எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, October 15, 2019

பாரம்பரியச் சமையலில் பொடி சேர்த்த கறி வகைகள்!

வாழைக்காயில் இன்னும் சில கறி வகைகள் பார்ப்போம். அதன் பின்னர் பொடி சேர்த்த கறி வகைகளைப் பார்க்கலாம். வாழைக்காய்ப் பிஞ்சாக இருந்தால் அதை வேகவிட்டுக் கறி செய்யலாம். இதற்கு வாழைக்காய் நன்கு வெந்து குழைவாக இருந்தால் நன்றாக இருக்கும். கச்சல் வாழைக்காயிலும் பண்ணலாம் என்றாலும் அதில் கூட்டு இன்னமும் நன்றாக இருக்கும். ஆகவே கச்சல் இல்லாமல் நிதானமாக ரொம்ப முற்றாத வாழைக்காயாக நான்கு எடுத்துக்கொள்ளவும். தோல் சீவிக் கொண்டு கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கவும்.

இதைக் கறி பண்ணத் தேவையான பொருட்கள். புளி ஜலம் நீர்க்க ஒரு சின்னக் கிண்ணம். உப்பு, தேவைக்கு. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்.
தாளிக்கத் தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சிறிதளவு, கருகப்பிலை, பச்சை மிளகாய் சின்னதாக ஒன்று அல்லது பாதி, மி.வத்தல் பாதி

வறுத்துப் பொடிக்க எண்ணெய், மி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, தேங்காய். எல்லாமும் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக்கொள்ளவும். அல்லது அன்றைய தினம் சாம்பார் வைத்தால் சாம்பாருக்கு அரைத்துவிடுவதற்கு அரைப்பதில் இருந்து இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொண்டால் போதும். நான் பொதுவாக அமாவாசை அன்றே இந்தக்கறி அதிகம் பண்ணுவதால் அன்று சாம்பாரும் வைப்பதால் சாம்பாருக்கு வறுத்தரைப்பதிலிருந்தே கொஞ்சம்போல் எடுத்துப் போட்டு விடுவேன். தனியாகப் பண்ணுவதெனில் இப்படிப் பொடித்துக்கொள்ளவும்.

வாணலியில் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் புளி ஜலத்தை விட்டு வாழைக்காய்த் துண்டங்களைப் போடவும். வாழைக்காய்த் துண்டங்கள் மூழ்கி இருக்க வேண்டும். ஆகவே புளி ஜலம் போதவில்லை எனில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பாதி வெந்ததும் தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடியும் போடவேண்டும். நன்கு வெந்ததும், கையால் நசுக்கினால் வாழைக்காய்த்துண்டம் நன்கு நசுங்க வேண்டும். அடுப்பிலிருந்து எடுத்து வடிகட்டியில் போட்டு வடிகட்டவும். வாணலியைக் கழுவித் துடைத்து மீண்டும் அடுப்பில் ஏற்றிக் கொண்டு தேங்காய் எண்ணெய் விடவும். கடுகு, உளுத்தம்பருப்புப் போட்டுக் கொண்டு, பெருங்காயப் பொடி கொஞ்சம் போல் போட்டுக் கருகப்பிலை, பச்சை மிளகாய், மி.வத்தல் எல்லாமும் தாளிதத்தில் சேர்க்கவும். பின்னர் வடிகட்டிய வாழைக்காய்த்துண்டங்களைப் போட்டுக் கொஞ்சம் பிரட்டிக் கொடுத்து பின்னர் பொடி செய்து வைத்ததில் இருந்து தேவையான பொடியை மட்டும் கறியில் சேர்க்கவும். வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் தேங்காய்த் துருவல் பச்சையாகச் சேர்க்கலாம். காரம் வேண்டுமெனில் அப்படியே இருக்கலாம். பிடித்தால் கொத்துமல்லி தூவி விட்டுக் கீழே இறக்கவும். அமாவாசை அன்றே அதிகம் பண்ணுவதால் எங்க வீட்டில் இதற்கு அமாவாசைக்கறி என்றே சொல்லுவது வழக்கம்.

