எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, October 14, 2019

பாரம்பரியச் சமையல்களில் தேங்காய் சேர்த்த கறி வகைகள்!

புடலங்காய்க் கறிக்குப் பாசிப்பருப்பை வேக வைத்து கிள்ளுப் பதமாகச் சேர்த்தாற்போல் பீன்ஸ், கொத்தவரை, அவரைக் கறிகளிலும் சேர்க்கலாம். ஆனால் எங்க வீட்டில் இதைப் பெரும்பாலும் ஸ்ராத்தத்தன்று தான் செய்வோம். மற்ற நாட்களில் தேங்காய் மட்டும் போடுவோம். ஏனெனில் சில வீடுகளில் ஸ்ராத்தத்தின் சமையலில் தேங்காய் சேர்ப்பதில்லை. ஆகவே ருசி கொடுக்கப் பருப்பைச் சேர்ப்போம். இப்போதெல்லாம் தேங்காய் சேர்த்துச் சமைப்பதால் பிரச்னை இல்லை. இப்போது இன்னும் சில பாசிப்பருப்பு, தேங்காய் சேர்த்த கறிகள்.

முட்டைக்கோஸ், சௌசௌ, காலி ஃப்ளவர் போன்றவற்றிலும் முன் சொன்ன மாதிரி பொடியாக நறுக்கிக் கொண்டு பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொண்டு காய் வேகும்போது சேர்த்து வேகவிட்டுப் பின்னர் வடிகட்டிக் கொண்டு கறி செய்யலாம். அதே போல் பூஷணிக்காய்க் கறியும் செய்யலாம் என்றாலும்  பூஷணிக்காய்க் கறிக்கு நல்ல கெட்டிப் பூஷணியாக இருக்க வேண்டும். இல்லை எனில் ஜலம் விட்டுக் கொண்டு ஓட ஆரம்பிக்கும். பூஷணிக்காயைத் துண்டங்களாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொண்டு பாசிப்பருப்பை ஊற வைத்துச் சேர்த்து வேக வைக்க வேண்டும். பூஷணிக்காய் நசுங்கும் பதத்தில் கீழே இறக்கிக் கொண்டு ஜலத்தை வடிகட்டவும். அந்த ஜலத்தைக் கீழே கொட்டாமல் மிளகு பொடியும் தக்காளிச் சாறும் சேர்த்து சூப் மாதிரிக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது.

Image result for பூஷணிக்காய்

கடாயில் எண்ணெய் விட்டுக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக்கொண்டு வெந்து வடித்தெடுத்த பூஷணிக்காய்த் துண்டங்களைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு சர்க்கரை ஒரு டீஸ்பூனும் தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூனும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். ஜலம் இருந்தால் அது சுண்டிய பின்னர் கீழே இறக்கவும். இது எல்லோருக்கும் பிடிக்காது. பூஷணிக்காய் பிடித்தால் இதுவும் பிடிக்கும். சௌசௌ கறியும் கிட்டத்தட்ட இதே போல் தான்.

Image result for பறங்கிக்காய்


பறங்கிக்காய் புளி குத்திய கறி: இதற்குப் பறங்கிப் பழமாக இல்லாமல் காயாக இருக்க வேண்டும். பறங்கிக்காய் தோல் பச்சையாக இருந்தாலும் சமயங்களில் உள்ளே மஞ்சள் கொடுத்திருக்கும். அது பிடிக்கும் எனில் அதில் பண்ணலாம். ஆனால் எங்கள் வீட்டில் பெரும்பாலும் பறங்கிக்காய் உள்ளேயும் வெள்ளையாக இருப்பதைத் தான் வாங்குவோம்.நான்கு பேர்களுக்கு இதைச் செய்யத் தேவையான பொருட்கள்

பறங்கிக்காய் சுமார் 2 கீற்று. இந்தக் கீற்றுப் போடுவதை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி பார்க்கலாம். ஸ்ரீரங்கத்தில் எங்களுக்கு ஒரு கீற்று வாங்கினாலே போதுமானது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இரண்டு கீற்று கட்டாயம் தேவைப்படும். புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து ஊற வைத்துக்கொண்டு ஜலம் எடுத்துக்கொள்ளவும். உப்பு, மஞ்சள் பொடி. தாளிக்கத் தேங்காய் எண்ணெய்,மி.வத்தல் 2, கடுகு, உ. பருப்பு.தேங்காய்த் துருவல். இதற்குச் சர்க்கரை தேவையில்லை என்றாலும் சிலர் வெல்லம் சேர்ப்பார்கள்.

