக்கும். சுமார் 50 சென்டிமீட்டர் வரை உயரமாக வளரும் இந்தச் செடியை அப்படியே பிடுங்கி சமையலுக்குப் பயன்படுத்தலாம். விதைகளுக்காகவும் செடியை விட்டு வைப்பார்கள். அடிக்கடி களை எடுக்க வேண்டும். கொத்துமல்லி இலையைச் சமையலில் சேர்த்தால் வாசனை மட்டுமின்றி பசியைத் தூண்டவும் செய்யும். உடல் சூடு, தலைச்சூடு போன்றவற்றைக் குறைப்பதோடு தூக்கம் வரவும் உதவும்.  உடலுக்கு உறுதியை ஏற்படுத்திப் பித்தத்தைக் குறைக்கும். இலைகளைத் துவையல், சட்னி செய்து சாப்பிடலாம்.

விதைகளும் வாசனைக்கு மட்டுமில்லாமல் சாம்பார் தயாரிக்கையில் முக்கிய மசாலாப் பொருளாகப் பயனாகிறது. வட நாட்டு சமையலிலும் கொத்துமல்லி விதை "தனியா" என்னும் பெயரிலே முக்கிய இடம் வகிக்கிறது. வயிற்றுப் பொருமல், வயிற்றுக் கழிச்சல்,  அஜீரணம் போன்றவற்றிற்குக் கொத்துமல்லி விதைகளை வறுத்துக் கொண்டு பொடி செய்து சூடான சாதத்தில் நெய்யை ஊற்றிச் சாப்பிட்டால் சரியாகும். இந்தியா முழுவதும் பயிராகும் கொத்துமல்லியின் வாசனை ஊரைத் தூக்கும்.

ரசம், சாம்பார் மட்டும் சில காய்கள், கூட்டு வகைகளில் கொத்துமல்லி சேர்க்கப்படும்போது அதன் மணம் உணவின் மேல் விருப்பத்தைத் தூண்டும். இதில் கால்சியம், இரும்புச் சத்து. மங்கனீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங் போன்ற சத்துக்கள் அடங்கியது. இதன் தண்டைப் பெரும்பாலும் களைந்து எறிந்து விடுகின்றனர். மாறாக அதையும் சேர்த்துத் துவையலாக அரைத்து உண்ணலாம். அல்லது காய வைத்து ரசப்பொடி அரைக்கையில் சேர்க்கலாம்.  கொத்துமல்லி விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம் என்றும் அறிகிறோம். இந்த எண்ணெய் மருத்துவத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.  சர்க்கரை வியாதிக்கும் நல்ல மருந்தாகச் சொல்கின்றனர்.  பித்தம், வாந்தி, விக்கல் போன்றவற்றிற்கும் கொத்துமல்லி நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.

அதிகமாகக் குடி போதையில் இருப்பவர்களுக்கும், சாராயம் குடிப்பவர்களுக்கும் போதை தெளியக் கொத்துமல்லியை அரைத்து அதைக் காடி நீர் எனப்படும் புளித்த நீரில் கலந்து கொடுத்தால் சரியாகும். காடி நீர் என்பது பெரும்பாலும் அரிசி களைந்த கழுநீரைப்புளிக்க வைத்தது என்பார்கள்.  அல்லது புளித்த கஞ்சி, வினிகர் போன்றவற்றையும் சொல்லலாம். 

Monday, August 21, 2017

உணவே மருந்து! மாங்காய் 8

மாங்காய் சாதம்:-

இது எங்க வீட்டில் அவ்வளவா போணி ஆவதில்லை. நானும் யார் வீட்டுக்காவது போகும்போது அவங்க செய்தால் தான் சாப்பிட்டிருக்கேன். பெரும்பாலும் இதற்கு வெங்காயம், பூண்டு சேர்ப்பதில்லை.  எனக்கு என்னமோ மாங்காய்த் தொக்கை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும் உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. எனினும் எளிமையான ஒரு குறிப்பு மட்டும் தரேன்.

நல்ல கல்லாமை (ஒட்டு மாங்காய்) ரகம் பெரிதாக ஒன்று. தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.  தனியே வைக்கவும்.

நல்ல அரிசியில் சாதம் சமைத்து உதிர் உதிராக வைத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் சாதம்.

தாளிக்க

நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு,

உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை போன்றவை. வேர்க்கடலை மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மற்றவை ஒரு டீஸ்பூன் போதும்.

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி விழுது இரண்டு டீஸ்பூன்

மி.வத்தல்

பெருங்காயம், கருகப்பிலை

மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லியை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, மி.வத்தல், பெருங்காயம் கருகப்பிலை என வரிசையாகத் தாளிக்கவும்.

பின்னர் துருவிய மாங்காயைப் போட்டு வதக்கிப் பச்சை மிளகாய் விழுது, மி.பொடி மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். உப்புச் சேர்க்கவும். இப்போது சமைத்த சாதத்தை அதில் போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும். இதற்குத் தக்காளிப் பச்சடி நல்ல துணையாக இருக்கும். தக்காளியை நன்கு வதக்கிக் கொண்டு தயிரில் கலந்து உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொண்டு மாங்காய் சாதத்தோடு பரிமாறவும்.

மாங்காய் மோர்க்குழம்பு:-

இதற்கு அரைப் பழங்களாக இருக்கும் காய்கள் நன்றாக இருக்கும். தோலைச் சீவிக் கொண்டு துண்டங்களாக்கி மாங்காயை வேக விடவும். மாங்காய்க்குத் தேவையான உப்புச் சேர்க்கவும்.

