எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, January 26, 2016

சூடான மிளகு ரசம்!

முதல்லே சுக்கு, மல்லிக் காஃபியில் ஆரம்பிக்கலாமா? பெயர் தான் சுக்குமல்லிக் காஃபியே தவிர இதிலே மிளகும் சேர்க்கணும். மிளகு 50 கிராம் எனில் 100 கிராம் சுக்கு, 400 கிராம் தனியா என்னும் கொத்துமல்லி விதை, ஏலக்காய் 10 அல்லது பதினைந்து. எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டுப் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் தேவைப்படும்போது இரண்டு டீஸ்பூன் இந்தச் சுக்குமல்லிப் பொடியில் ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பாதியாகக்குறுகும்போது கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்க்கவும். கொஞ்சமாகத் தான் போடணும். பின்னர் வடிகட்டிச் சூடாகச் சாப்பிட்டுப் பார்க்கவும். அருமை! இதற்குப் பலரும் பால் சேர்க்கின்றனர். ஆனால் பால் சேர்க்காமல் அருந்தினால் தான் இதன் சுவை மட்டும் இல்லாமல் இதன் பலனும் கிடைக்கும். சென்னையில் அநேகமாக எல்லாக் காதி பவனிலும் இந்தப் பவுடரும் தயாரித்து விற்பனை செய்வதோடு சில காதி பவன்களில் காஃபியே தயாரித்தும் சூடாக விற்கின்றனர். காரசாரமான கொண்டைக்கடலை, பட்டாணி சுண்டலும் அதோடு விற்பார்கள். சுண்டலைச் சாப்பிட்டுவிட்டு இந்தக் காஃபியைக் குடித்தால் சொர்க்கம் பக்கத்தில். இங்கே திருச்சியில் சிந்தாமணியில் கிடைப்பதாகச் சொல்கின்றனர். நாங்க முயன்றது இல்லை.

அடுத்து மிளகு மட்டும் சேர்த்த கஷாயம்

ஒரு சின்னக்கரண்டி மிளகையும் நாலைந்து ஏலக்காயையும் வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டுப் பொடித்துக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு 200 கிராம் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றும்போது பனங்கல்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொண்டு சூடாக இருக்கையில் குடிக்கவும். ஜூரம், தலைவலி, ஜலதோஷம், தொண்டை வலி போன்றவற்றிற்குச் சிறந்த நிவாரணம்.

வெறும் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் மிளகுபொடியைச் சேர்த்துக் கொண்டு அந்த வெந்நீரைக் குடித்து வந்தால் தொண்டைக்கும், குரலுக்கும் நன்மை தரும். நோய்த்தொற்றின் காரணமாகத் தலையில் மயிர் உதிர்ந்து வழுக்கையானவர்கள் மிளகுத்தூளோடு, வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வழுக்கை உள்ள இடங்களில் நன்கு தேய்த்து வர வர, முடி மீண்டும் வளரும் எனச் சித்தமருத்துவர்கள் கூறுகின்றனர்.  சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு சமமாக எடுத்துக் கொண்டு தூள் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர அஜீரணம், வாயுத் தொல்லைக்கு நல்ல பலன் கிடைக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்த மருந்துகளைத் திரிகடுகம் எனச் சொல்லுவார்கள்.

விஷக்கடிக்கு அருகம்புல்லோடு மிளகையும் சேர்த்து அரைத்துக் கஷாயம் போட்டுக் குடித்தால் நல்லது. தினமும் இரவில் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன், கால் டீஸ்பூன் மிளகுத்தூளும் சேர்த்து அருந்தி வர ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைப்புண் போன்றவை குணமாகும். காலில், கையில், கழுத்தில் ஏற்படும் சுளுக்கு மற்றும் சில கீல்வாதங்களுக்கு ஒரு மேஜைக்கரண்டி மிளகுத்தூளோடு நல்லெண்ணெய் கலந்து சூடு பண்ணிப் பற்றாகப் போட்டு வர குணம் தரும். பல்வலிக்கும் மிளகு நல்லதொரு மருந்து. மிளகுத்தூளோடு உப்பு சேர்த்துப் பல் துலக்கினால் பல்வலி, சொத்தைப்பல், ஈறு வலி, ஈறுகளில் ரத்தம் கசிதல், வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கு நல்லது. (கோல்கேட்காரங்களுக்குத் தெரிய வேணாம்பா! அப்புறம் உப்பு, வேம்பு, கரித்தூளோடு, மிளகையும் சேர்த்து ரசம் வைனு சொல்வாங்க)

