எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, October 10, 2019

பாரம்பரியச் சமையலில் நாட்டுக்காய்களில் கறி வகைகள்!

Image result for அவரை, கொத்தவரை   Image result for அவரை

வேக வைத்துச் செய்யும் கறி வகைகள். பொரியல் என்றும் சொல்கின்றனர். இதில் சிலவற்றுக்குத் தேங்காய் மட்டும் போட்டால் போதும். சிலவற்றுக்குப் பாசிப்பருப்பும் வேக வைத்துச் சேர்க்க வேண்டும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் நாட்டுக் காய்களில் கறி வகைகள். நாட்டுக்காய்களில் கொத்தவரைக்காய், அவரைக்காய், கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, வாழைக்காய், பயத்தங்காய், புடலங்காய், பறங்கிக்காய், பூஷணிக்காய், போன்றவை உள்ளன. முதலில் கொத்தவரை, அவரை வகைகளில் பார்ப்போம்.

கொத்தவரைக்காய்க் கறி/அவரைக்காய்க் கறி இரண்டுமே நான்கு பேருக்குக் கால்கிலோ வாங்கிக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு தேவைக்கு. தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், தாளிக்க எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல்

கொத்தவரைக்காய்க் கறியானாலும் சரி, அவரைக்காய்க் கறியானாலும் சரி இரண்டுமே ஒரே மாதிரித் தான் பண்ணணும். ஆகவே ஏதேனும் ஒன்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும். அதே போல் மற்றதையும் செய்து கொள்ளலாம்.

ஓர் வாணலி அல்லது அலுமினியம் சட்டியை எடுத்துக் கொண்டு ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு அலம்பி நறுக்கிய காயைப் போட்டு நன்கு வதக்கவும். தேவையான நீர் ஊற்றவும். காய்கள் மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றலாம். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். பத்து நிமிடத்தில் காய் நன்கு வெந்து விடும். வெந்த காயை ஓர் வடிதட்டில் கொட்டி நீரை வடிக்கவும். {அந்த நீர் தேவையானால் எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் தக்காளிச் சாறு சேர்த்து மிளகு பொடி போட்டுக் குடிக்கலாம். உப்பு தேவையில்லை.} பின்னர் காய் வேக வைத்த அதே வாணலியை நன்கு அலம்பிக் கொண்டு அடுப்பில் வைத்துச் சூட் செய்து தாளிக்கத் தேவையான எண்ணெயை ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் போதும். எண்ணெயில் கடுகு போட்டுப் பொரிந்ததும் உளுத்தம்பருப்பைச் சேர்க்கவும். மி.வத்தலையும் சேர்த்து வடிகட்டி வைத்திருக்கும் காயைப் போடவும். உடனேயே தேங்காய்த் துருவலையும் போட்டு நன்கு கிளறிக் கொடுக்கவும். எங வீட்டில் இதில் கொஞ்சம் போல் சர்க்கரையும் சேர்ப்போம். சர்க்கரை போட்டால் தேங்காயின் ருசியை மேம்படுத்திக் காட்டும். பின்னர் கீழே இறக்கிப் பரிமாறப் பயன்படுத்தலாம்.

Image result for பயத்தங்காய்   Image result for பீன்ஸ்

பயத்தங்காய் அல்லது சாட்டைப் பயறு என அழைக்கப்படும் காயிலும் இதே மாதிரிப் பண்ணலாம். பீன்ஸிலும் இதே போல் பண்ணலாம்.

Image result for புடலை
புடலை அடுத்துப் புடலங்காயில் இதே போல் தேங்காய் போட்ட கறி. புடலையில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். ஆகவே நறுக்கிவிட்டு வேக வைத்தால் சரியாக வராது. நன்கு அலம்பிய புடலங்காயைத் துளி போல் நறுக்கி வாயில் போட்டுப் பார்க்கவும். சில சமயங்களில் கசப்பாக இருக்கும். நல்ல புடலங்காயில் குடல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதை ஓர் வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொண்டு ஒரு நீளப் புடலை எனில் ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பைக் கழுவி அதில் சேர்க்கவும். தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொஞ்ச நேரம் வைக்கவும். அரை மணி நேரம், ஒரு மணி நேரத்தில் புடலங்காய் நன்றாக நீர் விட்டுக் கொண்டிருக்கும்.

