எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 15, 2018

உணவே மருந்து! வல்லாரை!

pictures of keerai

வல்லாரை

ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் சாப்பிடலாம் என்பார்கள். நீர் அதிகம் இருக்கும் பகுதிகளிலேயே தானாக வளர்ந்திருக்கும். இதுவும் ஒரு கீரை வகையாகவே கருதுவார்கள். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதால் "சரஸ்வதி கீரை" என்னும் பெயரும் இதற்கு உண்டு. இதில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தி, வைடமின்கள் ஏ, சி ஆகியன உள்ளன. தாது உப்புக்கள் நிறைந்ததும் கூட. ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை உள்ளது இந்தக் கீரை! உடல் புண்கள், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். கபம் நீங்கும். பல் துலக்கினால் மஞ்சள் நிறம் மாறிப் பற்கள் பளிச்சிடும்.

காலை வேளையில் வெறும் வயிற்றில் அப்போது தான் பறித்த கீரையை வாயிலிட்டு மென்றால் மூளை நன்கு செயல்படும். அதன் பின்னர் பசும்பால் குடித்தால் மாலைக்கண் நோய் குணம் ஆகும். இந்தக்கீரையுடன் மிளகு சேர்த்து உண்டால் உடல் குளிர்ச்சி அடையும். சூடு தணியும்.  ஆனால் இதற்குப் பத்தியம் உண்டு. அகத்திக்கீரை, பாகல் காய் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இது உண்ணுவது பொதுவாக அரிதாகக் காணப்படும் இக்காலத்தில் சித்த மருத்துவத்தில் சூரணம், லேகியம், மாத்திரை ஆகிய வடிவங்களில் பக்குவம் செய்து சித்த மருத்துவர்கள் தருகின்றனர்.

இதன் இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவில் தினமும் பசும்பாலில் கலந்து அருந்தினால் வயிர்ருப் பூச்சிகள் ஒழியும்.  இலைகளைச் சுத்தம் செய்து சின்ன வெங்காயம், பூண்டு , மிளகு சேர்த்து அரைத்து உப்புச் சேர்த்துத் துவையலாகச் சாப்பிடலாம். ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மூளைச் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். வல்லாரை ஒரு பங்குடன் கீழா நெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்துச் சாறை அருந்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் தீரும். இந்தக் கீரை மலச்சிக்கலை அகற்றுகிறது. நீரிழிவு நோய்க்கு மிக அரிய மருந்தாகும் இது.  யானைக்கால் வியாதி, விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகள் ஆகியவற்றின் மீது இந்தக்கீரையை நன்கு அரைத்துக் கட்டினால் குணம் தெரியும். இதை முறைப்படி எண்ணெய் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் சூடு தணியும்.  வாய்ப்புண்ணால் அவதிப் படுபவர்கள் வல்லாரை இலையைப் பச்சையாக மென்று தின்றால் நல்ல குணம் தெரியும்.

அதோடு இந்தக்கீரையைச் சமைக்கையில் புளி சேர்க்கக் கூடாது. புளி சேர்த்தால் அதன் மருத்துவ குணம் மாறி விடும். சிறுநீர் மஞ்சளாகப் பிரிந்தாலும் வல்லாரை சிறந்த நிவாரணியாகப் பயனாகிறது. இதனுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து பாசிப்பருப்புப் போட்டு சாம்பார் மாதிரிச் செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்புடன் தேங்காய், மிளகு, சீரகம் சேர்த்துக் கூட்ட்டாகவோ பொரிச்ச குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். வல்லாரை, உளுத்தம்பருப்பு, தேங்காய் போன்றவற்றை வதக்கிக் கொண்டு அதனுடன் உப்புச் சேர்த்து மிளகு போட்டுத் துவையல் செய்தும் சாப்பிடலாம். 

