எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, November 5, 2010

வயிறு வலிக்குதே!

தீபாவளி பட்ச்ணங்களை ஒரு பிடி பிடிச்சா வயிறு வலிக்கத் தான் செய்யும்.

க்ர்ர்ர்ர், யாரு சாப்பிட்டாங்க பக்ஷணங்கள் எல்லாம்??? இருந்தாலும் வயிறு வலிக்குது!

சரி, சரி, இப்போ என்ன? மருந்தைச் சாப்பிட்டால் எல்லாம் சரியாயிடும்.

அந்த மருந்தும் நானே தான் கிளறிச் சாப்பிடவேண்டி இருக்கு. :(

சரி, சரி எனக்குச் சொல்லிக் கொடு, நான் கிளறுகிறேன்.

வேண்டாம்பா சாமி, அன்னிக்கு அல்வா கிளறினாப்போல் ஆயிடும். அப்புறமா அது சொத்தை, இது நொள்ளைனு என்னைச் சொல்லுவீங்க.

ரெண்டு பேருமாச் சேர்ந்து தானே அல்வா கிளறினோம்??

அது என்னமோ சரிதான். ஆனால் சரியா வரலைனதும், எனக்கு அல்வா கொடுத்துட்டீங்க! நானே மருந்தைக் கிளறிக்கறேன்.

சரி, சாமான்கள் என்னனு சொல்லு, அதையாவது எடுத்து வைக்கலாம்.

வறுத்துப் பொடிக்க வேண்டிய சாமான்கள்.

சுக்கு
மிளகு,
ஜீரகம்,
சோம்பு,
கசகசா,
கிராம்பு,
ஏலக்காய்,
கருஞ்சீரகம்
இலவங்கப்பட்டை,
சித்தரத்தை,
திப்பிலி,
தேசாவரம் அல்லது கண்டந்திப்பிலிக்குச்சிகள்

இது எல்லாத்தையும் நல்லாக் காய வைச்சுச் சம அளவு எடுத்துக்கவும். வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்ததை மிக்சியில் போட்டு நன்றாய்ப் பொடியாக்கவும். அநேகமாய் நைசாகவே வரும். அப்படிக்கொஞ்சம் கொர கொரனு இருந்தாலும் பரவாயில்லை. பொடியைத் தனியாய் வைத்துக்கொள்ளவும்

இனி பச்சையாய் அரைக்க
இஞ்சி 50 கிராம்
கொத்துமல்லி விதை 100 கிராம்
இவற்றை நன்கு நீர் விட்டு அரைத்து, வடிகட்டிச் சாறு எடுத்துக்கொள்ளவும். மூன்று நான்கு முறை அரைத்துச் சாறை எடுக்கலாம்.

கருப்பட்டி பிடித்தால் கருப்பட்டி அல்லது வெல்லம். தூளாக்கியது ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம். கிளறுவதற்குத் தேவையாக ஒரு கரண்டி அல்லது ஐம்பது கிராம் நல்லெண்ணெய், ஐம்பது கிராம் நெய். சுத்தமான தேன் ஒரு கரண்டி.

நல்ல இரும்புச் சட்டியில்(நான் - ஸ்டிக் எல்லாம் சரிப்படாது. இரும்பின் சத்து மருந்தில் சேரணும்) இஞ்சி, கொத்துமல்லிச் சாறை விட்டுக் கொதிக்க விடவும். நன்கு தள தளவெனக் கொதிக்கும்போது தூளாக்கிய கருப்பட்டியைப் போடவும். கருப்பட்டி கரைந்து வாசனை போனதும், பொடி பண்ணி வைத்த மருந்துக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். விடாமல் கிளறவும். நடுவில் கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கொண்டு இருக்கவும். கையில் ஒட்டாமல் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் தேனைச் சேர்த்து, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு சின்ன ஸ்பூனால் ஒரு உருண்டை சாப்பிட்டாலே போதுமானது.

Sunday, September 12, 2010

கொழுக்கட்டை வேணுமோ, கொழுக்கட்டை?

விநாயகர் சதுர்த்திக் கொழுக்கட்டை செய்யும் விதம்.

முதல் முறை உருண்டை கொழுக்கட்டை.

இரண்டு கிண்ணம் அரிசி மாவு, ஒரு கிண்ணம் தூளாக்கிய வெல்லம், தேங்காய்க் கீறல்கள், ஏலக்காய், நீர்.

இதற்கு அரிசி மாவும் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் பச்சரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் களைந்து கொண்டு நீரில் ஊற வைக்கவும். அரிசி ஒரு மணி நேரமாவது ஊறிய பிறகு நீரை வடித்துவிட்டுப் பின் மிக்சியில் மாவாக்கவும். மாவைச் சூடு வர வெறும் வாணலியில்/கடாயில் வறுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் ஒரு கிண்ணம் நீரைச் சுட வைக்கவும். நீர் கொதித்து வரும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நீரில் கரையும்போது தேங்காய்க்கீறல்களைச் சேர்த்துவிட்டு, அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். நன்கு கிளறவும். மாவு நன்கு வேக வேண்டும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடிக்கவும்.

ஒரு இட்லிப் பானையில் நீர் ஊற்றி, இட்லித் தட்டில் அல்லது ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவி, அல்லது இலை/துணி போட்டுப் பிடித்த உருண்டைகளை வைத்துப் பத்து நிமிடம் வேக வைக்கவும். பின் வெளியே எடுக்கலாம்.

பொதுவாய் இந்தக் கொழுக்கட்டையைப் பிடி கொழுக்கட்டை என்று சொல்வதுண்டு. பெரும்பாலும் விநாயகருக்கு வேண்டிக்கொண்டு நினைத்த காரியம் பூர்த்தியானால் இந்தப் பிடி கொழுக்கட்டை செய்து விநியோகம் பண்ணிப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்கள்.

அடுத்துப் பூரணக் கொழுக்கட்டை. பொதுவாய் இதுதான் விநாயக சதுர்த்திக்குச் செய்வார்கள். இது வெறும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம், எள் பூரணம், உளுந்துப் பூரணம் என நான்கு வகைகளில் செய்வது உண்டு.
முதலில் பூரணங்கள் செய்யும் முறை:

தேங்காய்ப் பூரணம்: தேங்காய் சிறிது ஒன்று. ஏலக்காய் நாலைந்து பொடித்துக்கொள்ளவும். பாகு வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன் தூளாக்கியது. வெல்லம் ரொம்பச் சேர்த்தால் பூரணம் கொழுக்கட்டையில் இருந்து வெளியே வந்துவிடும்.

தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவலோடு வெல்லத்தையும் சேர்க்கவும். நீர் சேர்க்கவேண்டாம். வெல்லத்தில் உள்ள நீரும் தேங்காய் துருவலில் உள்ள நீருமே போதுமானது. வெல்லமும் தேங்காய்த் துருவலும் நன்கு கலக்கவேண்டும். நன்கு கலந்து பூரணம் உருட்டும் பதம் வரும்போது இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.

கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள்.

ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பை எடுத்து வறுத்து ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை வேக வைத்து அதோடு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுது தளர இருந்தால் நான் ஸ்டிக் கடாயில் போட்டுச் சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.

எள் பூரணம்: ஒரு சிலர் கடலைப்பருப்புப் பூரணத்திலேயே எள்ளையும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள். சிலருக்குத் தனியாக எள் பூரணம் செய்வார்கள்.
கறுப்பு எள் ஐம்பது கிராம். ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள். ஏலக்காய்,
எள்ளைக் களைந்து கல்லரித்துக்கொண்டு வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். வெடிக்கும் வரை வறுக்கவேண்டும். பின் பொடித்த வெல்லம், ஏலக்காயோடு சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி பண்ணிக்கொள்ளவும்.

உளுந்தம் பூரணம்:
உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, தேங்காய்த் துருவல், தாளிக்க கடுகு, உ.புருப்பு, கருகப்பிலை, விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி.

உளுந்தைக் களைந்து கல்லரித்துக்கொண்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் வடிகட்டிவிட்டுப் பின்மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து உளுத்தம்பருப்பை அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். என்றாலும் பருப்பும் தெரியக் கூடாது. அரைத்த விழுதை ஒரு ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவிப் பரப்பி இட்லிப் பானையில் வேக வைக்கவும். குச்சியால் அல்லது ஒரு கரண்டி நுனியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது வெளியில் எடுத்து ஆறவிடவும்.

கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை சேர்க்கவும். வெந்த உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவலும் சேர்க்கவும். பூரணம் உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கவும். விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து கொள்ளலாம்.

நான்கு பூரணங்களும் ரெடியாயிடுச்சு. இப்போ மேல் மாவு தயாரிக்கும் முறை.

அரிசி நல்ல பச்சரிசியாக இருத்தல் நலம். தமிழ்நாடு என்றால் ஐஆர் இருபது அரிசி கிடைக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் நல்ல பச்சரிசியாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். யு.எஸ். , கனடா என்றால் அமெரிக்கன் லாங் கிரெயின் ரைஸ் சரியாய் இருக்கும்.

அரிசி 250 கிராம். வேக வைக்க நீர் ஒரு சின்னக் கிண்ணம், ஒரு சிட்டிகை உப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்.

அரிசியை நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறினால் நல்லது. ஊறிய அரிசியை நீரை வடித்துவிட்டு மிக்சியில் போட்டுத் தேவையான நீரை மட்டும் கொஞ்சமாய் ஊற்றி நல்ல நைசாக அரைக்கவும். கையால் தொட்டால் மாவில் கரகரப்புத் தெரியக் கூடாது. நல்ல சில்க் மாதிரி வழவழப்பாக இருக்க வேண்டும். மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் நீர் ஒரு சின்னக் கிண்ணம் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போடவும். நீர் நன்கு கொதிக்கவேண்டும். இப்போது அரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டிக் கிளறவேண்டும். மாவு நிறம் மாறும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும். மாவு நன்கு வெந்ததும் பந்துபோல் திரண்டு வரும். எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து எண்ணெயும், சூடான நீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், உள்ளே கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைய வேண்டும்.

இந்த மாவில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக் கிண்ணம் போல் செய்யவும். தேவையான பூரணத்தை உள்ளே வைத்து நிரப்பவும். இப்படிக் கொழுக்கட்டைகள் செய்து விட்டு இப்போது அவற்றை வேகவிடவேண்டும். இட்லிப் பானையில் நீர் ஊற்றி இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டைப் போட்டு அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து வேகவிடவேண்டும். ஏற்கெனவே வெந்த மாவு என்பதால் அதிக நேரம் விடவேண்டாம். கொழுக்கட்டைகள் மேலே எண்ணெய் கசிந்தாற்போல் நீர் வந்து வேர்த்துவிட்டிருக்கும். அப்போது எடுத்துவிடலாம்.

ஒரு சிலர் மாவை நீர் விட்டு அரைக்காமல் நீரை வடித்துவிட்டு மாவைப் பொடியாக்கியும் வைத்துக்கொள்வார்கள். இது அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம்.

அடுத்துப் பால் கொழுக்கட்டை

இதற்கும் அரிசி தேவை. வெல்லம், தேங்காய் பெரிதாக ஒன்று. ஏலக்காய்.

அரிசி 250 கிராம். பாகு வெல்லம் 300/400 கிராம், தேங்காய் பெரிதாக ஒன்று, ஏலக்காய். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு ஒரு சிட்டிகை.

அரிசியை நன்கு ஊற வைக்கவேண்டும். ஊறிய அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். தனியாக வைத்துக்கொள்ளவும். பெரிய தேங்காயை எடுத்து உடைத்துத் துருவிப் பாலை எடுக்கவும். முதல் பாலைத் தனியாக வைக்கவும். அடுத்த இரண்டு முறை எடுக்கப் படும் தேங்காய்ப் பாலை ஒன்றாக வைத்துக்கொள்ளவும்.

வெண்கல உருளி/கடாயில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து ஒரு முட்டை நல்லெண்ணெய் அல்லது நெய் விடவும். நீர் கொதித்து வரும்போது அரைத்த மாவைப்போட்டுக் கிளறவும். நன்கு பந்து போல் மாவு வரும்வரை கிளறவும். ஆற வைத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு இருக்கலாம்.

இப்போது இன்னொரு உருளி/கடாயில் கொஞ்சம் போல் நீர் விட்டு வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து வரும்போது இரண்டாம் முறை, மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப்பாலை விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போடவும். முதலில் போட்டவை வெந்து மேலே மிதந்து வரும்போது அடுத்த முறை போடலாம். இப்படி எல்லாவற்றையும் போட்டதும், சிறிது நேரம் சேர்ந்து கொதிக்கவிடவும். பின் கீழே இறக்கி ஆற வைத்து முதல் தேங்காய்ப் பாலையும் ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும்..

