எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, June 2, 2020

பாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள்!

சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக்கலாம். ஆனால் சாப்பிடும்போது சுவைக்காது. கேட்கிறவங்க கேட்கட்டும். அதே போல் பொரிச்ச குழம்பு பண்ணிட்டுக் கூட்டும் பொரிச்ச கூட்டாகப் புளி விடாமல் பண்ணுவதும் சரி இல்லை. மோர்க்குழம்பும், மோர்க்கூட்டும் ஒத்துவருமா? என்னமோ பண்ணிக்கட்டும்! நாம இப்போப் பாதியிலே விட்ட பாயசங்களைப் பார்ப்போமா?
*********************************************************************************

இப்போ நாம் பலாப்பழப் பாயசம் பண்ணுவது எப்படினு பார்ப்போமா? சுமார் நான்கு பேர்கள் சாப்பிடத் தேவையான பொருட்கள்.

கேரளாவில் சக்கப்பிரதமன் என்னும் பலாப்பழப் பாயசம் செய்முறை கீழே!

சக்கப்பிரதமன்

Palakkad Brahmin Recipes | Chakka Varatti | Jackfruit Receipe ...

படத்துக்கு நன்றி கூகிளார்.

பலாச்சுளைகள் 25 இல் இருந்து 30 வரை. இதில் சுமார் பத்துச்சுளைகளைப் பொடியாக நறுக்கிக் கொண்டு மற்றச் சுளைகளை மிக்சி ஜாரில்/கல்லுரலில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்குத் தேவையான வெல்லம் அரைக்கிலோ பொடி செய்து தண்ணீரில் போட்டு வடிகட்டி ஒரு பக்கம் அடுப்பில் அடி கனமான உருளியில் பாகு வைத்துக்கொள்ளவும். அடுப்புத் தணிந்தே இருக்கட்டும். பாகு கொதிக்கட்டும்.

தேங்காய் நடுத்தரமான ஒன்று உடைத்துத் துருவி முதல் பால், இரண்டாம் பால் என எடுத்துக்கொள்ளவும்.

ஏலக்காய் 15 அல்லது 20 பொடித்து வைத்துக்கொள்ளவும்.

நெய் சுமார் நூறு கிராம், முந்திரிப்பருப்பு 50 கிராம், பல்லுப் பல்லாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகள் இரண்டு மேஜைக்கரண்டி.

பாகு ஒரு அடுப்பில் கொதிக்கிறது. நினைவில் இருக்கட்டும். இப்போது இன்னொரு அடுப்பில் வாணலி அல்லது அடி கனமான உருளியைப் போட்டு இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி நறுக்கிப் பொடியாக வைத்திருக்கும் பலாச்சுளைகளைப் போட்டு நன்கு வதக்கவும். அது வதங்கும்போதே அரைத்து வைத்திருக்கும் பலாச்சுளை விழுதையும் போட்டு நன்கு கிளறவும்.  இப்போது பக்கத்தில் கொதிக்கும் வெல்லப்பாகை மெதுவாக எடுத்து இந்தப் பலாப்பழ விழுதில் ஊற்றவும். இன்னொரு கையால் கிளறிக்கொண்டே இருக்கணும். நன்கு கிளற வேண்டும். வெல்லப்பாகும் பலாப்பழ விழுதும் ஒன்று சேர்ந்து தளதளவெனக் கொதிக்கும்வரை விடாமல் கிளறவேண்டும். இப்போது தேங்காய்ப் பால் இரண்டாம் பாலை மெதுவாக இதில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். பொதுவாக இதில் அரிசி சேர்ப்பதே இல்லை. ஆனால் கொஞ்சம் கெட்டியாக வேண்டும் எனில் தேங்காய்ப் பால் எடுக்கும்போதே அதில் ஊற வைத்த அரிசியைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இது பாயசம் கெட்டியாக வர உதவும். ஆனால் ருசி மாறும். இது அவரவர் விருப்பம்.

இது நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கூடவே முதல் பாலையும் விட்டு ஒரு கிளறு கிளறியதும் அடுப்பை அணைக்கவும். முதல் பாலைச் சேர்த்ததும் அதிகம் கொதிக்க விட்டால் பால் திரிந்து விடும். இப்போது மிச்சம் இருக்கும் நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, நறுக்கிய தேங்காய்க்கீற்றுகளைச் சேர்த்து சிவக்க வறுத்துப் பாயசத்தில் கொட்டவும். சூடாகவோ, ஆற வைத்தோ சாப்பிட நன்றாகவே இருக்கும்.

