எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, June 10, 2019

பாரம்பரியச் சமையல்கள்! மோர் ரசம்!

மோரில் தாளிதம் மட்டும் சேர்த்துக் கொண்டு செய்யும் மோர்க்குழம்பு வகைகளை மோர் ரசம் அல்லது மோர்ச்சாறு என்பார்கள். இதை இரு விதமாகச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்: புளித்த மோர், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, அரிசி மாவு.

தாளிக்கத் தே.எண்ணெய்: கடுகு, மி.வத்தல், கருகப்பிலை, வெந்தயம்/ஓமம்

நல்ல கெட்டியான சற்றே புளித்த  மோரில் தேவையான உப்பைப் போட்டுக் கொண்டு அரிசிமாவைப் போட்டுக் கலக்கவும். மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும். அடுப்பில் கடாயில் எண்ணெயை வைத்துக் காய்ந்ததும், கடுகு, மிவத்தல், வெந்தயம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு கரைத்த மோர்க்கலவையை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கித் தேவையானால் பச்சைக்கொத்துமல்லி சேர்க்கவும். உடல்நிலை சரியில்லாமல் போனவர்களுக்கு மோர் ஊற்றிக்கொள்ள முடியாது என்னும் சமயத்தில் இம்மாதிரி மோரில் தாளித்துக் கொண்டு வெந்தயத்துக்குப் பதிலாக ஓமம் சேர்த்துக் கொண்டு கொதிக்கவிட்டுச் சாப்பிடக் கொடுக்கலாம். இதோடு சிலர் துவரம்பருப்பும் சேர்த்துத் தாளிப்பார்கள். அது அவரவர் விருப்பம் போல் செய்யலாம்.

வறுத்து அரைத்த மோர்க்குழம்பு! இதற்கு மோரும் புளியும் சேர்ப்பார்கள். ஒரு சிலர் இதை இருபுளிக்குழம்பு எனச் சொல்லுவதும் உண்டு. ஆனால் மோர் புளிப்பாக இருந்தால் புளி தேவை இல்லை.

கெட்டியான மோர் இரண்டு கிண்ணம். உப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி, தானுக்குத் தேவையான காய்கள் ஏதேனும்.

புளி தேவைப்பட்டால் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு நீர்க்கக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைக்க: தேங்காய் எண்ணெய், மி.வத்தல் 3, வெந்தயம் ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன் இவற்றைச் சிவப்பாக வறுத்துக் கொண்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன் அரிசி 2 டீஸ்பூன் இவற்றைக் களைந்து கொண்டு நீரில் ஊற வைக்கவும். இவற்றோடு 3 பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

என்ன தான் போடுகிறோமோ அது வேக வேண்டுமெனில் தானுக்கு உள்ள காய்களை நறுக்கிக் கொண்டு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஜலம் விட்டுக் காயை அலம்பிப் போட்டு வேக விடவும். தான் வேகும்போது தேவையான உப்பைச் சேர்த்து விட்டு வெந்ததும் புளி ஜலத்தை விட்டுக் கொண்டு வறுத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் பச்சையாக அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கையிலேயே மோரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டு கரண்டியால் கலக்கவும். நன்கு சேர்ந்து கொதித்ததும் தேங்காய் எண்ணெயில் கடுகு, கருகப்பிலை தாளித்துக் கொட்டி விட்டுப் பின்னர் பச்சைக் கொத்துமல்லி விருப்பம் இருந்தால் சேர்க்கலாம்.  இதைப் புளி சேர்க்காமலும் பண்ணலாம். இதற்குப் பெரும்பாலும் மின்னல் இலை எனப்படும் மருத்துவ குணம் வாய்ந்த இலைகளைத் தான் தானாகச் சேர்ப்பார்கள். மின்னல் இலை மோர்க்குழம்பு என்றே பிரபலமான ஒன்று இது!

அடுத்து வட இந்திய முறையில் முக்கியமாய் ராஜஸ்தான், குஜராத் முறையில் செய்யும் மோர்க்குழம்பு!