மிளகு ரசம் சுலபமான முறை

இரண்டு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் ஜீரகம், பச்சையாகப் பொடிக்கவும்.

தாளிக்க: நெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, மி.வத்தல்(தேவையானால்)

ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுப் புளி எடுத்து அலசி ஊற வைத்துப் பின்னர் புளியைச் சாறு எடுக்கவும். தனியே வைக்கவும்.

புளிக்கரைசலில் உப்பு, மஞ்சள் பொடி, தக்காளி, பெருங்காயம் சேர்த்துக் கருகப்பிலையைக் காம்போடு போட்டுக் கொதிக்கவிடவும்.

புளி வாசனை போகக் கொதித்ததும் அதைத் தேவையான நீர் விட்டு விளாவி வைக்கவும்.

இப்போது அடுப்பில் ஓர் வாணலி அல்லது இரும்புக் கரண்டியைப் போட்டு நெய்யை ஊற்றவும். பொடி செய்து வைத்துள்ள மிளகு, சீரகப் பொடியை ரசத்தின் மேலே போடவும். காய்ந்திருக்கும் நெய்யில் கடுகு, கருகப்பிலை, மிவத்தல் போட்டு அதை அப்படியே நெய்யோடு சேர்த்து ரசத்தில் கொட்டவும். சூடான மிளகு ரசம் தயார்.

மிளகு சமையல்கள் தொடரும்!

Monday, January 25, 2016

உணவே மருந்து! --மிளகு தொடர்ச்சி!

சுமார் நான்கு அல்லது ஐந்து மீட்டர் உயரம் வரை மிளகுக் கொடிகள் வளரும்.படரும் கொடி வகையைச் சேர்ந்தது இது. ஊட்டி போன்ற மலை வாசஸ்தலங்களில் இவை பாக்கு மரங்களைச் சுற்றிப்படர்ந்து காணப்படும். எனினும் தரையிலும் வளரும் கொடி வகை இது.  இலைகள் வெற்றிலை போல் காணப்படுமாதலால் இதற்கும் வெற்றிலைக்கொடிக்கும் வேறுபாடு தெரியாது.  இலைகள் வெற்றிலையை விடக் கொஞ்சம் நீள, அகலமாகக் காணப்படும். மலர்கள் மலர்க்காம்பில் பூக்கும். காம்பு ஊசியைப் போல் காட்சி அளிக்கும். மலரில் காய்கள் தோன்றுகையில் சுமார் பதினைந்து சென்டி மீட்டருக்கு வளர்ந்து இருக்கும். ஒரு சரத்தில் சுமார் 20 முதல் 25 அல்லது முப்பது வரை காய்கள் இருக்கும். பச்சை மிளகைப் பதப்படுத்தி எலுமிச்சைச்சாறு உப்பு சேர்த்து மிளகு ஊறுகாய் போடுவார்கள். பழம் முற்றியதும் பறித்து வெயிலில் காய வைத்தால் நாம் அன்றாடச் சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகாகி விடும்.