சிலருக்கு இந்த உருண்டைகளை நேரே தேங்காய்ப்பாலில் போடும்போது அவை கரைந்துவிடுமோ என யோசிப்பார்கள். அவர்கள் உருட்டி வைத்ததும் உருண்டைகளை இட்லிப் பானையில் வேகவிட்டு வைத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பால், வெல்லத்தோடு சேர்ந்து நன்கு கொதிக்கும்போது கொழுக்கட்டை உருண்டைகளைச் சேர்க்கலாம். இம்முறையில் உருண்டைகள் உடையாது.



ரவையில் செய்யும் நெய்க்கொழுக்கட்டை:

பொதுவாக இதை கணபதி ஹோமத்துக்கோ, அல்லது நவகிரஹ ஹோமம் போன்றவை செய்யும் முன்னர் செய்யப் படும் கணபதி ஹோமத்துக்கோ தான் முதல்நாளே செய்து வைத்துக்கொள்வது வழக்கம். இன்றைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவங்க ஓரளவு நம் வழக்கப்படி பண்டிகைகள் கொண்டாடும்போது பாரம்பரிய உணவு வகைகளைச் செய்யமுடியாமல் திண்டாடுகிறார்கள். அவங்க விநாயக சதுர்த்திக்கு இந்த ரவைக் கொழுக்கட்டையைச் செய்து கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் விநாயக சதுர்த்திக்கு முன்னர் வரும் ஏதாவது விடுமுறை நாளில் இதைச் செய்து (ருசி பார்க்காமல்) ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று நிவேதனத்துக்குப் பயன் படுத்தலாம். இதுவும் பதினைந்து நாட்களுக்குக் குறையாமல் இருக்கும். இதற்குத் தேவையான பொருட்கள் பார்ப்போமா?

பூரணம் செய்ய: ஒரு சின்னக் கிண்ணம் தேங்காய் துருவல், 1/2 கிண்ணம் வெல்லம் தூளாக்கியது, ஏலக்காய்ப் பொடி.

மேல் மாவிற்கு: சன்னமான நைஸ் ரவை ஒரு கிண்ணம். ஒரு சிட்டிகை உப்பு, பிசைய அரைக்கிண்ணம் பால். (காய்ச்சாத பாலும் பயன்படுத்தலாம்.) பிசையும்போது தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய். பொரிக்கவும் நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு.

முதலில் முன் கூறியபடி தேங்காய்ப் பூரணம் வெல்லத்தூள் சேர்த்துச் செய்து ஏலப் பொடி சேர்த்து ஆற வைக்கவும்.

ரவையில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாலும் ரவையும் ஊறிக்கொண்டு கெட்டியாக ஆகி இருக்கும். இப்போது அதைக் கைகளில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு நன்கு பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும்வரை நன்கு பிசையவும். அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் சப்பாத்திக்கல்லில் இந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்துக்கொண்டு மெலிதான சப்பாத்தியாக இடவும். ஒரு வட்டமான மூடியால் இட்ட சப்பாத்தியில் கத்திரித்து எடுக்கவும். சிறு சிறு வட்டமானக் குட்டிக் குட்டிச் சப்பாத்திகள் நாலைந்து கிடைக்கும். இவற்றில் செய்து வைத்த பூரணத்தை நிரப்பிக் கொழுக்கட்டைக்கு மூடுவது போல் மூடவும். இம்மாதிரி எல்லா மாவையும் பூரணம் நிரப்பிச் செய்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் (சூடானதும்) அடுப்பைச் சிறிதாக எரிய விட்டுச் செய்து வைத்த கொழுக்கட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொன் நிறமாகப் பொரியும் போது எடுத்துவிடலாம். மேலே கரகரப்போடும் உள்ளே பூரணத்தின் மிருதுவோடும் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

காரக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்: இரண்டு கிண்ணம் ஊற வைத்துச் சன்னமாக ரவை போல் மிக்சியில் உடைத்துக்கொள்ளவேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் எல்லாவற்றையும் நீரில் ஊற வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடித் தேங்காய் துருவல். தாளிக்க எண்ணெய், பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு சிறு துண்டு, கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு. நீர் வேக வைக்கத் தேவையான அளவு. உப்பு.

முதலில் மிக்சியில் ஊற வைத்த பருப்பு வகைகளையும் மிளகாய்வற்றல், தேங்காய்துருவலஓடு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, க,பருப்பு, ப.மிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளிக்கவும். பெருங்காயத் தூளும் சேர்க்கவும். பின்னர் மூன்று கப் நீரை ஊற்றவும். இப்போது அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டு உப்புச் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது அரிசி ரவையைப் போட்டுக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறிய பின்னர் சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடித்து, இட்லிப் பானையில் வேகவிடவும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ச் சட்னி, மோர்க்குழம்பு நன்றாக இருக்கும்.

அப்பாவி தங்கமணிக்காக வெடிக்காத உப்புச் சீடை!



கோகுலாஷ்டமி சிறப்புப் பலகாரங்கள்/பட்சணங்கள்:

முறுக்கு: கை முறுக்கையே அநேகமாய் முறுக்கு என்று சொல்வோம். சிலர் அச்சில் பிழியும் தேன்குழலைச் சொன்னாலும் பொதுவாய் முறுக்கு என்றால் கையால் சுற்றுவதே! இதற்குத் தேவையான பொருட்கள்.

அரிசி மாவு: 2 கப், வறுத்த உளுத்தமாவு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணை, கலக்க நீர் தேவையான அளவு. பொரித்து எடுக்கச் சமையல் எண்ணெய்.
முறுக்குச் சுற்றும் வட்டமான தட்டு, அல்லது நீரில் நனைத்துப் பிழிந்த வெள்ளைத் துணி அல்லது தினசரி செய்தித் தாள்(இதில் அச்சுக்களின் ஈயம் கலக்குமோனு சந்தேகம் எனக்கு இருப்பதால் துணி அல்லது வட்டத்தட்டையே பயன்படுத்துவேன்.)

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசிமாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயப்பொடியைச் சேர்க்கவும். உப்புத் தூளாக இருந்தால் பரவாயில்லை. கல் உப்புத் தான் பயன்படுத்துபவர்கள் தேவையான உப்பை நீரில் கலக்கி அடுப்பில் வைத்துக் கொஞ்சம் சூடு செய்துவிட்டு அந்த உப்புக் கரைசலை ஊற்றிக்கொள்ளலாம். பொதுவாகப் பழங்காலத்தில் உப்புக் கரைசலை ஊற்றியே செய்யப் பட்டது. இன்றைய நாட்களில் தூள் உப்புக் கிடைப்பதால் அப்படியே பயன்படுத்தப் படுகிறது.

