எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, February 21, 2013

சேனையில் பிட்லை தெரியுமா?

சேனைக்கிழங்கில் பிட்லை சாப்பிட்டிருக்கீங்களா? நல்லாவே இருக்கும். :)

சேனைக்கிழங்கு நீள வாக்கில் நறுக்கிய துண்டங்கள் ஒரு கிண்ணம்.  பச்சைக் காராமணி (பயத்தங்காய்)  நூறு கிராம் வாங்கிக் கொஞ்சம் நீள வாக்கிலேயே நறுக்கிக் கொள்ளவும்.  இதைத் தவிரவும் மொச்சை, காராமணி(விதை) ஊற வைத்தது இரண்டு டேபிள் ஸ்பூன்.  புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும்.

வறுத்து அரைக்க:  மிளகாய் வற்றல் மேற்சொன்ன அளவுக்கு ஆறு, ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை(தேவையானால்) நான் போடுவதில்லை. ஆறு மி.வத்தல், ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்துக் கொஞ்சம் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.  விருப்பப் பட்டால் வெல்லம் ஒரு டீஸ்பூன் தூளாக.

துவரம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.  தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, உபருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி.


சேனைக்கிழங்கை முதலில் இரண்டாம் கழுநீரில் வேகவைத்துக் கொட்டிக் கொள்ளவும்.  பயத்தங்காய் அல்லது பச்சைக்காராமணியைக் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு வேக விடவும்.  ஊற வைத்த மொச்சை, காராமணியையும் சேர்க்கவும்.  அது வேகும்போதே சேனைக்கிழங்கையும் சேர்க்கவும்.   காய்களுக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.  காய்கள் நன்கு வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு, அதற்குத் தேவையான உப்பை மட்டும் போடவும்.  மறதிப் பேர்வழி எனில் முதலில் காய் வேகும்போது உப்புச் சேர்க்காமல் புளிக்கரைசலை ஊற்றிவிட்டுப் பின்னர் சேர்த்துப் போடவும்.  புளி வாசனை போகக் கொதித்ததும், வெந்த துவரம்பருப்பு சேர்த்துக் கொண்டு, அரைத்த விழுதையும் போட்டுக் கலந்து கொதிக்க விடவும்.  சேர்ந்தாற்போல் கொதித்ததும் கீழே இறக்கிக் கொண்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, மி.வற்றல் தாளித்துக் கருகப்பிலையையும் போட்டுப் புரட்டிக் கொட்டவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  சாதத்தோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்.


அடுத்து சேனைக்கிழங்கில் பருப்புப் போடாத வெறும் குழம்பு.  இதற்குச் சேனைக்கிழங்கு நறுக்கிய துண்டங்கள் ஒரு சின்னக் கிண்ணம், மொச்சை, கொண்டைக்கடலை, காராமணி(ஊற வைக்க வேண்டாம்) தாளிக்க எண்ணெய் நல்லெண்ணெயாக இருத்தல் நலம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து.பருப்பு, வெந்தயம், மி.வத்தல், பெருங்காயம், கருகப்பிலை உப்பு தேவையான அளவு.  குழம்புப் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகள்

புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து நன்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.


கடாய்/வாணலி/உருளியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உ.பருப்பு, து.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், மி.வத்தல் கருகப்பிலை தாளிக்கவும்.  அந்தக் காய்ந்த எண்ணெயிலேயே கொண்டைக்கடலை, மொச்சை, காராமணி போன்றவற்றைப் போட்டு வெடிக்க விடவும்.  வெடித்ததும், சேனைக்கிழங்குத் துண்டங்களைப் போட்டுக்கொண்டு, பொடியாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகளையும் போட்டு அந்த எண்ணெயிலேயே வதக்கவும்.  பின்னர் உங்கள் குழம்புப் பொடி வறுத்துச் செய்யவில்லை எனில் அந்த எண்ணெயிலேயே போட்டு வறுக்கவும்.  அதன் பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்புப் போட்டுக் கொதிக்க விடவும்.  சேர்ந்து வருகையில் தேவையானால் வெல்லம் சேர்க்கவும்.  கீழே இறக்கி வைத்து வறுத்த வெந்தயத் தூள் அரை டீஸ்பூன் சேர்க்கவும்.  சாதம், அடை, அரிசி உப்புமா போன்றவற்றிற்கு ஏற்ற துணை.

Wednesday, February 20, 2013

மேலும் சில சேனைக்கிழங்கு தயாரிப்புகள்!

பொதுவாச் சேனைக்கிழங்கு சாப்பிடறவங்களே கம்மி.  அவங்களை ஊக்குவிக்க இம்மாதிரியெல்லாம் பண்ணலாம். :)


சேனைக்கிழங்கு கால் கிலோ,  தேவையான அளவுக்கு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, மிளகாய் வற்றல் 2, தேங்காய்த் துருவல் ஒரு சின்ன மூடி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன், ஜீரகம், தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை.

