எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, June 10, 2020

(எங்க வீட்டுப்) பாரம்பரியச் சமையலில் வெள்ளைச் சர்க்கரை சேர்த்த பாயசங்கள்!

பொதுவாக முன்னெல்லாம் விசேஷங்கள் என்றால் கூட வெல்லம் சேர்த்தே பாயசங்கள் பண்ணுவார்கள்/பண்ணினார்கள். காலப்போக்கில் எல்லாம் மாறினது போல் அதுவும் மாறி விட்டது. வெள்ளைச் சர்க்கரை என்னும் அஸ்கா ஜீனி சேர்த்துப் பாயசங்கள் பண்ண ஆரம்பித்தனர். இதில் அநேகமாகப் பாலே சேர்க்க வேண்டும். தேங்காய்ப் பால்+சர்க்கரை கூட்டு அவ்வளவு ருசியாய் இருப்பதில்லை. நல்ல பசும்பாலாகக் கிடைத்தால் நல்லது. அல்லது எருமைப் பாலாக இருந்தாலும் பரவாயில்லை. பாலை நன்கு சூடு செய்து பொங்கக் காய்ச்சிச் சிறிது நேரம் கொதிக்கவிட்டுச் சிவக்க வைத்து எடுத்துக் கொள்வது நன்றாக இருக்கும். இப்போது சர்க்கரை சேர்த்த பாயசங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?

கடலை மாவுப் பாயசம்: ஒரு சின்னக் கிண்ணம் கடலை மாவு, அரைக்கிண்ணம் நெய், பால் காய்ச்சி நன்கு குறுக்கியது ஒரு கிண்ணம், சர்க்கரை ஒரு கிண்ணம், ஏலக்காய். முந்திரிப்பருப்பு மட்டும் தேவையானால். அல்லது பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரித்துக் கொண்டு சின்னதாக நறுக்கிக் கொண்டு பாயசத்தில் அப்படியே தூவலாம். அரைத்தும் விடலாம்.

கடாய் அல்லது உருளியில் நெய்யை நன்கு காய வைத்துக் கொண்டு நெய் வாசனை வரும்போது கடலைமாவைப் போட்டுக் கை விடாமல் கிளற வேண்டும். நெய்யும், கடலைமாவும் சேர்ந்து சிவந்து வாசனை வரும். மேலே பொங்கி வரும். அப்போது பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பாலுடன் சேர்ந்து கடலைமாவு நன்கு கரைந்து கெட்டியாகும்போது சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை சேர்ந்து நன்கு கொதிக்க வேண்டும். சர்க்கரை சேர்ந்து நன்கு கெட்டியானதும் தேவையானால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கவும். அல்லது ஊற வைத்திருந்த பாதாம்பருப்பை நன்கு அரைத்துப் பாயசத்தில் சேர்க்கவும். பாயசம் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு (தேவையானால்) வறுத்துச் சேர்க்கவும். கடலை மாவு நெய்யில் வறுக்கும்போதே சிலர் சர்க்கரையையும் சேர்த்துவிடுவார்கள். அப்படியும் பண்ணலாம்.

அடுத்து ரவைப் பாயசம். மேலே சொன்ன மாதிரியே பண்ண வேண்டும்.  ஒரு கரண்டி ரவை இருந்தால் போதும்.  அதுவே வெந்து நிறைய ஆகும். இரண்டு மேஜைக்கரண்டி நெய்யில் ரவையைப் போட்டு வறுத்துக் கொண்டு 3 கரண்டி சர்க்கரையைச் சேர்க்கவும். பக்கத்தில் ஓர் அடுப்பில் வெந்நீர் கொதிக்க வைக்க வேண்டும்.  வறுபட்ட ரவை+சர்க்கரை,  இரண்டும் நன்கு சேர்ந்து வரும்போது கொதிக்கும் வெந்நீரைச் சேர்க்கவும். கை விடாமல் கிளறவும். நன்கு கெட்டியாகிவிட்டால் இன்னும் கொஞ்சம் நீரைச் சேர்க்கவும். பாயசம் ஓரளவுக்கு உங்கள் விருப்பப்படி கெட்டியானதும் பாலைச் சேர்க்கவும். பால் ஏற்கெனவே காய்ச்சியது எனில் அதிகம் காய வேண்டாம். கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை அணைத்து, ஏலப்பொடி தூவி, முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்துச் சேர்க்க வேண்டும்.