வற்றல் மிளகாய், பச்சைமிளகாய் தலா இரண்டு

ஜீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

புளிப்பு அதிகம் இல்லாத மோர் ஒரு கிண்ணம் (மாங்காயில் புளிப்பு இருப்பதால் மோரில் புளிப்புத் தேவையில்லை)

மஞ்சள் பொடி

உப்பு மோருக்குத் தேவையானது, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்கத் தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, வெந்தயம், ஒரு மி.வத்தல், கருகப்பிலை

புளிப்பில்லாத மோரில் மிளகாய்கள், ஜீரகம், தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவையானால் அரிசியை ஊறவைத்துச் சேர்த்து அரைக்கலாம். அல்லது அரிசி மாவு இரண்டு டீஸ்பூனை அரைக்கையில் சேர்க்கலாம். இந்தக் கலவையை மோரில் மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து கொண்டு வெந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களோடு சேர்க்கவும். கரண்டியால் நன்கு கிளறவும். குழம்பு ஒரே ஒரு கொதி வந்தால் போதும். மேலே நுரைத்து வரும்போது கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.

மாம்பழ சாம்பார்:- அதே போன்ற தித்திப்பும் புளிப்புமான மாங்காய்கள் தோல் சீவித் துண்டங்களாக்கிக் கொள்ளவும். உப்புச் சேர்த்து வேக விடவும்.

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்

உப்பு தேவையான அளவு

துவரம்பருப்பு குழைய வெந்தது அரைக்கிண்ணம்

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் தலா ஒரு டீஸ்பூன் ஒரு வற்றல் மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி

வெந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களில் புளி ஜலத்தைச் சேர்த்து அதற்கேற்றவாறு உப்புச் சேர்த்துக் கொண்டு, சாம்பார்ப் பொடி, பெருங்காயப் பொடி தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வந்ததும் கீழே இறக்கி எண்ணெயில் கடுகு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளித்துக் கொட்டிப் பச்சைக்கொத்துமல்லி பொடியாக நறுக்கித் தூவவும். 

Thursday, August 10, 2017

உணவே மருந்து! மாங்காய்! 7

மாம்பழத்தில் கஸ்டர்ட் சேர்த்தும் செய்யலாம்.  இதற்கு மாம்பழம் நல்ல தித்திப்பானதாக இருக்க வேண்டும்.  ஒரு நடுத்தர அளவுப் பழத்தில் முதலில் செய்து பர்த்து விட்டுப் பின்னர் தேவை எனில் நிறையச் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-
நல்ல சாறுள்ள கதுப்பு மாம்பழம்  பெரிதானால் ஒன்று நடுத்தர அளவெனில் 2

எடுத்துத் தோல் சீவிக் கொண்டு கதுப்பை நன்கு மசிக்கவும். அல்லது மிக்சி ஜாரில் போட்டு அடித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.

பால் ஒரு லிட்டர் சுண்டக் காய்ச்சியது அல்லது மில்க் மெயிட் இரண்டு டேபிள்ஸ்பூன் கரைத்துக் கொள்ளவும்.

இன்னொரு அரை லிட்டர் பால் காய்ச்சாமல் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

கஸ்டர்ட் பவுடர் வித விதமான ருசிகளில் கிடைக்கிறது. மாம்பழ வாசனையில் கிடைக்கிறதாகத் தெரியவில்லை. பொதுவாக நான் இதற்கு வனிலா கஸ்டர்டே எடுத்துப்பேன். வனிலா கஸ்டர்ட் இரண்டு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி தேவையானால்!

சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன்

வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது க்ரீம் ஒரு டேபிள் ஸ்பூன். நான் வெண்ணெய் தான் சேர்ப்பேன்.

மேலே அலங்கரிக்க பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். டுட்டி ஃப்ரூட்டி பிடிக்குமெனில் அதையும் போடலாம்.

அரை லிட்டர் காய்ச்சாத பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைப் போட்டு நன்கு கலக்கவும். சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். ஒரு அடி கனமான அகலமான பாத்திரத்தில் (நான் ஸ்டிக் இருந்தால் நல்லது) அதைக் கொட்டி ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயையும் சேர்த்துக் கிளறவும். கிளறக் கிளறக் கெட்டியாக ஆகும். நன்கு கெட்டியானதும் நிறுத்திவிட்டுச் சுண்டக் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து விடவும். எல்லாப் பாலையும் விட்டுக் கிளறியதும் தேவையானால் ஏலப்பொடி சேர்த்து அல்லது மாம்பழ எஸ்ஸென்ஸ் சேர்த்து ஆற விடவும்.

ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அடிக்கவும். மிகவும் மிருதுவாக வந்திருக்கும். இப்போது ஏற்கெனவே அடித்து வைத்திருக்கும் மாம்பழக் கதுப்புக் கலவையைப் போட்டுத் திரும்ப ஒரு தரம் அடிக்கவும். கொஞ்சம் மாம்பழத்தைத் துண்டுகள் போட்டு தனியாக வைத்திருக்கவும்.

Image result for கஸ்டர்ட்

படம் : இணையத்தில் கூகிளார் உதவியுடன்!

கலவையை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் பரிமாறுகையில் கிண்ணங்களில் கஸ்டர்ட் கலவையை  விட்டதும் மேலே ஓரிரண்டு மாம்பழத் துண்டங்களையும், பாதாம், முந்திரி, பிஸ்தா நறுக்கி வைத்திருப்பதையும் போட்டு அலங்கரித்துக் கொடுக்கவும்.  அல்லது டுட்டி,ஃப்ரூட்டி மட்டும் போட்டுக் கொடுக்கலாம்.

