எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, July 31, 2017

உணவே மருந்து! மாங்காய் 5

அடுத்து இப்போ மாங்காய்த் தொக்குப் போடலாம். தொக்குப் போடவென இங்கே திருச்சி/ஶ்ரீரங்கம் சந்தையில் தனியாக மாங்காய்கள் விற்கின்றனர். ஆனால் நான் கல்யாணத்துக்கு முன்னால் வரை மதுரையில் இருந்தப்போ எல்லாம் இங்கே ஒட்டு மாங்காய் என்று சொல்லப்படும் கல்லாமை மாங்காயிலேயே தொக்குப் போட்டுப் பார்த்திருக்கேன். அதுவே கொஞ்சம் தித்திப்பாக இருக்கும் என்பதால் எங்க அம்மா வீட்டில் வெல்லமெல்லாம் சேர்ப்பதில்லை. ஆனால் மாமியார் வீட்டில் கட்டாயமாக வெல்லம் போட வேண்டும். இங்கே வெல்லம் போடுவதை உங்கள் விருப்பத்தில் விட்டு விடுகிறேன். :)

நல்ல தொக்கு மாங்காய் பெரியதாக இருந்தால் ஒன்று

நடுத்தரமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று

மிளகாய் வற்றல் சுமார் 100 கிராம், வெறும் வாணலியிலோ அல்லது கொஞ்சமாக எண்ணெய் விட்டோ வறுத்துப் பொடித்துக் கொள்ளலாம். இதோடு பெருங்காயக் கட்டியையும் பொரித்துப் போட்டுப் பொடிக்கலாம்.

மிளகாய்த் தூள் எனில் ஒரு சின்னக் கிண்ணம்

உப்பு தேவையான அளவுக்கு அரைக்கிண்ணம் போதும்.

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாங்காய்த் துருவலுக்கு ஏற்ப

கடுகு, வெந்தயப் பொடி தேவையானால் இரண்டு டீஸ்பூன் (போடாவிட்டாலும் தப்பில்லை)

வெல்லம் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்தது. விருப்பத்தைப் பொறுத்தது.

வதக்க நல்லெண்ணெய் இரண்டு குழிக்கரண்டி அல்லது ஒரு கிண்ணம்

தாளிக்கக் கடுகு இரண்டு டீஸ்பூன்

மாங்காயை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலை நீக்கவும். பின்னர் காரட் துருவியில் துருவிக் கொள்ளவும். சிலருக்கு அது பிடிக்காது! வெறும் கத்தி அல்லது அரிவாள் மணையால் சின்னச் சின்னச் சீவல்களாகப் போட்டுக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் அல்லது இரும்பு வாணலியை வைத்து நல்லெண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போடவும். கடுகு பொரிந்த உடனே மாங்காய்த் துருவலைப் போட்டு மஞ்சள் பொடி, உப்பைச் சேர்க்கவும். நன்கு கிளறவும். காரப் பொடியை இப்போது போட வேண்டாம். அளவு தெரியாமல் கூடப் போடும் வாய்ப்பு இருக்கிறது. நான் உப்பையே கொஞ்சம் கிளறிய பின்னர் சரியான அளவு வந்ததுமே சேர்ப்பேன். அப்படியும் செய்யலாம். நன்கு கிளறிக் கொஞ்சம் சுருண்டு வரும்போது காரப்பொடியைச் சேர்க்கவும், காரப் பொடியைச் சேர்த்துப் பின்னர் நன்கு கிளற வேண்டும். எண்ணெய் போதாது போலிருந்தால் கொஞ்சம் சேர்க்கலாம். என்றாலும் தொக்கு பதமாக ஆனதும் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது தேவையானால் வெல்லம் சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கவும். கடுகு, வெந்தயப் பொடி பிடித்தால் சேர்க்கலாம். இதுவும் விரைவில் கெட்டுப் போகாது. வெளியேயே வைக்கலாம்.

மாங்காய்த் தொக்கு வெல்லம் சேர்த்தது.

மேலே சொன்னபடி எல்லாம் செய்து காரப்பொடி போட்டுக் கிளறிய பின்னர் வெல்லத்தைத் தூள் செய்து ஒரு சின்னக் கிண்ணத்தால் அளந்து போடவும். வெல்லமும் சேர்ந்துகொண்ட பின்னர் தொக்கு உருண்டு திரண்டு ஒட்டாமல் வரும்போது கீழே இறக்கி வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்க்கவும். ஜீரகப் பொடி இல்லாமலும் செய்யலாம்.

தித்திப்பு மாங்காய் ஊறுகாய்

இதற்கும் ஆவக்காய்க்கு நறுக்குகிறாப்போல் மாங்காய்த் துண்டங்களை நறுக்கிக் கொண்டு அவற்றோடு காரக் கலவை சேர்க்கும்போது சுமார் கால்கிலோ வெல்லத்தைத் தூள் செய்து மாங்காய்த் துண்டங்களோடு சேர்க்கவும். இந்தக் கலவையைப் போட்டதும் மாங்காய் ஊறுகாயை ஜாடி அல்லது கல்சட்டியோடு மேலே வெள்ளைத் துணியால் வேடு கட்டி வெயிலில் 4,5 நாட்கள் வைத்து எடுக்கவும். பின்னர் வறுத்த ஜீரகம், சோம்புப் பொடி சேர்த்துப் பயன்படுத்தவும். வெயிலில் வெல்லம் உருகிக் கொண்டு மாங்காயோடு சேர்ந்து காரம், புளிப்பு, இனிப்பு நிறைந்த கலவையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும். 

Friday, July 28, 2017

உணவே மருந்து! மாங்காய் 4

மாங்காய் அரைப்பழமாக இருக்கிறச்சே கூட அதில் உப்பும், காரமும் சேர்த்துப் போட்டுச் சாப்பிட்டால் அருமை! குழம்பு சாதத்திலிருந்து எல்லாத்துக்கும் அதைத் தொட்டுக்கலாம். காய்களே வேண்டாம். நம்ம ரங்க்ஸ் அதை ரசிக்கிறதில்லை. தித்திப்பா இருக்குனு சொல்லிடுவார். ஆனால் அம்மாதிரிக் காய்கள் கிடைத்தால் விடாமல் நறுக்கி உப்பு, காரம் கலந்து எனக்கு மட்டும் தொட்டுக்க வைச்சுப்பேன். :) இப்போ வெந்தய மாங்காய் பத்திப் பார்க்கலாமா?