மிளகுப்பயிருக்கு மழைப்பொழிவு, வெப்பம், நிழல் அனைத்துமே சீரான அளவில் தேவைப்படும். தென்னிந்தியாவில் கேரளம், குடகு மலைப் பிராந்தியங்கள், மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் பயிராகிறது. மிளகு பயிரிடும் முறை இந்தியாவிலிருந்தே மற்ற நாடுகளுக்குப் பரவியது. மிளகுக் கொடிக்கு மிதமான ஈரப்பதம் தேவை. கொடியின் தண்டுப் பகுதியை வெட்டி 40, 50 சென்டிமீட்டரில் துண்டுகளாக்கி நடுவதன் மூலம் இது பயிராகிறது. பொதுவாகவே பெரிய மரங்களின் அருகாமையில் இது பயிராக்கப்படுகிறது. பின்னால் கொடி படரவும் மரங்கள் துணை செய்யும். மூன்று ஆண்டுகள் மிகக் கவனமுடன் வளர்க்கப்படும் இந்தக் கொடிகள் நான்காம் ஆண்டிலிருந்து பலன் கொடுக்க ஆரம்பித்து அதன் பின்னர் மூன்று நான்கு ஆண்டுகள் பலன் தரும். ஒவ்வொரு காம்பிலும் 20 அல்லது 30 பழங்கள் இருக்கும். இவை சிவப்பாகிப் பழுத்தவுடன் பறித்துக் காய வைப்பார்கள்.  இது வேறு வால் மிளகு வேறு. வால் மிளகுக்கு நுனியில் வாலைப் போல் சிறிதாகக் காணப்படும். இதுவும் மருத்துவ குணம் கொண்டதே! மூலிகைக் கொடியில் காய்க்கும்.
Image result for மிளகு
கருமிளகு என்பது நாம் அன்றாடம் பயன்படுத்துவது ஆகும்.  அநேகமாகப் பழுக்காத சிறு மிளகுக்காய்களைப் பறித்து வெந்நீரில் ஊறவைத்துப் பின்னர் உலர வைத்து இவை பதப்படுத்தப்படுகின்றன.  பழுத்த மிளகுப் பழங்களை ஒரு வாரம் போல் நீரில் ஊற வைத்துப் பழத்தின் சதை அழுகியதும் அதை அகற்றிவிட்டு விதைகளை  அலசி உலர்த்தி வெண் மிளகாக விற்பனைக்கு வருகின்றன. பச்சை மிளகு பழுக்காத சிறு மிளகுக்காய்களை உலர வைத்துப் பச்சை நிறத்தைத் தக்க வைக்கக் கந்தக டை ஆக்சைடு அல்லது வினிகருடன் கலந்து ஊற வைத்துப்பதப்படுத்தப்படுகிறது.  பழுத்த மிளகுப் பழங்கள் வினிகரில் ஊற வைக்கப்பட்டால் சிவப்பு நிறம் பெறும். மற்றும் பல வேதியியல் பொருட்களைச் சேர்த்தும் சிவப்பு மிளகு தயாராகிறது.
Image result for மிளகு

படங்களுக்கு நன்றி தினமலர் தினசரி கூகிளார் வாயிலாக


மிளகு சித்த வைத்திய முறையிலும், பாட்டி வைத்தியத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சுக்கு, மல்லிக் காஃபி தயாரிப்பில் மிளகு முக்கியத்துவம் பெறுகிறது. மிளகு சிறந்த நச்சு முறிவு மேலும், சளி, கோழையை அகற்றும். வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும். வீக்கத்தைக் கரைக்கும். சுரத்தை அகற்றும். உணவிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி உணவை ஜீரணிக்க வைக்கும் தன்மை கொண்டது.

இனி மிளகு சமையல் குறிப்புகள் அடுத்த பதிவில் தொடரும்!

