எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, January 31, 2014

தேப்லா சாப்பிட வாங்க!

பரோட்டாவெல்லாம் போட்டுட்டேன், சாப்பிட்டுப் பார்த்திருப்பீங்க. :)) இப்போ ரொட்டி வகைகளில் வேறே சிலது பார்ப்போமா?  இதிலே தேப்லா என்ற குஜராத்தி முறை ரொட்டி ஒண்ணும், மிஸ்ஸி ரொட்டி என்ற மராட்டி வகை ஒண்ணும் பார்ப்போம்.  இது எல்லாம் என்னோட முறையிலே தான் நான் செய்வேன்.  அவங்க முறையிலே செய்யறதில்லை.  தேப்லாவை குஜராத்தியர் கோதுமை மாவிலே மட்டுமே செய்வாங்க.  நான் கொஞ்சம் கடலை மாவு சேர்த்துப்பேன். அதான் வித்தியாசம்.  ராஜஸ்தானில் ஐந்து கிலோ கோதுமைக்கு ஒரு கிலோ கடலைப்பருப்புச் சேர்த்தே அரைப்பாங்க. ஆக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை. :)))


தேப்லா அல்லது தேப்ளா; நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்

கோதுமை மாவு இரண்டு கிண்ணம்

கடலை மாவு அரைக்கிண்ணம்

மஞ்சள் பொடி  அரை டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்

ஓமம் பொடித்தது அல்லது முழுதாக ஒரு டீஸ்பூன்

சோம்பு அரை டீஸ்பூன்

ஜீரகம் அரை டீஸ்பூன் பொடித்தது

உப்பு தேவைக்கு

இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது சாதாரணமாய் ரொட்டி பண்ணுகையில் வட மாநிலங்களில் உப்பு சேர்த்துப் பிசைந்து பார்த்ததில்லை.  ஆனால் இம்மாதிரி ரொட்டிகள் பண்ணுகையில் தேவையான உப்பைச் சேர்க்கணும்.

பிசைய சமையல் எண்ணெய் (நான் நல்லெண்ணெய் தான் பயன்படுத்துவேன்) இரண்டு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் ஒன்று பொடியாக நறுக்கியது

இஞ்சித் துருவல் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்


மாவுகளை முதலில் ஒன்றாகக் கலக்கவும்.  கலக்கும்போது மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி, பொடித்த ஓமம், ஜீரகப் பொடி, சோம்பு போன்றவற்றையும் சேர்த்து முதலில் கைகளால் நன்கு கலக்கவும். மாவு நன்கு கலந்ததும் தயாராக வைத்திருக்கும் சமையல் எண்ணெயை சூடு செய்து மாவில் விடவும்.  மீண்டும் கலக்கவும்.  இப்போது பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு கைகளுக்குக் கொரகொரப்பாக வரும்.  கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து மாவை ரொட்டி மாவு பதத்துக்குப் பிசையவும். பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர்  மாவை மீண்டும் கொஞ்சம் பிசைந்து கொண்டு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டிச் சப்பாத்தியாக இடவும்.  அதை தோசைக்கல்லில் அல்லது நான் ஸ்டிக் தவாவில் போட்டுச் சுடவும்.  அடி பாகம் வெந்து மேலே குமிழ் வந்ததும் திருப்பிப் போட்டு மறு பாகத்தையும் வேக வைக்கவும்.  பொன்னிறமாக வெந்ததும் எடுத்து இரண்டு பக்கமும் மேலே கொஞ்சம் நெய்யைத் தடவி விட்டு வைக்கவும்.  ஒரு சிலர் தோசைக்கல்லில் வேகும்போதே நெய் அல்லது எண்ணெய் ஊற்றியும் வேக வைக்கிறார்கள்.  அது அவரவர் விருப்பம் போலச் செய்யவும்.  இதைக் கொஞ்சம் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொண்டால் ஊர்களுக்குச் செல்லும்போது ஊறுகாய், தக்காளித் தொக்கு, மாங்காய்த் தொக்கு, பச்சை ஆப்பிள் தொக்கு போன்றவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும்.  இது நாளை அல்லது நாளன்றைக்குச் செய்யும் போது படம் எடுத்துப் போடறேன்.  இன்னிக்கு தோசை மாவு இருக்கு! :))))

Saturday, January 25, 2014

பார், பார், கொண்டைக்கடலை சாதம் பார்!

இப்போ நீங்க சாதம் செய்யறதுக்குன்னே கொண்டைக்கடலையை ஊறப் போடுங்க. நல்லாவே இருந்தது.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

ஒரு சின்னக் கிண்ணம் வெள்ளைக் கொண்டைக்கடலை முதல் நாளே ஊற வைங்க.

முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, நாளைக்குச் செய்ய இன்னிக்கு மத்தியானம் ஊறப் போட்டீங்கன்னா ராத்திரி படுக்கறதுக்குள்ளே மூன்று முறையாவது கழுவிட்டு ஊற வைக்கிற நீரை மாத்துங்க.  இது கொண்டைக்கடலை, பட்டாணிபோன்றவற்றின் வழவழப்பைப் போக்குவதோடு ஒரு மாதிரியான வாசனை வராமலும் இருக்கும். இதை எந்தப் பருப்பு வகைகள் ஊற வைச்சாலும் நினைவில் வைச்சுக்குங்க.


கொண்டைக்கடலை ஊறியது ஒரு கிண்ணம் இப்போ ரெண்டு கிண்ணமாயிருக்கும். முளைக்கட்டி இருந்தால் இன்னும் நல்லது.

தக்காளி பெரிது ஒன்று

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி ஒரு அங்குலத் துண்டு அல்லது துருவலாக ஒரு டீஸ்பூன்

வெங்காயம் பெரிது ஒன்று

மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன்

தனியாப்பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

கசூரி மேதி கால் டீஸ்பூன்

கரம் மசாலா  அரை டீ ஸ்பூன்

தயிர் கெட்டியாக ஒரு சின்னக் கிண்ணம்

உப்பு தேவைக்கு

சமைத்த சாதம் உதிர் உதிராக மூன்று கிண்ணம் அல்லது 200 கிராம் பாஸ்மதி அரிசி.

தாளிக்க

எண்ணெய்  இரண்டு டேபிள் ஸ்பூன்

தேஜ் பத்தா எனப்படும் மசாலா இலை

லவங்கப்பட்டை ஒரு துண்டு

பெரிய ஏலக்காய் ஒன்று

கிராம்பு ஒன்று

சோம்பு ஒரு டீஸ்பூன்

சர்க்கரை ஒரு டீஸ்பூன்

பச்சைக் கொத்துமல்லி, புதினா ஆய்ந்து கழுவிக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.


கொண்டைக்கடலையை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு வடிகட்டி வைக்கவும்.  சமைத்த சாதம் எனில் உதிர் உதிராக எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பானைப் போட்டுக் கொண்டு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய்  காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைய ஆரம்பித்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தேஜ் பத்தா என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.  எல்லாம் வெடித்து வந்ததும் வெங்காயத்தைச் சேர்க்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவலைச் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்கவும்.  மஞ்சள்பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடியைச்  சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் வதக்கவும்.  பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலை நன்கு கலந்ததும் தயிரைச் சேர்க்கவும்.  உப்பு இப்போது சேர்க்க வேண்டாம்.

தயிரும் கொண்டைக்கடலையும் நன்கு கலந்ததும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து விட்டு அரிசிக்கு  உள்ள உப்பு மட்டும் சேர்க்கவும்.  கொண்டைக்கடலையை ஏற்கெனவே உப்புச் சேர்த்து வேக வைத்ததை மறக்க வேண்டாம்.   பின்னர் அரிசிக்கு உள்ள நீரை மட்டும் அளந்துவிட்டு விட்டு ரைஸ் குக்கரிலோ குக்கரிலோ வைக்கவும்.  வெளியே எடுத்து கரம் மசாலா, ஒரு ஸ்பூன் வெண்ணெய் கசூரி மேதி சேர்த்து விட்டுக் கொண்டு, கொத்துமல்லி, புதினா நறுக்கியவற்றைத் தூவி அலங்கரிக்கவும்.  எந்தவிதமான பச்சடியோடும் சாப்பிட ரெடி.




சாதமாகச் சேர்க்கிறீர்கள் எனில் கொண்டைக்கடலையும் தயிரும் கலந்ததும் தயிர் நன்கு வற்றிக் கொண்டைக்கடலை மட்டும் ஈரமில்லாமல் வந்ததும் சாதத்தைச் சேர்க்கவும்.  தேவையான உப்பை மிதமாகப் போடவும்.  ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயோடு கரம் மசாலா, கசூரி மேதி சேர்த்துக் கிளறி விட்டு அடுப்பை அணைத்துவிட்டுப் பின்னர் பச்சைக் கொத்துமல்லி, புதினா இலைகளால் அலங்கரிக்கவும்.  நான் சாதமாகத் தான் சேர்த்தேன்.  200 கிராம் அரிசி தான் முழு நாளுக்கும்.  ஆகவே அத்தனையையும் கொ.க.சாதம் பண்ணினால் செலவாகாது.  நிறையப் பேர் இருந்தால் குக்கரிலோ, ரைஸ் குக்கரிலோ அரிசியைப் போட்டுச் செய்வது சரியாய் வரும்.

