எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, October 28, 2012

தக்காளி சமையல்கள் பகுதி 3

தக்காளி தோசை:  ஹிஹி, இது நம்மளோட சொந்தக் கண்டு பிடிப்பு.  வித்தியாசமா முயன்று பார்த்து எல்லாரையும் பரிசோதனைக் கூட எலிகளாக நினைப்பது நமக்கு வழக்கம்.  ஆகவே பல வருடங்கள் முன்னாடி,  கணினி எல்லாம் வரதுக்கும் முன்னாலே  புராண காலத்திலே ஒரு சமயம் ராஜஸ்தானிலே இருந்தப்போ கிலோ ஒரு ரூபாய்னு சில பல கிலோ தக்காளிகளை ரங்க்ஸ் வாங்கிட்டு வந்துட்டார்.  பெண்ணுக்கு ஜூஸ் போட்டுக் கொடுனு உபசாரம் வேறே.  சாதாரணமாக் குடிக்கிற பொண்ணு அத்தனை தக்காளிகளை ஒருசேரப் பார்த்த அதிர்ச்சியில் ஜூஸே வேணாம்னு ஓட ஆரம்பிச்சா.  வாங்கிட்டு வந்த தக்காளியை என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சேன்.  தக்காளி சாதம் பண்ணலாம்.(அப்போல்லாம் ரங்க்ஸுக்குப் பிடிக்காது.)  இப்போப் பண்ணச் சொல்றார். :P :P கேட்டால் நான் மாத்திட்டேனாம் அவரை.  அநியாயமா இல்லை?  சரி, சரி, இந்தக் கதையைத் தனியா ஒரு நாள் வைச்சுப்போம்.  இப்போ தோசைக்குப் போவோமா?

கால்கிலோ பச்சரிசி, இரண்டு டேபிள் ஸ்பூன் துபருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து.  களைந்து கல்லரித்துச் சேர்த்து நனைத்து ஊற வைக்கவும்.

கால் கிலோ தக்காளி, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், வெங்காயம் பெரியது பொடியாக நறுக்கியது ஒன்று. கருகப்பிலை, கொத்துமல்லி. பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், ஜீரகம் ஒரு டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. பெருங்காயம் தேவையானால் கொஞ்சம் போல்.

ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகளைப் பச்சைமிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம் சேர்த்து உப்புப் போட்டு அரைக்கவும்.  கெட்டியாக இருக்கட்டும்.  கொஞ்சம் கொர கொரவென அரைபட்டதும் தக்காளியைச் சேர்த்து அரைக்கவும். தக்காளி நன்கு அரைபட வேண்டுமெனில் முதலிலேயே போட்டுக்கொள்ளவும்.  பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொஞ்சம் அரைத்துக் கொண்டு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து ஒரே சுற்று சுற்றிவிட்டு எடுத்துவிடவும்.  பின்னர் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துத் தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்துத் தேங்காய், கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்த சட்டினியோடு பரிமாறவும்.

7 comments:

  1. படிக்கும்போதே செய்து பார்க்கும் ஆவல் வருகிறது. பாஸ் கிட்ட சொல்லி, சீக்கிரமே முயற்சி செய்து பார்க்கச் சொல்கிறேன்!

    ReplyDelete
  2. செய்ங்க, இதுக்குக் காப்புரிமை உண்டாக்கும். :)))))

    ReplyDelete
  3. அடை மாதிரி இருக்குமோ? செய்து பார்க்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. தக்காளி தோசை எங்க அம்மா வேற மாதிரி பண்ணுவாங்க. எனக்கு ரெசிபி தெரியாது. நான் இந்த முறைல பண்ணி பாக்கறேன். ரெசிபி படிக்கும்போதே நல்லா இருக்கு. தக்காளி ரொம்ப பிடிக்கறதால அதுல என்ன பண்ணினாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    நீங்க தக்காளி சாதம் எப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க. எங்க அம்மா தனியா, கடலை பருப்பு, மிளகாய்வத்தல், பெருங்காயம் எல்லாம் வறுத்து பொடி பண்ணி வெச்சுடுவா. எப்ப எல்லாம் தக்காளி சாதம் பண்ணணுமோ அப்ப கடுகு தாளிச்சு, தக்காளியை நன்னா வதக்கிட்டு, சாதத்தை நன்னா ஆற வெச்சு, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பிசிறி, இந்த பொடியை போட்டு கலந்துட்டு அப்பறமா வதக்கி வெச்ச தக்காளியையும், உப்பையும் சேத்து கலந்துடுவா. எனக்கு பாதி நாள் ஆபீசுக்கு லஞ்ச் இதுதான். ரொம்ப நன்னா இருக்கும். இங்க நானும் என் பசங்களுக்கு அடிக்கடி இதைதான் பண்ணி கொடுப்பேன். இவாளுக்கும் ரொம்ப பிடிக்கும். உங்களோட ரெசிபி எப்படி இருக்கும்னு பாக்கணும்.

    உங்களுக்கு ஒரு தொகையல் ரெசிபி. ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சா பண்ணி பாருங்க. உளுத்தம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் எண்ணெய்ல வறுத்து எடுத்துண்டு, நாலு தக்காளியை எண்ணெய் விட்டு நன்னா வதக்கி ஆற வைக்கணும். அப்பறம் மிக்ஸ்சீல அலம்பி சுத்தம் பண்ணின பச்சை கொத்தமல்லி, கொஞ்சமா தேங்காய், வதக்கின தக்காளி, மிளகாய் வத்தல், பெருங்காயம் எல்லாத்தையும் உப்பு சேத்து அரைச்சு மசிஞ்ச உடனே, உளுத்தம் பருப்பை போட்டு ஒரு சுத்து சுத்தி எடுக்கலாம். இந்த தொகையல் ரொம்ப நன்னா இருக்கும். எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம். சாதத்தோட பிசைஞ்சு சாப்பிட ரொம்ப நன்னா இருக்கும். இது நான் எப்ப பண்ணினாலும் பண்ணின நாளே காகா உஷ்னு பசங்க காலி பண்ணிடுவாங்க. :)

    ReplyDelete
  5. வாங்க அப்பாதுரை, அடை மாதிரித் தான். ஆனால் அடை இல்லை. :)))) தக்காளி ஜூஸ் அதிகம் இருக்கும் தக்காளின்னா கொஞ்சம் பார்த்துப் போட வேண்டும். அதைச் சொல்ல மறந்துட்டேன்.

    ReplyDelete
  6. வாங்க மீனாக்ஷி, நீங்க சொன்னாப்போல் வறுத்த பொடியைப் போட்டுத்தக்காளியையும் போட்டு வதக்கிக் கொண்டு சப்பாத்திக்கு அமாவாசை போன்ற விரத நாட்களில், மற்றும் பயணங்களுக்கு எடுத்துச் செல்வது உண்டு. :))) சாதம் இம்முறையில் அதிகம் பண்ணினதில்லை. மாமியாருக்கும் சேர்த்துத் தயாரித்தால் அப்போச் செய்யறது உண்டு. என்றாலும் எங்க வீட்டில் இம்முறையிலான தக்காளி சாதத்துக்கு ஓட்டு விழாது. :)))))

    மற்றபடி நீங்க சொல்லி இருக்கும் துகையல்/சட்னி அநேகமா தினம் தோசைக்குச் செய்யறேன். சில சமயம் தேங்காய் போடுவதில்லை. உளுத்தம்பருப்பும் ஆப்ஷனல் தான். :)))))

    ReplyDelete