வெந்தய மாங்காய்க்குத் தேவையான பொருட்கள்

மாங்காய் நடுத்தர அளவு 4 அல்லது 5. நன்கு அலம்பித் துடைத்து சுமாரான பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். இதற்குச் சிலர் மிளகாய்ப் பொடி சேர்ப்பார்கள். சிலர் மிளகாய் வற்றலை வறுத்துச் சேர்ப்பார்கள். உங்கள் வசதிப்படி மிளகாய்ப் பொடி அல்லது மிளகாய் வற்றல் எடுத்துக் கொள்ளவும்.

மிளகாய்ப் பொடி எனில் ஒரு குழிக்கரண்டி நிறைய

மிளகாய் வற்றல் எனில் சுமார் 100 அல்லது 150 கிராம் வற்றலை நன்கு வெயிலில் காய வைத்துச் சூட்டோடு போட்டுப் பொடிக்கவும். அல்லது வெறும் வாணலியில் சற்று வறுத்துச் சூடு ஆறுவதற்கும் பொடிக்கவும். சிலர் எண்ணெயிலேயே வறுக்கின்றனர். அவரவர் வீட்டு வழக்கப்படி செய்து கொள்ளலாம். வெந்தயத்தையும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். கல் உப்பையும் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளலாம்.

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், பெருங்காயம் தூள் அல்லது  கட்டி. கட்டி எனில் வாணலியில் எண்ணெயில் பொரிக்கவும்.

ஊறுகாய்க்குத் தேவையான நல்லெண்ணெய் ஒரு கிண்ணம்

மாங்காய்த் துண்டங்களை ஒரு வாயகன்ற கல்சட்டி அல்லது ஊறுகாய் போடும் பாத்திரத்தில் போடவும். வறுத்த மிளகாய் வற்றல், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி அல்லது பொரித்த கட்டி, வறுத்த வெந்தயம் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். இந்தப் பொடியை நறுக்கிய துண்டங்கள் மேல் போட்டு, நல்லெண்ணெயையக் காய்ச்சி ஆற விட்டு இதில் சேர்க்கவும். ஒரு மரக்கரண்டியால் கிளறி விடவும். சிலர் கிளறக் கூடாது, குலுக்க வேண்டும் என்பார்கள். அந்தக் காலங்களில் கண்ணாடி ஜாடி,  பீங்கான் ஜாடி அல்லது கல் சட்டியில் தான் ஊறுகாய் போடுவதே! அதில் எங்கேருந்து குலுக்குவது! கொட்டாங்கச்சியைத் தேய்த்து ஒரு பக்கம் நுனியில் ஓட்டை போட்டு ஒரு மரக்குச்சியை அதில் கொடுத்து இணைத்துக் கரண்டி மாதிரி வீட்டிலேயே தயார் செய்து வைப்பார்கள். அல்லது வாராந்தரச் சந்தைகளில் மரக்கரண்டி கிடைக்கும். அதை வாங்கி வைத்திருப்பார்கள். ஊறுகாய் கிளற மரக்கரண்டி   தான் பயன்பாட்டில் இருக்கும்.

இந்த ஊறுகாய் ஊற ஊறத் தான் நன்றாக இருக்கும். வெளியிலேயே வைக்கலாம். கெட்டுப் போகாது. சந்தேகமாக இருந்தால் இரண்டு, மூன்று நாட்கள் மேலே ஒரு வெள்ளைத்துணியை வேடு கட்டி வெயிலில் வைத்து எடுக்கவும்.

ஆவக்காய் மாங்காய்! இதற்கெனத் தனி மரமே உண்டுனு சொல்வாங்க. எல்லா மாங்காயிலும் ஆவக்காய் போட முடியாதுனும் சொல்வாங்க. ஆனால் நான் எங்க வீட்டு மாமரங்களின் காய்களிலும் மற்றும் மைத்துனர், நாத்தனார் வீட்டு மரங்களின் காய்களிலும் ஆவக்காய் போட்டிருக்கேன். மாங்காய் புளிப்பாக இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதினு நினைக்கிறேன். உருண்டை மாங்காயாக இருந்தால் ஆவக்காய் ருசியாக இருக்கும் என்கிறார்கள். ருமானி மாங்காயில் போட்டால் நன்றாக இருக்கும் என்றும் சொல்வார்கள். எப்படியானாலும் நல்ல புளிப்புள்ள மாங்காயாகப் பனிரண்டு அல்லது பதினைந்து தேவை.

மாங்காய்   15

மிளகாய்ப்பொடி (வாங்குவதை விட மி.வத்தல் வாங்கி மிஷினில் கொடுத்துப் பொடிப்பது சிறப்பு) 300 கிராமிலிருந்து 400 கிராமுக்குள்ளாக

உப்பு கல் உப்பு ஒரு டம்பளர் அல்லது 200 எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகுப் பொடி 200 கிராம்

கடுகைச் சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைக்கவும். அந்தச் சூட்டுடனேயே பொடித்துக் கொள்ளவும். கடுகுப் பொடி நிறைய இருந்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகாது. ஆவக்காய் ஊறுகாயே குறைந்தது 2 வருஷங்கள் தாக்குப் பிடிக்கும். முன்னெல்லாம் முதல் வருஷத்து ஆவக்காய் மிஞ்சிப் போவதோடு வெல்லப் பாகு வைத்துக் கிளறிச் சேர்த்து வறுத்த ஜீரக, சோம்புப் பொடியைப் போட்டுக் கலந்து வைப்பேன். அதைச் சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படும். இப்போ ஊறுகாயே ஒரு சின்ன ஹார்லிக்ஸ் பாட்டிலில் தான் போடுகிறேன் என்பதால் மிஞ்சுவது என்பதே இல்லை! (ஶ்ரீராம் கவனிக்க!) :P :P

வெந்தயம் முழுசாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள்ளாக. நம்ம ரங்க்ஸுக்கு வெந்தயம் வாயில் அகப்பட்டால் பிடிக்காது. நான் அதைத் தான் பொறுக்கித் தின்பேன். :)

கொண்டைக்கடலை கறுப்போ வெள்ளையோ பிடித்தமிருந்தால் நன்கு சுத்தம் செய்து கழுவி உலர்த்தி வைத்துக் கொள்ளவும். தண்ணீர் பட வேண்டாம். தண்ணீர் பட்டால் ஊறுகாய் வீணாகி விடும். சிலர் கொண்டைக்கடலை போட்டால் ஊறுகாயே வீணாகிவிடும் என்று போடுவதில்லை. ஆகவே இது அவரவர் விருப்பம். இன்னும் சிலர் பூண்டு உரித்துச் சேர்க்கிறார்கள். பூண்டும் நான் போடுவதில்லை.

