எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 3, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள்! வேர்க்கடலைச் சுண்டல்!

வேர்க்கடலைச் சுண்டல்

வேர்க்கடலை கால் கிலோ

தாளிக்க எண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு

மி.வத்தல்,

கருகப்பிலை

உப்பு தேவையான அளவு

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்  இரண்டு டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலையை முதல் நாளே களைந்து ஊற வைக்கவும்.  மறுநாள் வழக்கம் போல் நீரை மாற்றிக் கொண்டிருக்கவும்.  பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு, மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்து வெந்த வேர்க்கடலையை நீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும்.  இதற்கு மி.வத்தல், தனியா வறுத்துப் பொடி செய்த பொடி போடலாம் அல்லது சாம்பார்ப் பொடியே போடலாம்.  அவரவர் விருப்பம் போல்!  பின்னர் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.  கீழே இறக்கி விநியோகம் செய்யலாம்


நவராத்திரி இல்லாத சாதாரண நாளில் வேர்க்கடலையை வேக வைத்துக் கொண்டு, பச்சை மிளகாய், இஞ்சி தாளித்துக் கொண்டு, கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் காரட் துருவல், தேங்காய்த் துருவல், சேர்த்துக் கிளறி இறக்கும்போது  வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் பச்சைக் கொத்துமல்லி தூவி சாட் மசாலா மேலே சேர்த்துவிட்டுப் பின்னர் சாப்பிடலாம்.


நவராத்திரி நிவேதனம் கேசரி

கேசரி கிளறுவது ரொம்பவே சுலபம்.  யாராக இருந்தாலும் சீக்கிரம் கற்றுக் கொண்டு செய்துடலாம்.


ரவை      ஒரு கிண்ணம்


சர்க்கரை  இரண்டு கிண்ணம்

நெய்      முக்கால் கிண்ணம்

ஏலக்காய்த் தூள் செய்தது அரை டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம் இரண்டும் சேர்ந்து 2 டேபிள் ஸ்பூன்


கொதிக்க வைத்த நீர் தேவையான அளவு


வாணலி அல்லது வெண்கல உருளியில் நெய்யைச் சூடு பண்ணிக் கொண்டு ரவையை அதில் போட்டுச் சிவக்க வறுக்கவும்.  ரவை வறுபட்டதும் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  இதைச் செய்யும்போதே இன்னொரு பக்கம்  மூன்று கிண்ணம் நீரைக் கொதிக்க வைக்கவும்.  ரவையும், சர்க்கரையும் நன்கு கலந்ததும், கொதிக்கும் வெந்நீரைக் கொஞ்சமாக விடாமல் மொத்தமாக ஊற்றவும்.


கை விடாமல் கிளறவும்.  சர்க்கரை இளகிப் பாகும் நீரும் சேர்ந்து கொதித்து ரவை கெட்டியாக வர ஆரம்பிக்கும்.  மீதம் இருக்கும் நெய்யை ஊற்றவும்.  இன்னொரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழத்தைப் போட்டுச் சிவக்க வறுத்துக் கேசரியில் கொட்டவும்.  ரவை நன்கு கெட்டியாகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் கீழே இறக்கி ஏலப் பொடி தூவி நன்கு கிளறவும்.  விநியோகம் செய்யத் தயார்.



Monday, September 29, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள்! பச்சைப் பட்டாணிச் சுண்டல் 4

சாதாரணமாகப் பச்சைப் பட்டாணி ஊற வைத்து வேக வைத்தால் நன்கு குழைந்து விடும்.  ஆனால் இங்கே திருச்சியில் அவ்வளவு குழைவது இல்லை. இத்தனைக்கும் முதல் நாள் மதியமே ஊற வைக்கிறேன்.  கல்லுப் பட்டாணியை எல்லாம் அகற்றி விடுகிறேன்.  ஆனாலும் திருப்தி இருப்பது இல்லை.


பச்சைப்பட்டாணி கால் கிலோ

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீ ஸ்பூன்

கடுகு

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி ஒரு துண்டு

தேங்காய்ப்பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது தேங்காய்த் துருவல் அவரவர் விருப்பம் போல்

மாங்காய் கிடைத்தால் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை

கொத்துமல்லி

தேவையான உப்பு

பெருங்காயம்

சாம்பார்ப் பொடி ஒன்றிலிருந்து இரண்டு டீஸ்பூன் வரை(காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப)


பட்டாணியை முதல் நாளே நன்கு களைந்து கல்லுப் பட்டாணிகளை அகற்றி நன்கு நீர் ஊற்றி ஊற வைக்கவும்.  மறுநாள் காலையிலிருந்து மீண்டும் மீண்டும் களைந்து நீரை மாற்றிக் கொண்டிருக்கவும். பின்னர் குக்கரில் அல்லது ப்ரஷர் பானில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் பச்சை மிளகாய்ப் பொடியாக நறுக்கியது, இஞ்சி பொடியாக நறுக்கியது, கருகப்பிலை, பெருங்காயம் ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.  வெந்த பட்டாணியை நீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும்.  சாம்பார்ப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கும்படி கிளறவும்.  நன்கு கிளறி சாம்பார்ப் பொடி வாசனை போனதும், நறுக்கி வைத்த தேங்காய், மாங்காயைச் சேர்க்கவும்.  பச்சைக் கொத்துமல்லியைத் தூவிக் கீழே இறக்கவும்.  சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.



நவராத்திரிச் சுண்டல் வகைகள்! மொச்சைப்பருப்புச் சுண்டல் 3

தேவையான பொருட்கள்:-

மொச்சைப்பருப்பு கால் கிலோ

மி. வத்தல் இரண்டு

கருகப்பிலை,

பெருங்காயம்

தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்


வறுக்க:

மி. வத்தல் நான்கு

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்


மேலே சொன்னவற்றை எண்ணெயில் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.  பிடிக்காதவர்கள் சாம்பார்ப் பொடி போடலாம்.  அதுவும் பிடிக்கலை எனில் தாளிக்கையில் நான்கு மிளகாய் வற்றலாகத் தாளிக்கவும். இது சுமாராகத் தான் இருக்கும்.



மொச்சையை நன்கு கழுவிக் கொண்டு மூழ்கும் அளவுக்கு மேல் நீரை ஊற்றி முதல் நாளே ஊற வைக்கவும். மறு நாள் காலையிலிருந்து அதை வேக வைக்கும் வரை கழுவி நீரை மாற்றிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் குக்கரில் அல்லது ப்ரஷர் பானில் தேவையான உப்பைச் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.  குக்கரோ ப்ரஷர் பானோ ஒரு சத்தம் கொடுத்ததும் அடுப்பைத் தணித்து வைத்துப்பின்னர் அதே நிலையிலேயே மூன்று அல்லது நான்கு சப்தங்கள் விடவும்.  இப்படி விட்டால் நன்கு குழையும்.கையில் எடுத்து நசுக்கினால் நன்கு குழைந்திருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு மி.வத்தல், கருகப்பிலை சேர்த்து வெந்த மொச்சையை நீரை வடிகட்டிச் சேர்க்கவும்.



சிறிது கிளறியதும், வறுத்த பொடியைச் சேர்த்துக் கிளறவும்.  நன்கு சேர்ந்து வரும்போது தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கீழே இறக்கவும். விநியோகத்துக்குத் தயார்.

Saturday, September 27, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள் 2 கடலைப்பருப்புச் சுண்டல்

நேத்திக்கு இரு சுண்டல் வகைகளைப் பார்த்தோம்.  ஒன்று தித்திப்புச் சுண்டல்; இன்னொன்று காரச் சுண்டல்.  நேற்றைய சுண்டல் காரச் சுண்டல் தான்.  பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் புட்டுத் தான் செய்வார்கள்.  ஆனால் நேற்றுக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி என்பதோடு புட்டுச் செய்ய முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.  கடலைப்பருப்புச் சுண்டல் அல்லது கொண்டைக்கடலைச் சுண்டலும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம் என்பதால் கடலைப்பருப்புச் சுண்டலே செய்துவிட்டேன்.


கடலைப்பருப்பு கால் கிலோ

உப்பு தேவையான அளவு

தாளிக்க எண்ணெய்   மூன்று டீஸ்பூன்

பச்சை மிளகாய் சிறிதாக 2 பொடிப் பொடியாக நறுக்கவும்

இஞ்சி ஒரு துண்டு பொடியாக நறுக்கவும்

கருகப்பிலை பொடியாக நறுக்கவும்

கொத்துமல்லி பொடியாக நறுக்கவும்

பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்

சாம்பார்ப் பொடி  ஒரு டீ ஸ்பூன்

தேங்காய்த் துருவல்  2 டேபிள் ஸ்பூன்


கடலைப்பருப்பை மூன்று மணீ நேரம் ஊற வைக்கவும்.  ஊறிய பருப்பை நன்கு களைந்து கொண்டு கடாயில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் பருப்பை வேகப் போடவும்.  பருப்பு மூழ்கும் வண்ணம் நீர் இருக்க வேண்டும்.  அரை வேக்காடாகப் பருப்பு வெந்ததும் தேவையான உப்பைச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.  பருப்புக் கையால் எடுத்துப் பார்த்தால் நசுங்க வேண்டும்.  அந்தப் பதம் வந்ததும், இன்னும் குழைவாக வேண்டுமானால் அந்தக் கொதிக்கும் நீரிலேயே ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.  தேவை இல்லை எனில் நீரை வடிகட்டவும்.


கடாய் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகை வெடிக்க விடவும்.  பெருங்காயத் தூள், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை  சேர்க்கவும்.  ஒரு கிளறு கிளறியதும் வெந்த பருப்பைச் சேர்க்கவும்.  பருப்பைக் கிளறும் முன்னர் சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.  ஆசாரக் காரர்கள் தினம் சமைத்துச் சாப்பிடும் சாம்பார்ப் பொடி தேவையில்லை எனில் தனியாகக் கொஞ்சமாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.


நாலு டீஸ்பூன் மிளகாய்ப் பொடிக்கு , அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி,

ஒரு டேபிள் ஸ்பூன் தனியா

துபருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு ஆகியவை தலா ஒரு டீஸ்பூன் போட்டு வெறும் சட்டியில் வறுத்துக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். இதைச் சுண்டலுக்குப் போடனு தனியாக வைத்துக் கொள்ளலாம்.  மிளகு, வெந்தயம் ஜாஸ்தியாகத் தோன்றினால் அரை டீஸ்பூன் போதும்.

சாம்பார்ப் பொடி போட்டுக் கிளறியதும், தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  விருப்பமிருந்தால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்;  இது அவரவர் விருப்பம்.  பின்னர் நன்கு கிளறியதும், கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி மேலே தூவி நன்கு கிளறி எடுத்து வைத்து விநியோகம் செய்யவும்.


நவராத்திரி இல்லாத நாட்களில் இந்தச் சுண்டலை மாலை டிஃபனுக்குச் செய்து கொத்துமல்லியோடுபுதினா இலைகளையும் நறுக்கிச் சேர்த்துக் கொண்டு, பச்சை வெங்காயம் பொடியாக நறுக்கியது மேலே தூவிக் கொண்டு, எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு, ஓமப் பொடியோடு சேர்த்துச் சாப்பிடலாம். பிடித்தால் சாட் மசாலா கொஞ்சம் தூவிக்கலாம்.


Friday, September 26, 2014

நவராத்திரிக்குச் சுண்டல் வகைகள்!

முதலில் பச்சைப்பயறுச் சுண்டல்!  எத்தனை பேர் வருவாங்கங்கறது நீங்க குடி இருக்கும் இடத்தையும், உங்களோட நட்பு வட்டத்தையும் பொறுத்தது.  இங்கே நான் கால் கிலோவுக்கான அளவில் சொல்றேன்.  பொதுவாக இந்தப் பருப்பு வகைகள் ஊற வைத்தால் இரட்டிப்பாக ஆகும். ஆகவே பார்த்துக் கொள்ளவும்.

கால் கிலோ பச்சைப்பயறு நன்கு களைந்து கல் அரித்து, கல் பயறை நீக்கி (அரிக்கும்போது அடியில் தங்கிடும்;  கலகலனு கல் சப்தம் வரும்) பின்னர் நன்கு முழுகும் அளவுக்கு மேலேயே தண்ணீர் ஊற்றி முதல் நாளே ஊற வைக்கவும்.  மறு நாள் காலை களைந்து விட்டு நீரை மாற்றவும்.  ஊறிய வாச்னை போகும்.  இப்படி இரண்டு, மூன்று தரம் களைந்து நீரை மாற்றிக் கொண்டே இருக்கவும்.

நன்கு ஊறியதும், சின்னச் சின்னதாய் முளை தெரிய ஆரம்பிச்சிருக்கும்.  ஒரு கடாய் அல்லது அலுமினியம் வாணலியில் நீரை விட்டுக் கொதிக்க வைத்து பயறைச் சேர்க்கவும்.  குக்கரில் வைத்தால் குழைந்து உருத்தெரியாமல் போயிடும்.  அரை வேக்காட்டில் தேவையான உப்பைச் சேர்க்கவும்.  உப்புச் சேர்த்துச் சிறிது நேரம் வேக விடவும்.  வெந்த பின் ஒரு வடிதட்டில் கொட்டி நீரை வடிக்கவும்.  இப்போது தாளித்து எடுத்தால் சுண்டல் தயார்.  முதலில் இதில் இனிப்புச் சுண்டல் செய்முறை.