தாளிக்கத் தேவையான எண்ணெய், கடுகு, உபருப்பு, மிவத்தல், தேங்காய்த் துருவல் எடுத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல் ஒன்றிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் இருக்கலாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல் போட்டுக் கொண்டு எல்லாம் நன்கு சிவந்து பொரிந்ததும் நறுக்கிய புடலங்காயை நீர் போகப் பிழிந்து அடுப்பில் உள்ள வணலியில் போடவும். வாணலிக்குப் பொருத்தமான தட்டைப் போட்டு மூடி வைக்கவும். அடுப்பைத் தணித்தே வைக்கவும். சிறிது நேரத்துக்கு ஒரு முறை தட்டைத் திறந்து நன்கு கிளறி விடவும். புடலங்காய் நன்கு வெந்து பருப்பும் வெந்து வந்ததும் தேங்காய்த் துருவலையும், விரும்பினால் சர்க்கரையும் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். நன்கு கிளற்வும். கீழே இறக்கி வைத்துப் பரிமாறவும்.


43 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த காய்கறிகள் வந்துவிட்டன. புடலங்காயை ஊற வைக்கணுமா.
    இத்தனை நாட்களாகத் தெரியாது. இங்கே வருகிற புடலங்காய்
    தடிமனான தோலுடன் இருப்பதற்கு நீங்கள் சொல்வதைப் போல செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
    இதோ நாளைக்கு வரும் புடலங்காய் கீதா சொன்ன முறைப்படி செய்ய வேண்டும்.
    அவரைக்காய் ,கொத்தவரங்காள் வதக்கிக் கறி செய்வது அவ்வளவு சுவை.
    அவரைக்காயைப் பார்த்தே நாட்களாகி விட்டது.

    மிக மிக நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் புடலை தான் இன்னிக்கு. ஆனால் கூட்டு. இங்கே அவ்வளவெல்லாம் தடிமன் இல்லை. ஆனால் வரி ஓடி இருக்கு. நம்ம ஊரில் இந்த மாதிரி வரி ஓடினால் சாப்பிடக் கூடாது என்பார்கள். இன்.கே கிடைக்கிறதேனு சந்தோஷப்பட்டுக்கணும். வேறே வழி? தில்லியிலும் இந்த மாதிரிப் புடலை தான் கிடைக்கும்.

      Delete
    2. புடலங்காயை பொடியாக நறுக்கி மிளகு நிறைய சேர்த்து செய்யும் பாசிப்பருப்பு தேங்காய்க் கூட்டு நன்றாய் இருக்கும்!

      Delete
    3. அதை நாங்கப் பொரிச்ச குழம்புனு சொல்லுவோம் ஸ்ரீராம்.ஸ்ராத்தங்களில் புடலை அல்லது அவரை மிளகு போட்ட பொரிச்ச குழம்புதான் பண்ணுவோம். வெறும் நாட்களிலும் மாறுதலுக்குப் பண்ணுவது உண்டு. அப்போ மஞ்சள் பொடி சேர்ப்போம். ஸ்ராத்தம் எனில் நோ மஞ்சள் பொடி.

      Delete
  2. ஒரு அல்ப சந்தேகம்.  நாங்கள்கடுகு உளுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்தே போடுவோம்.   கடுகு பொரியும்,  உப சற்றே சிவக்கும் நேரம் அடுத்ததைப் போடுவோம்.  தனித்தனியாகவா போடவேண்டும்?  பெரிய வித்தியாசம் இல்லைதானே?  

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்ரீராம், நானும் சேர்த்துத் தான் போடுவேன். ஒரு தரம் அப்படிப் போட்டப்போச் சின்னப் பெண் ஒருத்தி புலம்பித் தீர்த்துவிட்டாள். கடுகு வெடிக்கும் முன்னே போட்டுட்டாங்கனு! :) சமையல் நிகழ்ச்சி நடத்தும் செஃப் அனைவரும் சேர்த்தே போடுவார்கள். கவனித்திருக்க மாட்டீர்கள்.