புளி ஜலத்தைக் கொதிக்க வைத்துக் கொண்டு அதில் நறுக்கிய பறங்கிக்காய்த் துண்டங்களைப் போட வேண்டும். பறங்கிக்காய் சீக்கிரம் வெந்து விடும் என்பதால் உப்பு, மஞ்சள் பொடி உடனே சேர்க்கலாம். பறங்கிக்காய் நசுங்கும் பதத்தில் வெந்ததும் எடுத்து வடிகட்டிக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டுக் கடுகு,உளுத்தம்பருப்பு, மி.வத்தல் தாளித்துக் கொண்டு பெருங்காயம், கருகப்பிலை சேர்த்து வெந்த பறங்கிக்காயைப் போட்டுத் தேங்காய்த்துருவல் கொஞ்சம் போல் வெல்லம் சேர்த்துக் கிளறிக்கீழே இறக்க வேண்டும். இதிலேயே வாழைக்காய்க் கறிக்குச் செய்வது போல் மி.வத்தல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் வறுத்துக் கொண்டு அந்தப் பொடியைப் போட்டும் கிளறலாம். மி.வத்தல் மட்டும் போட்டால் காரம் அதிகம் தெரியாது. காரம் வேண்டும் என்பவர்கள் இம்மாதிரிப் பொடி வறுத்துச் சேர்க்கலாம். பறங்கிக்காயின் தித்திப்பு மட்டுப்பட்டுத் தெரியும். என்றாலும் எல்லோருக்கும் இது பிடிக்காது.சின்னப் பிஞ்சுப் பறங்கிக்காயே இதற்கு நன்றாக இருக்கும். அதை இளங்கொட்டை என்பார்கள்.   இளங்கொட்டை என்பது பறங்கிக்காய் முற்றும் முன்னர் வெளுப்பாக இருக்கும்போதே பறிப்பார்கள். அதில் பால் கூட்டுச் செய்யலாம். சர்க்கரை/வெல்லம் இரண்டும் போட்டுப் பால் கூட்டுச் செய்வார்கள். அடைக்குப் போடலாம். துவையல் அரைக்கலாம். ஓலன் பண்ணலாம். எல்லாவற்றையும் வரும் நாட்களில் பார்ப்போம்.

அநேகமாகத் தேங்காய் சேர்த்த கறிவகைகள் எல்லாமும் பார்த்தாலும் வாழைக்காய்ப் பொடிமாஸ் பார்க்கவில்லை. வாழைக்காயைப் பொடிமாஸ் மட்டும் இல்லாமல் வேறு வேறு விதங்களிலும் பண்ணலாம். ஒவ்வொன்றாகப் பார்ப்போம். நல்ல முற்றிய மொந்தன் (நாட்டு) வாழைக்காயாக இரண்டு எடுத்துக்கொள்ளவும்.

Image result for வாழைக்காய்

வாழைக்காய்ப் பொடிமாஸ் செய்யும் முறை.

நல்ல முற்றிய வாழைக்காயைச் சூடான வெந்நீரில் போட்டு ஐந்து நிமிஷம் போல் கொதிக்க விடவும். வாழைக்காயின் பச்சை நிறத் தோல் நிறம் மாறும் வரை இருந்தால் போதும். எல்லாப் பக்கங்களும் திருப்பி விட்டு இப்படி வேக விட்டு எடுத்ததும் ஆறவிட்டுத் தோலை உரித்தால் நன்கு உரிக்க வரும். பின்னர் காரட் துருவலில் வாழைக்காயையும் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து (தே.எண்ணெய் நல்லது. பிடிக்காதவர்கள் ஏதேனும் சமையல் எண்ணெய்) கடுகு, உ,பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளித்துக் கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்க்கவும். அதில் துருவிய வாழைக்காயைப்  போட்டு உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைக்கவும். இப்போது பொடிமாஸில் எலுமிச்சம்பழம் அரை மூடி பிழியவும்.  இதற்கு அளவெல்லாம் போடவில்லை. வாழைக்காய் பெரிதாக இருந்தால் நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 2 வாழைக்காயே போதும். வாழைக்காய் நடுத்தரமாக இருந்தால் மூன்று தேவைப்படும். மற்றவை அவரவர் விருப்பம் போல் போட்டுக் கொள்ளலாம்.

