எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, August 2, 2019

பாரம்பரியச் சமையலில் கூட்டுக் குழம்பும், மொளகூட்டலும்!

இப்போது கூட்டுக் குழம்பு என எங்க வீட்டில் செய்யும் குழம்பு முறையைப் பார்ப்போம். இதற்கு வாழைக்காய், வாழைப்பூ, கொத்தவரை, அவரை, கத்திரிக்காய் போன்ற காய்களே நன்றாக இருக்கும். ஒரு சிலர் வாழைத்தண்டிலும் செய்கின்றனர். அவரவர் விருப்பம் போல் பண்ணலாம்.

நான்கு பேர்களுக்குத் தேவையான பொருட்கள்

ஏதேனும் ஒரு காய் கால் கிலோவுக்குக் குறையாமல் நன்கு கழுவித் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. நீர்க்கக் கரைக்கவும். ஒன்றரைக் கிண்ணம் புளி ஜலம் போதும்.

உப்பு தேவைக்கு.

காய் வதக்க ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய்!

மஞ்சள் பொடி விரும்பினால் அரை டீஸ்பூன்.

சாம்பார் பொடி அல்லது குழம்புப் பொடி அல்லது ரசப்பொடி இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

அரைக்க தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க உளுத்தம்பருப்பு மட்டும் இரண்டு டீஸ்பூன்.

பொடி போடவில்லை எனில் இதோடு 2 அல்லது 3 மிளகாய் வற்றலையும் சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளலாம். பொடி போட்டால் தனி ருசி. மிவத்தல் வறுத்து அரைப்பது தனி ருசி. மாற்றி மாற்றியும் பண்ணிப் பார்க்கலாம். மேற்சொன்ன பொருட்களை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு ஒரு சின்னக்கரண்டி நன்கு குழைய வேக வைத்தது

தாளிக்க தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காய்ம் முன்னாடி சேர்க்கலைனால் தாளிதத்தில் சேர்க்கலாம். கொத்துமல்லி பொடியாக நறுக்கியது விரும்பினால்

கடாய் அல்லது உருளி அல்லது கல்சட்டியை அலம்பி அடுப்பில் போட்டுக் கொண்டு ஒரு முட்டை நல்லெண்ணெய் விடவும். தேவையான காய்களை அலம்பி நறுக்கி அதில் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் காய் வேகும் அளவுக்கு மட்டும் ஜலம் சேர்த்து மஞ்சள் பொடி போடவும். காய் வெந்ததும் புளி ஜலத்தை விடவும். பெருங்காயம் இப்போது சேர்க்கலாம். சாம்பார்ப் பொடி அல்லது ரசப்பொடி அல்லது குழம்புப் பொடியும் இப்போது சேர்க்கலாம். தேவையான உப்பையும் சேர்க்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் வெந்த பருப்போடு அரைத்த விழுதையும் கொட்டிக் கிளறி விட்டு ஒரு கொதி விடவும். பின்னர் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிவத்தல், கருகப்பிலை தாளித்துக் கொட்டவும். குழம்புக் கருவடாம் இருந்தால் அதையும் தாளிதத்தோடு சேர்க்கலாம். இதிலேயே காய் நிறைய இருப்பதால் பலரும் இதைப் பண்ணினால் தொட்டுக்க வேறே காய் பண்ண மாட்டாங்க. விரும்பினால் பண்ணிக் கொள்ளலாம். பெரும்பாலும் அப்பளம் தான் பொரிப்பார்கள். அதோடு வடாமும் பொரித்துக் கொள்ளலாம்.

அடுத்து நாம் பார்க்கப் போவது மொளகூட்டல், கேரளா, பாலக்காடு சிறப்புத் தயாரிப்பு. பலரும் நம் தமிழ்நாட்டில் மொளகூட்டல் என்றால் அதில் கட்டாயமாய் மிளகு இடம் பெற வேண்டும் என்றே நினைக்கின்றனர். இல்லை. சொல்லப் போனால் இது காரமே இல்லாமல் (bland) மென்மையான சுவையுடன் கூடியது. அதன் செய்முறையைப் பார்ப்போம்.