ஊற வைச்ச கொ.க. மிஞ்சினால் என்ன செய்யலாம்? :)))

இரண்டு நாள் முன்னாடி காலை ஆகாரத்துக்கு ரொட்டி பண்ணினேனா!  அதுக்குக் கொண்டைக்கடலையிலே தான் தொட்டுக்கப் பண்ணி இருந்தேன்.  நனைச்சது என்னமோ சின்னக் கிண்ணம் தான்.  ஆனாலும் ஊற வைச்ச கடலையை எல்லாம் போட்டுப் பண்ணலை.  நிறைய ஆயிடும் போல் தோணித்து.  அதனால் அதே சின்னக் கிண்ணம் அளவுக்கு ஊறின கடலையைத் தனியா எடுத்து வைச்சிருந்தேன்.  மூணு நாளா அந்தக் கடலை கண்களிலே பட்டுக் கொண்டு என்னை என்ன செய்யப் போறேனு கேட்டுட்டு இருந்தது.  ஆனால் மூணு நாளா வெங்காயம், சோம்பு எல்லாம் சேர்க்க முடியாத நேரமாக இருந்தது.  இன்னிக்கு என்ன சமையல்னு மண்டை உடைஞ்சது.  சாம்பார் நேத்திக்குத் தான் பண்ணினேன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நீர்ப்புளி விட்டு சாம்பார்.  முந்தாநாள் மோர்க்குழம்பு, பருப்பு உசிலி. அதுக்கு முன்னாடி மைசூர் ரசம். அதுக்கு முன்னாடி வத்தக்குழம்பு, பொரிச்ச குழம்புனு வைச்சாச்சு.

இன்னிக்குத் தான் வெங்காயம் சேர்க்கலாமே! அந்தக் கொண்டைக்கடலையை வைச்சு சனா மசாலா பண்ணி ஃபுல்கா ரொட்டிடலாமா? ம்ம்ம்ம்ம்? மதியம் சாப்பாட்டுக்குப் பல சமயங்களிலும் ரொட்டி பண்ணி இருக்கேன் தான். ஆனால் இன்னிக்கு என்னமோ பண்ணணும்னு தோணலை.  சரி, கொண்டைக்கடலையைப் போட்டு மசாலா சாதமாப் பண்ணிடலாமானு யோசிச்சேன்.  அடுத்த நிமிஷம் ரெடி, ரெடி, ரெட்ட ரெடி.  மசாலா சாதம்னா தொட்டுக்க வெங்காயப் பச்சடி வேணுமே.  இன்னிக்குனு தயிர் அதிகமா இல்லையே!  சரி, காரட், தக்காளி, வெங்காயம் போட்டு சாலட் பண்ணிட்டு அப்பளம் பொரிச்சுக்கலாம்.  மிளகு, ஜீரகம் வறுத்தரைத்த ரசம் வைச்சுக்கலாம். தீர்மானம் ஆனது.

கொண்டைக்கடலை சாதம் வட மாநிலங்களில் பண்ணுவாங்க தான். நான் அதிகமாப் பண்ணினதில்லை.  இப்படி எப்போவானும் என்ன செய்யறதுனு முழிச்சுட்டு இருக்கிறச்சே பண்ணறது தான். இன்னிக்கு அதான் செய்தேன். செய்முறை படத்தோடு அடுத்த பதிவில்.

இதுக்குப் பின்னூட்டம் போடுங்கப்பா.  அப்போத் தான் அடுத்த பதிவு போடுவேனாக்கும்! :))))

Wednesday, January 22, 2014

ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம்!

பொதுவாய் இம்மாதிரியான ரசங்களே பத்திய உணவு வகையைச் சேர்ந்தவை என்றாலும் இந்த ரசம் குறிப்பாக பேதி மருந்து உட்கொள்ளும் நாட்களில் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கொடுப்பார்கள்.  முன்னெல்லாம் விளக்கெண்ணெய் கொடுத்து குடலைச் சுத்தம் செய்து வந்த நாட்கள் உண்டு.  காலையிலே விளக்கெண்ணெய் கொடுத்ததும் ஒரு மணி நேரம் கழிச்சுக் காஃபி கிடைக்காது.  மாறாக இந்த ரசம் தான் சூடாகக் குடிக்கக் கொடுப்பாங்க. மதியம் பனிரண்டு மணிக்குள்ளாகக் கழிவுகள் வயிற்றை விட்டு வெளியேறியதும் மீண்டும் இந்த ரசம் விட்டுக் கொஞ்சம் போல் குழைவான சாதம் போட்டுக் கரைத்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்வாங்க.  அதுக்கப்புறமா மூணு மணி அளவில் வெயிலில் வைத்து எடுத்த நீரில் குளிக்கச் சொல்லிட்டு கெட்டியாக மோர் சாதம், அல்லது தயிர் சாதம் போடுவாங்க.  தொட்டுக்க மூச்ச்ச்ச்!! அப்போ அந்த சாதமே தேவாமிர்தமா இருக்கும்.  ராத்திரிக்கு 2 அல்லது மூணு இட்லிகள் அதே தயிரோடு சாப்பிடணும்.  மறுநாளைக்கும் உடனடியாக வெங்காய சாம்பாரோடு, உ.கி.கறி வெளுத்துக் கட்ட முடியாது.  எளிமையான சாப்பாடாக பருப்பே இல்லாமல் சமைச்சிருப்பாங்க.  அதைத் தான் சாப்பிடணும்.  அதுக்கப்புறமாத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பருப்பு சேர்த்துப் பின்னர் எண்ணெயில் வதக்கின காய்கள், தேங்காய் சேர்த்தவை எனச் சேர்ப்பார்கள்.  இப்போல்லாம் பேதி மருந்துன்னா என்னன்னே பலருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த ரசம் வைச்சுக் குடிக்கலாம்.  கொஞ்சம் வயிறு சொன்னபடி கேட்டுக்கும். :)))