ராஜஸ்தான், குஜராத்தில் வைக்கும் ghகட்டே கி khகடி  இது கிட்டத்தட்ட நம்ம ஊர்ப் பருப்புருண்டைக் குழம்பு போலத் தான்! ஆனால் பருப்பு ஊற வைச்செல்லாம் அரைக்க மாட்டாங்க. கடலை மாவிலே செய்வாங்க. செய்முறையைப் பார்ப்போமா?

கடலை மாவு ஒரு கிண்ணம், உப்பு தேவைக்கு! மிளகாய்ப் பொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமம் ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன்.  கடலைமாவோடு உப்பு, பெருங்காயத் தூள், ஓமம், மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் தயிர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். அரைமணி நேரம் இருக்கட்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஜலம் வைத்துக் கொதிக்க விடவும். இந்தக் கடலைமாவு பிசைந்ததை உருளை வடிவில் உருட்டி வைக்கவும். உருட்டி வைத்ததை வெந்நீரில் போடவும். வெந்ததும் மேலே மிதந்து வரும். ஹிஹிஹி, பண்ணும்போது படம் எடுக்க மறந்து போச்சுங்க! திட்டாதீங்க! இன்னொரு தரம் பண்ணினால் படம் எடுத்துடறேன்.  மிதந்து வருபனவற்றைத் தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து இப்போக் கடி.



கடியில் போட்ட ghகட்டாக்கள்
மோரை நன்றாகக் கடைந்து கொள்ளவும். கடைந்த மோரில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, வறுத்த சீரகப் பொடி, பெருங்காயப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப்பொடி) உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மோர்க் கரைசலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் நேரம் வெந்து எடுத்திருக்கும் கட்டாக்களைப் போடவும். கட்டாக்கள் மிதந்து வரும்போது மோர்க்குழம்பைக் கீழே இறக்கவும். இன்னொரு வாணலி அல்லது இரும்புக் கரண்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் கடுகு, ஜீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, ஒரு சின்னத் துண்டு லவங்கப் பட்டை, மிவத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். தாளிதத்தை மோர்க்குழம்பில் ஊற்றவும். பச்சைக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இந்த மோர்க்குழம்பு ஃபுல்கா ரோட்டி, சூடான சாதம் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.



14 comments:

  1. மோர்ச்சாத்துமதில் நாங்கள் ஓமம் சேர்ப்பதில்லை (அப்புறம் மருந்து வாசனை வந்துடும்னு... ஒருவேளை என் பையனுக்கு ஓமம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு முறை முயற்சிக்கலாம்)

    ReplyDelete
    Replies
    1. துகையல் சாதம், பொடி சாதம் போன்றவற்றுக்குத் தொட்டுக் கொண்டால் ஓமம் நாங்களும் சேர்ப்பதில்லை. பொதுவாகப் பிடித்தால் சேர்க்கலாம். உடல்நலமில்லாமல் இருக்கையில் மோர் சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு ஓமம் சேர்த்துக் கொடுத்தல் நல்லது என்பதால் சேர்ப்பார்கள்.

      Delete
  2. குஜராத்தி 'கடி' (மோர்க்குழம்பின் வகை) எப்போதும் சிறிது இனிப்பாக இருக்குமே... ஜீனி சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்...ஆனால் நீங்கள் போடலையே..

    ReplyDelete
    Replies
    1. சர்க்கரை சேர்ப்பாங்க தான். ஆனால் நான் சேர்க்கவில்லை. நம்ம வீட்டில் அந்த இனிப்புச் சுவை பிடிக்காது! :) ஆனாலும் பொதுவாக மசாலா சேர்த்துச் செய்யும் காய்வகைகள், தால் வகைகளுக்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தாலே ருசி நன்றாக வரும்.