இதுக்குப் புடலை, அவரை, கீரை, கீரைத்தண்டு, பூஷணிக்காய், பறங்கிக்காய் ஆகிய காய்களே அருமையாக இருக்கும். இப்போல்லாம் முட்டைக்கோஸில், சௌசௌவில் போன்றவற்றிலெல்லாம் பண்ணுகின்றனர். ஆனால் எங்க வீட்டில் இன்னும் மாற்றவில்லை. நாம் தான் லேசில் மாற மாட்டோமே! பிடிச்சா ஒரே பிடி! :)

மேலே சொன்ன காய்களில் ஏதேனும் ஒன்று கால் கிலோ,

கீரை எனில் ஒரு கட்டுக் கீரை (இப்போல்லாம் கீரைக் கட்டுப் பெரிதாக இருப்பதால் ஒரு கட்டுனு சொன்னேன். 4 பேருக்கு தாராளமா வரும். சின்னக் கட்டு என்றால் இரண்டு கட்டு)

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

உப்பு தேவையான அளவு

பாசிப்பருப்பு( தேவையானால்) ஒரு சின்னக் கரண்டி குழைய வேக வைத்தது.

அரைக்க

மிளகாய் வற்றல், 2

தேங்காய் ஒரு சின்ன மூடி முழுவதும் துருவிக் கொள்ளவும். தேங்காயின் மணம் தான் இதில் முக்கியம்.

சீரகம் இரண்டு டீஸ்பூன்

தாளிக்க

தே.எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

கடுகு, ஒரு டீஸ்பூன் உ.பருப்பு ஒரு டீஸ்பூன், மி.வத்தல் சின்னதாக ஒன்று, கருகப்பிலை.  சீரகம் சேர்ப்பதால் பெருங்காயம் கூடாது.

கீரை எனில் கல்சட்டியில் வேகப்போடவும். அல்லது அடி கனமான ஏதேனும் ஒரு பாத்திரத்தில் பொட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் கீரையை உப்புச் சேர்த்து மசிக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு மைய அரைத்து வெந்த கீரையில் சேர்த்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வந்து விடும். பாசிப்பருப்புக் கீரைக்கு நான் சேர்ப்பதில்லை. இதுவே சப்பாத்திக்கு சைட் டிஷாகப் பண்ணினால் பாசிப்பருப்பும், ஒரு உ.கி.யும் சேர்ப்பது உண்டு. ஆனால் மொளகூட்டல் பண்ணும்போது சேர்ப்பதில்லை.

பின்னர் தே.எண்ணெயில் தாளிக்கவேண்டும்.

காய்கள் எனில்

காய்களை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு (சீக்கிரம் வேகும், நிறம் மாறாது.) நீர்  விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் உப்பு (கட்டாயம்), பாசிப்பருப்பு (தேவையானால்) சேர்க்கவும்.   நான் பாசிப்பருப்புச் சேர்ப்பேன். பின்னர் மி.வத்தல், தேங்காய், சீரகம் அரைத்த விழுதைப் போட்டுக் கொதிக்க விடவும், அதுவே சேர்ந்து விடும். அப்படிச் சேர்ந்து கொள்ளவில்லை எனில் கொஞ்சம் போல் அரிசி மாவு கரைத்து விடலாம். பொதுவாக சமையலில் இந்த மாவு கரைப்பதும், அதைச் சேர்ப்பதும் எனக்குப் பிடிக்காத ஒன்று. சாம்பாரில் மாவு வாசனை வரும்னு தோணும். அதே போல் மொளகூட்டலிலும் மாவு வாசனை வரும்னு தோணுது. ஆகையால் போடுவதில்லை. அதுவே சேர்ந்து கொள்கிறது. பின்னர் தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும். சாம்பாரை விட வற்றல் குழம்போடு நன்றாக இருக்கும். பொதுவாக நான் சமையலில் சாம்பார் பண்ணவில்லை எனில் வற்றல் குழம்பு அல்லது பருப்புப் போடாத வெறும் குழம்பு பண்ணும்போதே இம்மாதிரிப் பருப்புப் போட்ட கூட்டு வகைகள் செய்வது வழக்கம். ஏதேனும் ஒன்றில் பருப்பு இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்வேன்.  நீங்கள் உங்கள் வழக்கப்படி செய்து கொள்ளுங்கள்.