மாவு மேற்சொன்ன பொருட்களோடு நன்கு கலந்ததும், சீரகத்தையும், வெண்ணெயையும் சேர்க்கவும். நீர் சேர்க்காமல் சற்று நேரம் வெண்ணெய் நன்கு கலக்கும்வரை மாவைப் பிசையவும். மாவில் வெண்ணெய் நன்கு கலந்ததும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெயைச் சுட வைக்கவும். எண்ணெய் நன்கு சூடு ஏறி அதில் இருந்து ஆவி வரும்போது நினைவாக அடுப்பைச் சிறிதாக எரியவிடவேண்டும். எண்ணெய் சூடு ஏறுவதற்குள்ளாக முறுக்குத் தட்டிலோ, துணியிலோ கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு, பின்னர் கை கொண்ட மட்டும் மாவை எடுத்து முறுக்கிச் சுற்றிக்கொண்டே வரவேண்டும். இரண்டு சுற்று, நாலு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்றுத்தான் பொதுவாகச் சுற்றுவார்கள் என்றாலும் இரண்டு சுற்றே போதுமானது. ஐந்து, ஏழு எல்லாம் கல்யாணங்கள் போன்ற பெரிய அளவில் செய்யப் படும் விசேஷங்களில் பயன்படும். சுற்றிய முறுக்கைப் பின்னல் கலையாமல் ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காய்ந்த எண்ணெயில் போடவும். ஒரு சமயத்தில் நாலைந்து முறுக்குகள் வரை போடலாம். ஐந்து, ஏழு சுற்று முறுக்கென்றால் ஒரே முறுக்குத் தான் போடமுடியும். முறுக்கு நன்றாகச் சிவக்கும் வரை பொரிக்கவும். நன்கு சிவந்து எண்ணெயில் மேலே மிதந்து வரும். பொரியும்போது வரும் சப்தமும் அடங்கிவிடும். அப்போது முறுக்குகளை வெளியே எடுக்கவும். ஒரு தகர டப்பாவில் அல்லது நமுத்துப் போகாவண்ணம் வேறு ஏதானும் டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாது. கையால் உடைத்தால் முறுக்குச் சுற்றுக்களின் உள்ளே குழல் போல் ஓட்டை தெரியும். அப்படி இருந்தால் முறுக்கு நல்ல பதத்தில் வந்திருக்கிறது என்று பொருள்.

அடுத்து உப்புச் சீடை:

இதற்கும் தேவையான பொருட்கள்

2கப் அரிசிமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த உளுத்த மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது, விருப்பமிருந்தால் எள் ஒரு டீ ஸ்பூன் சேர்க்கலாம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நீர் தேவையான அளவு. பொரிக்க சமையல் எண்ணெய்.

அரிசி மாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயத் தூள், எள், தேங்காய்க் கீறியது, ஊறிய கடலைப்பருப்பை ஒன்றாய்ச் சேர்க்கவும். சற்று நேரம் எல்லாம் ஒன்றாய்க்கலக்கும்வரை கலந்துவிட்டுப் பின் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், கொஞ்சமாய் நீரை விட்டுப் பிசையவும். இது உருட்டினால் உருண்டையகாவும், உதிர்த்தால் உதிராகவும் வரவேண்டும். அப்படிப் பிசைந்தால் போதுமானது. ரொம்ப நீரைச் சேர்த்துச் சப்பாத்தி மாவு போலெல்லாம் பிசையவேண்டாம். இப்போது அடுப்பில் எண்ணெயைச் சூடாக்கவும். அதற்குள் ஒரு பேப்பரில் அல்லது துணியில் பிசைந்த மாவைக் கையால் உருட்டிப் போடவும். உருண்டை ரொம்பவும் உருண்டையாக அழகாயெல்லாம் வரவேண்டாம். சும்மாப் பிடிச்சுப் போட்டால் போதுமானது. பொதுவாக உப்புச் சீடையை எண்ணெயில் போட்டால் வெடிக்கும்.

சமையலறையே ரணகளமாகக் காட்சி அளிக்கும். அதற்குக் காரணம் சேர்க்கும் உப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்க் கீறல் போன்றவற்றைச் சரியாகக்கவனிக்காமல் சேர்ப்பதே. உப்பை நீரில் கரைத்தே உப்புச் சீடைக்குச் சேர்க்கவேண்டும். அடுத்துக் கடலைப்பருப்பில் ஒரு தோல் கூட இருக்கவேண்டாம், கல் இருந்தாலும் வெடிக்கும். அதையும் கவனித்துச் சேர்க்கவேண்டும். தேங்காய்க் கீறலில் தேங்காயின் ஓடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதையும் மீறிச் சீடை வெடித்தால் உருண்டையைச் சரியாகப்பிடிக்காமல் ரொம்பவே கையால் வழவழவென்று செய்ததால் இருக்கும். ஆகவே மேலே கொஞ்சம் கரடு, முரடாக இருந்தால் தப்பில்லை.

உருட்டிய சீடைகளை எண்ணெயில் போட்டுவிட்டு (நினைவாக அடுப்பில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கவும்) ஒரு மூடியால் அதை மூடிவிடவேண்டும். நூற்றுக்கு நூறு சதம் வெடிக்காது. பின்பு தட்டை எடுத்துவிட்டுச் சீடைகளைத் திருப்பிப் போடவும். நன்கு வெந்து சத்தம் அடங்கி மேலே மிதந்து வந்ததும், எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். சீடைகள் நன்கு வெந்திருந்தால் கலகலவென்ற சப்தம் வரும்,

வெல்லச் சீடை:

அரிசி மாவு இரண்டு கப், வறுத்த உளுத்த மாவு, ஒரு டேபிள் ஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் நாலைந்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும். நல்ல பாகு வெல்லம் தூளாக்கியது இரண்டு கப், வெல்லம் பாகு வைக்க நீர் அரை கிண்ணம். தொட்டுக்கொள்ள நெய், பொரிக்க சமையல் எண்ணெய்/நெய்

கடாய் அல்லது வெங்கல உருளியில் அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாகு கொதிக்கும் போது வேறொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக்கொண்டு காய்ந்த பாகில் ஒரு துளி விட்டுப்பார்த்தால் அது நீரில் கரையாமல் கையால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அந்தப் பதம் வந்ததும், தேங்காய்க் கீறல்களைச் சேர்த்துவிட்டு, பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி மாவில் விட்டுக் கலக்கவும். மாவு பாகில் நன்கு கலந்து விட்டது என்று நமக்கே புரியும், அந்த நேரம் வரைக்கும் பாகைச் சேர்க்கலாம். பாகு போதும் என்ற அளவு கலந்ததும், மாவில் வறுத்த உளுத்த மாவையும் எள்ளையும் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கரண்டியால் நன்கு கலக்கவும். சற்று நேரம் ஆறவிடவும். பின்பு மாவை எடுத்துக் கையால் உருட்டிப் பார்க்கவும். உருண்டைகளாய் வரும்.

எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைத்து, உருட்டிய உருண்டைகளை ஒன்றிரண்டாய்ப் போட்டுச் சிறு தீயில் பொரிக்கவும். மேலே சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும். ஆறிய பின்பு சாப்பிட்டுப் பார்த்தால் உள்ளே மிருதுவாகவும், மேலே மொறுமொறுப்போடும் இருக்கும். பல நாட்கள் கெடாது. இரண்டு மாதம் கூட இருக்கும். பாகும் நன்றாக அமைந்து நெய்யிலும் பொரித்தால் மாதங்கள் ஆக, ஆக சுவை கூடும்.

Thursday, September 2, 2010

கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதனால் என்ன?? தட்டை எப்போ வேணா சாப்பிடலாமே!

படம் நம்மது இல்லைங்க, இன்னிக்கு ஒருத்தர் கேட்டாங்க, அதனால் கூகிளார் கிட்டே கடன் வாங்கின படம் தான்.
தட்டை செய்முறை.

பொதுவாகத் தட்டையாக இருப்பதால் தட்டை என்றழைக்கப்படும் இதைத் தஞ்சை ஜில்லாவில் தட்டைச் சீடை என்றும், சேலம் பக்கம் தட்டு வடை என்றும் சொல்லப் படுவதுண்டு. செய்முறைகளும் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறினாலும் பொதுவாகத் தேவைப்படுவது அரிசி மாவு.

இரண்டு கப் அரிசி மாவு, (அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊற வைத்துப் பின் வெளியில்மெஷினில் கொடுத்தோ அல்லது, வீட்டிலேயே மிக்சியிலேயோ அரைத்துச் சலித்து வைத்துக்கொள்ளவும்.

உளுந்து மாவு: உளுந்தை வெறும் சட்டியில் சிவப்பாக வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு கப் அரிசி மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு போதும். உளுந்து மாவு அதிகம் போனால் தட்டை கரகரப்பு இருக்காது.

பொட்டுக்கடலை மாவு: இது போட்டால் தான் தட்டை கரகரப்பு இருக்கும். சிலர் போடாமலும் செய்கின்றனர். பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன். பொட்டுக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

உப்பு: தேவையான அளவு

தேங்காய்: பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்.

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்து நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

மிளகாய்ப் பொடி அல்லது மிளகாய் வற்றலை நீரில் ஊற வைத்து அரைத்துக் கொண்டது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப.

பெருங்காயப் பொடி : ஒரு டீஸ்பூன்

நீர் மாவு பிசையத் தேவையான அளவு.

வெண்ணெய் அல்லது நெய், ஒரு டேபிள் ஸ்பூன். இத்தோடு எள் , வேர்க்கடலைப்பருப்பு எல்லாம் சேர்ப்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்து.

பொரிக்க எண்ணெய் கால் கிலோ வானும் தேவைப்படும்.

வெண்ணெயோ நெய்யோ சேர்க்காதவர்கள் பிடிக்காதவர்கள், சமையல் எண்ணெயையே கொஞ்சம் காய வைத்து மாவில் விட்டுக்கலாம்.

அரிசி மாவு, உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவை ஒன்றாய்ச் சேர்த்து உப்புக் கலந்து, காரப்பொடி அல்லது மிளகாய் விழுது, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். எண்ணெய் சேர்ப்பவர்கள் வாணலியில் எண்ணெய் புகை வரும் வரை காய வைத்து மாவில் கொட்டிக் கலக்கவும். இப்போது தேவையான அளவுக்கு நீரைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும். பிசைந்த மாவைச் சிறு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

சற்று நேரம் வைத்திருந்து விட்டுப் பின் அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்து புகை வரும்போது அடுப்பைத் தணித்துவிட்டு, பிசைந்து வைத்த மாவில் உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பதை, ஒரு துணி அல்லது பேப்பரில் தட்டையாக வட்டமாகத் தட்ட வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்குக் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக்கொள்ளவும். தட்டின தட்டையை ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காயந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். ஒரே சமயத்தில் நாலைந்து தட்டைகளைப் போட்டுப் பொரிக்கலாம். முன் கூட்டியே தட்டி வைத்துக்கொள்ளலாம்.

பின்னர் கரகரப்பு மாறாதிருக்கும்படி காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் ஆனாலும் கெடாது.

Friday, August 20, 2010

கொஞ்சம் கை வைத்தியமும் தெரிஞ்சுக்குங்களேன்!

மூல வியாதி இருப்பவர்களுக்கான கை மருந்துகள்.

ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் நெய்யும் எடுத்துக் குழைத்துக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.

ஒரு பூவன்பழத்தை வேகவைத்து நெய், சர்க்கரையோடு சேர்த்து இரவில் படுக்கும்போது தினமும் சாப்பிட்டு வரலாம்.

பாகற்காய்க் கொடியின் இலைகளைப் பறித்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.

சாதம் வடிக்கும் கஞ்சியில் ஒரு சிட்டிகை உப்புப் போட்டுக் குடிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரையின் சாறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மலச்சிக்கல் இருக்கிறவங்க இரவு படுக்கப்போகும்போது நெய் ஒரு ஸ்பூனில் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் குழைத்துச் சாப்பிடணும்.

இந்த மாதிரிக் குழைத்துச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாமே மருந்துகள் என்பதால் நன்கு நாக்கில் படும்படியாக உள்ளங்கையில் வைத்து நக்கிச் சாப்பிடவேண்டும். உமிழ்நீரோடு கலக்கவேண்டும்,

அடுத்து குழந்தைகளுக்கு வயிற்றில் வலி என்றால் அழும் குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டால் வயிறு நம் மீது அமுங்கும்போது கொஞ்சம் அழுகை நிற்கும். அதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பிள்ளை மருந்து என்னும் வசம்பை நெருப்பில் சுட்டுக் கரியாக்கி, நெருப்புன்னா காஸ் அடுப்பெல்லாம் கூடாது. விளக்கு எரியும் இல்லையா அந்தச் சூடில். ஸ்வாமிக்கு ஏத்தும் விளக்கில் கூடச் சுடலாம். நன்கு கறுப்பானதும், அதை எடுத்துப் பொடியாக்கி விளக்கெண்ணெயில் போட்டுக் குழைத்து வயிற்றைச் சுற்றிப் போடலாம்.

வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி மேலே சொன்னாற்போல் நெருப்பில் வாட்டி, பொறுக்கும் சூட்டில் குழந்தையின் வயிற்றில் போடவும். சூடு பார்த்துக்கணும். குழந்தைகளுக்குச் சூடு தாங்காது.

ஓமத்தை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு பாலாடை/சங்கு ஓமத் தண்ணீருக்கு அரைஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். உடனடி நிவாரணம் உத்தரவாதம்.

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது இப்போதெல்லாம் வழக்கமே இல்லாமல் போயாச்சு. அப்படி வழக்கம் இருக்கிறவங்க குழந்தையைக் குளிப்பாட்டும் நாளன்று ஒரு வெற்றிலை, கொஞ்சம் உப்பு, ஒரு இரண்டு பல் பூண்டு, ஓமம் வைத்து அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும். ஒரு சங்கு/பாலாடை இருந்தால் போதும். குழந்தைக்குக் கொடுக்கவும். இது கொடுத்து ஒரு அரை மணி நேரம் ஆகாரம் கொடுக்கக் கூடாது. குழந்தையின் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

பெண்களுக்குப் பருவ வயதில் முகப்பருவா? வேனல் கட்டிகளா? மேலே சொன்ன வசம்பையும், கஸ்தூரி மஞ்சளையும் எடுத்துச் சந்தனக்கல்லில் உரைத்து முகத்தில் தடவிக்கவும். இரவு தினமும் தடவிண்டு காலையில் முகத்தை அலம்பினால் கட்டியோ, பருவோ வந்த அடையாளம் கூட முகத்தில் இருக்காது. சொந்த அநுபவம் உண்டு. அப்படியும் கரும்புள்ளிகள் இருந்தால் குப்பைமேனிக்கீரையோடு, வெற்றிலையும் சேர்த்து அரைத்துச் சாறை முகத்தில் பூசிப் பத்து நிமிஷம் ஊறிவிட்டுக் குளிக்கலாம். இதுவும் சொந்த அநுபவம் உண்டு.

தேங்காய்ப்பாலோடு அல்லது பசும்பால், இல்லாட்டியும் பரவாயில்லை, பாலோடு கசகசாவை ஊறவைத்து அரைத்து முகத்தில் மற்றும் சூரியக் கதிர்கள் படும் இடங்களில் தேய்த்து ஊறிவிட்டுக் குளிக்கலாம். இவை எல்லாமே நம்ம சமையலறையில் கிடைக்கும் பொருட்கள். அவற்றைக் கொண்டே பயன்பெறலாம் இல்லையா?

இவை இன்னும் தொடரும். நடு, நடுவில் வரும்.

Friday, July 2, 2010

அப்பாடா! ஒரு வழியா தவலை வடை பண்ணியாச்சு!


சரி, சரி, இப்போ இந்தப் பொருட்களை எல்லாம் எடுத்து ஊற வைங்க தவலை வடைக்கு.

புழுங்கலரிசி ஒரு கிண்ணம்
பச்சரிசி ஒரு கிண்ணம்
து.பருப்பு ஒரு கிண்ணம்
க.பருப்பு ஒரு கிண்ணம்
உ.பருப்பு முக்கால் கிண்ணம்
பாசிப் பருப்பு அரைக் கிண்ணம்

புழுங்கலரிசியையும், பச்சரிசியையும் நன்னாக் கழுவிட்டுச் சேர்த்து ஊற வைக்கணும்.

கலர் போற துணியைத் தனியா நனைப்போமே அப்படியா?

கடவுளே, துணிக்கும், சமையலுக்கும் என்ன பொருத்தம்னு கேட்கறீங்களோ?


இல்லை தனித்தனியா ஊற வைக்கச் சொன்னியே அதான்!

தனித்தனியா ஊற வைக்கிறது அரைக்கச் செளகரியமா இருக்கும், அதுக்குத் தான். நீங்க தானே அரைக்கப் போறீங்க?

என்ன நானா? எனக்குத் தவலை வடையே வேண்டாம். :P

க்ர்ர்ர்ர்ர்ர் யாரு விட்டா? நீங்க மிக்சியிலே தானே அரைக்கப் போறீங்க? நான் கையாலேயே அரைச்சுப் பண்ணிக் கொடுத்திருக்கேனே?

சரி, சரி, எல்லாம் ஹெட் லெட்டர்! சரி இப்போ ஊற வைச்சாச்சு! அடுத்து என்ன??

படுத்துத் தூங்கணும்!

என்ன??

பின்னே? ஊறவேண்டாமா இரண்டு மணி நேரமாவது! அதுக்குள்ளே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே!

எழுந்திருங்க. மணி மூணாச்சு, அரைச்சு எடுத்துத் தவலை வடையைத் தட்டி எடுக்கணும்! இன்னிக்குனு பார்த்து எனக்கு வீசிங் வேறே ஜாஸ்தியா இருக்கு!

சரி, சரி, அப்போ வடை சாப்பிடாதே!

என்ன??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மிக்சியை எடுத்துக்குங்க. அதோட ஜாரிலே முதல்லே மி.வத்தல் ஆறு, ப.மி. இரண்டு, உப்பு தேவைக்கு ஏற்பச் சேர்த்துட்டுப் பெருங்காயத் தூளும் சேர்த்து ஒரு அடி அடிங்க.

ஹையோ, என்னை அடிக்கச் சொல்லலை, மி.வத்தல் கலவையை மிக்சியிலே அடிக்கணும்! நறநறநறநற நானே அரைச்சுடலாம் இதுக்கு!

அப்பாடா! நிம்மதி! என்ன இருந்தாலும் உன் கையாலே செஞ்சு சாப்பிடற டேஸ்டே தனிதான்.

க்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஐஸா! நகருங்க இத்தனை நேரம் நான் அரைச்சு முடிச்சிருப்பேன்.

மி.வத்தல் கலவையை ஒரு அடி அடிச்சுட்டு அதிலேயே அரிசியைப் போடறியா?

ஆமாம், அரிசியையும் அரைக்கணும், கொஞ்சம் கொர கொரப்பாய்.

அப்புறம்?