நல்லெண்ணெய் அரைகிலோவுக்குக் குறையாமல் வேண்டும். இதையும் நன்கு வெயிலில் காய வைத்துக் கொள்ளவும்.

இப்போது மாங்காயைக் கழுவித் துடைத்துக் கொண்டு ஆவக்காய்க்கு வெட்டுகிறாற்போல் உள் பருப்பை நீக்கி விட்டு ஓட்டுடன் வெட்டிப் பெரிய துண்டங்களாக எடுத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரம் அல்லது கல்சட்டியில் பரவலாகப் போடவும்.

Image result for ஆவக்காய் மாங்காய் ஊறுகாய்

படத்துக்கு நன்றி, கூகிளார் வாயிலாக உமையாள் காயத்ரி


இன்னொரு பாத்திரத்தில் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, (பெருங்காயப்பொடி, தேவையானால்) பொதுவாக ஆவக்காய்க்குப் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள். நான் கொஞ்சம் போல் சேர்ப்பேன். உப்பு, கடுகுப் பொடி ஆகியவற்றைப் போட்டு நல்லெண்ணெயை ஊற்றிக் கலக்கவும்.

ஊறுகாய் எதில் போடுகிறோமோ அதை நன்கு காய வைத்துத் தயார் செய்து கொண்டு மாங்காய்த் துண்டுகளின் மேல் கொஞ்சம் கொஞ்சமாகக் காரம், கடுகுப்பொடி கலந்த கலவையைப் போட்டுக் கலந்து ஊறுகாய் ஜாடியில் போடவும். கடைசியில் மிச்சம் இருக்கும் விழுதையும் அதன் மேல் போட்டுக் கலக்கவும். நீங்கள் கொண்டைக்கடலை சேர்ப்பதாக இருந்தால் மாங்காய்த் துண்டங்களோடு கொண்டைக்கடலையைச் சேர்த்து விட்டுப் பின் காரக் கலவையைச் சேர்க்கலாம். வெந்தயத்தை முழுசாக அப்படியே காரக்கலவையில் கலந்து பின் மாங்காயோடு சேர்த்து விடலாம். இதை ஊறுகாய் ஜாடியின் வாயை வேடு கட்டிப் பின் விருப்பமிருந்தால் வெயிலில் ஒரு நாள் வைத்து எடுக்கவும்.

நான்காம் நாள் ஊறுகாயின் மேல் எண்ணெய் கசிந்து வர ஆரம்பித்திருக்கும். இது தான் ஊறுகாய் ஊற ஆரம்பித்ததன் அறிகுறி.  ஆரம்பத்தில் தினம் தினம் கிளறிக் கொடுத்து விட்டுப் பின்னர் நன்கு ஊறினதும் வாரம் இரு முறை கிளறினால் போதும். காற்றுப் புகாத மூடியினால் ஊறுகாய் ஜாடியை மூடி வைக்கவும். தேவைப்படும் ஊறுகாய்த் துண்டங்களைத் தனியான ஒரு கிண்ணம்/பாத்திரம்/ஜாடியில் போட்டுக் கொண்டு பயன்படுத்தவும்,  

Sunday, July 23, 2017

உணவே மருந்து! மாங்காய் 3

மாவடு ஊறுகாயை ரத்த அழுத்தம் இருக்கிறவங்க கூடக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம் என எங்க குடும்ப மருத்துவர் ஒரு முறை சொல்லி இருக்கார். ஊறுகாயைச் சாதத்துக்குத் தொட்டுக்கிறவங்களைப் பார்த்திருப்பீங்க! கறி, கூட்டு மாதிரி ஊறுகாயும் போட்டுப்பாங்க! நான் அப்படிப் போட்டுக்காட்டியும் மாவடுவை வத்தல் குழம்பு சாதத்தோடு சாப்பிடப் பிடிக்கும். இப்போல்லாம் குறைச்சாச்சு! ஊறுகாய் எல்லாம் போட்டுக்கறதையும் நிறுத்தி விட்டேன். ஆனால் ஊறுகாய் போட்டு வைப்பது நிறுத்தலை. அம்பேரிக்காவில் இருந்தப்போப் பொண்ணுக்கு இருமுறை எலுமிச்சை ஊறுகாயும், மாங்காயில் ஆவக்காய் ஊறுகாயும், மாங்காய் இஞ்சி, இஞ்சி சேர்த்த தொக்கும், வெஜிடபுள் ஊறுகாயும் போட்டு வைச்சுட்டு வந்தேன்.

மாங்காய் ஊறுகாய் எல்லோருக்கும் தெரியும் தான். ஆனால் அதில் வித விதமாக இருக்கிறது அல்லவா? பொதுவாகக் கொஞ்சம் பழுக்கிற நிலையில் இருக்கும் அரைக்காயை(இந்தக் குறிப்பிட்ட மாங்காய் மதுரைப் பக்கம் "கல்லாமை" என்ற பெயரில் அழைக்கப்படும். மற்ற இடங்களில் "ஒட்டு" மாங்காய் என அழைப்பார்கள். பெரும்பாலும் இதில் தான் தொக்குப் போடுகிறார்கள். என்றாலும் தொக்குக்கெனத் தனி மாங்காய் இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் கறிகாய்ச் சந்தையில் விற்கிறது.) நறுக்கி உப்பு, மிளகாய் தூவிச் சாப்பிடுவோம். வெளியே கடைகளில் பழக்கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றில் கூட இந்த மாங்காயை வில்லைகளாக நறுக்கி மாங்காய் பத்தை என்னும் பெயரில் விற்பார்கள். எனக்கும் அந்த ருசி பிடிக்கும். அதைத் தவிரவும் மாங்காயைப் பல சிறிய துண்டங்களாக நறுக்கிப் போடப்படும் புத்தம்புதிய துண்டம் மாங்காய் ஊறுகாயுடன் மோர் சாதம் மட்டுமில்லாமல் குழம்பிலிருந்து எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள ரொம்பப் பிடிக்கும். அது செய்வதும் ரொம்பவே எளிமையானது.

