எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, January 19, 2014

எலுமிச்சை ரசம்

எலுமிச்சை ரசம் ஒண்ணு தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ரசம். வாரம் ஒரு முறையாவது அதுவும் அடை பண்ணினால் அன்னிக்குக் கட்டாயமாய் வைப்பேன்.  சூடான அடையில் நெய்யை ஊத்திட்டு இந்த ரசத்தை மேலே விட்டுச் சாப்பிட்டால் அதுவே சொர்க்கம்! :))) அதாவது எனக்கு!  எங்க மாமியார் வீட்டில் புளியும் போட்டு எலுமிச்சைச் சாறும் பிழிந்து செய்வாங்க.  நான் புளி போடறதே இல்லை.

இரு முறைகளில் செய்யலாம்.  ஒண்ணு து.பருப்புப்போட்டு, இன்னொண்ணு பாசிப்பருப்புப்போட்டு. து.பருப்புப் போட்டுப் பண்ணும் ரசத்துக்கு அரைச்சு விட்டுட்டு எலுமிச்சம்பழம் பிழியறாங்க. எனக்கென்னமோ அது பிடிக்கலை. ஆகவே இப்போச் சொல்லும் செய்முறையிலேயே செய்துடுவேன்.


தக்காளி நான்கு

பச்சை மிளகாய் 2

ரசப் பொடி ஒரு டீ ஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

மிளகுத் தூள் அரை டீஸ்பூன்

ஜீரகத் தூள்(வறுத்துப் பொடித்தது)  அரை டீஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி

உப்பு தேவைக்கு

பாசிப்பருப்பு வேக வைத்துக் குழைந்தது ஒரு சின்ன குழிக்கரண்டி. (ரொம்பப் பருப்பைப் போட்டால் ரசம் திக்காக ஆகிவிடும்.)

தாளிக்க

நெய், கடுகு

எலுமிச்சம்பழம் ஒன்று 

தக்காளியைக் கழுவிட்டு அதன் கண் என்று சொல்லப்படும் மேல் பாகத்தை நீக்கிவிட்டு வெந்நீரில் ஊற வைக்கவும்.  அரை மணி நேரத்துக்குப்பின்னர் தோலை உரித்துச் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். வடிகட்டணும்னு அவசியம் ஏதும் இல்லை.  அந்தச் சாறு ஒரு கிண்ணம் இருந்தால் அரைக்கிண்ணம் நீர் சேர்த்துக் கொண்டு, ரசப் பொடி, உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.  பொடி வாசனை போகக் கொதித்ததும் வேக வைத்த பாசிப்பருப்பில் தேவையான நீரைச் சேர்த்துக் கொண்டு விளாவவும்.  பொங்கி நுரைத்து வருகையில் மிளகுத் தூள், ஜீரகத் தூள் சேர்க்கவும்.  கீழே இறக்கிக் கொண்டு நெய்யில் கடுகு தாளிக்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, எலுமிச்சம்பழத்தை நறுக்கி விதைகளை நீக்கிவிட்டுச் சாறை ரசத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.  சூடான சுவையான எலுமிச்சை ரசம் தயார்.

துவரம்பருப்பு என்றால் பாசிப்பருப்பு மாதிரிக் குழைய வேக வைத்துக் கொண்டு முன் சொன்னது போலவே சேர்க்கவும்.

12 comments:

  1. வீட்டில் இதுவரை ருசித்ததில்லை... செய்முறைக்கு குறித்துக் கொண்டாயிற்று... நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்க டிடி, அப்புறமா விடவே மாட்டீங்க!:)))

      Delete
  2. அடை+ரசம் try பண்ணினதேயில்லை. interesting.

    ReplyDelete
    Replies
    1. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம். ஒரு தரம் சாப்பிட்டுப் பாருங்க. நெய் முக்கியம்! :))))

      Delete
  3. கடவுளே!!..நிஜமான செய்முறை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.. நான் செய்யும் முறை டோட்டல் தலை கீழ்!..நல்ல, அருமையான உபயோகமான பதிவுகள்!!..மிக்க நன்றி அம்மா!.

    ReplyDelete
    Replies
    1. நீங்க தலைகீழா எப்படிச் செய்வீங்கனு சொல்லி இருக்கக் கூடாதோ? :)))))

      Delete
  4. இன்று எங்கள் வீட்டில் அதுதான்! து.ப. வேகவைத்த தண்ணீரில் நான்கு ப.மி கிள்ளிப் போட்டு 2 தக்காளி பிசைந்து விட்டு, உப்பு, பெருங்காயம் போட்டு கொஞ்சம் கொதித்ததும் நீரிட்டுப் பெருக்கி, மிளகு ஜீரகப் பொடி தூவி கடுகு ஜீரகம் தாளித்து, கொஞ்சம் கழித்து எ.ப பிழிந்து விடுவோம்! என் பாஸ் இதை 'ஆண்டாள் ரசம்' என்பார்!

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும் ஶ்ரீராம், ரசப் பொடிபோடுவதென்றால் ப.மி. குறைச்சுப்போம். எங்க வீட்டிலே அரை டீஸ்பூனாவது ரசப் பொடி போட்டால் தான் பிடிக்குது. நீங்க சொல்றாப்போல ரசம் நான் புழுங்கலரிசிக் கஞ்சிக்கு வைச்சுச் சேர்ப்பேன். உடம்பு சரியில்லாத வாய்க்குக் காய்ஞ்ச நாரத்தங்காயோடு அந்தக் கஞ்சி அமிர்தம்! :)))) இங்கே காலை டிஃபனுக்குப் புழுங்கலரிசிக் கஞ்சி அடிக்கடி உண்டு. சில சமயம் சுண்டைக்காய் வறுத்தும் , சில சமயம் மோர் மிளகாய் வறுத்தும் தொட்டுப்போம். :))))

      Delete
  5. எலுமிச்சை ரசம் என் மாமியார் செய்து தந்திருக்கிறார்..... ஆனா தக்காளி சேர்த்ததில்லை... ரசப்பொடியும் கிடையாது...

    பருப்பு வாடையே பிடிக்காம இருந்த மசக்கை நேரத்தில் புளிப்பாக இருந்த இந்த ரசம் எனக்கு அப்போ பிடித்திருந்தது...:))

    ReplyDelete
    Replies
    1. அது புளி போட்ட எலுமிச்சை ரசமாக இருக்கலாம். :))) எனக்கு அது தெரியாது. அந்த ருசி பிடிக்காததால் தெரிஞ்சுக்கணும்னு தோணலை. ஆனால் என் மாமியார் வீட்டில் ரசப் பொடி போடுவாங்க. :))) வெல்லம், அல்லது சர்க்கரையும் போடுவாங்க. புளி எவ்வளவு அளவோ அத்தனை வெல்லம் அல்லது சர்க்கரை இருக்கும்.

      Delete
  6. மாமியாரிடம் கேட்டேன்.. தக்காளி + ரசப்பொடி சேர்ப்பாராம்..:) யோசித்து பார்த்ததில் என் அம்மா தான் புளி சேர்த்து பண்ணிட்டு எலுமிச்சை பிழிவாங்க...:)

    வேறு வேறு செய்முறைகள் எல்லாவற்றிலும்...:)))

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சப்போப் பகிர்ந்துக்கோங்க ஆதி.

      Delete