எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, July 16, 2019

பாரம்பரியச் சமையல்கள்! பொரிச்ச குழம்பு வகைகள்!

பொதுவாகப் பொரிச்ச குழம்பு எனில் பத்தியத்திற்குத் தான் பண்ணுவார்கள். பிரசவம் ஆன பெண்களுக்குப் பண்ணிப் போடுவார்கள். ஆகையால் இதற்கென உள்ள காய்கள், புடலங்காய், அவரைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றையே மாற்றி மாற்றிச் செய்வார்கள். எல்லோரும் சாப்பிடப் பண்ணினால் முருங்கைக்காய், கீரைத்தண்டு, கொத்தவரைக்காய் ஆகியவற்றிலும் பண்ணலாம். சிலர் 2,3 காய்கள் சேர்த்துப் போட்டும் பண்ணுவார்கள். இந்தப் பொரிச்ச குழம்பு வெறும் மிளகு, சீரகப் பொடி மட்டும் போட்டுப் பண்ணினால் அது பத்தியத்திற்கென உள்ளது. தேங்காய் சேர்த்தால் எல்லோரும் சாப்பிடலாம். இதிலும் ஒரு சிலர் பொடி போட்டுப் பண்ணுவார்கள். பொடியும் போட்டு அரைச்சும் விட்டு எங்க மாமியார் வீட்டில் பண்ணுவாங்க. முதலில் மிளகு, சீரகப் பொடி மட்டும் போட்டுப் பண்ணுவது.

புடலைப் பொரிச்ச குழம்பு!

கால் கிலோ புடலங்காய்க்குப் பாசிப்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு கரண்டி போதும்.
உப்பு தேவைக்கு
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் சிலர் பருப்பிலே சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம் போல் செய்யலாம்.
மிளகு பொடி ஒரு டீஸ்பூன், காரம் அதிகம் தேவை இல்லை எனில் அரை டீஸ்பூன். பிரசவம் ஆனவர்களுக்குத் தேங்காய் சேர்க்க மாட்டார்கள். ஆகையால் தேங்காய் வேண்டாம்.

தாளிக்கத் தே,எண்ணெய், கடுகு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம்

புடலங்காயைப் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். காய் நன்கு வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கீழே இறக்கும்போது மிளகு பொடியைச் சேர்க்கவும். இன்னொரு பக்கம் இரும்புக்கரண்டி அல்லது சின்ன வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொண்டு குழம்பின் மேல் விடவும். கொத்துமல்லியும் பிடித்தால் சேர்க்கலாம். இது அதிகம் காரம் இல்லாமல் மென்மையான ருசியில் பிள்ளை பெற்றவர்களுக்குச் செய்வது. இதே முறையில் கத்திரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், போன்றவற்றிலும் செய்யலாம்.

வறுத்து அரைத்த பொரிச்ச குழம்பு!

இதற்கும் தான்கள் ஏதேனும் ஒன்றோ அல்லது 2 காய்கள் சேர்ந்தோ எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு கிண்ணம் நறுக்கிய காய்கள், வெந்த பாசிப்பருப்பு அரைக்கிண்ணம்

உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடி, பெருங்காயம்

வறுத்து அரைக்க:
மி.வத்தல் ஒன்று, மிளகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க தே.எண்ணெய். கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை, ஒரு சின்ன மி.வத்தல், கொத்துமல்லி தேவையானால்.

காய்களை வாணலி அல்லது உருளி அல்லது கல்சட்டியில் அலம்பிப் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு தேவையான நீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து உப்புப் போட்டு வேக வைக்கவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு சிவக்க வறுத்து மிக்சி ஜாரில் போட்டுக் கொஞ்சம் நீர்விட்டு விழுதாக அரைக்கவும். காய்கள் வெந்ததும் வெந்த பாசிப்பருப்பையும் அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொதிக்க விடவும். அதிகம் கொதிக்க வேண்டாம். கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.

அடுத்துத் திருநெல்வேலிப் பக்கம் பண்ணும் பொரிச்ச குழம்பு

காய்கள் மேலே சொன்னவற்றில் ஏதேனும். அல்லது கலந்த காய்களாக இரண்டு கிண்ணம்.

மிளகாய் வற்றல் 3 இரண்டு டீஸ்பூன் மிளகு. இரண்டையும் வெறும் வாணலியில் நன்கு வறுத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

வெந்த பாசிப்பருப்பு அரைக்கிண்ணம், மஞ்சள் பொடி!