அவரைக்காயில் செய்தால் அந்த மணமே தனி! :)  இதையே ஜீரகம் சேர்க்காமல் உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய் வற்றலைத் தே எண்ணெயில் வறுத்துக் கொண்டு தேங்காயைப் பச்சையாக வைத்து அரைத்தும் பண்ணுவார்கள். இதையும் மொளகூட்டல் எனச் சொல்லுவதுண்டு.  என் புக்ககத்தில் இதான் பொரிச்ச குழம்பு என்பார்கள். 

29 comments:

  1. Replies
    1. நன்றி திருமதி டிடி.

      Delete
  2. நன்றிங்க அம்மா... முந்தைய கருத்துரை எனது துணைவி சொன்னது... பலரின் வலைப்பதிவுகளை எனது துணைவியாருக்கு அனுப்பி விடுவேன்...

    "நீயே கருத்துரை சொல்" என சற்று முன் சொன்னேன்... அதற்குள் இது போல்...!

    தற்போதைய நிலவரம் :- "காய்கள் எனில்" என்று நீங்கள் கொடுத்த குறிப்புகளை எழுதி, அவர்களின் அம்மாவின் மருமகளுக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டுள்ளார்கள்...!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி, தவறாமல் உங்கள் மனைவியுடன் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும்.

      Delete
  3. நாங்க தேங்காய் சீரகம் அரைத்த கூட்டு என்பதை நீங்க மொளகூட்டு என்கிறீர்கள். மிளகு இல்லாமல் மிளகூட்டா?

    ReplyDelete
    Replies
    1. மிளகு வைத்துச் செய்வதை மொளகூட்டல் என்றே கேரளா, பாலக்காடுக்காரங்க சொல்ல மாட்டாங்க நெல்லை. அது மிளகூட்டலும் இல்லை. மொளகூட்டல் அல்லது மிளகுஷ்யம் என்பார்கள்.

      Delete
    2. நெல்லை கேரளத்தில் மிளகாயை மொளகு என்றுதான் சொல்வார்கள்...

      கீதா

      Delete
    3. மிளகு சேர்ப்பது மிளகுஷ்யம்...கீதாக்கா சொல்லிருப்பது போல்

      கீதா

      Delete
  4. உங்க புத்தகங்களையெல்லாம் திருமணமானபிறகு எடுத்துச் செல்ல முடியலை என்பதால் செய்முறையெல்லாம் மறந்துவிட்டதா (அம்மா சொல்லி எழுதிவைத்தவை). அப்புறமாவது அந்த பூட்டிய அலமாரியிலிருந்து உங்க புத்தகங்களை எடுத்துச் சென்றீர்களா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. தெரியும் பொன்னியின் செல்வன், உவெசாவின் மஞ்சரிலாம் குறிப்பிட்டிருந்தீர்களே. நான் எழுதினது படித்துவிட்டேன் என்று காட்டிக்கொள்ள ஹா ஹா.

      ஆனாலும் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். எப்போ அம்பத்தூரிலிருந்து மீண்டும் வடநாட்டுப் பயணம், என்பதையெல்லாம் டைரிக் குறிப்பு போல எழுதியிருக்கலாம். அதாவது ரொம்ப பெர்சனல் விஷயமாக இல்லாமல், காலம் எப்படி மெதுவாக மாறியது என்பதைப் புரிந்துகொள்ளும்படி.

      காவிரி ஆற்றை மாடுகளைக் கடக்கச் சொல்லி, வண்டியைத் தள்ளி, மற்றவர்கள் மூங்கில் பாலத்தில் நடந்து....அப்புறம் எப்படி பொதுவாக வாழ்க்கை முறைகள்லாம் மாறியது என்று.