Wednesday, June 13, 2018

உணவே மருந்து! முடக்கத்தான் கீரை!

pictures of keerai

முடக்கத்தான், அல்லது முடக்கித்தான் கீரை அநேகமாய் எல்லார் வீட்டுக்கொல்லைப்புறங்களில் தாராளமாகக் கிடைக்கும் ஒரு வகைக் கீரை. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது இந்தக் கீரையும். முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தக் கீரை நல்ல மருந்து. தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது இதைச் சமைத்து உண்டு வந்தால் மூட்டு வலி, நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்தக் கீரையை நீர் விட்டு மைய அரைத்துப் பிரசவம் ஆகக் கஷ்டப்படும் பெண்களின் அடி வயிற்றில் தடவினால் உடனே சுகப் பிரசவம் ஆகி விடும் என்கின்றனர்.

கைகால்கள் அறவே முடங்குவதைத் தடுப்பதால் இதற்கு முடக்கு+அற்றான் என்னும் பெயர் வந்தது. இதை ரசம் வைத்துச் சாப்பிடலாம்.  மலச்சிக்கல், வாய்வு, வாதம் போன்றவை வெளியேறும்.

ரசம் வைக்கும் முறை

சாதாரணமாகப் புளி கரைத்து ரசப்பொடி போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இந்தக் கீரையைத் தண்டு, காம்பு இலை ஆகியவற்றுடன் நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். அதைச் சாறு எடுத்து ரசத்தில் பருப்பு ஜலத்துக்கு பதிலாக விளாவவும். நெய்யில் கடுகு, மிளகு ஜீரகம் தாளித்துச் சூடான சாதத்துடன் சாப்பிடவும். இதைத் தவிரவும் மலம் சரியாகப் போகவில்லை என்றாலும் முடக்கத்தான் கீரையைச் சாப்பிடலாம். கைப்பிடி அளவுக் கீரையுடன் பூண்டு சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்பளர் நீரில் இடவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துச் சேர்க்கவும். கால் தம்பளராக வற்றும் வரை கொதிக்க விடவும். விடியற்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்கள் எல்லாம் பிரிந்து மலம் நன்கு வெளியேறும். பேதி அதிகம் ஆனால் எலுமிச்சைச் சாறில் உப்புச் சேர்த்து அருந்தவும். ரசம் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும். இதைத் தோசை மாவோடு சேர்த்து அரைத்து தோசையாக வார்த்தும் சாப்பிடலாம். இந்தக்கீரையைப் பொடியாக நறுக்கி தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் போல் வார்த்தும் சாப்பிடலாம்.

இந்தக்கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து நன்கு ஊறியபின்னர் குளித்து வந்தால் தலை மயிர் கொட்டுவது நிற்கும். நரை வருவதைத் தடுக்கும். இந்தக்கீரையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கீல் வாயு இருப்பவர்கள் வீக்கத்தில் கட்டிக் கொண்டால் குணம் ஆகும். 

Sunday, June 10, 2018

உணவே மருந்து! பொன்னாங்கண்ணி

 பொன்னாங்கண்ணிக் கீரை பல விதங்களிலும் பயன்படும். முக்கியமாய் அதன் பெயரைப் பார்த்தாலே சருமம் பொன்னைப் போல் மினுங்கும் என்பது தெரிகிறது அல்லவா! இந்தக்கீரையுடன் மிளகு சேர்த்து உப்புப் போட்டு மசித்து உண்டால் எடை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும். கண் பார்வைக்கும் இந்தக் கீரை மிகவும் பயன்படும். தொடர்ந்து இந்தக்கீரையை உண்டு வந்தால் கண் பார்வை பிரகாசமாக இருக்கும் என்பார்கள். எடை குறைய இந்தக் கீரை பயன்படுவது போல எடை கூடவும் இதே கீரையைத் துவரம்பருப்புடன் சேர்த்து நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும். மூல நோய் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இந்தக்கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு மசித்து உண்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இந்தக் கீரையில் புரதம், ஊட்டச் சத்து, மினரல் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. முக்கியமாய் இப்போது கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அதிகம் ஆகி விட்டார்கள். சின்னச் சின்னக் குழந்தைகள் கூடக் கணினியில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டனர். அவர்கள் எல்லோரும் இந்தக் கீரையை மசித்தோ அல்லது வதக்கிப் பொரியல்/கறி மாதிரித் தேங்காய் பருப்புச் சேர்த்தோ உண்டால் கண் எரிச்சல் குறையும்.கண் சிவப்பு மாறும்.  உடலே புத்துணர்வு பெற்று விடும் தன்மை கொண்டது பொன்னாங்கண்ணிக் கீரை! இதில் நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி என இரு வகைகள் உண்டு. சீமைப் பொன்னாங்கண்ணியில் மருத்துவ குணம் இருக்காது. ஆகவே பார்த்து வாங்க வேண்டும்.


