எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, June 9, 2013

சான்ட்விச் வேணுமா? வாங்க வாங்க.

இன்னிக்குக் காலம்பர காலை ஆஹாரம் ப்ரவுன் ப்ரெடில் சான்ட்விச். ப்ரெடில் வெண்ணெய் தடவி ஃபில்லிங்குக்கு ரெடியாக.




தக்காளியை ஜீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, உப்பு, மி.பொடி, தனியாப் பொடி சேர்த்து வதக்கினேன். வெங்காயம் வேண்டுமானால் போட்டுக்கலாம். வெறும் தனியாப் பொடி மட்டும் கூடப்போட்டுக்கலாம்.  அவரவர் விருப்பம். உ.கி. வேக வைத்து மசித்துக் கொண்டு ப.மி. கருகப்பிலை, கொ.மல்லி, உப்பு, மி.பொடி சேர்த்துக் கொண்டு அதையும் ஃபில்லிங் செய்யலாம்.  இன்னும் பட்டாணியைக் குழைய வேக வைத்து மசித்து வைக்கலாம்.  இன்னும் நிறைய இருக்கு அவரவர் கற்பனைக்கு ஏற்ப. 



ஃபில்லிங் முடிந்த ப்ரெட்கள் சான்ட்விச் டோஸ்டரில் வைச்சாச்சு.  வைச்சு மூடி இரண்டு நிமிடத்தில் உங்கள் சான்ட்விச் ரெடி!



சான்ட்விச் ரெடியாகி விட்டது. சாதாரணமாக இது ஒருத்தர் சாப்பிடலாம் ஃபில்லிங்கைப் பொறுத்து. 


இதையே இப்படிப் பாதியாக இருப்பதில் ஒரு பாதியை எடுத்து கடலைமாவு பஜ்ஜி மாவாக உப்பு, மி.பொடி போட்டுக் கரைத்துக் கொண்டு அதில் முக்கி எண்ணெயில் பொரித்தால் ஸ்டார் ஹோட்டல் ப்ரெட் பக்கோடா ரெடி. ஆனால் அது இன்னும் ஹெவியாக இருக்கும். 








Wednesday, June 5, 2013

டிங்கடிங்க டிங்க டிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் பரோட்டா ரெடீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நேத்திக்கு ரஞ்சனி மைதா பரோட்டா பத்தின எச்சரிக்கை போட்டிருந்தாங்க.  இணையத்திலே சில ஆண்டுகளாக இது உலவி வருது.  ஆனால் உண்மையா பரோட்டாவே சாப்பிடக் கூடாதா?  தாராளமாய்ச் சாப்பிடலாம். கோதுமை மாவில் செய்திருந்தால்.  இன்னிக்குக்காலம்பர வெளியே போயிட்டு வர நேரம் ஆகும் என்பதால் வழக்கமான இட்லி, தோசை வேண்டாம், வேறே ஹெவியாக்காலை ஆகாரம் கொடுனு ரங்க்ஸ் கேட்க, சட்டுனு உ.கி. எடுத்துக் குக்கரில் வேகப் போட்டுட்டு, கோதுமை மாவைக் கொஞ்சம் போல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்தேன்.



வெங்காயம் இல்லை.  அதனால் என்ன?  மத்தது இருந்தது.  தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி போன்றவை இருந்தன. கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்துக் கொண்டு இஞ்சி ப,மி, கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கித் தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கிக் கொண்டு, வெந்த உருளைக்கிழங்கில் அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கலந்து உதிர்த்தாப்போல் வதக்கிய தக்காளியில் கொட்டிக் கலந்து தேவையான உப்புச் சேர்த்தேன்.  இறக்கும் முன்னர் லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் வறுத்துப் பொடித்த தூள் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்த்தேன்.

இப்போப் பரோட்டா.

இதான் பிசைந்த மாவு.  ஹிஹிஹி,கொஞ்சமா இருக்கேனு பார்க்கிறீங்களா?  மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அப்புறமாக் கடைசிப் பரோட்டா பண்ணறச்சே நினைப்பு வந்தது.  மாவை எடுத்துக் கொண்டு உருட்டி அதில் வெண்ணெய் தடவி மடித்துப் போட வேண்டும்.  மீண்டும் வெண்ணெய், மடித்துப் போடணும்.  இம்மாதிரி நான்கைந்து முறையாவது வெண்ணெய் தடவி மடித்துப் போட்டால் நன்கு உள்ளே லேயர் லேயராக வரும்.  வெண்ணெய் தடவிக் கீழே பார்க்கலாம்.