      அப்போதிருந்த பாலம் இப்போது எப்படி இருக்கு, அன்றைய அம்பத்தூர் என்றெல்லாம் படங்களோடு கூடிய நூலாக இருந்திருந்தால் இன்னும் ரசனையாக இருந்திருக்கும்.

      Delete
    2. அம்பத்தூரில் குடித்தனம் வைத்ததும் உடன் நடந்த அடுத்த நிகழ்வு நான் வேலையில் சேர்ந்தது. அதை எல்லாம் பதிவுகளாக எழுத ஆரம்பித்த புதுசில் போட்டிருக்கேன். மவுன்ட்ரோடு அலுவலகத்தில் இருந்து தண்டையார்ப்பேட்டை அலுவலகம் செல்ல வழி தெரியாமல் தவித்தது உட்பட! அதன் பின்னர் 3 வருஷம் கழிச்சே வடக்கே போனோம். எல்லாவற்றையும் ஓரளவுக்கு எழுதிட்டேன். ஆனால் குழந்தை உண்டானது, வளைகாப்பு, ஶ்ரீமந்தம் போன்றவை எழுதவில்லை. ஒரு சில பிரச்னைகள், மனக்கசப்புகள் அப்போது. அவை நீடித்தவை! என்னையும் மறந்து அவற்றைக் குறிப்பிட்டுவிட்டால் என்ன செய்வது என்பதால் சந்தோஷத்துடனேயே முடித்து விட்டேன்.

      Delete
    3. அந்த அரிசிலாற்றுப் பாலத்தில் அதன் பின்னர் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் சாமான்களையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு நடக்கப் பழகிவிட்டேன். அதன் பின்னர் சுமார் எட்டு ஆண்டுகள் கருவிலிப் பக்கம் போனாலும் கூந்தலூர் வழியாய் வராமல் வடமட்டம், பரவாக்கரை வழியாகவே போய்வந்து மாரியம்மன் கோயில் பிரார்த்தனைகளை எல்லாம் செய்து கொண்டோம். ஆனால் அடிக்கடி அல்ல இப்போது மாதிரி! 2,3 வருடங்களுக்கு ஒரு முறை தான்! அதெல்லாம் தனி அனுபவங்கள்.

      Delete
    4. சொல்லப் போனால் அம்மாவிடம் நான் எந்த சமையல் குறிப்பையும் கேட்டுக் கொண்டு செய்ததில்லை. நான் சமைக்கையில் அம்மா செய்வதைப் பார்த்து அதே மாதிரிச் செய்திருக்கேன். ஏனெனில் அம்மா சமைக்கையில் அரைப்பது, காய் நறுக்குவது எனப் பண்ணிய உதவிகளால். தக்காளித் துவையல் அப்போதே அம்மா தோசைக்கு அரைத்துத் தொட்டுக்கக் கொடுப்பா. அதே போல் காரட் அல்வா, பாம்பே சட்னி எனப்படும் கடலைமாவு, தக்காளி, வெங்காயம் போட்ட கூட்டு எனச் சப்பாத்தி, பூரிக்குப் பண்ணித் தருவா! உருளைக்கிழங்கு, சின்னவெங்காயம் போட்டு சோம்பு மட்டுமே தாளித்து மசாலா வாசனையோடு பூரி, சப்பாத்திக்குப் பண்ணுவா. சப்பாத்தியும் என் அம்மா பண்ணுகிறாப்போல் இத்தனை வருடங்கள் ஆகியும் எனக்கு வரலை! :))) அவ்வளவு மிருதுவாக இருக்கும்.

      Delete
    5. //என்னையும் மறந்து அவற்றைக் குறிப்பிட்டுவிட்டால் என்ன செய்வது// - ஹா ஹா ஹா. என் மனைவி சில சமயம், 'நீங்க அப்போ இதைச் செய்தீங்க... இன்ன சொன்னீங்க' என்றெல்லாம் சொல்லுவா. நான் 'அப்படியா... இருக்காதே' என்று சொல்லிடுவேன். நிலம், செடி... இரண்டும் இயைந்து மரமா கிளைகளுடன் வளர நாள் எடுத்துக்கும் இல்லையா? அப்புறம் ஒரு சமயத்தில், இதுதான் நிலம், இதுதான் நம் சந்ததிக்குரிய மண் என்று மனது இருவருக்கும் செட்டிலாகி, அப்புறம் 'இவர் இதையெல்லாம் நமக்குச் செய்திருக்கிறார்', 'இவள் நம்முடன் இத்தனைகாலம் பயணித்திருக்கிறாள்' என்ற உணர்வே இருவருக்கும் ஒரு புரிதலையும், 'சரி சரி... வாழ்க்கை ஓடுது' என்ற உணர்வைக் கொண்டுவந்துவிடுகிறது.