அப்புறம் என்ன? பாசிப் பருப்பை மட்டும் களைஞ்சு வடிகட்டி வச்சுட்டு மற்ற து.பருப்பு, க. பருப்புக்களை அரைச்ச அரிசியோடு சேர்த்து அரைக்கணும். இதுவும் கொஞ்சம் கொர கொரப்பாகவே அரைக்கணும்'. உளுந்தை இதோடு சேர்க்கவேண்டாம்.

ம்ம்ம்ம் அப்புறமா??

இப்போ இதைத் தனியா வைச்சுடுங்க.

சரி, சரி கொண்டா, அடுத்து என்ன பண்ணப் போறே?

இப்போ உளுந்தை எடுத்து நல்லா அரைச்சுக் கொட கொடனு எடுக்கணும். வடை மாவு பதத்துக்கு இருக்கட்டும்.


சரி, சரி, அதெல்லாம் உனக்குத் தான் சரியா வரும். நீ தான் வடை தட்டறதிலே நிபுணி ஆச்சே!

பல்லைக் கடிக்கும் சப்தம் மட்டும் சிறிது நேரம்.

அங்கே என்ன சத்தம்??

ஒண்ணுமில்லை, என்னோட பல் அரை படுது!

ஹிஹிஹி, அதுக்குள்ளே மாவாவே திங்க ஆரம்பிச்சிட்டியே?

என்னது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபத்திலே பல் அரைபட்டதிலே அந்த சத்தம் வந்ததாக்கும்.

சரி சரி, உளுந்தை அரைச்சுட்டியா? என்ன பண்ணினே இப்போ?

நீங்களோ செய்யப் போறதில்லை, அப்புறம் எதுக்குச் சொல்லணுமாம்?

அதான் இத்தனை சொல்லிட்டியே? மிச்சமும் சொல்லிடேன் என்ன இப்போ? பேசிண்டே வேலை செஞ்சா உனக்கும் அலுப்புத் தட்டாது பாரு!

இதுக்குக் குறைச்சல் இல்லை. இப்போ அரிசி பருப்பு அரைச்ச கலவையிலே இந்த உளுந்து அரைச்சதைச் சேர்க்கணும். ஊற வைச்சு வடிகட்டி வச்சிருக்கிற பாசிப்பருப்பையும் சேர்க்கணும். ஒரு இரும்புக் கரண்டியிலே தே. எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊத்திக் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளிக்கணும். கருகப்பிலை, கொ,.மல்லி, இஞ்சி, சேர்க்கணும், ஒரு பச்சை மிளகாயை இரண்டாய் வகிர்ந்துட்டு விதைகளை எடுத்துட்டு இதிலே சேர்க்கணும். மாவை நல்லா எல்லாம் சேரும்படிக் கலக்கிக்கணும். 
 
Posted by Picasa


பத்து நிமிஷம் அப்படியே வச்சுட்டு அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கணும். காய்ந்த எண்ணெயிலே ஒரு கரண்டியாலே இந்த மாவை எடுத்துப் போட்டால் குண்டு குண்டாக மேலே மொறு மொறுனும் உள்ளே மிருதுவாகவும் தவலை வடை ரெடி, ரெடி ரெட்டை ரெடி.

தொட்டுக்கத் தேங்காய்ச் சட்டினியோடு சூப்பர் தவலை வடை! என்ன இருந்தாலும் உன் கைவண்ணமே வண்ணம்!


டிஸ்கி: கூகிளாரைக் கேட்டதுக்கு இந்தத் தவலை வடையைக் கொடுத்தார். இன்னிக்கு எங்க வீட்டிலே தவலை வடை பண்ணிட்டுப் படம் எடுத்து நாளைக்கு அதைச் சேர்த்துடறேன். அது வரைக்கும் ஓசியிலே! :P அப்பாடா, தவலை வடை பண்ணி ஒரு மாசத்துக்கப்புறமா ஒரு வழியாப் படங்களைச் சேர்த்தேன். இப்போ எல்லாரும் வந்து பாருங்கப்பா!

Sunday, May 23, 2010

இன்னிக்கு டிபன் யாரோட பொறுப்பு??

சாயங்காலம் ஆச்சா? சூடாக் காபியோடயும், டீயோடயும் சாப்பிடறதுக்கு ஒண்ணுமே இல்லையா?? யாரு பண்ணித் தருவாங்க?? கடையிலே வாங்கியும் எத்தனை நாள் தான் சாப்பிடறது??

வீட்டிலேயே எதானும் பண்ணினால் என்ன??

என்ன பண்ணப் போறே??

தவலை வடை!

என்னது?? தவளை வடையா?? ஐயய்யோ! நீ எப்போ இதெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சே?

க்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒண்ணும் அதெல்லாம் சாப்பிடறதில்லை. தவளை இல்லை, தவலை. இந்த மழை பெய்ஞ்சாலும் பெய்ஞ்சது, தவளைங்க போடற சத்தத்திலே...............

ஹிஹிஹி, தவலை?? யு மீன் வெந்நீர்த் தவலை? அதன் அடிப்பாகம் கறுப்பாவே வச்சிருப்பயே, அப்படி ஒரு வடை?? வேண்டாம்பா ஆளை விடு. எனக்குப் பசியே இல்லை.

இதை நீங்கதான் பண்ணப் போறீங்க??

என்னது நானா???

ஆமாம், நீங்களே தான்! பண்ணுங்க, அப்போத் தான் தெரியும் சமைக்கிறது அவ்வளவு ஒண்ணும் சுலபம் இல்லைனு!

Wednesday, April 21, 2010

ஒழுங்காவே கத்துக்கறதில்லையா யாரும்???

அரைச்சுச் செய்யற புளி உப்புமா பத்திப் பார்க்கிறதுக்கு முன்னே ஒரு கேள்வி, எட்டுப் பேர் தொடர்ந்து வரீங்க? யாரானும் செய்து பார்த்தீங்களா இல்லையா? பதிலே இல்லாமல் இருந்தால் ஒழுங்காப் படிச்சீங்களா இல்லையானு நான் எப்படித் தெரிஞ்சுக்கறது? இனிமேலே கொஞ்சம் ஒழுங்கா வகுப்பைக் கவனிச்சுப் பின்னூட்டம் போடுங்க.