இது வெண்ணெய்னு சொல்லித் தெரியவேண்டாம். :))))))

வெண்ணெய் தடவி இரண்டு மூன்று முறை மடித்துப் போட்டாச்சு.  மடித்ததைக் கடைசியில் இப்படிக் கீழே காண்கிறாப்போல் சுருட்டணும்.


சுருட்டினதை நீள வாட்டத்திலே எடுத்து அப்படியே மடிக்கணும்.  கீழே பாருங்க.

இந்த மாதிரி உள்ளுக்குள்ளே மடிப்புக்களோடு சுருட்டணும்.  சுருட்டியதை அப்படியே மீண்டும் குழவியால் சமன் செய்து இடணும். 

இட்டதை காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில், (நான் சப்பாத்திக்குத் தனிக்கல், தோசைக்குத் தனிக்கல் என வைத்திருக்கேன்.) கொஞ்சம் போய் அடியில் நெய் தடவிப் பரத்திவிட்டுப் போடணும்.  உடனடியாக வேக எண்ணெயோ அல்லது நெய்யோ(நெய்யே நல்லா இருக்கும், முடியாதவங்க நெய்யோடு கடலை எண்ணெய் கலந்துக்கலாம்.) விடக் கூடாது.  ஒரு பக்கம் வெந்து இம்மாதிரி உப்பி வரும்.  அப்போ மறுபக்கம் திருப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து நெய் ஊற்றினால், நன்கு உப்ப ஆரம்பிக்கும்.


உங்கள் பரோட்டா வெந்து கொண்டிருக்கிறது.  விரைவில் ரெடியாயிடும்.  சாப்பிட வாங்க. 


அப்பாடா, சமைக்கும்போதே படம் எடுத்து ஒரு வழியாப் போட்ட்டுட்டேன்.  இப்படித் தான் முறுக்குச் சுத்தும்போதும் எடுக்க நினைச்சு மறந்து போச்ச்ச்ச்ச்ச்!  கிருஷ்ண ஜயந்திக்குச் சுத்தறச்சே படம் எடுத்துப் போட்டேன்.  ஆனால் இங்கே போடலைனு நினைக்கிறேன். :))))

Tuesday, June 4, 2013

ஜீரா போளி சாப்பிட வாங்க!

வல்லி பதிவிலே ஸ்ரீராம் ஜீரா போளி சாப்பிட்டதில்லைனு சொல்லி இருக்கார். எங்க வீட்டிலே(புகுந்த வீடு)  இது சர்வ சாதாரணமாப்பண்ணிட்டே இருப்போம்/ இருந்தோம்.  இப்போத் தான் நோ ஸ்வீட் ஆச்சே! :( இருந்தாலும் இந்த ஜீரா போளி பண்ணற அன்னிக்குத் தான் படம் எடுக்க முடியும்.  எப்போப்பண்ணுவேன்னு தெரியலை.  அதனாலே ஓசியிலே படம் வாங்கிப் போட்டிருக்கேன்.


இது கலர் போட்டிருக்கு.  கலர் போடாமலும் பண்ணலாம்.  தேவையான பொருட்களை முதல்லே சொல்லறேன்.  


தேவையான பொருட்கள்:-

பொடி ரவை, பேணி ரவைனு சொல்லுவாங்க அது கால் கிலோ (இந்த அளவில் சுமாராக பதினைந்து போளி வரை பண்ணலாம்.)  மைதா ஒரு சின்னக் கிண்ணம்.  அரிசி மாவு ஐம்பது கிராம், அதைக் குழைக்க நெய் அல்லது வெண்ணெய் ஐம்பது கிராமிலிருந்து நூறு கிராமுக்குள்ளாக.  உப்பு சிறிதளவு.  மாவு பிசைய கால் டீஸ்பூனும் அரிசிமாவில் போட்டுக் குழைக்க ஒரு சிட்டிகையும் தேவைப்படும்.  மாவு பிசைய நீர் தேவையான அளவு அல்லது அரைக்கிண்ணம் பாலும் மீதிக்கு நீருமாக.  பால் சேர்த்தால் போளியை அதிக நாட்கள் வைக்காமல் உடனடியாகச் செலவு செய்து விட வேண்டும்.  பொரிக்க நெய் அல்லது சமையல் எண்ணெய்

பாகு வைக்க சர்க்கரை முக்கால் கிலோ.  எசென்ஸ் வாசனை பிடித்தால் ரோஸ் எசென்ஸ், கலர் வேண்டுமெனில் பிடித்த கலர் ஒரு சிட்டிகை, ஏலக்காய்த் தூள்.  மேலே தூவ தேங்காய்ப் பூ, முந்திரி, பாதாம், பொடியாகச் சீவியது.(விருப்பமிருந்தால்)

