எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, August 20, 2010

கொஞ்சம் கை வைத்தியமும் தெரிஞ்சுக்குங்களேன்!

மூல வியாதி இருப்பவர்களுக்கான கை மருந்துகள்.

ஒரு ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் நெய்யும் எடுத்துக் குழைத்துக் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.

ஒரு பூவன்பழத்தை வேகவைத்து நெய், சர்க்கரையோடு சேர்த்து இரவில் படுக்கும்போது தினமும் சாப்பிட்டு வரலாம்.

பாகற்காய்க் கொடியின் இலைகளைப் பறித்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.

சாதம் வடிக்கும் கஞ்சியில் ஒரு சிட்டிகை உப்புப் போட்டுக் குடிக்கலாம்.

மணத்தக்காளிக் கீரையின் சாறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மலச்சிக்கல் இருக்கிறவங்க இரவு படுக்கப்போகும்போது நெய் ஒரு ஸ்பூனில் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் குழைத்துச் சாப்பிடணும்.

இந்த மாதிரிக் குழைத்துச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாமே மருந்துகள் என்பதால் நன்கு நாக்கில் படும்படியாக உள்ளங்கையில் வைத்து நக்கிச் சாப்பிடவேண்டும். உமிழ்நீரோடு கலக்கவேண்டும்,

அடுத்து குழந்தைகளுக்கு வயிற்றில் வலி என்றால் அழும் குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டால் வயிறு நம் மீது அமுங்கும்போது கொஞ்சம் அழுகை நிற்கும். அதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பிள்ளை மருந்து என்னும் வசம்பை நெருப்பில் சுட்டுக் கரியாக்கி, நெருப்புன்னா காஸ் அடுப்பெல்லாம் கூடாது. விளக்கு எரியும் இல்லையா அந்தச் சூடில். ஸ்வாமிக்கு ஏத்தும் விளக்கில் கூடச் சுடலாம். நன்கு கறுப்பானதும், அதை எடுத்துப் பொடியாக்கி விளக்கெண்ணெயில் போட்டுக் குழைத்து வயிற்றைச் சுற்றிப் போடலாம்.

வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி மேலே சொன்னாற்போல் நெருப்பில் வாட்டி, பொறுக்கும் சூட்டில் குழந்தையின் வயிற்றில் போடவும். சூடு பார்த்துக்கணும். குழந்தைகளுக்குச் சூடு தாங்காது.

ஓமத்தை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு பாலாடை/சங்கு ஓமத் தண்ணீருக்கு அரைஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும். உடனடி நிவாரணம் உத்தரவாதம்.

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது இப்போதெல்லாம் வழக்கமே இல்லாமல் போயாச்சு. அப்படி வழக்கம் இருக்கிறவங்க குழந்தையைக் குளிப்பாட்டும் நாளன்று ஒரு வெற்றிலை, கொஞ்சம் உப்பு, ஒரு இரண்டு பல் பூண்டு, ஓமம் வைத்து அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும். ஒரு சங்கு/பாலாடை இருந்தால் போதும். குழந்தைக்குக் கொடுக்கவும். இது கொடுத்து ஒரு அரை மணி நேரம் ஆகாரம் கொடுக்கக் கூடாது. குழந்தையின் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

பெண்களுக்குப் பருவ வயதில் முகப்பருவா? வேனல் கட்டிகளா? மேலே சொன்ன வசம்பையும், கஸ்தூரி மஞ்சளையும் எடுத்துச் சந்தனக்கல்லில் உரைத்து முகத்தில் தடவிக்கவும். இரவு தினமும் தடவிண்டு காலையில் முகத்தை அலம்பினால் கட்டியோ, பருவோ வந்த அடையாளம் கூட முகத்தில் இருக்காது. சொந்த அநுபவம் உண்டு. அப்படியும் கரும்புள்ளிகள் இருந்தால் குப்பைமேனிக்கீரையோடு, வெற்றிலையும் சேர்த்து அரைத்துச் சாறை முகத்தில் பூசிப் பத்து நிமிஷம் ஊறிவிட்டுக் குளிக்கலாம். இதுவும் சொந்த அநுபவம் உண்டு.

தேங்காய்ப்பாலோடு அல்லது பசும்பால், இல்லாட்டியும் பரவாயில்லை, பாலோடு கசகசாவை ஊறவைத்து அரைத்து முகத்தில் மற்றும் சூரியக் கதிர்கள் படும் இடங்களில் தேய்த்து ஊறிவிட்டுக் குளிக்கலாம். இவை எல்லாமே நம்ம சமையலறையில் கிடைக்கும் பொருட்கள். அவற்றைக் கொண்டே பயன்பெறலாம் இல்லையா?

இவை இன்னும் தொடரும். நடு, நடுவில் வரும்.