இதே முறையில் தான் அவல் பாயசமும் சர்க்கரை சேர்த்துப் பண்ண வேண்டும்.

பாரம்பரிய அவல் பாயசம் செய்வது ...


ஜவ்வரிசிப் பாயசம்! நல்ல மாவு ஜவ்வரிசியாக 50 கிராம் இருந்தால் போதும். நெய் இரண்டு கரண்டி, பால் நல்ல பாலாக ஒரு கிண்ணம், சர்க்கரை ஒரு கிண்ணம், ஏலக்காய், முந்திரிப்பருப்பு தேவைக்கு. ஜவ்வரிசி வேக வைக்க நீர்.

ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி ...

ஒரு கரண்டி நெய்யில் ஜவ்வரிசியைப் போட்டு நன்கு பொரிய விடவும். பின்னர் நீரைச் சேர்க்கவும். அல்லது நீரைச் சுட வைத்தும் சேர்க்கலாம். ஜவ்வரிசி நன்கு வெந்து சேர்ந்து வரும்போது சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்து பாயசம் கெட்டியாக வரும்போது பாலைச் சேர்க்கவும். பால் சேர்த்து ஒரு கொதி விட்டதும் அடுப்பை அணைத்து ஏலக்காய் சேர்த்து, முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

சேமியா பாயசம்: சேமியா கெட்டி சேமியாவாக இருந்தால் 50 கிராம் அல்லது தேவைக்கேற்ப 100 கிராம். சில சேமியா மெலிதாக இருக்கும். அதற்கு நீர் குறைவாகச் சேர்க்க வேண்டும். இப்போதெல்லாம் வறுத்த சேமியா என்று விற்றாலும் அதை மீண்டும் ஒரு முறை நெய்யில் வறுத்துக் கொண்டாலே நல்லது. இல்லை எனில் சேமியா தனித்தனியாக வராமல் சேர்ந்து கொள்ளும். மேற்சொன்ன அளவுக்கு நெய் இரண்டு மேஜைக்கரண்டி தேவை. சர்க்கரை கால் கிலோ, பால் 250, ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு, திராக்ஷை, நெய்யில் வறுத்தவை இரண்டு டேபிள் ஸ்பூன் வகைக்கு.

சேமியாவை உதிர்த்துக் கொண்டு (மெலிதானது எனில் நீளமாக வரும்) நெய்யில் நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் தேவைக்குக் கொஞ்சம் குறைவாகவே நீர் சேர்த்து சேமியாவை வேக வைக்கவும். சேமியா நன்கு வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் எப்போதும் போல் நீர் விட்டுக்கும். என்றாலும் கவலைப்பட வேண்டாம்.அடிக்கடி கிளறி விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை எல்லாம் சேர்ந்து பாயசம் கெட்டியாகும்போது பாலைச் சேர்க்கவும். பாலைச் சேர்த்ததும் சிறிது கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். பார்க்கப்பாயசம் நீர்க்க இருந்தாலும் நேரம் ஆக ஆக கெட்டிப்பட்டு விடும். ஏலக்காய்ப் பொடி சேர்த்து நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்துச் சேர்க்கவும். ரொம்பக் கெட்டியாக இருந்தால் பாலைச் சுட வைத்துச் சேர்த்துக் கொள்ளலாம். சுவை கூடும்.

Semiya payasam recipe | How to make semiya payasam recipe

படங்களுக்கு நன்றி கூகிளார்

23 comments:

  1. படித்துக் கொண்டேன்.  

    ஜவ்வரிசிப்பாயசம் செய்து நாட்களாகின்றன.  சேமியா பாயசம் பெரும்பாலான சமயங்களில் சேர்ந்து வராமல் கழுத்தறுக்கும்.  பால் தனியாக, சேமியா தனியாகவே நிற்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஜவ்வரிசிப் பாயசம் பெரும்பாலான ஓட்டல்களில் கஞ்சி மாதிரிக் கொடுத்துடறதிலே பிடிக்காமயே போயிடுச்சு ஸ்ரீராம். சேமியா தனியா நின்றதெனில் கொஞ்சம் கஸ்டர்ட் பவுடர் (வனிலா) ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துப் பாலில் கரைத்து விடுங்கள். சேர்ந்துக்கும். நிறமும் மஞ்சளாக இருக்கும்.