வெல்லத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்

கடுகு  ஒரு டீஸ்பூன்

மி.வத்தல் ஒன்று

கருகப்பிலை,பெருங்காயம்  இதுக்கு வேண்டாம்.

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்


கடாயில் எண்ணெய் வைத்துக் கடுகைப் போட்டு வெடித்ததும், மி.வத்தலைக் கிள்ளிப் போட்டுப் பயறைப் போடவும்.  உடனேயே வெல்லத் தூளைச் சேர்த்துவிட்டுக் கொஞ்சம் கிளறவும்.  வெல்லம் கரைய ஆரம்பித்ததும், தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  சிறிது நேரம் கிளறி விட்டுக் கீழே இறக்கவும்.  வருபவர்களுக்கு விநியோகம் செய்யவும்.


அடுத்து காரச் சுண்டல்


தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்

கடுகு

மி. வத்தல் 2

கருகப்பிலை

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கொஞ்சமாய் சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன்


கடாயில் எண்ணெய் வைத்துக் கடுகைப் போட்டு வெடித்ததும், கருகப்பிலை, மி.வத்தல் சேர்க்கவும்.  மி. வத்தல் கறுப்பானதும் பயறைப் போட்டு சாம்பார்ப் பொடியைப் போட்டுச் சிறிது கிளறவும்.  ஐந்து நிமிஷம் பொடி வாசனை போகக் கிளறியதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிவிட்டுக் கீழே இறக்கவும்.  வருப்வர்களுக்கு விநியோகம் செய்யவும்

சாம்பார்ப் பொடி போட்டால் உள்ள ருசி போடாமல் பண்ணுவதில் மாறி இருக்கும்.  அப்படியும் முயன்று பார்க்கவும்.


Friday, August 15, 2014

காஞ்சிபுரம் இட்லி அடை! :)

காஞ்சிபுரம் இட்லி அடை

ஹா,ஹா, என்ன பெயர் வைக்கிறதுனு யோசிச்சுட்டு இந்தப் பெயரை வைச்சுட்டேன்.  காஞ்சிபுரம் இட்லிமாவு மிஞ்சினதுனு சொன்னேன் இல்லையா?  அதோட கூடக் கொஞ்சம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஊற வைத்துக் கொஞ்சமாய் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்து இந்த இட்லி மாவோடு சேர்த்துக் கொண்டு அடையாக வார்த்தேன்.  ஒருநாள் பாடு தீர்ந்தது. :))))  கீழே படங்கள் பார்க்கலாம்.




கீழே காஞ்சிபுரம் இட்லி மாவு



இதிலே தான் அரைத்த து.பருப்பு, க. பருப்பு மாவு



எல்லாத்தையும் ஒண்ணாய்க் கலந்த மாவு.  இதான் அடையாக வார்த்தேன்.  அடை வார்க்கையில் படம் எடுக்க முடியலை. :)

Sunday, July 27, 2014

கத்தரிக்காய் ரசவாங்கியும், மற்றும் சில ரசவாங்கிகள் செய்முறையும்!

கத்தரிக்காய் ரசவாங்கி:  நாலு பேருக்கு.

கத்தரிக்காய் பிடிக்குமெனில் குறைந்தது கால் கிலோவுக்குக் குறையாமல் வேண்டும்.  சின்னதாய் ஒரே மாதிரியாக இருத்தல் நலம்.  நன்கு கழுவிவிட்டுக் காம்பை முழுதும் நறுக்காமல் கொஞ்சம் போல் அரை இஞ்ச் நறுக்கிவிட்டுக் கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும்.  காம்போடு இருக்குமாதலால் காய் அப்படியே முழுதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு.  நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.  உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து வைக்கவும்.   துவரம்பருப்பு ஐம்பது கிராம் நன்கு குழைய வேக விட்டு வைக்கவும்.

வறுத்து அரைக்க:

மிவத்தல் எட்டு,
தனியா 50 கிராம்,
மஞ்சள் தூள், பெருங்காயம்,
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்,
உ.பருப்பு ஒரு டீஸ்பூன்,
மிளகு ஒரு டீஸ்பூன்.
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்.
 உப்பு சுவைக்கு ஏற்ப.
எண்ணெய், தேவையான அளவு வறுக்க,

தாளிக்க.  கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், ப.மிளகாய் ஒன்று.

காரம் தேவை எனில் மிளகு இரண்டு டீஸ்பூனாக வைத்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் வறுத்து அரைக்கவும்.   கொஞ்சம் பொடியைத் தனியாக வைத்துவிட்டு மிச்சப் பொடியை   அலம்பி நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயில் ஒரே சீராக அடைத்து வைத்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும்.

அடுப்பில் உருளி அல்லது வாணலியை ஏற்றி  எண்ணெய் ஊற்றி விட்டுக் கடுகு போட்டுத் தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று, ப.மிளகாய் ஒன்று இரண்டாய்க் கிள்ளிச் சேர்க்கவும்.  பெருங்காயம் சேர்த்துக்கொண்டு அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும்.  மூடி வைத்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் புளி ஜலம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்ததை அதிலே சேர்க்கவும்.  சாம்பார் போல ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரசம் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் நிதானமாகப் புளி கரைத்தது இருத்தல் நலம்.  புளி வாசனை போகக் கொதித்ததும்,  வேக வைத்துள்ள துவரம்பருப்பில் நீர் 200 கிராமுக்குக் குறையாமல் ஊற்றிக் கரைத்துக்கொண்டு அதைக் கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.  நன்கு பொங்கி வருகையில் கீழே இறக்கி வைத்து மிச்சம் எடுத்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கலக்கவும்.  இது கத்தரிக்காயில் மட்டுமே செய்யப் படும் ரசவாங்கி.  இதிலேயே கத்தரிக்காய்களும் நிறையச் சேர்க்கப் படுவதால், சாம்பார் என்று ஒன்று தனியாக வைக்காமல் ரசமும் வைக்காமல் சாப்பிடப் பிடிக்கும் என்றால், அப்பளம், கறிவடாம் பொரித்து வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.


அடுத்துத் தஞ்சை ஜில்லாவில் செய்யப்படும்  கூட்டு வகை ரசவாங்கிகள்.

இது ஏற்கெனவே பொரிச்ச கூட்டுச் செய்முறையில் வந்திருக்கலாம்.  என்றாலும் ரசவாங்கி என்றால் கொஞ்சம் புளி கரைத்த நீர் சேர்க்கவேண்டும்.  இதில் துவரம்பருப்புப் போட்டுச் செய்யும் முறையும், பாசிப்பருப்பும், கடலைப் பருப்பும் மட்டும் போட்டுச் செய்யும் முறையும் உண்டு.  இரண்டிலும் பருப்புத் தான் மாற்றிக்கொள்ளவேண்டும்.  செய்முறை ஒன்றே.

இதற்கு வெள்ளைப் பூஷணி, செளசெள, கத்தரிக்காய்  போன்றவைகள் மட்டுமே நன்றாக இருக்கும்.  மேற்சொன்ன காய்களை நன்கு அலம்பி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்,
கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன் ,
 மி.வத்தல்2 அல்லது 3,
கொ.மல்லி விதை  ஒரு டேபிள் ஸ்பூன்,
ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு,
ஒரு டீஸ்பூன் உ.பருப்பு,
 1/2 டீஸ்பூன் மிளகு,
1/2 டீஸ்பூன்  வெந்தயம்,
பெருங்காயம்
தேங்காய் துருவல்.

இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொஞ்சம் நீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.

எண்ணெய் தாளிக்க, வறுக்க. கருகப்பிலை, கொத்துமல்லி.
உப்பு, சுவைக்கு ஏற்ப,
 புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைக்கவும்.

ஒரு சின்னத் துண்டு வெல்லம், (பிடித்தமானால்), மொச்சை, கொண்டைக்கடலை, காராமணி போன்றவற்றை முதல் நாளே ஊற வைத்துப் பின்னர் வேக வைக்கும்போது சேர்க்கலாம்.  அப்படி முதல்நாள் ஊற வைக்கவில்லை என்றாலும் வறுக்கும் பொருட்களை வறுக்கும்போது மேற்சொன்னவற்றில் இரண்டையோ அல்லது எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமோ எடுத்துக்கொண்டு எண்ணெயில் போட்டு வெடிக்க விட்டுச் சேர்க்கலாம்.  இது கடிக்கக் கஷ்டம் எனில் வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் சேர்க்கலாம்.  பருப்பு வேகும்போதே சேர்த்தால் நன்கு வெந்துவிடும்.  அல்லது பச்சை மொச்சை கிடைக்கும் காலங்களில் அதை மட்டும் சேர்க்கலாம்.


பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் களைந்து கழுவிக்கொண்டு ஒரு உருளி அல்லது கடாயில் நீர் விட்டுக்கொண்டு அதில் போட்டு வேக வைக்கவும்.  நன்கு குழைந்து வரும் சமயம் நறுக்கி வைத்துள்ள காய்களைப் போட்டு மஞ்சள் தூள் சேர்க்கவும்.  காய்கள் பாதி வெந்ததும், கரைத்து வைத்துள்ள புளி நீரைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும்.  சேர்ந்து கொதிக்கையில் வறுத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.  அதுவே கெட்டியாக இருக்கும்.  நன்கு சேர்ந்ததும் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளித்துப் பச்சைக் கொத்துமல்லி தூவவும்.

அடுத்தது துவரம்பருப்புச் சேர்ப்பதற்கு மேற்சொன்ன சாமான்களில் பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் தவிர்த்துவிட்டுத் துவரம்பருப்பை நன்கு குழைய வேக விட்டுச் சேர்க்கவும்.  ருசியில் மாறுபாடு தெரியும்.

Friday, July 4, 2014

கண்டு பிடி, கண்டு பிடி!

நேத்திக்கு இட்லி மாவு மிச்சம்.  செய்முறைப் பதிவிலே சொன்னபடிக்கு நான் ஒரு கிண்ணம் எல்லாம் போடலை.  அரைக்கிண்ணம் தான் எல்லாமும் போட்டேன்.  அப்படியும் மிச்சம் தான்.  அதை இன்னிக்கு வேறே மாதிரிப் பண்ணப் போறேன். என்னனு  யோசிச்சு வைங்க.  ராத்திரி  டிஃபன் செய்ததும் படம் எடுத்துப் போட்டுப் பகிர்ந்துக்கறேன். 

Thursday, July 3, 2014

காஞ்சிபுரம் இட்லி சாப்பிட வாங்க!

தேவையான சாமான்கள்:  சுமார் நான்கு பேருக்கு!

இட்லி அரிசி ஒரு கிண்ணம்

பச்சரிசி ஒரு கிண்ணம்

உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம்

மூன்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைக்கவும்.  குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வேண்டும். பின்னர் மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்.  உப்புப் போட்டுக் கலக்கவும்.  இரவு ஒரு துண்டு சுக்கை நன்கு பொடி செய்து மாவில் கலந்து வைக்கவும்.



காலை இட்லி வார்க்கும் முன்னர் மாவில் சேர்க்க வேண்டியவை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்

கடுகு

உளுத்தம்பருப்பு

கடலைப்பருப்பு வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன்

மிளகு, ஜீரகம் உடைத்த பொடி 2 டீஸ்பூன்

பெருங்காயம் சின்னத் துண்டு

கருகப்பிலை, கொத்துமல்லி ஆய்ந்து நறுக்கியது

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது 2 டேபிள் ஸ்பூன்



நெய்யை நன்கு காய வைத்துக் கடுகு , உ.பருப்பு, கபருப்பு, பெருங்காயம், கருகப்பிலை தாளித்து மாவில் போட்டுக் கலக்கவும்.  அந்தச் சட்டியிலேயே நறுக்கிய தேங்காய்களைப் போட்டுக் கொஞ்சம் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.  முந்திரிப்பருப்பு இருந்தாலும் போடலாம்.  அவரவர் விருப்பம். கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.  பின்னர் இட்லிப் பானையில் துணி போட்டோ  அல்லது இட்லி குக்கரில் உள்ள தட்டுக்களில் எண்ணெய் தடவியோ  இட்லி மாவைக் கரண்டி கரண்டியாக எடுத்து ஊற்றி வேக வைக்கவும்.  வெந்ததும் சட்னி, சாம்பார், கொத்சு  எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  காஞ்சீபுரத்தில் தம்பளரில் எண்ணெய் தடவி மாவை விட்டு வேக வைப்பாங்க.  இங்கே நாம் வீட்டில் பண்ணுவதை விட அங்கே இன்னமும் உதிர் உதிராக இருக்கும். நான் ரொம்பக் கொரகொரப்பாக அரைப்பதில்லை.



வெந்த இட்லிகள்


சாம்பார் இட்லிக்குத் தொட்டுக்கொள்ளப் பண்ணியது.