      Delete
    6. தவறான கோணத்தில் சிந்திக்கிறீங்க! எங்களுக்குள் அபிப்பிராய பேதம் உண்டு தான்.ஆனால் பெரிய அளவில் இல்லை. இது முற்றிலும் வேறு! நீங்க நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. :)))) சாப்பாடு விஷயம், காய்கறி வாங்குவது, வீட்டிற்குச் சாமான்கள் வாங்குவதுனு அவர் வாங்கித் தள்ளுவதில் தான் இரண்டு பேருக்கும் வாக்குவாதமே வரும்! பெரிய விஷயங்களில் ஒரே மாதிரி கருத்து!

      Delete
    7. ஐ லவ் கீதாக்கா மாமா! முதல் முறை பார்த்தப்பவே நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் விழா என்பதால் அதிகம் பேச முடியவில்லை. அன்று வீட்டில் பார்த்தது இரண்டாவது முறை. மாமா சூப்பர் மாமா!!

      கீதா

      Delete
    8. ஹாஹா, ஏதேனும் புது விளம்பரம் வந்துட்டாப் போதும், உடனே அதை வாங்கணும். இப்போ லேட்டஸ்டா இன்வெர்டர் மிக்சி, வாங்கணும்னு துடிச்சுட்டு இருக்கார். நான் தான் அடக்கி (ஹிஹி) வைச்சிருக்கேன். பல வருஷங்களாக அந்த மல்டி பர்பஸ் டேபிள் தொலைக்காட்சி விளம்பரத்திலே காட்டுவது வாங்கணும்னு! அதையும் குறுக்கே விழுந்து தடுத்து வைச்சிருக்கேன். :))))))

      Delete
  5. என்னோட புத்தகங்கள் என்றதும் சமையல் புத்தகங்கள் என்று தான் அர்த்தம் கொள்ளணுமா? :))) அப்போதெல்லாம் இம்மாதிரி எழுதி எல்லாம் வைத்துக் கொண்டதில்லை. எந்தச் சமையல் புத்தகங்களையும் படித்த்தும் இல்லை. எல்லாம் கல்யாணம் ஆகிப் போய் சுமார் 20 வருடங்கள் கழித்தே! மங்கையர் மலரில் முதல் முதலாகச் சமையல் குறிப்புக்கள் படிக்க ஆரம்பித்துப் பின்னர் தொடர்ந்து வந்து விட்டது. அதனால் தான் அம்மா சமையல் இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது.

    ReplyDelete
  6. என்னிடம் அப்போது இருந்தவை திருவிளையாடல் புராணம், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பாரதியார் கவிதை, கட்டுரை, கதைத் தொகுதிகளுக்கான மூன்று புத்தகங்கள். திருக்குறள், உ.வேசாவின் நினைவு மஞ்சரி, என் கதை, கணையாழி தொகுப்புக்கள், குமுதத்தில் அப்போது முதல்முறையாக வந்த உடல், பொருள், ஆனந்தி போன்ற சில புத்தகங்கள். சுமார் 20அல்லது 30 புத்தகங்களுக்குள் இருக்கும். கலைமகள், மஞ்சரி, எழுத்தாளர் ஆர்வியை ஆசிரியராகக் கொண்டு கலைமகள் பதிப்பகம் மூலம் அப்போது வந்த "கண்ணன்" புத்தகங்கள் ஆகியவற்றின் தொகுப்பு