நான்கு பேர்களுக்கான பொருட்கள்:

சின்ன எலுமிச்சை அளவு புளி(பழைய புளி நல்லது. அதையும் தணலில்(ஹிஹிஹி, கரி அடுப்பில் கரியைப் போட்டுப் பிடிக்க வைச்சால் வருமே அதுக்குப் பேர் தணல்) சுட்டுக்கலாம்.  இல்லையா இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டிக்குங்க.  நீரில் ஊற வைச்சுக் கரைச்சு எடுத்துக்குங்க.  இரண்டு கிண்ணம் தேவை.  ரசம் குடிக்கக் கொடுக்கணுமே, நிறைய வேண்டும்.

மிளகாய் வற்றல் 2

மிளகு இரண்டு டீஸ்பூன்

ஜீரகம் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒருகைப்பிடி

பெருங்காயம்(தேவையானால், ஒரு சிலர் ஜீரகம் போட்டால் பெருங்காயம் போட மாட்டாங்க)

தக்காளி (தேவையானால்) சின்னது ஒண்ணு

மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கு

தாளிக்கக் கடுகு, கருகப்பிலை

வறுக்க தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

முதலில் மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, ஜீரகம் போன்றவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.  அதை எடுத்து ஆற வைத்துவிட்டு அந்தச் சட்டியிலேயே கருகப்பிலையைப் போட்டுப் பிரட்டிக் கொள்ளவும். அதையும் ஆற வைக்கவும்.

கரைச்சு வைச்ச புளி ஜலத்தைப் பாத்திரத்தில் விட்டுக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் தக்காளியையும் போட்டுக் கொதிக்க விடவும்.  ஆற வைத்த வறுத்த சாமான்களை நன்கு அரைக்கவும்.  ரொம்பக் கொரகொரப்பும் வேண்டாம்.  அதே சமயம் நைசாகவும் இருக்க வேண்டாம்.  அரைத்த விழுதில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.  புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் இந்த விழுது கரைத்த நீரை விட்டு விளாவவும்.  மேலே நுரைத்து வருகையில் அடுப்பை அணைத்துவிட்டு நெய்யில் அல்லது எண்ணெயில் கடுகு தாளித்துக் கருகப்பிலை போடவும். ரசம் ருசி பார்த்துக் கொண்டு தேவையானால் ரொம்பக் கெட்டியாக இருந்தால் நீர் இன்னும் கொஞ்சம் சேர்த்து விளாவலாம்.  ஆனால் பெரும்பாலும் இந்த அளவில் ரசம் கெட்டியாக வராது.  நீர்க்கவே வரும்.

இந்த ரசம் இன்னிக்கு வைச்சதைப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். (25-01-14)


Sunday, January 19, 2014

எலுமிச்சை ரசம்

எலுமிச்சை ரசம் ஒண்ணு தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ரசம். வாரம் ஒரு முறையாவது அதுவும் அடை பண்ணினால் அன்னிக்குக் கட்டாயமாய் வைப்பேன்.  சூடான அடையில் நெய்யை ஊத்திட்டு இந்த ரசத்தை மேலே விட்டுச் சாப்பிட்டால் அதுவே சொர்க்கம்! :))) அதாவது எனக்கு!  எங்க மாமியார் வீட்டில் புளியும் போட்டு எலுமிச்சைச் சாறும் பிழிந்து செய்வாங்க.  நான் புளி போடறதே இல்லை.

