எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 28, 2019

பாரம்பரியச் சமையல்கள்! மிளகு குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு!

பாரம்பரியச் சமையல்களில் அடுத்து நாம் பார்க்கப் போவது மிளகு குழம்பு. இது பொதுவாக மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் அதிகம் பண்ணுவார்கள். ஆனாலும் பெண்கள் பிள்ளை பெற்றால் ஒரு மாதம் போடும் பத்தியச் சாப்பாடில் எந்தப் பருவத்தில் பிள்ளை பெற்றிருந்தாலும் அந்தப் பிரசவித்த பெண்களுக்கு மிளகு குழம்பு செய்து வைத்துப் போடுவார்கள். சிலர் இதில் சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கிச் சேர்ப்பார்கள். சிலர் பூண்டு சேர்ப்பார்கள். இரண்டும் சேர்ப்பவர்களும் உண்டு. ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது சாதாரண மிளகு குழம்பு மட்டும். மற்றவை பின்னர். மிளகு குழம்புக்குத் தொட்டுக்கொள்ளப் பருப்புத் துவையல் நல்ல துணை. ஆகவே இரண்டின் செய்முறையும் சேர்த்தே கொடுத்திருக்கேன்.

மிளகு குழம்பு செய்யலாமா இப்போ?  கூடவே தொட்டுக்கப் பருப்புத் துவையல். இரண்டையும் பார்க்கலாம்.


முதல்லே மிளகு குழம்பு. தேவையான பொருட்கள்: ஒரு பெரிய எலுமிச்சை அளவுக்குப் புளியை நீரில் ஊறவைத்துக் கரைத்து எடுத்துக்கொள்ளவும். இதற்கு வறுத்து அரைக்க


மிளகாய் வற்றல் ஆறு அல்லது எட்டு(நான் மிளகே அதிகம் சேர்ப்பேன்; அதோடு மிளகுக் காரத்தைத் தணிக்க என சீரகமோ, கொ.மல்லியோ சேர்ப்பதில்லை. கொஞ்சம் மிளகு காரம் நாக்கில் தெரியணும்) பெருங்காயம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், இவ்வளவு காரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். ஒரு டேபிள் ஸ்பூன் உ.பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன். எல்லாப் பொருட்களையும் நல்லெண்ணெயில் நன்கு வறுத்துக்கொள்ளவும் ஆற வைக்கவும். பின்னர் நன்கு நைசாக அரைத்துக்கொண்டு புளிக்கரைசலில் கலந்து கொள்ளவும். ஒரு சிலர் கடலைப்பருப்பும் வறுக்கும்போது சேர்ப்பார்கள். பொதுவாகக் கடலைப்பருப்புச் சேர்த்தால் காரம் குறையும் என்பதோடு குழம்புகளும் கெட்டியாக இருக்கும். ஆனால் மிளகு குழம்பில் நான் கடலைப்பருப்பு சேர்ப்பதில்லை. தேவை எனில் உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன் சேர்க்கலாம்.


தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேவையான உப்பு குழம்பில் சேர்க்க.


கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு போடவும். வெடித்ததும், மஞ்சள் பொடி சேர்த்துவிட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை மெதுவாக ஊற்றவும். தேவையான உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும். சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் குழம்பைக் கலந்து சாப்பிடலாம். நன்கு கொதித்த குழம்பு ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.


பருப்புத் துவையல்: மி.வத்தல் 2 அல்லது மூன்று, மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம், புளி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்/அல்லது கடலைப்பருப்பு/அல்லது இரு பருப்பும் கலந்து அவரவர் விருப்பம் போல். நான் துவரம்பருப்பு மட்டுமே போடுவேன். வறுக்க நல்லெண்ணெய்.


கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், து.பருப்பு, மிளகு போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். பின்னர் கடைசியில் தேங்காய்த் துருவலையும் போட்டு வறுக்கவும். உப்பு, புளி சேர்த்துக் கொண்டு நைசாக மிக்சியில் அரைக்கவும். மிளகு குழம்போடு தொட்டுக்கொள்ள சைட் டிஷாக இது அருமையாக இருக்கும். ஜீரகம், மிளகு அரைத்துவிட்டுச் செய்யும் ரசத்தோடும் பருப்புத் துவையல் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வாரம் ஒரு நாள் இப்படிச் சாப்பிடலாம். வயிறு லேசாகும்.
ஏற்கெனவே மிளகு குழம்பு  செய்முறை தெரிந்தவர்கள் இருந்தாலும் இது கொஞ்சமானும் மாறுபடும் என நினைக்கிறேன். அடுத்து மாங்கொட்டைக் குழம்பு. இதுவும் கிட்டத்தட்ட மிளகு குழம்பு செய்முறை தான் என்றாலும் மாங்கொட்டையைத் தட்டி உள்ளே உள்ள பருப்பை வைத்து அரைக்க வேண்டும்.


மாங்கொட்டைக் குழம்பு!

நான்கு பேர்களுக்கு மாங்கொட்டைக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்

மாங்கொட்டையை  எடுத்துக் கொண்டு கடினமான தோலைத் தட்டி உடைத்து உள்ளே உள்ள பருப்பைத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.  அநேகமாய் அது நான்கு பேருக்கான குழம்புக்குப் போதும்.  சின்னதாக இருப்பதாய்த் தோன்றினால் இன்னொரு கொட்டையை உடைத்து உள்பருப்பையும் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் குழம்பிற்குச் சிலர் மாங்காய்த் தளிரையும் போடுவார்கள்.  தளிரை மாங்காய் வற்றல் என்றும் சொல்வார்கள்  மாங்காய்க் காலத்தில் தோலோடு மாங்காயை நீளமாக அரை அங்குல கனத்தில் வெட்டி எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து ஊற வைத்துப் பின்னர் வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.  இதுவே மாங்காய் வற்றல்.  இந்த மாங்காய் வற்றல் இல்லாமலும் மாங்கொட்டைக் குழம்பு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகு    இரண்டு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் ஆறு

உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

ஜீரகம்(தேவைப்பட்டால்) அரை டீஸ்பூன்

தனியா இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

புளி ஒரு எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கரைக்கவும்)

தாளிக்க மற்றும்  குழம்பு  கொதிக்கவிடத் தேவையான எண்ணெய் நல்லெண்ணையாக இருத்தல் நலம்.  அது இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு குழிக்கரண்டி

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

மாங்கொட்டைப் பருப்பு

மாங்காய் வற்றல்(தேவையானால்)  ஊற வைத்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

முதலில் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு  மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, ஜீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.  பெருங்காயம், கருகப்பிலையையும் வறுத்துக் கொள்ளவும்.  இத்துடன் மாங்கொட்டைப் பருப்பையும் உப்பு, புளி இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.  அல்லது புளி ஜலத்தைக் கரைத்து வைத்துக் கொண்டு, உப்புச் சேர்த்து மேற்சொன்ன சாமான்களை வறுத்து, மாங்கொட்டையை வறுக்காமல் சேர்த்து அரைத்துப் புளிக்கரைசலில் கரைத்துக் கொள்ளலாம்.

கல்சட்டி அல்லது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கடுகு போடவும். அரைத்துக் கரைத்த விழுது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் ஊற்றிக் கொண்டு தாளிதம் செய்தவற்றில் கொட்டிக் கலக்கவும்.  மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுப்பை மெதுவாக எரிய விட்டு நிதானமாய்க் கொதிக்க விட வேண்டும்.  கொதிக்க ஆரம்பித்ததும் ஏற்கெனவே வேக வைத்த மாங்காய் வற்றலைச் சேர்க்கலாம். பின்னர் குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வருகையில் அடுப்பை அணைக்கவும்.  குழம்பை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குறைந்தது பதினைந்து நாட்கள் பயன்படுத்தலாம்.

