எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, August 8, 2019

பாரம்பரியச்சமையல்களில் சில சிறப்பு உணவு வகைகள்! எரிசேரி!

இதை ஏற்கெனவே பதிவாகப் போட்டிருக்கேன் இதே வலைப்பக்கத்திலே! எரிசேரியைச் சிலர் கூட்டு மாதிரி மி.வத்தல், மிளகு, ஜீரகம் வறுத்துக் கொண்டு தேங்காயோடு சேர்த்து அரைத்துச் செய்து விடுகிறார்கள். ஆனால் அது பாரம்பரிய முறைப்படி அல்ல. சேனைக்கிழங்கிலும், வாழைக்காயிலும் பண்ணினால் நன்றாக இருக்கும் என்றாலும் கன்யாகுமரி, கேரளம் ஆகிய இடங்களில் அநேகமாக எல்லாக் காய்களிலும் பண்ணுவார்கள் எனக் கேள்விப் படுகிறேன். இதைப் பற்றி நம்ம சாரல் தான் சொல்லணும். நாம் இப்போப் பார்க்கப் போவது சேனை அல்லது வாழைக்காயில் பண்ணும் எரிசேரி மட்டுமே. இரண்டையும் போட்டும் பண்ணலாம். தனித்தனியாகவும் பண்ணலாம்.

சேனைக்கிழங்கு கால் கிலோ, தோல் சீவிக் கொண்டு கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  அரிசி களைந்த இரண்டாம் கழுநீரில் அதை ஒரு கொதி விட்டுப் பொங்கி வருகையில் வடிகட்டி வைக்கவும். இதன் மூலம் சேனைக்கிழங்கின் காறல் குணம் போகும்.  அல்லது வெறும் வெந்நீரில் கூட ஒரு கொதிவிட்டுப் பொங்க ஆரம்பிக்கையில் இறக்கி வடிகட்டிக்கலாம்.  அப்படியே சேனைக்கிழங்கை வேக வைக்கக் கூடாது.  அதுக்குத் தான் இந்த முறை.

வாழைக்காய் நடுத்தரமாக 2, தோல் சீவிக் கொண்டு சேனைக்கிழங்குத் துண்டங்களைப் போல் நறுக்கவும்.  இதற்கு நடுத்தர அளவில் ஒரு தேங்காய் தேவை. தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் அரிசியை ஊற வைக்கவும்.  மிளகாய்த் தூள் (காரம் வேண்டுமெனில் ) ஒரு டேபிள் ஸ்பூன்/ அல்லது இரண்டு டீஸ்பூன் போதும்.  ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.  தாளிக்கத் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை.  சிலர் ஜீரகம் சேர்க்கிறார்கள்.  சேர்ப்பவர்கள் அரைக்கையில் சேர்த்து அரைக்கலாம்.  நான் ஜீரகம் சேர்ப்பதில்லை.  சுவை மாறும்.

ஏற்கெனவே வடிகட்டி வைத்திருக்கும் சேனைக்கிழங்கை மீண்டும் நல்ல தண்ணீரில் வேக வைக்கவும்.  பாதி வெந்ததும், வாழைக்காய்த் துண்டங்களையும் சேர்க்கவும்.  இரண்டும் நசுங்கும் பதம் வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்க்கவும்.  பொடி வாசனை போக உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

மிக்சி ஜாரில் ஒரு மூடித் தேங்காயைப் போட்டு ஊற வைத்த அரிசியையும் போட்டு நன்கு நைசாக அரைக்கவும்.  மிச்சம் இருக்கும் தேங்காய்த் துருவலில் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.  தேங்காய்ச் சக்கையைத் தூர எறிய வேண்டாம்.  அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காய்களில் கொட்டிக் கிளறவும்.  லேசாக ஒரு கொதி வந்ததும், எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலை ஊற்றவும்.  இன்னொரு வாணலி அல்லது இரும்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொண்டு கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை தேங்காய்ச் சக்கையை நன்கு சிவக்க வறுத்து எரிசேரியில் கொட்டவும்.  தேங்காய் எண்ணெய் தேங்காய் மணத்துடன் சுவையான எரிசேரி தயார்.

ஒரு சிலர் தேங்காய்ப் பால் எடுத்துச் சேர்க்காமல்,தேங்காய்த் துருவலை நன்கு வறுத்துச் சேர்ப்பார்கள்.  இது அவரவர் விருப்பம். சுவையில் மாறுபாடு தெரியும்.  அவ்வளவே. தேங்காய்ப் பால் விட்டால் அதன் ருசியே தனி தான்! 

