எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 4, 2021

ரொம்ப நாள் கழிச்சு ஒரு திப்பிசத்தோடு வரேன்.!

இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால் வலி/குடும்பப் பிரச்னைகள்/மனச்சோர்வு/மறுபடி கால் வலி/வீக்கம்/படுக்கைனு ஆகிவிட்டது. இப்போக் கொஞ்ச நாட்களாகப் பரவாயில்லை என்றாலும் அதிக நேரம் உட்கார்ந்தால் காலில் லேசாக வீங்க ஆரம்பிக்கிறது. ஆகவே கொஞ்சம் பயமாகவும் இருக்கு. என்றாலும் இன்னிக்குக் கட்டாயமாய் இங்கே வந்தாவது பார்க்கணும்னு வந்துட்டேன். இப்போதைக்குப் புதுசா எதுவும் போடலை. ஆனால் இரண்டு நாட்கள் முன்னர் செய்த ஒரு திப்பிச வேலையைப் பத்தி மட்டும் சொல்லிட்டுப் போயிடறேன்.

நான் எப்போவுமே எதுவும் வீணாகாதபடிக்குக் கொஞ்சமாச் சமைச்சாலும் சில/பல சமயங்கள் மிஞ்சத் தான் செய்கிறது. போன வாரம் ஞாயிறன்று அவரைக்காய் போட்டு சாம்பார் வைத்திருந்தேன். எப்போதும் வைப்பதை விடக் கொஞ்சமாக வைத்திருந்தாலும் அது என்னமோ மிஞ்சி விட்டது. அதை அப்படியே வைச்சுச் சூடு பண்ணி விட்டு எடுத்து வைச்சுட்டேன். மறுநாள் என்ன சமைப்பது என வழக்கமான மண்டை காய்தல். யோசிச்சேன். நம்ம ரங்க்ஸ் கேட்டார் என்ன சமையல்னு! நேத்திக்கு சாம்பார் தான்னு சொல்லிட்டேன். அதை அப்படியே வைச்சுச் சாப்பிடவும் யோசனை. ஆகவே இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கிக் கொண்டேன். சின்ன வெங்காயம் இருந்தாலும் அதை உரிச்சு, வதக்கி வேக வைக்க நேரம் எடுக்குமே! கொஞ்சமாய் நீர்ப்புளிக் கரைசல் அரைக்கிண்ணம். ஒரு மி.வத்தல், ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, வெந்தயம் அரை டீஸ்பூன், சின்னத் துண்டு லவங்கம், ஏலக்காய் ஒன்று,தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொண்டேன்.  அரைக்கரண்டி பருப்பைக் குழைய வேக வைத்துக் கொண்டேன்.

கல்சட்டியைப் போட்டுத் தேங்காய் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொண்டு நீர்ப்புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். பின்னர் நேற்றைய சாம்பாரை அதில் சேர்த்துக் கொண்டேன். நன்றாகக் கொதிக்க வைத்தேன். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கும்போதே சமைத்த சாதத்தோடு குழைந்த பருப்பையும் சேர்த்துக் கலந்து கொண்டேன். தளதளவெனக் கொதித்தது. நல்ல வாசனையும் வந்தது.  பின்னர் இரும்புக்கரண்டியில் நெய்யைத் தாராளமாக ஊற்றிக் கொண்டூ கடுகு மட்டும் போட்டுப் பாதி மி.வற்றல், கருகப்பிலை, பெருங்காயத் தூள் போட்டுத் தாளித்துச் சாதத்தில் விட்டுக் கலக்கிவிட்டுக் கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தேன். சாம்பார் சாதம் தயார். ரசம் வைத்துவிட்டுப் பாகற்காயை வதக்கிவிட்டு அது போறாதோனு சந்தேகத்தில் இரண்டு அப்பளங்களும் பொரித்து எடுத்துக்கொண்டு அன்னிக்குப் பாட்டை ஒப்பேத்தியாச்சு. இதே போல் வத்தக் குழம்பு மிஞ்சினால் புளியஞ்சாதம் மாதிரி மாற்றலாம். அதைப் பின்னர் பார்ப்போமா? அன்னைக்கு என்னமோ உடம்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்ததால் படங்கள் எல்லாம் எடுத்துப் போடலை. ஆனால் புதிதாகச் செய்யும் சாம்பார் சாதம் போலவே அமைந்திருந்தது. இன்னொரு முறை இந்தத் திப்பிசம்பண்ணும்போது படங்கள் மட்டும் எடுத்துப் போடறேன்.

Sunday, March 21, 2021

தக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு!

ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோடு பதிந்திருக்கிறேன். இதுவும் எங்கள் ப்ளாகில் ஒரு "திங்க"ற கிழமைக்கு வந்ததே! சுட்டி கீழே!

எங்கள் ப்ளாக்

தக்காளி சாதம். ராகேஷ் ரகுநாதன் செய்முறையில். ஒரு சில மாற்றங்கள் உண்டு.

பொதுவாகத் தக்காளி சாதம் நான் எப்படிப் பண்ணி இருக்கேன் எனில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கிக் கொண்டு அதில் சாம்பார்ப் பொடி, உப்புச் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்துச் சமைத்த சாதத்தில் இந்த தக்காளி மசாலாவுக்குத் தேவையானதைப் போட்டுக் கலந்து விடுவேன்.


இன்னொரு முறையில் தக்காளியை மட்டும் வதக்கிக் கொண்டு அதற்குப் பச்சை மிளகாய், காரப்பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சம் போல் கரம் மசாலா அல்லது ஏலக்காய், கிராம்பு தாளித்துக் கொண்டும் பண்ணி இருக்கேன். இதிலும் கொத்துமல்லி, புதினா இலைகள் சேர்ப்பேன். பல ஆண்டுகள் முன்னர் என் மாமி தேங்காய்ப் பாலும், தக்காளி+வெங்காயம்+பூண்டை அரைத்துக் கொண்ட மசாலாவை நன்கு வதக்கியும் தேவைப்பட்ட மசாலா சாமான்கள் தாளிதத்தில் சேர்த்து பாஸ்மதி அரிசியை ஊற வைத்து அதில் சேர்த்து உப்புச் சேர்த்துக் குக்கரில் வைத்திருந்தார். அதுவும் நன்றாக இருந்தது. ஆனாலும் நான் அப்படிப் பண்ணவே இல்லை. இப்போ சமீபத்தில் நம்ம ரங்க்ஸ் ராகேஷ் ரகுநாதனின் வீடியோவைப் பார்த்துட்டு இந்த மாதிரித் தக்காளிச் சாதம் ஒரு நாள் பண்ணு என்றார்.


சரினு நேற்றுப் பண்ணினேன். அதற்குத் தேவையான பொருட்கள்.

பாஸ்மதி அரிசி ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம்

தக்காளி இரண்டை எடுத்துக் கழுவி அதன் கண்ணை எடுத்துவிட்டுப்பின்னர் வெந்நீரில் ப்ளாஞ்சிங் செய்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தோலை உரித்துக் கொண்டு தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடித்துச் சாறாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு தக்காளித்துண்டுகள் மசியலைனாப் பரவாயில்லை.  எடுத்த தக்காளிச் சாறு கீழுள்ள படத்தில்/தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசி ரொம்பவும தண்ணீர் தாங்காது என்பதால் ஒரு கிண்ணத்துக்குள்ளாகத் தேங்காய்ப் பால் இருக்கட்டும். ஆதலால் தேங்காய் கொஞ்சமாகவே இருக்கட்டும். நான் சின்னதாக ஒரு பாதி மூடி எடுத்துக் கொண்டேன். வெங்காயம் ஒன்று நறுக்கிக் கொள்ளவும்.  பச்சை மிளகாய்.


இங்கே ஒரு வெங்காயம் நறுக்கி வைச்சிருக்கேன். தேங்காய்ப் பால் எடுக்கத் தேங்காய், நறுக்கிய பச்சை மிளகாய், ப்ளாஞ்சிங் செய்திருக்கும் தக்காளிகள், பாத்திரத்தில் ஊறும் அரிசி ஆகியவை மேலே காணலாம்.

இஞ்சி தேவையானால் ஒரு சின்னத் துண்டு. பூண்டு சேர்ப்பவர்கள் இஞ்சியையும், பூண்டையும் சிதைத்துக் கொள்ளவும். \

கொத்துமல்லி, புதினா இலைகள் பொடியாக நறுக்கியது வகைக்கு ஒரு மேஜைக்கரண்டி. என்னிடம் புதினா இல்லை என்பதால் கொத்துமல்லி மட்டும் கடைசியில் தூவினேன். வதக்கும்போது சேர்க்கலை.


தாளிக்க எண்ணெயும் நெய்யுமாக ஒரு மேஜைக்கரண்டி


ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, தேஜ்பத்தா என்னும் மசாலா இலை. இதில் கிராம்பு ராகேஷ் சேர்க்கலை. அதே போல் சோம்பு, ஜீரகமும் சேர்க்கலை. நான் இவை சேர்த்தேன்.  பச்சை மிளகாயையும் இஞ்சியையும் போட்டு வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கினேன்.


மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி(காரமாக இருப்பதால் கொஞ்சமாகப் போட்டேன்._


ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி

அரைத்தேக்கரண்டி மஞ்சச்ள் பொடி (கரம் மசாலாப் பொடி தேவையானால் சேர்க்கலாம். நான் சேர்க்கலை) கொத்துமல்லி, புதினா இலைகளை வெங்காயம் வதக்கினதும் சேர்க்கிறாங்க. அது உங்களுக்குப் பிடித்தால் சேர்க்கலாம். நான் சேர்க்கலை. வெங்காயம் வதங்கியதும் தக்காளிச் சாறைச் சேர்த்தேன். அதில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி சேர்த்துத் தக்காளி ப்யூரியை நன்கு சுண்டும்படி கொதிக்க விட்டேன். கொதித்துச் சேர்ந்து வரும்போது மேலே எண்ணெய் பிரியும்.சுண்ட வைச்ச தக்காளி ப்யூரி கலவை


ஊற வைத்த அரிசியோடு காய்ந்த பட்டாணி ஊற வைச்சு அரைவேக்காடாக எடுத்துச் சேர்த்து வைச்சிருக்கேன்.மேலே சொன்ன கலவையில் ஒரு கிண்ணம் தேங்காய்ப் பால் சேர்த்தது மேலே காணும் படத்தில்வதக்கிய தக்காளிச் சாறுக் கலவையைத் தேங்காய்ப் பால்+பட்டாணீ+அரிசி சேர்த்த கலவையில் போட்டு ஒரு தரம் நன்கு கலந்து விட்டு ) அரிசி உடையக் கூடாது) உப்புத் தேவையானதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி வெயிட் போட்டேன். ஒரே ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்தேன். குக்கர் திறக்க வந்ததும் சாதம் தயார். மேலே கொத்துமல்லிதூவி விட்டு வெங்காயப் பச்சடி,காரட் சாலட் ஆகியவற்றோடு சாப்பிட்டோம்.


வெந்த சாதம் குக்கரில்.  பாஸ்மதி அரிசியை குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைத்துவிட்டுப் பின்னர் சமைத்தால் அரிசி நீளமாகவும், மிருதுவாகவும் வேகும்.பொதுவாக வெந்நீர் கொதிக்கவிட்டு ஒரு கிண்ணம் சேர்ப்பது உண்டு. ஆனால் இதில் தேங்காய்ப் பால் சேர்ப்பதால் ஒரு கொதி விட்ட பின்னர் குக்கரை மூடுகிறோம். சாதம் மிருதுவாகவே இருக்கும். 

Saturday, March 20, 2021

மடர் பனீர்/ஜெயின் செய்முறை!

எங்கள் ப்ளாக் எங்கள் ப்ளாகில் "திங்க"ற கிழமைக்குப் போட்ட பதிவு இது! இங்கேயும் ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு போட்டேன்.

கொஞ்ச நாட்களாக வெங்காயம் அலர்ஜியாக ஆகி விட்டது. சாப்பிடுவோம். இல்லைனு சொல்லலை. இப்போ மாமியார் ஸ்ராத்தம் வந்தப்போ அதுக்காகப் பத்து நாட்கள் முன்னர் வெங்காயம், பூண்டு, மசாலாக்களை நிறுத்தியதில் இருந்து அந்தப் பழக்கத்திலேயே இருக்கோம். இன்னும் மாற்றவில்லை. கிராம்பு, ஏலக்காய் மட்டும் மசாலா சாமான்கள் போடும் இடத்தில் சேர்த்துப் பண்ணுகிறேன். அந்தச் சமயம் மடர் பனீர் வெங்காயம், பூண்டு இல்லாமல் பண்ணினேன். அதை இங்கே பகிர்கிறேன்.


பொதுவாகக் காய்ந்த பட்டாணியில் மடர் பனீர் அதிகம் பண்ணினாலும் இப்போப் பட்டாணிக்கான பருவம் என்பதால் பச்சைப் பட்டாணி கிலோ 40 ரூபாய் விலையில் கிடைப்பதால் அதை வாங்கி உரித்து வைத்துக் கொள்கிறோம். இந்த மடர் பனீர் செய்வதற்குத் தேவையான சாமான்கள்.


பச்சைப் பட்டாணி ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். உரித்துக்கழுவி வெந்நீரில் போட்டு வைக்கவும்.தக்காளி  4, பனீர் சுமார் 100 கிராம் அளவுக்கு. எடுத்துக் கழுவித் துண்டங்களாக்கி வைக்கவும்.


இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா (இருந்தால்) இஞ்சி/பச்சை மிளகாய் அவசியம். மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவிக் கொள்ளலாம். அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.தக்காளியை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டுப் பின்னர் தோலை உரித்துக் கொண்டு மிக்சியில் போட்டுச் சாறாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது இரண்டு தக்காளியை மட்டும் நறுக்கிக் கொண்டு இரண்டு தக்காளியை ப்யூரியாக மேற்சொன்ன முறையில் எடுத்துக்கலாம். இப்போது அடுப்பில் குக்கர், கடாய் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு ஒரு மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய்/வெண்ணெய்/நெய் ஏதானும் ஒன்றை விட்டுக் கொள்ளவும். 
குக்கரில் எண்ணெய் வைத்திருக்கேன். நான் பண்ணிய அன்று ச்ராத்தம் முடிந்து விட்டதால் சோம்பு, ஜீரகம், லவங்கப்பட்டை சின்னத்துண்டு, மிளகு முழுதாக நாலைந்து, பச்சை ஏலக்காய், கிராம்பு வகைக்கு ஒன்று. கறுப்பு ஏலக்காய் இருந்தாலும் போடலாம். வாசனை தூக்கும். நம்மவருக்குப் பிடிப்பதில்லை.பின்னர் பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.பின்னர் நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போடவும். ப்யூரி எடுத்திருந்தால் அதைத் தனியாக வைக்கவும். பின்னர் சேர்க்கலாம். எனக்கு எல்லாம் போட்டால் அதிகம் ஆகிவிடும் என்பதால் தக்காளித்துண்டங்களை மட்டும் போட்டு நன்கு வதக்கினேன். தக்காளி வதங்கியதும் அதிலே மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி, தனியாத்தூள் ஒரு தேக்கரண்டி, கரம் மசாலா கால் தேக்கரண்டி, ஜீரகப் பொடி கால் தேக்கரண்டி செர்த்து நன்கு வதக்கினேன். ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்தேன். தக்காளி நன்கு வெந்து குழையும் வரை வதக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு கிண்ணம் நீரைச் சேர்த்துத் தக்காளியை  வதக்க/வேக விடலாம்.


தக்காளி சேர்ந்து கொதித்து வரும்போது பச்சைப்பட்டாணியைச் சேர்க்கவும். ப்யூரி எடுத்திருந்தால் இப்போது நீருக்குப் பதிலாக அதைச் சேர்க்கவும்.
பட்டாணியைச் சேர்த்ததும் தேவையான உப்பைப் போட்டுக்குக்கரை மூடவும். அது தயார் ஆவதற்குள்ளாக நறுக்கி வைத்திருக்கும் பனீர்த் துண்டங்களைக் கடாயில் நெய்யை விட்டுப் பிரட்டிக் கொள்ளவும். இரு பக்கமும் ப்ரவுன் நிறமாக வந்ததும் அடுப்பை அணைக்கவும். அதிகம் இருந்தால் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.

குக்கரில் இரண்டு விசில் கொடுத்தால் போதும். பின்னர் குக்கர் தானாக ப்ரஷர் குறைந்ததும் திறந்து வறுத்த பனீர்த்துண்டங்களைச் சேர்க்கவும். கொத்துமல்லி, புதினாப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். ஒரு சிலர் தக்காளி வதக்கும்போதே கொத்துமல்லி, புதினாவையும் போட்டு வதக்கிச் சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம்.
ஜெயின் மதத்தவர் பொதுவாக பூமிக்கு அடியில் விளைபனவற்றைச் சாப்பிட மாட்டார்கள். ஆகவே அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, காரட், முள்ளங்கி, பீட்ரூட், போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் காய்கள், கிழங்குகள் சேர்க்காமல் பண்ணுவதால் இதை ஜெயின் முறையிலான உணவு என்கிறோம். நாங்க பொதுவாக உருளைக்கிழங்கு வேகவைத்துப்பண்ணும் காரக் கூட்டே சப்பாத்திக்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் இப்படி ஜெயின் முறையில் பண்ணுவோம். அமாவாசை, விரத நாட்கள், மாதப் பிறப்பு, புண்யகாலம் போன்ற தர்ப்பண தினங்களில் சப்பாத்தியை இரவுக்கு எனத் தேர்வு செய்தால் இம்மாதிரித் தயார் செய்து சாப்பிடலாம்.


Friday, March 19, 2021

அறிவிப்பு!

விரைவில் எதிர்பார்க்கவும். சமையல்  பதிவுகளை! 