இதோடு குழந்தைகள் சாப்பிட வேண்டி பச்சைப் பட்டாணி அல்லது ஊற வைச்ச பட்டாணியோ, வேர்க்கடலையோ, காரட் சீவியோ சேர்க்கலாம். இதை இட்லியாகச் செய்ததும் ஒரு வாணலியில் நல்லெண்ணையைக் காய வைத்துக் கடுகு தாளித்து இட்லிகளை நான்காக நறுக்கிப் போட்டு மிளகாய்ப் பொடியைக் கலந்து(தோசை மிளகாய்ப் பொடி தான் கலக்க வேண்டும்) கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவி, எலுமிச்சம்பழம் பிழிந்து சில்லி இட்லி என்று சாப்பிடலாம்.  பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்திலேயே எலுமிச்சைச் சாறைக்கலந்து அதையும் இந்த சில்லி இட்லி மேல் தூவிக் கொண்டு சாப்பிடலாம். பிடிக்கிறவங்களுக்குப் பிடிக்கும். :)

என்னதான் திரும்பத் திரும்பச் சமைக்கிறது! :)

கொஞ்ச நாட்களா இந்தப்பக்கம் வர முடியலை. வேலையும் இருந்தது என்றாலும் திடீர்னு ஒரு அலுப்பு, சலிப்பு. எல்லாத்திலேயும் தான்.  அதுக்காக வழக்கமான வேலைகளைக் குறைச்சுக்கல்லாம் இல்லை.  அதது அததுபாட்டில் நடக்கிறது. தினம் தினம் என்ன டிஃபன் பண்ணறது?  அதுவும் இரண்டு வேளை பண்ணணும். இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், வெந்தய தோசை, பொஹா எனப்படும் அவல் உப்புமா, புளி அவல், சேமியா, ரவை உப்புமாக்கள், அரிசி உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ், சப்பாத்தி, ஃபுல்கா ரொட்டி,  பரோட்டா(ஒரிஜினல், மைதா புரோட்டா இல்லை), பூரி, சேவை னு எல்லாமும் பண்ணி அலுத்தாச்சு.

திடீர்னு ஒரு வெற்றிடம் வந்தாப்போல் எண்ணம். அப்போத் தான் ரங்க்ஸ் காஞ்சிபுரம் இட்லி வேணாப் பண்ணேன் ஒரு மாறுதலுக்குனு கேட்டார். காஞ்சிபுரம் இட்லினாலே அதாலேயே என்னை அடிக்க வரும் மனுஷன் காஞ்சிபுரம் இட்லி கேட்கிறார்னா இந்த ஶ்ரீரங்கம் வெயிலிலே அவருக்கு ஏதோ ஆச்சுனு நினைச்சேன்.  சரினு நேத்திக்கு காஞ்சிபுரம் இட்லிக்குனு அரைச்சு வைச்சேன்.

சரியா ஒரு வேளைக்கு மட்டும் வராப்போல் அரைக்கணும்னு ரங்க்ஸ் சொல்றார்.  அது எப்படி முடியும்? கொஞ்சமாவது மிஞ்சாதா?  மிக்சி ஜாரில் முக்கால் பாகத்துக்காவது வரும்படி சாமான்களைப் போட்டால் தானே அரைபடும்.  இதெல்லாம் அவருக்குப் புரியறதில்லை. :( எல்லாம் அரை, அரை ஆழாக்குத் தான் போட்டேன்.  அதிலேயே மாவு மிச்சம். அதை எப்படியானும் செலவு செய்யணும்.  தினம் பத்துப் பேருக்குக் குறையாமல் சமைச்சுட்டு இப்போ இரண்டு பேருக்குச் சமைக்கிறது சொப்பு வைச்சு விளையாடுவது போல் இருக்கு. அப்படித் தான் விளையாடிட்டு இருக்கோம். :)  இன்னிக்குப் பண்ணும்போதே படங்களும் எடுத்துட்டேன்.  படங்களைக்கணினியில் இணைக்கணும்.  இணைச்சுட்டுச் செய்முறையும் எழுதறேன்.

Friday, May 16, 2014

பருப்புக் கலவை சப்பாத்திக்கு!



படத்துக்கு நன்றி கூகிளார்:

ஹிஹிஹி, முதல்லே இதைப் போடணும்னு நினைக்கலை. அதான் நேத்திக்குப் படம் எடுக்கலை.  திரும்ப ஒரு நாள் பண்ணுவேன். அப்போ நினைவா எடுத்துடணும். முடிச்சுப் போட்டு வைச்சுக்கறேன்.  செரியா?

எப்போவும் சப்பாத்திக்குக் காய்கள் ஏதானும் தான் பண்ணுவேன். மத்தியானம் சாப்பாடுக்குச் சப்பாத்தி பண்ணினால் சில சமயம் தால், ரொட்டி, சப்ஜி பண்ணிட்டு மோர்சாதமாச் சாப்பிட்டுக்குவோம்.  நேற்று ராத்திரிக்குச் சப்பாத்தி.  திரும்பத் திரும்ப காய் எல்லாம் பண்ணி அலுத்துப் போச்சு. ரங்க்ஸ் கிட்டே கேட்காமலேயே மிக்சட் தால் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டு மாலை காஃபி கலக்கும்போதே தால் எல்லாம் எடுத்து ஊற வைச்சேன்.  நான் இரண்டு பேருக்குத் தான் பண்ணினேன்.  இங்கே அளவு நான்கு பேருக்கானது சொல்றேன்.

துவரம்பருப்பு  ஒரு சிறு கிண்ணம்

கடலைப்பருப்பு  அரைக்கிண்ணம்

பாசிப்பருப்பு         அரைக்கிண்ணம்

உளுத்தம்பருப்பு  கால் கிண்ணம்

நான்கையும் நன்கு கழுவிக் களைந்து குறைந்தது ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.

தேவையான பொருட்கள்

தாளிக்க

ஜீரகம், சோம்பு

பச்சை மிளகாய்  2

இஞ்சி      ஒரு சின்னத் துண்டு

கருகப்பிலை

மி.வத்தல் ஒன்று

பெருங்காயம் (தேவையானால்)

வெங்காயம்   2 பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

தக்காளி         3 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

மிளகாய்த் தூள்  ஒரு டீஸ்பூன்

தனியாத் தூள்  ஒரு டீஸ் பூன்

மஞ்சள் தூள்   அரை டீஸ்பூன்

ஜீரகத் தூள்       அரை டீஸ்பூன்

மிளகுத் தூள்   கால் டீஸ்பூன்

வெந்தயப் பொடி  கால் டீஸ்பூன்

கரம் மசாலாப்பொடி  அரை டீஸ்பூனில் இருந்து ஒரு டீஸ்பூனுக்குள் அவரவர் தேவைக்கேற்ப

தயிர் கெட்டியாக அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சைக் கொத்துமல்லி அலங்கரிக்க

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

எண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்


ஊறிய பருப்பைத் தேவையான உப்புச் சேர்த்து, மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் போட்டு நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாய் அல்லது வாணலி அல்லது ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முதலில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், ஜீரகம், சோம்பு தாளித்துப் பின் பச்சை மிளகாய், இஞ்சி, மி.வத்தல், பெருங்காயம் சேர்க்கவும்.  வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.  தக்காளி சேர்த்து வதக்கிக் கொண்டே மஞ்சள் பொடி, மி.பொடி. த.பொடி சேர்க்கவும்.  கொஞ்சம் வதக்கி விட்டுத் தயிர் அரைக்கிண்ணம் சேர்க்கவும்.  தக்காளி நன்கு வேகும் வரை தயிர் சேர்த்து வதக்கவும்.  பின்னர் ஜீரகப் பொடி, மிளகு பொடி, வெந்தயப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து சற்றுக் கிளறி விட்டு வேக வைத்த பருப்பை இதில் சேர்க்கவும்.  ஒரு மூடியால் மூடிச் சிறிது நேரம் கொதிக்க விடவும்.  பருப்பு தானே கெட்டியாக தோசை மாவு பதத்துக்கு வந்துவிடும்.  கொத்துமல்லி சேர்க்கவும்.

ஃபுல்கா ரொட்டி அல்லது பரோட்டா, (பராந்தா) வோடு பரிமாறவும்.

Monday, May 5, 2014

கிள்ளு மிளகாய் சாம்பார்

இது குறிப்பாய் மதுரைப் பக்குவம்னு சொல்லலாம்.  அல்லது எங்க வீடுகளில் மட்டும் செய்து வரலாம்.  தெரியலை.  ஆனால் யாரும் அதிகம் செய்து பார்த்திராத இதை நம்ம ரங்க்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி தனியாச் சமைச்சுச் சாப்பிடறச்சே சாம்பார்ங்கற பேரிலே புளியே போடாமல் செய்து வந்திருக்கார்.  கல்யாணம் ஆனதுக்கப்புறமா என்னால் முடியாமல் போகும் தினங்களில் குழந்தைங்களுக்கு இந்த சாம்பாரைச் செய்து மேலே தெளிவாக் கிடைப்பதை ரசம்னு ஊத்திட்டு, அடியிலே கெட்டியா இருப்பதை சாம்பார்னு சொல்லிப்பார்.  இத்தோட அருமையான காம்பினேஷனா காரட்+தக்காளி+வெள்ளரிக்காய்+வெங்காயம்+கொத்துமல்லி+மிளகு+உப்பு சேர்த்த சாலட்.  தினம் தினம் புளி சேர்த்து சமையல் என்றால் ரொம்பவே சலிப்பாய் இருக்கும்.  அதற்கு ஒரு மாற்று இது.  இப்போ நம்ம செய்முறை பத்திப் பார்ப்போமா?  சாம்பாராவே தான் பண்ணுவேன்.  எனோட அம்மா இதை வாரம் ஒருமுறையாவது பண்ணுவாங்க.  அதிலே போடும் மிளகாயெல்லாம் பிஞ்சு மிளகாயாக இருக்கும் என்பதால் மிளகாயோடு சேர்த்தே சாப்பிட்டிருக்கோம்.  இங்கே சின்ன மிளகாயே காரம் அதிகமா இருக்கு.  சுமார் நாலு பேருக்குத் தேவையான அளவு


புளியே இதுக்கு வேண்டாம்.  ஆகவே இன்னிக்கு நோ புளி டேனு வைச்சுக்குங்க.

தக்காளி பெரிது எனில் 2
நடுத்தர அளவு எனில் 3 அல்லது 4

பச்சை மிளகாய்ப் பிஞ்சு எனில் 50 கிராம் அல்லது 5 பச்சை மிளகாய்(காரமுள்ளது)

சாம்பார்ப் பொடி  அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்     கால் டீ ஸ்பூன்

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது ஒரு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

கருகப்பிலை, கொத்துமல்லி

தாளிக்க எண்ணெய்

கடுகு, வெந்தயம், 

பெருங்காயம் ஒரு துண்டு

தேவையான அளவு தண்ணீர் குழம்பில் சேர்க்க. ஒரு கிண்ணம் போதும்.

தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.  துவரம்பருப்பை முன்னதாக நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  நான் ஸ்டிக் கடாய், வாணலி அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருகப்பிலை தாளித்து நறுக்கி வைத்த தக்காளி, பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்.  மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு ஒரு கிண்ணம் நீரை ஊற்றித் தேவையான உப்புப் போடவும்.  தக்காளி நன்கு வேகும் வரை காத்திருந்து பின்னர் வெந்தபருப்பில் ஒரு கரண்டி நீர் விட்டுக் கரைத்துக் கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.  ஒருகொதி வந்ததும் இறக்கிக் கொத்துமல்லி போடவும்.  சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எதோடும் துணை போகும்.  இதிலேயே சின்ன வெங்காயமும் வதக்கிச் சேர்க்கலாம்.  அல்லது பெரிய வெங்காயம் நறுக்கி வதக்கிச் சேர்க்கலாம்.  சுவை மாறுபடும். படம் எடுத்திருக்கேன்.



அப்பாடா, ஒரு வழியாய் சமைக்கிறச்சேயே நினைவாய்ப் படம் எடுத்துட்டேன். :)

Thursday, May 1, 2014

ஃபலூடா சாப்பிட வாங்க!

மாங்கொட்டைக் குழம்பு யாருக்கும் பிடிக்கலை போல. பத்தியக் குழம்பு இல்ல, அதான்! போகட்டும். முந்தா நாள் உறவினர் வருகைக்கு மசால் தோசையும், ஃபலூடாவும் செய்தேன்.  மசால் தோசை பத்திச் சொல்ல வேண்டாம். :)  ஃபலூடா தமிழ்நாட்டில் தெரியுமானு புரியலை.  வட மாநிலங்களில் குறிப்பாய் மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தானில் பிரபலமானது. இதைக் கடைகளில் கொடுக்கையில் அது கொஞ்சம் மாறுபடும். வீடுகளில் செய்வது வேறே மாதிரி.  அஜ்மேரில் சில கடைகளில் கூட வீட்டில் செய்யும் ஃபலூடா மாதிரியே தருவாங்க.  இப்போ வீட்டில் செய்யும் முறை பார்ப்போம். கொஞ்சம் நேரம் எடுக்கும்.  அலுத்துக்காமல் செய்யணும். :)

முதலில் கேக் தயாரிப்பு. இதற்கு ப்ளம் கேக் , பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டது நல்லா இருக்கும்.  முன்னெல்லாம் வீட்டிலேயே கேக் செய்திருக்கேன்.  இப்போ அவன் இல்லை.  தானம் கொடுத்தாச்சு.  ஆகவே வாங்கறது தான்.  ப்ளம் கேக்  ஒரு முழு கேக் வாங்கிக்கலாம்.  விலை ஜாஸ்தினு நினைப்பவர்கள் ஒரு துண்டு இருபது ரூபாய்னு விற்கும் கேக் துண்டுகள் நான்கு வாங்கிக்குங்க.  அதிலே மேலே க்ரீம், சாக்லேட் சாஸ் ஊற்றித் தயாரித்திருப்பார்கள். அதுவும் நல்லாவே இருக்கும்.  நேத்திக்கு நாங்க இந்தத் துண்டு கேக்  4 துண்டுகள் வாங்கினோம்.