43 comments:

  1. செய்முறைல எதுக்கு //கல்சட்டி அல்லது உருளியில் // இந்த வேலை? யாரும் செய்து பார்க்கக்கூடாது என்றா? கல்சட்டி, உருளை உபயோகப்படுத்துவது எனக்கு முந்தைய அதற்கும் முந்தைய ஜெனெரேஷன்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எந்தப் பாத்திரத்தில் சமைப்பது பழக்கமோ/வசதியோ அதை நீங்கள் பயன்படுத்திக்கலாம் நெல்லைத் தமிழரே! இந்தக் காலத்திலும் கல்சட்டி பயன்படுத்துபவர்கள் உண்டு. மேலும் இளைய தலைமுறைக்கும் அதைக் குறித்துத் தெரிந்திருக்கணும். எங்க பெண்ணே என்னைக் கல்சட்டி வாங்கி வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள். எங்கள் உறவுப் பெண்களிலேயே பலர் மண் சட்டிகளில் சமைக்கின்றனர். இப்போதைய இளம்பெண்கள் நான் ஸ்டிக் ஆரோக்கியத்துக்குக் கேடு எனச் சொல்கின்றனர். சமீபத்தில் கல்யாணம் ஆன என் அண்ணா பெண் இரும்புச் சட்டி, இரும்பு தோசைக்கல் தான் பயன்படுத்துகிறாள். ஆகவே அவர்களுக்குக் கல்சட்டி பழகும் நாள் தொலை தூரத்தில் இல்லை.


      மேலும் செய்முறை தான் முக்கியம் எனப் படிப்பவர்கள் அவர்களுக்கு எந்தப் பாத்திரம் பழக்கமோ அதைப் பயன்படுத்திக்கொள்வார்கள். நிச்சயம் எவர்சில்வர் பாத்திரத்தில் அடியில் தாளித்து இதை எல்லாம் கொதிக்க வைக்க முடியாது அல்லவா? எனக்குத் தெரிந்து முகநூல் இளைய சிநேகிதிகள் பலரும் மண் சட்டியைப் பயன்படுத்துபவர்கள் ஆதி வெங்கட் உள்பட!

      Delete
    2. என் அம்மா கற்சட்டியிலும் செய்வார், வாணலியிலும் செய்வார்.

      Delete
    3. முன்னெல்லாம் வீடுகளில் விதவிதமான கல்சட்டிகள் இருக்கும். ஆகவே அவற்றில் ஒன்றில் செய்து அப்படியே மூடி வைத்திருப்பார்கள். குளிர்சாதனப் பெட்டியெல்லாம் ஏது? அதை தினம் ஒரு தரம் குமுட்டியில் வைத்துச் சூடு செய்து சாப்பிடக் கொடுப்பார்கள். (பிள்ளை பெற்ற பெண்களுக்கு)

      Delete
    4. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டால் எந்த ஒரு பொருளும் அதன் ஒரிஜினல் ருசியை இழந்து விடுகிறது என்பது என் அபிப்ராயம்.

      Delete
    5. நான் பெரும்பாலும் ஊறுகாய்கள், புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு போன்றவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதில்லை.

      Delete
  2. மிளகு குழம்பு, பருப்புத் துவையல் நிச்சயம் நல்ல காம்பினேஷன்.

    ஏன் பருப்புத் துவையலில் மிளகு சேர்க்கச் சொல்லறீங்க? ஏற்கனவே மிளகு குழம்பும் காரமல்லவா?