Thursday, February 18, 2021

பச்சை மஞ்சள் தொக்குச் சாப்பிட்டுப் பாருங்க!

 நாங்க முதல் முதல் அம்பேரிக்கா போயிருந்தப்போப் பையர் பச்சை மஞ்சள் ஊறுகாய் வாங்கி வைச்சிருந்தார், அங்கே கிடைத்த ஆலு (உ.கி.) பராத்தாவோட சாப்பிட நன்றாக இருந்தது. ஒரு மாதிரியா எப்படிப் போட்டிருப்பாங்கனு புரிஞ்சு இங்கே வந்ததும் அநேகமா ஒவ்வொரு வருஷமும் சங்கராந்திக்கு வாங்கும் மஞ்சள் கிழங்கில் போட்டுப் பார்ப்பேன். உடனடியாகச் செலவும் செய்துடுவேன். இப்போத் தான் சமீபத்தில்  இந்த மஞ்சள் தொக்கு பற்றித் தெரிய வந்தது. இதுக்குத் தேவையான பொருட்கள்பச்சை மஞ்சள் கால் கிலோ /தோல் சீவிக்கொண்டு துருவிக் கொள்ளவும்.நல்லெண்ணெய் கால் கிலோ

மிளகாய்ப் பொடி ஒரு மேஜைக்கரண்டி

உப்பு தேவைக்கு

பெருங்காயப் பொடி ஒரு தேக்கரண்டி

கடுகு தாளிக்க இரண்டு தேக்கரண்டி


வறுத்துப் பொடிக்க

மி.வத்தல் சுமார் 25 (காரம் அதிகம் உள்ள மிளகாய் எனில் 10,15 போதும்.) நான் காரப்பொடி தான் உபயோகித்தேன். 

காரப்பொடி எனில் காரமாக இருந்தால் 5 தேக்கரண்டி. காரம் இல்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி

 மிளகாய் வற்றலை வறுத்துப் பொடிக்கவில்லை எனில் ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.வறுத்துப் பொடித்த வெந்தயம், கடுகுப்பொடி. இது ஊறுகாய் விரைவில் வீணாகாமல் இருக்கப் போடுகிறோம். இதுக்கு மஞ்சள் பொடி தேவை இல்லை. கடைசியில் எலுமிச்சைச் சாறு சுமாராக 3,4 பழங்களின் சாறு தேவைப்படும். நல்ல சாறுள்ள பழம் எனில் 3 போதும். நான் 3 பழங்களின் சாறைத்தான் பிழிந்து சேர்த்தேன்.

மஞ்சளைத் துருவிக் கொண்டு அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகைப் போட்டுப் பொரிந்ததும் பெருங்காயப் பவுடரைச் சேர்க்கவும். துருவிய மஞ்சளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் மஞ்சள் வதங்க வேண்டும். பின்னர் அதில் தேவையான உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும். மிளகாய் வற்றலைக் கடுகு, வெந்தயத்தோடு சேர்த்து வறுத்துப் பொடித்து வைத்திருந்தால் அதைச் சேர்க்கலாம். நான் கடுகு, வெந்தயப் பொடி மட்டும் சேர்த்துத் தயார் செய்து வைத்ததால் மஞ்சள் துருவல் கொஞ்சம் வதங்கியதும் உப்பு, மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறினேன். அது கொஞ்சம் வதங்கியதும் கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டுப் பின்னர் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தேன். பின்னர் எண்ணெய் பிரியும் வரை வதக்கிப் பின் ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கலாம். சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம், ருசியைப் பொறுத்தது. சின்னக் கட்டி வெல்லம் எலுமிச்சைச் சாறைச் சேர்க்கும்போது போடலாம். வெல்லம் நன்கு கரையும் வரை வதக்கிய பின்னர் ஆற வைத்து எடுத்து வைக்கவும். இதற்கு வினிகர் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை இல்லை. மஞ்சளைப் பொடியாக நறுக்கியும் ஊறுகாய் போடலாம்.அதை நாளை போட்டுப் பின்னர் பகிர்கிறேன்.ஊறுகாய் தயார் நிலையில். கொஞ்சம் காரம். ஏனெனில் நான் வாங்கிய மிளகாய்த்தூள் கொஞ்சம் காரமானதாகவே இருக்கிறது. ஆகவே ருசி பார்த்த பின்னர் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறி வைத்தேன்.  மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருந்தது. இதைச் சப்பாத்தி, தேப்லா, பராத்தா போன்றவற்றுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Saturday, February 13, 2021

உருளைக்கிழங்கும், குடமிளகாயும் சேர்ந்த கறி சாப்பிட வாங்க!