உப்பு தேவைக்கு. பெருங்காயம்

ஜீரகம் ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு அல்லது ஊற வைத்த பச்சரிசி இரண்டு டீஸ்பூன்

காய்களை முன் சொன்ன முறையில்  வதக்கிக் கொள்ளவும். தேவையான நீர் விட்டு வறுத்த மிளகு, மிளகாய்ப் பொடியில் தேவையானவற்றை மட்டும் வதக்கும் காயில் சேர்க்கவும். கூடவே மஞ்சள் பொடியும் சேர்க்கவும். பெருங்காயம் போடவும். காயை நன்கு வேக விடவும்.  மிளகாய், மிளகு வாசனை போகக் காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்க்கவும். ஜீரகத்தோடு தேங்காய்த் துருவலை வைத்து அரிசி மாவு ஒரு டீஸ்பூன் அல்லது தேவைக்கு/அல்லது ஊற வைத்த பச்சரிசியை வைத்து நன்கு அரைக்கவும். வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்க்கவும். அரைத்த விழுது ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை, தேவையானால் ஒரு மி.வத்தல் தாளிக்கவும். கொத்துமல்லி பிடித்தால் சேர்க்கலாம்.

Friday, July 12, 2019

தஞ்சை ஜில்லாவின் தனிக்கூட்டு! பாரம்பரிய உணவுகள்!

தனிக்கூட்டு:

இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். அதிலும் சில குறிப்பிட்ட வீடுகளில் தான் இந்தத் தனிக்கூட்டு பண்ணுகின்றனர். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.

இதற்குத் தேவையான காய்கள்:

வாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.

கத்திரிக்காய் கால் கிலோ

பறங்கிக்காய் கால் கிலோ

அவரைக்காய் கால் கிலோ

சேனைக்கிழங்கு கால் கிலோ

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ

பச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்

கறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்

மொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.

கிரேவி தயாரிக்க

புளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.

அரைக்க

மிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல்,  . ஒரு சின்ன மூடி.பெருங்காயம் ஒரு துண்டு,  வறுக்க எண்ணெய். தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

முதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம்( எண்ணெய் பிரிந்து வரும்) இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.

காய்களுக்கு வேக வைத்தவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் நிவேதனம் செய்ய  வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.

பொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும்.

கோங்கூரா கீரை என்னும் புளிச்சகீரையில் குழம்பு!

வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்ற மாதிரி கோங்குரா கீரை ஒரு சின்னக்கட்டு அல்லது சுமாரான கட்டு வாங்கிக் கொள்ளவும். கீரையை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கிவிட்டு அலசி வடிகட்டி வைக்கவும். கீரையை அலம்பிய பின்னர் நறுக்கினால் எனக்குச் சரியாக வரதில்லை. என்பதால் நன்கு பொடிப்பொடியாக நறுக்கிய பின்னரே அலசுவேன். மண்ணெல்லாம் அடியில் தங்கி விடும். கீரையை மட்டும் அரித்துப் போட்டு வடிகட்டி வைப்பேன்.

இதற்குத் தேவையான பொருட்கள்:

சாம்பார்ப் பொடி/ரசப்பொடி/குழம்புப் பொடி= 2 டீஸ்பூன்

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது அரைக்கிண்ணம்

பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு

உப்பு தேவைக்கு பெருங்காயம் கொஞ்சம் போல்

தாளிக்கத் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கருகப்பிலை

இதற்குப் புளி தேவை இல்லை. கீரையே புளிப்பாக இருக்கும் என்பதால் அப்படியே வேக விட்டு மசித்த பின்னர் குழம்பைத் தயாரிக்கலாம்.

ஓர் அடிகனமான வாணலி/உருளி/கல்சட்டியில் நன்கு அலம்பிய கீரையைப் போட்டுக் கொஞ்சமாக நீர் விடவும். பொதுவாகக் கீரைகள் நீர் விட்டுக் கொள்ளும். என்றாலும் இது குழம்பு என்பதால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். தேவையானால் மஞ்சள் பொடி போட்டுப் பச்சைமிளகாயைக் கையால் இரண்டாகக் கிள்ளிப் போடவும். கீரையை நன்கு வேக வைத்துப் பச்சைமிளகாயோடு சேர்த்து மசிக்கவும். இப்போது தேவையான சாம்பார்ப் பொடியைச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். (பெருங்காயம் தாளிதத்தில் கூடச் சேர்க்கலாம்.)  பொடி வாசனை போகக் கொதித்ததும் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். குழம்பு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்து சாம்பார் பதத்துக்குத் தளர்த்திக்கொள்ளலாம். ஒரு கொதி வந்த பின்னர் கீழே இறக்கித் தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும். கோங்குரா கீரை உடல் நலத்துக்கு ரொம்ப நல்லது. எல்லாக்கீரையையும் இப்படிக் குழம்பு பண்ணலாம். ஆனால் மற்றவற்றுக்குக் கொஞ்சம் புளிக்கரைசல் சேர்க்கவேண்டும். கோங்குராவுக்கு மட்டும் வேண்டாம்.

Tuesday, July 9, 2019

பாரம்பரியச் சமையல்களில் திருவாதிரைக்குச் செய்யும் ஏழுதான் குழம்பு!