அடுத்து மாம்பழத்தில் ஶ்ரீகண்ட்

இது மஹாராஷ்டிரம், குஜராத் பக்கம் ரொம்பவே பிரபலம். வெறும் தயிரிலேயே ஶ்ரீகண்ட் செய்வார்கள். மாம்பழப் பருவங்களில் மாம்பழ ஶ்ரீகண்ட் செய்வார்கள். இதற்குத் தேவை நல்ல கொழுப்புச் சத்துள்ள பால் சுமார் ஒரு லிட்டர்

கொழுப்புச் சத்துள்ள பால் ஒரு லிட்டர். நன்கு காய்ச்சி  ஆற வைத்து உரை ஊற்றவும். மேலே ஏடு படிய வேண்டும். பால் அவ்வளவு நல்ல பாலாக இருந்தால் நல்லது. எதற்கும் க்ரீம் இரண்டு டேபிள் ஸ்பூன் வைத்துக் கொள்ளவும்.

நல்லப் பழுத்த மாம்பழங்கள் 2 தோல் சீவி நறுக்கிக் கொண்டு துண்டங்களில் கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு மிச்சத்தை நன்கு கூழாக்கிக் கொள்ளவும்.

தயிரை எடுத்து ஒரு மஸ்லின் துணியில் கட்டி ஒரு மணி நேரம் வைக்கவும். தயிரில் நீர் இருந்தால் அனைத்தும் துணி வழியே வெளியேறிவிடும். பின்னர் துணியைப் பிரித்துத் தயிரைச் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். மத்தினால் கூடக் கடையலாம். வாசனைக்குக் குங்குமப் பூக் கிடைத்தால் சேர்க்கலாம். அது கிடைப்பது அரிது என்பதால் ஏலக்காய் சேர்க்கலாம்.

நன்கு கடைந்த தயிருடன் தேவையானால் க்ரீம் சேர்க்கவும். மாம்பழக் கலவையையும் சேர்க்கவும். நன்கு கரண்டியாலேயே கலக்கவும். பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பரிமாறும்போது நறுக்கியதில் எடுத்து வைத்த மாம்பழத் துண்டங்களோடு தேவையானால் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவையும் போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம்.


மாம்பழ குல்ஃபி! :

நல்ல பாலாக ஒரு லிட்டர் பால்! பால் கொழுப்புச் சத்து இல்லை எனில் இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர் தேவை. ஒரு மாம்பழம் இருந்தால் போதும். சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் அல்லது எஸ்ஸென்ஸ் அரை டீஸ்பூன் அளவுக்கு.  கொழுப்புச் சத்துள்ள பால் எனில் கஸ்டர்ட் சேர்க்க வேண்டாம்.

பாலைக் காய்ச்சி அரைலிட்டராக்கிக் கொள்ளவும்.  தேவையானால் கஸ்டர்ட் பவுடர் தனியாக ஒரு கிண்ணம் பாலில் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கெட்டியானதும், அரை லிட்டராக ஆன பாலில் கலக்கவும். மாம்பழத்தையும் அடித்துச் சேர்க்கவும். சர்க்கரை தேவையானால் சேர்க்கவும். ஆற வைத்து ஏலப்பொடி அல்லது மாம்பழ எஸ்ஸென்ஸ் சேர்க்கவும். இதற்கு மேலே அலங்கரிக்க எதுவும் தேவை இல்லை.  சற்று ஆற விட்ட பின்னர் இதை அப்படியே குல்ஃபி மோடில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் உறைய வைக்கவும். தேவையான போது எடுத்து வைத்துத் தின்னலாம்.

Kulfi mode.jpg      Kulfi.jpg


மாங்காய் இன்னும் வரும்! :)

Saturday, August 5, 2017

உணவே மருந்து! மாங்காய் 6!

மாங்காய்த் தொக்குப் போலவே தான் மாங்காய் ஜாமும்! ஆனால் இதில் கொஞ்சம் சிட்ரிக் ஆசிட் சிலர் சேர்க்கின்றனர். உணவுப் பொருளில் சேர்க்கும் நிறமும் சேர்க்கின்றனர். எஸ்ஸென்ஸ் சேர்ப்பவர்களும் உண்டு. என்றாலும் மிகவும் எளிமையாக மாங்காய் ஜாம் செய்வதெனில் நல்ல கிளி மூக்கு மாங்காய் (கல்லாமை அல்லது ஒட்டு என்னும் ரகம்) வாங்கிக் கொள்ள வேண்டும். பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல் அரைக்காயாக இருந்தால் நல்லது.

இரண்டு மாங்காய் தேவை. அல்லது செய்யும் அளவுக்கேற்ப அவரவர் விருப்பம் போல் எடுத்துக்கலாம். நான் இரண்டு மாங்காய்க்கான அளவே சொல்லப் போறேன்.

ஒரு கிண்ணம் சர்க்கரை

நெய் ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு ஒரு டீஸ்பூன்

மாங்காயைத் துருவிக் கொண்டு ஒரு கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரம் ஒன்றில் நெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு துருவிய மாங்காயைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும். உப்பைச் சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பின்னர் சர்க்கரையைச் சேர்த்து மீண்டும் வதக்கவும். சர்க்கரை கரைந்து நீர் விட்டுக் கொள்ளும். அது சேர்ந்து வரும் வரை வதக்க வேண்டும். விருப்பம் இருந்தால் ஏலத்தூள் சேர்க்கலாம். இது ஒரு எளிமையான முறை. ப்ரெட், சப்பாத்தி, பூரி போன்றவற்றோடு சேர்த்து உண்ணலாம்.

அடுத்து இன்னொரு முறை

அதே போல் மாங்காய் வாங்கித் துருவிக் கொள்ளவும்.

