எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, December 6, 2013

தவலை அடை சாப்பிட வாங்க!

தவலை அடைக்குத் தேவையான சாமான்கள்:

(பச்சரிசியாகவே இருக்கட்டும்.)அரிசி  இரண்டு கிண்ணம்

து.பருப்பு  ஒரு கிண்ணம்

க.பருப்பு  அரைக்கிண்ணம்

உ.பருப்பு அரைக்கிண்ணம்

மிளகு, சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்(தேவையானால்)

இவற்றைக் களைந்து காய வைத்து மெஷினில் கொடுத்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகம் போட்டாலும் போடலாம். போடலைனாலும் பரவாயில்லை.  ஊறவைத்துக் களைந்து நீரை வடிகட்டி மிக்சியில் கூட உடைத்துக் கொள்ளலாம்.  மொத்தம் மூன்று கிண்ணம் வரும். கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கலாம். அவரவர் அளக்கும் முறை மாறுபடும்.

தாளிக்க

எண்ணெய்  2 டேபிள் ஸ்பூன்

கடுகு,  ஒரு டீஸ்பூன்,

உ.பருப்பு ஒரு டீஸ்பூன்

க.பருப்பு ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

பச்சை மிளகாய்  மிளகு போட்டிருப்பதால் காரம் கொஞ்சம் குறைவாக இருக்கட்டும் என்றால் மூன்று அல்லது நான்குக்குள் போதுமானது.

இஞ்சி ஒரு துண்டு(தேவையானால்)

கருகப்பிலை, கொத்துமல்லி

தேங்காய் ஒரு மூடி. கீறிப் பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

வேகவிடத் தேவையான நீர்

உப்பு தேவைக்கு


இப்போது இதைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும்.  அதற்கு எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.

வாணலி அல்லது உருளி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடேற்றி  ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். தாளிக்கும் பொருட்களைக் கொடுத்திருக்கும் வரிசைப்படி போட்டுத் தாளிக்கவும்.  கருகப்பிலையைத் தாளிதத்தில் போட்டுவிட்டு, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.  பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

தாளித்ததும் தேவையான நீரை விட்டு உப்பைப் போட்டுக் கொதிக்கவிடவும்.  ரவை போல் உடைத்த மாவைக் கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும்.  தேங்காய்க் கீற்றுகளையும் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரவேண்டும்.  அதே சமயம் குழையவும் கூடாது.  வெந்ததும் கீழே இறக்கிக் கொத்துமல்லியைச் சேர்த்துக் கிளறவும்.  உப்புமா பதத்துக்கு இருத்தல் நலம்.

அடுப்பில் வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியைப் போட்டு சின்னக் கிண்ணம் எண்ணெயில் பாதி அளவுக்கு அதில் விட்டுக் காய வைக்கவும். கிளறிய மாவை ஒரு ஆரஞ்சு அளவுக்கு எடுத்து உருட்டி.  வாழை இலையில் வைக்கவும்.  வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.  அதை அப்படியே காயும் எண்ணெயில் நிதானமாகப் போடவும்.  வாழை இலையை அப்படியே உருளியில் மாவோடு வைத்தும் தட்டலாம். சூடு பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.   ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு ஒரு தட்டால் மூடவும்.  ஒரு ஈடுக்கு நான்கு அல்லது ஐந்து தவலை அடைகளைப் போடலாம். தட்டால் மூடி இருபக்கமும் பொன் முறுவலாக வந்ததும் வெளியே எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

நல்லா இருக்கும்.  கொஞ்சம் செலவும் ஜாஸ்தி; வேலையும் ஜாஸ்தி இதிலே!

இதையே நீர் விட்டு அரைத்தும் செய்யலாம். அது பின்னர்!

22 comments:

 1. இன்னும் ஒரு செய்முறை இருக்கா...? ஒரு தவளைக்கு 3 பதிவா...?

  நல்லது அம்மா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, நன்றிப்பா.

   Delete
 2. ஹிஹிஹி... தேவையான பொருட்களில் தவலை இல்லை, ஒரு சொம்பைக் கூட நீங்கள் சொல்லைல்லையே...!! :)))))

  கடைகளில்தான் சாப்பிட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கடைலே?? எங்கே? எந்தக் கடை?? அது தவலை வடையா இருக்கும்! இந்த வலைப்பக்கத்திலேயே அதன் செய்முறையும் போட்டிருப்பேன் பாருங்க. நாளைக்குச் சுட்டி வேணா எடுத்துத் தரேன். கடைகள்ளே தவலை அடை செய்யும் அளவுக்கெல்லாம் யாருக்கும் பொறுமை இருக்காது. :)))) இதுக்கு வெண்கலப் பானையை விட உருளி தான் பெஸ்ட்.

   Delete
  2. ஆமாம்...ஆமாம்... தவலை வடைதான் சாப்பிட்டிருக்கேன். அடை இல்லை! ஸாரி!