Image result for பொன்னாங்கண்ணி

அழகுக்கு வளர்க்கப்படும் சீமைப் பொன்னாங்கண்ணி.


Image result for பொன்னாங்கண்ணி

மருத்துவ பலன் கொண்ட நாட்டுப் பொன்னாங்கண்ணி

படங்களுக்கு நன்றி கூகிளார்

Friday, June 8, 2018

உணவே மருந்து! கரிசலாங்கண்ணிக்கீரை!

பொதுவாக இந்தக்கீரையைப்பெண்களின் தலை மயிர் வளருவதற்காக எண்ணெய் காய்ச்சவே பயன்படுத்திப் பார்த்திருக்கோம். ஆனால் இதைச் சமைத்தும் சாப்பிடலாம். இதைக் "கையாந்த கரை" என்னும் பெயரிலும் அழைப்பார்கள். இதை வைத்துக் கண் மை,சாந்து போன்றவையும் தயாரிப்பார்கள் எனப் படித்த நினைவு. வட மாநிலங்களில் பிருங்கராஜ் என அழைக்கப்படுவதும் இந்தக் கீரையே! நீலி பிருங்காதித் தைலம் என்னும் தலைக்குத் தேய்க்கும் தைலம் இதை வைத்துத் தயாரிக்கப்படுவதே! மற்ற பிருங்கராஜ் தைலங்களும் கரிசலாங்கண்ணியில் இருந்து எடுக்கப்பட்டவையே.

இதற்குப்பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இதன் பூக்கள் சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். கீரையின் தரத்தை இதை வைத்துப் பிரிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வெள்ளை நிறக் கரிசலாங்கண்ணி தான் கிடைக்கிறது. மஞ்சள் கரிசலாங்கண்ணி உடலுக்குப் பொன்னிறத்தைக் கொடுக்கும். சருமத்தைப் பாதுகாத்துப் பொலிவுடன் விளங்கச் செய்யும் என்கிறார்கள். ஆனால் அது கிடைப்பதில்லை. மஞ்சள் காமாலை நோய்க்குக் கரிசலாங்கண்ணிக்கீரையைச் சாறு எடுத்து மோருடன் சேர்த்துக் குடித்தால் குணம் அடையும். ஆனால் சுத்தமான பசுமோராக இருக்க வேண்டும்.

வாய்க்கசப்பு, வாந்தி, ஜீரணம் ஆகாமை, ஆகியவற்றுக்கு இந்தக்கீரையை உப்பு, மிளகாய், தேங்காய், புளி சேர்த்துத் தேவையானால் பூண்டு வைத்து வதக்கித் துவையல் அரைத்துக் கொடுக்கலாம். அல்லது நெய் விட்டு, வெங்காயம், ஜீரகம், பூண்டு சேர்த்து வதக்கிப் பருப்புப் போட்டுக் கீரையை நன்கு மசித்துக் கொடுக்கலாம்.


படத்துக்கு நன்றி கூகிளார்

Image result for கரிசலாங்கண்ணிக்கீரை!
Wednesday, June 6, 2018

உணவே மருந்து! புளிச்ச கீரை!

