எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, April 29, 2019

தேங்காய்ப் பொடி பிடிக்குமா? எள்ளுப் பொடி பிடிக்குமா?

எள்ளுப் பொடி:- இதை இரு வகைகளில் செய்யலாம். அதிகமாகப் பண்ணி வைத்துக் கொண்டால் சீக்கிரம் வீணாகி விடும் என்பதால் அவ்வப்போது பண்ணிக் கொள்வது நல்லது. அதில் மிச்சம் இருந்தால் உடனே ஒரு வாரத்துக்குள் பயன்படுத்திக்கலாம். இப்போத் தேவையான பொருட்கள்.

Image result for எள்

எள் சுமார் 50 கிராம் களைந்து கல்லரித்து வெறும் வாணலியில் வெடிக்க விட்டு எடுத்து ஆற வைக்கவும்.

உப்பு தேவையான அளவு  இதையும் வெறும் வாணலியில் வறுத்து எள்ளோடு சேர்த்து ஆற வைக்கவும்.

Image result for மிளகாய் வற்றல்        Image result for கல் உப்பு

மிளகாய் வற்றல் 6 முதல் எட்டு வரை  காம்பு நீக்காமல் விதைகள் நீக்காமல் வெறும் வாணலியில் எள்ளும், உப்பும் வறுத்த அந்தச் சூட்டிலேயே போட்டு வறுக்கவும். மிளகாய் கறுப்பாக ஆகக் கூடாது.

எல்லாம் ஆறிய பின்னர் எள்ளுப் பொடியை ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.
எள் சாதம் கலப்பதாக இருந்தால் ஏற்கெனவே சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு உதிராக வரும் வரை ஆற வைக்கவும். பின்னர் தேவையான எள்ளுப் பொடியை சாதத்தில் போட்டு நன்றாகக்  கிளறவும்.

இன்னொரு முறை. இம்முறையில் கொஞ்சம் உளுத்தம்பருப்பு சேர்ப்பார்கள் சிலருக்கு இது பழக்கம். ஆனால் நான் சேர்ப்பதில்லை. சொல்லப் போனால் இந்த வகைக் காரம் போட்டு எள்ளுப்பொடியும் அதில் செய்யும் சாதமுமே புக்ககம் வந்து தான் தெரியும். எங்க அம்மா வீட்டில் எள்ளும், வெல்லமும், கலந்து ஏலக்காயோடு சேர்த்துப் பொடித்து வைப்பார்கள். சாதம் கலந்தால் கூட அதில் தான்!

எள் அதே மாதிரி ஐம்பது கிராம் களைந்து கல்லரித்து வெறும் வாணலியில் வெடிக்க விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உளுத்தம்பருப்பு  இரண்டு டேபிள் ஸ்பூன் வெறும் வாணலியில் சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.

Image result for உளுத்தம்பருப்பு

உப்பு தேவையான அளவு வறுத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல் இதுக்குக் கொஞ்சம் அதிகமாக சுமார் பத்து வரை கருகாமல் வறுத்துக் கொண்டு முதலில் மி.வத்தல், உப்பு, உ.பருப்பு போட்டு மிக்சி ஜாரில் சுற்றிப் பொடித்துக் கொண்டு பின்னர் எள்ளைப் போட்டுக் கலந்து பொடியாக்கவும். இதையும் அதிக நாட்கள் வைத்துக் கொள்ளாமல் சீக்கிரம் செலவு செய்யணும்.  சாதம் கலக்கும் முறை முன்னர் சொல்லி இருக்கிறாப்போல் தான்.

பூண்டுப் பொடி: இது பூண்டு சாப்பிடறவங்களுக்கு மட்டும்.  நான் பண்ணவும் மாட்டேன். ஒரு சிலர் பருப்புப் பொடியிலேயே பூண்டையும் போட்டுக் கலந்து விடுகின்றனர். அந்த ருசி பிடிக்குமெனில் பருப்புப் பொடி செய்யும் போதே வெறும் வாணலியில் பூண்டையும் மொறுமொறுப்பாக வறுத்துக் கொண்டு சேர்த்துப் பொடித்துக் கொள்ளலாம்.