பிசைந்து சாப்பிடும் வாழைக்காய்ப் பொடி! தொட்டுக்கவும் செய்யலாம்.

நன்கு முற்றிய வாழைக்காய் இரண்டு

மி.வத்தல் நான்கு(காரம் வேண்டுமெனில் ஒன்றிரண்டு கூடச் சேர்க்கலாம்)

உப்பு, பெருங்காயம்

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன்

இதற்கு வாழைக்காயைச் சுட்டால் நன்றாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் யார் வீட்டிலும் கரி கிடையாது. ஆகவே க்ரில் இருப்பவர்கள் அதில் சுடலாம். இல்லாதவர்கள் சென்ற பொடிமாஸ் முறையில் சொன்னது போல் வாழைக்காயைத் தோல் நிறம் மாறும் வரை வேக வைக்கவும். தோலை உரித்துத் துருவிக்கொள்ளவும்.

நல்லெண்ணெயில் முதலில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொண்டு மிளகாய் வற்றலை நிறம் மாறாமல் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். கடுகு, உபருப்பு, கபருப்பு ஆகியவற்றையும் எண்ணெயில் போட்டுத் தாளிதம் செய்வது போல் வறுத்து எடுக்கவும். முன்னெல்லாம் இந்த மிவத்தல், கடுகு தாளிதத்தோடு உப்புச் சேர்த்து அம்மியில் வைத்து ஓட்டிக் கொண்டு பின்னர் சுட்ட வாழைக்காயைத் தோலுரித்துச் சேர்த்து அந்தக் காரத்தோடு வாழைக்காயையும் சேர்த்து நன்கு ஓட்டிப் பிரட்டி எடுப்பார்கள். இப்போதெல்லாம் சுட்ட வாழைக்காய் ஏது? அம்மியும் ஏது? சென்னை, அம்பத்தூரில் இருந்தவரை கரி அடுப்பும் இருந்தது. அம்மியும் இருந்தது. இங்கெல்லாம் அது இல்லை என்பதால் தாளிதத்தை மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாகப் பொடித்துக் கொண்டு ஒருவாணலியில்  கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் கடுகு (மறுபடி) மட்டும் போட்டுக் கொண்டு வாழைக்காய்த் துருவலையும் உப்பு மற்றும் பொடி செய்த காரப்பொடியைப் போட்டுச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். விடாமல் இரண்டு நிமிஷமாவது கிளறணும். பின்னர்  சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பச்சடி ஏதேனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

26 comments:

  1. நிறைய்ய ஐட்டங்கள் இருக்கிறது.  கமெண்ட் போட்டுக்கொண்டு பின்னர் மறுபடி வந்து படிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஸ்ரீராம்... இந்த 'உணவுப் பதிவுகள்' நாம ரெஃபர் பண்ணுவதற்கு உதவியா இருக்கும். வெறும்ன இடுகைக்காக பின்னூட்டம் நான் போட்டாலும், செய்ய நினைக்கும்போது இந்தத் தளத்துக்கு வந்து பார்ப்பேன்.

      படங்கள் போடலையேன்னு நான் குறைபட்டுக்கொள்ளப் போவதில்லை. முதலில் எல்லாவற்றையும் டாகுமெண்ட் பண்ணட்டும். அதுவே ரொம்ப உபயோகமானது.

      Delete
    2. நிறைய எல்லாம் இல்லை. ஸ்ரீராம், அவசரமே இல்லை. மெதுவாகப் படியுங்கள். ஒண்ணும் தலை போகிற சமாசாரம் இல்லை.

      Delete
    3. நெல்லைத்தமிழரே, நீங்க மீனாக்ஷி அம்மாளின் "சமைத்துப்பார்" வேதவல்லியின் சமையல் புத்தகம் லிஃப்கோ வெளியீடு எல்லாம் பார்த்தீர்களானால் குறிப்புகள் தான் இருக்கும். காய்களின் படங்களெல்லாம் கூடப்போட்டிருக்க மாட்டாங்க! மீனாக்ஷி அம்மாள் புத்தகம் ஒருவேளை இப்போது படங்களோடு வெளிவரலாம். என்னிடம் இருப்பது மிகப் பழைய பதிப்பு. புத்தகம் கையிலேயே எடுக்க முடியாமல் தூள் தூளாக வரும். அவசரத்துக்குக் கூட எதுவும் பார்க்க இயலாது. புதுசு வாங்க நினைச்சு வாங்கவே இல்லை. பெண்ணுக்கு ஆங்கிலத்தில் மூன்றும் வாங்கிக் கொடுத்தேன்.