    என் மனைவி, கண்டதிப்பிலி சாத்துமது, பருப்புத் துவையல் செய்வாள். அதான் காம்பினேஷன் என்பாள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பம் போல் மிளகு சேர்க்காமலும் செய்து பாருங்கள் நெல்லைத் தமிழரே! பத்தியத்துக்கு என்றால் மி.வத்தல் குறைவாகவும் மிளகு தூக்கலாகவும் இருக்கும்/இருக்கணும். அன்றாடச் சாப்பாட்டிற்கு என்றால் மி.வத்தல் மட்டும் போதுமெனில் அப்படியே செய்து கொள்ளுங்கள்.

      Delete
  3. உங்கள் செய்முறை மிக மிக உபயோகம். நான் அதனை வரிசையாக செய்துபார்க்கப்போகிறேன். மிக்க நன்றி. (மாங்கொட்டை குழம்பு செய்வது சந்தேகம்)

    ReplyDelete
    Replies
    1. மாங்கொட்டைப்பருப்பு வயிற்றுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து! ஆகவே ஒரு முறை மாங்கொட்டையிலும் முயன்று பாருங்கள்.

      Delete
  4. அருமை அருமை.
    கீதாமா. ருசியோ ருசி. எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சின்ன வெங்காய சாம்பார் எவ்வளவு
    பிரசித்தமோ அவ்வளவு மிளகு குழம்பும் பருப்புத்தொகையலும்
    பிரசித்தம். எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    மாங்கொட்டைக் குழம்பு நிறைய பேருக்குத் தெரிந்து கூட இருக்காது.

    மிக மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ரசித்ததுக்கும் பாராட்டுக்கும் நன்றி. மாங்கொட்டைக்குழம்பு அறிந்தவர்கள் வெகு சிலரே!

      Delete
  5. மாங்கொட்டைக் குழம்பு அம்மா செய்து சாப்பிட்டிருக்கிறேன். பல வருடங்கள் ஆகிவிட்டது இப்படி மாங்கொட்டை குழம்பு சாப்பிட்டு. தில்லி வந்த பிறகு பல பாரம்பரிய சமையல்கள் எனக்கு வழக்கொழிந்து விட்டன.

    மிளகுக்குழம்பு, பருப்புத் துவையல் நல்ல காம்போ! மனைவி மிளகுக் குழம்பு செய்வதுண்டு. நான் செய்ததில்லை. செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இப்போது பலருக்கும் மாங்கொட்டைக் குழம்புன்னா என்னனு தெரியாது. :) நீங்க மிளகு குழம்பு செய்து வைத்துக் கொண்டால் அவசரத்துக்கு உதவும்.

      Delete
  6. கீதாக்கா மிளகுக் குழம்பு உ ப மட்டும் சேர்த்து அல்லது உ ப அப்புறம் து ப சேர்த்தும் நீங்கள் சொல்லியபடிதான். பெருங்காயம் வறுக்காமல் கடைசியில் பொடியாகச் சேர்ப்பார் பாட்டி. சேர்த்துக் கொதி வந்ததும் இறக்கிவிடுவார். சிலர் க ப வும் சேர்க்கறாங்க நீங்க சொல்லிருப்பது போல். ஆனால் நான் சேர்ப்பதில்லை.

    அப்புறம் மாங்கொட்டைக் குழம்பு என்றதும் என் பாட்டிதான் நினைவுக்கு வந்தார் அவருக்கு மிகவும் பிடித்தக் குழம்பு. அப்பாவைழிப் பாட்டி. மாமியார் வீட்டில் இருந்தப்ப அங்கு மாங்காய் காய்க்குமே அப்போ செய்ததுண்டு. சென்னையில் இருந்தவரை. இங்கு வந்து இன்னும் செய்யலை. நினைவுபடுத்திட்டீங்க. ஆனால் இதற்கு ஜீரகம் சேர்த்துச் செஞ்சதில்லை. கொ ம, உ ப, க ப, கொஞ்சமே கொஞ்சம் மிளகு, மி வ,வறுத்து அரைத்து...

    ஜீரகம் சேர்ப்பது குறித்துக் கொண்டுவிட்டேன் கீதாக்கா.

