எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, November 20, 2009

ரங்கமணி மசிச்ச கத்தரிக்காய் கொத்சு!

வருஷக் கணக்காச் சிதம்பரம் போயும் இன்னமும் அங்கே சம்பாசாதமும், கத்தரிக்காய் கொத்சும் சாப்பிட்டதில்லை. ஆனால் செய்முறை தெரியும். இப்போப் போனவாரம் போயிருந்தப்போவும் தீக்ஷிதர் வீட்டிலேயே கேட்டும் உறுதி செய்து கொண்டேன். அதன்படி எழுதறேன். முதலில் சம்பாசாதம். சாம்பார் சாதம்னு நினைச்சுடாதீங்க. சிதம்பரத்திலே இது ஹோட்டல்களில் கூட பிரபலமாக்கும்.



நல்ல அரிசியாக வாங்கி வெண்கலப்பானையில் சாதம் வடித்துக் கொள்ளவும். வெண்கலப் பானை இல்லைனா என்ன? தீபாவளிக்கு வஸ்த்ரகலா வாங்காத கோபத்தில் உங்க முகமே வெங்கலப்பானை மாதிரித் தானே இருக்கும்? அதனால் பரவாயில்லை, குக்கரில் வைச்சுடுங்க. பொலபொலனு இருந்தாப் போதும். குக்கரும் வைக்கமாட்டீங்களா? ரங்ஸ் எதுக்கு இருக்கார்? வஸ்த்ரகலா கிடைக்காத கோபத்தைக் காட்டினால், தன்னாலே வச்சுடுவார் குக்கரை.ஒரு தாம்பாளத்தில் அதைக் கொட்டிச் சுடச் சுட இருக்கும்போதே நெய்யையும் ஊற்றி உப்புப் போட்டுக் கலந்து கொள்ளவும். வேறொரு கடாயில் நெய் விட்டு அதில் ஒரு டீஸ்பூனுக்குக் குறையாமல் மிளகு போட்டு, இரண்டு டீஸ்பூன் ஜீரகமும் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். இதை அம்மி இருந்தால் நல்லது அல்லது மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாகப் பொடி செய்து கொள்ளவும். நெய்விட்டுக் கலந்த சாதத்தில் இதைப் போட்டுக் கிளறி வைக்கவும். இதற்குத் தொட்டுக்கத் தான் கத்தரிக்காய் கொத்சு.



நல்ல கத்தரிக்காயாக அரை கிலோவுக்குக் குறையாமல் வாங்கிக்கணும். பொதுவாய் கொத்சுக்குக் கத்தரிக்காய் வாங்கினால் பெரிய கத்தரிக்காய் வாங்கிச் சுட்டுத் தான் கொத்சு பண்றது வழக்கம். ஆனால் சிதம்பரம் கொத்சில் அப்படி இல்லை என்பதே அதன் தனித் தன்மை. கத்தரிக்காயை நாலாக நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு கத்தரிக்காயை வதக்க வேண்டும். சுருள வதக்க வேண்டும். சுருள வதங்கின கத்தரிக்காயை ஒரு மத்தினால் மசிக்கவேண்டும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், தனியா, வெந்தயம் நன்கு வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.



எலுமிச்சம்பழ அளவுப் புளியை எடுத்துக் கரைத்துக் கொள்ளவேண்டும். உப்பு மட்டும் சேர்க்கவேண்டும், மஞ்சள் தூள்(தேவையானால்) சேர்க்கலாம். அடுப்பில் கடாயை ஏற்றி, எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி கடுகு, வெந்தயம் தாளிக்கவும். கருகப்பிலை தேவையானால் சேர்க்கலாம். தாளிதம் ஆனதும், மசித்த கத்தரிக்காயைப் புளிக்கரைசலில் சேர்த்துக் கொண்டு அடுப்பில் கடாயில் உள்ள எண்ணெய்த் தாளிதத்தில் சேர்க்கவும். ஒரு கொதி வரும்போது வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடியைப் போடவும். உடனே இறக்கவும், கருகப்பிலை, கொத்துமல்லி அலங்காரங்கள் எல்லாம் உங்கள் விருப்பம். இது சம்பாசாதத்தோடு மட்டுமின்றி அரிசி உப்புமா, பொங்கல் போன்றவற்றோடும் சாப்பிடலாம். சிதம்பரம் கொத்சில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதில்லை, என்பதும் கையாலேயே மசிக்கவேண்டும் என்பதுமே அதன் தனித் தன்மையாக்கும்.

உங்களாலே மத்தாலே மசிக்கமுடியலையா? கவலையே படாதீங்க, உங்களுக்கு மசியாத ரங்ஸும் இருப்பாரா என்ன? அவரை மசிச்சுடுங்க, சேச்சே, மசிக்கச் சொல்லுங்க. உங்களை அவர் பக்கம் மசிய வைக்கிறதா நினைச்சுட்டு, (நினைப்புத் தானே, போனால் போகட்டும்) நல்லா மசிச்சுக் கொடுத்துடுவார். வர்ட்டா?? அடுத்துக் கண்டந்திப்பிலி ரசமும், பருப்புத் துவையலும். பத்தியமா சமைப்போமா?