அடுத்து அடைப்பிரதமன்


kerala ada pradhaman recipe | Samayam Tamil Photogallery

படத்துக்கு நன்றி கூகிளார்

அடைப் பிரதமன்  இதுக்கும் தேங்காய்ப்பாலே நன்றாக இருக்கும். கிட்டத்தட்ட நம் பால் கொழுக்கட்டை வெல்லம் சேர்த்துப் பண்ணுவோமே அதே போல் தான்.ஆனால் மாவைக் கொழுக்கட்டையாகச் செய்து கொள்ளாமல் தட்டையாக அடைபோல் தட்டி இட்லித்தட்டில் வேகவிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் தேங்காய்ப் பாலை வெல்லப்பாகுடன் சேர்த்துக் கொதிக்கவிடும்போது இந்த அடைகளை அப்படியேவோ அல்லது இரண்டாக வெட்டியோ சேர்க்க வேண்டும். இவை சேர்ந்து கொதித்ததும் முதல் தேங்காய்ப்பாலை விட்டு அடுப்பை அணைக்கவேண்டும். இதற்கு முந்திரி, தேங்காய்க்கீற்றுகள் தேவை இல்லை என்றாலும் ஒரு சிலர் காய்ந்த திராக்ஷைப் பழங்களை நெய்யில் பொரித்துச் சேர்க்கிறார்கள். இது அவரவர் விருப்பம்.

23 comments:

  1. பலாப்பழ ப்ரதமன் சாப்பிட்டதில்லை .ஒருமுறை நேந்திரம்பழ ப்ரதமன் செய்தேன் நல்லா வந்தது .அடை பாலடை ப்ரதமனுக்கு ஏற்கனவே செய்த அடைகளை விற்கிறாங்க ஒரு சிலது நல்லா ருக்கு சிலது ரொம்ப கடினமா வரும் ஆவியில் வேகவைத்து சேர்ப்பது நல்ல மெத்தட்

    ReplyDelete
    Replies
    1. நாங்க அம்பத்தூரில் இருந்தப்போப் பக்கத்து வீடு பாலக்காட்டுக்காரங்க இருந்தாங்க. அவங்க வீட்டு விசேஷங்களில் அடைப்பிரதமன் முக்கியமான இடம் வகிக்கும். பலாப்பழப் பருவத்தில் கட்டாயமாய்ச் சக்கவரட்டியும், இந்தப் பிரதமனும் ஒரு நாள் பண்ணிடுவாங்க. அதனால் சாப்பிட்டது உண்டு. அதோடு அடைப்பிரதமனுக்கு விற்பதை வாங்கவும் மாட்டாங்க. வீட்டிலேயே செய்தவை தான்.

      Delete
  2. சமையல் காம்பினேஷனில் எனக்கும் பலதில்  உடன்பாடில்லை  .சாம்பார்னா அதுக்கு பொரியல் தேங்காய் சேர்த்த மற்றும் வருவல் தான் பெஸ்ட் ரசத்துக்கு பருப்பு சேர்த்த கூட்டுக்கள் .ரெண்டும் புளி காம்பினேஷன்லாம் சாப்ட முடியாதது .கார குழம்புக்கு அப்பளம் வடாம் குருமாவுக்கு ரைத்தா பிரைட் ரைஸுக்கு கத்திரி பொரியல் இப்படித்தான் செய்வது வழக்கம் 

    ReplyDelete
    Replies
    1. அதே, அதே! என்றாலும் சிலருக்குப் புரிவதில்லை.

      Delete
  3. முன்னுரை யாருக்கு என்று தெரியவில்லையே...   நான் இல்லைப்பா!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா நீங்க இல்லை. உங்க வீட்டில் ஒரே நாள் தானே சாப்பிட்டேன். அதிலே குற்றம் சொல்லும்படி இல்லையே! :)))))

      Delete
  4. சக்கப்ப்ரதமன், அடைப்பிரதமன் இரண்டுமே செய்ததில்லை.  படித்துக்கொண்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ஏதானும் விசேஷ நாட்களில் கொஞ்சமாகச் செய்து பார்க்கலாம். பலாப்பழம் ஜூலை வரை கிடைக்கும். பல சமயங்களில் ஆடி மாதம் மாமனார் ஸ்ராத்தத்துக்கு 3 பழங்களும் போட்டது உண்டு.

      Delete
  5. சக்கப்ப்ரதமன் செய்முறை நன்றாக இருக்கு.

    என்னிடம் பலாப்பழங்களும் இருக்கு.