இரு முறைகளில் செய்யலாம்.  ஒண்ணு து.பருப்புப்போட்டு, இன்னொண்ணு பாசிப்பருப்புப்போட்டு. து.பருப்புப் போட்டுப் பண்ணும் ரசத்துக்கு அரைச்சு விட்டுட்டு எலுமிச்சம்பழம் பிழியறாங்க. எனக்கென்னமோ அது பிடிக்கலை. ஆகவே இப்போச் சொல்லும் செய்முறையிலேயே செய்துடுவேன்.


தக்காளி நான்கு

பச்சை மிளகாய் 2

ரசப் பொடி ஒரு டீ ஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

மிளகுத் தூள் அரை டீஸ்பூன்

ஜீரகத் தூள்(வறுத்துப் பொடித்தது)  அரை டீஸ்பூன்

கருகப்பிலை, கொத்துமல்லி

உப்பு தேவைக்கு

பாசிப்பருப்பு வேக வைத்துக் குழைந்தது ஒரு சின்ன குழிக்கரண்டி. (ரொம்பப் பருப்பைப் போட்டால் ரசம் திக்காக ஆகிவிடும்.)

தாளிக்க

நெய், கடுகு

எலுமிச்சம்பழம் ஒன்று 

தக்காளியைக் கழுவிட்டு அதன் கண் என்று சொல்லப்படும் மேல் பாகத்தை நீக்கிவிட்டு வெந்நீரில் ஊற வைக்கவும்.  அரை மணி நேரத்துக்குப்பின்னர் தோலை உரித்துச் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். வடிகட்டணும்னு அவசியம் ஏதும் இல்லை.  அந்தச் சாறு ஒரு கிண்ணம் இருந்தால் அரைக்கிண்ணம் நீர் சேர்த்துக் கொண்டு, ரசப் பொடி, உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.  பொடி வாசனை போகக் கொதித்ததும் வேக வைத்த பாசிப்பருப்பில் தேவையான நீரைச் சேர்த்துக் கொண்டு விளாவவும்.  பொங்கி நுரைத்து வருகையில் மிளகுத் தூள், ஜீரகத் தூள் சேர்க்கவும்.  கீழே இறக்கிக் கொண்டு நெய்யில் கடுகு தாளிக்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, எலுமிச்சம்பழத்தை நறுக்கி விதைகளை நீக்கிவிட்டுச் சாறை ரசத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.  சூடான சுவையான எலுமிச்சை ரசம் தயார்.

துவரம்பருப்பு என்றால் பாசிப்பருப்பு மாதிரிக் குழைய வேக வைத்துக் கொண்டு முன் சொன்னது போலவே சேர்க்கவும்.

Saturday, January 18, 2014

டும், டும் மேளம் "கொ"ட்டும் ரசம்!

ஹிஹிஹி, "கொ"ட்டு ரசம்னால் நான் என்ன அது டும் டும்னு மேளமா கொட்டுதுனு கிண்டல் பண்ணுவேன்.  "Ghottu" என்றே பலரும் உச்சரிக்கையில் எங்க வீட்டில் என் அம்மாவோ அதை "good" ரசம் என்பார்.  ஆனால் இதை வைக்கையில் எரிச்சலாக வரும். அதாவது அந்தக் கால கட்டத்தில்!  இதைப் பொதுவாக மூன்று முறைகளில் வைக்கலாம்.

முதல் முறை:  நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்.

ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்குப் புளி(ஶ்ரீராம் குறைச்சுட்டோமுல்ல)

உப்பு,

பெருங்காயம்

ரசப்பொடி இரண்டு டீஸ்பூன் அல்லது ஒன்றரை டீஸ்பூன்

தக்காளி சின்னது ஒண்ணு இல்லைனா பாதி

கருகப்பிலை, கொத்துமல்லி

தாளிக்க

எண்ணெய்

கடுகு

இந்த ரசத்துக்குப் புளியை அப்படியே உருட்டியும் போடலாம்.  புளியைக் கரைச்சுக்கவும் கரைச்சுக்கலாம். உங்க செளகரியப் படி போட்டுட்டு, உப்பு, பெருங்காயம், தக்காளி,ரசப் பொடி, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டு நல்லாக் கொதிக்க வைங்க.  பொடி வாசனை, புளி வாசனை போகக் கொதித்ததும், தேவையான அளவுக்கு நீர் விட்டு விளாவவும்.  எண்ணெயில் கடுகு தாளிக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லித் திரும்பச் சேர்க்க வேண்டாம். கொதிக்கையில் சேர்த்தால் இந்த ரசத்தில் அதன் வாசம் மூக்கைத் துளைக்கும்.

இன்னொரு முறை மேற்கண்ட சாமான்களோடு ஒரு ஸ்பூன் துவரம்பருப்பை அப்படியே போட்டு ரசத்தைக் கொதிக்க வைப்பது. பெரும்பாலும் அந்தப் பருப்பு வீணாகித் தான் போகும் என்பதால் அரைத்தும் விடுவது உண்டு.