முதலில் மாவு பிசைந்து ஊற வைச்சுடணும்.  பொடி ரவை என்பதால் சீக்கிரமே ஊறும்.  ரவையை வறுத்து மிக்சியிலோ மிஷினிலோ கொடுத்து மாவாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.  மாவாக ஆக்கிய ரவைக்கு மைதா மாவு தேவையில்லை.  அப்படியே உப்புச் சேர்த்து நீர் விட்டுப் பிசையலாம். மாவாக ஆக்காத ரவை எனில் ரவை,மைதா, உப்பை ஒன்றாகக் கலந்து கொண்டு பின்னர் நீரை விட்டுப் பிசையவும்.  பொடி ரவை எனில் உடனடியாகச் சேர்ந்தாற்போல் வரும்.  இல்லாவிட்டால் ரவை சேராமல் உதிராக வரும்.  அப்போது இன்னும் கொஞ்சம் நீர் விட்டு நன்கு அழுத்திப் பிசையவும்.  ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

மாவு நன்கு ஊறியதும் நன்கு சேர்ந்து காணப்படும்.  மீண்டும் அழுத்திப் பிசைந்து கொள்ளவும்.  நிதானமான உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  அரிசிமாவில் வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து நன்கு ஒரு விரலால் குழைக்கவும்.  நுரை வரும்படி குழைத்து வைக்கவும்.  இப்போது அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப்போட்டு நீர் ஊற்றிப் பாகு வைக்கவும்.  பாகு இரட்டைக் கம்பிப் பதம் வர வேண்டும்.  அப்போது நிறுத்தவும்.  அடுப்பிலேயே பாகு இருக்கட்டும்.  இப்போது அடுப்பின் இன்னொரு பக்கம் வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைக்க வேண்டும். புகை வர ஆரம்பித்ததும் அடுப்பைத் தணிக்கவும்.  உருட்டி வைத்த உருண்டைகளில் ஒன்றைச் சப்பாத்தி போல் இட்டு மேலே அரிசிமாவுக் கலவையை  விரலால் எடுத்து நன்கு பரத்தவும்.  அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை இட்டுப் போடவும்.  மேலே போட்டதன் மேலேயும் அரிசிமாவுக் கலவையைப் பரத்தவும்.  அப்படியே சுருட்டவும்.  சுருட்டிய பாகம் நீளமாக இருக்கும்.  அதை அப்படியே மேலும் கீழுமாக வைத்து  அழுத்தி விட்டுஅப்பளம் இடவும்.

இதையும் நன்கு மடித்து முக்கோணமாக அல்லது வட்டமாக வேண்டுமெனில் வட்டமாகப் பூரியாக இடவும்.  காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.  குத்தி விடவும். நன்கு உப்பி வரும். திருப்பி விட்டு  நன்கு வெந்ததும் அப்படியே பக்கத்தில் உள்ள ஜீராவில் போட்டு நனைக்கவும்.  நனைத்ததும் உடனே வெளியே எடுத்து ஒரு அகலமான தட்டில் போடவும்.  இப்படியே எல்லாவற்றையும் செய்து எண்ணெயில் பொரித்து ஜீராவில் போட்டு எடுத்து வைக்கவும்.  இதுக்கு எங்க வீட்டில் கலர் சேர்ப்பது இல்லை.  வெள்ளையாகவே இருக்கும். வேண்டுமானால் பாலை நன்கு சுண்டக் காய்ச்சி ஏலப்பொடி சேர்த்து  அதன் மேல் சூடாக ஊற்றி ஊற வைத்துப் பால் போளி மாதிரியும் சாப்பிடலாம்.  ஜீராவில் போளிகள் நன்கு முங்க வேண்டும். இரு பக்கமும் ஜீரா உள்ளே போகும்படியாக திருப்பிப் போட்டுப் பின்னரே எடுக்கணும்.

Saturday, June 1, 2013

உண்மையா குலாப் ஜாமூன்னா என்னங்க?

எழுதலாமா வேண்டாமானு ஒரே யோசனை!  பின்னே? படம் போடலைனு சொல்வீங்களே!  இங்கே கிடைக்கிறதோ அந்த ரெடி மிக்ஸ் பவுடர் தான்.  அதிலே செய்து அதைப் படம் போட்டு அது பப்படமாத் தான் இருக்கும்.  குலாப் ஜாமூன்னா ஒரிஜினாலிடி வேண்டாமா?  அதோட ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிஞ்சதிலே இருந்து வீட்டிலே நோ ஸ்வீட்! ஆகவே இது பண்ணும்போது தான் படம் எடுக்கணும்.