இந்தக்கறியையே பொடி செய்து போடாமல் வேகவிட்டு எடுத்துக்கொண்டு தாளிக்கையில் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் மட்டும் தாளித்துக்கொண்டுத் தேங்காய்த் துருவல் மட்டும் சேர்க்கலாம். அல்லது சாம்பார்ப்பொடி போட்டுக் கொண்டும் தேங்காய்த்துருவல் சேர்க்கலாம். இவை எல்லாம் இருக்கும் சாமான்களையும் சமையல் செய்யும் அவசரங்களையும் பொறுத்து நமக்கு ஏற்றவாறு செய்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் சாமான்கள் வீட்டில் தேவையான அளவுக்கு இருக்காது. தேங்காய்த் துருவல் கூடச் சில சமயம் போட முடியாது. அப்போது வெறும் தாளிதத்தோடு பச்சை மிளகாய், வற்றல் மிளகாய் மட்டும் சேர்த்துக்கொண்டு சாம்பார்ப் பொடியையோ அல்லது அப்படியேவோ வதக்கி எடுக்கலாம். இதெல்லாம் அந்த அந்த நேரத்தில் நாமாக யோசித்துக்கொண்டு செய்து கொள்ளலாம்.

வாழைக்காய்க் காரக்கறி: இதற்கும் முற்றிய வாழைக்காய் நன்றாக இருக்கும். வாழைக்காயைத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டு அடுப்பில் வாணலியை ஏற்றிக் கொண்டு அதில் சமையல் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக்கொண்டு நறுக்கிய வாழைக்காய்த் துண்டங்களைப் போட்டுக் காரப்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிரட்டிக்கொள்ளவும். இதை நன்கு எண்ணெய் விட்டு வதக்கியும் பண்ணலாம். அல்லது நீர் தெளித்து மூடி வைத்துப் பாதி வதக்கி, பாதி வேக விட்டு எனவும் பண்ணலாம். எண்ணெய் விட்டு வதக்கும்போது மூடி வைக்க வேண்டாம். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக்கொண்டு வதக்கினால் சரியாக இருக்கும். மூடி வைத்து வதக்கும்போது 3 டீஸ்பூன் எண்ணெயே போதுமானது. எண்ணெய் நிறைய விட்டு வதக்குகையில் துண்டங்களாக நறுக்காமல் வாழைக்காய் வறுவலுக்கு நறுக்குவது போல் மெலிதாக நறுக்கினால் வாழைக்காய் சீக்கிரம் நன்கு வதங்கும்.

Image result for கத்திரிக்காய்,

இதே போல் கத்திரிக்காயிலும் பொடி செய்து போட்ட கறி பண்ணலாம். நான்கு நபர்களுக்குத் தேவையான பொருட்கள்.
அரைக்கிலோ கத்திரிக்காய். கூடியவரை ஒரே மாதிரி இருந்தால் நலம். இல்லை எனில் ஒரே மாதிரி அளவில் நறுக்கிக் கொள்ளவும். பலரும் கத்திரிக்காய், வாழைக்காயை நறுக்கித் தண்ணீரில் போட்டு வைப்பார்கள். ஆனால் நான் போடுவதில்லை. எப்போக் கறி சமைக்கணுமோ அதற்குச்சிறிது முன்னரே நறுக்குவேன். நறுக்கிய உடனே சமைத்துவிடுவேன்.

கத்திரிக்காயைப் புளி ஜலத்தில் வேக வைத்துப் பண்ணும் முறை ஒன்று உண்டு. அதைப் பின்னர் பார்ப்போம். இப்போப் புளி ஜலம் சேர்த்து அல்லது சேர்க்காமல் பொடி போட்டு வதக்கும் முறை பார்ப்போம்.
உப்பு தேவையான அளவுக்கு, மஞ்சள் பொடி கால் டீஸ்பூன். புளி ஜலம் தேவையானால் ஒரு கரண்டி. வறுத்துப் பொடிக்க 2 மிளகாய் வற்றல், கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், மிளகு கால் டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன். எல்லா சாமான்களையும் நன்கு சிவக்க வறுத்து ஆற வைத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றிக் கொண்டு சமையல் எண்ணெயைத் தாராளமாக ஊற்றிக்கொள்ளவும். கடுகு மட்டும் தாளித்தால் போதும். பெருங்காயப் பொடி சேர்த்துக்கொள்ளவும். நறுக்கிய கத்திரிக்காயை அதில் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி போட்டுக்கொண்டு சிறிது நேரம் வதக்கவும். தேவையானால் ஒரு கரண்டி புளி ஜலம் சேர்க்கலாம். சிறிது வதங்கிய பின்னர் பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொஞ்ச நேரம் நன்றாக வதக்கவும். கத்திரிக்காய்த் தனித்தனியாக வரும் என்பதோடு எண்ணெய் கறியிலிருந்து பிரிய ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைக்கவும். இது வற்றல் குழம்போடு சேர்த்துத் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். 

23 comments:

  1. குறித்துக்கொண்டிருக்கிறேன்.   சாதாரண வகைகளில் செய்ததுண்டு.  புளிஜலத்தில் குக்கரில் ஒரு விசில் வைத்து எடுக்கக் கூடாதோ?