அதற்கு ஒரு ஸ்பூன் பருப்பையும் ஒரு ஸ்பூன் தனியாவையும் ஊற வைக்கவும்.  ஊறியதும் அம்மியில் (ஹிஹிஹி, இத்தனூண்டை மிக்சியில் அரைக்கிறது கஷ்டம்!) அரைத்து நீர் சேர்த்து ரசத்தில் விளாவலாம்.  பருப்பை மட்டுமே அரைத்து விடுபவர்களும் உண்டு.   நான் என்ன செய்வேன் என்றால் பருப்பு உசிலி பண்ணுகையில் கடைசியில் மிக்சி ஜாரை அலம்புகையில் அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு அரைத்த மாவை மிச்சம் வைத்துக் கொண்டு அதில் நீர் விட்டுக் கரைத்து ரசத்தில் ஊற்றிவிடுவேன்.  ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்போமே!

{இன்னும் சிலர் ரசம் வைக்கும்போது ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் து.பருப்பை எண்ணெயில் வறுத்து ரசத்தில் சேர்ப்பார்கள்.  எல்லா முறைகளையும் முயன்று பாருங்கள். :)}

Tuesday, January 14, 2014

சங்கராந்தி ஸ்பெஷல் அரைச்சு விட்ட ரசம்

இந்த அரைச்சு விட்ட ரசத்தை மைசூர் ரசம்னு சொல்பவர்கள் உண்டு.  ஆனால் மைசூர் ரசம் செய்முறை வேறேனு நினைக்கிறேன்.  அரைச்சு விட்ட ரசத்துக்கும் பொடி போடுவதும் உண்டு.  ஆனால் சங்கராந்தி அன்னிக்கு வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொடிகளைச் சேர்த்துச் சமைப்பது வழக்கம் இல்லை.  ஆகவே புதுசா வறுத்து அரைத்துவிட்டுத் தான் ரசம் வைப்பாங்க.  சில வீடுகளில் எல்லாக் காய்களும் போட்டு வறுத்து அரைத்த பொடி போட்டுக் குழம்பு.  எங்க வீட்டில் தனிக்கூட்டு என்பதால் மோர்க்குழம்பு.   அதைப் பின்னர் பார்ப்போம்.  இப்போ வறுத்து அரைத்த ரசம் எப்படினு பார்க்கலாமா? இந்த ரசம் கொஞ்சம் கெட்டியாகவும் வைக்கலாம், நீர்க்கவும் வைக்கலாம்.  இப்போ கெட்டியா வைக்கும் முறை குறித்து.


நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

தக்காளி (தேவையானால்)

வறுத்து அரைக்க

மி.வத்தல் மூன்று

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு இரண்டு டீ ஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன்

வெந்தயம் கால் டீஸ்பூன்

ஜீரகம் அரை டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்)

தேங்காய்த் துருவல் மூன்று டீஸ்பூன்

வறுக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

குழைய வேக வைத்த து.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு சின்ன குழிக்கரண்டி

தாளிக்க

நெய் 

கடுகு

ஒரு சின்ன மி.வத்தல்

கருகப்பிலை

கொத்துமல்லி

புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் தக்காளி தேவை எனில் அதையும் போட்டுப் பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  ஒரு வாணலியில்  எண்ணெயை ஊற்றி வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை நன்கு சிவக்க வறுக்கவும்.  ஜீரகத்தை வறுக்க வேண்டாம்.  வறுத்ததை ஆறியதும் ஜீரகத்தைப் பச்சையாகச் சேர்த்து ரொம்ப நைசாக இல்லாமல் அதே சமயம் ரொம்பக் கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும்.  ரசம் புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்ததைச் சேர்த்துக் கொஞ்சம் கொதிக்க விடவும்.  கொதிக்கையிலேயே வெந்த துவரம்பருப்பில் நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு ரசத்தைத் தேவையான அளவுக்கு விளாவிக் கொள்ளவும். மேலே பொங்கி வருகையில் ஒரே கொதியில் அடுப்பை அணைக்கவும்.  நெய்யில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் தாளித்து ரசத்தில் சேர்த்துப் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.


