இந்த அரைச்சு விட்ட ரசத்தை மைசூர் ரசம்னு சொல்பவர்கள் உண்டு. ஆனால் மைசூர் ரசம் செய்முறை வேறேனு நினைக்கிறேன். அரைச்சு விட்ட ரசத்துக்கும் பொடி போடுவதும் உண்டு. ஆனால் சங்கராந்தி அன்னிக்கு வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொடிகளைச் சேர்த்துச் சமைப்பது வழக்கம் இல்லை. ஆகவே புதுசா வறுத்து அரைத்துவிட்டுத் தான் ரசம் வைப்பாங்க. சில வீடுகளில் எல்லாக் காய்களும் போட்டு வறுத்து அரைத்த பொடி போட்டுக் குழம்பு. எங்க வீட்டில் தனிக்கூட்டு என்பதால் மோர்க்குழம்பு. அதைப் பின்னர் பார்ப்போம். இப்போ வறுத்து அரைத்த ரசம் எப்படினு பார்க்கலாமா? இந்த ரசம் கொஞ்சம் கெட்டியாகவும் வைக்கலாம், நீர்க்கவும் வைக்கலாம். இப்போ கெட்டியா வைக்கும் முறை குறித்து.
நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்.
புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு
தக்காளி (தேவையானால்)
வறுத்து அரைக்க
மி.வத்தல் மூன்று
தனியா ஒரு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு இரண்டு டீ ஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன்
ஜீரகம் அரை டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்)
தேங்காய்த் துருவல் மூன்று டீஸ்பூன்
வறுக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
குழைய வேக வைத்த து.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு சின்ன குழிக்கரண்டி
தாளிக்க
நெய்
கடுகு
ஒரு சின்ன மி.வத்தல்
கருகப்பிலை
கொத்துமல்லி
புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் தக்காளி தேவை எனில் அதையும் போட்டுப் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை நன்கு சிவக்க வறுக்கவும். ஜீரகத்தை வறுக்க வேண்டாம். வறுத்ததை ஆறியதும் ஜீரகத்தைப் பச்சையாகச் சேர்த்து ரொம்ப நைசாக இல்லாமல் அதே சமயம் ரொம்பக் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும். ரசம் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்ததைச் சேர்த்துக் கொஞ்சம் கொதிக்க விடவும். கொதிக்கையிலேயே வெந்த துவரம்பருப்பில் நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு ரசத்தைத் தேவையான அளவுக்கு விளாவிக் கொள்ளவும். மேலே பொங்கி வருகையில் ஒரே கொதியில் அடுப்பை அணைக்கவும். நெய்யில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் தாளித்து ரசத்தில் சேர்த்துப் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.
இதே ரசம் பொடி சேர்த்துச் செய்கையில் புளி ஜலத்துடன் தக்காளி கட்டாயம் சேர்த்து ஒரு டீஸ்பூன் ரசப்பொடி அல்லது இரண்டுக்கும் ஒரே பொடி எனில் பொடியைச் சேர்க்கவும். பொடி வாசனை, புளி வாசனை போகக் கொதித்ததும் வறுத்து அரைத்ததைச் சேர்க்கவேண்டும். அதில் சின்ன மாற்றம்
மி.வத்தல் இரண்டு
கொத்துமல்லி விதை மூன்று டீஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன்
பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு(வறுக்கவில்லை எனில் புளி ஜலத்தில் போட்டுக் கொதிக்க விடலாம்)
மஞ்சள் தூள்
தேங்காய்த் துருவல் இரண்டு டீஸ்பூன்
இவற்றை வறுத்து அரைத்துக் கொண்டு புளி வாசனை, பொடி வாசனை போகக் கொதித்ததும் வறுத்து அரைத்ததைச் சேர்க்கவும். பின்னர் வெந்த துவரம் பருப்பை நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு பருப்பு ஜலம் மட்டும் விட்டு விளாவவும். ரசம் நீர்க்க பருப்பு வாசனையோடு வரும். இறக்குகையில் நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் கொத்துமல்லி சேர்க்கவும்.
அருமையான ரசம்..!
ReplyDeleteதித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் ..
வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
Deleteஇன்று அரைத்து விட்டு தான் ரசத்தை செய்தார்கள்... நன்றாக இருந்தது... உங்களின் முறையை (பதிவை) bookmark செய்து வைத்து விட்டேன்... வீட்டில் பிறகு வந்து குறித்துக் கொள்வார்கள்... நன்றி...
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
வாங்க டிடி. அரைச்சு விட்ட ரசம் உங்க வீட்டில் எப்படிச் செய்தாங்கனும் சொல்லி இருக்கலாமே? இதையும் முயன்று பாருங்கள்.
Deleteஅரைச்சு விட்ட ரசம் வேறுமுறையில் வெகு சிம்பிளாக செய்ததுண்டு. இது கொஞ்சம் வேற மாதிரி இருக்கிறது. முயற்சிக்கிறேன். 150 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்க முறையையும் பகிர்ந்துக்கோங்க ஶ்ரீராம். :)
Delete150வது பதிவுக்கு வாழ்த்துகள் மாமி..
ReplyDeleteஇந்த மாதிரி வைத்ததில்லை.... கொட்டு ரசம்ன்னு வெப்பாங்களே... தக்காளி இல்லாமல்...அது இது மாதிரியா?
கொட்டு ரசம் வேறே ஆதி. அதுக்குப் பருப்பு ஜலமோ, பருப்போ கரைத்து விடுவதில்லை. பருப்பை அப்படியே போடலாம், அல்லது ஊற வைத்து அரைத்துவிடலாம். :))) அது தனியா ஒரு நாள் எழுதறேன்.
Delete150-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.... மைசூர் ரசம் இதே போலத்தான் செய்வார்கள் என நினைக்கிறேன்....
ReplyDeleteமைசூர் ரசம் என் மாமியார் வீட்டில் கிட்டத்தட்ட இப்படித்தான் வெங்கட்!:)))))
ReplyDelete