      Delete
    2. கவனித்திருந்திருப்பேன்.  அதனால்தான் இப்போது இப்படிப் படித்ததும் சந்தேகம் வந்து விட்டது!

      Delete
    3. நான் எப்போவும் தனித் தனியா போடுவேன். கடுகு வெடித்ததும் உ.பருப்பு. ஆனா இப்போ கடைகள்ல தாளிக்க என்று கடுகு + கொஞ்சம் உ.பருப்பு சேர்த்தே விற்கிறார்கள்

      Delete
    4. இதெல்லாம் கூடக் கடைகளில் வர ஆரம்பித்து விட்டனவா? ஸ்பென்ஸர், ரிலையன்ஸ் போன்ற பெரிய வணிக வளாகங்களில் காய்களை வெட்டி நிறுத்து எடை போட்டுப்பாக்கெட் போட்டு வைத்திருப்பார்கள். பார்த்திருக்கேன். ஆனால் இதெல்லாம் தெரியாது. கொஞ்ச நாட்கள் போனால் சாப்பாடை ஊட்டி விடக் கூட ஆட்களோ, ரோபோவோ வரலாம்! :P :P :P :P

      Delete
    5. 80களில் மும்பையில் அனேகமா எல்லா இரயில் நிலையத்தின் வெளிலயும், காய்கறிகள் வெட்டி ரெடியா வச்சிருப்பாங்க. கலவையான காய்கள் இல்லைனா தனித்தனியாக. அப்புறம் வெங்காயம் உரிச்சு பாக்கெட்ல வச்சிருப்பாங்க. இரயிலில் இறங்கும்போதே இவற்றை வாங்கி வேகமாக சமையலை முடிக்கத் தோதாக.

      Delete
    6. எனக்குத் தெரிந்து அறுபது, எழுபதுகளில் கூட மஹாராஷ்ட்ராவில் அம்மாதிரிக் கிடைத்திருக்கிறது. அதோடு இல்லாமல் அலுவலகம் போய்விட்டு வரும் பெண்மணிகள் காலையில் குறிப்பிட்ட அளவு கோதுமை மாவைக் கொடுத்துவிட்டுப் போனால் மாலை அவங்க வரும் நேரம் சூடாக ஃபுல்கா ரொட்டி சுட்டுக் கொடுப்பாங்களாம். வீட்டுக்கு அதை எடுத்துட்டுப் போய் ஏதேனும் சப்ஜி அல்லது தால் செய்து சாப்பிட்டுக்கலாம்.

      Delete
    7. சென்னையிலும் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் தெருக்களில் காய்கள், கனிகள், பூக்கள், வீட்டுச் சாமான்கள் எனப் பல வருடங்களாக விற்று வருகிறார்கள். நான் சுமார் 10,12 வயதில் இருந்தே அதைப் பார்த்து வருகிறேன்.

      Delete
  3. கொத்தவரை, அவரை நீங்கள் சொல்வது போலதான் பொரியல் செய்வதுண்டு.   சமயங்களில் தேங்காய் சற்றே தூக்கலாய் அமைந்துவிடும்.  பயத்தங்காய் தஞ்சாவூர்க்காலத்துக்குப்பின் செய்ததில்லை. அதாவது அம்மா கையால் செய்து சாப்பிட்டதோடு சரி!

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் நிறையக் கிடைக்குமே பயத்தங்காய்? ஒரு சிலர் கொத்தவரையைக் காசியில் விட்டவர்கள் மாற்றாகப் பயத்தங்காயைப் பண்ணுவார்கள். ஆனால் ஸ்ராத்தங்களில் சேர்ப்பதில்லை. ஏன்னு தெரியலை.

      Delete
    2. பயத்தங்காய் விரும்பித் தேடிப் பார்ப்பதில்லை.  முன்னர் அதை சும்மாவே சாப்பிடுவோம்!

      Delete
    3. அது சென்னையில் கிடைக்கும் பயத்தங்காய் போல் முற்றலாக இருக்காது. பிஞ்சுப் பயத்தங்காய். பாலாக இருக்கும். நானும் நிறையச் சாப்பிட்டிருக்கேன்.