சேனைக்கிழங்கைத் துண்டம் துண்டமாக நறுக்கிக் கொள்ளவும்.  முன் சொன்னாற்போல் அரிசி களைந்த இரண்டாம் கழுநீரில் ஒரு கொதி விட்டு எடுத்து வடிகட்டவும்.  பின்னர் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வடிகட்டித் தனியாக வைக்கவும்.  மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், ஜீரகம் சேர்த்து ஒன்றிரண்டாக அம்மியில்/மிக்சி ஜாரில்/சின்னக் கல் உரலில் இடித்து வைத்துக்கொள்ளவும்.  வாணலியில் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றவும்.  கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு வெந்த சேனைக்கிழங்கைப் போட்டுக் கொண்டு, இடித்து வைத்த மசாலாவைப் போட்டு நன்கு கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் எடுத்து சாம்பார் சாதம், வற்றல் குழம்பு சாதம் போன்றவற்றோடு தொட்டுக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


சேனைக்கிழங்கு மசியல்:  சேனைக்கிழங்கை மேலே சொன்ன மாதிரிக் குழைய வேக வைக்கவும்.

ஒரு சின்னக் கிண்ணம் துவரம் பருப்பைக்குழைய வேக வைக்கவும். மசியலுக்குப் புளி சேர்க்கப் போவதெனில் சின்ன எலுமிச்சை அளவுப் புளியை ஊற வைத்துக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

மி.வத்தல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, பெருங்காயம் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். தாளிக்கக்கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, ஒரு பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து குழைய வேக வைத்த சேனைக்கிழங்கைக் கொஞ்சம் நீர் ஊற்றி அதில் கொட்டி, வெந்த பருப்பையும் சேர்க்கவும்.  கரைத்த புளி நீரை ஊற்றித் தேவையான உப்புச் சேர்க்கவும். மஞ்சள் தூளும் சேர்க்கலாம்.  இறக்கும்போது வறுத்துப் பொடி செய்த மசாலாப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஒரே கொதியில் கீழே இறக்கவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவவும்.

இதுவே எலுமிச்சை எனில், தாளிதம் செய்கையில், பச்சைமிளகாய் இரண்டு அல்லது மூன்று போட்டுவிட்டு, இஞ்சியும் கொஞ்சம் சேர்க்கவும்.  பின் வெந்த சேனைக்கிழங்கு, து.பருப்பு சேர்த்துக் கொஞ்சம் நீர் ஊற்றி அரை டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும்.  கொதித்து நன்கு சேர்ந்த வந்த பின்னர் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு, பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும்.

Sunday, February 17, 2013

எரிசேரின்னா இதாங்க!

எரிசேரிக்குச் சேனைக்கிழங்கு, வாழைக்காய் இரண்டும் போடலாம்.  அல்லது ஏதேனும் ஒண்ணு மட்டும் கூடப் போடலாம்.  செய்முறை என்னமோ ஒண்ணு தான்.

சேனைக்கிழங்கு கால் கிலோ, தோல் சீவிக் கொண்டு கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  அரிசி களைந்த இரண்டாம் கழுநீரில் அதை ஒரு கொதி விட்டுப் பொங்கி வருகையில் வடிகட்டி வைக்கவும். இதன் மூலம் சேனைக்கிழங்கின் காறல் குணம் போகும்.  அல்லது வெறும் வெந்நீரில் கூட ஒரு கொதிவிட்டுப் பொங்க ஆரம்பிக்கையில் இறக்கி வடிகட்டிக்கலாம்.  அப்படியே சேனைக்கிழங்கை வேக வைக்கக் கூடாது.  அதுக்குத் தான் இந்த முறை.

வாழைக்காய் நடுத்தரமாக 2, தோல் சீவிக் கொண்டு சேனைக்கிழங்குத் துண்டங்களைப் போல் நறுக்கவும்.  இதற்கு நடுத்தர அளவில் ஒரு தேங்காய் தேவை. தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் அரிசியை ஊற வைக்கவும்.  மிளகாய்த் தூள் (காரம் வேண்டுமெனில் ) ஒரு டேபிள் ஸ்பூன்/ அல்லது இரண்டு டீஸ்பூன் போதும்.  ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.  தாளிக்கத் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை.  சிலர் ஜீரகம் சேர்க்கிறார்கள்.  சேர்ப்பவர்கள் அரைக்கையில் சேர்த்து அரைக்கலாம்.  நான் ஜீரகம் சேர்ப்பதில்லை.  சுவை மாறும்.