   Delete
  3. அதானே பார்த்தேன்! :))))

   Delete
 3. நான் இத்தன நாளா தவளை ன்னுதான் நினைச்சிகிட்டிருந்தேன்... தவலையா? சரி.. சரி இந்த அடையை ஒரு தவலை பூரா நிரப்பி எனக்கு அனுப்பி வைங்க... இனிமே தலைப்பில சாப்பிடலாம் வாங்கன்னுல்லாம் சொல்ல கூடாது. ஒண்ணு செஞ்சி சாப்பிட்டு பாருங்கன்னு போடுங்க... இல்ல குடுத்துட்டு சாப்பிடலாம் வாங்கன்னு சொல்லுங்க... ஆமா... ! தவலை அடை நான் ஸ்கூல் படிக்கிறப்ப எதிர் வீட்டு ஆண்ட்டி செஞ்சி குடுத்து சாப்பிட்டிருக்கேன்... செம டேஸ்ட்டா இருக்கும்...அதிலும் முறுவலா இருக்கும் போது ரொம்ப...டேஸ்ட்..! ம் இப்பல்லாம் ஏது? நமக்கு செய்ய வராது.... எதோ உங்களை மாதிரி கிச்சன் ராணிகள் மனது வைத்து போனால் போகிறது சுட்டு தந்தால் நன்றாக சாப்பிடுவேன்.... ! நானும் புதுசா புதுசா எதாவது கத்துக்கனும்னு வம்பா போய் முடிஞ்சிடுது... நேத்து வரகுல உப்புமா பண்ணலாம்னு கிண்ட அது கஞ்சியா ஆயிடுச்சு... ஏன் ஏன் எனக்கு மட்டும் இப்பிடி...?

  ReplyDelete
  Replies
  1. வாங்க உஷா, வேலூர்லே விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் பிரமாதமாச் செய்யறீங்கனு படிச்சேன். விழாவெல்லாம் ஆயிடுச்சா? நல்லா சுறுசுறுப்பாத் தானே இருக்கீங்க?? சமைக்கத் தெரியலைனா நம்ப முடியலையே? மெல்ல ஒரு நாளைக்குச் செஞ்சு பாருங்க. உங்களால் முடியாததா?

   Delete
  2. வரகிலே உப்புமா? நல்லவேளையா இப்போதைக்கு வேலூர் வர ஐடியா ஏதும் இல்லை. பிழைச்சேன். :))))

   Delete
  3. வேலூருக்கு வந்தா இதோட தப்பிச்சீங்க.. இல்லைன்னா சாமை சட்னி கம்பு சுண்டல் .. சோள பாயசம்னு கேரியர்ல அடுக்கிகிட்டு உங்க வீட்டுக்கு வந்துடுவேன்... ஜாக்கிரதை.. ஆமா!

   Delete
 4. டிடியைத் தவிர நீங்க இரண்டு பேரும் முதல் பதிவிலே உள்ள அடைக்கவிதையைப் படிச்சதாத் தெரியலையே! :)))

  ReplyDelete
 5. ஹப்பாடாஆஆ!!!.. அளவு தெரியணுமே உங்க கிட்ட கேக்கணுன்னு நினைச்சேன். பதிவாவே போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம்ம்மா!!!. ஒரு நாள், நிச்சயம் ட்ரை பண்ணிப் பாக்கறேன்.. ரொம்ப நன்றிம்மா!!!

  ReplyDelete
  Replies
  1. செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க பார்வதி. :))))

   Delete
 6. இந்த அடையை வெண்கலப் பானையில் தான் செய்யனுமா இல்லை நான்ஸ்டிக்/இரும்பு வாணலியிலும் வருமா? நான் நீங்கள் சொன்ன அத்தனையும் போட்டு எண்ணெயில் பொரித்து தவளை வடை செய்திருக்கிறேன். நீங்கள் சொல்வது எண்ணெயில்லாமல் இருக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. அடுப்பில் வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியைப் போட்டு சின்னக் கிண்ணம் எண்ணெயில் பாதி அளவுக்கு அதில் விட்டுக் காய வைக்கவும். கிளறிய மாவை ஒரு ஆரஞ்சு அளவுக்கு எடுத்து உருட்டி. வாழை இலையில் வைக்கவும். வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். அதை அப்படியே காயும் எண்ணெயில் நிதானமாகப் போடவும்.//

   Rajalakshmi Paramasivam,

   இங்கே படிச்சுப் பாருங்க, எண்ணெய் விடச் சொல்லி இருக்கேன். இரும்பு வாணலி அல்லது தோசைக்கல்லிலும் போட்டுச் செய்யலாம். நான் நான் ஸ்டிக் பயன்படுத்துவது இல்லை. :)))))

   Delete
 7. படித்தேன். ருசித்தேன்....

  இந்த முறை திருச்சி வந்த போது கூட சாப்பிட்டேன்!. வேலை அதிகம் என்பதால் செய்ய சோம்பேறித்தனம்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதான் ஆச்சரியமா இருந்தது! :)))) இதுக்குக் கொஞ்சம் வேலை அதிகம் தான்.

   Delete
 8. ருசியான குறிப்பு...

  நானும் இதைப் பற்றி எழுதணும்னு நினைச்சிருந்தேன்...:))

  ReplyDelete
  Replies
  1. உங்க செய்முறையையும் எழுதுங்க ஆதி. அதையும் எப்படினு பார்த்து வைச்சுக்கலாமே.:)

   Delete
 9. உங்க அளவுக்கெல்லாம் வராது மாமி.... :)) என் மாமியார் சொல்லிக் கொடுத்த முறையில் பண்ணுவேன்... தோசைக்கல்லில்..:))

  ReplyDelete
  Replies
  1. தோசைக்கல்லிலும் பண்ணலாம், ஆதி. பின்னாட்களில் அம்மாவால் உருளியைத் தூக்க முடியாமல் போனப்போ தோசைக்கல்லில் தான் பண்ணி இருக்கா! :))) வேண்டாம்னு சொன்னாலும் விட மாட்டா! :))))

   Delete
 10. மாமி, என் இன்றைய பதிவில் தவலை அடை...

  நேரம் கிடைக்கும் போது வந்து பார்த்து கருத்துக்களைச் சொல்லுங்கள்...

  ReplyDelete