      Delete
    4. மீனாட்சி அம்மாள் சமையல் புத்தகம் (பஹ்ரைனில் இருந்தபோது) அல்லயன்ஸ் புத்தகக் கம்பெனியில் வாங்கினேன். சும்மா படிக்க. அப்புறம் அங்கேயே ஒரு மன்றத்துக்கு கொடுத்துவிட்டேன். (அதுல படம் கிடையாது. பழைய செய்முறை) அவங்க காலம் 70 வருடங்களுக்கு முன்னால. இப்போ எவ்வளவு வசதி இருக்கு.

      Delete
    5. நெல்லைத் தமிழரே, பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்னர் என் மகள்,மருமகள் ஆகியோருக்கு வாங்கிய பௌத்தகங்களில் கூட (மீனாக்ஷி அம்மாள், சமைத்துப்பார் ஆங்கிலப் பதிப்பு) படங்கள் ஏதும் இல்லை. ஆகவே படங்கள் போடாமல் கூட சமையல் புத்தகங்கள் வரும் என்று அறிக. நான் பார்த்த பல சமையல் புத்தகங்கள் படங்கள் இல்லாமலே இருந்திருக்கு. மங்கையர் மலர், அவள் விகடன்,மங்கை போன்ற மாதாந்தரிப் புத்தகங்கள் போட ஆரம்பிச்சதும் தான் படங்களோடு செய்முறைகள். சமையலில் ஆர்வமும் புரிதலில் சந்தேகமும் இல்லாதவர்கள் எப்படி எழுதினாலும் புரிந்துகொள்வார்கள். இத்தனை சமையல் முறைகளையும் நான் செய்யும்போது படம் எடுப்பது எனில் எனக்கு அதே வேலையாக இருக்கணும். மாற்றி, மாற்றிச் சமைச்ச்சாலும் அன்றைய சமையலின் போது படம் எடுக்கக் கூடிய சூழ்நிலையும், கவனமும், முக்கியமாக நினைவும் இருக்கணும். அதோடு எனக்கு விளம்பரங்கள் தேவை இல்லை. படிக்கிறவங்க நிறைய என்பது எனக்கு வரும் தனி மடல்கள், வாட்சப் செய்திகள், முகநூல் மெசெஞ்சர் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. கூடிய விரைவில் முதல் பாகம் மின்னூலாக வெளியிடும் ஆவலும் இருக்கு.

      Delete
    6. மீனாக்ஷி அம்மாளின் செய்முறைகள் பழையவை அல்ல. அவற்றையே பெரும்பாலும் சமைக்கிறோம். மசால் தோசையிலிருந்து, காலன், ஓலனிலிருந்து ஸ்ராத்த சமையல், பண்டிகை சமையல் வரை அவங்க தொடாததே இல்லை. அவங்க கொடுத்திருக்கும் அளவுகளே பழைய அளவுகள். இப்போது அவர் பேத்தி, கொள்ளுப்பேத்தி எல்லாம் அவற்றுக்கு ஈடான இப்போதைய அளவைக் கொடுத்தும், பழைய அளவுகளோடும் போட்டு இருக்காங்க. இங்கே நான் வாங்கிக் கொடுத்திருப்பது அந்தப் புத்தகங்களே!

      Delete
  2. எல்லா குறிப்புகளும் பார்த்துக் கொண்டேன் அக்கா. எல்லாமே பெரும்பாலும் செய்வது. வாழைக்காய் பொடி சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது போல...அப்புறம் பறங்கிக் காய் வைத்துச் செய்வது..பூஷணி எல்லாம்...

    நோட் செய்தும் வைத்துக் கொண்டேன் கீதாக்கா...

    இதற்கு முந்தைய பதிவில் முருங்கை இலை ரசம் சொல்லிருந்த நினைவு. அதைப் பார்க்கவில்லை அது செய்ததில்லை. முருங்கை ரசம் செய்த்ருக்கேன்...ஆனால் முருங்கைக் கீரை ரசம்...பார்க்கிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, அநேகமாக அனைவரும் அறிந்ததே தான். என்றாலும் ஆவணப்படுத்துவதற்காகவே போடுகிறேன். தெரிந்தவர் ஒருவர் புஸ்தகா.காம் மூலம் போடுங்க என்கிறார். அவ்வளவெல்லாம் அதிர்ஷ்டம் இருக்கானு தெரியலை! பார்ப்போம்.

