எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, November 17, 2013

பக்கோடா அம்மா, பக்கோடா!

அடுத்துப் பக்கோடா, வெங்காயப் பக்கோடா தென்னிந்திய முறை பார்க்கணும்.  ஏன்னா, வட மாநிலங்களில் நம்ம பஜ்ஜியையே சில சமயம் பக்கோடானு சொல்லுவாங்க. அதோட அங்கே நாம பண்ணற மாதிரி கரகரப்பான வெங்காயப் பக்கோடாவை "ஜல் கயி" (தீஞ்சு போச்சு) னு சொல்லிடுவாங்க.  அவங்களுக்கெல்லாம் மிருதுவாகவே வேணும். அன்னன்னிக்குத் தான் பண்ண முடியும்.  ஆனால் நாம் பண்ணற வெங்காயப் பக்கோடாவை குறைந்தது ஒரு வாரம் வைச்சுக்கலாம்.  எண்ணெய் நல்ல சுத்தமான கடலை எண்ணெயாகவோ, அல்லது தரமான சமையல் எண்ணெயாகவோ இருந்தால் போதும்.

தேவையான சாமான்கள்:

கடலை மாவு இரண்டு கிண்ணம்

அரிசி மாவு அரைக்கிண்ணம்

மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு தேவைக்கு

பெருங்காயத் தூள் 1/2 டீஸ்பூன்

வெங்காயம் சின்னது என்றால் கால் கிலோவுக்குக் குறையாமல். அரைகிலோ இருந்தாலும் நல்லதே.  உரிச்சுப் பொடியாக நறுக்கவும்

பெரிய வெங்காயம் எனில் 4 அல்லது 5 தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்,  அல்லது மெலிதாகச் சீவிக் கொள்ளவும்.

கருகப்பிலை, கொத்துமல்லி ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் 6  பொடியாய் நறுக்கவும்.

இஞ்சி ஒரு சின்னத் துண்டு பொடியாய் நறுக்கவும்.  முக்கியமான குறிப்பு இஞ்சியை எப்போதுமே தோல் சீவிட்டுப் பயன்படுத்தணும்.  அதே சுக்கு என்றால் தோலோடு பயன்படுத்தணும். 

பொரிக்க எண்ணெய் தேவையான அளவுக்கு.


ஒரு வாயகன்ற பேசினில் கடலை மாவு, அரிசி மாவைப் போட்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் போட்டு நன்கு கலக்கவும்.  கைகளால் கலத்தலே நல்லது. பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டுக் கலந்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயத்தைச் சேர்க்கும் முன்னர் ஒரு  சின்னக் குழிக்கரண்டி அளவு எண்ணெயை நன்கு புகை வரும்படி காய வைத்து மாவில் கலக்கவும்.  மாவு முழுவதும் எண்ணெய் நன்கு கலந்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து கொண்டே இருக்கவும்.  வெங்காயத்தில் இருக்கும் நீரே போதுமானது.  அப்படித் தேவை எனில் கொஞ்சம் தெளித்துக் கொள்ளவும். அதிகம் நீர் விட்டுப் பிசைய வேண்டாம்.  கொஞ்சம் நேரம் ஆகும். ஆனால் இப்படிக் கலப்பதில் தான் பக்கோடாவின் சுவையும், கரகரப்பும் அடங்கி உள்ளது.  

பிடிச்சால் உருண்டைப்பிடியாகவும், உதிர்த்தால் கொஞ்சம் சேர்ந்தாப்போலும் வரும் வரை கலக்கவும்.  கட்டாயம் நீர் தேவை எனில் பார்த்துக் கொஞ்சமாக மொத்தம் கால் டம்ளருக்கு மேல் இராதபடி நீரைச் சேர்க்கவும்.  இப்போது கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பில் ஏற்றி எண்ணெயைக் காய வைக்கவும்.  எண்ணெய் காய்ந்த பின்னர் அடுப்பைத் தணித்துக் கொண்டு, பிசைந்த பக்கோடா மாவில் கொஞ்சம் போல் எடுத்துப் போட்டுப் பார்க்கவும்.  பொரிந்து மேலே வந்தால் எண்ணெய் நன்கு காய்ந்திருக்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நன்கு சிவக்கும் வரை வேக விட்டுக் கரண்டியால் எடுத்து வடிதட்டில் போடவும்.

கொஞ்சம் ஆறியதும் எடுத்துப் பார்க்கவும்.  நன்கு கரகரவென்றிருக்கும்.  இது ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்.

12 comments:

 1. நல்ல விளக்கம் அம்மா... நன்றி...

  ReplyDelete
 2. தயிர் சாதத்திற்கு பக்கோடாவை காம்பினேஷன் சேர்த்துக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. கடையில்தான் வாங்குவோம்.. நீங்க சொன்னதை வச்சி ஒரு தரம் செஞ்சி பார்க்கிறேன்... நல்லா வந்தா நானே சாப்புட்டுருவேன்.... இல்லன்னா... உங்களுக்கு பார்சல்.... ஆமா!

  ReplyDelete
  Replies
  1. grrrrrrrrrrrrrrrrrrrrr அருமையான பக்கோடா நானே செய்து சாப்பிட்டுக்கறேன். :P

   Delete
 3. முன்னர் ரொம்பப் பிடித்த பண்டம். இப்போது என்னமோ பிடிப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பலருக்கும் கொஞ்ச வருடங்களில் ருசி மாறுகிறது. பார்க்கிறேன். எனக்கும் முன்னாடி இட்லினாலே கோபம் வரும். இப்போல்லாம் சாம்பாரில் மிதக்கும் இட்லிகள் பிடிக்கிறது. :)))

   Delete
 4. ரொம்ப நாளா ஆசைப்பட்ட விஷயம்!!!. குறிச்சு வச்சிட்டேன்... ரொம்ப நன்றிம்மா!!!

  ReplyDelete
 5. நம்ம ஊரு பகோடா தான் நல்லா இருக்கும்.... இங்கே பகோடா சோ சோ தான்! :)

  நீங்க சொல்ற மாதிரி ஒரு வாரம் வரை கெடவும் கெடாது.....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வட மாநிலத்து பகோடா அவ்வளவு வைச்சுக்க முடியாது. அன்றன்று செய்து சாப்பிடத்தான் சரிவரும்.

   Delete
 6. என்னவர் செய்து தரச் சொல்லி விரும்பிக் கேட்பது இந்த வெங்காய பக்கோடாவைத் தான்...:) பஜ்ஜியை விட பக்கோடா தான் அவருக்கு பிடிக்கும்...:) எனக்கு பஜ்ஜி தான் முதலிடம்..:))

  .

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, எங்களுக்கு இரண்டுமே பிடிக்கும். ஆனால் இங்கே என்னமோ தெரியலை, பகோடா மறுநாள் நமத்துப் போகிறது. ஆகவே கொஞ்சமாப் பண்ணிச் சாப்பிட்டுக்கணும்.

   Delete