உப்பு ஒரு டீஸ்பூன், கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அல்லது லவங்கம், ஏலக்காய், லவங்கப்பட்டை மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்த பொடி ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு கிண்ணம், மாங்காய்/மாம்பழ நிறம் கொடுக்க உணவுப் பொருளில் சேர்க்கும் வண்ணம் திரவமாக இருந்தால் ஒரு சொட்டு, பொடியாக இருந்தால் ஒரு சிட்டிகை. நெய் ஒரு டேபிள் ஸ்பூன்

மாங்காயை முன் சொன்னது போல் நெய்யில் வதக்கிக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்க வேண்டும். பின்னர் சர்க்கரையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் பொடித்த மசாலாப்பொடியைச் சேர்க்கவும். மாங்காய்/மாம்பழ வண்ணம் கொடுக்கும் உணவுச் சேர்க்கையையும் சேர்க்கவும். ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

மாம்பழ ஜூஸ் ஒரு மாம்பழத்திலிருந்து மூன்று பேருக்கு ஜூஸ் தயாரிக்கலாம்.

மாம்பழம் நல்ல சாறுள்ள பழுத்த பழம் ஒன்று

சர்க்கரை (தேவையானால்) நான் பொதுவாகப் பழச்சாறுகளில் சர்க்கரை சேர்ப்பதில்லை.

ஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் ஏலப்பொடியானால் ஒரு சிட்டிகை, எஸ்ஸென்ஸ் எனில் கால் டீஸ்பூன்

பால் அரை லிட்டர்

முதலில் பாலைக் கொழுப்புச் சத்துள்ள பாலாக வாங்கி நன்றாகக் காய்ச்சி ஆற விடவும். பாலை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். அதே ஜாரில் மாம்பழத்தைத் தோலைச் சீவி நறுக்கித் துண்டங்களாகப் போட்டு நன்கு அடிக்கவும். மாம்பழத்துண்டங்கள் தெரியாமல் விழுதாக வரும்வரை அடிக்கவும். பின்னர் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். சர்க்கரை விருப்பமானால் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். ஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் சேர்த்து ஒரே தரம் மிக்சியில் சுற்றிவிட்டுப் பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும். ஐஸ் சேர்த்தால் மாம்பழச் சாறு நீர்த்து விடும். ஆகையால் எப்போது பரிமாறணுமோ அதற்கு 2,3 மணி நேரம் முன்னரே தயார் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த அளவுக்கு மூன்று பேர் தாராளமாக ஒரு கிளாஸ் மாம்பழச் சாறு சாப்பிடலாம்.

மாங்கோ லஸ்ஸி

இதற்கும் நன்கு பழுத்த மாம்பழங்கள் வேண்டும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு மாம்பழம் எனில் அரை லிட்டர் தயிர் தேவை. சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு  அரை டீஸ்பூன். மாம்பழ எஸ்ஸென்ஸ்  கால் டீஸ்பூன்

மாம்பழங்களைத் தோல் நீக்கிக் கொண்டு துண்டங்களாக்கி மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடிக்கவும். தனியாக எடுத்து வைக்கவும். புளிக்காத கெட்டித் தயிரை அதன் மேல் இருக்கும் ஆடையை நீக்காமல் அப்படியே மிக்சி ஜாரில் போட்டு சர்க்கரை, உப்புச் சேர்த்து அடிக்கவும். இதோடு மாம்பழக் கலவையைப் போட்டுக் கலந்து கொண்டு மாம்பழ எஸ்ஸென்ஸையும் விட்டு ஒரு தரம் மிக்சிஜாரில் சுற்றவும் பின் பரிமாறவும். தேவையானால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் பரிமாறலாம்.

மாங்காய்ப் பச்சடி

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்பதோடு மாங்காய்ப் பருவத்தில் இது செய்யாத வீடே இருக்காது! (எங்க வீடு தவிர்த்து) ரங்க்ஸ் அவ்வளவா ரசிப்பதில்லை. ஆனால் மாமனார் வீட்டில் அனைவரும் மாங்காய்ப் பச்சடியைப் பெரிய கல்சட்டியில் செய்தாலும் போதாது என்பார்கள்.

புளிப்பான மாங்காயாக இருந்தாலும் பச்சடி செய்யலாம்.

மாங்காய் ஒன்று

உப்பு அரை டீஸ்பூன்

அரிசி மாவு ஒரு டீஸ்பூன்

வெல்லம் அரைக்கிண்ணம்

ஏலக்காய் தேவையானால்

மாங்காயைத் தோல் சீவிக் கொண்டு துண்டங்களாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். உப்புச் சேர்க்கவும். மாங்காய்த் துண்டங்கள் நன்கு வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து வெல்ல வாசனை போகும் வரை கொதித்ததும் ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வருகையிலேயே அடுப்பை அணைக்கவும். ஏலக்காய்த் தூள் விரும்பினால் சேர்க்கலாம். 

Monday, July 31, 2017

உணவே மருந்து! மாங்காய் 5

அடுத்து இப்போ மாங்காய்த் தொக்குப் போடலாம். தொக்குப் போடவென இங்கே திருச்சி/ஶ்ரீரங்கம் சந்தையில் தனியாக மாங்காய்கள் விற்கின்றனர். ஆனால் நான் கல்யாணத்துக்கு முன்னால் வரை மதுரையில் இருந்தப்போ எல்லாம் இங்கே ஒட்டு மாங்காய் என்று சொல்லப்படும் கல்லாமை மாங்காயிலேயே தொக்குப் போட்டுப் பார்த்திருக்கேன். அதுவே கொஞ்சம் தித்திப்பாக இருக்கும் என்பதால் எங்க அம்மா வீட்டில் வெல்லமெல்லாம் சேர்ப்பதில்லை. ஆனால் மாமியார் வீட்டில் கட்டாயமாக வெல்லம் போட வேண்டும். இங்கே வெல்லம் போடுவதை உங்கள் விருப்பத்தில் விட்டு விடுகிறேன். :)

நல்ல தொக்கு மாங்காய் பெரியதாக இருந்தால் ஒன்று

நடுத்தரமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று

மிளகாய் வற்றல் சுமார் 100 கிராம், வெறும் வாணலியிலோ அல்லது கொஞ்சமாக எண்ணெய் விட்டோ வறுத்துப் பொடித்துக் கொள்ளலாம். இதோடு பெருங்காயக் கட்டியையும் பொரித்துப் போட்டுப் பொடிக்கலாம்.