இதே ரசம் பொடி சேர்த்துச் செய்கையில் புளி ஜலத்துடன் தக்காளி கட்டாயம் சேர்த்து ஒரு டீஸ்பூன் ரசப்பொடி அல்லது இரண்டுக்கும் ஒரே பொடி எனில் பொடியைச் சேர்க்கவும்.  பொடி வாசனை, புளி வாசனை போகக் கொதித்ததும் வறுத்து அரைத்ததைச் சேர்க்கவேண்டும்.  அதில் சின்ன மாற்றம்

மி.வத்தல் இரண்டு

கொத்துமல்லி விதை மூன்று டீஸ்பூன்

கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன்

வெந்தயம் கால் டீஸ்பூன் 

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு(வறுக்கவில்லை எனில் புளி ஜலத்தில் போட்டுக் கொதிக்க விடலாம்)

மஞ்சள் தூள்

தேங்காய்த் துருவல் இரண்டு டீஸ்பூன் 

இவற்றை வறுத்து அரைத்துக் கொண்டு புளி வாசனை, பொடி வாசனை போகக் கொதித்ததும் வறுத்து அரைத்ததைச் சேர்க்கவும்.  பின்னர் வெந்த துவரம் பருப்பை நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு பருப்பு ஜலம் மட்டும் விட்டு விளாவவும்.  ரசம் நீர்க்க பருப்பு வாசனையோடு வரும்.  இறக்குகையில் நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் கொத்துமல்லி சேர்க்கவும்.

"150 ஆவது பதிவு"


Saturday, January 11, 2014

வாழ்க்கையில் ரசம் இல்லையா? இந்த ரசத்தைச் செய்து சாப்பிடுங்க!

ஒரு சில ரச வகைகளை இப்போது பார்க்கலாம்.  என்னடா முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் வருதேனு நினைக்கிறவங்களுக்கு, இன்னிக்கு இதைக் கேட்டிருக்காங்க.  :)))))

முதலில் மிளகு, ஜீரகம் உடைத்த ரசம்:

நான்கு பேர்களுக்குத் தேவையான பொருட்கள்

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு

உப்பு தேவைக்கு

மி.வத்தல் இரண்டு

மஞ்சள் பொடி,

பெருங்காயம்

தக்காளி(தேவையானால்) சின்னது ஒண்ணு அல்லது பாதி

கருகப்பிலை, கொ.மல்லி

மிளகு ஒரு டீஸ்பூன்

ஜீரகம் ஒரு டீஸ்பூன்

தாளிக்க நெய்

கடுகு

முதலில் புளியை நன்கு ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளவும். தனியே வைக்கவும். புளிக்கரைசலில்  உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக்  கொண்டு கொதிக்க வைக்கவும். ஒரு மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிச் சேர்க்கவும்.  தக்காளியையும் விரும்பினால் சேர்க்கவும்.  நன்கு கொதித்ததும் தேவையான அளவுக்கு நீரை விட்டு விளாவவும். பொங்கி வரும்போது அடுப்பை அணைக்கவும்.

இன்னொரு அடுப்பில் வாணலி அல்லது இரும்புக்கரண்டியை வைத்து நெய்யை ஊற்றவும்.  கடுகைப்போடவும்.  கடுகு வெடித்ததும் மிச்சம் இருக்கும் மி.வத்தல், கருகப்பிலை சேர்க்கவும்.   பொடித்து வைத்த மிளகு, சீரகக் கலவையை ரசத்தின் மேலே போட்டு அதன் மேலே தாளிதத்தைச் சூடாக இருக்கையிலேயே ஊற்றவும்.  கொத்துமல்லி தூவவும்.  சூடான நெய் விட்ட சாதத்தில் ரசத்தை ஊற்றிச் சாப்பிடவும்.  அப்படியே குடிக்கவும் நன்றாக இருக்கும்.

அடுத்து சீரக ரசம்.  அரைத்துவிட்டுச் செய்யும் முறை

நான்கு பேர்களுக்கு முன் சொன்னபடி

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு

உப்பு

மஞ்சள் பொடி

இதுக்குப் பெருங்காயம் வேண்டாம்.

தாளிக்க

நெய்

கடுகு,
மி.வத்தல்
கருகப்பிலை

மி.வத்தல் ஒன்று, ஒரு டீஸ்பூன் மிளகு, இரண்டு டீஸ்பூன் ஜீரகம் ஊற வைக்கவும்.  அதை ஒரு பிடி கருகப்பிலையோடு சேர்த்து நன்கு அரைக்கவும்.  தனியே வைக்கவும்.

புளியை நன்கு கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.  நன்கு புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த கலவையைக் கொஞ்சம் நீர் சேர்த்து ரசத்தில் விடவும்.  ரசம் தேவையான அளவுக்கு வரவில்லை எனில் இன்னும் கொஞ்சம் நீர் சேர்த்து விளாவவும்.  மேலே நுரைத்து வரும்போது அந்த நுரையை எடுத்துவிடவும். பின்னர் நெய்யில் கடுகு,மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.  ஜுரம் வந்த வாய்க்கு, அல்லது வயிற்றுக்கோளாறுக்கு மிக்க நன்மை பயக்கும் ரசம் இது.  இதையும் குடிக்கலாம்.  புழுங்கல் அரிசியில் கஞ்சி வைத்து இந்த ரசத்தை ஊற்றிக் குடிக்கலாம்.