அடுத்து சேமியா தயாரிப்பு.  கடைகளில் ஃபலூடாவுக்கெனத் தனியா விற்கும். அதை வாங்கிச் சேர்ப்பாங்க.  நாமதான் அப்படி எல்லாம் இல்லையே.  நல்ல எம்டிஆர் சேமியா அல்லது பொம்பினோ சேமியா (இது இரண்டு தான் குழையாது.  தனித்தனியாக வரும்) நெய்யில் வறுத்துக் கொண்டு, பாலில் வேக வைக்கவும்.   நான்கு நபர்களுக்குத் தேவையான சேமியா இரண்டு குழிக்கரண்டி அல்லது ஒரு கிண்ணம். சேமியா நன்கு வெந்து கெட்டிப்பட்டதும், நெய்யில் பாதாம் பருப்பு, பிஸ்தாப்பருப்பு, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து ஏலக்காய், குங்குமப் பூ, பச்சைக்கற்பூரம்(பிடித்தால்) சேர்க்கவும்.  தனியாக ஆற வைக்கவும்.

அடுத்துக்  கஸ்டர்ட் தயாரிப்பு.   இதற்கு அரை லிட்டர் பால் தேவை.  காய்ச்சி ஆற வைக்கவும். வனிலா கஸ்டர்ட் பவுடர் வாங்கவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் காய்ச்சி ஆற வைத்த பாலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு நன்றாகக் கலக்கவும்.  கலந்ததை மீதம் உள்ள பாலில் விட்டு அடுப்பில் மீண்டும் வைத்து, குறைவான தீயில் கொதிக்க விடவும்.  கை விடாமல் கிளற வேண்டும்.  ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, இரண்டு டீ ஸ்பூன் வெண்ணை சேர்த்துக் கிளறவும்.  கெட்டியாக வரும்போது இறக்கவும்.  ஆற வைக்கவும்.

அடுத்து ஜெல்லி தயாரிப்பு.  ஒரு பாக்கெட் ஸ்ட்ராபெரி ஜெல்லி அல்லது க்ரேப் ஜெல்லி பவுடர் வாங்கிக் கொள்ளவும்.  அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து ஆற விடவும்.   ஆறிய நீரில் ஜெல்லிப் பவுடரைக் கொட்டிக் கிளறவும்.  ஒரு கண்ணாடிக் கிண்ணம் அல்லது டிசைன் போட்ட ஸ்டீல் கிண்ணம் இருந்தால் அதில் ஜெல்லியைக் கொட்டிக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஜெல்லி கெட்டிப்படக் கொஞ்சம் நேரம் எடுக்கும்.  மேற்சொன்ன முறையிலோ அல்லது ஜெல்லிப் பவுடர் பாக்கெட்டில் போட்டிருக்கும் செய்முறைப்படி செய்யவும்.

அடுத்துப் பழங்கள்.  உங்க இஷ்டப்படி பழங்களை வாங்கி நறுக்கி வைங்க.  மாம்பழம் இதுக்கு வேண்டாம்.  மற்றபடி வாழைப்பழம், அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பேரிச்சை, திராக்ஷை, பப்பாளி  போன்ற பழங்கள் எல்லாமும் அல்லது இவற்றில் ஏதேனும் மூன்று, நான்கு பழங்கள் நறுக்கிக் கொண்டு மொத்தத்துக்கும்  அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத் தூள், அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம். அல்லது ஃபாமிலி பாக் வாங்கிக் கொள்ளவும்.  நேத்து அடிச்ச வெயிலில் ஐஸ்க்ரீம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வரதுக்குள்ளே உருகிடும்னு ஐஸ்க்ரீம் வாங்கலை.  அதே போல் ஜெல்லி பவுடரும் இல்லை. அதனால் ஜெல்லியும் சேர்க்கலை.   இப்போக் கலக்கும் முறை.

மேற்சொன்னவற்றைச் செய்து ஆற வைத்துக் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைச்சிருங்க.  பழ சாலடையும் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருக்கட்டும்.
சாப்பிடும் நேரம் வெளியே எடுக்கணும்.

ஒரு நீண்ட கண்ணாடி தம்ளர் அல்லது வட்டமான வாயகன்ற கண்ணாடி பெளல் ஒவ்வொருத்தருக்கும் எடுத்துக்கொள்ளவும்.  சாப்பிடும் ஸ்பூனும் கொஞ்சம் நீளமாக இருத்தல் நலம்.  மர ஸ்பூன் விற்பாங்க, அதையும் பயன்படுத்திட்டுத் தூக்கி எறியலாம்.






ஃபலூடா சேர்க்கும் முறை:

முதலில் கேக் ஒரு துண்டு அடியில் வைக்கவும்.

அதன் மேல் சேமியா வெள்ளை வெளேர்னு இருக்கும். ப்ரவுன் நிறக் கேக்கின் மேல் வெள்ளை சேமியா தேவையான அளவு போடவும்.

அதன் மேல் சிவந்த நிற ஜெல்லி அல்லது க்ரேப் நிற ஜெல்லி

அதன் மேல் மஞ்சள் கஸ்டர்ட்

அதன் மேல் பழங்கள் தூவவும்.  தேவையான அளவுக்குப் பழங்கள் போடலாம்.

அதன் மேல் ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்.

சாப்பிடும்போது ஸ்பூனால் அப்படியே அடி வரை குத்தி எடுத்துச் சாப்பிடணும். கலந்து சாப்பிட்டால் பிடிக்கும்னால் கலந்தும் சாப்பிடலாம்.   மேலே சொன்ன அளவில் ஒருத்தர் இருமுறைகள் ஃபலூடா சேர்த்துச் சாப்பிடலாம்.  கூடியவரை மர ஸ்பூனே நல்லது.


ஃபலூடா தேவையான பொருட்கள்

கேக் ப்ளம் கேக் அல்லது சாக்லேட் கேக் போன்ற ஏதானும் ஒன்று அல்லது துண்டாக்கப்பட்ட கேக் துண்டங்கள் நாலு அல்லது ஐந்து

சேமியா கேசரி போல் தயாரித்தது  200 கிராம் அளவு

கஸ்டர்ட் கலவை    அதே 200 கிராம் அளவுக்குத் தயாரித்தது

ஜெல்லி கலவை  ஒரு பாக்கெட் ஜெல்லிப் பவுடரின் அளவுக்குத் தயார் செய்தது


பழங்கள் ஆப்பிள் ஒன்று, ஆரஞ்சு ஒன்று, மாதுளை ஒன்று, வாழைப்பழம் மூன்று, பப்பாளி பாதி இவை இருந்தால் போதும்.  தேவை எனில் மற்றப் பழங்களையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்க்கலாம்.

உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம். நான் ஐஸ்க்ரீம் சேர்க்கவில்லை. 

நேத்திக்குப் பேச்சு மும்முரத்திலும், தொடர்ந்த தொலைபேசி அழைப்புகளினாலும் ஃபலூடா கலக்கும்போது படம் எடுக்க முடியலை.  :(

Wednesday, April 30, 2014

மாங்கொட்டைக் குழம்பு!

நான்கு பேர்களுக்கு மாங்கொட்டைக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்

மாங்கொட்டையை  எடுத்துக் கொண்டு கடினமான தோலைத் தட்டி உடைத்து உள்ளே உள்ள பருப்பைத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.  அநேகமாய் அது நான்கு பேருக்கான குழம்புக்குப் போதும்.  சின்னதாக இருப்பதாய்த் தோன்றினால் இன்னொரு கொட்டையை உடைத்து உள்பருப்பையும் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் குழம்பிற்குச் சிலர் மாங்காய்த் தளிரையும் போடுவார்கள்.  தளிரை மாங்காய் வற்றல் என்றும் சொல்வார்கள்  மாங்காய்க் காலத்தில் தோலோடு மாங்காயை நீளமாக அரை அங்குல கனத்தில் வெட்டி எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து ஊற வைத்துப் பின்னர் வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.  இதுவே மாங்காய் வற்றல்.  இந்த மாங்காய் வற்றல் இல்லாமலும் மாங்கொட்டைக் குழம்பு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகு    இரண்டு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் ஆறு

உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

ஜீரகம்(தேவைப்பட்டால்) அரை டீஸ்பூன்

தனியா இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

புளி ஒரு எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கரைக்கவும்)

தாளிக்க மற்றும்  குழம்பு  கொதிக்கவிடத் தேவையான எண்ணெய் நல்லெண்ணாயாக இருத்தல் நலம்.  அது இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு குழிக்கரண்டி

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

மாங்கொட்டைப் பருப்பு

மாங்காய் வற்றல்(தேவையானால்)  ஊற வைத்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

முதலில் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு  மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, ஜீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.  பெருங்காயம், கருகப்பிலையையும் வறுத்துக் கொள்ளவும்.  இத்துடன் மாங்கொட்டைப் பருப்பையும் உப்பு, புளி இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.  அல்லது புளி ஜலத்தைக் கரைத்து வைத்துக் கொண்டு, உப்புச் சேர்த்து மேற்சொன்ன சாமான்களை வறுத்து, மாங்கொட்டையை வறுக்காமல் சேர்த்து அரைத்துப் புளிக்கரைசலில் கரைத்துக் கொள்ளலாம்.

கல்சட்டி அல்லது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கடுகு போடவும். அரைத்துக் கரைத்த விழுது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் ஊற்றிக் கொண்டு தாளிதம் செய்தவற்றில் கொட்டிக் கலக்கவும்.  மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுப்பை மெதுவாக எரிய விட்டு நிதானமாய்க் கொதிக்க விட வேண்டும்.  கொதிக்க ஆரம்பித்ததும் ஏற்கெனவே வேக வைத்த மாங்காய் வற்றலைச் சேர்க்கலாம். பின்னர் குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வருகையில் அடுப்பை அணைக்கவும்.  குழம்பை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குறைந்தது பதினைந்து நாட்கள் பயன்படுத்தலாம்.


மின் தமிழ்க் குழுமத்தில் ஷைலஜா மாங்கொட்டைக் குழம்பு செய்முறை கேட்டிருந்தார்.  அதை இங்கேயும் பர்கிறேன். 

Friday, April 4, 2014

வடாம் திருடர்கள் ஜாக்கிரதை! :(

எங்க குடியிருப்பில் அநேகமாக எல்லாருமே நான் வடாம் போடுவதைப் பார்த்துட்டு இந்தவருஷம் போட்டாங்க.  முந்தாநாள் அரிசிமாவில் வெங்காயக் கறிவடாம் போட்டேன்.  முந்தாநாள் வைச்சதில் ரங்க்ஸ் ரொம்பவே உருண்டையாக உருட்டி விட அதெல்லாம் உள்ளே காயவில்லை.  அதனால் நேத்திக்கு எல்லாத்தையும் ஒரு பெரிய தட்டில் மாற்றிக் காய வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 2 கிலோ வடாம் இருக்கும். யாரோ வந்து அத்தனை வடாமையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க.  வெறும் காலித் தட்டு மட்டும் நாங்க வைச்ச இடத்திலேயே இருந்தது.  ரொம்பப் பெரிய தட்டு என்பதால் அதை எடுத்துட்டுப் போனாத் தெரிஞ்சுடும்னு எடுத்துட்டுப் போகலை போல!  இன்னொருத்தர் போட்டிருந்த வடாம்களில் கொஞ்சத்தை மட்டும் வைச்சுட்டு, (ருசி பிடிக்கலையோ?) மிச்சம் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்காங்க. என்னத்தைச் சொல்றதுனு ஒண்ணும் புரியலை! போன வருஷம் அமெரிக்காவுக்கு அனுப்ப, மாமியாருக்குனு கொடுக்கிறதுக்காகனு நிறையவே போட்டேன். அப்போல்லாம் ஒண்ணுமே நடக்கலை.  இந்த வருஷம் இப்போத் தான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே திருட்டு! :((((

Wednesday, April 2, 2014

வெங்காயக் கறிவடாம் படங்களும் சில முக்கியக்குறிப்புகளும்!


படம் அன்னிக்கே எடுத்துட்டாலும் இன்னிக்குத் தான் அப்லோட் செய்ய முடிஞ்சது.  அதான் தனிப்பதிவாப் போட்டுட்டேன். :))))

முதல்நாளே ஊற வைச்ச சிவப்புக்காராமணி மேலே. காராமணி பிடிக்காது து.பருப்புனு சொன்னால் அதைக் காலம்பரவே ஊற வைச்சுக்கலாம்.