    பருப்புத் துவையல் தேங்காய் வறுக்காமல் செய்வாங்க. மி வ சும்மா பேருக்கு வைத்து...பெருங்காயம் சேர்த்ததில்லை. துவையல் கலர் நல்ல ஒரு மாதிரி க்ரீம் கலரில் தேங்காய் நிறைய அவைத்து அரைத்து மிகவும் நைசாக அரைத்து என்று செய்வாங்க

    உங்கள் குறிப்புகளும் குறித்துக் கொண்டுவிட்டேன் அக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, பொதுவாக் கடலைப்பருப்பு எதில் சேர்த்தாலும் காரம் குறையும், கெட்டியாக இருக்கும். ஆனால் நான் இந்த மாதிரிப் பத்தியக் குழம்புக்கெல்லாம் கடலைப்பருப்பு சேர்ப்பதில்லை. மிளகு காரம் தூக்கலாக இருக்குமோ என்பதால் ஜீரகம் சேர்த்தால் கொஞ்சம் காரம் குறையும். அவ்வளவு தான். எனக்கு இதில் எல்லாம் ஜீரகம் சேர்ப்பது அவ்வளவு பிடிக்காது. :)

      Delete
    2. ஓ கடலைப் பருப்பு சேர்த்தால் காரம்குறையுமா...கெட்டியாகும் என்று தெரியும்...காரம் குறையும் என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

      எனக்கும் இதில் எல்லாம் ஜீரகம் சேர்ப்பது க ப சேர்ப்பது விருப்பமில்லை கீதாக்கா. வித்தியாசம் இல்லாமல் போகும் என்பதும்.

      இன்று இங்கு உங்கள் ஸ்டைல் ரெசிப்பி. பருப்புத் துவையல்...

      கீதா

      Delete
    3. மற்றொன்று சொல்ல விட்டுப் போச்சு நம் வீட்டில் ப துவையலுக்கு புளி சேர்த்ததில்லை அக்கா.

      து ப மட்டும்தான் வறுப்பது.

      கீதா

      Delete
    4. இம்மாதிரிக் காரம் சேர்க்கும் குழம்பு வகைகளில் கடலைப்பருப்பு காரத்தன்மையைக் குறைக்கும். அதே வடை, அடை போன்றவற்றில் போட்டால் மிருதுவான தன்மையைக் கொடுக்கும். துவரம்பருப்பு அதிகமாகப் போட்டுக் கடலைப்பருப்பைக் குறைத்துப் போட்டு அடை தட்டிப் பாருங்கள்! அடை ரொம்பவே வறட்சியாகவும் விறைப்பாகவும் இருக்கும். இரண்டும் சமமாகப் போட்டால் அடை கொஞ்சம் மிருதுத்தன்மையுடனும் எண்ணெய்ப் பசையுடனும் இருக்கும்.

      Delete
    5. பருப்புத்துவையல், மிளகு குழம்பு, புளிக்காய்ச்சல் போன்றவற்றிற்கு என் அம்மா பழைய புளி தான் சேர்ப்பார். அதிலும் குமுட்டியில் போட்டுச் சுட்டுவிட்டுப் பயன்படுத்துவார். ஒரு சிலர் தோசை மிளகாய்ப் பொடியில் கூடக் கொஞ்சம் புளி சேர்ப்பார்கள். நான் வெல்லம் சேர்ப்பதால் தோசை மிளகாய்ப்போடிக்குப் புளி சேர்ப்பதில்லை. வெல்லம் காரத்தைத் தூக்கிக் காட்டாது. வயிற்றை ஒன்றும் செய்யாது. பொதுவாகத் துவையல் எனப் பண்ணும் பிசைந்து சாப்பிடும் துவையல்கள் அனைத்துக்கும் புளி சேர்ப்பது உண்டு. அதுவே சட்னி எனில் புளி இல்லை. தேங்காய்ச் சட்னிக்கு என் அம்மா வீட்டில் முன்னெல்லாம் அரைக்கரண்டி தயிர் சாப்பிடும்போது கலப்போம். இப்போதெல்லாம் அந்தப் பழக்கம் விட்டுப் போச்சு!