ஒட்டு மாங்காய் எனப்படும் மாங்காய் பெரிதாக இருந்தால் ஒன்று அல்லது மாங்காய் ஏதேனும் ஒரு வகை ஒன்று அல்லது இரண்டு.

உப்பு தேவையான அளவு

மிளகாய்த் தூள் அவரவருக்குத் தேவையான காரம் கொடுக்கும்படி

பெருங்காயத் தூள் ஒரு டீஸ்பூன்

வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூனிலிருந்து இரண்டு வரை மாங்காய்த் துண்டங்களின் அளவுக்கேற்ப

தாளிக்க கடுகு இரண்டு டீஸ்பூன்

மாங்காயைச் சின்னச் சின்னத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டு அதில் உப்புச் சேர்த்து மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் ஓர் கடாயில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கொண்டு அதில் கடுகு தாளிக்கவும். மாங்காய்த் துண்டங்களின் மேல் பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி ஆகியவற்றைப் போட்டு நல்லெண்ணயைச் சூடாக வெடித்த கடுகுடன் அதில் பரவலாக ஊற்றவும்.நன்கு கிளறி விடவும். இதை உடனே சாப்பிடலாம். இரண்டு, மூன்ரு நாட்கள் வைத்தும் சாப்பிடலாம். முன்னெல்லாம் இதை வைத்துச் சாப்பிடுவதெனில் தினம் தினம் வெயிலில் காய வைப்பார்கள். இப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால் இன்றைய பயன்பாடு முடிந்ததும் உடனே எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

Image result for மாங்காய் ஊறுகாய்

படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன்!

இதே போல் மாங்காயைச் சின்னச் சின்னத் துண்டங்களாக நறுக்கிய மாங்காயில் உப்பு மட்டும் சேர்த்துக் கொண்டு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கலந்தும் சாப்பிடலாம். இதோடு இஞ்சி, காரட் ஆகியவற்றைச் சேர்த்து உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய், கடுகு தாளித்துச் சாப்பிடலாம். அல்லது காரப்பொடி போட்டுக் கொண்டு கடுகு, பெருங்காயம் தாளித்தும் சாப்பிடலாம்.

எண்ணெய் மாங்காய்: மாங்காய் ஊறுகாய்க்கெனப் புளிப்பாகக் கிடைக்கும். அவற்றை வாங்கிக் கழுவிக் கொண்டு கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். ஓடு வந்தால் பரவாயில்லை. மாங்காய்த் துண்டங்களை ஒரு கண்ணாடி ஜாடி அல்லது கல்சட்டி (ஹிஹிஹி) அல்லது பீங்கான் ஜாடியில் போட்டுத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.

எட்டு மாங்காய்கள் எனில் நல்ல புளிப்பான மாங்காயாக இருந்தால்  முக்கால்க்  கிண்ணம் உப்புத் தேவைப்படும். கல் உப்பாக இருந்தால் நல்லது. மாங்காயைத் தினமும் கிளறி விடவும். நான்கு நாட்கள் ஆனதும் மாங்காயையும் அதில் தளராக இருந்தால் அவற்றையும் மட்டும் தனியாக எடுத்து ஓரு மூங்கில் தட்டில் போட்டு வெயிலில் உலர்த்தவும்.  மாங்காயை எடுத்த பின்னர் ஜாடியில் சாறு இருக்கும். மாலை அதே சாறில் உலர வைத்தவற்றைப் போட்டு விட்டு மறுபடி மறுநாள் எடுத்து உலர்த்தவும். மீதம் கொஞ்சம் சாறு இருக்கும்.  அந்தச் சாறை அடியில் குப்பை, மண் ஏதும் இல்லையே என உறுதி செய்து கொண்டு ஒரு கல்சட்டியில் அந்தச் சாறைக் காய்ச்சவும். வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் மாங்காய்த் துண்டங்களையும் அதில் போட்டுக் கிளறி விட்டுக் கீழே இறக்கி வைக்கவும்.

ஓர் கடாயில் மாங்காய்க்குத் தேவையான மிளகாய் வற்றல், கடுகு, வெந்தயம் ஆகியவற்றைக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வறுக்கவும்.

மிளகாய் வற்றல் எட்டு நடுத்தர மாங்காய்களுக்கு சுமார் நூறு கிராம் தேவைப்படும். காரம் கூட்டியோ, குறைத்தோ போடலாம். எல்லாவற்றையும் நன்கு வறுத்துக் கொண்டு மிக்சியில் ஜாரில் போட்டுக் கடுகு, வெந்தயத்தோடு பொடிக்கவும். கீழே இறக்கி வைத்த மாங்காயில் போட்டுக் கலந்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் 200 கிராம் ஊற்றி நன்கு காய்ச்சவும். இந்த ஊறுகாயில் கொட்டிக் கிளறவும். மறுநாள் முதல் பயன்படுத்தலாம். இந்த ஊறுகாயைக்  கொஞ்சம் அதிக நாட்கள் வைத்திருக்க முடியும்

Tuesday, July 18, 2017

உணவே மருந்து! மாங்காய் 2

மாங்காயைக் காய வைத்து எடுக்கப்படும் அம்சூர் பொடி இந்தியாவில் சமையலில் புளிப்புக்காகச் சேர்க்கப்படுகிறது. வட மாநிலங்களில் இதன் பயன்பாடு அதிகம். புளிக்குப் பதிலாக அம்சூர் பொடி சேர்ப்பார்கள். மாங்காயில் ஊறுகாய்கள் மட்டுமில்லாமல், குழம்பு, பச்சடி போன்றவையும் செய்யலாம். மாங்காய்ப் பச்சடி பிடிக்காதவர்கள் இல்லை. ஒவ்வொரு வருடமும் சித்திரை வருஷப் பிறப்புக்கு மாங்காய்ப் பச்சடியில் வேப்பம்பூவை வறுத்துச் சேர்த்துச் செய்வது பலருக்கும் வழக்கம். மாங்காயின் பால் பட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் கொப்புளங்கள் வரும்.  ஆனாலும் மாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும் என்பதோடு இதயம் வலுப்பெறும், ரத்தம் சுத்தியாகும்.