ஏழுதான் குழம்பு  சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான காய்கள்:
வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று
பறங்கிக்காய் ஒரு கீற்று
வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2
கத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று
பச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்
அவரைக்காய் 100 கிராம்
சேனைக்கிழங்கு கால் கிலோ
சேப்பங்கிழங்கு(விரும்பினால் கால் கிலோ)
சிறுகிழங்கு கால் கிலோ
கொத்தவரைக்காய் 100 கிராம்

இதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். ஆனால் பொதுவாக நாட்டுக்காய்கள் தான் நன்றாக இருக்கும். இப்போதெல்லாம் உருளைக்கிழங்கைக் கூட இந்தக் குழம்பில் போடுகின்றனர். நான் போடுவது இல்லை. அவியலுக்குக் கூட உருளைக்கிழங்கு சேர்க்க மாட்டேன். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரே மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.

கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை

அரைக்க:
மி.வத்தல் பத்து அல்லது பதினைந்து
கொத்துமல்லி விதை 100 கிராம்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
அரிசி ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் ஒரு மூடி

திருநெல்வேலிப் பக்கம்ஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும் பொருட்களோடு சேர்ப்பார்கள். அதைத் தாளகக் குழம்பு என்பார்கள். ஏழுதான் குழம்பில் பருப்பு வேக வைத்துச் சேர்ப்போம். தாளகத்தில் அது கிடையாது. ஆகையால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் முறையில் செய்வது என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். தேங்காய் எண்ணெயில் வறுத்தால் நன்றாக இருக்கும்.  வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.

காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும்.

நேற்றைய பதிவான தாளகக் குழம்பைப் பார்த்து/படித்துவிட்டு என் மாமா பெண் இதுக்கும் களிக்குழம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன எனக் கேட்டிருந்தார். ஆகவே இதை இங்கே பகிர்கிறேன்.

Sunday, July 7, 2019

பாரம்பரிய சமையலில் திருநெல்வேலிக்காரர்கள் செய்முறையில் தாளகம்!

இது முழுக்க முழுக்கத் திருநெல்வேலி முறைப்படியானது. இதுக்குத் தேவையான பொருட்கள். முதல்லே காய்கறி! இங்கே வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி பாரணைக்கு 21 காய்கள் சேர்க்கணும்னு எல்லாத்திலேயும் வெட்டிப் போட்டுக் கொடுக்கிறாங்கனு ஆதி வெங்கட் சொல்லி இருந்தாங்க. நம்ம ரங்க்ஸை அதை வாங்கி வரச் சொன்னேன். எதுக்கும் இருக்கட்டும்னு என்னென்ன காய்கள் என்பதையும் சொன்னேன். 21 காய்கள் கொண்ட பையிலே பாகற்காய், பீன்ஸ், காரட், உ.கி. போன்றவையும் இருந்திருக்கின்றன. எனக்குத் தேவையோ நாட்டுக் காய்கள் தான்! ஆகவே அவற்றில் இருந்து ரங்க்ஸ் சேனைக்கிழங்குத் துண்டங்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்குத் துண்டங்கள், கொத்தவரை, சாட்டைப்பயறு போன்றவற்றைக் கொஞ்சம் வாங்கிக் கொண்டார். பின்னர் வாழைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய், பச்சை மொச்சை, பறங்கிக்காய், பூஷணிக்காய் போன்றவற்றையும் வாங்கிக் கொண்டார். போதுமான காய்கள் சேர்ந்தாச்சு. எல்லாவற்றையும் நறுக்கியும் வைச்சாச்சு!

பச்சைக்காய்கள் நறுக்கியது. வாழைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், கொத்தவரை, சாட்டைப்பயறு, பச்சை மொச்சை, அவரைக்காய், பூஷணி, பறங்கிக்காய் வகைகள். கடாயில் வேகும்போது எடுத்த படம். நீர் குறைவாக வைத்து மூடி வைத்து வேக விட்டேன்.



சர்க்கரை வள்ளிக்கிழங்கும் சேனைக்கிழங்கும் தனியாக வேக வைத்துக் கொண்டேன். இரண்டிலும் கொஞ்சம் போல் உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டு வேக வைத்தேன்.

அடுத்ததாகப் புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொண்டேன். இந்தக் குழம்பிற்குத் துவரம்பருப்பு வேக வைத்துச் சேர்க்கக் கூடாதாம். ஆகவே நோ பருப்பு!

வறுக்க

மி.வத்தல் 3 (காரம் அதிகம் என்பதால் 3 மட்டும்)

துவரம்பருப்பு ஒன்றரை டேபிள் ஸ்பூன்

அரிசி இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை இரண்டு ஆர்க்கு உருவியது

எள் 3 டீஸ்பூன், களைந்து கல்லரித்து முதலில் வறுத்து எடுக்கவும்.