    ReplyDelete
    Replies
    1. குக்கரில் காய்களை வேக விடுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. அதிலும் சிலர் கீரையைக் குக்கரில் வைக்கின்றனர். கீரையை மூடி வைத்து வேகவிடுவதே சரியில்லை. அதிலுள்ள விஷ உப்புக்கள் வெளியேற வழி செய்ய வேண்டும். அதே போலத் தான் மற்றக் காய்களும். நான் எப்போவுமே குக்கரில் காய்களை வேகவிட்டதில்லை. அப்படிப் பாத்திரம் இல்லாமல் வேகவிட்டால் அது உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சுண்டல் வகையறாக்கள் தான்! குக்கரை மூடாமல் மற்றக் காய்களை வேக விட்டது உண்டு பாத்திரம் பத்தாமல் போனால்.

      Delete
    2. முந்தி நானும் அந்த தப்பை செஞ்சிருக்கேன் ஆனா ப்போ தான் வித்யாசம் தெரியுது மூடாமல் வதக்குவதன் அருமை 

      Delete
    3. பொதுவாக நம் சமையலையே திறந்து வைத்துச் செய்வதே சரி என்கின்றனர். மூட வேண்டும் எனில் ஒரு கரண்டியைப் போட்டு அதைக் கொஞ்சம் திறந்து வைத்து மூடுவதே சரி! நான் அப்படித் தான் மூடி வைப்பேன். சமைத்துத் தாளிதம் எல்லாம் ஆனபின்னர் மூடி வைக்கலாம்.

      Delete
    4. ஆறாமல் இருக்கும் என்பதோடு வாசனையும் போகாமல் இருக்கும்.

      Delete
  2. வாழைக்காய் காரக்கறிதான் பெரும்பாலும்.   பொடிமாஸ் கூட எப்போதாவதுதான்.  அதுவும் எ ப சாறு எல்லாம் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக எந்தச் சமையலுமே நாம் செய்யும் விதத்தில் செய்து வைத்தால் சாப்பாட்டில் ருசியும், ஆவலும் வரும். காய்கள் நிறையச் சாப்பிடுவோம். இப்போதெல்லாம் இயந்திரமயமாக ஆகிவிட்டது.

      Delete
  3. கத்தரிக்காயும் அவ்வண்ணமே.  பெரும்பாலும் வதக்கல்தான்  பொடி தூவிக் கறி செய்தும் பல நாட்களாச்சு....

    ReplyDelete
  4. சும்மா வதக்கினாலும் அதில் ஒரு நாள் வெங்காயம்சேர்த்து வதக்குங்கள். ஒரு நாள் உருளைக்கிழங்கும், கத்திரிக்காயுமாக வதக்கிப் பாருங்கள். குஜராத்தி முறையிலும் பண்ணிப்பார்க்கலாம்.

    ReplyDelete
  5. வாழைக்காய் புளியிட்டக்கறி நான் செய்திருக்கிறேன் .அவள் விகடனில் திருமதி டி என் .சேஷன் ரெசிபி கொடுத்தாங்க .அக்கா தாமரை கிழங்கு எப்படி இருக்கும் அதை எப்படி சமைப்பாங்க ?நீங்க செய்ததுண்டா ?

    ReplyDelete
    Replies
    1. தாமரைக்கிழங்கு பார்க்க மெலிந்து போன முள்ளங்கி மாதிரி நீளமாக இருக்கும். அடுத்த பதிவில் படம் போடுகிறேன். நன்கு சுத்தம் செய்து அப்படியே காய வைத்து நறுக்கி வற்றலாகப் பயன்படுத்தலாம். உள்ளே கூடாக இருக்கும். வெண்டைக்காய் வற்றல் மாதிரி இருக்கும். ஆனால் வெண்டைக்காயின் விதைகள் இருக்காது. அல்லது மோரில் உப்புச் சேர்த்து ஊற வைத்துப் பின்னர் அப்படியே எண்ணெயில் வறுக்கலாம். அதை வெயிலில் பிழிந்து காய வைத்தும் வற்றல் ஆக்கியும் வறுத்துச் சாப்பிடலாம். அம்மா இருந்தவரை தாமரைக்கிழங்கு வற்றல் மரச்சீனிக்கிழங்கு அப்பளாம் எல்லாம் வரும். இப்போல்லாம் நீனைவுகள். ஆனால் தில்லியில் நிறையக் கிடைக்கும். அங்கே போனால் வாங்கிச் சமைப்பேன். மத்தவங்களுக்குச் சமைக்கத் தெரியாது என்பதால் வாங்கவே மாட்டார்கள்.