அரைக்கத் தேவையான பொருட்கள்: பச்சரிசி ஆழாக்கு(சுமார் 250 கி) அல்லது ஒரு கப், மி.வத்தல் 4 அல்லது 6 அவங்க காரத் தேவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயம், பச்சரிசியை ஒரு இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கணும். அப்புறம் மிக்சியில் (இப்போ கல்லுரல், ஆட்டுக்கல் எல்லாத்துக்கும் எங்கே போறது? இருந்தாலும் தான் ரங்க்ஸ் தலையில் போட்டுடறாங்க போல!) அதனாலே பார்த்தாலே ரங்க்ஸ் பயந்துக்கப் போறார். மிக்சியில் எல்லாத்தையும் போட்டு நல்லா அரைங்க. கெட்டியா அரைச்சுக்கணும்.

அடுத்துத் தாளிக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம், கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுக் கருகப்பிலையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் சேர்ப்பதானால், பொடிப் பொடியாக நறுக்கின வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். அரைச்சு வைச்ச விழுதை இதில் போட்டு நல்லா உதிர் உதிரா வர வரைக்கும் கிளறவும். இது ருசி தனியா இருக்கும். அடுத்து முதல்நாளே புளி சேர்க்காமல் மற்ற சாமான்களைப் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு, மறுநாள் இதேபோல் தாளிதம் செய்து கிளறலாம். இது ருசி தனியா இருக்கும். மூன்று முறைகளும் செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. அடுத்து மோர்க்கூழ் பார்க்கலாம்.

Saturday, April 10, 2010

புளி உப்புமா சாப்பிட வாங்க!

ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சு இந்தப் பக்கம் வந்து. அதுக்காகச் சமைக்கவே இல்லைனு நினைச்சுடாதீங்க. வீட்டிலே நாமதான் சமைச்சாகணும். ரங்க்ஸ் சமைப்பார்தான், ஆனால் சாப்பிடத் தான் ஆள் தேடணும்! ஒரு சாம்பார் வைப்பார் பாருங்க. அதிலே மேலே தெளிவா எடுத்து ரசம்னு விடுவார், அடியிலே சாம்பார், அதிலும் அடியிலே காய்கள் எல்லாம் இருக்கும், அதைக் கூட்டாய் வைச்சுக்கணும்! :P போதுண்டா சாமினு முடியலைனாக் கூட நானே சமைச்சுடுறது தான் வழக்கம். ஒரு நாளிலேயே வெங்கலக்கடையிலே ஆனை புகுந்தாப்போல எல்லாம் தலைகீழாப் போயிடும். மறுநாள் புதுசாக் கல்யாணம் ஆகி வந்த பொண்ணு மாதிரி உப்பு எங்கே வச்சீங்க? புளி எங்கே? அடுப்பையே காணோமேனு கேட்கணும்.

நேத்திக்குப் பக்கத்து ஃப்ளாட்டில் காலம்பர டிபன் பண்ணிட்டு இருந்தாங்க போல. எப்படித் தெரியும்னு கேட்கறீங்களா?? துணி துவைச்சுட்டு இருந்தேன். பக்கத்து ஃப்ளாட் தான் எங்க வீட்டிலே இருந்து தொட்டுவிடும் தூரம் தானே? அங்கே அந்த வீட்டுத் தங்க்ஸ் புளி உப்புமா பண்ணவா? மோர்க்கூழ் பண்ணவானு கேட்டுட்டு இருந்தாங்க. அவங்க ரங்க்ஸ் எது பண்ணினாலும் அதிலே நாலு மோர்மிளகாய் வறுத்துப் போடுனு சொல்லிட்டு இருந்தார். இங்கே எனக்குச் சாப்பிடணும்போல ஆசை வந்துடுச்சு. எங்கே மோர் மிளகாயே வறுக்க முடியாது வீட்டிலே. அப்புறமா வீசிங் என்னை வறுத்துடும். :( அம்மா வீட்டிலே இருக்கும் வரைக்கும் அப்பா வெளி ஊருக்குப் போகறச்சே தான் இதெல்லாம் பண்ணுவாங்க அம்மா. அப்பாவுக்குப் பிடிக்காது. இதெல்லாம் ஒரு டிபனாம்பார். யாருங்க அங்கே, செய்முறை சொல்லாமப் பேசிட்டே இருக்கேனு கோவிக்கிறது? இதோ வந்துட்டேன்.

முதல்லே புளி உப்புமா: இரண்டு, மூன்று விதம் இருக்கு இதிலே. எல்லாத்தையும் சொல்லிடறேன். உங்க செளகரியம் போல் செய்துக்கலாம்.

முதல்முறை: உங்க ரங்க்ஸுக்குப் பிடிக்காது புளி உப்புமா. இன்னிக்கு அவருக்கு ஆப்பீச்ச்சிலே டிபன் கொடுத்துடுவாங்க. நீங்க மட்டுமே வீட்டில். கேட்கணுமா?? எஞ்சாய்!!! இதுக்கு அவசரப் புளி உப்புமா தான் சரி. அரிசி மாவு ஒரு கப் எடுத்துக்குங்க. வெங்காயம் பிடிக்கும்னால் ஒரு வெங்காயம்(பெரியது) பொடிப் பொடியாய் நறுக்கிக்கணும். மி.வத்தல், (இதுக்கு மி.வத்தல் தான் நல்லா இருக்கும்.) நாலு, உப்பு, கருகப்பிலை, பெருங்காயப் பொடி, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, நல்லெண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சு வைச்சுக்கவும். கரைச்சு வச்ச புளி ஜலத்தில் அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். உப்பையும் சேர்த்தே கலக்கவும். மாவு நல்லாக் கெட்டியா வர வரைக்கும் சேர்த்து உருண்டையாப் பந்து போல் வந்ததும் கொஞ்ச நேரம் வைக்கவும். இரும்பு வாணலி இருந்தால் நல்லது. இல்லாட்டி ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைத்துக் கடுகு, உ.பருப்பு தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் போடவும். மி.வத்தலைக் கிள்ளிச்(ரங்க்ஸைக் கிள்ளறாப்போல் நினைச்சுக்கலாம்)சேர்க்கவும். வெங்காயம் சேர்ப்பதாய் இருந்தால் இப்போச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், பிசைந்து வைத்த அரிசிமாவுக்கலவை இதில் போட்டுக் கைவிடாமல் கிளறவும். எண்ணெய் தேவையா என்னனு உங்களுக்கே கிளறும்போது புரிஞ்சுடும். உதிரியாக வந்ததும் எடுத்துச் சூடாகச் சாப்பிடவும்.


இது ஒரு பாரம்பரிய உணவு. இப்போ மிகச் சில வீடுகளிலேயே செய்யறாங்க. அடுத்து இதையே அரைச்சுச் செய்யறதைப் பார்ப்போம்.