எப்படியோ இந்த வலைப்பக்கமும் அடிக்கடி வரமுடியாமல் போகிறது. இப்போல்லாம் என்னவோ ஏதோ ஒரு காரணத்தால் மத்தியானம் சாப்பிட்டு வேலைகளை முடித்துக்கொண்டு உட்காரும்போதே ஒரு மணி ஒன்றரைமணினு ஆகிவிடுவதால் அதிகம் நேரம் செலவு செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் இனியாவது தொடர்ந்து எழுத நினைப்பேன். முடியாமல் போகிறது. 

சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளக் குடைமிளகாயோடு உருளைக்கிழங்கைப் போட்டுக் கறி பண்ணுவோம். அதிலே சில மாற்றங்களோடு கூடிய ஒரு முறையை இங்கே பகிர்கிறேன். சென்ற வாரம் பண்ணினேன். படமெல்லாம் எடுக்கவில்லை. இந்த முறை வட மாநிலங்களில் அடிக்கடி பண்ணுவார்கள், ஒரே மாதிரியான ருசியாக இல்லாமல் மாற்றி மாற்றிப் பண்ணினால் ஓர் ருசி வரும் என்பதற்காகப் பண்ணுவது தான் இது. மற்றபடி அடிப்படை ஒன்றே. இதில் கொஞ்சம் மசாலாக்களை மாற்றிச் சேர்க்க வேண்டும். அவ்வளவே!

 ஜீரகம் ஒன்றரை தேக்கரண்டி,

 மிளகு ஒரு தேக்கரண்டி, 

2 ஏலக்காய், சோம்பு அரைத் தேக்கரண்டி, 

புதினா இலைகள் காய வைத்தவை பொடித்தது ஒரு தேக்கரண்டி, 

கறுப்பு உப்பு ஒரு தேக்கரண்டி, 

தனியாப் பொடி, இரண்டு தேக்கரண்டி, 

அம்சூர் பவுடர் ஒரு தேக்கரண்டி, 

கரம் மசாலா ஒரு தேக்கரண்டி

இவற்றில் ஜீரகம், மிளகு,ஏலக்காய், சோம்பு, புதினா இலைகள் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு மற்றப் பொருட்களையும் சேர்த்துக் கொண்டு மிக்சி ஜாரில் பொடி பண்ணிக் கொள்ளவும். இந்த மசாலாக் கலவை தான் இந்த உணவின் தனிச் சிறப்பு. இப்போது காய்களை நறுக்கிக் கொள்ளலாம்.

குடமிளகாய் இரண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நடுத்தரமான உருளைக்கிழங்கு இரண்டு. நன்கு கழுவித் தோல் சீவிட்டுப் பின்னர் துண்டங்கள் ஆக்கிக் கொள்ளவும். 

தக்காளி நடுத்தரமான அளவில் 2 பொடியாக நறுக்கவும்

பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கவும்

கொத்துமல்லித் தழை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்

ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், அரைத்தேக்கரண்டி மஞ்சள் தூள்

உப்பு தேவைக்கு, ஏற்கெனவே மசாலாப் பொடியில் கறுப்பு உப்பு சேர்த்திருப்பதால் உப்பைப் பார்த்துப் போடணும்.

தாளிக்க, வதக்க எண்ணெய், பெருங்காயம் ஒரு தேக்கரண்டி, ஓமம் ஒரு தேக்கரண்டி தாளிக்க

இணையத்தில் தேடினாலும் இந்தச் செய்முறை கிடைக்கும். நான் டாடா உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் அடிக்கடி பார்ப்பேன். 

எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாயை வைத்துக் கொண்டு எண்ணெயைக் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் ஓமம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்த கையோடு நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து உருளைக்கிழங்கு முழுவதிலும் கலக்கும்படி வதக்கிக் கொள்ளவும். இப்போது நறுக்கிய தக்காளிப் பழங்களைச் சேர்த்துத் தக்காளி நன்கு வதங்கும் வரையிலும் வதக்கவும். உப்புத் தேவையானால் இப்போது கொஞ்சமாகச் சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் குடமிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து நாம் ஏற்கெனவே பொடி செய்து வைத்திருக்கும் மசாலாப் பொடியில் தேவையான அளவுக்கு இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குடமிளகாய்த் துண்டங்கள் நன்கு வெந்து மசாஆவில் கலக்கும் வரைக்கும் வதக்கவும். ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்தும் வதக்கலாம். எல்லாம் நன்கு கலந்த பின்னர் பொடியாக நறுக்கியக் கொத்துமல்லித் தழைகளைத் தூவி விட்டு ஒரு தேக்கரண்டி கசூரி மேத்தியைக் கைகளால் கசக்கிச் சேர்க்கவும். பின்னர் நன்கு கலந்ததும் ஃபுல்கா ரொட்டி, பராத்தா ஆகியவற்றோடு பரிமாறலாம்.