      Delete
    2. இதன் ஹிந்தி பெயர் என்னக்கா ? இங்கே பஞ்சாபியர் கடை இருக்கு தேடிப்பார்க்கிறேன் ..காய்ந்து சுருங்கின பனங்கிழங்கு மாதிரி பார்த்திருக்கேன் அது என்ன ? திருமதி சேஷன் ரெசிப்பி படிச்சதில் இருந்து எனக்கு அதை சுவைக்க ஆசை .ஆநா canned வெரைட்டி இருக்கு அதை வாங்க பயம் எனக்கு 

      Delete
    3. நாங்க lotus root என்று கேட்டுத் தான் வாங்கினோம். எதுக்கும் வெங்கட்டைக் கேட்டுப் பார்க்கலாம். Will search in the dictionary also.

      Delete
    4. ஏஞ்சல் தாமரைக் கிழங்கு அக்கா சொல்லிருக்காப்ல வற்றல் தான் .

      அதை கமல் கா கண்ட் அல்லது கமல் கக்டி, அக்கா சொல்லிருக்காப்ல லோட்டஸ் ரூட். நம்ம வீட்டுல் வற்றல் தான் போட்டதுண்டு ஏஞ்சல்.

      நல்லாருக்கும் வற்றல். குழம்பில் வறுத்துப் போட்டும் (சுண்டைக்காய் வற்றல் மணத்தக்காளி போல) சாப்பிடலாம் நல்லாருக்கும். நான் குழம்பில் போடுவதாக இருந்தால் கடைசியில் செர்விங்க் டைம்ல போடுவது. மாமியாருக்கு மட்டும் முன்னரே போட்டுருவேன் கடிக்க கஷ்டப்படுவாங்கனு

      கீதா

      Delete
    5. கமல் கக்கடி என்று சொல்லுவார்கள் எனக் கேள்வி. ஆனால் அதான் சரியான பெயரானு தெரியலை.

      Delete
  6. //அமாவாசைக்கறி// - வாழைக்காயை அரை அரையாகத் திருத்தி இதே முறையில் செய்வோம். அதுக்கு வாழைக்காய் அரைக் கரேமதுன்னு சொல்வோம் (எபில கூட வந்திருக்கு)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே, காணோமேனு நினைச்சேன். நானும் படிச்ச நினைவு இருக்கு.

      Delete
  7. சில சமயம், பின்னூட்டம் போட்டுட்டோமான்னு நினைவுக்கு வருவதில்லை. இதுக்கு போட்டுவிட்டேன் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன், அப்பவே படித்துவிட்டேன் என்பதால்.

    இன்னைக்கு வரைக்கும் பின்னூட்டம் வரலை என்றதும் போடலை என்று தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க பார்க்கலைனு நினைச்சேன் நெல்லைத்தமிழரே!

      Delete
  8. நான் தளங்களுக்கு எ.பி மூலமாத்தான் வருவேன். அன்றன்றைக்கு பெரும்பாலும் படித்துவிடுவேன். படிக்கும் டிவைஸ் மடிக்கணினியாக இருந்தாலோ இல்லை ஐபேடாக இருந்தாலோ முடிந்தபோது கருத்திட்டுவிடுவேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால் ஐபேட் அல்லது அபூர்வமான மொபைல் வழி தட்டச்சு செய்யறேன்னு அர்த்தம்.

    ReplyDelete
  9. அக்கா நம்ம வீட்டுல அமாவாசைனா வாழைக்காய்தான் ஆனா மிள்கு குழம்பு, மிளகு போட்டு வாழைக்காய் கறி (உ ப, மி மி வ வறுத்து பொடி) அல்லது கறிவேப்பிலைக் குழம்பு, மி ர என்றுதான் செய்வது. து ப சேர்க்காம பாசிப்பருப்புல உப, மி, மிவ வறுத்து பொடி போட்டு கொஞ்சம் தேங்காயும் போட்டு செய்வதுண்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அமாவாசை அன்று பருப்புச் சேர்க்கணும் என்பதால் நாங்களும் கலத்துக்குப் பாசிப்பருப்பாவது போடுவது உண்டு. ஆனால் மிளகு குழம்பெல்லாம் இல்லை. மிளகுதான் சேர்க்கணும்னு எங்க வீடுகளில் கட்டாயம் இல்லை. முன்னெல்லாம் (பத்து வருஷங்கள் முன்னர் வரை) பாசிப்பருப்புப் பாயசம் அல்லது ஏதேனும் ஒரு பாயசம் செய்து பச்சடி பண்ணுவேன். இப்போ நோ பாயசம். அவர் சாப்பிடுவதில்லை. பச்சடி எப்போவானும் பண்ணிடுவேன்.

      Delete