19 comments:

  1. எரிசேரி - ரொம்பவும் நன்றாகவே இருக்கும். திருநெல்வேலி/நாகர்கோவில் பக்கங்களில் செய்வது உண்டதுண்டு. பத்மநாபன் அண்ணாச்சி வீட்டில் எரிசேரி செய்யும் சமயங்களில் எனக்கும் அழைப்பு வரும்! இப்போது அவரும் என்னைப் போலவே நளபாகம் என்பதால் சாப்பிட்டு சில வருடங்கள் ஆகிவிட்டன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஆமாம் எனக்கும் பிடிக்கும். ஆனால் இங்கே அடிக்கடி பண்ண முடியாது! :))) எப்போவானும் எனக்குள்ளே ஓர் உத்வேகம் வரும், அப்போப் பண்ணிடுவேன் நடப்பது நடக்கட்டும் என! :)))))))

      Delete
  2. குறித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு பயங்கர பிஸி... மதியம் முதலே பூஜை ஏற்பாடுகள் தீவிரம்.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்,நேத்திக்குக் கொழுக்கட்டை பண்ணலாமானு யோசிச்சுட்டு அப்புறமா மாமா அதிகம் சாப்பிடுவதில்லைனு வேண்டாம்னு விட்டுட்டேன். அம்பத்தூரில் இருக்கையில் மன்னி பண்ணுவது கிடைக்கும். அநேகமாக நான் போய்த் தான் பண்ணிக் கொடுத்துட்டு வருவேன். :)))) இங்கே நோ கொழுக்கட்டை!

      Delete
  3. எரிசேரியில் இரு வகை உண்டு. பாலக்காட்டு வைகை, கேரள வகை. கேரளத்தவர் செய்யும் எரிசேரி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்...பாலக்காட்டு ப்ரிப்பரேஷனிலிருந்து.

    //சிலர் கூட்டு மாதிரி மி.வத்தல், மிளகு, ஜீரகம் வறுத்துக் கொண்டு தேங்காயோடு சேர்த்து அரைத்துச் செய்து விடுகிறார்கள். // கர்ர்ர்ர்ர்ர்ர் ஆமாம் நானும் பார்த்திருக்கிறேன்.

    பாலக்காட்டினர் வாழைக்காய், சேனை மட்டிலும் தான் செய்வார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் கேரளத்தவர் (மலையாளிகள்) மத்தங்கா எரிசேரியும் செய்வாங்க. சேனையிலும் செய்வார்கள். அது கொஞ்சம் வித்தியாசம்...

    நாரோவில் என்னை மறந்துட்டீங்களே கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நாரோவில் என்னை மறந்துட்டீங்களே கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

      //கன்யாகுமரி, // இஃகி,இஃகி, கன்யாகுமரியில் நாரோவிலும் சேர்ந்தது தானே! :))))) கேரளாவில் செய்வது எப்படி என ஒரு முறை உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்க தி/கீதா

      Delete
  4. கேரளத்தவர் மத்தங்கா எரிசேரியில பயறு(தட்டைப்பயறு. அவங்க இதைப் பயறு என்றே சொல்லுவாங்க) சேர்த்து செய்வாங்க.

    நாரோயில்லயும் ரெண்டு வகையும் செய்வாங்க. என் தோழி வீட்டுல அப்படித்தான்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தி/கீதா, பயத்தங்காய் அல்லது தட்டாங்காயை அவங்க ஓலன் போன்ற உணவு வகைகளிலும் அதிகம் சேர்க்கிறாங்க!

      Delete
  5. அது போல சேனையை சீவி/செதுக்கி செவ்வகம், சதுரம் வடிவோ எப்படி வருதோ அப்படி செதுக்கித்தான் செய்வாங்க. கட் செய்து பார்த்ததில்லை. நம்ம வீட்டில கட் செய்து அல்லது கொஞ்சம் சின்னதாக சதுரம் சதுரமாகவும் செதுக்குவது போல கட் செய்வாங்க. ஆனால் பெரும்பாலும் கட் செய்துதான்...

    கூடா நேந்த்ரங்காய்/ஏத்தங்காய்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சேனையை நானும் பெரும்பாலும் செவ்வகம் அல்லது அது எப்படி வருதோ அப்படிச் சீவுவேன். இப்போல்லாம் இங்கே கிடைக்கும் சேனையில் தோலைக்கூடச் சீவ முடியறதில்லை. மாமா தான் தோலைச் சீவிக் கொடுக்கிறார்.