      Delete
    6. //(நான் மிளகே அதிகம் சேர்ப்பேன்; அதோடு மிளகுக் காரத்தைத் தணிக்க என சீரகமோ, கொ.மல்லியோ சேர்ப்பதில்லை. கொஞ்சம் மிளகு காரம் நாக்கில் தெரியணும்) // நான் ஜீரகம் சேர்ப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளேன்! :)

      Delete
  7. ஸ்ரீராமுக்கு இதெல்லாம் பிடிக்காது போல, இந்தப் பக்கமே காணோமே! :)))))

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது? உடம்பு சரியில்லை. இந்த உடம்புக்கு மிளகுக்குழம்பு சாப்பிட்டால் உணக்கையாக இருக்கும்! மிளகுக்குழம்பு ரொம்பப்பிடிக்கும். அம்மா செய்ததுபோல பாஸ் செய்வது இல்லை. ஏங்கும் நாக்கு!

      Delete
    2. உங்கள் பாஸ் இதைப் படித்தால் வருத்தப்படுவார். எப்படியும் உங்கள் சகோதரிகளுக்கு உங்க அம்மாவின் கைப்பக்குவம் கொஞ்சமானும் இருக்கும். அவங்களைக் கேட்டுச் செய்து தரச் சொல்லுங்க!

      Delete
    3. /உங்கள் பாஸ் இதைப் படித்தால் வருத்தப்படுவார். // - நீங்க வேற... அவர் இணையம் பக்கம் வரமாட்டார் என்ற தைரியத்தில் எழுதியதாக இருக்கும்.

      இரண்டு நாட்கள் தூறலுக்கே உடம்பு சரியில்லை என்று ஸ்ரீராம் சொல்கிறாரே!

      Delete
    4. நல்ல மழைன்னா உடம்பை ஏதும் செய்யாதுனு நினைக்கிறேன். இந்த மாதிரி அரைகுறைத் தூற்றல் இன்னமும் உஷ்ணத்தைக் கிளப்பி விடும். உடம்பு படுத்தும்.

      Delete
    5. //உங்கள் பாஸ் இதைப் படித்தால் வருத்தப்படுவார்.//

      பாஸ் படிக்கமாட்டார் என்கிற தைரியமும்தான்,,, அவருக்கு போன் பேசவே 24 மணி நேரம் போதாது! (இது ஒரு வம்பு!) ஆனாலும் பாஸும் அறிவார் என் கருத்தை.

      Delete
    6. //இரண்டு நாட்கள் தூறலுக்கே உடம்பு சரியில்லை என்று ஸ்ரீராம் சொல்கிறாரே!//

      மழை பெய்த நாளில் ஜில்லென்று குடித்ததால் வந்த வினை! சமயங்களில் நாட்டு இரவில் எழுந்து வெயில் காலமானாலும் தண்ணீர் குடித்தேன் என்றாலும் தொண்டை பிடித்துக் கொள்ளும்.

      Delete
    7. 24 மணி நேரமும் தொலைபேசியைப் பயன்படுத்துவார் என்பது ரொம்பவே ஓவரா இல்லையோ? :))))) அவருக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். பேசுகிறார். உங்களுக்குப் பொறாமை! :))))))))

      Delete
    8. மண்பானைத் தண்ணீர் என்றால் அவ்வளவு சீக்கிரம் தொண்டை கட்டாது! நீங்க குளிர்சாதனப் பெட்டியில் வைச்ச தண்ணீரைக் குடிச்சிருப்பீங்க! அது குடிக்கவே கூடாது!