      Delete
  4. ஏனோ எனக்கு பீன்ஸ் பிடிப்பதில்லை.  அது செய்தால் மற்றவர்கள் சாப்பிடுவார்கள்.  பீன்ஸில் உசிலி செய்வார் பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. பீன்ஸின் தரத்தைப் பொறுத்து ஸ்ரீராம். உருண்டை பீன்ஸ் நன்றாக இருக்கும். நீளமான பச்சை பீன்ஸ் நார் நிறைய இருக்கும். பெரும்பாலோர் அதான் வாங்கறாங்க! அதே போல் அவரையிலும் பட்டை அவரை, நீள அவரை என இருவிதம் உண்டு. எனக்குப் பட்டை அவரை பிடித்தால் மாமாவுக்கு நீள அவரை பிடிக்கும். :)))) பருப்பு உசிலிக்கு பீன்ஸ் தான் ஒத்துப் போகும். என்றாலும் கொத்தவரையிலும் செய்யலாம். எங்க ஸ்ரீரங்கம் காடரர் அவரைக்காயிலும் செய்யறார்.

      Delete
    2. எப்படி ஆயினும் ஏனோ எனக்கு பீன்ஸ் பிடிப்பதில்லை!

      Delete
    3. பட்டை அவரை கறிக்கு நல்லது.  நீள அவரை குழம்புக்கு நல்லது!  அதில் ஒரு வாசனை கூடுதலாய் வரும் என்று நினைக்கிறேன்.

      Delete
    4. இரண்டு அவரையுமே சாம்பாரில் போட்டால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் அந்த விதைகளோடு! நாங்க எங்க வீடுகளில் பண்ணும் வெந்தயப்பருப்புக்குழம்பில் ரொம்பவே ருசியாக அமையும்.

      Delete
    5. உருண்டை பீன்ஸ் நல்லாருக்கும். சில சமயம் மத்த பீன்ஸும் கூட இங்கு நல்ல இளசாக நாரில்லாமல் கிடைக்கிறது. நான் அவ்வப்போது எது கிடைக்குதோ அதை வாங்குவேன்.

      அவரையில் பல வெரைட்டி உண்டு. ஊரில் பாடவரைக்காய் என்று வீட்டிலேயே கொடியில் காய்க்கும். சின்ன அவரை நன்றாக இருக்கும்ம்.

      கொத்தவரையிலும் உசிலி செய்வதுண்டுக்கா....

      நம் வீட்டில் காய்கள் எதுவும் விலக்கு இல்லை என்பதால் எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும் என்பதால் அத்தனை மண்டை காயாது. மெனுவும் சொல்லப்பட்டுவிடும் எனவே ஆக்ஷன் மட்டுமே!! ஹிஹிஹி..

      கீதா

      Delete
    6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம் உங்களுக்குப் பிடிக்காது லிஸ்ட்டே பெரிசா இருக்கும் போல!!!! ஹா ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      Delete
    7. பீன்ஸில் உசிலியெல்லாம் கல்யாணம் ஆகி வந்தப்புறமாத் தான். என் அம்மா வாழைப்பூ, கொத்தவரை இரண்டிலும் உசிலி செய்வார். எப்போவானும் அபூர்வமா அப்பா ஊரில் இல்லைனா அப்போப் புடலங்காயில் செய்வார் அல்லது முருங்கைக்கீரையில் செய்வார்.

      Delete
  5. புடலை நறுக்கியதுமே செய்துதான் வழக்கம்.   நீர்விடக்காத்திருந்ததில்லை.  எப்படி ஆயினும் வேக, அதே நேரம்தானே எடுக்கும்?  பாசிப்பருப்பு சேர்த்து செய்ததில்லை.  நீலப்புடலைசென்னையில் கிடைப்பதில்லை. அல்லது எங்கள் கண்ணில் படுவதில்லை.  இரண்டுக்கும் ருசியில் என்ன வித்தியாசம்?