    ஆனா அடுத்த 10 நாட்கள் இனிப்பு இல்லாம கடக்கணும் (கார்போஹிடிரேட் இல்லாமலும், பால் முதலியவை இல்லாமலும்). அதுக்குள்ள பலாப்பழ சீசன் முடியாம இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. பலாப்பழப் பருவம் ஜூலை வரை நீடிக்கும். எத்தனையோ முறை ஆடி மாதம் குலதெய்வம் கோயில் போயிட்டுத் திரும்பும்போது பலாப்பழங்கள் விற்பார்கள். பார்த்தது உண்டு. முழுப் பலாப்பழம் எல்லாம் மாமனாரோடு போயாச்சு. சுளைகள் கூட எப்போவானும்.

      Delete
  6. படத்தைப் பார்த்து மயங்காத குறைதான். சக்கப்ப்ரதமன் அவ்வளவு அட்டஹாசமாக இருந்தது. அப்புறம்தான் நீங்க இணையத்திலிருந்து லவட்டிப் போட்டிருக்கீங்க.

    எப்போ நீங்க செஞ்சு படம் எடுத்துப் போடப்போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நான் இதைப் பண்ணுவது வெகு அபூர்வம் நெல்லைத்தமிழரே. படங்கள் இணையத்தில் இருந்து என்று சொல்லித் தான் போட்டிருக்கேன்.

      Delete
  7. அடைப்ரதமன் நாங்க சில முறை செய்திருக்கிறோம். இதற்கு அரிசி அடை சில்லு சில்லா கேரளாவில் நிறைய பிராண்டுகள் பாக்கெட்டில் போட்டு விற்பார்கள். அதனை உபயோகித்திருக்கிறோம்.

    ஜீனிலயும் பண்ணலாம்.

    ரொம்ப நல்லாவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, அடைப்பிரதமன் கிட்டத்தட்ட நம்ம பால் கொழுக்கட்டை மாதிரித் தான். ஆகவே அது நிறையவே சாப்பிட்டிருக்கோம்.

      Delete
  8. அடைப்ப்ரதமனுக்கு முந்திரி, திராக்‌ஷை தேவையில்லை. வறுத்த தேங்காய் பல்களே போதும். நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தேவையானால் போட்டுக்கலாம் நெல்லைத்தமிழரே, இதெல்லாம் அவரவர் விருப்பம்.

      Delete
  9. அப்பாடி இங்கே வந்து படிப்பது நிம்மதியாக இருக்கு. சுவை நாவைச்
    சுண்டி இழுக்கிறது. நல்ல படங்கள் கீதா மா.

    அதீத இனிப்பாக இருக்குமோ.
    சாப்பிடக் கொடுத்து வைத்தவர் யாரோ:)
    நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரேவதி. நம்மால் எல்லாம் படிக்கத்தான் முடியும்.

      Delete
  10. இரண்டுமே சுவை மிகுந்தது. மலையாள நண்பர்கள் வீட்டிலும், எங்கள் இல்லத்திலும் சுவைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீங்க கட்டாயம் சாப்பிட்டிருப்பீங்கனு தெரியும். ஆதிக்கும் பண்ணவும் தெரிஞ்சிருக்கும்.

      Delete
  11. கீதாக்கா என் ஃபேவரைட் எலலமே ஆனா மீ யே ரொம்ப ஸ்வீட்டாக்குமே!!!

    நம்ம வீட்டுல எல்லாமே உண்டே சக்கப் பிரதமன் அடைப்பிரதமன், நேந்திரம் பழ பிரதமன்...இதே முறையில் தான் கீதாக்கா.

    அடைப் பிரதமன் நானும் வெளியில் வாங்கிய அடையைப் ப்யனப்டுத்தியதில்லை. ஒன்ற்று அரிசி அடை மற்றொன்று மைதா அடை. எதுவாக இருந்தாலும் வீட்டில்தான் ஆனால் நான் பெரும்பாலும் அரிசி அடை தான் செய்வது.

    பாலடைப் பிரதமனும் உண்டு. இதே அரிசி அடையை பால் சேர்த்து பால் பாயசம் போல் செய்வது.

    நீங்க அடுத்து இதைப் பத்திதான் சொல்லப் போறீங்களோ?!!!!!!

    சிலர் அரிசியைக் கொஞ்சம் பொடித்துக் கொண்டு திக் பால்பாயாஸம் போலச் செய்வதை பாலடைப் பிரதமன்னும் சொல்லுவாங்க ஆனா நம் வீட்டில் பாலடைக்கு அரிசி அடை பயன்படுத்தி செய்வாங்க. சில சமயம் மைதா அடையை. வீட்டிலேயே செய்துதான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நாங்களும் எப்போவானும் செய்தால் உண்டு. பாலடைப் பிரதமன் நான் ஒரு கல்யாணத்தில் சாப்பிட்டிருக்கேன். பால் பாயசம் வேறே, பாலடைப் பிரதமன் வேறேனு தெரியும்.

      Delete