Wednesday, January 8, 2014

4--- தோசையம்மா தோசை, கோதுமை தோசை!

இப்போ அரிசி, பருப்பு ஊற வைச்சு அரைச்சுச் செய்யும் கோதுமை தோசை.  எங்க அம்மா வீட்டிலே இது ரொம்பவே ஸ்பெஷல்.  முன்னெல்லாம் கோதுமை அல்லது கோதுமை ரவையையும் சேர்த்து ஊற வைச்சு அரைப்பாங்க.  இதிலேயே வெல்லத் தோசையும் உண்டு.  இதெல்லாம் எங்க வீட்டிலேயும் நான் என் குழந்தைகளுக்குச் செய்து கொடுத்திருக்கேன்.  ரங்க்ஸுக்கு சர்க்கரை இருப்பது தெரியும் வரையும் அடிக்கடி வெல்ல தோசை செய்து சாப்பிட்டிருக்கோம்.  இப்போல்லாம் வெல்ல தோசையே செய்யறதில்லை. :))

முதலில் கோதுமையில் கார தோசை செய்யத் தேவையான பொருட்கள்:

அரிசி இரண்டு கிண்ணம்

துவரம்பருப்பு ஒரு கிண்ணம்

உளுந்து ஒரு கைப்பிடி

கோதுமை மாவு போடுவதெனில் அரைத்த பின்னர் சேர்த்துக் கலக்கலாம். அதற்கு இரண்டு கிண்ணம் கோதுமை மாவு.  தோசை முறுகலாக வரவேண்டுமெனில் கோதுமை மாவைக் குறைத்துக் கொள்ளலாம். கலக்கையில் நமக்கே பதம் புரியும்.  அல்லது கோதுமையோ கோதுமை ரவையோ போட்டால் அரிசியோடு சேர்த்து ஊற வைக்கவும். புதுசாய்ச் செய்பவர்கள் கோதுமை மாவே போட்டால் தான் தோசை வார்க்கவே வரும்.

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

மி.வத்தல்  நான்கு அல்லது ஐந்து

உப்பு, பெருங்காயம்

தோசை வார்க்க எண்ணெய்


அரிசி, பருப்பு, கோதுமை போட்டால் கோதுமை அல்லது ரவையை நன்கு களைந்து இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  ஊறிய பின்னர் மிக்சியில் அல்லது கிரைண்டரில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.  நன்கு அரைத்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு உடனே தோசை வார்க்கலாம்.  தோசை வார்க்கும் முன்னர் மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்துக்கலக்கவும்.  கோதுமை போடாமல் மாவைப் போட்டால் அரைத்து எடுக்கும் முன்னர் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அரைக்கும் கலவையில் சேர்க்கவும்.  அல்லது அரிசி, பருப்புக் கலவையை வெளியே எடுத்த பின்னர் கோதுமை மாவைப் போட்டுக் கட்டியில்லாமல் கலக்கவும்.  மாவு போட்டால் ஒரு அரை மணி நேரம் வைத்திருந்து விட்டு தோசை வார்க்கலாம்.

அடுத்து வெல்ல தோசை.

இதுக்குத் துவரம்பருப்பைப் போட்டால் விறைப்பாக் வரும்.  ஆகையால் கடலைப்பருப்புப் போடவும்.

இரண்டு கிண்ணம் அரிசி,

ஒரு கிண்ணம் கடலைப்பருப்பு

ஒரு கைப்பிடி உளுந்து

வெல்லம் தூள் செய்தது  அரைக்கிண்ணம்

தேங்காய்த் துருவல்  இரண்டு டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன்

தோசை வார்க்க நெய்யும், எண்ணெயுமாகக் கலந்து தேவை.

கோதுமை மாவு ஒன்றரைக் கிண்ணம்

அரிசி, பருப்பு வகைகளைக் களைந்து கொண்டு இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  பின்னர் மிக்சி ஜாரில் அல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.  உப்புச் சேர்க்க வேண்டாம்.  மாவு நன்கு அரைபட்டதும் வெல்லத்தூளையும், தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.  இயன்றால் கோதுமை மாவையும் அப்போதே சேர்க்கவும்.  இல்லை எனில் அரைத்த மாவை வெளியே எடுத்ததும் கோதுமை மாவைச் சேர்த்துக் கலக்கி அரை மணி நேரம் வைக்கவும்.

பின்னர் தோசைக்கல்லில் நெய்யும், எண்ணெயுமாகக் கலந்த கலவையைத் தடவிவிட்டு தோசைகளாக ஊற்றவும். சூடாகப்  பரிமாறவும், நீங்களும் சூடாகச் சாப்பிடவும்.