    ReplyDelete
  6. நீலப்புடலை??????? புடலை வதக்கினால் வதக்கும்போது நீர் விட்டுக்கும். நீர் சுண்டும்வரை வதக்கும். இதெல்லாம் நல்ல புடலை என்றால் தான்! இப்போ வர புடலங்காய்களுக்கு இந்த விதி இல்லை. நீளப்புடலை இப்போது கிராமங்களில் மட்டுமே கிடைக்கிறது. நாங்க கும்பகோணம் போனால் போகும்வழியில் திருவையாறு அல்லது தாராசுரத்தில் நீளப்புடலை கிடைக்கும். வாங்குவோம். சமயங்களில் கிராமத்திலேயே கொண்டு வருவார்கள். கீரையும், புடலையும் அங்கிருந்து கட்டாயம் வாங்கி வருவோம்.

    ReplyDelete
    Replies
    1. நீளப்புடலை தான் அடிக்கும்போது நிறப் புடலை ஆகிவிட்டிருக்கிறது!  இந்த 'பாம்புப் புடலை'யை நான் தஞ்சாவூரில் பார்த்ததோடு சரி..    

      இதை 'கல்கட்டா புடலங்காய்' என்று விற்பார்கள்!  கல் கட்டாவிட்டால் நீளமாக நேராக வராமல் வளைந்து வளைந்து வேறு வரும்!

      Delete
    2. நாங்க தோட்டம் வைத்திருந்த காலங்களில் புடலை, அவரை, பாகல் நிறையவே போட்டுச் சாப்பிட்டிருக்கோம். அநேகமாக நீளப்புடலை தான்.

      Delete
    3. நீளப் புடலை இங்க நான் இருக்கும் இடத்தில் நிறைய கிடைக்குது. (நீளம் ஒரே நீளளளமா 6 அடிக்கு மேல் இருக்கு). ஒரு தடவை வாங்கிப்பார்த்தால் நார் அதிகம். அதுனால 1 அடி 1 1/2 அடி நீளத்தில் வரும் மெல்லிய குட்டைப் புடலைதான் இப்போ வாங்கறேன்.

      Delete
    4. சில இடங்களில் இப்படித்தான் புடலை இம்மாதிரி நார் நாராகக் கிடைக்கும். ஆனால் நீங்க கிராமங்களில் வாங்கினால் நன்றாக இருக்கும். மதுரையில் யானைக்கல் அருகே இருக்கும் காய்கறிச் சந்தையில் நன்றாகவே கிடைக்கிறது. அதே போல் திருநெல்வேலியிலிருந்து தென்காசி வரை போகும் நெடுஞ்சாலையில் உள்ள காய்க்கடைகளில் நிறையக் காய்கள் விதம், விதமாக!

      Delete
    5. நான் நீள பாம்புப் புடலை பார்த்தால் அதைத்தான் வங்குவது. குட்டை புடலை ஓகே என்றாலும் நீளம் கிடைக்காதப்ப அதுதன்.

      காயை இப்படித்தான் செய்வதுண்டு என்றாலும் இதுவரை வடிகட்டிச் செய்ததில்லை. அதாவது தண்ணீரை வடிகட்டியதே இல்லை. அப்படியெ தான்..

      கீதா

      Delete
    6. நெல்லை புடலையைத் தொட்டுப் பார்த்தாலே இளசா முத்தலா என்று தெரிந்துவிடும்.

      கீதாக்கா நான் புடலை, சௌ சௌ, வெள்ளரிக்காய், சுரைக்காய் இதெல்லாம் கட் செய்யும் போது நுனியைக் கடு செய்துவிட்டு கட் செய்த இடத்தில் வைத்து தேய்த்தால் நுரை நுரையாக வரும்...அது எடுத்துவிட்டால் கசக்காதுனு பல வருஷங்களுக்கு முன்ன யாரோ சொல்லி அப்பலருந்து அப்படித்தான் செய்கிறேன்..

      கீதா

      Delete
    7. நாங்க சுரைக்காய் வாங்குவதே இல்லை. சாப்பிட மாட்டோம். ஒதுக்கப்பட்ட காய்களில் அதுவும் ஒன்று. அதே போல் கோவைக்காயும் சாப்பிட்டதில்லை. பார்க்கக் கூடப் பார்த்தது இல்லை. சென்னையில் சித்தப்பா வீட்டுக்கு வந்து தான் முதல் முதல் கோவைக்காய்க் கறி சாப்பிட்டேன். அவங்க "தொண்டங்காய்" என்பார்கள்.