ஏற்கெனவே வடிகட்டி வைத்திருக்கும் சேனைக்கிழங்கை மீண்டும் நல்ல தண்ணீரில் வேக வைக்கவும்.  பாதி வெந்ததும், வாழைக்காய்த் துண்டங்களையும் சேர்க்கவும்.  இரண்டும் நசுங்கும் பதம் வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்க்கவும்.  பொடி வாசனை போக உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

மிக்சி ஜாரில் ஒரு மூடித் தேங்காயைப் போட்டு ஊற வைத்த அரிசியையும் போட்டு நன்கு நைசாக அரைக்கவும்.  மிச்சம் இருக்கும் தேங்காய்த் துருவலில் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.  தேங்காய்ச் சக்கையைத் தூர எறிய வேண்டாம்.  அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காய்களில் கொட்டிக் கிளறவும்.  லேசாக ஒரு கொதி வந்ததும், எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலை ஊற்றவும்.  இன்னொரு வாணலி அல்லது இரும்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை தேங்காய்ச் சக்கையை நன்கு சிவக்க வறுத்து எரிசேரியில் கொட்டவும்.  தேங்காய் எண்ணெய் தேங்காய் மணத்துடன் சுவையான எரிசேரி தயார்.

ஒரு சிலர் தேங்காய்ப் பால் எடுத்துச் சேர்க்காமல்,தேங்காய்த் துருவலை நன்கு வறுத்துச் சேர்ப்பார்கள்.  இது அவரவர் விருப்பம். சுவையில் மாறுபாடு தெரியும்.  அவ்வளவே.

Saturday, February 16, 2013

நீங்க மலையாளமா? தமிழா?

என்னோட அப்பா வீட்டிலே ஆந்திராவிலே இருந்து அப்பாவின் கொ.தா. வந்த கதையைப் போன ஏப்ரல் புத்தாண்டுக்குப் போட்ட பதிவிலே பார்த்திருப்பீங்க.  ஆகவே எங்க வீட்டிலே யுகாதி, தமிழ் வருஷப் பிறப்பு, விஷுனு எல்லாமுமே கொண்டாடுவாங்க.  சமையல்லேயும் அவியல், எரிசேரினு பண்ணறது உண்டு.  இப்போ நாம எரிசேரியை எப்படிப் பண்ணறதுனு பார்க்கலாமா?

கல்யாணம் ஆகித் தலைப் பொங்கல்!  மாமியார் வீட்டிலே இருக்கோம்.  போகி ஆச்சு.  மறுநாள் பொங்கலுக்குத் தனிக்கூட்டுனு மாமியார் சொல்லவும், அந்தப் பெயரே புதுசாக இருந்தது எனக்கு.  அது எப்படிச் செய்யறதுனு கேட்டுத் தெரிஞ்சுண்டேன்.  அப்போ அவங்க கேட்டாங்க, எரிசேரி உங்க வீட்டிலே கிடையாதானு! எரிசேரி என்றதும் நாக்கைத் தீட்டிக் கொண்டு, "சேனைக்கிழங்கிலேயும், வாழைக்காயிலும் செய்வாங்களே." என்றேன்.  தனிக்கூட்டுக்கும் சேனை, வாழை சேர்ப்பதால் மாமியாரும் அதே தான் என்றார்.  மற்ற விபரங்கள் தெரியாததால் நானும் மறுநாள் எரிசேரிக்குக் காத்திருந்தேன்.  சாப்பிடும்போது தனிக்கூட்டு மட்டுமே பரிமாறப் பட்டது.  எரிசேரியைக் காணொம்.  இதோ வரும், அதோ வரும்னு காத்திருந்தது தான் மிச்சம்.  வரலை.  அப்புறமா மெல்ல என் கடைசி நாத்தனாரைக் கேட்டேன்.  எரிசேரி பண்ணலையானு.  அவளோ, ராத்திரிக்கு என்றாள்.  ராத்திரியும், மிச்சம் இருந்த கூட்டை எல்லாம் ஒன்றாக்கி, மேலும் காய்களை நறுக்கிப் போட்டு ரசத்தையும் அதோடு சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொண்டிருந்தனர்.  எரிசேரி பண்ணறாப்போல் தெரியலை.  திரும்பவும் மாமியாரிடம் கேட்டேன்.  "எரிசேரிக்கு நான் வேணாக் காய்கள் நறுக்கவா? " மாமியாரோ, "எதுக்கு?  அதான் கொதிக்கிறதே அடுப்பில்!" என்றார்.  இது எரித்த குழம்பு னு நான் சொல்ல, அதான் எரிச்சேரி என அவர் அழுத்தம் கொடுத்துச் சொல்ல, மயக்கமே வந்துடுச்சு எனக்கு.  நான் "இது எரிசேரி இல்லைனு சொல்ல, "பின்னே, எப்படிப் பண்ணுவாங்க" னு அவங்க கேட்க நானும் விவரித்தேன்.  ஐய,  அதெல்லாம் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க.  அப்புறமா நான் எரிசேரி பண்ணிக் காட்டி அவங்களையும் சாப்பிட வைச்சது தனிக்கதை!

எரிசேரி எப்படிப் பண்ணறது பார்க்கலாம் அடுத்து!