மிளகாய்த் தூள் எனில் ஒரு சின்னக் கிண்ணம்

உப்பு தேவையான அளவுக்கு அரைக்கிண்ணம் போதும்.

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாங்காய்த் துருவலுக்கு ஏற்ப

கடுகு, வெந்தயப் பொடி தேவையானால் இரண்டு டீஸ்பூன் (போடாவிட்டாலும் தப்பில்லை)

வெல்லம் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்தது. விருப்பத்தைப் பொறுத்தது.

வதக்க நல்லெண்ணெய் இரண்டு குழிக்கரண்டி அல்லது ஒரு கிண்ணம்

தாளிக்கக் கடுகு இரண்டு டீஸ்பூன்

மாங்காயை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலை நீக்கவும். பின்னர் காரட் துருவியில் துருவிக் கொள்ளவும். சிலருக்கு அது பிடிக்காது! வெறும் கத்தி அல்லது அரிவாள் மணையால் சின்னச் சின்னச் சீவல்களாகப் போட்டுக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் அல்லது இரும்பு வாணலியை வைத்து நல்லெண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போடவும். கடுகு பொரிந்த உடனே மாங்காய்த் துருவலைப் போட்டு மஞ்சள் பொடி, உப்பைச் சேர்க்கவும். நன்கு கிளறவும். காரப் பொடியை இப்போது போட வேண்டாம். அளவு தெரியாமல் கூடப் போடும் வாய்ப்பு இருக்கிறது. நான் உப்பையே கொஞ்சம் கிளறிய பின்னர் சரியான அளவு வந்ததுமே சேர்ப்பேன். அப்படியும் செய்யலாம். நன்கு கிளறிக் கொஞ்சம் சுருண்டு வரும்போது காரப்பொடியைச் சேர்க்கவும், காரப் பொடியைச் சேர்த்துப் பின்னர் நன்கு கிளற வேண்டும். எண்ணெய் போதாது போலிருந்தால் கொஞ்சம் சேர்க்கலாம். என்றாலும் தொக்கு பதமாக ஆனதும் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது தேவையானால் வெல்லம் சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கவும். கடுகு, வெந்தயப் பொடி பிடித்தால் சேர்க்கலாம். இதுவும் விரைவில் கெட்டுப் போகாது. வெளியேயே வைக்கலாம்.

மாங்காய்த் தொக்கு வெல்லம் சேர்த்தது.

மேலே சொன்னபடி எல்லாம் செய்து காரப்பொடி போட்டுக் கிளறிய பின்னர் வெல்லத்தைத் தூள் செய்து ஒரு சின்னக் கிண்ணத்தால் அளந்து போடவும். வெல்லமும் சேர்ந்துகொண்ட பின்னர் தொக்கு உருண்டு திரண்டு ஒட்டாமல் வரும்போது கீழே இறக்கி வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்க்கவும். ஜீரகப் பொடி இல்லாமலும் செய்யலாம்.

தித்திப்பு மாங்காய் ஊறுகாய்

இதற்கும் ஆவக்காய்க்கு நறுக்குகிறாப்போல் மாங்காய்த் துண்டங்களை நறுக்கிக் கொண்டு அவற்றோடு காரக் கலவை சேர்க்கும்போது சுமார் கால்கிலோ வெல்லத்தைத் தூள் செய்து மாங்காய்த் துண்டங்களோடு சேர்க்கவும். இந்தக் கலவையைப் போட்டதும் மாங்காய் ஊறுகாயை ஜாடி அல்லது கல்சட்டியோடு மேலே வெள்ளைத் துணியால் வேடு கட்டி வெயிலில் 4,5 நாட்கள் வைத்து எடுக்கவும். பின்னர் வறுத்த ஜீரகம், சோம்புப் பொடி சேர்த்துப் பயன்படுத்தவும். வெயிலில் வெல்லம் உருகிக் கொண்டு மாங்காயோடு சேர்ந்து காரம், புளிப்பு, இனிப்பு நிறைந்த கலவையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும். 

Friday, July 28, 2017

உணவே மருந்து! மாங்காய் 4

மாங்காய் அரைப்பழமாக இருக்கிறச்சே கூட அதில் உப்பும், காரமும் சேர்த்துப் போட்டுச் சாப்பிட்டால் அருமை! குழம்பு சாதத்திலிருந்து எல்லாத்துக்கும் அதைத் தொட்டுக்கலாம். காய்களே வேண்டாம். நம்ம ரங்க்ஸ் அதை ரசிக்கிறதில்லை. தித்திப்பா இருக்குனு சொல்லிடுவார். ஆனால் அம்மாதிரிக் காய்கள் கிடைத்தால் விடாமல் நறுக்கி உப்பு, காரம் கலந்து எனக்கு மட்டும் தொட்டுக்க வைச்சுப்பேன். :) இப்போ வெந்தய மாங்காய் பத்திப் பார்க்கலாமா?

வெந்தய மாங்காய்க்குத் தேவையான பொருட்கள்

மாங்காய் நடுத்தர அளவு 4 அல்லது 5. நன்கு அலம்பித் துடைத்து சுமாரான பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். இதற்குச் சிலர் மிளகாய்ப் பொடி சேர்ப்பார்கள். சிலர் மிளகாய் வற்றலை வறுத்துச் சேர்ப்பார்கள். உங்கள் வசதிப்படி மிளகாய்ப் பொடி அல்லது மிளகாய் வற்றல் எடுத்துக் கொள்ளவும்.