தேங்காய்த் துருவல் சின்ன மூடின்னா ஒரு தேங்காய் மூடி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் துருவல்

இந்த மசாலா சாமான்களை வெறும் சட்டியிலேயே வறுக்கலாம். விருப்பமானால் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். மிவத்தல், துவரம்பருப்பு, அரிசியை வறுத்துவிட்டு அந்தச் சட்டி சூட்டிலேயே கருகப்பிலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவை ஆறியதும் இவற்றோடு எள், தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு நைஸாகப் பொடித்துக் கொள்ளவும்.



எள் வறுத்தது. காமிரா கொஞ்சம் அசங்கி விட்டதால் முழுசா வரலை! மன்னிக்கவும்! :(



மி.வத்தல்



துவரம்பருப்பும் அரிசியும் வறுத்தது!




மிக்சி ஜாரில்   பொடிக்கையில்!




குழம்பு கொதிக்கிறது!

இப்போ வெந்து கொண்டிருக்கும் தான்களை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தை அதில் விட்டுத் தேவையான உப்பை மட்டும் சேர்த்துக் கொதிக்கவிடவும். நிறம் அதிகம் வேண்டும் எனில் மஞ்சள் பொடி சேர்க்கலாம். ஏற்கெனவே காய்கள் வேகும்போது தனித்தனியாக உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே இப்போப் புளி ஜலத்துக்கு மட்டுமான உப்புச் சேர்த்தால் போதும். சேர்ந்து கொதித்ததும் பொடித்த பொடியைப்போட்டுக்கலக்கவும். நன்கு கலக்க வேண்டும். பொடி கட்டியாக ஆகாமல் கலக்க வேண்டும். அது முடியலைனால் தேவையான பொடியை மட்டும் எடுத்துக் கொண்டு அரைக் கிண்ணம் நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு குழம்பில் ஊற்றலாம். பொடி போட்டு ஐந்து நிமிஷம் கொதித்தால் போதும். பின்னர் கீழே இறக்கும் முன்னர் தே.எண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்றே ஒன்று தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி போட்டு இறக்கவும்.


பி.கு. இன்று மதியம் இதான் சாப்பாட்டுக்குப் பண்ணினேன். ரங்க்ஸுக்கு என்ன இருந்தாலும் நம்ம ஏழுதான் குழம்பின் ருசி இதில் இல்லைனு சொல்லிட்டார்! :) ஹெஹெஹெ முக்கியமான ஒண்ணு, பெருங்காயம் சேர்க்கலை! எள் வறுத்துச் சேர்ப்பதால்னு நினைக்கிறேன். ஆனால் பொதுவாகத் திருநெல்வேலி சமையலிலேயே பெருங்காயம் குறைவாகத் தான் சேர்க்கின்றனர்.  பெருங்காயம் சேர்க்காதது தான் குறையோ? தெரியலை! பொதுவாக வெங்காய சாம்பார், வெங்காயம் சேர்க்கும் பொருட்கள், ஜீரக ரசம் போன்றவற்றிற்குப் பெருங்காயம் சேர்க்க மாட்டார்கள்.



குழம்பு கொதிச்சு முடிச்சுத் தாளிதம் ஆன பின்னர்!

பாரம்பரியச் சமையலில் தாளகம் போன்ற குழம்பு வகைகள்!

கடுகு, பாவக்காய்க் குழம்பு.

பாகற்காயில் செய்யும் இதை எங்க மாமியார் வீட்டில் கடுகு, பாவக்காய்க் குழம்புனு சொல்றாங்க. ஆனால் ஊறுகாய்த் தயாரிப்பாளர்கள் இதைப் பாவக்காய்த் தொக்கு எனப் பெயரிட்டு விற்கின்றனர். முதல்லே நானும் என்னமோ, ஏதோ னு நினைச்சேன். அப்புறமாக் கொஞ்சம் போல உறவினர் வீட்டில் வாங்கி இருந்ததைச் சாப்பிட்டுப் பார்த்தால் ஹிஹி, பாவக்காய் அல்வா. :))) இப்போ செய்முறையைப் பார்க்கலாம்.

நல்ல பாகற்காய் கால் கிலோ,

பாகல்காயைப் பொடியாக நறுக்கிக் கொஞ்சம் தயிர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும். 100 கிராம் புளி, கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அல்லது புளியை வறுத்து அரைக்கும் பொருட்களோடு சேர்த்து அரைத்துக் கொண்டாலும் நல்லது. உப்பு தேவையான அளவு, வெல்லம் தூளாக ஒரு டேபிள் ஸ்பூன்.