உங்க வீட்டிலேயோ, அக்கம்பக்கமோ இருக்கும் மாமரங்களில் இருந்து நல்ல இளம் மாவிலையாக நாலைந்து எடுத்துக்குங்க. துளசி கொஞ்சம் பூக்காரி கிட்டேச் சொல்லி வாங்கி வச்சுக்குங்க. வீட்டிலே நிறையத் துளசிச் செடி இருந்தால் அதிலே பறிக்கலாம். இல்லைனா வாங்கிக்கறதே நல்லது. மாவிலைகளைத் துண்டாக நறுக்கிக்கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன், அதே அளவு துளசி இலைகள், க்ரீன் டீ ஒரு பாக்கெட் போட்டு இருநூறு தண்ணீர் விடவும். கொஞ்சம் போல் மிளகு பொடி தூவவும். நல்லாக் கொதிக்க விடவும். பாதியாக வற்றும் வரைக்கும் கொதிக்கட்டும். பின்னர் வடிகட்டிச் சாப்பிடவும். கசக்கிறதுனு மூஞ்சியைச் சுளிக்கிறவங்க கொஞ்சம் போல் பனங்கற்கண்டு சேர்த்துக்கலாம். ஆனால் சேர்க்காமல் குடிக்கிறதே நல்லது.
இதிலே சர்க்கரை ஓரளவு கட்டுப்படுகிறது என்பது அனுபவம்.

மாமரங்கள்  வளர்ப்பது அவ்வளவு கடினம் அல்ல. எளிதானதே. ஆனால் மண்ணில் அமிலத் தன்மை இருக்கவேண்டும் என்பதோடு வடிகால் வசதியும் இருக்க வேண்டும் என்கின்றனர். உறைபனி இருக்கும் இடங்களில் மாமரங்கள் வளராது. காற்று அதிகம் இருந்தாலும் பூக்கள் எல்லாம் கொட்டிப் போய்க் காய்ப்புக் குறையும். காய்கள் முதிரும் சமயம் நீர் தேவைப்படும். பெரும்பாலும் நாம் சாப்பிட்டுத் தூக்கி எறியும் கொட்டைகளிலே இருந்தே மாமரங்கள் தோன்றினாலும் பெரும் பண்ணைகளில், மாந்தோப்புக்களில் இவை ஒட்டுப் போட்டே வளர்க்கப்படுகின்றன. வேகமாக வளரக் கூடிய மாங்கன்றின் கூட இன்னொரு வித்தியாசமான ரகத்தை ஒட்டுப் போட்டு வளர்க்க ஆரம்பிப்பார்கள். மண்ணுக்கேற்றபடி அவற்றின் ரகம், தரம் பிரிக்கப்பட்டு ஒட்டுப் போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. பெரிய தோட்டங்களில் ஒரு மாங்கன்றுக்கும் இன்னொரு மாங்கன்றுக்கும் இடையில் 45 முதல் 50 அடி வரை இடைவெளி கொடுத்து மாங்கன்றுகள் நடப்படும். ஒரு ஏக்கர் தோட்டத்தில் சுமார் 100 முதல் 125 மாங்கன்றுகள் வரை வளர்க்கப்படும்.

மாமரம் பூக்க ஆரம்பித்து விட்டால் பூங்கொத்தில் 3,000 முதல் 4,000 வரை பூக்கள் இருக்கும். பெரும்பாலானவை ஆண் பூக்களாகவே இருக்கும்.  நிழலில் வளரும் மரம் எனில் பெரும்பாலும் இருபால் பூக்களாக இருக்கும். எனினும் ஒரு கொத்தில் ஆண் பூக்களோடு இருபால் பூக்களும் கலந்தே இருக்கும். இவையே மகரந்தச் சேர்க்கையின் மூலம் பிஞ்சாகி, காயாகி, கனியாக மாறும். காயாக வேண்டுவோர் பச்சையாக இருக்கையிலேயே பறிப்பார்கள். பெரும்பாலான மரங்கள் பழ மரங்கள் எனில் பச்சையிலிருந்து மஞ்சளாக மாறும் நேரம் பறிப்பதற்கு உகந்த நேரம். கீழே விழாமல் பறிக்க வேண்டும்.  மாமரத்தின் மேலேயே ஒரு ஆள் நின்று கொண்டு கையில் ஒரு பெரிய சாக்குப்பையை வைத்த வண்ணம் இன்னொரு கையால் நீண்ட அரிவாள் போன்ற துரட்டியால் மாம்பழங்கள் முதிரும் முன்னரே பறித்துப் பையில் போடுவார்கள்.  காம்பு கொஞ்சம் நீளமாக விட்டுப் பறித்தால் மாம்பால் கறை பழத்தின் மேல் படாத வண்ணம் இருக்கும்.  பின்னர் பழங்கள் தேர்வு செய்யப்பட்டுத் தரம் பிரிக்கப்பட்டுச் சுடுநீரில் சுத்தம் செய்யப்பட்டு ஏற்றுமதி, உள்நாட்டுக்கு அனுப்புதல் எனப் பிரிக்கப்படும்.

அனைவராலும் அதிகம் உண்ணப்படும் மாம்பழம், மாங்காயிலிருந்து செய்யப்படும் உணவு வகைகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

மாவடு:  மாவடு கண்ணல்லவோ, மைனாவின் மொழி அல்லவோ! என்றொரு திரைப்படப் பாடலில் வரும். அந்த மாதிரித் தான் மாவடு கண்ணைப் போலக் காட்சி அளிக்கும். பெரிய காற்றடித்தாலோ அல்லது பலம் இல்லாமலோ காய்த்திருக்கும் மாம்பிஞ்சுகள் கீழே உதிரும். அவற்றைப் பொறுக்கி அப்படியே உண்பவர்கள் உண்டு. அவற்றைச் சேர்த்து வைத்து மாவடு ஊறுகாய் போட்டு உண்பவர்கள் உண்டு. என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட மரங்கள் மாவடு ஊறுகாய்க்கெனவே விட்டுப் பறிப்பார்கள். பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில் வளரும் மாமரங்களின் பிஞ்சுக் காய்கள் மலை வடு என்னும் பெயரில் அழைக்கப்பட்டு ஊறுகாய்க்கெனப் பறிக்கப்படும்.