மிளகாய்ப் பொடி எனில் ஒரு குழிக்கரண்டி நிறைய

மிளகாய் வற்றல் எனில் சுமார் 100 அல்லது 150 கிராம் வற்றலை நன்கு வெயிலில் காய வைத்துச் சூட்டோடு போட்டுப் பொடிக்கவும். அல்லது வெறும் வாணலியில் சற்று வறுத்துச் சூடு ஆறுவதற்கும் பொடிக்கவும். சிலர் எண்ணெயிலேயே வறுக்கின்றனர். அவரவர் வீட்டு வழக்கப்படி செய்து கொள்ளலாம். வெந்தயத்தையும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். கல் உப்பையும் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளலாம்.

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், பெருங்காயம் தூள் அல்லது  கட்டி. கட்டி எனில் வாணலியில் எண்ணெயில் பொரிக்கவும்.

ஊறுகாய்க்குத் தேவையான நல்லெண்ணெய் ஒரு கிண்ணம்

மாங்காய்த் துண்டங்களை ஒரு வாயகன்ற கல்சட்டி அல்லது ஊறுகாய் போடும் பாத்திரத்தில் போடவும். வறுத்த மிளகாய் வற்றல், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி அல்லது பொரித்த கட்டி, வறுத்த வெந்தயம் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். இந்தப் பொடியை நறுக்கிய துண்டங்கள் மேல் போட்டு, நல்லெண்ணெயையக் காய்ச்சி ஆற விட்டு இதில் சேர்க்கவும். ஒரு மரக்கரண்டியால் கிளறி விடவும். சிலர் கிளறக் கூடாது, குலுக்க வேண்டும் என்பார்கள். அந்தக் காலங்களில் கண்ணாடி ஜாடி,  பீங்கான் ஜாடி அல்லது கல் சட்டியில் தான் ஊறுகாய் போடுவதே! அதில் எங்கேருந்து குலுக்குவது! கொட்டாங்கச்சியைத் தேய்த்து ஒரு பக்கம் நுனியில் ஓட்டை போட்டு ஒரு மரக்குச்சியை அதில் கொடுத்து இணைத்துக் கரண்டி மாதிரி வீட்டிலேயே தயார் செய்து வைப்பார்கள். அல்லது வாராந்தரச் சந்தைகளில் மரக்கரண்டி கிடைக்கும். அதை வாங்கி வைத்திருப்பார்கள். ஊறுகாய் கிளற மரக்கரண்டி   தான் பயன்பாட்டில் இருக்கும்.

இந்த ஊறுகாய் ஊற ஊறத் தான் நன்றாக இருக்கும். வெளியிலேயே வைக்கலாம். கெட்டுப் போகாது. சந்தேகமாக இருந்தால் இரண்டு, மூன்று நாட்கள் மேலே ஒரு வெள்ளைத்துணியை வேடு கட்டி வெயிலில் வைத்து எடுக்கவும்.

ஆவக்காய் மாங்காய்! இதற்கெனத் தனி மரமே உண்டுனு சொல்வாங்க. எல்லா மாங்காயிலும் ஆவக்காய் போட முடியாதுனும் சொல்வாங்க. ஆனால் நான் எங்க வீட்டு மாமரங்களின் காய்களிலும் மற்றும் மைத்துனர், நாத்தனார் வீட்டு மரங்களின் காய்களிலும் ஆவக்காய் போட்டிருக்கேன். மாங்காய் புளிப்பாக இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதினு நினைக்கிறேன். உருண்டை மாங்காயாக இருந்தால் ஆவக்காய் ருசியாக இருக்கும் என்கிறார்கள். ருமானி மாங்காயில் போட்டால் நன்றாக இருக்கும் என்றும் சொல்வார்கள். எப்படியானாலும் நல்ல புளிப்புள்ள மாங்காயாகப் பனிரண்டு அல்லது பதினைந்து தேவை.

மாங்காய்   15

மிளகாய்ப்பொடி (வாங்குவதை விட மி.வத்தல் வாங்கி மிஷினில் கொடுத்துப் பொடிப்பது சிறப்பு) 300 கிராமிலிருந்து 400 கிராமுக்குள்ளாக

உப்பு கல் உப்பு ஒரு டம்பளர் அல்லது 200 எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகுப் பொடி 200 கிராம்

கடுகைச் சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைக்கவும். அந்தச் சூட்டுடனேயே பொடித்துக் கொள்ளவும். கடுகுப் பொடி நிறைய இருந்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகாது. ஆவக்காய் ஊறுகாயே குறைந்தது 2 வருஷங்கள் தாக்குப் பிடிக்கும். முன்னெல்லாம் முதல் வருஷத்து ஆவக்காய் மிஞ்சிப் போவதோடு வெல்லப் பாகு வைத்துக் கிளறிச் சேர்த்து வறுத்த ஜீரக, சோம்புப் பொடியைப் போட்டுக் கலந்து வைப்பேன். அதைச் சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படும். இப்போ ஊறுகாயே ஒரு சின்ன ஹார்லிக்ஸ் பாட்டிலில் தான் போடுகிறேன் என்பதால் மிஞ்சுவது என்பதே இல்லை! (ஶ்ரீராம் கவனிக்க!) :P :P

வெந்தயம் முழுசாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள்ளாக. நம்ம ரங்க்ஸுக்கு வெந்தயம் வாயில் அகப்பட்டால் பிடிக்காது. நான் அதைத் தான் பொறுக்கித் தின்பேன். :)

கொண்டைக்கடலை கறுப்போ வெள்ளையோ பிடித்தமிருந்தால் நன்கு சுத்தம் செய்து கழுவி உலர்த்தி வைத்துக் கொள்ளவும். தண்ணீர் பட வேண்டாம். தண்ணீர் பட்டால் ஊறுகாய் வீணாகி விடும். சிலர் கொண்டைக்கடலை போட்டால் ஊறுகாயே வீணாகிவிடும் என்று போடுவதில்லை. ஆகவே இது அவரவர் விருப்பம். இன்னும் சிலர் பூண்டு உரித்துச் சேர்க்கிறார்கள். பூண்டும் நான் போடுவதில்லை.