ஊற வைச்ச உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு




அரைத்த மாவு.




வெங்காயம் நறுக்கியது.  இத்துடன் கருகப்பிலை, கொத்துமல்லியும் சேர்த்துக் கலக்கணும்.




இப்படி உருட்டி வைக்கணும்.  ரொம்பவே மொழு மொழுனு உருட்டிட்டா உள்ளே சரியாக் காயாது.  ஆகவே கொஞ்சம் அப்படியே பக்கோடாவுக்குப் போடறாப்போல் உருட்டிப் போடணும்.  அப்போத் தான் நல்லாக் காயும்.


சில டிப்ஸ் கொடுக்கணும்.  இதோ வரேன்.  ஹிஹிஹி, அவசர வேலை ஒண்ணை முடிச்சுட்டு வந்தேன்.


குக்கர் வைக்கிறது இப்போ 99% பழக்கம் என்றாலும் இன்னமும் சிலர் அதில் சில முக்கியத் தவறுகளைச் செய்கின்றனர்.  பார்க்க எதுவுமே இல்லை என்பது போல் தெரிந்தாலும் அது தான் மிக முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

சமீபத்தில் என் உறவினர் குக்கர் வைத்ததும் உடனேயே அதில் வெயிட் எனப்படும் குண்டைப் போட்டு விட்டார்.  அம்மாதிரிப் போடுவது மிகத் தவறு.  குக்கர் நாமே தேய்த்தால் கூட அதிலிருந்து ஆவி வரும்வரை வெயிட் போடாமல் இருப்பது தான் நல்லது.  ஒரு வேளை தேய்க்கையில் ஏதேனும் சாதப்பருக்கையோ, பருப்புத் துணுக்கோ, காய்கள் வைப்பவர்களானால் காய்த்துணுக்கோ மிக நுண்ணிய அளவில் கூட அந்த ஆவி வெளிவரும் துவாரத்தில் இருப்பது உண்டு.  நன்றாக நீர் விட்டுக் கழுவவேண்டும்.  அப்படியும் பல சமயங்களில் அடைபடும்.  குண்டை உடனே போட்டுவிட்டால் அந்தத் துவாரத்தின் வழியே வெளிவர வேண்டிய அதிக அழுத்தம் நிறைந்த ஆவி உள்ளேயே தங்கிக் குக்கர் வெடிக்கும் அபாயம் உண்டு. துவாரத்தின் வழியாக ஆவி வெளி வர நேரம் கொடுத்தால் அந்த ஆவி பட்டு அதிலுள்ள நீரானது உள்ளே இருக்கும் துணுக்குகளை ஆவியோடு சேர்த்து வெளிக்கொண்டுவரும்.  இது தான் ஆபத்து இல்லாத முறை.

இன்னொன்றும் குக்கர் குறித்தே.  ஆவி வெளியே வந்து குக்கருக்கு வெயிட் போட்டு விசில் வரும்போது வெயிட் தூக்கிக் கொள்ள வேண்டும்.  தூக்கிக் கொண்டு நீண்ட சப்தமாக வரவேண்டும்.  விட்டு விட்டு வரக் கூடாது.  ஆவி வரும் துவாரத்தில் அடைப்பு இருந்தால் தான் விட்டு விட்டு வரும்.  ஆனால் பெரும்பாலும் விட்டு விட்டு வருவது தான் நல்லது என நினைக்கின்றனர்.  உள்ளே இருக்கும் அதிக அழுத்தம் நீண்ட சப்தத்தோடு வெளியேற வேண்டும்.  இந்த அழுத்தம் உள்ளேயே தங்குவது ஆபத்து.  அம்மாதிரி நீண்ட சப்தம் வந்தால் அது ஏதோ தப்பு என்பது போல் வெயிட்டின் தலையில் ஒரு கரண்டியை அல்லது இடுக்கியைப் பிடித்துக் குக்கரோடு சேர்த்து அமுக்கிக் கொண்டு நிற்கின்றனர்.  அழுத்தம் தாங்காமல் வெயிட் தூக்கிக் கொண்டு குக்கரின் உள்ளே உள்ள உணவுப் பொருள் எல்லாமும் வெளியேறி மூடியே தூக்கிக் கொண்டு திறக்கும் அபாயம் இதில் உண்டு.  சொன்னாலும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர்.

அடுத்தது குக்கரின் சேஃப்டி வால்வ்.  முன்னெல்லாம் இதைச் சுற்றி ஈயப் பற்று வைத்திருந்தது.  அப்புறம் அதிக அழுத்தம், சூட்டில் அடிக்கடி ஈயம் உருகுவதால் முழுக்க முழுக்க ரப்பரினால் ஆன சேஃப்டி வால்வ் வந்தது.  அது கொஞ்சமாவது சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே உள்ள அதிகப்படி நீராவி அதன் மூலம் வெளியேற வேண்டும்.  அதை ஈயம் போட்டு முழுக்க முழுக்க அடைக்கின்றனர்.  இதுவும் மிகப் பெரிய ஆபத்து. குக்கர் வாங்கினதும், அவர்கள் கொடுக்கும் கையேடுகளைக் கவனமாகப் படித்துவிட வேண்டும். அப்போது தான் நாம் செய்வதில் என்னென்ன தவறு என்பது புரியவரும். 

Monday, March 31, 2014

குழம்பில் போடும் வெங்காயக் கறிவடாம்

ஏற்கெனவே வெங்காயக் கறிவடாம் குறித்து எழுதி இருக்கேன்.  ஆகையால் என்னடா இதுனு எல்லோரும் பார்ப்பீங்கனு தான் விளக்கம் கொடுத்துட்டேன்.  அது பொரிச்சுத் தொட்டுக்கொள்ள வைச்சுக்கறதுக்கு.  இது குழம்பு வைக்க. கூட்டு, கலந்த சாதம் போன்றவற்றில் போட்டுக் கலக்க. 

சிவப்புக் காராமணி ஒரு ஆழாக்கு அல்லது 200 கிராம்

இதை முதலிலேயே ஊற வைக்கணும்.  எட்டு மணி நேரமாவது ஊறணும், ஆகவே முதல்நாள் மாலை அல்லது இரவே ஊற வைக்கவும். 

மறுநாள் காலை அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு, அரை ஆழாக்குக் கடலைப்பருப்புக் களைந்து ஊற வைக்கவும்.  காலை ஏழு மணிக்குள்  அரைச்சுப் போட்டுடறது நல்லது என்பதால் முடிந்தவரை காலை ஐந்து மணிக்குள்ளாக ஊற வைக்கவும்.  இல்லையென்றாலும் பரவாயில்லை.  ஒன்பது மணிக்குள்ளாகப் போட்டுடலாம்.

மேற்சொன்ன அளவுக்குத் தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் பத்து அல்லது பனிரண்டு(காரம் வேண்டும் எனில் கூடப் போட்டுக்கலாம்)

தேவையான உப்பு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்

கால் கிலோவில் இருந்து அரைகிலோவுக்குள்ளாகப் பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் தோல் உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த சாமான்களை மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துவிட்டு நன்கு கலக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் அடியில் எண்ணெய் தடவி அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டை நன்கு அலம்பித் துடைத்து அதில் இந்த மாவை உருண்டையாகவோ அல்லது வடை போலவோ வைக்கவும்.  குறைந்தது மூன்று நாட்கள் (நல்ல வெயில் அடித்தால்) காய வேண்டும்.  காய்ந்த பின்னர் கையால் நொறுக்கிப் பார்த்தால் தூளாகும்.  அந்தப் பதம் வந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

வெறும் குழம்பு வைத்தால் போடத் தான் ஏதும் இல்லை எனில் குழம்பை இறக்கும்போது இதை எண்ணெயில் பொரித்துச் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.  கூட்டுகளுக்குப் போடலாம். கீரையில் வெங்காய வாசனை பிடிக்கும் எனில் போடலாம்.  மசாலா சாதங்களிலும் சேர்க்கலாம்.  நாளை போடும்போது நினைவிருந்தால் படம் எடுத்துப் போடறேன். :))))

Wednesday, March 12, 2014

காரடையான் நோன்பு நூற்க வாங்க!

காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் ஆரம்பிக்கும் வேளையில் கொண்டாடப் படும் ஒன்று.  பல சமயங்களிலும் இந்த மாதம் பிறப்பது என்பது நடு இரவில், அகாலத்தில் என வரும்.  இந்த வருடமும் இரவு பனிரண்டு மணிக்கு என்பதால் இரவு ஒன்பது மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாக நோன்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.  இப்போ நோன்புக் கொழுக்கட்டைக்கு வேண்டிய பொருட்கள்!

வெல்லக் கொழுக்கட்டைக்கு:

நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம்

அரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து கல்லரித்து இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  பின்னர் நீரை வடித்து அரை மணி வைக்கவும். அதன் பின்னர் மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கவும்.  சலிக்கணும்னு கட்டாயம் இல்லை.  கொஞ்சம் கொரகொரப்பு இருக்கலாம்.  பிடிக்காதவங்க சலிச்சு எடுத்துக் கொண்டு நைசாக இருக்கும் மாவை வெல்லக் கொழுக்கட்டைக்கும், கொர, கொரப்பாக இருப்பதை உப்புக்கும் வைச்சுக்கலாம். பொதுவாக இந்த நோன்புக்கு மிஷினில் கொடுத்து திரிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் இப்போது சிலர் தயாராகக் கிடைக்கும் அரிசி மாவையோ அல்லது மெஷினில் கொடுத்து அரைத்தோ பயன்படுத்துகின்றனர்.  இது அவரவர் விருப்பம்.

மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறும் வாணலியில் போட்டுக் கோல மாவு பதம் வரும் வரை வறுக்கவும்.  ஒரு தாம்பாளத்தில் போட்டு ஆற வைக்கவும்.

வெல்லம் தூள் செய்தது ஒரு கிண்ணம்

தேங்காய் மூடி ஒன்று, பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்.

காராமணி அல்லது முழுத் துவரை  இரண்டு டேபிள் ஸ்பூன்.  முதல் நாளே ஊற வைத்துக் களைந்து கல் அரித்துக் கொஞ்சம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

நீர் தேவையான அளவு.


ஒரு வாணலி அல்லது வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கொதிக்க விடவும்.  ஏற்கெனவே வேக வைத்துத் தனியாக வைத்திருக்கும் காராமணி/துவரையைச் சேர்க்கவும். வெல்லத் தூளையும் சேர்க்கவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  பின்னர் வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொண்டே வரவும்.  தேங்காய்க் கீற்றுக்களையும் சேர்க்கவும்.  நன்கு கிளறி மாவு கெட்டிப் பட்டு சுருண்டு வருகையில் கீழே இறக்கி ஏலப் பொடியைச் சேர்த்து ஆற விடவும்.  இது கொஞ்சம் ஆறட்டும்.  அதுக்குள்ளே நாம,

இப்போது அடுத்து உப்புக் கொழுக்கட்டைக்கான முறையைப் பார்க்கலாம்.

மாவு முன் சொன்ன முறையில் தயாரித்து ஆற விடவும்.  இதற்கும் காராமணி//துவரை தேவை.  ஆகவே முன் சொன்னாற்போல் வெல்லக் கொழுக்கட்டைக்கு வேக விடுகையில் இதற்கும் சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.  தேங்காய்க் கீற்றும் அப்படியே.  வெல்லத்துக்கும், இதற்கும் சேர்த்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

சமையல் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு,

உ.பருப்பு

க.பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் அவரவர் ருசிக்கு ஏற்ப மூன்றிலிருந்து நான்கு

கருகப்பிலை

பெருங்காயம்

உப்பு

அடி கனமான வேறொரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பருப்பு வகைகளைப் போட்டுத் தாளித்துக் கொண்டு இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், பெருங்காயம் சேர்க்கவும். இரண்டு கிண்ணம் நீரை ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும்.  நீர் கொதிக்கையில் வெந்த காராமணி/துவரையைச் சேர்க்கவும்.  வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும்.  விரைவில் மாவு கெட்டிப்பட்டு உருண்டு திரண்டு வந்துவிடும்.  கீழே இறக்கி ஆற வைக்கவும்.

இப்போது ஒரு இட்லிக் கொப்பரை அல்லது வாணலியில் ஒற்றைத் தட்டில் வாழை இலையை எண்ணெய் தடவிப் பரப்பவும். , முதலில் வெல்லக் கொழுக்கட்டை மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வடை போல் தட்டி நடுவில் ஒரு சின்ன குழி செய்து இட்லிக் கொப்பரையில் இருக்கும் வாழை இலையில் வைக்கவும். ஒரே சமயம் இம்மாதிரிப் பத்துப் பதினைந்து அடைகள் செய்து வேக வைக்கலாம்.  குறைந்தது வாழை இலை பரப்பிய அந்தத் தட்டுக் கொள்ளும் அளவுக்கு வைக்கவும்.  பின்னர் மூடியால் மூடிவிட்டு ஐந்திலிருந்து பத்து நிமிஷம் வரை வேக வைக்கவும். திறந்து பார்த்தால் மேலே வேர்த்து விட்டிருக்கும்.  வெளியே எடுத்து  ஆற விடவும்.  எல்லா மாவையும் இதே போல் செய்யவும்.