      Delete
    2. நான் கஸ்டர்ட் பவுடர் கரைத்துவிட்டுப் பாயசம் பண்ணினால் பலரும் மஞ்சள் பொடி போட்டேன் அல்லது கேசரிப்பவுடர் சேர்த்திருக்கேன் என நினைப்பார்கள். இல்லைனா ஒத்துக்க மாட்டாங்க. :))))))

      Delete
    3. அப்படியா? கஸ்டர்ட் பவுடர் போடலாமா? இது நல்ல யோசனை. அடுத்து பண்ணும்போது இப்படிச் செய்து பார்க்கிறேன்.

      எனக்கு சேமியா பாயசம் என்றாலே அதில் ஜவ்வரிசி சேர்ப்பேன். அதனால் இழைந்துவரும்.

      Delete
    4. ஆமாம், நெல்லைத்தமிழரே, கஸ்டர்ட் பவுடர் பாலில் கரைத்து சேமியா பாயசத்தில் விட்டால் சேமியா தனித்து நிற்காது. ஆனால் வனிலா ஒன்று தான் நன்றாக இருக்கும்.

      Delete
  2. சேமியா, ஜவ்வரிசிப் பாயசங்களில் மில்க் மெய்ட் சேர்த்து விடுவது கூடுதல் சுவையைக் கொடுத்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போல்லாம் மில்க்மெய்ட் வாங்குவதே இல்லை. வாங்கியே பல ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே பாலைச் சேர்த்துக் குறுக்கித் தான்.

      Delete
  3. கடலை மாவு பாயசம் - இது கேள்விப்பட்டதில்லை. மற்றவை சுவைத்திருக்கிறேன். குறிப்புகள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அம்மா அடிக்கடி பண்ணுவார். நான் எப்போவானும்.

      Delete
  4. தேங்காய்ப் பால்+சர்க்கரை கூட்டு அவ்வளவு ருசியாய் இருப்பதில்லை//

    ஆமாம். அப்புறம் நம் பிறந்த வீட்டில் கடலை மாவு பாயாசம் செய்யறப்ப கொஞ்சம் முந்திரி அரைச்சு விட்டு செய்வாங்க அதுவும் பாட்டியின் தங்கை கொச்சியில் இருந்ததால் அவங்க வந்து போகும் போது முந்திரி கொண்டு வருவாங்க அதனால இல்லைனா முந்திரி பாதாம் எல்லாம் வீட்டில் இருக்காது. ஆனால் மாமியார் வீட்டுலனா பாதாம் முந்திரி குஞ்சுமப்பூ திராட்சை எல்லாம் நிறைய இருக்கும். ஸோ கடலை மாவு பாயாசத்துல கண்டிப்பா பாதாம் அரைச்சுவிட்டுத்தான் செய்வாங்க. அதே போல பாதாம் கீரும் அடிக்கடி பாதாம் அல்வா எல்லாமே டக் டக்குனு செய்வாங்க. மத்ததெல்லாம் சென்சார்ட்!! ஹா ஹா ஹா ஹாஹ் ஆ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, முன்னெல்லாம் பாதாம், முந்திரி அவ்வளவாய்க் கிடைக்காது. இப்போதெல்லாம் பழக்கமாகி விட்டது. :) காரட் அல்வா பண்ணினால் கூடப்பாலைக் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டுக் காரட்டை வதக்கிவிட்டு பாதாமை அரைச்சுச் சேர்த்துடுவேன். அதுவும் நல்ல ருசியாகவே இருக்கு.

      Delete
  5. அப்பாவின் அம்மாவும் செய்வார் க பா ஆனால் பாதாம் போட்டதில்லை. முந்திரி வறுத்துப் போடுவார் கடைசியில்.

    திவசம் அன்று நம் வீட்டில் சொஜ்ஜி அப்பம் செய்வதுண்டு என்பதால் பெரும்பாலும் இந்த சமையல் செய்கிறவர்கள் ரவை பாயாசமே செய்துவிடுகிறார்கள். அது போல மடத்தில் அரேஞ்ச் செய்தாலும் அங்கும் அதே.

    வீட்டில் நவராத்திரி டைம் என்றால் மாமியார் கண்டிப்பாக ஒரு நாள் ர பா செய்வார். அப்பாவின் அம்மா டக்கென்று செய்வதானால் இதைத்தான் செய்வார் அல்லது க பா.