வறுத்து அரைக்க:

மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் அல்லது விரலி மஞ்சள் ஒரு அங்குலத் துண்டு. மிளகாய் வற்றல் பத்து முதல் பனிரண்டு வரை. ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, மிளகு இரண்டு டீஸ்பூன்(மிளகு கூடவே இருக்கலாம்.) உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு(தேவையானால்) இரண்டு டீஸ்பூன், பெருங்காயம், பச்சைக்கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க: சீரகம், கடுகு, நல்லெண்ணெய், கருகப்பிலை

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நல்லெண்ணெயில் நன்கு வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். கடாய் அல்லது கல்சட்டி(என்னோட விருப்பம் கல்சட்டியே) யில் நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, சீரகம், கருகப்பிலை தாளிக்கவும். நறுக்கி ஊற வைத்த பாகற்காய்த் துண்டங்களை எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும். நன்கு சுருள வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள விழுதைக் கொஞ்சம் போல நீர் சேர்த்து பாகற்காயில் கொட்டிக் கலக்கவும்.காய் வெந்ததும் புளி ஜலத்தைச் சேர்க்கவும்.  உப்புச் சேர்க்கையில் புளிக்கு உள்ள உப்பை மட்டும் சேர்க்கவும். பாகற்காயில் ஏற்கெனவே உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கிறோம். நீர் அதிகமானாலும் பரவாயில்லை. கொதித்துக் கெட்டியாகும்போது சேர்ந்து கொள்ளும். நன்கு சேர்ந்து நல்ல கெட்டியாக வரும்போது வெல்லத் தூளையும் பச்சைக்கடுகுப் பொடியையும் சேர்க்கவும். நன்கு கிளறவும். நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கி ஆறினதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். இது இரண்டு, மூன்று மாதங்கள் ஆனாலும் கெடாது. படம் பின்னர் எடுத்துப் போடுகிறேன்.

கத்தரிக்காய் ரசவாங்கி: நாலு பேருக்கு.

கத்தரிக்காய் பிடிக்குமெனில் குறைந்தது கால் கிலோவுக்குக் குறையாமல் வேண்டும். சின்னதாய் ஒரே மாதிரியாக இருத்தல் நலம். நன்கு கழுவிவிட்டுக் காம்பை முழுதும் நறுக்காமல் கொஞ்சம் போல் அரை இஞ்ச் நறுக்கிவிட்டுக் கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும். காம்போடு இருக்குமாதலால் காய் அப்படியே முழுதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு. நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைக்கவும். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வைக்கவும். துவரம்பருப்பு ஐம்பது கிராம் நன்கு குழைய வேக விட்டு வைக்கவும்.

வறுத்து அரைக்க: மிவத்தல் எட்டு, தனியா 50 கிராம், மஞ்சள் தூள், பெருங்காயம், கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன், உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு சுவைக்கு ஏற்ப. எண்ணெய், தேவையான அளவு வறுக்க, தாளிக்க. கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், ப.மிளகாய் ஒன்று.காரம் தேவை எனில் மிளகு இரண்டு டீஸ்பூனாக வைத்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும். கொஞ்சம் பொடியைத் தனியாக வைத்துவிட்டு மிச்சப் பொடியை அலம்பி நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயில் ஒரே சீராக அடைத்து வைத்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும்.

அடுப்பில் உருளி அல்லது வாணலியை ஏற்றி எண்ணெய் ஊற்றி விட்டுக் கடுகு போட்டுத் தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று, ப.மிளகாய் ஒன்று இரண்டாய்க் கிள்ளிச் சேர்க்கவும். பெருங்காயம் சேர்த்துக்கொண்டு அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும். மூடி வைத்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் புளி ஜலம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்ததை அதிலே சேர்க்கவும். சாம்பார் போல ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரசம் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் நிதானமாகப் புளி கரைத்தது இருத்தல் நலம். புளி வாசனை போகக் கொதித்ததும், வேக வைத்துள்ள துவரம்பருப்பில் நீர் 200 கிராமுக்குக் குறையாமல் ஊற்றிக் கரைத்துக்கொண்டு அதைக் கொதிக்கும் கலவையில் ஊற்றவும். நன்கு பொங்கி வருகையில் கீழே இறக்கி வைத்து மிச்சம் எடுத்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கலக்கவும். இது கத்தரிக்காயில் மட்டுமே செய்யப் படும் ரசவாங்கி. இதிலேயே கத்தரிக்காய்களும் நிறையச் சேர்க்கப் படுவதால், சாம்பார் என்று ஒன்று தனியாக வைக்காமல் ரசமும் வைக்காமல் சாப்பிடப் பிடிக்கும் எனில் அப்பளம், கறிவடாம் பொரித்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.

தாளகக் குழம்பு
தாளகமாம், தாளகம்!

 கொஞ்சம் மாறுதலா ஒரு குழம்பு செய்வோமா.  இதுக்குப்பருப்பு வேணும்னு அவசியம் இல்லை.  இதைத் தாளகக் குழம்புனு சொல்வாங்க.  எங்க வீட்டிலே இதை ராயர் குழம்புனு அப்பா சொல்லுவார். இதுக்கு நாட்டுக் காய்களே நன்றாக இருக்கும்.  நான் இன்னிக்கு அவரைக்காய், கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்தேன். பொதுவாக இதுக்கு அவரை, கத்திரி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்றவையே  நன்றாக இருக்கும்.  மறந்தும் கூட இங்கிலீஷ் காய்கள் எனப்படும் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் போன்றவையோ பச்சைப்பட்டாணியோ வேண்டாம்.  பச்சை மொச்சை கிடைக்கும் காலத்தில் பச்சை மொச்சையும், அதுகிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையையும், கொண்டைக்கடலையையும் போட்டுக்கலாம்.  படம் இன்னொரு நாள் பண்ணும்போது தான் எடுக்கணும்.