இதே போல் உப்புக் கொழுக்கட்டை மாவையும் வடை போல் தட்டி நடுவில் குழி செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

சுவாமி அலமாரி அல்லது பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு எதிரே தனியாக இரண்டு கோலம் போட்டு, (நீங்க தனியா இருந்தால் இரண்டு கோலம், வீட்டில் இரண்டு, மூன்று நபர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிக்கோலம்) அதில் நுனி வாழை இலையை வைக்கவும்.  நல்ல சுத்தமான வெண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.  சுவாமி படங்களுக்கு எதிரே செய்த கொழுக்கட்டைகளை வைத்து, வேறொரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், உடைத்த தேங்காய், நோன்புச் சரடுகள் வைக்கவும்.  நோன்புச் சரடுகளை முதலிலேயே பூவோ அல்லது மஞ்சளோ வைத்துக் கட்டித் தயார் செய்யவும்.

நுனி வாழை இலையில் முதலில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் வைத்துவிட்டு இரண்டு அல்லது நான்கு வெல்லக் கொழுக்கட்டை, நான்கு உப்புக் கொழுக்கட்டையை இரு இலைகளிலும் அல்லது எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேர் இலைகளிலும் வைக்கவும்.அவரவர் ஒவ்வொரு இலைக்கு முன்னாலும் நின்று கொள்ளவும்.  நோன்புச் சரடுகளையும் சேர்த்து அம்பிகையை வேண்டிக் கொண்டு நிவேதனம் செய்து வழிபட்டுக் கற்பூரம் காட்டவும். எல்லாருமே தனித்தனியாக நிவேதனம் செய்யலாம்.  எல்லாரும் நிவேதனம் செய்து முடிந்ததும் கற்பூர ஆரத்தி பொதுவாகச் செய்யலாம்.

பின்னர் ஒரு நோன்புச் சரடை முதலில் எடுத்து அம்மன் படத்தின் மேல் சார்த்தவும். அவரவர் குலதெய்வம் அம்மனாக இருந்தால் அந்தப் படத்தின் மேலேயும் சார்த்தலாம்.  பின்னர் வயதில் மூத்த சுமங்கலிப் பெண் முதலில் கழுத்தில் தான் கட்டிக் கொண்டு பின்னர் வயதில் சிறியவர்களுக்கு அவரே கட்டிவிடவேண்டும். ஒரு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கும் கட்டுவது உண்டு.  பின்னர் நிவேதனம் செய்த இலைகளில் இருந்து திருமணம் ஆன பெண்கள் வேறொரு தட்டு அல்லது இலையில் தங்கள் கணவன்மாருக்கு இந்த நிவேதனப் பிரசாதத்தைக் கட்டாயமாய் எடுத்து வைக்கவும்.  வகைக்கு ஒன்று என எடுத்து வைத்தால் கூடப் போதும்.  பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடிந்த பின்னர் கணவனுக்கு நிவேதனப் பிரசாதத்தைக் கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் கணவருக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் செய்த கொழுக்கட்டைகளைப் பகிர்ந்தளிக்கலாம்.

சுமங்கலிப் பெண்களுக்கு அன்று முழுதும் விரதம் என்பதால் நோன்பு நூற்கும் வரை பொதுவாக எதுவும் சாப்பிட மாட்டார்கள்.  நோயாளிகள், வயதானவர்கள், பசி தாங்க முடியாதவர்கள் கஞ்சியோ அல்லது சப்பாத்தி மாதிரியான ஆகாரமோ செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கலாம்.  செய்த கொழுக்கட்டையில் குறைந்தது இரண்டாவது எடுத்து வைத்து நோன்பு முடிந்த மறு நாள் காலையில் பசுமாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.


எங்கே, இங்கே ஶ்ரீரங்கத்தில் பசுமாட்டுக்கு அப்படி எல்லாம் கொடுத்துட்டு அப்புறமா வீட்டுக்கு வரமுடியாது! :)))))  மாட்டுக்காரங்க சும்மா விடமாட்டாங்க!


எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்தே. இந்தப் பக்கத்தில் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியாகும் வகையில் அமைத்திருந்தேன்.  அதனால் எனக்கு மின் மடல் வராமல் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.  ஆனால் இப்போது அதை மாற்றி விட்டேன்.  மட்டுறுத்தலுக்கு உட்பட்டுப் பின்னூட்டங்கள் வெளியாகும் வகையில் மின் மடலுக்கு வரும்படி மாற்றிவிட்டேன். ஆகையால் படிக்கும் நண்பர்கள் பின்னூட்டங்கள் உடனே வெளியாகவில்லையே என எண்ண வேண்டாம்.  இப்போ ஒரு பாரம்பரிய செய்முறைக் குறிப்பைப் பார்ப்போமா?

நாளை காரடையான் நோன்பு.  எல்லாப் பெண்களுக்கும் நாளை கட்டாயமாய் நோன்பு  இருக்கும்.  இதை சாவித்திரி நோன்பு என்றும் சொல்வதுண்டு.  இதற்கு நிவேதனமாக அரிசி மாவில் செய்த வெல்லக் கொழுக்கட்டை, (ஒரு சிலர் அடை என்பார்கள்) உப்புக் கொழுக்கட்டை பண்ணுவாங்க.  சாவித்திரி காட்டில் கிடைத்த வரகரிசியில் மாவாக்கி, அங்கே கிடைத்தக் காராமணிகளைப் போட்டு, சுள்ளிகளைப் போட்டு எரிய வைத்து  வைக்கோலிலேயே அடைகளையும்  வேக வைத்து எடுத்தாள் என்பது செவிவழிக் கூற்று.  பல காலம் என்னோட அம்மா காரடையான் நோன்புக்காகவே மாட்டுக்காரர்களிடம் கேட்டு வைக்கோல் வாங்கி வந்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டு, இட்லிக் கொப்பரையில் துணி போடும் இடத்தில் அதற்கு பதிலாக வைக்கோலைப் போட்டு அதில் இந்தக் கொழுக்கட்டை/அடைகளைத் தட்டிப் போட்டு வேக வைப்பார்.

இப்போ அதெல்லாம் யாருக்கும் தெரியாத ஒன்று. :))) அடை செய்முறையை மட்டும் பார்ப்போம்.  இதை நோன்பன்று மட்டும் தான் செய்து சாப்பிடணும்னு இல்லை.  சாதாரணமான நாளிலும் மாலை டிஃபனுக்குச் செய்யலாம். வாங்க , மத்தியானமா அடுத்த பதிவுக்குப் போய் அடை செய்வது எப்படினு பார்க்கலாம்!

Thursday, February 6, 2014

தாளகமாம், தாளகம்!

இன்னிக்கு கொஞ்சம் மாறுதலா ஒரு குழம்பு செய்தேன்.  இதுக்குப்பருப்பு வேணும்னு அவசியம் இல்லை.  இதைத் தாளகக் குழம்புனு சொல்வாங்க.  எங்க வீட்டிலே இதை ராயர் குழம்புனு அப்பா சொல்லுவார். இதுக்கு நாட்டுக் காய்களே நன்றாக இருக்கும்.  நான் இன்னிக்கு அவரைக்காய், கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்தேன். பொதுவாக இதுக்கு அவரை, கத்திரி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்றவையே  நன்றாக இருக்கும்.  மறந்தும் கூட இங்கிலீஷ் காய்கள் எனப்படும் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் போன்றவையோ பச்சைப்பட்டாணியோ வேண்டாம்.  பச்சை மொச்சை கிடைக்கும் காலத்தில் பச்சை மொச்சையும், அதுகிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையையும், கொண்டைக்கடலையையும் போட்டுக்கலாம்.  படம் இன்னொரு நாள் பண்ணும்போது தான் எடுக்கணும்.  நேத்திக்கு ராத்திரி தேப்லா பண்ணினேன்.  படம் எடுக்க மறந்து போச்ச்! :))))

செய்முறை


நான்கு பேருக்குக்காய்கள் அனைத்தும் கலந்து கால் கிலோவுக்குள்போதும். அல்லது

வாழைக்காய் சின்னது ஒன்று

கத்தரிக்காய் இரண்டு

அவரைக்காய் ஒரு கைப்பிடி

சேனைக்கிழங்கு நூறு கிராம் அளவு

பறங்கிக்காய் நூறு கிராம் அளவு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைச்சால் ஒன்று

பச்சை மொச்சை அல்லது மொச்சைப்பருப்பு ஒரு கைப்பிடி

கொண்டைக்கடலை  ஒருகைப்பிடி

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. ஊறவைத்துக் கரைத்து வடிகட்டுச் சாறு எடுத்துக் கொள்ளவும்.  சாறின் அளவு இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

உப்பு தேவைக்கு

வறுத்து அரைக்க

மஞ்சள் பொடி அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு

மிளகாய் வற்றல்  நான்கு

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

மிளகு ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, மி.வத்தல்

தாளிக்க வறுக்க

சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

காய்களைத் துண்டம் துண்டமாக அல்லது நீள வாட்டில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்து நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  காய்கள் பாதி வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுக்கவும்.  தேங்காயையும் வறுக்கலாம்.  மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் இன்னொரு இரும்புக் கரண்டியில் மிச்சம் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், உ.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.  கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். வெறும்  சாதம், மற்றும் கலந்த சாதங்களோடு சாப்பிட ஏதுவானது.  சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இப்படிக் காய்களைப் போட்டுக் குழம்பு செய்து அப்பளம் பொரித்துக் கொண்டோ அல்லது வடாம், வத்தல் வறுத்துக் கொண்டோ சாப்பிட்டுக்கலாம்.


இதுவே இன்னொரு முறையிலும் செய்வார்கள்.  அதில் காய்கள் சேர்க்கும் விதம், புளித்தண்ணீர் சேர்ப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் வறுத்து அரைப்பதில் மாறுதல் இருக்கும்.

வறுத்து அரைக்க

மி.வத்தல்.      5

கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்

உ.பருப்பு                  ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்       அரை டீஸ்பூன்

வெந்தயம்               அரை டீஸ்பூன்

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கருகப்பிலை

இவை எல்லாவற்றையும் வறுத்து கருகப்பிலையையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பார்கள்.  இதுவும் ஒரு மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தென் மாவட்டங்களில் வெண் பொங்கலும், தாளகக் குழம்பும் ரொம்பவே பிரபலம் ஆன ஒரு விஷயம்.  அதுவும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தாலோ (பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்) அல்லது அக்கம்பக்கம் இருந்தாலோ அவங்களுக்கு வெண் பொங்கல் செய்து இந்தக் குழம்பையும் பண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துச் சாப்பிட வைப்பாங்க.  புதுத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறதும் உண்டு.  வெறும் வெற்றிலை, பாக்கு, காசு கொடுப்பவர்களும் உண்டு.  இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.


Friday, January 31, 2014

தேப்லா சாப்பிட வாங்க!

பரோட்டாவெல்லாம் போட்டுட்டேன், சாப்பிட்டுப் பார்த்திருப்பீங்க. :)) இப்போ ரொட்டி வகைகளில் வேறே சிலது பார்ப்போமா?  இதிலே தேப்லா என்ற குஜராத்தி முறை ரொட்டி ஒண்ணும், மிஸ்ஸி ரொட்டி என்ற மராட்டி வகை ஒண்ணும் பார்ப்போம்.  இது எல்லாம் என்னோட முறையிலே தான் நான் செய்வேன்.  அவங்க முறையிலே செய்யறதில்லை.  தேப்லாவை குஜராத்தியர் கோதுமை மாவிலே மட்டுமே செய்வாங்க.  நான் கொஞ்சம் கடலை மாவு சேர்த்துப்பேன். அதான் வித்தியாசம்.  ராஜஸ்தானில் ஐந்து கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ கடலைப்பருப்புச் சேர்த்தே அரைப்பாங்க. ஆக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை. :)))


தேப்லா அல்லது தேப்ளா; நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்

கோதுமை மாவு இரண்டு கிண்ணம்

கடலை மாவு அரைக்கிண்ணம்

மஞ்சள் பொடி  அரை டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

ஓமம் பொடித்தது அல்லது முழுதாக ஒரு டீஸ்பூன்

சோம்பு அரை டீஸ்பூன்

ஜீரகம் அரை டீஸ்பூன் பொடித்தது

உப்பு தேவைக்கு

இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது சாதாரணமாய் ரொட்டி பண்ணுகையில் வட மாநிலங்களில் உப்பு சேர்த்துப் பிசைந்து பார்த்ததில்லை.  ஆனால் இம்மாதிரி ரொட்டிகள் பண்ணுகையில் தேவையான உப்பைச் சேர்க்கணும்.