நல்லெண்ணெய் அரைகிலோவுக்குக் குறையாமல் வேண்டும். இதையும் நன்கு வெயிலில் காய வைத்துக் கொள்ளவும்.

இப்போது மாங்காயைக் கழுவித் துடைத்துக் கொண்டு ஆவக்காய்க்கு வெட்டுகிறாற்போல் உள் பருப்பை நீக்கி விட்டு ஓட்டுடன் வெட்டிப் பெரிய துண்டங்களாக எடுத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரம் அல்லது கல்சட்டியில் பரவலாகப் போடவும்.

Image result for ஆவக்காய் மாங்காய் ஊறுகாய்

படத்துக்கு நன்றி, கூகிளார் வாயிலாக உமையாள் காயத்ரி


இன்னொரு பாத்திரத்தில் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, (பெருங்காயப்பொடி, தேவையானால்) பொதுவாக ஆவக்காய்க்குப் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள். நான் கொஞ்சம் போல் சேர்ப்பேன். உப்பு, கடுகுப் பொடி ஆகியவற்றைப் போட்டு நல்லெண்ணெயை ஊற்றிக் கலக்கவும்.

ஊறுகாய் எதில் போடுகிறோமோ அதை நன்கு காய வைத்துத் தயார் செய்து கொண்டு மாங்காய்த் துண்டுகளின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகக் காரம், கடுகுப்பொடி கலந்த கலவையைப் போட்டுக் கலந்து ஊறுகாய் ஜாடியில் போடவும். கடைசியில் மிச்சம் இருக்கும் விழுதையும் அதன் மேல் போட்டுக் கலக்கவும். நீங்கள் கொண்டைக்கடலை சேர்ப்பதாக இருந்தால் மாங்காய்த் துண்டங்களோடு கொண்டைக்கடலையைச் சேர்த்து விட்டுப் பின் காரக் கலவையைச் சேர்க்கலாம். வெந்தயத்தை முழுசாக அப்படியே காரக்கலவையில் கலந்து பின் மாங்காயோடு சேர்த்து விடலாம். இதை ஊறுகாய் ஜாடியின் வாயை வேடு கட்டிப் பின் விருப்பமிருந்தால் வெயிலில் ஒரு நாள் வைத்து எடுக்கவும்.

நான்காம் நாள் ஊறுகாயின் மேல் எண்ணெய் கசிந்து வர ஆரம்பித்திருக்கும். இது தான் ஊறுகாய் ஊற ஆரம்பித்ததன் அறிகுறி.  ஆரம்பத்தில் தினம் தினம் கிளறிக் கொடுத்து விட்டுப் பின்னர் நன்கு ஊறினதும் வாரம் இரு முறை கிளறினால் போதும். காற்றுப் புகாத மூடியினால் ஊறுகாய் ஜாடியை மூடி வைக்கவும். தேவைப்படும் ஊறுகாய்த் துண்டங்களைத் தனியான ஒரு கிண்ணம்/பாத்திரம்/ஜாடியில் போட்டுக் கொண்டு பயன்படுத்தவும்,  

Sunday, July 23, 2017

உணவே மருந்து! மாங்காய் 3

மாவடு ஊறுகாயை ரத்த அழுத்தம் இருக்கிறவங்க கூடக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம் என எங்க குடும்ப மருத்துவர் ஒரு முறை சொல்லி இருக்கார். ஊறுகாயைச் சாதத்துக்குத் தொட்டுக்கிறவங்களைப் பார்த்திருப்பீங்க! கறி, கூட்டு மாதிரி ஊறுகாயும் போட்டுப்பாங்க! நான் அப்படிப் போட்டுக்காட்டியும் மாவடுவை வத்தல் குழம்பு சாதத்தோடு சாப்பிடப் பிடிக்கும். இப்போல்லாம் குறைச்சாச்சு! ஊறுகாய் எல்லாம் போட்டுக்கறதையும் நிறுத்தி விட்டேன். ஆனால் ஊறுகாய் போட்டு வைப்பது நிறுத்தலை. அம்பேரிக்காவில் இருந்தப்போப் பொண்ணுக்கு இருமுறை எலுமிச்சை ஊறுகாயும், மாங்காயில் ஆவக்காய் ஊறுகாயும், மாங்காய் இஞ்சி, இஞ்சி சேர்த்த தொக்கும், வெஜிடபுள் ஊறுகாயும் போட்டு வைச்சுட்டு வந்தேன்.

