எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, February 5, 2019

ஊறுகாய்ப் பருவம் வந்தாச்சா?

மஞ்சளில் ஒரு ஊறுகாய் 1 மாங்காய் இஞ்சி 2
இந்தச் சுட்டிகளில் முந்தைய செய்முறைகளைப் பார்க்கலாம். அவ்வப்போது சேர்க்கும் பொருட்களுக்கு ஏற்பக் கொஞ்சம் மாறலாம்.
ஏற்கெனவே இரு முறை இந்த ஊறுகாய் செய்முறை பார்த்தாச்சு. இந்த முறையும் பண்ணினேன். அதில் படங்கள் அதிகம் எடுத்தேன். கூடியவரை எடுத்த படங்களைச் சேர்க்கிறேன். ஊறுகாய் செய்முறை:

பச்சை மஞ்சள், பொங்கலுக்கு வாங்கியதிலே இருப்பதே போதும்.

இஞ்சி 50 கிராம். அதுவே ஜாஸ்தி. ரொம்பக் காரம் வேண்டாம்

பச்சை மிளகாய் குட்டையான நாட்டு மிளகாய் எனில் ஓர் 5 ரூக்குக் கொடுப்பது போதும். நீளமான மிளகாய் எனில் 5 அல்லது 6 எண்ணிக்கைகள். மூன்றாக வகிரலாம்.

மாங்காய் இங்கே கிடைக்கிறது. நான் ஒரு கால் மாங்காய் தான் எடுத்துக் கொண்டேன்.

எலுமிச்சை நல்ல சாறு உள்ள பழமாக ஐந்து அல்லது ஆறு. மூன்று பழங்களின் சாறைப் பிழிந்து கொள்ளவும். அதிலே ஊற வைக்க வசதியாக இருக்கும். மற்றப்பழங்களை நறுக்கி அப்படியே சேர்க்கலாம். சாறு பிழிந்த பழங்களின் தோலையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

பச்சைப்பட்டாணி ஒரு கைப்பிடி. இந்த வருஷம் மலிவாக் கிடைச்சதால் ஒரு கிலோ வாங்கி உரிச்சு ஃப்ரீசரில் வைச்சிருக்கேன். அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்.

வேர்க்கடலை பச்சையாக ஒரு கைப்பிடி. இவை தேவைனா போடலாம். அதே போல் காரட்டும் தேவை எனில் சேர்க்கலாம். காரட் என்னிடம் இருக்கு என்றாலும் நான் சேர்க்கவில்லை. மாங்காய் இஞ்சி கிடைத்தால் அது ஓர் ஐம்பது கிராம். நான் இம்முறை வாங்கவில்லை.

எலுமிச்சை, அதிலேயே கொஞ்சம் மாங்காய்த் துண்டுகளும் இருக்கு.  பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் நறுக்கியவை.

பெருங்காயப்பொடி, மிளகாய்ப்பொடி, வறுத்த ஜீரகப்பொடி, பின்னால் கடுகு, வெந்தயப்பொடி




கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இருக்கேன். ஊறுகாயைப் பச்சையாகவே போடலாம் என்றாலும் இம்முறை பச்சைமிளகாய், மஞ்சள், இஞ்சி போன்றவற்றை மட்டும் வதக்கிக்கலாம் என எண்ணெய் வைச்சிருக்கேன். மற்றவற்றைப் பச்சையாகச் சேர்க்கலாம். 


பச்சை மிளகாய் வதங்குகிறது.


மஞ்சள் வதங்குகிறது


இஞ்சி வதங்குகிறது.


எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி இருக்கேன். வேர்க்கடலை படம் எடுக்க மறந்து போச்சு. ஆகையால் அதைக் கலக்கும் முன்னர் படம் எடுத்திருக்கேன். மேலே கடுகு,வெந்தயப்பொடியும், மஞ்சள் பொடியும் உப்பு, சர்க்கரையும் சேர்த்திருக்கேன்.  பச்சைப்பட்டாணியும் சேர்த்தேன்.





மாங்காய்த் துண்டங்கள் இதிலே தெரிகின்றன. மிளகாய்ப் பொடி தேவையான அளவுக்குச் சேர்க்கணும். சர்க்கரை இரண்டு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் இந்த அளவுக்குச் சேர்க்கலாம். ஜீரகம் வறுத்த பொடியும் சேர்க்கலாம்.


எல்லாவற்றையும் போட்டுக் கலந்திருக்கேன்.


மேலே பச்சை நல்லெண்ணெய் ஊற்றினேன். கடுகு எண்ணெய் வட மாநிலங்களில் விடுவார்கள். இதை ஒரு வாரம் வரை வெளியே வைத்திருந்து கிளறிவிட்டுப் பின்னர் கட்டாயமாய் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தணும். அல்லது வினிகர் விட்டால் வெளியே வைக்கலாம். வினிகர் ருசி எங்களுக்குப் பிடிப்பதில்லை. ஆகையால் விடுவதில்லை. White cooking Vinegar என்று கேட்டு வாங்கவும். எங்க பெண் வீட்டில் வினிகர் சேர்ப்பார்கள். சீக்கிரம் செலவு செய்து விடுவேன். ஆகையால் தேவைப்படும்போது  வினிகர் சேர்க்காமலேயே கொஞ்சமாகப் போட்டுக்கலாம். 


உணவே மருந்து! சாமை மற்றும் மற்ற சிறுதானியங்கள்.