    சேமியா ஜவ்வரிசி பாயாசம் நம் வீட்டில் ரொம்பப் பிடித்த விஷயம்

    சேமியாவை காய்ச்சாத பால் விட்டு குக்கரில் டைரக்ட்டாக விட்டு சிம்மில் வைத்து விட்டால் (இப்படி அரிசிப் பாயாசமும்) சிவந்து நல்ல கண்டென்ஸ்ட் மில்கில் செய்தது போல ஆகும் என்று கொச்சிப்பாட்டி நான் கல்லூரி படிக்கும் போது சொல்லிக் கொடுத்து செய்து காட்டி அதிலிருந்து நான் அப்படியும் செய்வதுண்டு. அவர் செய்தது அரிசிப் பாயசத்தில்.

    சூப்பர் பாயசம் பத்தி சொல்லிருக்கீங்க கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, சொஜ்ஜி அப்பம் என் பிறந்த வீட்டில் தான் அடிக்கடி பண்ணுவாங்க. சம்பாகோதுமை ரவையில் தேங்காய் சேர்த்தும் சேர்க்காமலும். ஆனால் பாயசம் எனில் ஸ்ராத்த தினங்களில் பயத்தம்பருப்புப் பாயசம் மட்டுமே. நவராத்திரியில் ஒரு நாளைக்கு ஒன்று. எங்க மோதிக்குப் பிடித்தது ரவை பாயசம் என்பதால் நான் இப்போதெல்லாம் ரவை/கோதுமை ரவை எதிலும் பாயசம் பண்ணுவதே இல்லை. சேமியா, ஜவ்வரிசிப் பாயசம் வேறே வழியில்லைனாத் தான். குக்கரில் நான் சமைப்பது அரிது. அதுவும், பாயசம், சர்க்கரைப் பொங்கல் இதெல்லாம் குக்கரில் வைப்பதே இல்லை.

      Delete
  6. ஜீனி, பால் கலந்த பாயசங்களா? செய்முறை எளிதாகவும் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத்தமிழரே.

      Delete
  7. கடலைமா பாயசம் செய்முறையைப் படித்தால், மைசூர்பாக்கை பாலில் கரைத்துவிட்டு சூடு பண்ணியதுபோல இருக்காது?

    ReplyDelete
    Replies
    1. இருக்காது. கொஞ்சம் திரிபாகம் மாதிரி இருக்கும்னு வேணாச் சொல்லலாம். அதுவும் பாதாம், முந்திரி அரைத்துவிட்டால்.

      Delete
  8. ஹோட்டல்களிலும் ஜீனி சேர்ந்த பாயசம்தான் பெரும்பாலும் செய்கிறார்கள். வெல்லம் விலை ஜாஸ்தி என்பதனால் இருக்கும். அல்லது ஜீனி சேர்த்துச் செய்யும் பாயசம் ரொம்பவே எளிது என்பதனாலும் இருக்கும்.

    இருந்தாலும் வெல்லம் சேர்த்துச் செய்யும் பாயசத்தின் ருசி வராதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, முன்னெல்லாம் கோதுமை அல்வா கூட வெல்லத்தில் தான் பண்ணினாங்களாம். அஸ்காச் சர்க்கரை கடந்த 100/150 வருடங்களில் தான் வந்ததாகச் சொல்லுவார்கள். எங்க வீடுகளிலேயே வெல்லம் போட்டோ/வெல்லப் பாகு ஊற்றியோ காஃபி, தேநீர் குடிச்சு/கொடுத்துப் பார்த்திருக்கேன். எனக்குத் தெரிந்து எங்க பிறந்த வீட்டில் ஐம்பதுகளுக்குப் பின்னரே சர்க்கரை பயன்பாடு.

      Delete
  9. படங்கள் சேர்த்த இடுகை நல்லாவே இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் நிறைய பாயசங்கள் பாக்கி இருக்கு போலிருக்கு.

    ReplyDelete
  10. அற்புதமான பாயாச வகைகளைக் கண்ணாரக் கண்டு
    மகிழ்ச்சி அடைந்தேன்.
    நீங்கள் செய்யும் விதம் மிக அருமை.

    வெரி ஆதெண்டிக்.
    உங்கள் குழந்தைகளும் குடும்பமும்
    கொடுத்து வைத்தவை. நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைங்களுக்கெல்லாம் அலுத்துப் போய்விட்டது வல்லி. :))))))) இப்போல்லாம் சர்க்கரைப் பொங்கல் தவிர்த்த இனிப்பு வகைகளே சாப்பிடுவது இல்லை. :)))))) பாராட்டுக்கு நன்றி.

      Delete