Image result for புளிச்ச கீரை


படத்துக்கு நன்றி கூகிளார்

இந்தக் கீரை புளிப்புச் சுவை கொண்டது. ஆகவே இதைப் புளி சேர்க்காமலேயே சமைக்கலாம். காசினிக் கீரை என்றும் வழங்கும் இதை ஆந்திர மக்கள் கோங்குரா என அழைப்பார்கள். உடல் வலிமைக்கு இந்தக்கீரை உதவும். இளம் வயதிலேயே உடல் வலிமை இல்லாமல் நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்தக்கீரையைச் சமைத்துக் கொடுக்கலாம். உடல் வலிமை பெறுவார்கள். இதில் வைடமின்கள், தாதுப் பொருட்களோடு இரும்புச் சத்தும் அதிக அளவில் உள்ளது. உடல் வெப்பத்தைத் தணிக்கவும் இந்தக் கீரையைச் சமைத்து உண்ணலாம். சரும நோய்களுக்கும் இந்தக் கீரையின் சாற்றை உட்கொள்வது பலன் தரும். சட்டினியாகவும் செய்து சாப்பிடலாம். வாதம், வாயு போன்றவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். வாயில் ஏற்படும் அருசி இந்தக் கீரையை உண்பதால் குறையும். காய்ச்சலால் உணவின் மீது ஏற்படும் ருசியின்மை குறையும். மஞ்சள் காமாலை, காச நோய் ஆகியவற்றுக்கும் இந்தக்கீரையை அரைத்துச் சாறு எடுத்துக் குடிக்கலாம். மலச்சிக்கலும் தீரும். எனினும் உடலில் பித்த தோஷம் அதிகம் உள்ளவர்கள் கூடியவரை இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

இப்போது இந்தக் கீரையை வைத்து கோங்குரா சட்னி தயாரிக்கும் விதம் பார்ப்போம்.

புளிச்ச கீரை ஒரு கட்டு

மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப 10 அல்லது 15

கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவுக்கு

வதக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம்

கடுகு, வெந்தயம், தேவையானால் ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், மஞ்சள் பொடி, பெருங்காயம்

கீரையை நன்கு ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக இலைகளை மட்டும் நறுக்கி வைக்கவும்.

கடாயில் முதலில் வெந்தயத்தை வெறும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துத் தனியே வைக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு மி.வத்தல், தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கீரையையும் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மி.வத்தல், கொத்துமல்லி விதை, வெந்தயம் போட்டு நன்கு அரைத்த பின்னர் வதக்கிய கீரையையும் போட்டு நன்கு அரைக்கவும்.

மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம் தாளித்து மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்கு வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும். வெளியே இருந்தால் கூடக் கெட்டுப் போகாது. 

Tuesday, May 29, 2018

உணவே மருந்து! அகத்திக்கீரை!

நம் அகத்தை அதாவது வயிற்றைச் சுத்தம் செய்வதால் இந்தக் கீரைக்கு அகத்திக்கீரை என்று பெயர். பொதுவாக எல்லா நாட்களிலும் அகத்திக்கீரையைச் சாப்பிடுவதில்லை. ஏகாதசி விரதம் இருந்த மறுநாள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பார்கள். முதல் நாள் பட்டினி இருந்து வருத்தியதால்கொஞ்சம் வயிறு சூடு அதிகம் இருக்கும். அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் அந்தச் சூடு தணியும்.  வாயுப் பிரச்னை ஏற்படாது.  கசப்புத் தன்மை கொண்ட கீரை என்பதால் பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் சமைக்கும்போது கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் கீரை கசக்காது. இதுவும் மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட கீரை. இதையும் கட்டாயமாய்ப் பத்தியம் இருப்பவர்கள், சித்த, ஆயுர்வேத, ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் உண்ணக் கூடாது. மருந்தை நிறுத்திவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கீரையில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், மாவுச்சத்து, இரும்புச் சத்து போன்றவை உள்ளன. உடல் உஷ்ணம் குறைய இந்தக் கீரையைச் சமைத்து உண்பார்கள். பித்தம் நீங்கி அஜீரணம் போய் ஜீரணம் உண்டாகும்.  கால்களில் விரல்களின் ஓரத்தில் வரும் சேற்றுப் புண்களுக்கு இந்தக் கீரையின் சாறைத் தடவலாம்.  சரும நோய்க்கும், தேமலுக்கும் இது நல்ல மருந்து. இந்தக்கீரையின் இலைகளைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி அரைத்து உடலில் பூசிக் கொண்டு குளிக்கலாம். கீரைச் சாற்றில் தேன் கலந்து குழந்தைகளின் உச்சந்தலையில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை மறையும்.  பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் இந்தக்கீரை நல்ல பலன் அளிக்கும். தொண்டைப் பிரச்னை உள்ளவர்கள் இந்தக் கீரையைப் பச்சையாக வாயில் போட்டு மெல்லலாம். தொண்டை வலி,  தொண்டைப்புண் சரியாவதோடு வயிற்றில் உள்ள புழுக்கள், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