      Delete
    2. அநியாயத்துக்கு பழமுதிர் நிலையம் போன்றவைகளில் 200 கிராம் காய்ந்த சேறை நீக்காமலேயே எடை போட்டு சேனையை விக்கறாங்க. நான் சேனைல எரிசேரி அபூர்வமா சாப்பிட்டிருக்கேன். வீட்டில் பண்ணலை. ஆனால் வாரம் ஒரு முறை சேனை வாங்கி கரேமது பண்ணிச் சாப்பிடுவோம். சேப்பங்கிழங்கை விட்டுட்டேன் (எனக்குத் தவிர பெண்ணுக்கு பிடிக்கலைன்னுட்டா)

      Delete
    3. எரிசேரிக்கு சேனைக்கிழங்குக்கு அப்புறமாத் தான் மற்றவை! இங்கெல்லாம் அவ்வளவு மண்ணோடு கொடுப்பதில்லை என்றாலும் சேனை சில சமயம் தான் நன்றாக இருக்கிறது.

      Delete
  6. தேங்காய்ப்பால் விட்டுச் செய்வதும் உண்டு. இல்லை என்றால் எல்லா தேங்காயையும் வறுத்துச் சேர்ப்பதுண்டு. தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக தேங்காய் கொஞ்சம் மொளகு பொடி (சி மி பொ) சேர்த்து அரைத்தோ அல்லது பொடியை கொதிக்கும் போது போட்டுவிட்டு தேங்காய் அரைத்துவிட்டுவிட்டு (அரிசி சேர்ப்பதில்லை) அப்புறம் மிச்சம் எல்லாம் அப்படியே. மிளகு பொடி ஒன்றிரண்டாகத் தட்டியது...கொதிக்கும் போது சேர்த்து. இதோடு சில சமயம் ஜீரகமும் தட்டிப் போட்டு.

    மூன்று முறையுமே டேஸ்ட் வித்தியாசப்படும் கொஞ்சம்...

    இங்கு அடிக்கடிச் செயதுண்டே...மிகவும் பிடித்த விஷயம்...நன்கு செல்லுபடியாகும் இங்கு.

    தேங்காய் எண்ணெய் மட்டுமெ சேர்ப்பது. அதுவும் கறிகப்பிலை(கீதாக்கா சொல்வது போல் சொல்லியாச்சு ஹியஹ்ஹிஹி) தேங்காய் எண்னெயோடு காய் கொதிக்கும் போது போட்டால் அதன் வாசனை தூக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அநேகமாகத் தேங்காய்ப்பால் தான் விடுவேன். அரிசி சிலர் சேர்க்கின்றனர். நான் பெரும்பாலும் அரிசி சேர்ப்பதில்லை. எப்போவானும் கொஞ்சம் தளர இருப்பதாய்த் தோன்றினால் அரை டீஸ்பூன் மாவு கரைத்து விடுவது உண்டு.

      Delete
    2. நெல்லைத் தமிழர் பயணத்தில் இருப்பதால் இதைப்பார்க்க நேரம் கிடைக்கலை போல! :)

      Delete
  7. பயணத்திலிருந்து வந்த பிறகும் பார்க்கலை. நிறைய பதிவுகள் விட்டுப்போயிருக்கு. எல்லாத்தையும் படிப்பதும் சந்தேகம்தான். கொஞ்சம் இணைய உலாவை கட்டுப்படுத்தலாம்னு இருக்கேன். (இருக்கிற 'நேரம் சரியில்லாத' நேரத்துல அடுத்து கண் எரிச்சலும் ஆரம்பிச்சுடுச்சு)

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, உங்க உடல்நிலை முக்கியம். அதிலும் கண் பிரச்னை என்றால் கணினியைப்பார்க்காமல் இருப்பதே நல்லது. எளிய பயிற்சிகளைச் செய்யுங்க.

      Delete
  8. //மத்தங்கா எரிசேரியும் செய்வாங்க.// - இது படிச்சவுடனே, சமீப பயணத்தில் பறங்கிக்காயை தானாக குழம்பில் பலமுறை போட்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவங்க தோலை எடுக்கறதில்லை.

    சாதாரணமா வீட்டில் செய்யும்போது நீங்கள்லாம் பறங்கிக்கு தோலெடுப்பீங்களா மாட்டீங்களா? பூசணிக்கு தோல் எடுத்துடறாங்க.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. நாங்க இந்த மேல் தோல் மஞ்சளா இருக்குமே பறங்கிப்பழம் அதை வாங்கவே மாட்டோம். வாங்கினால் சின்னப் பறங்கிக்கொட்டை அல்லது தோல் பச்சையா இருக்கும் பறங்கிக்காய். அதைத் தோலோடு தான் நான் போடுவேன். அதான் வாசனை! அடைக்குப் போட்டாலும் தோலை எடுப்பதில்லை.

      Delete