பிசைய சமையல் எண்ணெய் (நான் நல்லெண்ணெய் தான் பயன்படுத்துவேன்) இரண்டு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் ஒன்று பொடியாக நறுக்கியது

இஞ்சித் துருவல் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்


மாவுகளை முதலில் ஒன்றாகக் கலக்கவும்.  கலக்கும்போது மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி, பொடித்த ஓமம், ஜீரகப் பொடி, சோம்பு போன்றவற்றையும் சேர்த்து முதலில் கைகளால் நன்கு கலக்கவும். மாவு நன்கு கலந்ததும் தயாராக வைத்திருக்கும் சமையல் எண்ணெயை சூடு செய்து மாவில் விடவும்.  மீண்டும் கலக்கவும்.  இப்போது பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு கைகளுக்குக் கொரகொரப்பாக வரும்.  கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து மாவை ரொட்டி மாவு பதத்துக்குப் பிசையவும். பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர்  மாவை மீண்டும் கொஞ்சம் பிசைந்து கொண்டு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டிச் சப்பாத்தியாக இடவும்.  அதை தோசைக்கல்லில் அல்லது நான் ஸ்டிக் தவாவில் போட்டுச் சுடவும்.  அடி பாகம் வெந்து மேலே குமிழ் வந்ததும் திருப்பிப் போட்டு மறு பாகத்தையும் வேக வைக்கவும்.  பொன்னிறமாக வெந்ததும் எடுத்து இரண்டு பக்கமும் மேலே கொஞ்சம் நெய்யைத் தடவி விட்டு வைக்கவும்.  ஒரு சிலர் தோசைக்கல்லில் வேகும்போதே நெய் அல்லது எண்ணெய் ஊற்றியும் வேக வைக்கிறார்கள்.  அது அவரவர் விருப்பம் போலச் செய்யவும்.  இதைக் கொஞ்சம் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொண்டால் ஊர்களுக்குச் செல்லும்போது ஊறுகாய், தக்காளித் தொக்கு, மாங்காய்த் தொக்கு, பச்சை ஆப்பிள் தொக்கு போன்றவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும்.  இது நாளை அல்லது நாளன்றைக்குச் செய்யும் போது படம் எடுத்துப் போடறேன்.  இன்னிக்கு தோசை மாவு இருக்கு! :))))

Saturday, January 25, 2014

பார், பார், கொண்டைக்கடலை சாதம் பார்!

இப்போ நீங்க சாதம் செய்யறதுக்குன்னே கொண்டைக்கடலையை ஊறப் போடுங்க. நல்லாவே இருந்தது.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

ஒரு சின்னக் கிண்ணம் வெள்ளைக் கொண்டைக்கடலை முதல் நாளே ஊற வைங்க.

முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, நாளைக்குச் செய்ய இன்னிக்கு மத்தியானம் ஊறப் போட்டீங்கன்னா ராத்திரி படுக்கறதுக்குள்ளே மூன்று முறையாவது கழுவிட்டு ஊற வைக்கிற நீரை மாத்துங்க.  இது கொண்டைக்கடலை, பட்டாணிபோன்றவற்றின் வழவழப்பைப் போக்குவதோடு ஒரு மாதிரியான வாசனை வராமலும் இருக்கும். இதை எந்தப் பருப்பு வகைகள் ஊற வைச்சாலும் நினைவில் வைச்சுக்குங்க.


கொண்டைக்கடலை ஊறியது ஒரு கிண்ணம் இப்போ ரெண்டு கிண்ணமாயிருக்கும். முளைக்கட்டி இருந்தால் இன்னும் நல்லது.

தக்காளி பெரிது ஒன்று

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி ஒரு அங்குலத் துண்டு அல்லது துருவலாக ஒரு டீஸ்பூன்

வெங்காயம் பெரிது ஒன்று

மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன்

தனியாப்பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

கசூரி மேதி கால் டீஸ்பூன்

கரம் மசாலா  அரை டீ ஸ்பூன்

தயிர் கெட்டியாக ஒரு சின்னக் கிண்ணம்

உப்பு தேவைக்கு

சமைத்த சாதம் உதிர் உதிராக மூன்று கிண்ணம் அல்லது 200 கிராம் பாஸ்மதி அரிசி.

தாளிக்க

எண்ணெய்  இரண்டு டேபிள் ஸ்பூன்

தேஜ் பத்தா எனப்படும் மசாலா இலை

லவங்கப்பட்டை ஒரு துண்டு

பெரிய ஏலக்காய் ஒன்று

கிராம்பு ஒன்று

சோம்பு ஒரு டீஸ்பூன்

சர்க்கரை ஒரு டீஸ்பூன்

பச்சைக் கொத்துமல்லி, புதினா ஆய்ந்து கழுவிக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.


கொண்டைக்கடலையை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு வடிகட்டி வைக்கவும்.  சமைத்த சாதம் எனில் உதிர் உதிராக எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பானைப் போட்டுக் கொண்டு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய்  காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைய ஆரம்பித்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தேஜ் பத்தா என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.  எல்லாம் வெடித்து வந்ததும் வெங்காயத்தைச் சேர்க்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவலைச் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்கவும்.  மஞ்சள்பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடியைச்  சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் வதக்கவும்.  பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலை நன்கு கலந்ததும் தயிரைச் சேர்க்கவும்.  உப்பு இப்போது சேர்க்க வேண்டாம்.

தயிரும் கொண்டைக்கடலையும் நன்கு கலந்ததும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து விட்டு அரிசிக்கு  உள்ள உப்பு மட்டும் சேர்க்கவும்.  கொண்டைக்கடலையை ஏற்கெனவே உப்புச் சேர்த்து வேக வைத்ததை மறக்க வேண்டாம்.   பின்னர் அரிசிக்கு உள்ள நீரை மட்டும் அளந்துவிட்டு விட்டு ரைஸ் குக்கரிலோ குக்கரிலோ வைக்கவும்.  வெளியே எடுத்து கரம் மசாலா, ஒரு ஸ்பூன் வெண்ணெய் கசூரி மேதி சேர்த்து விட்டுக் கொண்டு, கொத்துமல்லி, புதினா நறுக்கியவற்றைத் தூவி அலங்கரிக்கவும்.  எந்தவிதமான பச்சடியோடும் சாப்பிட ரெடி.




சாதமாகச் சேர்க்கிறீர்கள் எனில் கொண்டைக்கடலையும் தயிரும் கலந்ததும் தயிர் நன்கு வற்றிக் கொண்டைக்கடலை மட்டும் ஈரமில்லாமல் வந்ததும் சாதத்தைச் சேர்க்கவும்.  தேவையான உப்பை மிதமாகப் போடவும்.  ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயோடு கரம் மசாலா, கசூரி மேதி சேர்த்துக் கிளறி விட்டு அடுப்பை அணைத்துவிட்டுப் பின்னர் பச்சைக் கொத்துமல்லி, புதினா இலைகளால் அலங்கரிக்கவும்.  நான் சாதமாகத் தான் சேர்த்தேன்.  200 கிராம் அரிசி தான் முழு நாளுக்கும்.  ஆகவே அத்தனையையும் கொ.க.சாதம் பண்ணினால் செலவாகாது.  நிறையப் பேர் இருந்தால் குக்கரிலோ, ரைஸ் குக்கரிலோ அரிசியைப் போட்டுச் செய்வது சரியாய் வரும்.

ஊற வைச்ச கொ.க. மிஞ்சினால் என்ன செய்யலாம்? :)))

இரண்டு நாள் முன்னாடி காலை ஆகாரத்துக்கு ரொட்டி பண்ணினேனா!  அதுக்குக் கொண்டைக்கடலையிலே தான் தொட்டுக்கப் பண்ணி இருந்தேன்.  நனைச்சது என்னமோ சின்னக் கிண்ணம் தான்.  ஆனாலும் ஊற வைச்ச கடலையை எல்லாம் போட்டுப் பண்ணலை.  நிறைய ஆயிடும் போல் தோணித்து.  அதனால் அதே சின்னக் கிண்ணம் அளவுக்கு ஊறின கடலையைத் தனியா எடுத்து வைச்சிருந்தேன்.  மூணு நாளா அந்தக் கடலை கண்களிலே பட்டுக் கொண்டு என்னை என்ன செய்யப் போறேனு கேட்டுட்டு இருந்தது.  ஆனால் மூணு நாளா வெங்காயம், சோம்பு எல்லாம் சேர்க்க முடியாத நேரமாக இருந்தது.  இன்னிக்கு என்ன சமையல்னு மண்டை உடைஞ்சது.  சாம்பார் நேத்திக்குத் தான் பண்ணினேன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நீர்ப்புளி விட்டு சாம்பார்.  முந்தாநாள் மோர்க்குழம்பு, பருப்பு உசிலி. அதுக்கு முன்னாடி மைசூர் ரசம். அதுக்கு முன்னாடி வத்தக்குழம்பு, பொரிச்ச குழம்புனு வைச்சாச்சு.

இன்னிக்குத் தான் வெங்காயம் சேர்க்கலாமே! அந்தக் கொண்டைக்கடலையை வைச்சு சனா மசாலா பண்ணி ஃபுல்கா ரொட்டிடலாமா? ம்ம்ம்ம்ம்? மதியம் சாப்பாட்டுக்குப் பல சமயங்களிலும் ரொட்டி பண்ணி இருக்கேன் தான். ஆனால் இன்னிக்கு என்னமோ பண்ணணும்னு தோணலை.  சரி, கொண்டைக்கடலையைப் போட்டு மசாலா சாதமாப் பண்ணிடலாமானு யோசிச்சேன்.  அடுத்த நிமிஷம் ரெடி, ரெடி, ரெட்ட ரெடி.  மசாலா சாதம்னா தொட்டுக்க வெங்காயப் பச்சடி வேணுமே.  இன்னிக்குனு தயிர் அதிகமா இல்லையே!  சரி, காரட், தக்காளி, வெங்காயம் போட்டு சாலட் பண்ணிட்டு அப்பளம் பொரிச்சுக்கலாம்.  மிளகு, ஜீரகம் வறுத்தரைத்த ரசம் வைச்சுக்கலாம். தீர்மானம் ஆனது.

கொண்டைக்கடலை சாதம் வட மாநிலங்களில் பண்ணுவாங்க தான். நான் அதிகமாப் பண்ணினதில்லை.  இப்படி எப்போவானும் என்ன செய்யறதுனு முழிச்சுட்டு இருக்கிறச்சே பண்ணறது தான். இன்னிக்கு அதான் செய்தேன். செய்முறை படத்தோடு அடுத்த பதிவில்.

இதுக்குப் பின்னூட்டம் போடுங்கப்பா.  அப்போத் தான் அடுத்த பதிவு போடுவேனாக்கும்! :))))

Wednesday, January 22, 2014

ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம்!

பொதுவாய் இம்மாதிரியான ரசங்களே பத்திய உணவு வகையைச் சேர்ந்தவை என்றாலும் இந்த ரசம் குறிப்பாக பேதி மருந்து உட்கொள்ளும் நாட்களில் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கொடுப்பார்கள்.  முன்னெல்லாம் விளக்கெண்ணெய் கொடுத்து குடலைச் சுத்தம் செய்து வந்த நாட்கள் உண்டு.  காலையிலே விளக்கெண்ணெய் கொடுத்ததும் ஒரு மணி நேரம் கழிச்சுக் காஃபி கிடைக்காது.  மாறாக இந்த ரசம் தான் சூடாகக் குடிக்கக் கொடுப்பாங்க. மதியம் பனிரண்டு மணிக்குள்ளாகக் கழிவுகள் வயிற்றை விட்டு வெளியேறியதும் மீண்டும் இந்த ரசம் விட்டுக் கொஞ்சம் போல் குழைவான சாதம் போட்டுக் கரைத்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்வாங்க.  அதுக்கப்புறமா மூணு மணி அளவில் வெயிலில் வைத்து எடுத்த நீரில் குளிக்கச் சொல்லிட்டு கெட்டியாக மோர் சாதம், அல்லது தயிர் சாதம் போடுவாங்க.  தொட்டுக்க மூச்ச்ச்ச்!! அப்போ அந்த சாதமே தேவாமிர்தமா இருக்கும்.  ராத்திரிக்கு 2 அல்லது மூணு இட்லிகள் அதே தயிரோடு சாப்பிடணும்.  மறுநாளைக்கும் உடனடியாக வெங்காய சாம்பாரோடு, உ.கி.கறி வெளுத்துக் கட்ட முடியாது.  எளிமையான சாப்பாடாக பருப்பே இல்லாமல் சமைச்சிருப்பாங்க.  அதைத் தான் சாப்பிடணும்.  அதுக்கப்புறமாத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பருப்பு சேர்த்துப் பின்னர் எண்ணெயில் வதக்கின காய்கள், தேங்காய் சேர்த்தவை எனச் சேர்ப்பார்கள்.  இப்போல்லாம் பேதி மருந்துன்னா என்னன்னே பலருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த ரசம் வைச்சுக் குடிக்கலாம்.  கொஞ்சம் வயிறு சொன்னபடி கேட்டுக்கும். :)))



நான்கு பேர்களுக்கான பொருட்கள்:

சின்ன எலுமிச்சை அளவு புளி(பழைய புளி நல்லது. அதையும் தணலில்(ஹிஹிஹி, கரி அடுப்பில் கரியைப் போட்டுப் பிடிக்க வைச்சால் வருமே அதுக்குப் பேர் தணல்) சுட்டுக்கலாம்.  இல்லையா இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டிக்குங்க.  நீரில் ஊற வைச்சுக் கரைச்சு எடுத்துக்குங்க.  இரண்டு கிண்ணம் தேவை.  ரசம் குடிக்கக் கொடுக்கணுமே, நிறைய வேண்டும்.