Image result for மாவடு

படத்துக்கு நன்றி: சொல்லுகிறேன் வலைப்பக்கம் காமாட்சி அம்மா!

மாவடு போடும்போதே அதில் சேர்க்கும் உப்பு, மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சள் ஆகியவற்றில் உள்ள நீரை அதி தாராளமாக விட்டுக்கும்.  போதாதற்கு மாங்காயிலே உள்ள நீர் வேறே.  ஆகவே நீங்க நீரெல்லாம் சேர்க்க வேண்டாம்.

இப்போ மாவடு போடும் விதம் குறித்துப் பார்க்கலாமா?  போடுகிறபடி போட்டால் நீங்க குளிர்சாதனப் பெட்டியிலெல்லாம் வைக்கவே வேண்டாம்.  அதோடு உயர் ரத்த அழுத்தமோ, குறைந்த ரத்த அழுத்தமோ உள்ளவர்கள் கூட ஒன்றிரண்டு மாவடு ஒரு நாளைக்குச் சேர்த்துக்கொள்ளலாம்.

மாவடு உருண்டை இரண்டு கிலோ, அல்லதுகிளி மூக்கு மாவடு இரண்டு கிலோ,  ஐம்பது கிராம் மிளகாய் வற்றல், பச்சை மஞ்சள் கிழங்கு, அநேகமாய் எல்லாரிடமும் இருக்கணும்.  பொங்கலுக்கு வாங்கி இருப்பீங்களே, அதில் சேகரித்தது கூடப் போதும்.  அப்படி மஞ்சள் கிழங்கு இல்லைனால் ஐம்பது கிராம் நல்ல தூள் மஞ்சள் வாங்கிக்கவும்.  கடுகு சுத்தம் செய்து ஐம்பது கிராம், கல் உப்பு  நூற்றைம்பதில் இருந்து இருநூறு கிராம் வரை. (இதுவும் எதிலோ பார்த்ததில் இரண்டு படி உப்புனு போட்டிருந்தது.  மயக்கமே வந்து விட்டது.) உப்பு சரியாகப் போட்டாகணும். இல்லைனு சொல்லலை.  அதுக்கும் ஓர் அளவு இருக்கு.  முக்கியமாய் ஊறுகாயைப் போட்டு வைக்க ஜாடி அல்லது கண்ணாடி பாட்டில் பெரியதாக வேண்டும்.  கண்ணாடிக் கடைகளில் கேட்டால் நல்ல பெரிய பாட்டிலாகக் கிடைக்கும்.  வாய் அகலமாக இருக்கணும்.  தினம் தினம் கிளறி விடறாப்போல் இருக்கட்டும்.  விளக்கெண்ணெய் ஐம்பது கிராம்.

இப்போ மாவடு வாங்கிட்டீங்களா?  மாவடுவை ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசிக்கோங்க.  காம்புகள் இருந்தால் பரவாயில்லை.  ரொம்பப் பெரிசாக இருந்தால் மட்டுமே அகற்றவும்.  இல்லைனால் வேண்டாம்.  அலசிய மாவடுவை நல்ல வடிகட்டியில் போட்டு வடிகட்டிக்கோங்க.  மிளகாய் வற்றல், கடுகு, மஞ்சளை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.  கொஞ்சம் கொரகொரப்பாய் இருந்தாலும் பரவாயில்லை.  உப்பை அப்படியே வைச்சுக்கவும்.

இப்போ மாவடு போடும் பாத்திரம்/ஜாடி/பாட்டிலை எடுத்துக்கவும்.  அடியில் ஒரு கை உப்பைப் போடவும்.  அரைச்சு வைச்ச மிளகாய், கடுகு, மஞ்சள் கலவையையும் அதே போல் போடவும்.  இப்போ அலசி வைச்சிருக்கும் மாவடுவை அதன் மேல் போடவும்.  இரண்டு மூன்று கை மாவடு போடலாம்.  பின்னர் மீண்டும் அதே போல் உப்பு, மஞ்சள் கலவை, மாவடு போடவும். இப்படியே போட்டுக் கடைசியில் மிஞ்சிய மாவடுகளைப் போட்டு அதன் மேல் மிச்சம் இருக்கும் கலவையையும், உப்பையும் போட்டுவிட்டு ஒரு தட்டால் அல்லது ஜாடி மூடியால், அல்லது பாட்டில் மூடியால் மூடவும்.  தனியாக வைக்கவும்.  மறுநாள் காலையில் குளித்துவிட்டு ஒரு மரக்கரண்டியால் நன்கு கிளறவும். லேசாக ஜலம் விட ஆரம்பிச்சிருக்கும்.  இரண்டாம் நாள், மூன்றாம் நாள் மாவடு பாதி முழுகும் வண்ணம் ஜலம் விட்டிருக்கும்.  ஐந்து நாட்களில் அனைத்து மாவடுகளும் ஜலத்தில் முழுகிச் சுருங்க ஆரம்பிச்சிருக்கும்.

ஒரு சிலர் மாவடு சுருங்கக் கூடாதுனு சொல்றாங்க.  அதுக்காக ஐஸெல்லாம் போட்டு வைப்பாங்க. குளிர்சாதனப் பெட்டியிலும் வைப்பாங்க.  இதெல்லாம் செய்தால் மாவடு வெளியே அரை நாள் இருந்தாலும் அழுக ஆரம்பிக்கும்.  மாவடு எத்தனை சுருங்குதோ அத்தனைக்கு உப்புப் பிடிச்சு, உறைப்பும் ஏறி இருக்குனு அர்த்தம்.  இப்படி இருக்கும் மாவடு ஊறுகாய் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது. ஐந்து நாட்கள் ஆனதும் விளக்கெண்ணெயை மாவடுவின் மேலே ஊற்றி நன்கு கிளறி விடவும்.  மாவடு சாப்பிடுவதன் சூட்டை விளக்கெண்ணெய் சமனப் படுத்துவதோடு, வயிற்றுக்கும் நல்லது.  வெளிநாடுகளில் அல்லது இங்கேயே கடையில் வினிகர் ஊற்றிப் பதப்படுத்துவதை விட இது இன்னமும் பயனுள்ளது.  ஊறுகாய் கெட்டுப் போகாது.