வெங்காயம் சேர்க்கவேண்டுமென்றால் கத்தரிக்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் நன்கு வதக்கிக் கொண்டு அம்மியில் கொஞ்சம் கரகரப்பாகவே அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதைப் புளிக்கரைசலில் சேர்த்து மற்றதெல்லாம் மேற்சொன்ன மாதிரியே தான். கும்பகோணம் பக்கம் கல்யாணங்களில் இன்றும் இந்த கத்தரிக்காய், வெங்காயம் சேர்த்த சிதம்பரம் கொத்சு மூன்று நாட்களில் ஒரு நாள் காலை டிபனுக்குக் கொடுப்பார்கள். பல கல்யாணங்களிலும் சாப்பிட்டது தான். இன்னும் சிதம்பரம் தீக்ஷிதர்கள் வீட்டில் சாப்பிடலை, அதுவும் சாப்பிட்டுடணும்.

Wednesday, November 18, 2009

இன்னிக்கு முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி, சாப்பிட வாங்க!


சாப்பிட வாங்கனு போட்டதுக்கு அப்புறமா ஆறு பேர் இந்தப் பதிவைத் தொடர ஆரம்பிச்சுட்டாங்களே! ஹையா ஜாலி! அந்த ஆறு பேரையும் இப்போ சாப்பிடச் சொல்லப் போறது என்னன்னா, முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியாக்கும். பாலக்காட்டுக் காரங்க பேச்சிலே வந்தேனாக்கும், போனேனாக்கும், இருக்குமாக்கும் அப்படின்னெல்லாம் வருமா, அந்த மாதிரிப் பேச ஆசை, அந்தே! இப்போ முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியை எப்படிப் பண்ணலாம்னு யோசிப்போமா? இன்னிக்கு எங்க வீட்டிலே முருங்கைக்கீரைப் பருப்பு உசிலிதான். சாப்பிடும்போது தான் யோசனை தோணிச்சு, எழுதலாமேனு. இன்னிக்கு வேறே ஒண்ணும் எழுதி வேறே வச்சுக்கலை.

முருங்கைக் கீரை ஒரு கட்டு: வீட்டிலே முருங்கை மரம் இருந்தா கீரையை நல்ல இளங்கீரையாகப் பார்த்து பறிச்சுக் கொள்ளவும். என்னது? பூக்கள் இருக்கா? இருக்கட்டும், இருக்கட்டும் எல்லாப் பூக்களுமே காயாக மாறப் போறதில்லை, அதனாலே பூக்கள் உதிர்கிறது. மற்றபடி மரத்திலே வேணுங்கற அளவுக்குப் பூக்களையும் பறிச்சு வச்சுக்கோங்க. ஹிஹிஹி, யாருங்க அது, தொடுத்து வச்சுக்கணுமானு கேட்கிறது? இல்லை இல்லை, இதைத் தொடுத்தெல்லாம் வச்சுக்கவேண்டாம். நறுக்கி பொரிச்ச குழம்பு செஞ்சு சாப்பிடலாம். அது அப்புறமா. இப்போ கீரையை மட்டும் கவனிங்க. கீரையைப் பறிச்சோ அல்லது வாங்கியோ வச்சாச்சா? இப்போ கீரையை நல்லா ஆயணும். குச்சிகளை எல்லாம் ஆய்ந்து கீரையை மட்டும் தனியா எடுத்து நறுக்கி வச்சுக்கணும். நறுக்கினப்புறமா நல்லாத் தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைங்க கீரையை.

பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்: து.பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப் இரண்டையும் சேர்த்துக் கழுவி நனைச்சு வைக்கணும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறட்டும். அப்புறமாய் மி.வத்தல் ஆறு, உப்பு தேவையான அளவு, பெருங்காயப் பொடி, அல்லது கட்டியானால் பருப்போடயே சேர்த்து ஊற வைச்சுடலாம். எல்லாத்தையும் நன்கு நைசாக அரைச்சுக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையை ஒரு வாயகன்ற(உங்க வாய் அகலாம பார்த்துக்கவும்) பாத்திரத்தில் போட்டுக்கவும். அரைச்சதை எடுத்ததும் மிக்ஸி ஜாரில் கொஞ்சம் ஜலம் விட்டு மிச்சம், மீதி இருக்கும் பருப்புக் கலவையை எடுத்துக் கொண்டால் ரசத்துக்கு விளாவிடலாம். அது தனியா வச்சுப்போம். இப்போ பாத்திரத்தில் போட்ட பருப்புக் கலவையில் முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.பருப்பும் கீரையும் ஒன்றோடொன்று நன்கு கலந்ததும் அதை இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். வெந்த கலவையை ஒரு ஸ்பூனால் குத்தினால் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

வெந்த கலவை வெளியே எடுத்து ஆறினதும் உதிர்த்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், இந்த அளவுக்குக் குறைந்த பட்சமாய் ஒரு கப் எண்ணெயாவது தேவை. எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்புப் போட்டு வெடித்ததும் கருகப்பிலை சேர்த்துப் பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். நன்கு உதிர்ந்து வரும் வரை கிளறவும். பின்பு சூடாக இருக்கும்போதே, மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்போடு பரிமாறவும்.

