எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, January 25, 2014

பார், பார், கொண்டைக்கடலை சாதம் பார்!

இப்போ நீங்க சாதம் செய்யறதுக்குன்னே கொண்டைக்கடலையை ஊறப் போடுங்க. நல்லாவே இருந்தது.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

ஒரு சின்னக் கிண்ணம் வெள்ளைக் கொண்டைக்கடலை முதல் நாளே ஊற வைங்க.

முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, நாளைக்குச் செய்ய இன்னிக்கு மத்தியானம் ஊறப் போட்டீங்கன்னா ராத்திரி படுக்கறதுக்குள்ளே மூன்று முறையாவது கழுவிட்டு ஊற வைக்கிற நீரை மாத்துங்க.  இது கொண்டைக்கடலை, பட்டாணிபோன்றவற்றின் வழவழப்பைப் போக்குவதோடு ஒரு மாதிரியான வாசனை வராமலும் இருக்கும். இதை எந்தப் பருப்பு வகைகள் ஊற வைச்சாலும் நினைவில் வைச்சுக்குங்க.


கொண்டைக்கடலை ஊறியது ஒரு கிண்ணம் இப்போ ரெண்டு கிண்ணமாயிருக்கும். முளைக்கட்டி இருந்தால் இன்னும் நல்லது.

தக்காளி பெரிது ஒன்று

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி ஒரு அங்குலத் துண்டு அல்லது துருவலாக ஒரு டீஸ்பூன்

வெங்காயம் பெரிது ஒன்று

மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன்

தனியாப்பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

கசூரி மேதி கால் டீஸ்பூன்

கரம் மசாலா  அரை டீ ஸ்பூன்

தயிர் கெட்டியாக ஒரு சின்னக் கிண்ணம்

உப்பு தேவைக்கு

சமைத்த சாதம் உதிர் உதிராக மூன்று கிண்ணம் அல்லது 200 கிராம் பாஸ்மதி அரிசி.

தாளிக்க

எண்ணெய்  இரண்டு டேபிள் ஸ்பூன்

தேஜ் பத்தா எனப்படும் மசாலா இலை

லவங்கப்பட்டை ஒரு துண்டு

பெரிய ஏலக்காய் ஒன்று

கிராம்பு ஒன்று

சோம்பு ஒரு டீஸ்பூன்

சர்க்கரை ஒரு டீஸ்பூன்

பச்சைக் கொத்துமல்லி, புதினா ஆய்ந்து கழுவிக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.


கொண்டைக்கடலையை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு வடிகட்டி வைக்கவும்.  சமைத்த சாதம் எனில் உதிர் உதிராக எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பானைப் போட்டுக் கொண்டு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய்  காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைய ஆரம்பித்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தேஜ் பத்தா என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.  எல்லாம் வெடித்து வந்ததும் வெங்காயத்தைச் சேர்க்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவலைச் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்கவும்.  மஞ்சள்பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடியைச்  சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் வதக்கவும்.  பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலை நன்கு கலந்ததும் தயிரைச் சேர்க்கவும்.  உப்பு இப்போது சேர்க்க வேண்டாம்.