சரி, மாவடு எல்லாம் தீர்ந்து போச்சு, இந்த ஜலத்தை என்ன பண்ணறது?  கோபமா வருதா?  கவலை வேண்டாம்.  ஜலம் எவ்வளவு இருக்குனு பார்த்துக் கொண்டு அதுக்கு ஏற்றாற்போல் பச்சைச் சுண்டைக்காய் அரைகிலோ அல்லது ஒரு கிலோ வாங்கி நன்கு கீறி மாவடு ஜலத்தில் ஊற வைக்கவும்.  நான்கைந்து நாட்கள் ஊறிய பின்னர் வெயிலில் உலர்த்தவும். சுண்டைக்காய் வற்றலை வறுத்துச் சாப்பிட்டால் அப்புறமா விடவே மாட்டீங்க! :))))

Sunday, July 16, 2017

உணவே மருந்து! மாங்காய்! 1

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாங்காயைப் பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். மாங்காய் முக்கனிகளில் முதன்மையானது. ஒரு சிலர் மா, பலா, வாழை என்கின்றனர். இன்னும் சிலர் வாழை, மா, பலா என்கிறார்கள். எப்படியோ இந்த மாங்காய், மாம்பழம் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒன்று. மாங்காய் காய்த்தது எனில் பருவம் மங்கும் எனவும், (வெயில் அதிகம் இருக்கும்) அதே புளி அதிகம் காய்த்தால் பருவம் பொங்கும் என்பார்கள். இப்படி நம் வாழ்வில் பருவங்களோடு கூடத் தொடர்பு உடையது மாங்காய்.

வேதங்களிலேயே " மா" பற்றிய குறிப்புகள் இருப்பதாகச் சொல்கின்றனர். மாம்பழங்கள் பற்றிய குறிப்புகள் கி.மு. 4000 ஆம் ஆண்டிலேயே இருந்ததாகக் கேள்விப் படுகிறோம். பழத்தை அப்படியே உணவாகவும், அதன் சாறைக் குடிப்பதன் மூலமும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.  இது பெரும்பாலும் வெப்பப் பிரதேசங்களில் அதாவது புவிமையக்கோட்டுக்கு அருகே இருக்கும் பிரதேசங்களில் (ஹிஹிஹி, பூமத்திய ரேகை! இது வடமொழி என்பதால் புவிமையக்கோடு! )விளையும் கனி ஆகும். முக்கியமாய் இந்தியா, வங்காளம்(இப்போதைய பங்களா தேஷ், தென் ஆசியா ஆகிய பகுதிகளில் அதிகம் விளைகின்றன.  கோடைக்காலங்களிலேயே அதிகம் கிடைக்கும் இந்தப் பழத்தின் விளைச்சல், ஏற்றுமதி, தரம் எல்லாவற்றிற்கும் இந்தியாவே பெயர் பெற்ற நாடாக இருந்து வருகிறது.

1800 களில் ஆங்கிலேயர்களால் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டதாகக் கூறும் இந்தப் பழம் பின்னர் ஃப்ரெஞ்சு மற்றும் போர்ச்சுக்கீசிய வியாபாரிகளால் ஃபிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது.  மாமரம் சுமார் 35 அல்லது 50 மீட்டர் வரை உயரமாக வளரக் கூடிய தன்மை கொண்டது.  இலைகள் விரைவில் வாடாது. பசுமையுடனேயே காணப்படும். செம்பு நிறத்தில் வரும் இளந்தளிர் இலைகளை எடுத்து உலர்த்திப் பொடி செய்து சூரணமாக்கி தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும். இலைகளைத் தேன் விட்டு வதக்கிக்குடிநீரில் போட்டு ஊற வைத்து அந்த நீரை அருந்தினால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும். சுவாசக் கோளாறுகளுக்கும் இது அருமருந்தாகும்.

Image result for மாங்காய்

தீப்புண்களுக்கு மாவிலையைச் சுட்டுச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலோடு வெண்ணெயைக் கலந்து பூசி வந்தால் விரைவில் குணமாகும்.  மாம்பூவையும் நிழலில் உலர்த்திப் பொடித்துத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். மாம்பிசின் காலில் வரும் பித்தவெடிப்புக்கு அருமருந்து. மாமரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் நிரம்பியவை.  மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பு மிகவும் அதிகமான மருத்துவ குணம் கொண்டது. இதைக் குழம்பு அல்லது கஷாயம் போல் வைத்துச் சாப்பிடலாம். முக்கியமாய்ப் பிரசவம் ஆனவர்களுக்குச் செய்யும் பத்தியச் சாப்பாட்டில் மாங்கொட்டைப் பருப்பைப் போட்டு மிளகு சேர்த்துக் குழம்பு தயாரித்துக் கொடுப்பார்கள்.

Image result for மாங்காய்

படங்கள், நன்றி கூகிளார்
உலக மாம்பழத்தேவையில் பாதிக்கு மேல் இந்தியாவால் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதோடு மக்களால் உண்ணவும் படுகிறது. மாங்காயை வைத்த பல்வேறு விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஊறுகாய் வகைகள், பழச்சாறு வகைகள், ஜாம், ஜெல்லி வகைகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன. முக்கியமாய் சாப்பாட்டில் தொட்டுக்கொள்ளப் பயன்படும் உணவுகளில் மாங்காய் ஊறுகாய்க்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. "மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்!" என்னும் வழக்குச் சொல் இருக்கிறது. மாங்காயின் சக்தி அவ்வளவு பெரியது.

மாங்காய் தொடரும்!

Friday, July 14, 2017

உணவே மருந்து! முருங்கை 4

முருங்கைக்காய்க் குழம்பு! இதை வெறும் குழம்பு என்றே சொல்லணும். என்றாலும் என் மாமியார் வீட்டில் முருங்கைக்காய் வத்தக்குழம்பு என்பார்கள். இது செய்யத் தேவையான பொருட்கள். வழக்கம்போல் முருங்கைக்காய்கள் உங்க இஷ்டத்துக்கு எடுத்துக்கலாம்.

நேத்திக்கும் நம்ம ரங்க்ஸ் 3,4 முருங்கைக்காய்கள் வாங்கி வந்துட்டார். அப்படியாவது சர்க்கரை குறையாதா என்ற சபலம். ஆனால் அவருக்கு என்னமோ அரை இட்லி அதிகம் ஆனால் கூட சர்க்கரை எகிறும். அதுவே எனக்குச் சாப்பிட்டால் ஏறாது. சாப்பிடும் முன்னர் கொஞ்சம் கூட இருக்கிறாப்போல் தெரியும். 110க்குக் கீழே இருக்க வேண்டியது 124 அல்லது 130 என இருக்கும். அதுக்கெல்லாம் நான் கவலைப்படறதே இல்லை.