செய்முறை
நான்கு பேருக்குக்காய்கள் அனைத்தும் கலந்து கால் கிலோவுக்குள்போதும். அல்லது

வாழைக்காய் சின்னது ஒன்று

கத்தரிக்காய் இரண்டு

அவரைக்காய் ஒரு கைப்பிடி

சேனைக்கிழங்கு நூறு கிராம் அளவு

பறங்கிக்காய் நூறு கிராம் அளவு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைச்சால் ஒன்று

பச்சை மொச்சை அல்லது மொச்சைப்பருப்பு ஒரு கைப்பிடி

கொண்டைக்கடலை  ஒருகைப்பிடி

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. ஊறவைத்துக் கரைத்து வடிகட்டுச் சாறு எடுத்துக் கொள்ளவும்.  சாறின் அளவு இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

உப்பு தேவைக்கு

வறுத்து அரைக்க

மஞ்சள் பொடி அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு

மிளகாய் வற்றல்  நான்கு

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

மிளகு ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, மி.வத்தல்

தாளிக்க வறுக்க

சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

காய்களைத் துண்டம் துண்டமாக அல்லது நீள வாட்டில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்து நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  காய்கள் பாதி வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுக்கவும்.  தேங்காயையும் வறுக்கலாம்.  மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் இன்னொரு இரும்புக் கரண்டியில் மிச்சம் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், உ.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.  கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். வெறும்  சாதம், மற்றும் கலந்த சாதங்களோடு சாப்பிட ஏதுவானது.  சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இப்படிக் காய்களைப் போட்டுக் குழம்பு செய்து அப்பளம் பொரித்துக் கொண்டோ அல்லது வடாம், வத்தல் வறுத்துக் கொண்டோ சாப்பிட்டுக்கலாம்.


இதுவே இன்னொரு முறையிலும் செய்வார்கள்.  அதில் காய்கள் சேர்க்கும் விதம், புளித்தண்ணீர் சேர்ப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் வறுத்து அரைப்பதில் மாறுதல் இருக்கும்.

வறுத்து அரைக்க

மி.வத்தல்.      5

கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்

உ.பருப்பு                  ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்       அரை டீஸ்பூன் எள் வாசனை பிடிக்குமானால் ஒரு டேபிள் ஸ்பூன் வரை வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் திருநெல்வேலிப் பக்கம் எள்ளின் வாசனை தூக்கலாக இருக்கும்படியே செய்வார்கள்.
வெந்தயம்               அரை டீஸ்பூன்

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கருகப்பிலை

இவை எல்லாவற்றையும் வறுத்து கருகப்பிலையையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பார்கள்.  இதுவும் ஒரு மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தென் மாவட்டங்களில் வெண் பொங்கலும், தாளகக் குழம்பும் ரொம்பவே பிரபலம் ஆன ஒரு விஷயம்.  அதுவும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தாலோ (பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்) அல்லது அக்கம்பக்கம் இருந்தாலோ அவங்களுக்கு வெண் பொங்கல் செய்து இந்தக் குழம்பையும் பண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துச் சாப்பிட வைப்பாங்க.  புதுத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறதும் உண்டு.  வெறும் வெற்றிலை, பாக்கு, காசு கொடுப்பவர்களும் உண்டு.  இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.

Wednesday, July 3, 2019

பாரம்பரியச் சமையல்கள்! வல்லி கேட்ட கொட்டுக் குழம்பு!

இந்தக் கொட்டுக்குழம்பு வீட்டுக்கு வீடு மாறுபடும் என எண்ணுகிறேன். எனக்குத் தெரிந்து இது அதிகம் சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகியவற்றிலேயே பண்ணிப் பார்த்திருக்கேன். கல்யாணம் ஆகி வரும்வரை இது குறித்துத் தெரியாது. ஆனால் புக்ககத்திலே பண்ணிப் பார்த்திருக்கேன். அந்தச் செய்முறையைப் பின்னர் சொல்கிறேன்.இப்போது பொதுவான செய்முறைக்குத் தேவையான பொருட்கள்:

எலுமிச்சை அளவுக்குப் புளி, உப்பு தேவையான அளவு, குழம்புப் பொடி 3 டீஸ்பூன்.