இந்தப் பொருட்கள் வேணும்.  தயார் செய்துக்குங்க.  சர்க்கரை போடாத கோவா    அரை கிலோ, ஹிஹிஹி, நிறையனு தோணித்துன்னா கால் கிலோ போதும். மைதா மாவு ஒரு சின்னக் கிண்ணம், அரைக் கிலோ சர்க்கரை கால்கிலோ கோவாவுக்குச் சரியா இருக்கும்.  ரோஸ் எசென்ஸ் ஒரு துளி, ஏலக்காய்ப்  பொடி கால் டீஸ்பூன். பாகு வைக்க ஒரு கரண்டி நீர்.  பொரிக்க நல்ல நெய் இருந்தால் நல்லது.  இல்லைனா சமையல் எண்ணெய் ஏதானும்.

கோவாவை நன்கு கைகளால் பிசைந்து கொண்டு அதில் மைதாமாவைச் சேர்க்கவும்.  மீண்டும் நன்கு பிசையவும்.  கோவாவில் உள்ள இளகிய தன்மையே போதும்.  நன்கு பிசைந்து மேலே வெடிப்புக்கள் இல்லாமல் உருண்டை ஒரு பந்து போன்ற பதத்துக்கு வந்ததும், அதைத் தேவையான அளவு உருண்டைகளாக உருட்டவும்.  கால் கிலோ கோவாவுக்கு நிதானமாக ஐம்பது உருண்டைகள் வரை வரலாம்.  இப்போது அடுப்பில் ஒரு பக்கம் அடி கனமான பாத்திரம் அல்லது உருளியில், சர்க்கரையைப் போட்டு ஒரு கரண்டி நீரை விடவும்.  பாகு காய்ச்ச வேண்டும்.  சர்க்கரை கரைய ஆரம்பித்ததும், அரைக்கரண்டி பாலை விட்டுச் சர்க்கரையில் உள்ள அழுக்கை எல்லாம் எடுத்துவிட வேண்டும்.  நிஜம்மாவே கறுப்பாக நுரைத்துக் கொண்டு மேலே வரும்.  அதை எல்லாம் எடுத்துடுங்க.

இப்போ அடுப்பின் இன்னொரு பக்கத்தில் வாணலியைப் போட்டுச் சமையல் எண்ணெயைக் காய வைக்கவும்.  எண்ணெய் அல்லது நெய் புகைய ஆரம்பித்ததும் அடுப்பைத் தணிக்கவும். (இது முக்கியம்.  இல்லைனா காலா ஜாமூனாக ஆரம்பத்திலே ஆயிடும்) உருட்டி வைத்த உருண்டைகளை நாலைந்தாக எண்ணெயில் போடவும்.  நன்கு திருப்பிக் கொடுக்கவும்.  இதற்குள்ளாகச் சர்க்கரை ஒற்றைக் கம்பிப் பாகு வந்திருக்கும்.  அதைக் கிளறிப் பார்த்துக் கையில் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வரும்.  பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.  பாகைக் கீழே இறக்கிவிட்டு ரோஸ் எசென்ஸ், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி வைக்கவும்.

எண்ணெயில் போட்ட ஜாமூன் உருண்டைகள் சிவந்து கொண்டு மெல்லிய பிரவுன் நிறத்துக்கு வரும்.  அப்போது அவற்றை எடுத்துப் பாகில் போட்டுக் கரண்டியால் திருப்பி விடவும். உருண்டைகள் உடையாமல் திருப்ப வேண்டும். இது போல எல்லா ஜாமூன் உருண்டைகளையும் நன்கு வேக வைத்துப் பாகில் போடவும்.  பாகில் நன்கு ஊறக் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்.  எல்லா உருண்டைகளும் பாகை இழுத்துக் கொண்டிருக்கும்.  பாத்திரத்தில் பாகே இருக்காது.  இப்போது எடுத்து ஒரு பேசினில் பரவலாக வைக்கவும்.  நம்ம ஊரில் தான் குலாப் ஜாமூனைப் பாகோடு சாப்பிடுவது எல்லாம்.  இங்கே இருந்த வரை அப்படித்தான் சாப்பிடணும்னு நினைச்சிட்டிருந்தேனா! முதல் முதலா 74-ஆம் வருஷம் ராஜஸ்தான் குடித்தனம் போனப்போ அங்கே சாப்பிட்டதும் தான் தெரிஞ்சது பாகில் ஊறினால் போதும்னு!  உருண்டைகள் கையிலும் ஒட்டாது. பிசுக் பிசுக்குனு எல்லாம் இருக்காது.  அடுத்து ஸ்டஃப்ட் குலாப்ஜாமூனும், உருளைக்கிழங்கு ஜாமூனும் வரும் நாட்களில் பார்க்கலாம்.