பிரபல ஓட்டல்களில் செய்யும் சுவையுடன் அமைந்திருக்கும். 


Sunday, January 17, 2021

திடீர்னு ஒரு பனீர் புலவு! :)

 சென்ற வாரம் ஸ்ராத்தத்தின் போது வாங்கி வந்த காய்கள் நேற்று வரை வந்து விட்டன! இன்னிக்குக் காய் இல்லை.  கொஞ்சம் போல் காரட்டுகளும் ஒரு கைப்பிடி அவரைக்காயும் தான் இருந்தது. நம்மவருக்கு உடனே குஷி வந்துடுமே. நான் போய்க் காய்களெல்லாம் வாங்கிண்டு அப்படியே மத்தியானத்துக்குக் குழம்பு, ரசம், கறி, கூட்டும் வாங்கிடறேன். நீ சாதம் மட்டும் வை! நேத்திக்கே கை வலினு சொன்னியே! இன்னிக்குச் சமைக்க வேண்டாம்னு சொல்ல எனக்குள் உத்வேகம். பின்னே? நான் சமைக்கிறேன். நீங்க ஒண்ணும் போய் அலைய வேண்டாம் என்று பெரிய முட்டுக்கட்டையாய்ப் போட்டேன். இன்னிக்கே சந்தைக்குக் காய்கள் எல்லாம் வந்திருக்காது. நாளையிலிருந்து தான் வழக்கமான முறையில் இருக்கும்னு சொன்னேன். ஆனால் அவர் கிளம்பிட்டார்.

நான் தீர்மானமாக நீங்க காய் வாங்கி வந்தாலும் நான் பனீர் புலவ் தான் இன்னிக்குப் பண்ணப் போறேன் என்று சொல்லி விட்டேன். சரி, ஆனால் கொஞ்சம் ரசம் வேண்டும் எனக்கு என்றார். தொட்டுக்க அப்பளம் வாட்டிக்கலாம், இல்லாட்டியும் வாழைக்காய் வறுவல் இருக்குனு நானும் சரினு சொல்லிட்டேன். ஆனால் அவரால் சந்தைக்கே போக முடியாமல் வண்டி படுத்தி எடுத்துக் கடைசியில் வீட்டுக்கு வந்துட்டார். இஃகி,இஃகி,இஃகி!நான் திட்டம் போட்ட படி பனீர் புலவ் செய்தேன். அதுக்குக் காய்கள் வேண்டும்னு எல்லாம் இல்லை. வெங்காயம் இருந்தாலே போதும். ஆனால் காரட் வாங்கிப் பல நாட்கள் ஆகி விட்டதால் அதைத் தீர்க்கணும்னு காரட்டுகளை எடுத்துக் கொண்டேன். பச்சைப் பட்டாணி இல்லை; அதனால் என்ன? காய்ந்த பட்டாணியை நேற்றே எதுக்கும் இருக்கட்டும்னு ஊற வைச்சிருந்தேன். அதை நன்கு கழுவிக் கொண்டு சிறிது உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன். இல்லைனால் பட்டாணிக் கல்லைப் போல் உட்கார்ந்திருக்கு! 

அதற்குள்ளாகப் பனீரை எடுத்து அலம்பித் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் மஞ்சள் பொடி, கொஞ்சமாக மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப் பொடி) ஜீரகப் பொடி, உப்பு ஆகியன சேர்த்து நன்கு கலந்து வைத்தேன். வீட்டில் அதிர்ஷ்டவசமாக பாஸ்மதி அரிசி இருந்தது. அதை ஒரு சின்னக் கிண்ணம் எடுத்து நன்கு கழுவி விட்டுப் பின்னர் நீரை வடிகட்டிக் கொண்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு அரிசியை வறுத்துவிட்டு அரிசி எடுத்த கிண்ணத்தாலேயே ஒன்றேகால் கிண்ணம் நீரை அதில் விட்டு அரிசியை ஊற வைத்தேன்.

