எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, October 14, 2012

கடுகு, பாவக்காய்க் குழம்பு.

மீனாக்ஷி அல்வா கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க.  அதையும் எழுதணும்.  அது தித்திப்பு.  அதுக்கு முன்னாடி ஒரு கசப்பு. :))) பாகற்காயில் செய்யும் இதை எங்க மாமியார் வீட்டில் கடுகு, பாவக்காய்க் குழம்புனு சொல்றாங்க.  ஆனால் ஊறுகாய்த் தயாரிப்பாளர்கள் இதைப் பாவக்காய்த் தொக்கு எனப் பெயரிட்டு விற்கின்றனர்.  முதல்லே நானும் என்னமோ, ஏதோ னு நினைச்சேன்.  அப்புறமாக் கொஞ்சம் போல உறவினர் வீட்டில் வாங்கி இருந்ததைச் சாப்பிட்டுப் பார்த்தால் ஹிஹி, பாவக்காய் அல்வா. :))) இப்போ செய்முறையைப் பார்க்கலாம்.

நல்ல பாகற்காய் கால் கிலோ,
பாகல்காயைப் பொடியாக நறுக்கிக் கொஞ்சம் தயிர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.  100 கிராம் புளி, கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.  அல்லது புளியை வறுத்து அரைக்கும் பொருட்களோடு சேர்த்து அரைத்துக்கொண்டாலும் நல்லது.  உப்பு தேவையான அளவு,  வெல்லம் தூளாக ஒரு டேபிள் ஸ்பூன்.

வறுத்து அரைக்க:

மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் அல்லது விரலி மஞ்சள் ஒரு அங்குலத் துண்டு. மிளகாய் வற்றல் பத்து முதல் பனிரண்டு வரை. ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, மிளகு இரண்டு டீஸ்பூன்(மிளகு கூடவே இருக்கலாம்.) உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு(தேவையானால்) இரண்டு டீஸ்பூன், பெருங்காயம், பச்சைக்கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க: சீரகம், கடுகு, நல்லெண்ணெய், கருகப்பிலை.


வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நல்லெண்ணெயில் நன்கு வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.  கடாய் அல்லது கல்சட்டி(என்னோட விருப்பம் கல்சட்டியே) யில் நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, சீரகம், கருகப்பிலை தாளிக்கவும்.  நறுக்கி ஊற வைத்த பாகற்காய்த் துண்டங்களை எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும்.  நன்கு சுருள வதங்கியவுடன், அரைத்து வைத்துள்ள விழுதைக் கொஞ்சம் போல நீர் சேர்த்து பாகற்காயில் கொட்டிக் கலக்கவும்.  உப்புச் சேர்க்கையில் புளிக்கு உள்ள உப்பை மட்டும் சேர்க்கவும்.  பாகற்காயில் ஏற்கெனவே உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கிறோம்.   நீர் அதிகமானாலும் பரவாயில்லை.  கொதித்துக் கெட்டியாகும்போது சேர்ந்து கொள்ளும்.  நன்கு சேர்ந்து நல்ல கெட்டியாக வரும்போது வெல்லத் தூளையும் பச்சைக்கடுகுப் பொடியையும் சேர்க்கவும்.  நன்கு கிளறவும்.  நன்கு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கி ஆறினதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.  இது இரண்டு, மூன்று மாதங்கள் ஆனாலும் கெடாது.  படம் நாளை எடுத்துப் போடுகிறேன்.

6 comments:

  1. ம்ம்ம்.. படிக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு. கடைகளில வாங்கற ஊறுகாய் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. எப்பவாவது தீரதுன்னாதான் போட்டுப்பேன். இந்த மாதிரி பண்ணி வெச்சுண்டா நன்னாதான் இருக்கும். எனக்கு எதுவும் லேசுல வணங்காது. :)) ஆனா உங்க ரெசிபி எல்லாம் என்னை பண்ணு பண்ணுன்னு சொல்றதே! பண்ணிட வேண்டியதுதான். :)))

    இப்பதான் இந்த சாப்பிடலாம் வாங்க பதிவுல நீங்க எழுதினது எல்லாம் ஆரம்பத்துலேந்து படிக்க ஆரம்பிச்சு இருக்கேன். எனக்கு வேணும்கறது எல்லாத்தையும் ஒரு நோட் புக்ல குறிச்சுண்டு வரேன். ரொம்ப நன்றி உங்களுக்கு.
    புளிக்காய்ச்சல் ஓரளவு நல்லா வந்துது. இன்னொருமுறை பண்ணினா perfect-a வந்துரும். மைசூர் பாக் இன்னும் ட்ரை பண்ணல. அடுத்து பண்ண போறது பாவக்காய் ஊறுகாயும், மைசூர் பாக்கும்தான். பண்ணினதும் எப்படி வந்துதுன்னு சொல்றேன்.
    உங்க அடை ரெசிபி சூப்பர். இதுக்கு உங்களுக்கு எத்தனை முறை வேணும்னாலும் நன்றி சொல்லலாம். :)

    ReplyDelete
  2. கேள்விப்பட்டதில்லை. சாப்பிட்டதில்லை. ஒருமுறை முயற்சி செய்துடுவோம்!

    ReplyDelete
  3. வாங்க மீனாக்ஷி, ரசனைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. :)))) அல்வா சீக்கிரமே கொடுக்கணும். :)))

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம். மோர் சாதத்துக்கும் நல்லாவே இருக்கும்.

    ReplyDelete
  5. என்னோட விருப்பம் மோர் சாதத்துக்கே.

    ReplyDelete
  6. அருமையான குறிப்பு.

    ReplyDelete