      Delete
  8. மிளகு குழம்பில் பூண்டு சேர்த்து செய்வதுண்டு. து ப மட்டும் சேர்ப்போம். மற்ற பருப்புகள் சேர்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை பெற்றவர்களுக்கு மட்டுமே எங்க வீடுகளில் பூண்டு சேர்ப்பாங்க. ஆனாலும் அந்தக் குழம்பு தான் வேண்டும்னு பிடிவாதம் பிடித்துச் சாப்பிடுவாங்க வீட்டில் உள்ள மற்றவர்கள். :)

      Delete
  9. மிளகுக்குழம்பு பற்றி ஒரு நினைவு. என் அம்மா இதை ரொம்ப நன்றாகச் செய்வார்கள். என் அம்மா காலமாவதற்கு ஆறுமாதங்கள் முன்பு மதுரை சென்றிருந்தபோது எனக்காகச் செய்து கொடுத்தார்கள். அதில் என் மாமியாருக்காக பூண்டு போடாமல் கொஞ்சம் தனியாகச் செய்து கொடுத்தார்கள். அதைச்சென்னை எடுத்து வந்துஅம்மாவின் அம்மா, தங்கை உள்ளிட்ட உறவுகளுக்குக் கொஞ்சம் கொடுத்து விட்டு நீண்ட நாள் வைத்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குப் போட்ட கருத்து எங்கே போனதுனு தெரியலை. என் அம்மாவின் கடைசி நினைவுகளாக இம்மாதிரிச் சில சம்பவங்கள் எனக்கும் உண்டு. என்ன இருந்தாலும் அம்மா அம்மா தான்! யாரும் ஈடு இல்லை!

      Delete
    2. என்ன கருத்துப்போட்டீங்கன்னு தெரியவில்லை. சமையல் சம்பந்தமாக என் அம்மாவின் நினைவுகள் வாசனையானவை, சுவையானவை.

      Delete
    3. எங்கேயோ போயிடுத்தே அந்தக் கருத்து! தேடினேன் கிடைக்கலை! :( என் அம்மாவின் நினைவுகளும் இப்போ நினைச்சால் கூட அருமைதான்! அதுவும் இன்னிக்குப் பூஷணிக்காய்ப் பொரிச்ச கூட்டுப் பண்ணி இருந்தேன். அம்மாவையே மனசு சுத்திச் சுத்தி வந்தது.

      Delete
  10. பருப்புத்துவையளும் து ப மட்டும் போட்டுச் செய்வோம். மற்றபடி இதே முறைதான். பருப்புத்துவையல் சாதமும் கலந்துகொள்ளலாம் இல்லையோ...

    ReplyDelete
    Replies
    1. பருப்புத் துவையல் சாதமும் சாப்பிடலாம். பொதுவா எங்க வீட்டில் மிளகு குழம்பு என்றால் பருப்புத் துவையல் கட்டாயம் இடம் பெறும். அப்பளம் கூடச் சுட்ட அப்பளம் என்று தணலில் வாட்டித் தான் சாப்பிடுவோம். எண்ணெய் அன்றைய தினம் சேர்த்திருக்க மாட்டார்கள்.

      Delete
    2. ம்ம்ம்ம்ம்.... பருப்புத்துவையல் சாப்பிட ஆசை வந்திருக்கிறது! மிளகு குழம்பும்தான்!!

      Delete
    3. இரண்டுமே எளிமையான உணவு. பாஸிடம் சொல்லிச் செய்யச் சொல்லுங்க. இல்லைனா நீங்க செய்யும்போது உதவச் சொல்லுங்க! சொல்லித் தரணுமா! :)))))

      Delete
  11. மாங்கொட்டைக் குழம்பு செய்ததே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு மாங்காய்ப் பச்சடி பண்ணி இருந்தேன். நல்லா வந்திருந்தது. மாங்காயும் நன்றாக இருந்ததும் ஒரு காரணம்!

      Delete
  12. இப்போ மாங்காய்ப் பருவம் தானே! கொட்டை உள்ளே பருப்பை எடுத்துச் செய்து பாருங்க!

    ReplyDelete