தயிரும் கொண்டைக்கடலையும் நன்கு கலந்ததும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து விட்டு அரிசிக்கு  உள்ள உப்பு மட்டும் சேர்க்கவும்.  கொண்டைக்கடலையை ஏற்கெனவே உப்புச் சேர்த்து வேக வைத்ததை மறக்க வேண்டாம்.   பின்னர் அரிசிக்கு உள்ள நீரை மட்டும் அளந்துவிட்டு விட்டு ரைஸ் குக்கரிலோ குக்கரிலோ வைக்கவும்.  வெளியே எடுத்து கரம் மசாலா, ஒரு ஸ்பூன் வெண்ணெய் கசூரி மேதி சேர்த்து விட்டுக் கொண்டு, கொத்துமல்லி, புதினா நறுக்கியவற்றைத் தூவி அலங்கரிக்கவும்.  எந்தவிதமான பச்சடியோடும் சாப்பிட ரெடி.
சாதமாகச் சேர்க்கிறீர்கள் எனில் கொண்டைக்கடலையும் தயிரும் கலந்ததும் தயிர் நன்கு வற்றிக் கொண்டைக்கடலை மட்டும் ஈரமில்லாமல் வந்ததும் சாதத்தைச் சேர்க்கவும்.  தேவையான உப்பை மிதமாகப் போடவும்.  ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயோடு கரம் மசாலா, கசூரி மேதி சேர்த்துக் கிளறி விட்டு அடுப்பை அணைத்துவிட்டுப் பின்னர் பச்சைக் கொத்துமல்லி, புதினா இலைகளால் அலங்கரிக்கவும்.  நான் சாதமாகத் தான் சேர்த்தேன்.  200 கிராம் அரிசி தான் முழு நாளுக்கும்.  ஆகவே அத்தனையையும் கொ.க.சாதம் பண்ணினால் செலவாகாது.  நிறையப் பேர் இருந்தால் குக்கரிலோ, ரைஸ் குக்கரிலோ அரிசியைப் போட்டுச் செய்வது சரியாய் வரும்.

10 comments:

 1. நல்லா இருக்கு.

  பொதுவா சன்னா மசாலா [சப்பாத்திக்கு] செய்யும்போது மீதமானால் சாதம் கலந்து சாப்பிடுவதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. அது க்ரேவி. ராஜ்மா க்ரேவி பண்ணி அதோடு மடர் புலவ் சேர்த்துச் சாப்பிடுவோம். அல்லது ஜீரா ரைஸோட ராஜ்மா க்ரேவி. ஆனால் நான் நிறையத் தயிரும் வெண்ணெயும் அதில் சேர்த்துச் செய்வேன். இப்போல்லாம் வெண்ணெய் அளவைக் குறைச்சாச்சு. :))) தயிர் கட்டாயம் சேர்ப்பேன். முன்னெல்லாம் தயிர் மிஞ்சினாலோ, குளிர் காலத்திலோ கட்டாயமா ராஜ்மா க்ரேவி உண்டு. இங்கே வாங்கற ராஜ்மா வட மாநிலத்தில் இருக்கிறாப்போல் குழையறதில்லை. :(

   Delete
 2. அடடா...! சூப்பரா இருக்கு அம்மா... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க டிடி. காரம் அவரவர் ருசிக்கு ஏற்றாற்போல் கூட்டிக்கலாம், குறைக்கலாம்.

   Delete
 3. குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். செய்து பார்த்துடலாம். படம் கலர்ஃபுல்லாக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. முயற்சி பண்ணுங்க ஶ்ரீராம், எனக்குக் கொண்டைக்கடலை நல்லா முளைக்கட்டி வேறே வந்திருந்தது. :))))

   Delete
 4. அருமையாக இருக்கு... குறித்து கொண்டேன்..

  இதை ரோஷ்ணிக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு ஒருநாள் கொடுத்தனுப்ப போறேன்.. சன்னா அவளுக்கு பிடித்தமானது...:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், குழந்தைங்களுக்கு லஞ்சுக்குக் கொடுக்கலாம். சாதமாக வடித்துக் கொண்டால் சீக்கிரமாவும் செய்யலாம். :))) சனா பிடிக்கும்ங்கறதே ஆச்சரியம் தான். பல குழந்தைகளும் பட்டாணி, கொண்டைக்கடலை சாப்பிடப் படுத்துவாங்க.

   Delete
 5. இதற்கு முந்தியப் பதிவைப் படித்தேன். இதை விட்டிருக்கிறேன். இப்பொழுது தான் பார்த்தேன்.
  இதை செய்து பார்த்து விட வேண்டும். கொண்டைக் கடலை என்பதால் டையாபிடிசிற்கு நல்லது. ஒரு நாள் மெனு பிராப்ளமும் தீர்ந்தது.நன்றி கீதா மேடம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜலக்ஷ்மி, கொ.கடலையை நல்லா முளைகட்டிக்கோங்க. இன்னும் நல்லது

   Delete