      Delete
  7. நீங்கள் சொன்ன இரண்டு வகைக் கரேமதும் எனக்கு மிகவும் பிடித்தவை. அவரை மட்டும், நார்லாம் எடுத்து செய்யறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்.

    பூசனிக்காய்ல கரேமது நான் செய்ததே இல்லை. நீர் விட்டுக்கொண்டு கூட்டுபோல் ஈஷிக்கொள்ளாதோ?

    ReplyDelete
    Replies
    1. எந்தப் பூஷணி? மஞ்சள் பூஷணியில் அடிக்கடி செய்வதுண்டு.

      வெள்ளை பூஷணியில் துண்டங்களைக் கொஞ்சம் பெரிதாகப் போட்டுச் செய்யலாஅம்.

      வெ பூ பச்சடியும் நல்லாருக்கும். நான் சூப்பும் செய்வதுண்டு.

      அப்புறம் அதை அரைத்து விழுதாக மோரில் போட்டுக் கறிவேப்பிலை, கொத்தமல்லி ப மி எல்லாம் போட்டும் குடிக்கலாம்...நல்லாருக்கும்

      கீதாக்கா நானும் கொத்தவரை அவரை பொரியல்/கறி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்ப்பதுண்டு...

      கீதா

      Delete
    2. மஞ்சள், வெள்ளை இரண்டிலும் பண்ணலாம். மஞ்சள் பூஷணியில் செய்வதைக் கல்யாணக் கறி என்பார்கள். வெள்ளைப் பூஷணியில் என் மாமியார் வீட்டில் செய்து தான் பார்த்தேன்.

      Delete
    3. வெள்ளைப்பூஷணி, புடலை இரண்டிலும் வதக்கிப் பச்சடி பண்ணலாம். ஆனால் நம்ம ரங்க்ஸுக்குப் பிடிக்காது. பிஞ்சுப் புடலை காய்த்ததுமே மாமனார் பறித்து வந்து பச்சடி செய்யச் சொல்லுவார்.

      Delete
  8. அப்படி ஒண்ணும் அவரையில் நார் உரிப்பது கஷ்டமெல்லாம் இல்லை. நிமிஷமா ஆயிடும். பூஷணிக்காய்க் கறி எனக்கும் தெரியாது. முதல் முதலாக எங்க மாமியார் வீட்டில் செய்து தான் பார்த்தேன். அதே போல் சௌசௌக் கறியும். சென்னையில் சித்தப்பா வீட்டிலும் பண்ணுவார்கள். மாமியார் வீட்டிலும் சௌசௌ கறி பண்ணுவார்கள். எங்க அப்பா வாங்கவே மாட்டார். வாங்கினால் கூட்டு அல்லது துருவித் துவையல்! நல்ல பூஷணிக்காய் நீர் விட்டுக்கொண்டாலும் ஈஷிக்கொள்ளாது. துண்டமாக நிற்கும்.

    ReplyDelete
    Replies
    1. சௌ சௌவிலும் நம் வீட்டில் பொரியல் செய்வதுண்டு...

      கீதா

      Delete
    2. செளசெள கரேமது எனக்குப் பிடிக்கும். நான் நிறைய தடவை செய்திருக்கிறேன். புடலையும் அப்படித்தான். வெண்பூசனி ஒரு முறை செய்துபார்க்கிறேன்.

      செளசெள தேங்காய் அரைத்த கூட்டு, பாசிப்பருப்பு கூட்டு, கரேமது, துவையல் எல்லாத்துக்கும் ரொம்ப நல்லா இருக்கும்.

      Delete
    3. நம்மவருக்கு சௌசௌவே பிடிக்காது. அதே போல் குடமிளகாயும்! இரண்டும் வாங்கவே மாட்டார். நான் இருபது முறை சொன்னால் (கத்தினால்) ஒரு முறை ஒரே ஒரு சௌசௌவும் ஒரே ஒரு குடமிளகாயும் வாங்கிட்டு வருவார். மத்தது எல்லாம் நிறைய இருக்கும். :P :P :P

      Delete
    4. கீதாக்கா இந்தக் கமெண்டைப் பார்த்து சிரித்துவிட்டேன்!!

      கீதா

      Delete