      Delete
  3. நீங்கள் செய்முறைக்கெல்லாம் படங்கள் போடுவதைக் கண்டால், 'என் தளத்திற்காக' என்ற பெயரிலேயே நிறைய செய்துபார்க்கிறீர்களோ? அதனைச் சொல்லியே அவருக்கும் போட்டுவிடுகிறீர்களோ?

    இதெல்லாம் அவருக்கும் பிடிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே நான் தினசரி சமையலையே ஒரே மாதிரிச் செய்ய மாட்டேன். இந்த விஷயத்தில் புகுந்த வீட்டினரோடு ஒரு குருக்ஷேத்திரமே வரும். அங்கே தினம் சாம்பார், வதக்கல் கறி இல்லைனா தேங்காய், பருப்புப் போட்ட கறி இதான் பண்ணணும். நான் வந்து வீட்டுப் பழக்கத்தை மாற்றி விட்டேன் என என் கடைசி நாத்தனார் இன்றளவும் குற்றம் சொல்லுவார்! ஆகவே இதெல்லாம் நான் எப்போவோ குஜராத்தில் இருந்த சமயங்களிலேயே பண்ணிப் பார்த்த ஒன்று. அதை இங்கேயும் ஒரு நாள் ஒரு மாறுதலுக்காகப் பண்ணினேன். அவ்வளவு தான்!

      Delete
  4. சடசடவென மோர் ரசக்குழம்பு வகைகளை போட்டிருக்கிறீர்கள். ஆனால் இதில் எதுவும் நான் செய்ததில்லை, சுவைத்ததுமில்லை! கீதா ரெங்கன் இருபுளிக்குழம்பு எபி திங்கக்கிழமையில் சொல்லியிருப்பதாய் நினைவு! ராஜஸ்தான் குஜராத் வகை கடி பார்க்க நன்றாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சட சடவென? இஃகி,இஃகி, ஸ்ரீராம், ஒண்ணாம் தேதி போட்ட பதிவுக்கப்புறமாப் பத்தாம் தேதி தான் பதிவு போட்டிருக்கேன். இடையில் போடவில்லை! இதுவே சடசட? :)))))

      Delete
    2. அதைச் சொல்லவில்லை. இங்கே இப்போதே இரண்டு மூன்று வகை போட்டு விட்டீர்களே... அதைச் சொன்னேன்! ஹிஹிஹி..

      Delete
  5. அடடா,
    எனக்குப் பிடித்த மோர்ச்சாத்துமது.
    அழகான குறிப்புகள் செய்முறை.
    என் அம்மா போலவே செய்க்கிறீர்கள்.
    மிக மிக நன்றி கீதாமா.
    கடலை மாவில் எது செய்தாலும் வயறு கடபுடா.
    க்கடி பிரமாத மாக இருக்கு பார்க்க.
    பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்.
    அவளுக்கு செய்து கொடுக்கிறேன்.
    அபாரமாக சமையல் பதிவுகள் பதிகிறீர்கள் எல்லோரும் படித்துப் பயன் பெறட்டும்.

    ReplyDelete
  6. வாங்க வல்லி, இந்த GHகட்டே கி KHகடி நானும் தினம் தினம் எல்லாம் பண்ணியதில்லை. ஆனால் வடக்கே இது மிகவும் பிரபலம். விருந்தினர் வந்தால் இதுவும் உந்தியாவும் ஒரு முக்கியமான உணவு! உந்தியா நம்ம ஊர் அவியல் போலக் கிட்டத்தட்ட! எல்லாக் காய்களும் இருக்கும். அதிலேயும் இந்த GHகட்டா பண்ணிச் சேர்ப்பார்கள்.

    ReplyDelete
  7. வடக்கத்திய கடி எனக்குப் பிடித்தமானது. மோர் ரசமும் ஓகே. மோர்க்குழம்பு எப்போதாவது செய்வது தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், வடக்கே இருந்தவங்களுக்கு அந்தக் "கடி" பிடிக்கும். :))))) நம்ம ஊர்க்காரங்களுக்குப் பிடிக்குமானு சந்தேகமே!

      Delete