Image result for பூண்டு

தனிப் பூண்டுப் பொடி தேவை எனில் பூண்டு சுமார் 50 கிராம் தோல் நீக்கி உரித்துக் கொண்டு வெறும் வாணலியில் போட்டு அடுப்பைத் தணித்து வைத்தே சிவக்க மொறுமொறுப்பாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் உளுத்தம்பருப்பு  சுமார் அரைக்கிண்ணம் எடுத்துக் கொண்டு வறுத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு வறுத்துக்கொள்ளவும்.

மிளகாய் வற்றல் காரத்துக்கு ஏற்றபடி 10 அல்லது 15க்குள். காரமான மிளகாய் எனில் எட்டு அல்லது பத்து போதும். வறுத்துக் கொண்டு  முதலில் மிளகாய் வற்றல், பூண்டு, உப்பைப் பொடித்துக் கொண்டு கடைசியில் உளுத்தம்பருப்பைச் சேர்த்துக் கொஞ்சம் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். இதய நோய் இருப்பவர்கள் இதை அடிக்கடி சாப்பிடலாம்.

தேங்காய்ப் பொடி: இதையும் அதிக நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. எனினும் இப்போது எல்லோர் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால் அதில் வைத்து 3,4 மாதம் பயன்படுத்திக்கலாம்.

Image result for தேங்காய்

தேவையான பொருட்கள்: முற்றிய தேங்காய் ஒன்று அல்லது கொப்பரை ஒன்று. துருவிக்கொள்ளவும்

மி.வத்தல் சுமார் 10 அல்லது 15 , பெருங்காயம் ஒரு துண்டு, உப்பு தேவையான அளவு  கடலைப்பருப்பு+ உ.பருப்பு வகைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன்.

வறுக்கக் கொஞ்சம் எண்ணெய்

கடாயில் எண்ணெயை ஊற்றி முதலில் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மிளகாய் வற்றலைப் போட்டு வறுத்துத் தனியே வைக்கவும்.
அதன் பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைத் தனித்தனியாகச் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விடாமல் இருக்கும் அந்த எண்ணெயிலேயே துருவிய தேங்காய்த் துருவலைப் போட்டுச் சிவக்க வறுக்கவும்.
உப்பையும் அதோடு போட்டு வறுத்துக் கொள்ளலாம். அல்லது தனியாகவும் வறுக்கலாம். உப்பை வறுப்பதால் இம்மாதிரிப் பொடிகள் செய்கையில் அதன் நீர்ச்சத்தினால் பொடி விரைவில் கெட்டுப் போகாது.

இப்போது மிக்சி ஜாரில் மி.வத்தல்+உப்பு+பருப்பு வகைகளைப் போட்டுப் பொடித்துக் கொண்டு பின்னர் வறுத்த தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொண்டு பொடிக்கவும். நன்கு கலந்து ஆறிய பின்னர் பாட்டிலில் போட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

சம்பாசாதப் பொடி: தேவையான பொருட்கள்

Image result for மிளகு Image result for ஜீரகம்

மிளகு அரைக்கிண்ணம்,ஜீரகம் ஒரு கிண்ணம், உப்பு தேவையான அளவு. பெருங்காயம் பொடியாக அரை டீஸ்பூன் அல்லது கட்டியாக இருந்தால் ஒரு சின்னத் துண்டு.

வாணலியைக் காய வைத்துக் கொண்டு முதலில் மிளகைப் போட்டு வெடிக்க விட்டு எடுத்து ஆற வைக்கவும். பின்னர் ஜீரகத்தைப் போட்டுச் சிவக்க வறுக்கவும்.உப்பையும் வறுக்கவும். பெருங்காயப் பொடி எனில் உப்போடு சேர்த்துவிடவும்.கட்டி எனில் தனியாகச் சூட்டில் போட்டுப் பிரட்டி எடுக்கவும். எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

சம்பா சாதம் எனப்படும் சாதம் செய்ய இந்தப் பொடி தேவைப்படும். சாதத்தை வடித்துக் கொண்டு சூடாக இருக்கையிலேயே நல்ல நெய்யைத் தாராளமாகக் கலந்து கொண்டு இந்தப் பொடியைத் தேவையான அளவு போட்டுக் கலந்து வைத்தால் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதம் போன்ற சம்பா சாதம் தயார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இத்துடன் கத்திரிக்காய் கொத்சுவும் செய்து கொடுப்பார்கள். அதைப் பின்னர் ஒரு முறை பார்க்கலாம்.