Sunday, January 24, 2016

உணவே மருந்து--- மிளகு

மிளகு எப்போது என்று தெரியாத காலத்தில் இருந்தே நம் நாட்டில் உணவில் காரம் சேர்ப்பதற்குப் பயன்பட்டு வருகிறது. மிளகாய் வெளிநாட்டில் இருந்து வந்த காரணத்தால் இப்போதும் மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள் மிளகாயை உணவில் சேர்ப்பதில்லை. மிளகாயை உணவில் சேர்ப்பவர்கள் கூட விசேஷ நாட்கள், பண்டிகைகள், சிராத்தம் போன்ற தினங்களில் மிளகாய் சேர்க்க மாட்டார்கள்.  தமிழ்நாட்டில்  பெருமாள் கோயில்களில் புளியோதரை தயாரிக்க மிளகையே பயன்படுத்துகிறார்கள். கோயிலில் வெளியே பிரசாதக்கடைகளில் விற்கும் புளியோதரை அல்ல!  கோயிலில் கோஷ்டி நடைபெறும்போது தருவார்களே அந்தப் புளியோதரை! அதான் ஒரிஜினல் பிரசாதம்! :)
Image result for மிளகு

படத்துக்கு நன்றி கூகிளார்

கேரளம் நீண்ட நெடுங்காலமாக மிளகை வணிகத்தில் பயன்படுத்தி வருகிறது.  ஒரு கால கட்டத்தில் பணத்துக்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஏற்றுமதியில் மிளகு சிறந்த லாபத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது; அது இன்னமும் தொடர்கிறது. தென்னிந்தியத் தட்பவெப்ப நிலை மிளகுக் கொடி வளர்ந்து படருவதற்கு ஏற்றதாக அமைந்திருப்பதால் தென்னிந்தியாவிலேயே மிளகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தியாவிலிருந்தே மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததால் உலகின் வர்த்தகத்தையே ஒரு காலத்தில் அது மாற்றி அமைத்தது என்றால் மிகை இல்லை.  ஏனெனில் லண்டனில் மிளகின் விலை ஐந்து ஷில்லிங் ஏறியதால் தான் வர்த்தகம் செய்யக் கிழக்கிந்தியக் கம்பெனி துவங்கப்பட்டு இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்து ஆளவும் தொடங்கினர். ஆகையால் உலகின் வரலாற்றை முக்கியமாய் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் மிளகின் பங்கு முக்கியமானது.

ஐரோப்பியக் குடும்பங்களில் திருமணத்தின்போது பெண்ணிற்கு மிளகைச் சீதனமாகக் கொடுக்கும் மரபு இருந்து வந்ததாகவும், அதன் மூலம் அந்தப் பெண்ணின் செல்வச் செழிப்பை எடை போட்டதாகவும் கூறுகின்றனர். நறுமணப் பொருட்களின் தேவையும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் இருந்து வந்தது. ஆகவே இந்தியாவில் அதன் உற்பத்தி அதிகம் என்பதால் இந்தியாவுக்கான கடல் வழி வாணிகத்திற்கென முயன்று கடல்வழியைக் கண்டுபிடித்தனர். இதன் மூலமே இந்தியாவை ஆளவும், அமெரிக்கக் கண்டங்கள் கண்டு பிடிக்கவும் வகை செய்தது.

கிறிஸ்துவுக்கு முன்னர் எகிப்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் பெரும் செல்வந்தர்களும், மன்னர்களும் மட்டுமே மிளகைப் பயன்படுத்தி இருக்கின்றனர். மிளகுக்குப் பெருமளவு தட்டுப்பாடும் அப்போது இருந்து வந்திருக்கிறது. அரபிக்கடலோரமாக நீர் மார்க்கவழியிலும், நில மார்க்க வழியிலும் குறைந்த அளவு மிளகே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. எகிப்தும் உரோமாபுரிப் பேரரசும் இணைந்த பின்னர் கேரளத்திலிருந்து ஐரோப்பாவுக்குக் கடல் வழி வாணிகம் கப்பல்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. பருவக்காற்று வீசும் காலங்களில் சுமார் 120 கப்பல்கள் வரை இங்கே வந்துள்ளன. மிளகைத் தவிர மற்ற நறுமணப் பொருட்களும், முத்து, வைரம் போன்றவையும் மத்திய ஆசியாவுக்குச் செங்கடல் வரை கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் நில வழியாகவும், நைல் நதியின் கால்வாய்கள் மூலம் நீர் வழியாகவும் மத்திய தரைக் கடல் வரை எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் கப்பல் மூலம் கடல் மார்க்கமாக ரோமாபுரிக்குச் சென்றதாக அறிகிறோம்.  இனி மிளகுச் செடியின் வரலாறும் அதன் பயன்களும் குறித்து அடுத்து அறிவோம்.