மாங்காய் ஊறுகாய் எல்லோருக்கும் தெரியும் தான். ஆனால் அதில் வித விதமாக இருக்கிறது அல்லவா? பொதுவாகக் கொஞ்சம் பழுக்கிற நிலையில் இருக்கும் அரைக்காயை(இந்தக் குறிப்பிட்ட மாங்காய் மதுரைப் பக்கம் "கல்லாமை" என்ற பெயரில் அழைக்கப்படும். மற்ற இடங்களில் "ஒட்டு" மாங்காய் என அழைப்பார்கள். பெரும்பாலும் இதில் தான் தொக்குப் போடுகிறார்கள். என்றாலும் தொக்குக்கெனத் தனி மாங்காய் இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் கறிகாய்ச் சந்தையில் விற்கிறது.) நறுக்கி உப்பு, மிளகாய் தூவிச் சாப்பிடுவோம். வெளியே கடைகளில் பழக்கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றில் கூட இந்த மாங்காயை வில்லைகளாக நறுக்கி மாங்காய் பத்தை என்னும் பெயரில் விற்பார்கள். எனக்கும் அந்த ருசி பிடிக்கும். அதைத் தவிரவும் மாங்காயைப் பல சிறிய துண்டங்களாக நறுக்கிப் போடப்படும் புத்தம்புதிய துண்டம் மாங்காய் ஊறுகாயுடன் மோர் சாதம் மட்டுமில்லாமல் குழம்பிலிருந்து எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள ரொம்பப் பிடிக்கும். அது செய்வதும் ரொம்பவே எளிமையானது.

ஒட்டு மாங்காய் எனப்படும் மாங்காய் பெரிதாக இருந்தால் ஒன்று அல்லது மாங்காய் ஏதேனும் ஒரு வகை ஒன்று அல்லது இரண்டு.

உப்பு தேவையான அளவு

மிளகாய்த் தூள் அவரவருக்குத் தேவையான காரம் கொடுக்கும்படி

பெருங்காயத் தூள் ஒரு டீஸ்பூன்

வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூனிலிருந்து இரண்டு வரை மாங்காய்த் துண்டங்களின் அளவுக்கேற்ப

தாளிக்க கடுகு இரண்டு டீஸ்பூன்

மாங்காயைச் சின்னச் சின்னத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டு அதில் உப்புச் சேர்த்து மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் ஓர் கடாயில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கொண்டு அதில் கடுகு தாளிக்கவும். மாங்காய்த் துண்டங்களின் மேல் பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி ஆகியவற்றைப் போட்டு நல்லெண்ணயைச் சூடாக வெடித்த கடுகுடன் அதில் பரவலாக ஊற்றவும்.நன்கு கிளறி விடவும். இதை உடனே சாப்பிடலாம். இரண்டு, மூன்ரு நாட்கள் வைத்தும் சாப்பிடலாம். முன்னெல்லாம் இதை வைத்துச் சாப்பிடுவதெனில் தினம் தினம் வெயிலில் காய வைப்பார்கள். இப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால் இன்றைய பயன்பாடு முடிந்ததும் உடனே எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

Image result for மாங்காய் ஊறுகாய்

படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன்!

இதே போல் மாங்காயைச் சின்னச் சின்னத் துண்டங்களாக நறுக்கிய மாங்காயில் உப்பு மட்டும் சேர்த்துக் கொண்டு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கலந்தும் சாப்பிடலாம். இதோடு இஞ்சி, காரட் ஆகியவற்றைச் சேர்த்து உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய், கடுகு தாளித்துச் சாப்பிடலாம். அல்லது காரப்பொடி போட்டுக் கொண்டு கடுகு, பெருங்காயம் தாளித்தும் சாப்பிடலாம்.

எண்ணெய் மாங்காய்: மாங்காய் ஊறுகாய்க்கெனப் புளிப்பாகக் கிடைக்கும். அவற்றை வாங்கிக் கழுவிக் கொண்டு கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ஓடு வந்தால் பரவாயில்லை. மாங்காய்த் துண்டங்களை ஒரு கண்ணாடி ஜாடி அல்லது கல்சட்டி (ஹிஹிஹி) அல்லது பீங்கான் ஜாடியில் போட்டுத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.

எட்டு மாங்காய்கள் எனில் நல்ல புளிப்பான மாங்காயாக இருந்தால்  முக்கால்க்  கிண்ணம் உப்புத் தேவைப்படும். கல் உப்பாக இருந்தால் நல்லது. மாங்காயைத் தினமும் கிளறி விடவும். நான்கு நாட்கள் ஆனதும் மாங்காயையும் அதில் தளராக இருந்தால் அவற்றையும் மட்டும் தனியாக எடுத்து ஓரு மூங்கில் தட்டில் போட்டு வெயிலில் உலர்த்தவும்.  மாங்காயை எடுத்த பின்னர் ஜாடியில் சாறு இருக்கும். மாலை அதே சாறில் உலர வைத்தவற்றைப் போட்டு விட்டு மறுபடி மறுநாள் எடுத்து உலர்த்தவும். மீதம் கொஞ்சம் சாறு இருக்கும்.  அந்தச் சாறை அடியில் குப்பை, மண் ஏதும் இல்லையே என உறுதி செய்து கொண்டு ஒரு கல்சட்டியில் அந்தச் சாறைக் காய்ச்சவும். வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களையும் அதில் போட்டுக் கிளறி விட்டுக் கீழே இறக்கி வைக்கவும்.

ஓர் கடாயில் மாங்காய்க்குத் தேவையான மிளகாய் வற்றல், கடுகு, வெந்தயம் ஆகியவற்றைக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வறுக்கவும்.

மிளகாய் வற்றல் எட்டு நடுத்தர மாங்காய்களுக்கு சுமார் நூறு கிராம் தேவைப்படும். காரம் கூட்டியோ, குறைத்தோ போடலாம். எல்லாவற்றையும் நன்கு வறுத்துக் கொண்டு மிக்சியில் ஜாரில் போட்டுக் கடுகு, வெந்தயத்தோடு பொடிக்கவும். கீழே இறக்கி வைத்த மாங்காயில் போட்டுக் கலந்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் 200 கிராம் ஊற்றி நன்கு காய்ச்சவும். இந்த ஊறுகாயில் கொட்டிக் கிளறவும். மறுநாள் முதல் பயன்படுத்தலாம். இந்த ஊறுகாயைக்  கொஞ்சம் அதிக நாட்கள் வைத்திருக்க முடியும்