      Delete
  3. எங்கள் வீட்டிலும் ஸ்ராத்த சமையலில் தேங்காய் சேர்ப்பதில்லை. 

    காலிப்ளவரில் தேங்காய் கறி செய்தால் அல்பமாக நினைப்போம்! அதெல்லாம் வெங்காயம், பூண்டு சேர்த்துதான்! அதனால் நானும் என் இளையவனும் மட்டும்தான் சாப்பிடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், சொன்னால் சிரிப்பீர்கள்! நாங்க காலிஃப்ளவரில் தேங்காய், பருப்புப் போட்டுக் கறியே பண்ணுவதில்லை. மாமியார் பண்ணுவார். இங்கே மருமகள் கறி, பாசிப்பருப்புப் போட்டுக் கூட்டூ எல்லாம் செய்கிறாள். ஆனால் நாங்க காலிஃப்ளவர் வாங்கினால் சப்பாத்திக்கு மட்டும் தான். அல்லது சாதம் கலப்போம்.

      Delete
  4. திருத்தம்  :   ஸ்ராத்தத்தில் தேங்காய் சேர்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இப்போதெல்லாம் தேங்காய், மிளகு, ஜீரகம் சேர்த்துச் சமைத்தால் தான் கொஞ்சமானும் சாப்பிடுகிறார்கள்.

      Delete
  5. பூசணி கறியென்பது அது சொதசொதவென்று இருப்பதாலேயே பிடிக்காது!!!!  பரங்கிக்காய் பிடிக்கவே பிடிக்காது!   அம்மா காலத்தில் பால்கூட்டு செய்து சாப்பிட்டதுண்டு -பிஞ்சு பரங்கிக்காய் போட்டு.   பரங்கிக்காய் வாங்கினால் பெரும்பாலும் வெந்தயக்குழம்புதான்!

    ReplyDelete
    Replies
    1. கெட்டிப்பூஷணிக்கறி சொதசொதவென்றெல்லாம் இருக்காது ஸ்ரீராம்! ஆனாலும் எனக்கும் பிடிக்காது என்பது வேறே விஷயம்.

      Delete
  6. வாழைக்காய் பொடிமாஸில் இதுவரை எலுமிச்சம்பழம்சாறு பிழிந்து இல்லை.  அதேபோல வெந்த வாழைக்காயைப் பிசைந்துஎடுத்துக்கொள்வோம்.  துருவியது இல்லை.  வாழைக்காய்ப்பொடி செய்து நீண்ட நாட்களாச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், வாழைக்காயை நீங்க குக்கரில் வைத்துக் குழைய வேக வைப்பீங்க போல! அதான் கையால் பிசைந்து கொள்கிறீர்கள். எங்க வீடுகளில் வாழைக்காய்த் துருவல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளக் கூடாது. ஆகவே நன்றாகத் துருவித் தான் பண்ணுவோம். பொலபொலவென இருக்கும். மஹாலய அமாவாசை அன்று பண்ணி இருந்ததைப்பையர் பார்த்துட்டுத் தேங்காய்ச் சாதம் போல இருக்கு என்றார்.

      Delete
  7. ஆவ் !! தேங்காய் இல்லாத நாளும் சமையலும் இல்லவேயில்ல எங்க வீட்டில் .வாழைக்காய் துருவி செய்வது செய்திருக்கிறேன் ..சுட்டு செய்வது தெரியதஹி எனக்கு .இங்க வீட்டில் எலெக்ட்ரி மற்றும் GAS க்ரில் இருக்கு அதனால் செய்யப்போறேன் நான் விரைவில் 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், சுட்டும் பண்ணிப் பாருங்க! நன்றாக இருக்கும். முன்னெல்லாம் இந்தப் பொடி செய்தால் எங்க வீட்டில் இரவுகளில் தான் சுட்டுப் பண்ணுவாங்க. கொஞ்சம் காரமாகவும் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு அதிகம் வேண்டாம்னு மோர் சாதத்துக்குத் தொட்டுக்க மட்டும் கொஞ்சமாப்போடுவாங்க. நிறையப்போடுவதில்லைனு குறையா இருக்கும். ஹிஹி, கல்யாணம் ஆகி வந்தப்புறமாத் தலை சங்கராந்தியில் கனுவன்று மாமியார் வீட்டில் இந்தப்பொடி, துவையல், சாம்பார்னு தான் செய்தாங்க. அப்போத் தான் என்னோட பத்தொன்பது வயது வாழ்க்கையில் முதல் முதலாக வாழைக்காய்ப் பொடியைச்சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டேன். எங்க பிறந்த வீட்டில் சாப்பாடு விஷயத்தில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடு மாமியார் வீட்டில் இல்லை என்றாலும் எனக்கு மட்டும் நான் மருமகள் என்பதால் ஒரு சில கட்டுப்பாடுகள், நிபந்தனைகள்,நிர்ப்பந்தங்கள் என உண்டு. அத்தனையிலும் வாழைக்காய்ப் பொடி சாதம் சாப்பிட்டது மனதில் கொஞ்சம் சந்தோஷம் கொடுத்தது. :)))))))