தாளிக்க எண்ணெய், கடுகு,வெந்தயம், துவரம்பருப்பு மட்டும், மிளகாய் வற்றல், கருகப்பிலை

தான்களாக கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவை போடலாம். ஒரு சிலர் முள்ளங்கி, உருளைக்கிழங்கு ஆகியவையும் போடுகின்றனர். இதற்குச் சிலர் அடியில் தாளித்துச் செய்கின்றனர். சிலர் தான்களை மட்டும் வதக்கிக் கொண்டு புளியைக் கரைத்துவிட்டுப் பொடி, உப்புப் போட்டுக் கொதித்த பின்னர் தாளிதம் செய்கின்றனர்.  இரண்டு முறையிலும் செய்யலாம். முள்ளங்கி, உருளைக்கிழங்கு போன்ற தான்கள் எனில் அடியில் தாளித்து வதக்கிச் சேர்க்க வேண்டாம். மற்றத் தான்களை வதக்கினால் ருசி கூடும். அடியில் தாளித்துச் செய்தால் சாதாரண வற்றல் குழம்பு, வெறும் குழம்பு ருசி போல் ஆகிவிடும் என்பதால் பலரும் இதைக் கொதிக்கவிட்டுப் பின்னர் இறக்கும்போதே கடுகு, மிவத்தல், கருகப்பிலை தாளிப்பார்கள். இது அவரவர் சௌகரியம் போல் செய்துக்கலாம்.

இதையே மி.வத்தல், தனியா, துவரம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து கொண்டு தான்களைப் போட்டு வதக்கிக் கொண்டு முதலில் கொஞ்சம் புளி ஜலத்தில் தான்களை வேகவிட்ட பின்னர் மிச்சம் புளி ஜலத்தை விட்டுக் கொண்டு தேவையான உப்பையும், வறுத்துப் பொடித்த பொடியையும் போட்டுக் கொதிக்க விட்டுப் பின்னர் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் தாளிப்பார்கள்.  இந்த முறையில் செய்தால் கட்டாயம் கடைசியில் தான் தாளிக்கணும். வெந்தயம் சேர்ப்பது அவரவர் விருப்பம். நான் வெந்தயம் நிறையச் சேர்ப்பதால் இதிலும் போடுவேன்.

இப்போது எங்க வீட்டில் செய்யும் கொட்டுக்குழம்பு முறை:

புளி எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். 3 கிண்ணம் புளி ஜலம்.
உப்பு தேவையான அளவு. குழம்புப் பொடி 3 டீஸ்பூன்,

தாளிக்க நல்லெண்ணெய், தாளிக்கும் பொருட்கள்: கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு மட்டும், மிவத்தல், கருகப்பிலை, பல்லுப் பல்லாகக் கீறிய தேங்காய்க் கீற்றுகள், கொண்டைக்கடலை, மொச்சை வகைக்கு இரண்டு டீஸ்பூன்கள், பெருங்காயம், மஞ்சள் பொடி

தான்களாக! நீளமாக நறுக்கிய சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகிய ஏதேனும் ஓர் கிழங்கு அல்லது கத்திரிக்காய், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் போன்ற ஏதேனும் ஒன்று. நாங்க இந்தக் குழம்புகளில் முள்ளங்கியோ உருளைக்கிழங்கோ சேர்ப்பதில்லை.

இப்போது கடாய்/உருளி/கல்சட்டியை வைத்து எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கடுகு, வெந்தயம், பருப்பைத் தாளித்துக் கொண்டு உடனேயே கொண்டைக்கடலை, மொச்சையைப் போட்டு வெடிக்க விடவும். பின்னர் மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் வரிசையாகச் சேர்க்கவும். அதன் பின்னர் தான்களைப் போட்டு வதக்கிக் கொண்டு பல்லுப் பல்லாகக் கீறிய தேங்காய்க்கீற்றுக்களையும் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். கரைத்து வைத்த புளி ஜலத்தை ஊற்றிவிட்டுக் குழம்புப் பொடியும் உப்பும் சேர்க்கவும். குழம்பு சேர்ந்து கொதித்த பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் பச்சையாக மேலே விடவும். தேவையானால் குழம்பை இறக்கும் முன்னர் ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கலாம். நான் வெல்லம் சேர்ப்பதில்லை.  இந்தக் குழம்புக்கு மாவெல்லாம் கரைத்து விடவும் வேண்டாம். அதுவே சேர்ந்துக்கும். 

Tuesday, July 2, 2019

பாரம்பரியச் சமையல்கள்! பத்தியச் சமையல்களில் பூண்டு, வெங்காயக் குழம்பு!