மிளகாய் வற்றல் 2

மிளகு இரண்டு டீஸ்பூன்

ஜீரகம் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒருகைப்பிடி

பெருங்காயம்(தேவையானால், ஒரு சிலர் ஜீரகம் போட்டால் பெருங்காயம் போட மாட்டாங்க)

தக்காளி (தேவையானால்) சின்னது ஒண்ணு

மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கு

தாளிக்கக் கடுகு, கருகப்பிலை

வறுக்க தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

முதலில் மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, ஜீரகம் போன்றவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.  அதை எடுத்து ஆற வைத்துவிட்டு அந்தச் சட்டியிலேயே கருகப்பிலையைப் போட்டுப் பிரட்டிக் கொள்ளவும். அதையும் ஆற வைக்கவும்.

கரைச்சு வைச்ச புளி ஜலத்தைப் பாத்திரத்தில் விட்டுக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் தக்காளியையும் போட்டுக் கொதிக்க விடவும்.  ஆற வைத்த வறுத்த சாமான்களை நன்கு அரைக்கவும்.  ரொம்பக் கொரகொரப்பும் வேண்டாம்.  அதே சமயம் நைசாகவும் இருக்க வேண்டாம்.  அரைத்த விழுதில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.  புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் இந்த விழுது கரைத்த நீரை விட்டு விளாவவும்.  மேலே நுரைத்து வருகையில் அடுப்பை அணைத்துவிட்டு நெய்யில் அல்லது எண்ணெயில் கடுகு தாளித்துக் கருகப்பிலை போடவும். ரசம் ருசி பார்த்துக் கொண்டு தேவையானால் ரொம்பக் கெட்டியாக இருந்தால் நீர் இன்னும் கொஞ்சம் சேர்த்து விளாவலாம்.  ஆனால் பெரும்பாலும் இந்த அளவில் ரசம் கெட்டியாக வராது.  நீர்க்கவே வரும்.

இந்த ரசம் இன்னிக்கு வைச்சதைப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். (25-01-14)


Sunday, January 19, 2014

எலுமிச்சை ரசம்

எலுமிச்சை ரசம் ஒண்ணு தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ரசம். வாரம் ஒரு முறையாவது அதுவும் அடை பண்ணினால் அன்னிக்குக் கட்டாயமாய் வைப்பேன்.  சூடான அடையில் நெய்யை ஊத்திட்டு இந்த ரசத்தை மேலே விட்டுச் சாப்பிட்டால் அதுவே சொர்க்கம்! :))) அதாவது எனக்கு!  எங்க மாமியார் வீட்டில் புளியும் போட்டு எலுமிச்சைச் சாறும் பிழிந்து செய்வாங்க.  நான் புளி போடறதே இல்லை.

இரு முறைகளில் செய்யலாம்.  ஒண்ணு து.பருப்புப்போட்டு, இன்னொண்ணு பாசிப்பருப்புப்போட்டு. து.பருப்புப் போட்டுப் பண்ணும் ரசத்துக்கு அரைச்சு விட்டுட்டு எலுமிச்சம்பழம் பிழியறாங்க. எனக்கென்னமோ அது பிடிக்கலை. ஆகவே இப்போச் சொல்லும் செய்முறையிலேயே செய்துடுவேன்.


தக்காளி நான்கு

பச்சை மிளகாய் 2

ரசப் பொடி ஒரு டீ ஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

மிளகுத் தூள் அரை டீஸ்பூன்

ஜீரகத் தூள்(வறுத்துப் பொடித்தது)  அரை டீஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி

உப்பு தேவைக்கு

பாசிப்பருப்பு வேக வைத்துக் குழைந்தது ஒரு சின்ன குழிக்கரண்டி. (ரொம்பப் பருப்பைப் போட்டால் ரசம் திக்காக ஆகிவிடும்.)

தாளிக்க

நெய், கடுகு

எலுமிச்சம்பழம் ஒன்று 

தக்காளியைக் கழுவிட்டு அதன் கண் என்று சொல்லப்படும் மேல் பாகத்தை நீக்கிவிட்டு வெந்நீரில் ஊற வைக்கவும்.  அரை மணி நேரத்துக்குப்பின்னர் தோலை உரித்துச் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். வடிகட்டணும்னு அவசியம் ஏதும் இல்லை.  அந்தச் சாறு ஒரு கிண்ணம் இருந்தால் அரைக்கிண்ணம் நீர் சேர்த்துக் கொண்டு, ரசப் பொடி, உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.  பொடி வாசனை போகக் கொதித்ததும் வேக வைத்த பாசிப்பருப்பில் தேவையான நீரைச் சேர்த்துக் கொண்டு விளாவவும்.  பொங்கி நுரைத்து வருகையில் மிளகுத் தூள், ஜீரகத் தூள் சேர்க்கவும்.  கீழே இறக்கிக் கொண்டு நெய்யில் கடுகு தாளிக்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, எலுமிச்சம்பழத்தை நறுக்கி விதைகளை நீக்கிவிட்டுச் சாறை ரசத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.  சூடான சுவையான எலுமிச்சை ரசம் தயார்.

துவரம்பருப்பு என்றால் பாசிப்பருப்பு மாதிரிக் குழைய வேக வைத்துக் கொண்டு முன் சொன்னது போலவே சேர்க்கவும்.

Saturday, January 18, 2014

டும், டும் மேளம் "கொ"ட்டும் ரசம்!

ஹிஹிஹி, "கொ"ட்டு ரசம்னால் நான் என்ன அது டும் டும்னு மேளமா கொட்டுதுனு கிண்டல் பண்ணுவேன்.  "Ghottu" என்றே பலரும் உச்சரிக்கையில் எங்க வீட்டில் என் அம்மாவோ அதை "good" ரசம் என்பார்.  ஆனால் இதை வைக்கையில் எரிச்சலாக வரும். அதாவது அந்தக் கால கட்டத்தில்!  இதைப் பொதுவாக மூன்று முறைகளில் வைக்கலாம்.

முதல் முறை:  நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்.

ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்குப் புளி(ஶ்ரீராம் குறைச்சுட்டோமுல்ல)

உப்பு,

பெருங்காயம்

ரசப்பொடி இரண்டு டீஸ்பூன் அல்லது ஒன்றரை டீஸ்பூன்

தக்காளி சின்னது ஒண்ணு இல்லைனா பாதி

கருகப்பிலை, கொத்துமல்லி

தாளிக்க

எண்ணெய்

கடுகு

இந்த ரசத்துக்குப் புளியை அப்படியே உருட்டியும் போடலாம்.  புளியைக் கரைச்சுக்கவும் கரைச்சுக்கலாம். உங்க செளகரியப் படி போட்டுட்டு, உப்பு, பெருங்காயம், தக்காளி,ரசப் பொடி, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டு நல்லாக் கொதிக்க வைங்க.  பொடி வாசனை, புளி வாசனை போகக் கொதித்ததும், தேவையான அளவுக்கு நீர் விட்டு விளாவவும்.  எண்ணெயில் கடுகு தாளிக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லித் திரும்பச் சேர்க்க வேண்டாம். கொதிக்கையில் சேர்த்தால் இந்த ரசத்தில் அதன் வாசம் மூக்கைத் துளைக்கும்.

இன்னொரு முறை மேற்கண்ட சாமான்களோடு ஒரு ஸ்பூன் துவரம்பருப்பை அப்படியே போட்டு ரசத்தைக் கொதிக்க வைப்பது. பெரும்பாலும் அந்தப் பருப்பு வீணாகித் தான் போகும் என்பதால் அரைத்தும் விடுவது உண்டு.

அதற்கு ஒரு ஸ்பூன் பருப்பையும் ஒரு ஸ்பூன் தனியாவையும் ஊற வைக்கவும்.  ஊறியதும் அம்மியில் (ஹிஹிஹி, இத்தனூண்டை மிக்சியில் அரைக்கிறது கஷ்டம்!) அரைத்து நீர் சேர்த்து ரசத்தில் விளாவலாம்.  பருப்பை மட்டுமே அரைத்து விடுபவர்களும் உண்டு.   நான் என்ன செய்வேன் என்றால் பருப்பு உசிலி பண்ணுகையில் கடைசியில் மிக்சி ஜாரை அலம்புகையில் அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு அரைத்த மாவை மிச்சம் வைத்துக் கொண்டு அதில் நீர் விட்டுக் கரைத்து ரசத்தில் ஊற்றிவிடுவேன்.  ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்போமே!

{இன்னும் சிலர் ரசம் வைக்கும்போது ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் து.பருப்பை எண்ணெயில் வறுத்து ரசத்தில் சேர்ப்பார்கள்.  எல்லா முறைகளையும் முயன்று பாருங்கள். :)}

Tuesday, January 14, 2014

சங்கராந்தி ஸ்பெஷல் அரைச்சு விட்ட ரசம்

இந்த அரைச்சு விட்ட ரசத்தை மைசூர் ரசம்னு சொல்பவர்கள் உண்டு.  ஆனால் மைசூர் ரசம் செய்முறை வேறேனு நினைக்கிறேன்.  அரைச்சு விட்ட ரசத்துக்கும் பொடி போடுவதும் உண்டு.  ஆனால் சங்கராந்தி அன்னிக்கு வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொடிகளைச் சேர்த்துச் சமைப்பது வழக்கம் இல்லை.  ஆகவே புதுசா வறுத்து அரைத்துவிட்டுத் தான் ரசம் வைப்பாங்க.  சில வீடுகளில் எல்லாக் காய்களும் போட்டு வறுத்து அரைத்த பொடி போட்டுக் குழம்பு.  எங்க வீட்டில் தனிக்கூட்டு என்பதால் மோர்க்குழம்பு.   அதைப் பின்னர் பார்ப்போம்.  இப்போ வறுத்து அரைத்த ரசம் எப்படினு பார்க்கலாமா? இந்த ரசம் கொஞ்சம் கெட்டியாகவும் வைக்கலாம், நீர்க்கவும் வைக்கலாம்.  இப்போ கெட்டியா வைக்கும் முறை குறித்து.


நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

தக்காளி (தேவையானால்)

வறுத்து அரைக்க

மி.வத்தல் மூன்று

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு இரண்டு டீ ஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன்

வெந்தயம் கால் டீஸ்பூன்

ஜீரகம் அரை டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்)

தேங்காய்த் துருவல் மூன்று டீஸ்பூன்

வறுக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

குழைய வேக வைத்த து.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு சின்ன குழிக்கரண்டி

தாளிக்க

நெய் 

கடுகு

ஒரு சின்ன மி.வத்தல்

கருகப்பிலை

கொத்துமல்லி

புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் தக்காளி தேவை எனில் அதையும் போட்டுப் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  ஒரு வாணலியில்  எண்ணெயை ஊற்றி வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை நன்கு சிவக்க வறுக்கவும்.  ஜீரகத்தை வறுக்க வேண்டாம்.  வறுத்ததை ஆறியதும் ஜீரகத்தைப் பச்சையாகச் சேர்த்து ரொம்ப நைசாக இல்லாமல் அதே சமயம் ரொம்பக் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும்.  ரசம் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்ததைச் சேர்த்துக் கொஞ்சம் கொதிக்க விடவும்.  கொதிக்கையிலேயே வெந்த துவரம்பருப்பில் நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு ரசத்தைத் தேவையான அளவுக்கு விளாவிக் கொள்ளவும். மேலே பொங்கி வருகையில் ஒரே கொதியில் அடுப்பை அணைக்கவும்.  நெய்யில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் தாளித்து ரசத்தில் சேர்த்துப் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.


இதே ரசம் பொடி சேர்த்துச் செய்கையில் புளி ஜலத்துடன் தக்காளி கட்டாயம் சேர்த்து ஒரு டீஸ்பூன் ரசப்பொடி அல்லது இரண்டுக்கும் ஒரே பொடி எனில் பொடியைச் சேர்க்கவும்.  பொடி வாசனை, புளி வாசனை போகக் கொதித்ததும் வறுத்து அரைத்ததைச் சேர்க்கவேண்டும்.  அதில் சின்ன மாற்றம்

மி.வத்தல் இரண்டு

கொத்துமல்லி விதை மூன்று டீஸ்பூன்

கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன்

வெந்தயம் கால் டீஸ்பூன் 

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு(வறுக்கவில்லை எனில் புளி ஜலத்தில் போட்டுக் கொதிக்க விடலாம்)

மஞ்சள் தூள்

தேங்காய்த் துருவல் இரண்டு டீஸ்பூன் 

இவற்றை வறுத்து அரைத்துக் கொண்டு புளி வாசனை, பொடி வாசனை போகக் கொதித்ததும் வறுத்து அரைத்ததைச் சேர்க்கவும்.  பின்னர் வெந்த துவரம் பருப்பை நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு பருப்பு ஜலம் மட்டும் விட்டு விளாவவும்.  ரசம் நீர்க்க பருப்பு வாசனையோடு வரும்.  இறக்குகையில் நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் கொத்துமல்லி சேர்க்கவும்.

"150 ஆவது பதிவு"