மிளகு பற்றிய வரலாறு தொடரும்!



உணவே மருந்து-- சில முக்கியப் பகிர்வுகள்!

இன்று ஶ்ரீரங்கம் மேலச் சித்திரை வீதியில் அம்பத்தூர் நண்பர்கள் ஒருத்தர் வீட்டு சீமந்தத்துக்குச் சென்றிருந்தேன். பெண்ணின் புகுந்த இடம் ஶ்ரீரங்கம். மிக அருமையாக சீமந்தம் நடந்ததோடு கடைசியில் மணமக்களை வாழ்த்தி வீணை வாசித்துப் பாசுரங்கள் பாடி மங்களம் பாடி அனைவரையும் மகிழ்வித்தும் தம்பதிகளையும் வாழ்த்தியும் முடித்தனர். இதற்கு முன்னாலும் வைணவர்கள் வீட்டு சீமந்தங்களில் கலந்து கொண்டிருந்தாலும் இம்மாதிரிப் பார்த்தது இல்லை.

அதோடு சாப்பாடும் அருமையான ருசியோடு தயாரிக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் பரிமாறுபவர்களும் கேட்டுக் கேட்டுப் பரிவோடு பரிமாறினார்கள். ஒரு சில கல்யாணங்களில் சாம்பார் சாப்பிடும்போதே பக்கத்தில் உள்ளவர் ரசத்துக்கு வந்தால் நமக்கும் அதிலேயே சாதத்தைப் போட்டு ரசத்தையும் மேலேயே ஊற்றிவிட்டுப் போவார்கள். அப்படி இல்லாமல் சாம்பார் சாப்பிட்டு முடித்ததும், சாதம் கேட்டுவிட்டுச் சாற்றமுது சாதிக்கலாமா எனக் கேட்டுவிட்டே பரிமாறினார்கள். ரசம் சாப்பிட்டதும் திருக்கண்ணமுது நான் சாப்பிடும்போது பக்கத்தில் ரங்க்ஸ் மோர் சாப்பிட்டார். பரிமாறுபவர் அவருக்கு மோரைப் பரிமாறிவிட்டு அங்கேயே நின்று நான் திருக்கண்ணமுது சாப்பிட்டு முடித்து மோர் பரிமாறலாம் என்றதுமே மோர் பரிமாறினார்.


 சில மாதங்கள் முன்னர் சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் சாப்பிட்டபோது சமையல் ஒப்பந்தம் எடுத்துச் செய்தவரும் தெரிந்தவரே எனினும்,  ரசம் சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே மோருக்கு சாதத்தைத் தள்ளிவிட்டு அதன் மேல் மோரையும் ஊற்றிவிட்டுச் சென்றனர்.   கூட்டாஞ்சோறு சாப்பிடுவதை விட மோசமாக இருக்கும். ரொம்பவே மனதுக்கு வேதனையாக இருந்தது. இங்கே அப்படி நடக்கவில்லை.  சாப்பாடு வயிற்றுக்கு மட்டுமில்லாமல் மனதுக்கும் நிறைவாக இருந்தது.  இத்தனைக்கும் வீட்டு மனிதர்கள் யாரும் அங்கே வந்து நின்று கொண்டு பந்தி விசாரணையோ மேற்பார்வையோ பார்க்கவில்லை. எனினும் நல்ல முறையில் விருந்தினர்களை நடத்திய அந்தச் சமையல்காரரின் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இதை இங்கே எழுதக் காரணமே சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு எப்படிப் பரிமாறுவது என்பதையும் சொல்லவேண்டும் என்ற காரணமே!