இதெல்லாம் ஆவதற்குள்ளாகப் பட்டாணி வெந்து விட்டதைக் குக்கர் அறிவிக்க, ரசத்துக்கும், மோருக்கும் வெறும் சாதம் அரை ஆழாக்கு வைத்துவிட்டு ஈயச் செம்பில் ரசத்தையும் வைத்தேன். பின்னர் வந்து 2 பெரிய வெங்காயம், காரட் ஒன்று பொடியாக நீளவாட்டில் நறுக்கிக் கொண்டேன். தக்காளி சேர்க்கலை. வீட்டில் தக்காளியும் இல்லை. கொத்துமல்லி, புதினா எதுவும் இல்லை. நல்லவேளையாகப் பச்சை மிளகாயும், இஞ்சியும் இருந்தன. அதைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். பச்சை மிளகாய் இரண்டைப் பிளந்து வைத்துக் கொண்டேன்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

அடுப்பில் குக்கரை வைத்துக்கொஞ்சம் எண்ணெய்/வெண்ணெய் சேர்த்துக் காய வைத்துக் கொண்டேன். ஜீரகம், சோம்பு, முழு மிளகு வகைக்கு ஒரு தேக்கரண்டி போட்டுத் தாளித்து லவங்கப்பட்டை ஒரு துண்டு பச்சை ஏலக்காய் 2, ஒரு கிராம்பு போட்டுக் கொண்டேன்.  பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு அது வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டேன். வெங்காயம் வதங்கியதும் காரட்டைப் போட்டு வதக்கினேன். காரட் கொஞ்சம் வதங்கியதும் அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி, கால் தேக்கரண்டி மிளகாய்ப் பொடி(காரம் அதிகம்) ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி, கால் தேக்கரண்டி கரம் மசாலாப் பொடி போட்டுக் காய்களோடு நன்கு கலக்கும்படி வதக்கிக் கொண்டேன். எல்லாம் நன்கு கலந்ததும் நீரோடு  ஊற வைத்திருக்கும் அரிசியை அப்படியே அதில் சேர்த்தேன். மேற்கொண்டு நீர் வேண்டாம். பாஸ்மதி அரிசி அதிகம் நீர் தாங்காது. தேவையான உப்பைச் சேர்த்தேன். ஏனெனில் பட்டாணியில் கொஞ்சம் உப்புப் போட்டிருக்கோம். பனீருக்கும் கொஞ்சம் உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே குறைவான உப்பே போதும்.

கொத்துமல்லித் தழை, புதினா இருந்தால் காரட், வெங்காயம் வதக்கையில் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கலாம். அல்லது பச்சையாகக் கடைசியில் மேலே தூவலாம். இரண்டுமே இல்லை. குக்கரை மூடித் தணித்தே அடுப்பை எரிய விட்டு நன்கு மேலே ஆவி வந்ததும் வெயிட்டைப் போட்டேன். சிறிது நேரத்தில் ஒரு விசில் வர அடுப்பை உடனே அணைத்து விட்டேன். இதற்கு நடுவில் ஒரு வாணலியில் அல்லது பிடித்தமானால் நான் ஸ்டிக் தோசைக்கல்லில் நெய்யை விட்டுக் கொண்டு மசாலா சேர்த்து ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளை நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை பிரட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் பிரட்ட வேண்டாம். ரப்பர் மாதிரி ஆயிடும். இங்கே குக்கர் திறந்ததும் வறுத்த பனீர்த் துண்டுகளை அதில் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா போடுவதானால் போட்டுவிட்டு மெதுவாகக் கிளறணும். அரிசி உடையாமல் கிளறிக் கொடுக்கணும். 

இதை வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, தக்காளிப் பச்சடி ஆகியவற்றோடு சாப்பிடலாம். பண்ணும்போதோ, சாப்பிடும்போதோ இதைப் பதிவாகப் போடும் எண்ணமே இல்லை. ஆனால் சாயந்திரம் திடீர்னு தோன்றிய ஓர் உந்துதலில் மிச்சம் இருக்கும் புலவைப் படம் எடுத்துக் கொண்டேன். மற்றப் படங்கள் வழக்கம் போல் எடுக்கலை. ஹிஹிஹிஹி. கீழே மிச்சம் இருக்கும் பனீர் புலவ். பனீர் எங்கேனு கேட்காதீங்க! பொறுக்கிச் சாப்பிட்டுட்டேன்! :)))))


இன்று செய்த பனீர் புலவ் படம்

எல்லாப்படங்களையும் ஒழுங்கா எடுத்திருந்தால் எ.பி.க்குத் திங்கக்கிழமைப் பதிவுக்கு அனுப்பி இருப்பேன். இதையே "எண்ணங்கள்" வலைப்பக்கம் போட நினைச்சு அப்புறமா இங்கேயே போடலாம்னு போட்டுட்டேன். யாருக்கெல்லாம் முடியுதோ வந்து சாப்பிடுங்கப்பா!