      Delete
  8. வாழைக்காய் பொடிமாஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா பாருங்க, அதில் வெங்காயமும் சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும் (சிறுவயதில் எங்க ஹாஸ்டலில் சாப்பிட்டிருக்கேன். நானும் செய்வேன்). விட்டால் எல்லாவற்றிர்க்கும் வெங்காயம் சேர்த்து செய்முறை சொல்லும் நீங்கள் இதுக்கு விட்டுட்டீங்களே.

    நான் குக்கரில் ஒரு விசிலுக்கு வாழைக்காயை வேகவைப்பேன். ஆனால் நீங்க சொல்லும் முறைதான் சரியானது

    ReplyDelete
    Replies
    1. வாழைக்காய்ப் பொடிமாஸில் எல்லாம் வெங்காயம் சேர்க்க மாட்டோம் நெல்லைத்தமிழரே. வாழைக்காயிலேயே வெங்காயம் சேர்த்துப் பண்ணியதில்லை. முதல் முதலாக 96 ஆம் வருஷம் கோயம்புத்தூரிலே ஒரு நிச்சயதார்த்தத்திலே வாழைக்காயை வெங்காயம் சேர்த்து வேறே என்ன என்னமோ மசாலாக்கள் எல்லாம் போட்டுக் கறியும் இல்லாமல், கூட்டும் இல்லாமல் ஒரு பதார்த்தம் சாப்பிட்டோம்.

      Delete
    2. குக்கரிலே சாதமே வைப்பதில்லை. அப்புறமா வாழைக்காயை எங்கே வைக்கப் போறேன்! எப்போவானும் உருளைக்கிழங்கு வேக வைக்க, அபூர்வமா பீட்ரூட் வாங்கினால் வேக வைக்க, சுண்டல்கள் பண்ண, சேப்பங்கிழங்கு வேக வைக்க என்று தான் குக்கரே! அதிலும் சின்னதாக வைச்சிருக்கேன். அதான். பருப்புக் கூட நேரடியாகவே வேக வைக்கிறேன்.

      Delete
  9. எனக்கு வாழைக்காய் பொடி பிடிக்காது. மனைவிக்குப் பிடித்தது. நான் செய்யச் சொல்வதில்லை, எப்போப் பார்த்தாலும் ஸ்டாண்டர்டா சில ஐட்டங்களே சொல்லுகிறேன் என்று அடிக்கடிக் குறை பட்டுக்குவா.

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டில் நேர்மாறாகனும் சொல்லலாம், இல்லைனும் சொல்லலாம், திடீர் திடீர்னு அவருக்குச் சில உணவுகளின் மேல் ஆசை வரும்! அப்போ அது பண்ணவேண்டும். இல்லைனா சாதாரணக் குழம்பு ரசம் இவை தான். வாரம் ஒரு நாள் கலந்த சாதம் இருக்கும். துவையல் பண்ணுவேன். மைசூர் ரசம் மட்டும் வைப்பேன். மோர்க்குழம்பு, ஞாயிறன்றோ திங்களன்றோ வெஜிடபுள் சாதம், தக்காளி சாதம், தக்காளித் தொக்கு சாதம் இப்படி மாற்றி மாற்றிப் பண்ணுவேன்.

      Delete
  10. சீக்கிரமே பொடிமாஸும், பொடியும் செய்துவிடுவது என்று சபதம் எடுத்துக் கொள்கிறேன்...    "மெய்ன்....   ஈஸ்வர் கே ஸபத் லேத்தா  ஹூம்...."

    ReplyDelete
    Replies
    1. வெளுத்துக்கட்டுங்க. நல்ல புளிக்காத தயிர்ப்பச்சடியோடு இந்த வாழைக்காய்ப் பொடிமாஸைச் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்க! ருசி அபாரமா இருக்கும். :)

      Delete