    ReplyDelete
  7. மிக அபூர்வமாக இவை செய்வதுண்டு. பெரும்பாலும் தினசரி சாம்பார்தான். வாரத்தில் இருநாள் வெந்தயக்குழம்பு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், எங்க மாமியார் வீட்டிலும் சாம்பார் பண்ணாத நாளெல்லாம் வெறும் நாளே! நான் தான் மாற்றி மாற்றிச் செய்வேன். சாம்பார் என்பது செவ்வாய், வெள்ளியில் மட்டும். அல்லது இட்லி செய்யும் அன்று என வைத்திருக்கேன். தினசரி சாம்பார் எல்லாம் இருக்காது. துவையல், மோர்க்குழம்பு, கலந்த சாதம், பொரிச்ச குழம்பு, வற்றல் குழம்பு, தக்காளி போட்டு தால் என மாற்றி மாற்றி வரும்.

      Delete
    2. ஸ்ரீராம் நானும் கீதாக்கா போல மாற்றி மாற்றிதான் செய்வேன். அதுவும் கீதாக்கா சொல்லிருப்பது போலான லிஸ்ட் தான்...

      கீதா

      Delete
    3. அதே, அதே, சபாபதே!

      Delete
  8. ஆமாம் அக்கா மொளகூட்டல் என்றால் மிளகு என்று நினைத்துவிடுகிறார்கள்...

    கூட்டுக் குழம்பு நோட் செய்து கொண்டேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பலரும் மிளகு போட்டுச் செய்வதே மொளகூட்டல் எனச் சொல்கின்றனர். அதே போல் அவியல் செய்தால் அதுக்கு ஜீரகம் அரைத்து விட்டு மாவு கரைத்து விட்டு என்றெல்லாம் செய்கின்றனர். அந்த மாதிரி அவியலைச் சாப்பிடவே பிடிக்கிறதில்லை. மோர்க்கூட்டு என்றாலும் ஜீரகம் வைக்காமல் செய்வதில்லை பலரும். எல்லாவற்றிலும் ஜீரகம் இப்போதெல்லாம் சேர்க்கின்றனர் சாம்பார் உட்பட! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  9. மொளகூட்டல், மிளகுஷ்யம் வித்தியாசம் தெரிந்து கொண்டேன். :)

    சிறு வயதில் மீனாக்ஷி அம்மாள் சமைத்துப் பார் புத்தகம் பார்த்து சமைத்தது உண்டு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், எனக்கு மீனாக்ஷி அம்மாள் புத்தகம் பற்றிக் கல்யாணம் ஆகிக் குழந்தைகள் பிறந்தப்புறமாத் தான் தெரியும்! :))))) குமுதத்தில் அவங்க சமையல் குறிப்புக்களை எடுத்து ஒரு முறை சிறப்பு வெளியீடாகப் போட்டிருந்தாங்க! அப்போத் தான் தெரிந்து கொண்டேன்.

      Delete
  10. அன்பு கீதா மா, இரண்டு நாட்களில் கனடா பக்கம் பயணம்.
    துணிமணிகளை இஸ்திரி போட்டு அடுக்குவதுல நேரம் போய்விட்டது.
    அதற்குள் கதையை வேற முடிக்கணும்.
    கூட்டுக் குழம்பு எளிதாக இருக்கிறது. காய்கறி வாசனையும் சேர்ந்தால் பிரமாதமாக
    இருக்கும்.

    மிளகூட்டல் மணம் இன்னும் நாசியில். கோவையில் அவரைப் பிஞ்சு
    நன்றாகக் கிடைக்கும். மார்கழி முழுவதும் இந்தக் கூட்டுதான்.

    நல்ல நினைவுகளைக் கொண்டு வந்தீர்கள் நன்றி கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, உங்களுக்கும் இவை எல்லாம் தெரிந்திருக்கும். அந்தக் காலத்து சமையலாச்சே! கனடா பயணம் நல்லபடியாகச் சென்று வரப் பிரார்த்தனைகள். போயிட்டு வந்து அது பற்றி எழுதுங்க! படங்கள் எடுப்பது குறித்துச் சொல்லவே வேண்டாம். நீங்க போட்டியில் எல்லாம் கலந்து கொண்டிருக்கீங்க!

      Delete