சிறுதானிய வகையில் இதற்கும் முக்கியத்துவம் உண்டு. இதையும் தொடர்ந்து சமைத்து உண்டால் சர்க்கரை நோய் நீங்கும். அதிகமான நா வறட்சிக்கும் இது அருமருந்து.  இரும்புச்சத்து அதிகம் உள்ளவற்றில் சாமையும் ஒன்று. ரத்த சோகை வராமல் தடுப்பதோடு உடல் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த உணவாக இருப்பதால் இளம்பெண்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒன்று.  நெல் அரிசியைக் காட்டிலும் ஏழுமடங்கு நார்ச்சத்து இதில் இருப்பதால் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும்.  மலச்சிக்கலைப் போக்கி தாதுக்களை அதிகரித்து உயிரணுக்களை எண்ணிக்கையில் உயர்த்தும் தன்மை கொண்டது சாமை!

இந்தப் பயிர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையும்.  சாமையைப் பயிரிட்டால் முளைத்து வர ஒரு வாரம் ஆகும். சாமைப் பயிருக்குப் பூச்சி நோய்த் தாக்குதல் இருக்காது. இதன் மாவு மூலம் ரொட்டி, கேக், பிஸ்கட் போன்றவையும் தயாரிக்கின்றனர்.  சாதாரண நெல்லரிசி மூலம் நாம் தயாரிக்கும் எல்லாவித உணவு வகைகளையும் சாமை மூலமும் தயாரிக்கலாம். பொதுவாக எல்லா சிறுதானிய உணவுகளுக்கும் பொதுவான ஒரு குணம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது.மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுப்பது! இதில் எல்லாவற்றையும் கலந்து போட்டுச் செய்த குழி அப்பம் ஒன்றின் செய்முறையைக் கீழே கொடுக்கிறேன்.



வரகில் சாதம், பொங்கல், சோள ரவையில்   கிச்சடி, சாமையில் பொங்கல், குதிரைவாலியில் பொங்கல், சாதம், கம்பில் அடை, வரகுப் புழுங்கல் அரிசியில் இட்லி, தோசை என்றெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. தினை ஒண்ணு தான் பாக்கி இருந்தது. ஆகவே நேற்று இரவு தினை+குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நனைத்து இன்று காலை குழி ஆப்பம் செய்தேன். அதான் மேலே படம். குழி ஆப்பம் நன்றாக வந்தது. எடுத்தது படம் எடுக்கிறதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு  வரவே பேசிட்டு வந்து மறந்து போச்சு! தொட்டுக்கத் தக்காளித் தொக்கு. என்ன சிவப்பா இருக்கேனு பார்க்காதீங்க. நல்லாப் பழுத்த சிவந்த நிறமுள்ள நாட்டுத் தக்காளிகள் எல்லாம். அதான்! இப்போத் தினையில் குழி அப்பம் பண்ணத் தேவையான பொருட்கள்.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

தினை அரிசி அரைக்கிண்ணம் ஆனால் எனக்கு ஒரு வேளைக்குப் போதும் என்பதால் ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

அதே போல் குதிரைவாலி அரிசியும் அரைக்கிண்ணம் என்பதற்கு ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம் நான் கால் கிண்ணம் போட்டேன்.

ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி பச்சரிசி, இல்லைனா செய்யும் போது அரைக்கரண்டி பச்சரிசி மாவைக் கலந்துக்கலாம். நான் சேர்த்தே நனைத்து விட்டேன்.

நேற்றிரவே எல்லாவற்றையும் களைந்து ஊறப்போட்டுவிட்டேன். காலையில் இவற்றோடு மிவத்தல் நாலு அல்லது ஐந்து (அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல்) நான் நாலு தான் போட்டேன்.

உப்பு தேவைக்கு ஏற்ப, பெருங்காயம் இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன். இரும்புக்கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு சேர்த்துக் கருகப்பிலை கிள்ளிப் போட்டு ஒரு சின்னப் பச்சைமிளகாய நீள வாக்கில் வகிர்ந்து உள்ளே உள்ள விதைகளை நினைவாய் எடுத்துட்டு அதை நறுக்கிச் சேர்த்தேன். இஞ்சி ஒரு துண்டு. எல்லாவற்றையும் எண்ணெயில் போட்டு வதக்கி மாவில் சேர்த்தேன். தேங்காய் இருந்தால் பல்லுப்பல்லாகக் கீறிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயத்தையும் வதக்கிச் சேர்க்கலாம். இப்போ வெங்காயம் சேர்க்க முடியாது என்பதால் சேர்க்கவில்லை. தேங்காயும் போடவில்லை.

மாவு ரெடி. என்னோட அப்பக்காரை எங்கேயோ பெட்டியில் மாட்டிக் கொண்டு பல மாதங்களாகின்றது. அதை எடுக்கவே இல்லை. ஆகவே ஒரு இரும்புக்கரண்டியில் குத்தலாம்னு நினைச்சேன். ஆனால் மாவு ஊற்றியதும் மேலே உப்பிக் கொண்டு வரும் என்பதால் இரும்புக்கரண்டி போல இருக்கும் நான் ஸ்டிக் கரண்டி ஒன்றில் எண்ணெயைக் காய வைத்து ஊற்றினேன் நினைத்தாற்போலவே நன்கு உப்பிக் கொண்டு வந்தது. அதைத் திருப்பிப் போட உபயோகிக்கும் இரும்புக் குச்சியும் அம்பத்தூரிலிருந்து வரும்போது எங்கே தவறி விட்டது. ஆகையால் ஒரு ஸ்பூன் முனையால் திருப்பிப் போட்டேன். திருப்பிப் போட்டு உள்ளே ஸ்பூன் முனையாலேயே குத்தி விட வேண்டும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.  இது மேலே நன்றாகச் சிவந்து பொன்னிறமாக முறுமுறுவென்றும் உள்ளே கடற்பஞ்சு (sponge) போலவும் இருந்தது.