முருங்கைக்காய்கள் 2

புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்து ஒன்றரைக்கிண்ணம் சாறு எடுத்துக் கொள்ளவும்.

சாம்பார்ப் பொடி 2 டீஸ்பூன். (நம்ம வீட்டிலே ரசப்பொடிதான், அதைத் தான் இந்த மாதிரிக் குழம்புகளுக்குப் போடுவோம்.)

உப்பு தேவையான அளவு

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு,

கடலைப்பருப்பு, துபருப்பு, உபருப்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு

பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

கருகப்பிலை ஒரு ஆர்க்கு

அடுப்பில் உருளியை வைத்து அல்லது கடாய் அல்லது நான் ஸ்டிக் பான் ஏதோ ஒண்ணை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் முதலில் பெருங்காயம் கட்டி எனில் போடவும். கூடவே கடுகையும் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பருப்புவகைகள், வெந்தயம் சேர்க்கவும். மி.வத்தல், கருகப்பிலை சேர்க்கவும். முருங்கைக்காய்களை நீளவாட்டத்தில் நறுக்கி தாளிதத்தில் சேர்த்து நன்கு பிரட்டிக் கொடுக்கவும். ஒரு இரண்டு நிமிஷம் முருங்கைக்காய்கள் வதங்க வேண்டும். பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு ஓரளவுக்குக் கெட்டியாகவும் வரும். அதே சமயம் புளிவாசனை, பொடிவாசனை போகக் கொதித்தும் இருக்கும். அப்போது இறக்கி வைக்கவும். அல்லது குழம்பிலிருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் இறக்கவும். சூடான பருப்பு சாதம் (நெய் ஊற்றியது) அல்லது நெய் ஊற்றிய வெறும் சாதத்தோடு இந்தக் குழம்பைப் பரிமாறவும்.

முருங்கைக்காய்ப் பொரிச்ச குழம்பு

இதற்குத் தான்கள் நிறைய இருந்தால் தான் நன்றாக இருக்கும். நான்கு பேர் என்றால் குறைந்தது நடுத்தர அளவு முருங்கைக்காய் ஏழு, எட்டு அல்லது பத்து வரை தேவை. எல்லாவற்றையும் நீளவாட்டத்தில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு உருளி அல்லது, கடாயைக் காய வைத்து தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு முருங்கைக்காய்களை அதில் போட்டு வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு தம்பளர் தண்ணீரில் வேக விடவும். இது ஒருபக்கம் இருக்கட்டும்.

பாசிப்பருப்பு குழைய வேக வைத்தது அரைக்கிண்ணம்

வறுத்து அரைக்க

தே எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைத்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் முருங்கைக்காய்களில் காய்கள் நன்கு வெந்ததும் வெந்த பாசிப்பருப்பைச் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் கீழே இறக்கி வைத்து ஒரு இரும்புக்கரண்டியில் தே.எண்ணெய் ஊற்றிச் சூடாக்கிக் கடுகு, உபருப்பு, ஒரு சின்ன மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் குழம்பில் ஊற்றவும். தேவையானால் பச்சைக்கொத்துமல்லி ஊற்றிச் சூடான சாதத்தோடு பரிமாறவும்.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை அடையில் சேர்க்கலாம். பருப்பு உசிலி செய்யலாம். பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய் போட்டுக் கறி மாதிரிச் செய்யலாம். வெங்காயம் தக்காளி சேர்த்து நெய் ஊற்றி வதக்கலாம். (இதைச் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடலாம்.)

முருங்கைக்கீரை அடை:

எப்போதும் அரைக்கிறாப்போல் அடைக்கு அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை ஆய்ந்து நறுக்கிச் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடை மாவில் இந்த கீரையைச் சேர்க்கவும். தோசைக்கல்லைக் காய வைத்து அடையாக வார்க்கவும். கொஞ்சம் கனமாகவே வரும். முடிந்த வரை மெலிதாக ஆக்கவும். அடை ஒரு பக்கம் வெந்த பின்னர் திருப்பிப் போட்டு வேக வைத்துச் சூடாகப் பரிமாறவும்.

முருங்கைக்கீரைப் பருப்புசிலி

முருங்கைக்கீரையை ஆய்ந்து நறுக்கிச் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு+ கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து ஒன்றரைக்கிண்ணம் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறினால் போதும். காலை ஒன்பது மணிக்குள் சமைக்கிறாப்போல் இருந்தால் காலை எழுந்ததுமே ஐந்து மணிக்கு ஊற வைக்கலாம். ஏழு மணி ஏழரைமணிக்கெல்லாம் அரைக்க முடியும்.

அரைத்த விழுதை நறுக்கிய முருங்கைக்கீரையோடு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இட்லிப்பானையில் ஒரு ஒற்றைத்தட்டில் துணி அல்லது இலையைப் போடவும். இதைப் பழங்காலம் என்போர் ஓட்டைகள் இல்லாத ஒற்றைத் தட்டில் நன்கு ததும்ப எண்ணெய் தடவி முருங்கைக்கீரைக்கலவையை அதில் பரத்தவும். துணி அல்லது இலை போட்டிருந்தால் அவற்றில் பரப்பவும். மூடி வைத்து வேக விடவும். பதினைந்து நிமிஷம் ஆகும் முருங்கைக்கீரை வேக! அதன் பின்னர் வெளியே எடுத்துக் கைகளாலேயே உதிர்க்கலாம்.

வாணலியில் சமையல் எண்ணெய் அல்லது தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்புத் தாளித்துக் கொண்டு உதிர்த்த கலவையைப் போட்டு நன்கு கிளறவும். உதிர் உதிராக வரும். அதோடு கொஞ்சம் முறுகலாகவும் வர ஆரம்பிக்கும். அப்போது கீழே இறக்கிச் சூடான சாதம், குழம்புடன் பரிமாறவும். இதிலேயே சூடான சாதத்தைப் போட்டுக் கொண்டு நெய் ஊற்றிக் கொண்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.