Image result for அகத்திக் கீரை மருத்துவ குணங்கள்

படத்துக்கு நன்றி கூகிளார்.

இந்தக் கீரையைக் காலையில் நறுக்கக் கூடாது என்பார்கள். காரணம் ஏதோ உண்டு. மறந்துட்டேன். கேட்டுச் சொல்கிறேன். ஆகவே முதல்நாளே வாங்கி வந்ததும் கீரையை ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்புச் சேர்த்துக் கீரையை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வற்றல் தாளித்துத் தேங்காய்த் துருவலோடு வெல்லம் சேர்த்துக் கிளறிப் பொரியல் (கறி அல்லது சுண்டல்) செய்து சாப்பிடலாம். மற்றக் கீரைகள் மாதிரி இதையும் சமைக்கலாம் என்று சொன்னாலும் நான் செய்து பார்த்தது இல்லை. 

Sunday, May 27, 2018

உணவே மருந்து! சிறுகீரை!

சிறுகீரையைப்பத்தியம் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. அகத்திக்கீரை போல் இதுவும் பத்தியத்தை முறிக்கும் இயல்பு உடையது! இந்தக்கீரை எங்கு வேண்டுமானாலும் வளரும். இதுவும் குப்பைக்கீரையும் ஒன்று எனப் பலர் சொன்னாலும் இதைத் தனியே வளர்ப்பவர்களும் உண்டு. இலைகள் மாற்று அடுக்கில் அமைந்தவை. சட்டெனப் பார்ப்பவர்களுக்கு அரைக்கீரைக்கும் இதுக்கும் வேறுபாடு தெரியாது. இதிலும் பொதுவாகத் தண்டைச் சமைப்பதில்லை. கீரையில் பச்சையம் அதிகம். இந்தக் கீரையைச் சமைத்தாலும் அதன் பச்சை நிறம் மாறாது.

மிகவும் மருத்துவ குணம் நிரம்பிய இதன் இலை, வேர் ஆகியவற்றில் கஷாயம் மாதிரி வைத்துக் குடிக்கலாம். உடலில் உள்ள நச்சுத் தன்மை விலகி விடும் என்றும் அனைத்தும் கழிவுகளாக வெளியேறிவிடும் என்றும் சொல்வார்கள். நீர்க்கட்டிக் கொண்டிருந்தால் இந்தக் கீரையைப் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் தானாகப் பிரியும். இது மட்டுமல்ல. ஆங்கில மருத்துவர்களால் கூட குணப்படுத்த முடியாத சிறுநீரகக் கல் இந்தக் கீரையைத் தொடர்ந்து உண்பதால் குணமாகும். இந்தச் சிறுகீரையின் வேரோடு நெருஞ்சில் வேர், சிறுபூளை வேர்(பூளைப்பூ எனத் தென்மாவட்டங்களில் விற்பார்கள். வீட்டுக்கூரையில் இதை வைத்தால் நன்மை பயக்கும் என்றும் சொல்வதுண்டு. சங்கராந்தி(பொங்கல்) சமயம் இவற்றை வீதியில் வந்து கூவி விற்பார்கள். இந்தச் சிறுபூளை வேர், நெருஞ்சில் வேர், சிறுகீரை வேர் ஆகியவற்றோடு ஜீரகம் ஆகியவற்றை வகைக்கு 40 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு கல்லுரல் அல்லது அம்மியில் ஒன்றிரண்டாகச் சிதைத்துக் கொண்டு ஒரு லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராகச் சுண்ட வைத்து இரு பாகமாகப் பிரித்துக் காலை ஒரு பாகமும் மாலை ஒரு பாகமும் குடித்து வரக் கல்லடைப்பு முற்றிலும் நீங்கும்.