Tuesday, November 3, 2009

எல்லாருக்கும் ஜுரமாமே? ஒரு பத்திய சமையல்!


இணையமே தகராறா இருக்குக் கொஞ்ச நாளா. கிடைக்கிற நேரத்திலே மனசிலே தோண்றதை எழுதறேன். நேத்திக்கு என்னோட சிநேகிதி ஒருத்தங்க மூக்கும், கண்ணும் சிவுசிவுனு இருக்கு, கீதா, என்ன பண்றதுனு கேட்டாங்க. நான் கூட வஸ்த்ரகலா வாங்கித் தராத கோபமோ இல்லை வருத்தமோனு நினைச்சேன். ஆனால் அது இல்லையாம். ஜலதோஷமாம். என்ன செய்யறதுனு கேட்டாங்க. தூதுவளையும், துளசியும் போட்டுக் கஷாயம் வச்சுச் சாப்பிடச் சொன்னேன். தூதுவளையே கிடைக்கலையாம், எப்படி இருக்குனும் தெரியாதாம். அப்புறமா அவங்களை விரலி மஞ்சளை விளக்கெண்ணெய் தடவி விளக்கிலே கறுப்பாகிற வரைக்கும் சுட்டுட்டு, அந்தப் புகையை உள்ளிழுக்கச் சொல்லிட்டு, அந்தக் கறுப்பான பொடியையும் பத்து மாதிரி நெத்தியிலே, மூக்கிலே போட்டுக்கச் சொன்னேன். தூதுவளை இருக்கே அதிலே கஷாயம் மட்டுமில்லைங்க ரசம் வச்சுக் கூடச் சாப்பிடலாம். எங்க வீட்டிலே இந்த மாதிரியான சில பைத்தியங்கள் அவ்வப்போது பிடிக்கும். மின்னல் இலை மோர்க்குழம்பு, முடக்கித்தான் தோசை,வேப்பம்பூ ரசம், தூதுவளை ரசம்னு அப்போ அப்போ வச்சுச் சாப்பிடுவோம்.

தூதுவளை தெரியுமா?? தூதுவளைனு ஒரு செடி இருக்கு. அதோட படம் போடறேன் பாருங்க. முள்ளு இருக்கும் செடியிலே, முள்ளுக் குத்திக்காம இலையை மட்டும் பறிச்சுக்குங்க. ஒரு கப் இலை இருக்கட்டும். சுத்தம் பண்ணிக்கணும். தண்ணியிலே போட்டுச் சுத்தம் பண்ணி வடிகட்டி வச்சுக்குங்க. புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக்குங்க. உப்பு தேவையான அளவு. மிளகு ஒரு ஸ்பூன், ஜீரகம் இரண்டு ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, அல்லது பெருங்காயப் பொடி. ஒரு மிளகாய் வத்தல். கருகப்பிலை கொஞ்சம். எல்லாத்தையும் எண்ணெய் விட்டுச் சட்டியிலே போட்டு வறுத்துக்குங்க. புளியைக் கரைச்சுக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும். வறுத்த எல்லா சாமானையும் அரைத்துக் கொள்ளவும். புளியை ஒரு ஈயச் சொம்பில் விட்டுக்கொள்ள வேண்டும். ஈயச் சொம்புன்னா என்னனு தெரியுமா?? அதை அடுப்பிலே ஜலம் விடாமல் வச்சால் அவ்வளவு தான். நீங்க வஸ்த்ரகலா வாங்கித் தரலைனா கண்ணீர் எப்படி விடுவீங்க?

அது மாதிரி ஈயச் சொம்பும் கண்ணீர் விட ஆரம்பிக்கும். அதனாலே புளி ஜலத்தை விட்டு, உப்பையும், மஞ்சள் தூளையும் போட்டுட்டு அடுப்பிலே வைங்க. நல்லாக் கொதிக்கட்டும். புளி வாசனை போகக் கொதிச்சதும், வறுத்து அரைச்சதைக் கலக்கவும். ஒரு கொதி வரும்போது தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சேர்த்து ஒரு நிமிஷம் கொதிக்கவிடவும். பின்னர் தேவையான அளவுக்கு ஜலம் விட்டு விளாவிக் கொள்ளவும். நல்ல ஜலதோஷம் இருக்கும்போது இந்த ரசம் வைச்சுச் சாப்பிட்டுப் பாருங்க, ஜலதோஷம் பட்டுனு விட்டுப் போகும். நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை தாளிக்கவேண்டும்.