சின்ன வெங்காயம், பூண்டு போட்ட குழம்பு இப்போப் பார்க்கலாம். இதை இரு முறைகளில் பண்ணலாம். ஒன்று பொடி போட்டு. இன்னொன்று பொடியைக் கொஞ்சமாகப் போட்டுவிட்டு சாமான்களை வறுத்து அரைத்து விட்டு. வறுத்து அரைப்பதில் பூண்டும் சேர்த்தால் வீரியம் அதிகமாகத் தெரியும். எல்லோருக்கும் ஒத்துக்காது! ஆகவே அவரவர் பழக்கப்படி, விருப்பப்படி பண்ணவும். முதல் முறை பொடி போட்டுப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் நான்கு பேர்களுக்கு

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு (இதற்குப் பெருங்காயம் தேவை இல்லை)

உப்பு தேவைக்கு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், சாம்பார்ப் பொடி/குழம்புப் பொடி 3 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் உரித்து எடுத்தது ஒரு சின்னக் கிண்ணம், பூண்டு உரித்த பற்கள் ஒரு சின்னக் கிண்ணம். இரண்டும் சமமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, மற்றும் பருப்பு வகைகள், வெந்தயம், மி.வத்தல் 2, கருகப்பிலை  , தக்காளி விரும்பினால். இதில் தக்காளி சேர்ப்பதை விட அரைத்து விட்டுப் பண்ணுவதில் சேர்ப்பது தான் கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் இதிலும் பிடித்தம் இருந்தால் போட்டுக்கலாம்.

புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். 3 கிண்ணம் இருக்கலாம். உப்பு, மஞ்சள் பொடி, குழம்புப் பொடி போட்டுக் கலக்கும் பழக்கம் உள்ளவர்கள் கலந்து வைத்துக் கொள்ளலாம்.

அடுப்பில் கடாய் அல்லது உருளி அல்லது கல்சட்டியை வைக்கவும். (இந்தக் கல்சட்டியோ, உருளியோ கடாயோ பின்னர் சில நாட்களுக்குப் பூண்டின் வாசனை இருக்கும். ஆகவே தேய்த்தபின்னர் உடனேயே வெந்நீரைக் கொதிக்க வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பைப் போட்டுக் கொதிக்க வைத்தால் வாசனை போய்விடும்.)

கல்சட்டி/உருளி காய்ந்ததும் எண்ணெயை விடவும். கடுகு, பருப்பு வகைகள், வெந்தயம், மி.வத்தல் கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம்,பூண்டை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ள வேண்டாம். அப்படியே உரித்துப் போட்டு நன்கு வதக்கவும். கலந்து வைத்த புளி ஜலத்தை ஊற்றவும். அல்லது புளி ஜலத்தை விட்டபின்னர் குழம்புப் பொடி, மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும்.  குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும். இதற்கு மறந்து கூட மாவு கரைத்து விட வேண்டாம். குழம்பின் மூல வாசனையே போய்விடும்.

இரண்டாம் முறை: அதே அளவு சாமான்கள் எடுத்துக் கொள்ளவும். ஆனால் குழம்புப்பொடி 3 டீஸ்பூன் வேண்டாம். ஒரு டீஸ்பூன் நிறத்துக்காகச் சேர்க்கவும்.

வறுத்து அரைக்க, மி.வத்தல், 2, கொத்துமல்லி விதை இரண்டு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பூண்டு 5 அல்லது 6 பற்கள். (விரும்பினால் தேங்காய்த் துருவல் இரண்டு டீஸ்பூன்) எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வறுத்துப் பொடியாகவோ அரைத்தோ வைத்துக் கொள்ளவும்

இப்போது கடாய்/உருளி/கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகத் தாளித்துக் கொண்டு சின்ன வெங்காயத்தையும், வறுக்க எடுத்துக் கொண்டது போக மிச்சப் பூண்டுப் பற்களையும் போட்டு வதக்கிக் கொண்டு புளி ஜலத்தை விட்டு உப்புப் போட்டுக் குழம்புப் பொடி ஒரு டீஸ்பூன் போட்டுக் கொதிக்க விடவும். பாதி கொதிக்கும்போது வறுத்து அரைத்த கலவையைச் சேர்க்கவும். சிலர் நிறம் வர வேண்டும் என்பதற்காகத் தக்காளியையும் வதக்கிக் கொண்டு அரைக்கும் சாமான்களோடு சேர்த்து அரைப்பார்கள். பிடித்தம் இருந்தால் அப்படிச் செய்யலாம். பூண்டு, வெங்காயம் வாசனை தூக்கலாக இருக்க வேண்டும் எனில் தக்காளி சேர்க்காமல் இருந்தால் சரியாக இருக்கும்.  வறுத்து அரைத்ததைச் சேர்த்து ஒரு கொதி வந்ததுமே எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும். குழம்பை இறக்கி விடவும். தேங்காய் அரைத்திருந்தால் அதையும் வறுத்து அரைக்கும் பொருட்களோடு சேர்த்தே அரைத்துச் சேர்க்கலாம். பிரசவம் ஆனவர்களுக்குச் செய்யும் பூண்டுக் குழம்பில் தேங்காய் சேர்ப்பது இல்லை. மிளகு வறுத்துச் சேர்த்தால் காரம் பிள்ளை பெற்றவர்களுக்கு அதிகம் ஒத்துக்காது என்பதால் ஜீரகமும் வறுத்துச் சேர்ப்பது உண்டு. சாதாரண நாட்களில் செய்தால் ஜீரகம் விரும்பினால் சேர்க்கலாம்.