கண் சம்பந்தப்பட்ட எந்த நோய்க்கும் இந்தச் சிறுகீரை நன்மை தரக் கூடியது.  கண் பார்வைத் திறன் அதிகரிப்பதோடு, கண் காசம், கண்ணில் ஏற்படும் படலம், கண் புகைச்சல் ஆகியவை முற்றிலும் நீங்கும்.  ரத்தக் கோளாறால் ஏற்படும் பித்தம் நீங்கப் பச்சரிசிக் கழுநீருடன் சிறுகீரை வேரை அரைத்துக் கொண்டு பத்து கிராம் அளவுக்கு எடுத்துத் தேன் கலந்து கொடுத்தால் நிவாரணம் கிட்டும்.  இந்தச் சிறுகீரைச் சாறு ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் ஒரு லிட்டர், எலுமிச்சைச் சாறு அரை லிட்டர், பால் ஒரு லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு ஒரு லிட்டர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொண்டு அதில் அதிமதுரம்(பொடியாக்கி) ஏலம் (பொடி), நெல்லி முள்ளி எனப்படும் நெல்லி வற்றல்,லவங்கம் எனப்படும் கிராம்பு, கோஷ்டம், வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை வகைக்கு இரண்டு கிராம் அளவு எடுத்துக் கொண்டு ஊற வைத்து அரைத்து மேற் சொன்ன சாறுகளோடு கலந்து பதமாகக் காய்ச்சிப் பின்னர் வடித்து அதில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் கண் பிரச்னைகள் நிரந்தரமாகத் தீர்வாகும் என்கின்றனர்.

Image result for சிறுகீரை

படம் உதவி கூகிள் வாயிலாக! நன்றி.

இந்தச் சிறுகீரையை எனக்குக் கல்யாணம் ஆகிச்சென்னை வந்தப்புறம் தான் தெரியும். மதுரையில் இருந்தவரை முளைக்கீரை, அரைக்கீரை ஆகிய இரண்டு தான்! கீரைக்காரியிடம் காசு கொடுத்துக் கீரை வாங்கியதே இல்லை. அரிசி போட்டுத் தான் வாங்குவோம். கூடவே தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி எல்லாமும் அரிசி போட்டுத் தான் வாங்கி இருக்கோம். சென்னை வந்ததும் அரிசி போட்டால் கீரை கிடையாது என்பதே ரொம்ப அதிசயமாயும், வருத்தமாயும் இருந்தது. பின்னர்  எழுபதுகளின் கடைசியில் மதுரையிலும் காசு கொடுத்துக் கீரை முதலியன வாங்க ஆரம்பித்து விட்டனர்.  என் புக்ககத்தினருக்கு முளைக்கீரை தவிர்த்து மற்றவை தெரியாது! என்னமோ கீரையெல்லாம் சமைக்கிறே என்று என் மாமியார் சொல்லுவார். ஆனாலும் விட்டதில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை கூடச் சமைச்சுடுவேன். அவங்க சாப்பிடலைனா என்ன? நாங்க சாப்பிடுவோம்! :)))) இப்போ அதெல்லாம் கிடைக்கவே இல்லை என்பதோடு ஒரு கட்டுக்கீரையைச் சாப்பிடவே இரண்டு நாள் ஆயிடுது! :)))))